பதித பெண்கள் மனம் திரும்புதல் 2
அந்த மனந்திரும்பிய பெண்கள் ஒன்பது பேரும், ஒரு கன்னியரின் துறவற சபையில் உட்படுவதையே பெரிதும் ஆசித்தனர். அதன் பிரகாரம் அர்ச்.சாமிநாதரின் ஏற்பாட்டின்படி, தூலோஸ் நகர மேற்றிராணியாரரான வந்.ஃபோல்குவஸ் ஆண்டகையின் அனுமதியின் பேரில் புரோயிலிலுள்ள அர்ச்.கன்னிமாமரியின் தேவாலயத்தையும் அதனை ஒட்டியிருந்த நிலங்களையும்அப்பெண்களை பராமரிக்கும்பொருட்டு அவர்களுடைய பொறுப்பில் விடப்பட்டது. அதே வருடம் நவம்பர் மாதம் 22ம் நாளன்று, அதாவது அர்ச்.சாமிநாதர், அதிசய வெண் பூகோள உருண்டைக் காட்சியைக் கணடு சரியாக 4 மாதங்கள் கழித்து, அதே புரோயிலில் தேவமாதாவின் சிற்றாலயத்தினருகில் ஒரு கன்னியர் மடம் உருவானது. அதே வருடம் டிசம்பர் 27ம் தேதியன்று அந்த 9 பெண்களும் அம்மடத்திற்கு வந்து தங்களுடைய துறவற ஜீவியத்தைத் துவங்கினர்.
அத்துறவற சபைக்கான விதிமுறைகளை அர்ச்.சாமிநாதர் தயாரித்தார். அதன் விதிமுறைகள் ஜெபத்திற்கும் தபசிற்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் அமைக்கப்பெற்றிருந்தன. புரோயிலிலும் அதன் சுற்றுப் புற கிராமங்களிலும் வந்.டீகோ ஆண்டகையும் அர்ச்.சாமிநாதரும் உதவியாளர்களும் வேதசத்தியங்களைக் கற்பிக்கும் வேதபோதக அலுவலில் ஈடுபட்டிருக்கும்போது, அவர்களுக்குத் தேவையான தேவவரப்ரசாதங்களை, புரோயிலில் கன்னியர்கள் தங்கள் இடைவிடா ஜெபங்களின் மன்றாட்டினால், அடைந்துகொடுப்பர்.
ஒவ்வொரு நாளும் பலதடவை அக்கன்னியர்கள், போதகக் குருக்களைப் போலவே, திருச்சபையின் அதிகாரபூர்வமான ஜெபமான கட்டளை ஜெபத்தை ஜெபிப்பதற்காக ஒன்று கூடுவர். இந்தக் கன்னியாஸ்திரிகள் மடத்தை விட்டு எங்கும் செல்லாமல் அடைபட்ட மடத்தின் துறவற ஜீவித்தையே அனுசரித்தனர்.
சிறு ஓய்வு நேர இடைவேளைகளைத் தவிர எப்பொழுதும் அவர்கள் மவுனத்தையே கண்டிப்பான ஒழுங்காக அனுசரித்தனர். உயரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களான அவர்கள் உயர்கல்வி படித்திருந்தவர் களாயினும், ஒன்பது கன்னியரும் ஏழைகளின் அன்றாட அலுவல்களான நுரல் நுரற்பது, சமையல் செய்வது, விட்டை சுத்தம் செய்தல், துணிகளை துவைப்பது போன்ற வேலைகளையும் செய்து வந்தனர்.
வாரத்தில் பல நாட்கள் ஒருசந்தி இருந்தனர். பரித்தியாக ஜீவியத்தின் பலவித தபசு முயற்சிகளையும் அவர்கள் அனுசரித்து சர்வேசுரனுக்கு அவற்றை தங்களுடைய இருதய பூர்வமான நன்றியறிந்த காணிக்கைகளாக ஒப்புக் கொடுத்து வந்தனர்.
“இந்த புதுவிதமான ஜீவியம் உங்களுக்குக் கடினமாக இருக்கிறதா? என்னிடம் கூறுங்கள்” என்று அர்ச்.சாமிநாதர் அப்பெண்களிடம் கேட்டார்.
“ஓ சுவாமி! மோட்சத்திற்கு ஆத்துமங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் எந்த ஒரு ஒறுத்தலும் பரித்தியாகமும் ஒருபோதும் கடினமானதாக இருக்காது” என்று ஜென்சியானா பதிலளித்தாள். அவளுடைய கண்கள் ஆண்டவருடைய சமாதானத்தால் நிரம்பி ஒளிர்ந்தன. அவளுடைய சக சபைக்கன்னியரான கர்தோலானா, கிளாரட்டா, பெரங்காரியா, ரேமுண்டா, அடிலாய்ட், ஜோர்டானா, வில்ஹெல்மினா, ரிச்சர்டி என்ற மற்ற 8 கன்னியரும் அவளுடைய இக்கூற்றை தங்களுடைய முழு இருதயத்துடன் ஆமோதித்தனர்.துறவற ஜீவியத்தை கடுமையாக எதிர்த்த அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களை விட்டுப் பிரிந்து புரோயிலில் இந்தக் கன்னியர் மடத்தில் அவர்கள் சுபாவத்திற்கு மேலான மனசமாதானத்திலும் இருதய மகிழச்சியிலும் நிலைத்திருந்தனர். சங்.சாமிநாதர் சுவாமியார் அவர்களுக்கு துறவற ஆடையாக அளித்த வெண் கம்பளியிலான உடுப்பையும் லினனிலான முக்காட்டையும் மிகவும் மகிழ்ச்சியுடன் அப்பெண்கள் உடுத்திக் கொண்டார்கள்.
பிரான்சு நாடு முழுவதுமுள்ள ஆல்பிஜென்சிய பதிதரை மனந்திருப்பும் இந்த விசேஷமான ஞானபோதக அலுவலில் அர்ச். சாமிநாதருடன் அவர்களும் அரிய பங்கு வகிக்கின்றனர் என்பதை நன்கு உணர்ந்தார்கள்.
“நாங்கள் இந்த உன்னதமான ஆத்தும இரட்சணிய அலுவலில் உங்களுக்கு உதவுகின்றோம் அல்லவா சுவாமி! இந்த எங்களுடைய புதிய துறவற ஜீவியத்தினால் எங்களுடைய பாவங்களுக்கும், பிறருடைய பாவங்களுக்கும் பரிகாரம் செய்கிறோம் இல்லையா சுவாமி?” என்று அவர்கள் சாமிநாதரிடம் வினவினார்கள்.
அதற்கு அர்ச்.சாமிநாதர்,“நீங்கள் இறந்த பிறகு தான், இந்த துறவற ஜிவியத்தின் பரித்தியாகங்கள் எவ்வளவு விலையுயர்ந்தவை என்பதை கண்டுபிடிப்பிர்கள்” என்று பதில் கூறினார். இவ்வாறு புரோயில் கன்னியர் மடத்தின் துறவற ஜீவியம் துறவற ஒழுங்கிலும் ஜெபத்திலும் தியானத்திலும் சீராக நடைபெற்று வந்தது. பிறகு வந்.டீகோ ஆண்டகை 2 வருடங்களாக தனது நேரடியான கண்காணிப்பின்றி விடப்பட்டிருந்த தன்னுடைய ஞானமந்தையைக் கவனிக்கும்படி தன்னுடைய ஓஸ்மா மேற்றிராசனத்திற்கு திரும்பி செல்வதாக அறிவித்தார். இதைக் கேட்டதும் வந்.ஆண்டகையினால் அநேக ஞான நன்மைகளைப் பெற்றிருந்த அர்ச்.சாமிநாதரும், அவருடைய கன்னியர்களும் பெரும் வருத்தத்திற்கு ஆளாயினர்.
அர்ச்.சாமிநாதரும் மற்ற போதகக் குருக்களும் ஆற்றிய ஞான போதக அலுவலினால் அநேக ஞான நன்மைகள் ஏற்படலாயின. ஃபோஷோவிலிருந்து இரண்டு பெண்கள் புரோயிலில் இருக்கும் கன்னியர் மடத்தில் நவசந்நியாசிகளாக சேர்ந்தனர். 8 சிறுவர்கள் உத்தமமான கத்தோலிக்கு ஞான உபதேசம் கற்பிக்கும்படியாக அவர்களுடைய பெற்றோர்களால் கன்னியர் மடத்திற்குக் கொண்டு வந்து விடப்பட்டனர்.
தூலோஸின் மேற்றிராணியாரின் பண உதவியினாலும் நன்கொடைகள் மற்றும் நிலங்களினாலும், புரோயிலில் தேவமாதாவின் தேவாலயத்தை ஒட்டி ஒரு பெரிய புது கட்டிடம் உருவானது. சர்வேசுரனுடைய திருவுளமானால், அதுவே அர்ச்.சாமிநாதரின் கன்னியரினுடையவும் போதகக் குருக்களுடையவும் நிரந்தரமான தலைமையகமாக செயல்படும். “இவையெல்லாம் நாம் தேவமாதாவிடம் கொண்டிருக்கும் பக்தியினால் நமக்குக் கிடைத்த வெகுமதி என்று நிச்சயமாக என்னால் சொல்ல முடியும். நமது மகா பரிசுத்த தேவமாதா மிகவும் விரும்பும் ஜெபமான பரிசுத்த ஜெபமாலையின் வல்லமையையும் அதன் நன்மைபயக்கும் உன்னதமான ஞானபலன்களையும்உலகம் உணர்ந்துகொள்ளுமானால்!” என்று அர்ச்.சாமிநாதர் வியந்து சிந்தனையில் ஆழ்ந்தார். அவருடைய உதவியாளர்களான போதக குருக்களும் கன்னியரும் அவர் கூறிய இக்கருத்திற்கு முழு இருதயத்துடன் உடன்பட்டனர்.
“ஒரு அருள்நிறை மந்திரத்திற்கு சில மணித்துளிகளே செலவாகும். ஒரு முழு ஜெபமாலை சொல்வதற்கும் நீண்ட நேரம் ஆகாது. ஓரு நாள் உலகம் இந்த உன்னதமான ஜெபத்தின் மாபெரும் வல்லமையை அறிந்து கொள்ளும்” என்று அவர்கள் கூறினர். ஆனால் இந்த சிறிய வேதபோதகக்குழவினரின் துறவற ஜீவியம் நிண்ட காலம் யாதொரு பிரச்னையுமின்றி அமைதியாக நிடிக்கவில்லை. 1208ம் வருடத்தில் ஒரு நாள் அதிர்ச்சி தரும் ஒரு செய்தி புரோயில் மடத்திற்குக் கிடைத்தது. ஆல்பிஜென்சிய பதிதர்களிடையே சத்திய வேதத்தை முதலில் போதித்தவரில் ஒருவரான, சங்.பிட்டர் சுவாமியார், பதிதர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியே அது. ஏனெனில் அவர், ரேமண்ட் என்ற பிரபுவை சந்தித்து அவன் பரப்பிவந்த பதித தப்பறைகளை விட்டுவிடும்படி அவனைக் கண்டிக்கவும் அவ்வாறு அவன் ஆல்பிஜென்சிய பதித தப்பறையை விட்டு விடாவிட்டால் அவனைக் கண்டிக்கவும் அவனை திருச்சபைக்கு புறம்பாக்குவதற்குமாக ரோமாபுரியின் தூதுவராக சென்றிருந்தார். அதைச் சகியாத அந்த கொடுங்கோலனான ரேமண்ட் அந்தப் பரிசுத்த குருவானவரைக் கொலை செய்தான். மேலும், ரோமாபுரிக்குப் பிரமாணிக்கமாக சத்திய வேதத்தைப் போதிக்கும் மற்ற குருக்களுக்கும் அதே கதிதான் ஏற்படும் என்று அவன் மிரட்டினான். உடனே தெற்கு பிரான்சு பகுதியிலிருந்து வேதபோதக குருக்கள் வெளியேறவேண்டும் என்ற எச்சரிப்பும் பதிதர்களின் தலைமையகத்திலிருந்து, அர்ச்.சாமிநாதரின் சபைக் குருக்களுக்கு வந்தது.
இதைக் கேள்விப்பட்டதும், வந்.ஃபல்குவஸ்ஆண்டகை அர்ச்.சாமிநாதரிடம், “ஒரு பரிசுத்த குருவானவரை வெட்டிக் கொலை செய்வது ஒரு சாதாரண வன்முறைச் செயலல்ல. ஒரு நாட்டின் தூதுவரைக் கொலை செய்வது என்பது மாபெரும் அக்கிரமம் என்பதை அனைவரும் அறிவர். அதுவும் பாப்பரசரின் தூதுவரை கொலை செய்த இந்த அக்கிரமசெயல் எவ்வளவு ஒரு பெரிய பாதகச் செயலாக இருக்கிறது!” என்றார். மிளிர்ந்த கண்களுடன், அர்ச்.சாமிநாதர் “ரேமண்ட் பிரான்சு நாட்டிலுள்ள கிறிஸ்துவர்களுக்கு மட்டுமல்லாமல் கிறிஸ்துவ உலகம் முழுவதற்கும் ஒரு சவால் விட்டிருக்கிறான். ஓ ஆண்டவரே, நமது பரிசுத்த பாப்பரசர், இனிமேலும் பொறுமையாக இருக்கக் கூடாது. உடனே அவர், இதற்கு ஒரு சக்திமிகுந்த பதிலடிகொடுக்க வேண்டும்” என்று கூறினார்.
ஏற்கனவே நீண்ட காலம் ரேமண்டுக்கு, அவன் தன் தப்பறையை விட்டு விடுவதற்கான போதிய அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவன் தன்தீமையைக் குறித்து மனம் வருந்தவில்லை. மாறாக திருச்சபைக்கு எதிராக அநேக வன்முறைகளை தொடர்ந்து செய்து வந்தான். அவன் திமையை விடுவதாக இல்லை. எளிய மக்களிடமும் மாசற்ற துறவியரிடமும், அவன் இரக்கம் காட்டும்படி, அவனிடம், பரிசுத்தகுருக்களும் மேற்றிராணிமார்களும், வேண்டிக் கொண்டார்கள்.
ஆனால் அவன் தன் சேனையைக் கொண்டு அநேக ஏழை மக்களையும் துறவியரையும் உபாதித்தான். துறவற மடங்களையும் தேவாலயங்களையும் நாசமாக்கினான். ஆல்பிஜென்சிய பதிதப் பெண்ணின்மகனான ரேமண்ட் சிறுவயதுமுதலே மூர்க்கனாகவும் அகங்காரம் நிறைந்தவனாகவும் உருவெடுத்தான். திருச்சபையின் எந்த ஒரு அதிகாரத்தையும், சர்வேசுரனுடைய அதிகாரத்தையும் கூட ஏற்க மறுத்தான். இப்பொழுது ஒரு மாபெரும் சவாலை அவன் பாப்பரசர் 3ம் இன்னசென்ட் பாப்பரசருக்கு எதிராக விட்டிருக்கிறான். (தொடரும்)
அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 18
அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 17