ஆகஸ்டு
2️5️ம் தேதி
ஸ்துதியரான அர்ச். லூயிஸ் அரசர் திருநாள்
விசுவாசத்திலும்,
தைரியத்திலும், நீதியினிமித்தம் கொண்டிருந்த சிநேகத்திலும் , தன்னிகறற்றவராக சகல அரசர்களுக்கும் நன்மாதிரி
கையாக, உத்தம கத்தோலிக்க அரசராக திகழ்ந்த அர்ச். லூயிஸ் அரசர், “பூமியின் சர்வேசுரனுடைய இராணுவப் படைகளின் தளபதி” என்று அழைக்கப்பட்டார். பிரான்ஸ் நாட்டின் சரித்திரத்தில், இவரை விட பெரிய
அரசர் இல்லை. இவர் தமது சாம்ராஜ்ஜியமான பிரான்ஸ்
நாட்டை, 9ம் லூயிஸ் அரசராக,
மிகுந்த சமாதானத்துடனும், நீதியுடனும், 44 வரு டங்கள், ஆட்சி
செய்து வந்தார்; இவர் தமது அரசாட்சியில், மூன்று
முக்கியமான காரியங்களை கடைபிடித்தார்: முதலில் சர்வேசுரன் மீது தேவ பயமும்,
தேவபக்தியும் கொண்டிருப்பது: இரண்டாவதாக, சுயக் கட்டுப்பாடு, மூன்றாவதாக தனது குடிமக்கள் மீது
உத்தமமான சிநேகமும் பாசமும் கொண்டிருப்பது! இவர் தனது ஆத்தும இரட்சணியத்தின்
மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்; அதை விட, தனது குடிமக்களின்
ஆத்தும இரட்சணியத்தின் மீது, அதிக அக்கறையுடன் செயல்பட்டார்;
இதையே, இவர் தனது அதிமிக முக்கிய
தலையாயக் கடமையாகக் கருதினார்.
அர்ச்.
9ம் லூயிஸ் அரசர் 1214ம் வருடம், ஏப்ரல்
25ம் தேதி, பாரீஸுக்கு அருகிலுள்ள பாய்ஸ்ஸி என்ற இடத்தில் பிறந்தார்.
இவருக்கு, 12 வயதானபோது, 1226ம் வருடம்,
நவம்பர் 8ம் தேதியன்று, இவருடைய
தந்தை இறந்தார்; அடுத்த ஒரு மாதத்திற்குள் இவரையே,
இவருடைய 12வது வயதிலேயே, பிரான்ஸ்
நாட்டின் அரசராக, ரீம்ஸ் கதீட்ரலில் முடி சூட்டினர். இவர்
சிறுவனாயிருந்ததால், இவருடைய தாயாரான பிளாஞ்ச் மகாராணி, இவருக்கு நாட்டை ஆட்சி செய்வதில் உதவி புரிந்தார்கள். கத்தோலிக்க
உத்தமதனத்தில் சிறந்து விளங்கிய புண்ணியவதியான இந்த நல்ல தாயார்,
சிறு வயதினரான தன் மகன் லூயிசிடம்,
“மகனே! நீ ஒரு சாவான
பாவத்தைக் கட்டிக்கொள்வதை விட, என் காலடியில்
நீ இறந்து போவதைப்பார்க்கவே ஆசிக்கிறேன்!” என்று கூறினார்கள்; தன் தாயின் இப்பொன்மொழியை,
அர்ச். லூயிஸ் அரசர், தன் வாழ் நாளெல்லாம்
நினைவு கூர்ந்து, உத்தம பக்தியுள்ள கத்தோலிக்க அரச ராகக் திகழ்ந்தார்;
இதுவே, இந்த நல்ல அரசரை,
ஒரு அர்ச்சிஷ்டவ ராகும்படிச் செய்தது! உத்தம
கத்தோலிக்க புண்ணியவாளர்களான தாயும், மகனும் பிரான்ஸ் நாட்டை ஆட்சி செய்த ஓராண்டு காலத்திற்குள்ளாக, கத்தோலிக்கப் படை
ஒரு விசேஷ தேவ ஆசீர்வாதத்தினால், ஆல்பிஜென்சிய பதிதர்களை
அழித்து ஒழித்தது! இவர் பிறப்பதற்கு முன்பாக, பிரான்ஸ் நாட்டில் பரவியிருந்த ஆல்பிஜென்சியப் பதிகத்தை அழிப்பதற்காக, அந்நாட்டிற்கு வந்த அர்ச். சாமிநாதர், மகா பரிசுத்த தேவமாதாவிடமிருந்து
மகா பரிசுத்த ஜெபமாலையைப் பெற்று, ஜெபமாலையின் மீதான பக்தியை பரப்பி வந்தார்; ஜெபமாலையை ஜெபிக்கும் விதத்தையும் கற்றுக்கொடுத்தார்;
அச்சமயம்,
அரசியான பிளாஞ்சம்மாள், 12 வருட காலமாக குழந்தையில்லாமலிருந்ததால்,
அவர்களிடம், அர்ச். சாமிநாதர், ஜெபமாலையை பக்திபற்றுதலுடன், இடை விடாமல் தொடர்ந்து,
ஜெபிக்கும்படி, அறிவுறுத்தினார்; அதன்படியே, மகாராணி, ஜெபமாலை ஜெபித்து வந்ததன் பயனாக, குழந்தை பிறந்தது; அதற்கு பிலிப் என்று பெயரிட்டனர்; ஆனால் அது இறந்துபோனது; புண்ணியவதியான
பிளாஞ்ச்சம்மாள், இன்னும் கூடுதல் பக்திபற்றுதலுடன் ஜெபமாலையை ஜெபித்து வந்ததுடன், அரண்மனையிலிருந்த சகலருக்கும்,குடிமக்களுக்கும், ஜெபமாலையை வினியோகித்து, எவ்லோரையும் , தனக்குக் குழந்தை பிறப்பதற்காக ஜெபமாலையை ஜெபிக்கத் தூண்டி வந்தார்கள். நாடு முமுவதும்
ஜெபமாலை ஜெபித்து வேண்டிக்கொண்டபிறகு, பிறந்த குழந்தை தான் , இந்த உன்னத கத்தோலிக்க
அரசரான அர்ச்.லூயிஸ் அரசர்! அரசாட்சியின்
அலுவல்கள் மத்தியில், இளம் அரசரான லூயிஸ், கட்டளை
ஜெபத்தைத் தவறாமல், ஜெபித்து வந்தார்.
தினமும்
இருமுறை திவ்ய பலிபூசையை பக்திபற்றுதலுடன் கண்டு வந்தார். இந்நாட்டிலிருக்கும் மகிமைமிக்க மாபெரும்
தேவாலயங்கள், இப்பொழுதும் கூட, இந்த அர்ச்சிஷ்ட
அரசர் கொண்டிருந்த
பக்திபற்றுதலின் உன்னதமான நினைவுச் சின்னங்களாகத் திகழ்கின்றன! இவற்றினுள் பாரீஸ் நகரின் மகா பரிசுத்த தேவமாதாவின்
கதீட்ரலிலுள்ள அழகிய செயிண்ட் சேப்பல் சிற்றாலயம்
தன்னிகரற்றவிதமாகக் திகழ்கிறது; இந்த தேவாலயத்தில், இவர்
பரிசுத்த பூமியிலிருந்து கொண்டு வந்த ஆண்டவருடைய பரிசுத்த
முண்முடி, மாபெரும் அருளிக்கமாக, பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது! கிறீஸ்துவ உன்னத புண்ணியங்களால் தூண்டப்பட்டவிதமாகவே, அர்ச். லூயிஸ் அரசருடைய சகல அரச அலுவல்களும்
திகழ்ந்தன! தேவதூஷணத்தையும் , சூதாட்டத்தையும், கடன்கொடுத்து வட்டி வாங்குபவர்களையும், விபச்சாரத்தையும் தண்டிப்பதற்கான சட்டங்களை இயற்றத் தீர்மானித்தார். 9ம் கிரகோரி பாப்பரசரின்
வலியுறுத்தலின்படி,
1243ம் வருடம், தால்முட் என்ற யூதவேதபுத்தகத்தின் 12000 கையெழுத்துப் பிரதிகள் பாரீஸ் நகரில் பகிரங்கமாக நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டன! கத்தோலிக்கராக மனந்திரும்பிய நிக்கோலாஸ் டோனின் என்ற ஒரு யூதர்,
இந்த தால்முட் என்ற யூத வேதபுத்தகத்தை
மொழிபெயர்த்திருந்தார்;
இப்புத்தகத்தில் நமதாண்டவருக்கும், மகா பரிசுத்த தேவ
மாதாவிற்கும், கிறீஸ்துவ வேதத்திற்கும் எதிராக அடுத்து அடுத்த அத்தியாயங்களில் எழுதப்பட்டிருக்கும் தேவதூஷணங்களைச் சுட்டிக்காண்பித்து, இப்புத்தகத்திற்கு எதிரான 35 குற்றச்சாட்டுகளை வலியுறுத்தியிருந்தார். இதன்படி, அர்ச். லூயிஸ் அரசர், இப்புத்தகத்தைப் பகிரங்கமாக பாரீஸ் நகரில் எரிக்கும்படி கட்டளையிட்டார்.
1248ம் வருடம்,
அர்ச். லூயிஸ் அரசர் ஏழாவது சிலுவைப்போரை தலைமையேற்று
வழிநடத்திச் சென்றார்; ஆண்டவருடைய பரிசுத்த பூமியை
விடுவிக்கும்படியாகவும்,
பிரான்ஸ் நாட்டினுடைய வீரத்துவம் வாய்ந்த வீரர்களை,ஆண்டவருக்காக தங்கள் ஜீவியத்தை அர்ப்பணித்த வீரர்களை தன்னுடன் சேர்த்துக் கொள்ளும்படியாகவும், இந்த சிலுவைப்போரை அர்ச்.
லூயிஸ் அரசர் நடத்தினார். கிறீஸ்துவ நாடுக ளுக்குள்ளே அதிக செல்வ திரவியமுடைய
நாடான பிரான்ஸ் நாட்டி னுடைய அரசராகவும், மிக அதிக கிறீஸ்துவ
மக்களுடைய ஜனத்தொகையையுடைய நாட்டின் அரசராகவும் இவர் திகழ்ந்தார். இந்த
சிலுவைப்போரின்போது, அநேக இழப்புகள் நேரிடும்
என்பதை நன்கறிந் திருந்த அர்ச். லூயிஸ் அரசர், உலக இழப்புகளை விட
அதிக விலை மதிப்புள்ள பரலோக
வெகுமதிகளும் சம்பாவனைகளையும் அடைய லாம் என்பதையே,
எப்போதும் கருத்தில் கொண்டிருந்தார். 1250ம்
வருடம், எகிப்தில், மகமதியரால், இவர் கைது செய்யப்பட்டார்; டாமியட்டா
என்ற இடத்தில், சிறைபிடிக்கப்பட்டார்;
அச்சமயம், இவருடைய கூடாரத்தினுள் நுழைந்த ஒரு அராபிய சிற்றரசன்,
இரத்தம் தோய்ந்த தன் குத்துவாளைக் காண்பித்து,
இதோ சுல்தானைக் கொன்றுவிட்டேன்; எனக்கு ஒரு மாவீரர் பட்டத்தை
அளிக்காவிடில், உம்மையும் கொன்று போடுவேன், என்று கூறி, மிரட்டினான். அதற்கு அர்ச். லூயிஸ் அரசர், அவனிடம் அமைதியாக, “ஒரு கிறீஸ்துவ மாவீரர்
நிறைவேற்றக்கூடிய எந்த கடமைகளையும், ஒரு
அவிசுவாசியால் நிறைவேற்ற முடியாது!” என்று பதிலளித்தார். இவருக்கு சட்டபூர்வமான நிபந்தனைகளின் பேரிலான விடுதலை அளிக்கப்பட்டது; ஆனால், தேவதூஷணத்தைக் கக்கக்கூடிய ஒரு வார்த்தைப்பாட்டை எடுக்கும்படி
வற்புறுத்தப்பட்டார்.
அவிசுவாசிகளும்
பதிதர்களுமான மகமதியர்கள், வாள்களால், இவருடைய தொண்டையைக் குறிவைத்தபடி, அந்த தேவதூஷணத்தைக் கூறும்படி
வற்புறுத்தப்பட்டார்; திரளான கிறிஸ்துவ கைதிகளைக் கொல்லப்போவதாகவும் இரக்கமற்ற அந்த சுல்தான் இவரை
அச்சுறுத்தினான்; இருப்பினும், ஒரு அநிச்சை செயல்போல்,
எதையும் சிந்திக்காமல், அர்ச். லூயிஸ்
அரசர், தேவதூஷணமான அந்த வார்த்தைப்பாட்டை எடுப்பதற்கு
உடனடியாக மறுத்து விட்டார். பணயத்தொகையினால், மீட்கப்பட்டதும், அர்ச். லூயிஸ் அரசர், எகிப்திலிருந்து, பரிசுத்த பூமிக்குச் சென்றார். நாசரேத்தை அடைந்ததும், இவர் குதிரையிலிருந்து இறங்கினார் அங்கேயே முழங்காலிலிருந்து ஜெபித்தார்; பின்னர், அந்நகரத்திற்குள் காலணியில்லாமல், வெறுங்காலில் நடந்து சென்றார். ஆண்டவருடைய பரிசுத்த மனிதவதாரத்தினுடைய பரமஇரகசியமான திருநிகழ்வு நிறைவேறிய இல்லத்திற்குள், நாசரேத் பரிசுத்தத் திருக்குடும்பம் வசித்த இல்லத்திற்குள், வெறுங்காலில் நுழைந்தார்.
1252ம் வருடம்,
இவருடைய தாயாரும் புண்ணியவதியுமான பிளாஞ்ச் மகாராணியார் இறந்ததால், இவர் மறுபடியும் பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிச் செல்ல நேரிட்டது. நாட்டின் சூழல் அமைதியடைந்ததும், இவர் மறுபடியும், இரண்டாவது தடவையாக சிலுவைப்போருக்குச் சென்றார்; 1270ம் வருடம் தூனிஸில்
நிகழ்ந்த சிலுவைப்போரில், மகமதியர் மீது, அர்ச். லூயிஸ் அரசர் வெற்றியடைந்தார். ஆனால், அப்போது ஏற்பட்ட கொள்ளைநோயான விஷக்காய்ச்சல் நோய்க்கு இரையானார். 1270ம் வருடம், ஆகஸ்டு
25ம் தேதியன்று, தனது கூடாரத்தின் படுக்கையினருகில்,
பக்தி பற்றுதலுடன் முழங்காலிலிருந்தபடி, மகா பரிசுத்த திவ்ய
நன்மையை இறுதி தேவ திரவிய அனுமானமாகப்
பெற்று உட்கொண்டார். அந்நேரமே, பாக்கியமான மோட்ச
பேரின்ப ஆனந்த சந்கோஷத்தினுள் மூழ்கியவராக, பாக்கியமாய் மரித்தார்!
இவ்விதமாக
எந்த நித்திய பேரின்ப மகிமை யில், சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக மற்ற எல்லாவற்றையும் அர்ச்.
லூயிஸ் அரசர் துறந்தாரோ, அதே நித்திய மோட்சப்
பேரின்ப மகிமையை அடைந்தார்! 8ம் போனிஃபேஸ் பாப்பரசர்,
9ம். லூயிஸ் அரசருக்கு 1297ம் வருடம் அர்ச்சிஷ்டப்பட்டம்
அளித்தார். பிரான்ஸ் அரசர்களிலேயே, அர்ச்சிஷ்டப்பட்டம் பெற்ற ஒரே அரசரும் இவரே!
விசுவாசப்பிரமாணத்தை ஜெபிக்கும் சமயத்தில், “வார்த்தையானவர் மாமிசமாகி” என்கிற வேத சத்தியத்தை உச்சரிக்கிறபோது,
முழங்காலில் இருந்து மனுவுருவான திவ்ய கர்த்தரை ஆராதித்து வணங்கும் வழக்கத்தை, அர்ச். லூயிஸ் அரசர் தான்,முதலில் துவக்கினார்.
பின்னர்,
திருச்சபை, உலகெங்கும் துரிதமாகப் பரவிய இப்பரிசுத்த பழக்கத்தை, திருவழிபாட்டின் விதிமுறையாகச் சேர்த்துக்கொண்டது. ஒருநாள், அரண்மனை சிற்றாலயத்தில், மகா பரிசுத்த தேவநற்கருணை
கதிர்பாத்திரத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்தபோது, அர்ச். லூயிஸ் அரசர் படிப்பறையில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்; அச்சமயம், அவருடைய
ஊழியர்களில் ஒருவர், விரைந்து ஓடிவந்து, “அரசரே! ஒரு அழகிய புதுமை
நம் சிற்றாலயத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது! மகா பரிசுத்த தேவநற்கருணையில்
திவ்ய குழந்தை சேசுநாதர்சுவாமி, காட்சியளித்துக் கொண்டிருக்கின்றார்!” என்று கூறினார்;அதற்கு, அர்ச். லூயிஸ், அவரிடம், “ஒரு புதுமையை நோக்கிப்
பார்த்து தான், மகா பரிசுக்த தேவநற்கருணையில்
நமதாண்டவருடைய மெய்யான பிரசன்னத்தை விசுவசிக்க வேண்டுமென்றிருந்தால், நான் இவ்வளவு அதிக உறுதியாக விசுவசித்திருக்கக்
கூடாமல்போயிருக்கும்! ஏற்கனவே விசுவசிக்கிறவர்களுக்கு புதுமைகள் தேவைப்படுகிறதில்லை!” என்று அமைதியாக பதிலளித்தார். ✝
ஸ்துதியரான
அர்ச். லூயிஸ் அரசரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!