Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 8 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 16



பதித பெண்கள் மனம் திரும்புதல் 2

வந்.டீகோ ஆண்டகை, அர்ச்.சாமிநாதர், புரோயிலில் மனந்திரும்பிய பதிதப் பெண்கள் மடத்தில் தங்களுடைய வேதபோதக அலுவலுக்காக ஜெபித்துக் கொண்டிருப்பார்கள் என்றுக் கூறக் கேட்டதும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். பிறகு, அவர் சாமிநாதரிடம், “அது நல்ல யோசனை! ஏனெனில் நமது வேதபோதக அலுவல் போன்ற எந்த ஒரு ஆன்ம இரட்சணிய அலுவலும் அதற்கு ஆதரவாக மறைவில் ஜெபமும் நற்செயல்களும் இல்லாமல் போனால் மிக சொற்பமாகவே பலனளிப்பவையாகத் திகழும்” என்று கூறினார். 

அந்த மனந்திரும்பிய பெண்கள் ஒன்பது பேரும், ஒரு கன்னியரின் துறவற சபையில் உட்படுவதையே பெரிதும் ஆசித்தனர். அதன் பிரகாரம் அர்ச்.சாமிநாதரின் ஏற்பாட்டின்படி, தூலோஸ் நகர மேற்றிராணியாரரான வந்.ஃபோல்குவஸ் ஆண்டகையின் அனுமதியின் பேரில் புரோயிலிலுள்ள அர்ச்.கன்னிமாமரியின் தேவாலயத்தையும் அதனை ஒட்டியிருந்த நிலங்களையும்அப்பெண்களை பராமரிக்கும்பொருட்டு அவர்களுடைய பொறுப்பில் விடப்பட்டது. அதே வருடம் நவம்பர் மாதம் 22ம் நாளன்று, அதாவது அர்ச்.சாமிநாதர், அதிசய வெண் பூகோள உருண்டைக் காட்சியைக் கணடு சரியாக 4 மாதங்கள் கழித்து, அதே புரோயிலில் தேவமாதாவின் சிற்றாலயத்தினருகில் ஒரு கன்னியர் மடம் உருவானது. அதே வருடம் டிசம்பர் 27ம் தேதியன்று அந்த 9 பெண்களும் அம்மடத்திற்கு வந்து தங்களுடைய துறவற ஜீவியத்தைத் துவங்கினர். 

அத்துறவற சபைக்கான விதிமுறைகளை அர்ச்.சாமிநாதர் தயாரித்தார். அதன் விதிமுறைகள் ஜெபத்திற்கும் தபசிற்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் அமைக்கப்பெற்றிருந்தன. புரோயிலிலும் அதன் சுற்றுப் புற கிராமங்களிலும் வந்.டீகோ ஆண்டகையும் அர்ச்.சாமிநாதரும் உதவியாளர்களும் வேதசத்தியங்களைக் கற்பிக்கும் வேதபோதக அலுவலில் ஈடுபட்டிருக்கும்போது, அவர்களுக்குத் தேவையான தேவவரப்ரசாதங்களை, புரோயிலில் கன்னியர்கள் தங்கள் இடைவிடா ஜெபங்களின் மன்றாட்டினால், அடைந்துகொடுப்பர். 

ஒவ்வொரு நாளும் பலதடவை அக்கன்னியர்கள், போதகக் குருக்களைப் போலவே, திருச்சபையின் அதிகாரபூர்வமான ஜெபமான கட்டளை ஜெபத்தை ஜெபிப்பதற்காக ஒன்று கூடுவர். இந்தக் கன்னியாஸ்திரிகள் மடத்தை விட்டு எங்கும் செல்லாமல் அடைபட்ட மடத்தின் துறவற ஜீவித்தையே அனுசரித்தனர்.

சிறு ஓய்வு நேர இடைவேளைகளைத் தவிர எப்பொழுதும் அவர்கள் மவுனத்தையே கண்டிப்பான ஒழுங்காக அனுசரித்தனர். உயரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களான அவர்கள் உயர்கல்வி படித்திருந்தவர் களாயினும், ஒன்பது கன்னியரும் ஏழைகளின் அன்றாட அலுவல்களான நுரல் நுரற்பது, சமையல் செய்வது, விட்டை சுத்தம் செய்தல், துணிகளை துவைப்பது போன்ற வேலைகளையும் செய்து வந்தனர்.

வாரத்தில் பல நாட்கள் ஒருசந்தி இருந்தனர். பரித்தியாக ஜீவியத்தின் பலவித தபசு முயற்சிகளையும் அவர்கள் அனுசரித்து சர்வேசுரனுக்கு அவற்றை தங்களுடைய இருதய பூர்வமான நன்றியறிந்த காணிக்கைகளாக ஒப்புக் கொடுத்து வந்தனர். 

“இந்த புதுவிதமான ஜீவியம் உங்களுக்குக் கடினமாக இருக்கிறதா? என்னிடம் கூறுங்கள்” என்று அர்ச்.சாமிநாதர் அப்பெண்களிடம் கேட்டார். 

“ஓ சுவாமி! மோட்சத்திற்கு ஆத்துமங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் எந்த ஒரு ஒறுத்தலும் பரித்தியாகமும் ஒருபோதும் கடினமானதாக இருக்காது” என்று ஜென்சியானா பதிலளித்தாள். அவளுடைய கண்கள் ஆண்டவருடைய சமாதானத்தால் நிரம்பி ஒளிர்ந்தன. அவளுடைய சக சபைக்கன்னியரான கர்தோலானா, கிளாரட்டா, பெரங்காரியா, ரேமுண்டா, அடிலாய்ட், ஜோர்டானா, வில்ஹெல்மினா, ரிச்சர்டி என்ற மற்ற 8 கன்னியரும் அவளுடைய இக்கூற்றை தங்களுடைய முழு இருதயத்துடன் ஆமோதித்தனர்.துறவற ஜீவியத்தை கடுமையாக எதிர்த்த அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களை விட்டுப் பிரிந்து புரோயிலில் இந்தக் கன்னியர் மடத்தில் அவர்கள் சுபாவத்திற்கு மேலான மனசமாதானத்திலும் இருதய மகிழச்சியிலும் நிலைத்திருந்தனர். சங்.சாமிநாதர் சுவாமியார் அவர்களுக்கு துறவற ஆடையாக அளித்த வெண் கம்பளியிலான உடுப்பையும் லினனிலான முக்காட்டையும் மிகவும் மகிழ்ச்சியுடன் அப்பெண்கள் உடுத்திக் கொண்டார்கள். 

பிரான்சு நாடு முழுவதுமுள்ள ஆல்பிஜென்சிய பதிதரை மனந்திருப்பும் இந்த விசேஷமான ஞானபோதக அலுவலில் அர்ச். சாமிநாதருடன் அவர்களும் அரிய பங்கு வகிக்கின்றனர் என்பதை நன்கு உணர்ந்தார்கள்.

“நாங்கள் இந்த உன்னதமான ஆத்தும இரட்சணிய அலுவலில் உங்களுக்கு உதவுகின்றோம் அல்லவா சுவாமி! இந்த எங்களுடைய புதிய துறவற ஜீவியத்தினால் எங்களுடைய பாவங்களுக்கும், பிறருடைய பாவங்களுக்கும் பரிகாரம் செய்கிறோம் இல்லையா சுவாமி?” என்று அவர்கள் சாமிநாதரிடம் வினவினார்கள். 

அதற்கு அர்ச்.சாமிநாதர்,“நீங்கள் இறந்த பிறகு தான், இந்த துறவற ஜிவியத்தின் பரித்தியாகங்கள் எவ்வளவு விலையுயர்ந்தவை என்பதை கண்டுபிடிப்பிர்கள்” என்று பதில் கூறினார். இவ்வாறு புரோயில் கன்னியர் மடத்தின் துறவற ஜீவியம் துறவற ஒழுங்கிலும் ஜெபத்திலும் தியானத்திலும் சீராக நடைபெற்று வந்தது. பிறகு வந்.டீகோ ஆண்டகை 2 வருடங்களாக தனது நேரடியான கண்காணிப்பின்றி விடப்பட்டிருந்த தன்னுடைய ஞானமந்தையைக் கவனிக்கும்படி தன்னுடைய ஓஸ்மா மேற்றிராசனத்திற்கு திரும்பி செல்வதாக அறிவித்தார். இதைக் கேட்டதும் வந்.ஆண்டகையினால் அநேக ஞான நன்மைகளைப் பெற்றிருந்த அர்ச்.சாமிநாதரும், அவருடைய கன்னியர்களும் பெரும் வருத்தத்திற்கு ஆளாயினர்.

அர்ச்.சாமிநாதரும் மற்ற போதகக் குருக்களும் ஆற்றிய ஞான போதக அலுவலினால் அநேக ஞான நன்மைகள் ஏற்படலாயின. ஃபோஷோவிலிருந்து இரண்டு பெண்கள் புரோயிலில் இருக்கும் கன்னியர் மடத்தில் நவசந்நியாசிகளாக சேர்ந்தனர். 8 சிறுவர்கள் உத்தமமான கத்தோலிக்கு ஞான உபதேசம் கற்பிக்கும்படியாக அவர்களுடைய பெற்றோர்களால் கன்னியர் மடத்திற்குக் கொண்டு வந்து விடப்பட்டனர்.

தூலோஸின் மேற்றிராணியாரின் பண உதவியினாலும் நன்கொடைகள் மற்றும் நிலங்களினாலும், புரோயிலில் தேவமாதாவின் தேவாலயத்தை ஒட்டி ஒரு பெரிய புது கட்டிடம் உருவானது. சர்வேசுரனுடைய திருவுளமானால், அதுவே அர்ச்.சாமிநாதரின் கன்னியரினுடையவும் போதகக் குருக்களுடையவும் நிரந்தரமான தலைமையகமாக செயல்படும். “இவையெல்லாம் நாம் தேவமாதாவிடம் கொண்டிருக்கும் பக்தியினால் நமக்குக் கிடைத்த வெகுமதி என்று நிச்சயமாக என்னால் சொல்ல முடியும். நமது மகா பரிசுத்த தேவமாதா மிகவும் விரும்பும் ஜெபமான பரிசுத்த ஜெபமாலையின் வல்லமையையும் அதன் நன்மைபயக்கும் உன்னதமான ஞானபலன்களையும்உலகம் உணர்ந்துகொள்ளுமானால்!” என்று அர்ச்.சாமிநாதர் வியந்து சிந்தனையில் ஆழ்ந்தார். அவருடைய உதவியாளர்களான போதக குருக்களும் கன்னியரும் அவர் கூறிய இக்கருத்திற்கு முழு இருதயத்துடன் உடன்பட்டனர். 

“ஒரு அருள்நிறை மந்திரத்திற்கு சில மணித்துளிகளே செலவாகும். ஒரு முழு ஜெபமாலை சொல்வதற்கும் நீண்ட நேரம் ஆகாது. ஓரு நாள் உலகம் இந்த உன்னதமான ஜெபத்தின் மாபெரும் வல்லமையை அறிந்து கொள்ளும்” என்று அவர்கள் கூறினர். ஆனால் இந்த சிறிய வேதபோதகக்குழவினரின் துறவற ஜீவியம் நிண்ட காலம் யாதொரு பிரச்னையுமின்றி அமைதியாக நிடிக்கவில்லை. 1208ம் வருடத்தில் ஒரு நாள் அதிர்ச்சி தரும் ஒரு செய்தி புரோயில் மடத்திற்குக் கிடைத்தது. ஆல்பிஜென்சிய பதிதர்களிடையே சத்திய வேதத்தை முதலில் போதித்தவரில் ஒருவரான, சங்.பிட்டர் சுவாமியார், பதிதர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியே அது. ஏனெனில் அவர், ரேமண்ட் என்ற பிரபுவை சந்தித்து அவன் பரப்பிவந்த பதித தப்பறைகளை விட்டுவிடும்படி அவனைக் கண்டிக்கவும் அவ்வாறு அவன் ஆல்பிஜென்சிய பதித தப்பறையை விட்டு விடாவிட்டால் அவனைக் கண்டிக்கவும் அவனை திருச்சபைக்கு புறம்பாக்குவதற்குமாக ரோமாபுரியின் தூதுவராக சென்றிருந்தார். அதைச் சகியாத அந்த கொடுங்கோலனான ரேமண்ட் அந்தப் பரிசுத்த குருவானவரைக் கொலை செய்தான். மேலும், ரோமாபுரிக்குப் பிரமாணிக்கமாக சத்திய வேதத்தைப் போதிக்கும் மற்ற குருக்களுக்கும் அதே கதிதான் ஏற்படும் என்று அவன் மிரட்டினான். உடனே தெற்கு பிரான்சு பகுதியிலிருந்து வேதபோதக குருக்கள் வெளியேறவேண்டும் என்ற எச்சரிப்பும் பதிதர்களின் தலைமையகத்திலிருந்து, அர்ச்.சாமிநாதரின் சபைக் குருக்களுக்கு வந்தது. 

இதைக் கேள்விப்பட்டதும், வந்.ஃபல்குவஸ்ஆண்டகை அர்ச்.சாமிநாதரிடம், “ஒரு பரிசுத்த குருவானவரை வெட்டிக் கொலை செய்வது ஒரு சாதாரண வன்முறைச் செயலல்ல. ஒரு நாட்டின் தூதுவரைக் கொலை செய்வது என்பது மாபெரும் அக்கிரமம் என்பதை அனைவரும் அறிவர். அதுவும் பாப்பரசரின் தூதுவரை கொலை செய்த இந்த அக்கிரமசெயல் எவ்வளவு ஒரு பெரிய பாதகச் செயலாக இருக்கிறது!” என்றார். மிளிர்ந்த கண்களுடன், அர்ச்.சாமிநாதர் “ரேமண்ட் பிரான்சு நாட்டிலுள்ள கிறிஸ்துவர்களுக்கு மட்டுமல்லாமல் கிறிஸ்துவ உலகம் முழுவதற்கும் ஒரு சவால் விட்டிருக்கிறான். ஓ ஆண்டவரே, நமது பரிசுத்த பாப்பரசர், இனிமேலும் பொறுமையாக இருக்கக் கூடாது. உடனே அவர், இதற்கு ஒரு சக்திமிகுந்த பதிலடிகொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

ஏற்கனவே நீண்ட காலம் ரேமண்டுக்கு, அவன் தன் தப்பறையை விட்டு விடுவதற்கான போதிய அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவன் தன்தீமையைக் குறித்து மனம் வருந்தவில்லை. மாறாக திருச்சபைக்கு எதிராக அநேக வன்முறைகளை தொடர்ந்து செய்து வந்தான். அவன் திமையை விடுவதாக  இல்லை. எளிய மக்களிடமும் மாசற்ற துறவியரிடமும், அவன் இரக்கம் காட்டும்படி, அவனிடம், பரிசுத்தகுருக்களும் மேற்றிராணிமார்களும், வேண்டிக் கொண்டார்கள்.

ஆனால் அவன் தன் சேனையைக் கொண்டு அநேக ஏழை மக்களையும் துறவியரையும் உபாதித்தான். துறவற மடங்களையும் தேவாலயங்களையும் நாசமாக்கினான். ஆல்பிஜென்சிய பதிதப் பெண்ணின்மகனான ரேமண்ட் சிறுவயதுமுதலே மூர்க்கனாகவும் அகங்காரம் நிறைந்தவனாகவும் உருவெடுத்தான். திருச்சபையின் எந்த ஒரு அதிகாரத்தையும், சர்வேசுரனுடைய அதிகாரத்தையும் கூட ஏற்க மறுத்தான். இப்பொழுது ஒரு மாபெரும் சவாலை அவன் பாப்பரசர் 3ம் இன்னசென்ட் பாப்பரசருக்கு எதிராக விட்டிருக்கிறான். (தொடரும்)


அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 18

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 17






அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 9

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 8

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 7

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 6

அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 4





திங்கள், 3 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் - 17

 பதிதர்களின் நடுவில் சாமிநாதர்


அர்ச்.சாமிநாதரிடம், சங்.பிட்டர் சுவாமியார் வேதசாட்சியாக கொலையுண்டநேரத்தில் அவர் கூறியசெய்தியை அவருடைய சீடர்கள் கூறினர். சங்.பீட்டர் சுவாமியார் ரோன் நதிக்கரையில் தனது சககுருவானவருடன் நின்று கொண்டிருக்கும்போது, அவரை சிறை பிடிக்கும்படியாக வந்த ரேமண்ட் சிற்றரசனின் அரண்மனை காவலர் இருவரில் ஒருவன் அவரை ஈட்டியால் குத்தினான். உடனே இந்த உன்னதமான வேதசாட்சிய மரணத்திற்காக வெகுகாலம் ஆவலுடன் காத்திருந்த சங்.பீட்டர் சுவாமியார், தன்னைக் குத்தினவனை நோக்கி, “நண்பா! சர்வேசுரன் உன்னை மன்னிப்பாராக! நான் ஏற்கனவே உன்னை மன்னித்து விட்டேன்” என்று கூறினார். 

பிறகு தன் சக குருவானவரை நோக்கி, “இதனால் அiதரியப்படாதீர்கள். மிகுந்த கவனத்துடனும் அச்சமின்றியும் நமது திருச்சபைக்காக ஊழியம் செய்யுங்கள். நமது கத்தோலிக்கு விசுவாசத்திற்காக அஞ்சாமல் வேதத்தைப் போதியுங்கள்” என்றார். அவருடைய வேதசாட்சிய மரணத்தின் பலனாக ரேமண்டிற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான ஐரோப்பிய கிறிஸ்துவர்கள் பிரான்சில் மட்டுமல்லாமல், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளிலிருந்தும் ஒன்றாக திரண்டனர். திருச்சபைக்காக போராடுவதற்காகவும், திருச்சபையின் வேத சத்தியத்தை பிரான்சு நாட்டில் நிலைநாட்டும்படியாகவும் அவர்கள் படைபலம் கொண்டு ரேமண்டின் பதிதத்தை ஒடுக்குவதற்காக முற்பட்டனர். இங்கிலாந்து நாட்டின் உயர்குடிமகனான சைமன் டி மோன்ஃபோர்ட் என்பவர் கத்தோலிக்க படைக்கு தலைமை தாங்கினார். வீரமிக்க அவருடைய பெயரைக் கேட்டாலே எதிரிகள் அஞ்சினர். அர்ச்.சாமிநாதரின் சிடர்களில் ஒருவரான சகோ.பெர்ட்ரான்ட் என்பவர்,  “ சுவாமி! நமது படை பலத்தைக் கண்ட பதிதர்களில் சிலர் ஏற்கனவே நம்மிடம் சமாதானம் செய்து கொள்வதற்காக மன்றாடி வருகின்றனர். சில நாட்கள் மட்டுமே போர் நடந்து முடிந்தால் நலமாயிருக்குமே! அதற்குள்ளாக ரேமண்ட் மனம் திருந்தினால் நன்றாக இருக்குமே!” என்று கூறினார்.

சைமன் டி மோன்ஃபோர்டின் தலைமையில் கூடிய படை வீரர்களில் பெரும்பாலானோர் சாதாரண விவசாயிகளாக இருந்தனர். இது பதிதத்திற்கு எதிரான போர், அதாவது, பிரான்சு நாட்டில், பரிசுத்த வேத விசுவாசத்தைக் காப்பாற்றுவதற்கான பரிசுத்த போர் என்பதனாலேயே அவர்கள் இந்தப் போரில் ஈடுபட்டிருந்தனர். இப்போரில் ஒரு சில நாட்கள் அல்லது ஓரிரு வாரங்கள் ஈடுபட்டாலே அதற்கான ஞானபலன்கள் திருச்சபையால் வாக்களிக்கப்பட்டிருந்ததால், அந்தக் குடியானவர்கள், அந்த ஞானப்பலன்களை முன்னிட்டே இந்தப்போரில் ஈடுபட்டனர். எனவே படைவீரர்கள் அல்லாத இந்த பாமரவிவசாயிகளைக் கொண்டு போர் புரிவது சைமன் டி மோன்ஃபோர்ட்டிற்கு மிகக் கடினமானதொன்றாக விளங்கியது. மேலும் சில வாரங்களிலேயே படையில் இருந்த ஏராளமான விவசாயிகள், தங்களுக்குத் தேவையான ஞானப்பலன்களைப் பெற்றுக் கொண்டவர்களாக தங்கள் இல்லங்களுக்குத் திரும்பலாயினர். அதனால் படையில் நாளடைவில் வெகு சொற்ப பேரே எஞ்சினர். அப்பொழுது அர்ச்.சாமிநாதர், “ இந்தப் போர் நீண்ட காலம் நிடிக்கும்போலிருக்கிறதே! ஓ மிகவும் பரிசுத்த கன்னிமாமரியே! நாங்கள் என்ன செய்யப் போகிறோம்?” என்று தேவமாதாவிடம் வேண்டிக் கொண்டார். 

இதற்கிடையே அர்ச்.சாமிநாதருக்கும் சைமன் டி மோன்ஃபோர்ட்டிற்கும் இடையில் ஆழ்ந்த நட்பு ஏற்படலாயிற்று. விரைவிலேயே இருவரும் சேர்ந்து பல மணி நேரங்கள் ஒன்றாக செயல்படலாயினர். ஏனெனில் சைமன் டி மோன்ஃபோர்ட்டின் படையினரிடையே வேத கடமைகளையும் ஒழுங்குகளையும் நிலைப்படுத்தும்படிக்கு படையினருக்கான குருவானவராகவும், சிறைபிடிக்கப்பட்ட ஆல்பிஜென்சிய பதிதர்களின் நகரங்களில் சத்திய வேதத்தைப் போதிக்கும்படியாகவும் அங்கிருக்கும் தேவாலயங்களில் பாரம்பரிய கத்தோலிக்க வழிபாட்டு முறைமைகளை மிண்டும் ஏற்படுத்தி அப்பதிதர்களுக்கு ஞானஉபதேசத்தைப் போதிக்கும்படியாகவும், அர்ச்.சாமிநாதர் கத்தோலிக்குப் படையினருடன் கூட செல்ல வேண்டியிருந்தது. ஆங்கிலேய படை தளபதியான சைமன் டி மோன்ஃபோர்ட் அர்ச்.சாமிநாதரிடம், “சுவாமி! எங்களைவிட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்று ஒருபோதும் நினைக்காதிர்கள். நிங்கள் எங்களுக்கு மிகவும் தேவையாயிருக்கிறீர்கள்” என்று கூறினார். சாமிநாதரும் பிரான்சு நாட்டில் பல வருடங்கள் தங்கியிருந்தார். பதிதர்களிடையே வெகு கடுமையான நிதிபதியாக இருக்கிறார் என்று ஆரம்பத்தில் அர்ச். சாமிநாதரைப் பற்றி நிலவிய தப்பறையான கருத்து, கருணையுடனும் அன்புடனும் பதிதர்களை அவர் கையாண்ட முறைகளினால் அவருடைய இரக்க சுபாவம் உலகிற்கு வெளிப்படலாயிற்று. ஆயினும் பதிதர்களிடையே அவருடைய அடைந்து வந்த வெற்றிகளாலும் அநேக பதிதர்கள் அவரால் மனந்திரும்பியதாலும் அவர்மேல் சில தியவர்கள் கொடிய பகைகொண்டவர்களாக அவரைக் கொல்லுவதற்கான வழி தேடினர். இதை அறிந்த அர்ச்.சாமிநாதர், உன்னதமான கத்தோலிக்க வேத விசுவாசத்திற்காக தன் உயிரை விடுவது என்பது நேரே மோட்சத்திற்குக் கொண்டு செல்லும் வேதசாட்சிய மரணமாகும். நானும் வேதசாட்சியாவதற்கு ஒரு நல்ல வழியைக் கண்டு பிடித்துள்ளேன். பதிதர்களின் ஊரான கார்க்கசோன் நகரத்திற்கு நான் தனியாக சென்று அந்த உயரிய வேதசாட்சிய முடியைப்பெறுவேன்” என்றார்.

கார்க்கசோன் என்னும் சிறிய நகரமானது ஆல்பிஜென்சிய பதித்தின் உறைவிடங்களில் மிக முக்கிய நகரமாக விளங்கியது. அங்கு வாழ்ந்த கத்தோலிக்கர்கள் பதிதர்களால் மிகவும் கொடூரமாக உபாதிக்கப்பட்டனர். ஆனால் அர்ச்.சாமிநாதர், மிகுந்த இளகிய இருதயத்துடனும் கனிவுடனும் பரலோக இராக்கினியின் மகிமையைக் குறித்து திவ்ய இரட்சகரின் தாயாரே! ஏன்னும் அவருக்கு மிகவும் பிடித்தமான பாடலைப் பாடிக் கொண்டு அந்நகரத்தின் வாயில்களுக்குள் நுழைந்தார். அவரைக் கண்டதும் முதலில் பதிதர்கள் திடுக்குற்றனர். பிறகு, அவர்மேல் கோபமுற்றவர்களாக, “இவர் ஏன் இங்கு வந்தார். கத்தோலிக்க படையிலல்லவா இவர் இருக்கிறார். ஏன் பாடிக்கொண்டு வருகிறார். அவருக்காக இங்கு என்ன காத்துக்கொண்டிருக்கிறது என்று அவர் உணரவில்லையா?” என்று கத்தினர். 

அதற்கு அவரே பதிலளித்தார். போர் கத்தோலிக்கர்களுக்கு சாதகமாகவே இருப்பதால், கொஞ்ச காலத்திற்கு படையிலிருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக வேறு ஒரு குருவானவர் படைவீரர்களைக் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் அவர் மகிழ்ச்சியுடன் இருப்பதால், தேவமாதாவின் பாடலைப் பாடுகிறார். அது அவருடைய மகிழ்ச்சியை இன்னும் அதிகரிக்கின்றது. மேலும் அவர் அவர்களை நோக்கி, “நண்பர்களே! நான் விரைவில் மோட்சம் செல்ல விருக்கிறேன் என்று அறிவது எவ்வளவு நன்றாக இருக்கிறது” என்று கூறினார்.

அவரைக் கொல்ல முயற்சிக்கும் தங்களைப் பார்த்து கொஞ்சம் கூட பயமும் இல்லாதவராக, தங்களை நண்பர்கள் என்று அழைக்கும் இந்த கறுப்பு வௌ;ளை அங்கியை அணிந்த போதகர், எப்படிப்பட்டவராக இருக்கிறார்! என்று சிறிது நேரத்திற்கு அந்த பதிதர்கள் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். பிறகு, “இரவு வரும். அப்போது நாம் கத்தியையும் வாளையும் அவரிடம் காட்டும்போது அவர் வேறொரு வித்தியாசமான பாடலைப் பாடுவதைப் பாருங்கள்” என்று அவலட்சணமுகத்தையுடைய ஒரு இளைஞன் கூறினான். அதற்கு

இன்னொருவன், “அப்படியே அவரை சுட்டெரித்து விடுவோம். தனது உடல் வறுக்கப்படும்போது, அவர் நம்மைப் பார்த்து இரக்கத்தை மன்றாடுவார். அப்போது அவரைப் பார்ப்பது நன்றாகயிருக்கும்” என்றான். வேறொருவன் “

அது சரிதான். ஆனால், இப்போது அவரை வைத்து நாம் ஒரு விளையாட்டை விளையாடலாம். அவருடைய கண்களைப் பிடுங்குவோம். அவருடைய விரல்களை வெட்டுவோம். ஆனால் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக மெதுவாக செய்வோம்” என்றான். 

முதலில், இரகசியமான குரல்களில் ஒலித்த இவ்வெச்சரிக்கைகள், பிறகு உரத்த சப்தமாக மாறின. இவற்றைக் கேட்ட அர்ச்.சாமிநாதர் யாதொரு அச்சமுமின்றி முன்னைவிட இன்னம் அதிக மகிழ்வுடன், சிரித்துக் கொண்டே, அந்நகரத்துத் தெருக்களில் தேவமாதாவின் பாடல்களை தனது இனிமையான குரலில் பாடிக் கொண்டே நடந்து சென்றார். வுழியில், தன்னை ஆச்சரியத்துடன் வீடுகளின் கதவுகளுக்கிடையே ஒளிந்து நின்று உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த சிறுவர் சிறுமியரை ஆசீர்வதித்துக் கொண்டே சென்றார். சில இடங்களில் தன்னை உபாதிக்கத் தேடிய பதிதர்களிடையே ஞான பிரசங்கங்களையும் போதிக்கலானார். பிறகு இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக, அன்று இரவில் அந்தக் கிராமத்தின் பசும்புல் தரையில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே தன் இரவு ஜெபத்தைச் சொன்னார். பிறகு அங்கேயே படுத்து ஓய்வெடுத்தார். இதைக் கண்ட பதிதர்கள் தங்கள் கண்களையே நம்பமுடியாதவர்களாக, கத்திகளுடனும் ஆயுதங்களுடனும் அவரைக் கொலை செய்யும் எண்ணத்துடன், அமைதியாக தரையில் உறங்கிக் கொண்டிருந்த அர்ச்.சாமிநாதரையே சுற்றி சுற்றி வந்தனர். (தொடரும்)


அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 17






அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 15

பதித பெண்கள் மனம் திரும்புதல் 



அந்த மிருகத்தைக் கண்டு அங்கிருந்த பதிதப் பெண்கள் அனைவருடைய இருதயங்களும் பயத்தால் ஆட்கொள்ளப்பட்டன. அது எத்தகைய கொடுரமான மிருகமாக இருக்குமோ? அது எங்கிருந்து வருகிறது? அது என்ன செய்யப் போகிறது? என்றெல்லாம் அவர்கள் அஞ்சினர். 

“சுவாமி! அது என்னைத் தொடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கிளாரட்டா அலறினாள்.

“ஐயோ! வேண்டாம், வேண்டாம்!” என்று ஜென்சியானா கூச்சலிட்டாள். எல்லா பெண்களும் சேர்ந்து அச்சத்தால் கத்தினார்கள். 

அர்ச்.சாமிநாதர் அப்பெண்களை நோக்கி நெருங்கி வந்துகொண்டிருந்த மிருகத்தின் மேல் தமது கண்களைப் பதித்தார். உடனே அவருடைய முகம் கடுமையாக மாறியது. அவர் தம் கரங்களை உயர்த்திக் கொண்டு அம்மிருகத்தைப் பார்த்து மிரட்டும் குரலில், “ஏக சர்வேசுரனின் பரிசுத்த திருநாமத்தினால் உனக்குக் கட்டளையிடுகிறேன். இங்கிருந்து அகன்று, தொலைந்து போ, சாத்தானே!” என்று அதற்குக் கட்டளையிட்டார். 

தன் கண்களில் திச்சுவாலைகளுடன் திகழ்ந்த அந்த மிருகம் உடனே தான் வந்த பாதையில் நின்றது. அதன் பிறகு, ஒரு நொடிப் பொழுதில், உக்கிரமமான வேகத்துடன் அப்பெண்களின் தலைகளின் மேல் தாவி ஓடி சுவற்றின் அருகில் இருந்த தேவாலயத்தின் மணியடிக்கும் கயிற்றைப் பற்றிக் கொண்டு தேவாலயத்தின் கூரைஉச்சியை அடைந்து மறைந்தது. துர்நாற்றமுள்ள ஒரு புகைமண்டலத்தை ஏற்படுத்தி அதற்குள் மறைந்து போனது. உடனே அப்பெண்கள் மத்தியில் ஒரு அசாதாரணமான மௌனம் ஏற்பட்டது. பிறகு
அப்பெண்கள் அனைவரும் தங்களுடைய உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாதவர்களாய் கதறி அழுதனர். 
“ஓ சுவாமி! நீங்கள் தான் எங்களுடைய உயிரைப் காப்பாற்றினீர்கள்! அப்போது தான் அது எங்கள் மேல் பாய்வதற்கு சமயம் பார்த்துக் கொண்டிருந்தது. சரியாக அதே நேரத்தில் நீங்கள் அதை அதட்டி, துரத்தி விட்டீர்கள். சில நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டிருந்தாலும், அது எங்களுடைய கண்களைப் பறித்திருக்கும்” என்று அவர்கள் அர்ச்.சாமிநாதரிடம் கூறினர். அவரும் அவர்களைத் தேற்றும் வகையில் அவர்கள் இருந்த இடத்திற்கு
அருகே வந்தார். 
“பயப்படாதீர்கள்! என் மக்களே! சபிக்கப்பட்ட மிருகம் இப்போது இங்கு இல்லை” என்று அவர், அவர்களிடம் கூறினார். 
உடனே ஜென்சியானா, “ அது என்ன, சுவாமி?” என்று தேவாலயத்தின் கூரை உச்சியை சுட்டிக் காண்பித்து நடுங்கிக் கொண்டே கேட்டாள். 
அதற்கு சாமிநாதர், “அது பசாசு. இது அதனுடைய அசுத்த உருவங்களில்
ஒன்றாகும்” என்றார். பின்னர், அர்ச்.சாமிநாதர் அவர்களிடம் மறுபடியும் சர்வேசுரனைப் பற்றியும், அவருடைய ஏகப் பரிசுத்த கத்தோலிக்குத் திருச்சபையைப் பற்றியும், மனித சரிரத்தைக் கிழித்துக் கொல்லும் அப்பயங்கரமான மிருகத்தைப் போல, திருச்சபையைக் கிழிப்பதற்காக தோன்றிய ஆல்பிஜென்சியப் பதிதத் தப்பறையின் நாசகரமான திமையைப் பற்றியும் அவர்களுக்கு பிரசங்கிக்கலானார். அவர் அவ்வாறு போதிக்கும் போது, அப்பெண்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கவனித்துக்
கேட்டனர். 
பிறகு அவர்கள் அவரிடம், “சுவாமி! இனிமேல் நிங்கள் போதிக்கும் அனைத்தையும் நாங்கள் விசுவசிக்கிறோம். நாங்கள் கெட்டவர்களாக இருந்தோம். மிகப் பயங்கரமான தியவர்களாக இருந்திருக்கிறோம். நாங்கள் செய்த பாவத்தைப் பரிகரிப்பதற்கு, நாங்கள் இனி என்ன செய்ய வேண்டும்?” என்று வினவினர். 
ஒரே நொடிப் பொழுதில் 9 பெண்கள் மனந்திரும்பியதைக் கண்டு அர்ச். சாமிநாதருடைய இருதயம் சர்வேசுரனையும் தேவமாதாவையும் ஆனந்த அக்களிப்புடன், புகழ்ந்து பாடியது. அமைதியாக அவர் அப்பெண்களைப் பார்த்து, “நிங்கள் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும். ஆல்பிஜென்சியப் பதிதத் தப்பறைகளை எல்லா மக்களின் முன்னிலையில் வெளிப்படையாக
மறுதலித்து விட்டுவிட வேண்டும்” என்றார். 
உடனே ஜென்சியானா, “சுவாமி! அதன்பிறகு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்றாள். அதற்கு புன்னகையுடன் அர்ச்.சாமிநாதர், “உன்னுடைய
இக்கேள்விக்கு பரலோக பூலோக இராக்கினியானயான தேவமாதா தான் பதிலளிக்க வேண்டும். உங்களுடைய ஜீவியத்திற்கான சர்வேசுரனுடைய திருவுளத்தை அறியும்படிக்கு நாம் அவர்களிடம் மன்றாடுவோம்” என்று கூறினார்.
இதன்பிறகு, அர்ச்.சாமிநாதர் பல வாரங்கள் தொடர்ந்து ஜெபத்திலும் தியானத்திலும் நிலைத்திருந்தார். அப்பொழுது அவருடைய இருதயத்தில் உதித்த திட்டமே, பரலோகத்திலிருந்து அவருக்குக் கிடைத்த பதிலாக மனப்பூர்வமாக திர்மானித்தார். அப்பெண்கள் மனந்திரும்பிய
அந்நிலைமையில் தங்களுடைய இல்லங்களில் பல இன்னல்களுக்கு ஆளாகக் கூடும். எனவே அவர்கள் வசிப்பதற்கு மாற்று இடம் ஒன்றை ஏற்படுத்திக்
கொடுக்க வேண்டும். வந்.டீகோ ஆண்டகையிடம், அர்ச். சாமிநாதர், “ஆண்டவரே! இப்பெண்கள் புரோயிலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றே நமது மோட்ச ஆண்டவள் விரும்புகிறார்கள் என்பதை நான்
நிச்சயமாக அறிவேன்” என்றார்.
“ஒரு மடத்திலா?”
“ஆம். ஆண்டவரே! அங்கிருக்கும் தேவமாதாவின் சிற்றாலயத்தை ஒட்டியே அது கட்டியமைக்கப்பட வேண்டும். நாம் இங்கு பதிதத்திற்கு எதிராக ஆற்ற
வேண்டிய வேதபோதக அலுவலுக்காக, அம்மடத்தில் தங்கியிருந்து, அவர்கள் ஜெபம் செய்ய வேண்டும். மற்ற மனந்திரும்பும் பெண்களையும் நாம் அங்கு அனுப்பலாம். அவர்களையும் மற்ற சிறு பிள்ளைகளையும் பதிதமார்க்கத்தின் அபாயத்திலிருந்து அங்கு பாதுகாக்கலாம்” என்றார். 







வியாழன், 30 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்:அத்தியாயம் - 14


ஃபோஷோவின் வடக்குஎல்லைப்புறத்தின் வாயிலில் அர்ச்.சாமிநாதர் மடடும் தனியாக நின்று கொண்டிருந்தார். தான் கண்டது வெறும் கனவாகிவிடுமோ என்ற அச்சத்துடன் அடுத்தநாளும் அதே இடத்திற்கு ஆர்வத்துடனும் ஜெபித்துக்
கொண்டும் சாமிநாதர் வந்தார். மெய்யாகவே மகாபரிசுத்த மோட்ச இராக்கினி தன்னிடம் மனம் மகிழ்ந்துள்ளார்களா? தன் சிடர்கள் இதுவரை தினசரி தேவமாதாவுக்கு தோத்திரமாக செய்து வரும் அருள்நிறை மந்திரங்களுக்கு செவிசாய்க்கிறார்களா? தேவமாதா உண்மையாகவே ஆல்பிஜென்சிய பதிதரை மனந்திருப்பும் திட்டம் வைத்திருக்கிறார்களா? அத்திட்டத்தில் இந்த சிற்றாலயமும் ஏதோ ஒருவிதத்தில் பங்கு வகிக்கப் போகிறதோ? என்றெல்லாம் சிந்தித்தார். அந்திநேரம் மங்கியதும் முந்தின இரவில் நிகழ்ந்த அனைத்தும் மிண்டும் நிகழலாயின. அதே வெண்கோள வடிவிலான ஒரு மாபெரும் திப்பிழம்பு தோன்றியது. பள்ளத்தாக்கின் மேல் சிறிதுநேரம் அசைவாடியது. பிறகு யாருமற்ற அர்ச்.கன்னிமாமரியின் சிற்றாலயத்தின் மேல் வந்து நின்றது. 

“என்னிடம் உதவி கேட்டாய். என் மகனே! இதோ புரோயிலில் உள்ள அந்த சிற்றாலயம். இங்கு தான் உன் ஜீவியத்தின் மெய்யான அலுவலை துவக்குவாய். இங்கு தான் நி அநேக ஆத்துமங்களை மோட்சத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பாய்” என்ற அதே வார்த்தைகள்.

சாமிநாதரின் இருதயத்தில் மிண்டும் எதிரொலித்தன. அடுத்தநாள் இரவும் இதே புதுமை மூன்றாம்முறையாக நிகழ்ந்தபோது அர்ச்.சாமிநாதர் திர்மானமான முடிவுக்கு வந்தார்.அவர் கண்டவையனைத்தும் அவருடைய
கற்பனையல்ல. மாறாக அவை அவர் கண்ட காட்சி என்றும், அவர் கேட்ட குரலொலி உண்மையானது என்றும் உணர்ந்துகொண்டார்.

இதைக் கேள்வியுற்ற வந்.டீகோ ஆண்டகை, “என் மகனே! நானும் இக்காரியத்தில் உங்களுடன் உடன்படுகிறேன். தேவமாதா நமக்காக நிச்சயம் புரோயிலில் ஒரு அலுவலை வைத்திருக்கிறார்கள். ஆனால் அது என்ன அலுவல்?” என்று வினவினார்.

“அது எனக்கு தெரியாது, ஆண்டவரே” “அது நிச்சயமாக பிரசங்கிக்கும் அலுவலாக இருக்க முடியாது. ஏனெனில் அவ்வளவு தொலை தூரத்தில் இருக்கும் அந்த இடத்திற்கு யாரும் எளிதாக வரமுடியாது” எவ்வளவு நன்றாக உண்மையை மேற்றிராணியார் கண்டுபிடிக்கிறார் என்று அர்ச்.சாமிநாதர் நினைத்தார். பிறகு அவர் மேற்றிராணியாரிடம், “ஆண்டவரே, அங்கு நமது மனந்திரும்பிய பெண்களுக்கான ஒரு இல்லத்தை ஏற்படுத்த வேண்டும். அது எவ்வளவு நன்றாக இருக்கும்” என்றார்.

“ஆனால் நம்மிடம் ஒரு கை விரல்களைக் கொண்டு மட்டும் எண்ணக்கூடிய அளவுக்கு தானே அத்தகைய மனந்திரும்பிய பெண்கள் உள்ளனர். அதுவும் அவர்கள் துறவற ஜீவியத்திற்கு பொருத்தமானவர்கள் அல்லவே”.

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, அர்ச்.சாமிநாதர், “நமக்கு இப்பொழுது
மோட்சத்திலிருந்து ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது. இன்னொரு அடையாளம் நிச்சயமாக நாம் பெறுவோம் என்று நம்புகிறேன்” என்றார்.

“இன்னொன்றா?”

“ஆம் ஆண்டவரே! அது நமக்குத் தரப்படும்போது எத்தகைய மாபெரும் மகிழ்ச்சியை நமக்கு தருவிப்பதாக இருக்கும்!”

இதன்பின், சிலவாரங்களுக்குப் பிறகு, ஒருநாள் அர்ச்.சாமிநாதர், ஃபோஷோவில் அதே சிற்றாலயத்தில் 9 பதித பெண்களுக்கு ஞான போதகத்தைப் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். “என் பிரியமான குமாரத்திகளே! பசாசின் பிடியிலேயே இருப்பதற்கு நீங்கள் அடம்பிடிப்பது, எத்தகைய பரிதாபகரமானது என்று சிந்தியுங்கள்! அத்தகைய நிலைமையில் ஒருபோதும் நிங்கள் மகிழ்ச்சியுடன் ஜீவிக்க முடியாதே!” என்றார். 

உடனே அவர்கள் அதை எதிர்த்து கூக்குரலிட்டனர். அப்பெண்கள் எல்லாரும் அந்நாட்டின் சிற்றரசர்கள் மற்றும் உயர்குல பிரபுக்களின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களாம். அவர்களால் சாமிநாதருடைய அறிவுரையைத் தாங்க முடியவில்லை. ஜென்சியானா என்ற ஒரு பெண் அக்கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு, அர்ச்சிஷ்டவரைப் பார்த்து, “ நிங்களும் இந்நாட்டில் அங்குமிங்கும் அலைந்து திரியும் மற்ற குருக்களும் தான் அவ்வாறு பசாசின் பிடியில் இருக்கிறீர்கள். நாங்கள் இல்லை” என்று கூவினாள்.

 பிறகு, கிளாரட்டா என்ற மற்றொரு பெண், “அது சரி. உங்கள் மேற்றிராணியார் டீகோவும் தான். அவரை மிகவும் அருகில் கவனித்து வந்தேன். அவரைப் பற்றி எனக்குத் தெரியும். அவர் இங்கு வந்து நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களிடம் சொல்வதற்கு நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர் ஸ்பெயின் நாட்டிற்கே திரும்பி செல்லட்டும். கர்த்தூசியன் மடாதிபதியும், அவருடைய துறவிகளும்  அவ்வாறே திரும்பி தங்களுடைய ஊருக்குச் செல்லட்டும்” என்று ஆவேசத்துடன் இரைச்சலிட்டாள்.

இப்பெண்களின் இரைச்சலை சட்டைபண்ணாமல், அர்ச்.சாமிநாதர் அவர்களிடம், “என் பரிதாபத்துக்குரிய பிள்ளைகளே! நீங்கள் மெய்யாகவே பசாசின் பிடியில் அகப்பட்டுள்ளீர்கள். நிங்கள் பேசுவது என்னவென்று தெரியாமல் பேசுகிறீர்கள்” என்று ஆணித்தரமாக பலமுறை கூறினார். பிறகு, பரலோக பிதாவைப் பற்றி பிரசங்கிக்கலானார். அவருடைய ஏக குமாரானாகிய திவ்ய சுதனாகிய சர்வேசுரனைப் பற்றியும், 1200 வருடங்களுக்கு முன் அவர் ஸ்தாபித்த திருச்சபையைப் பற்றியும் போதித்தார். அதுவே சத்தியவேதத்தைப் புகட்டும் மெய்யான திருச்சபை என்றும் அதன் வழியாகவே நித்திய பேரின்ப மோட்சத்தை எந்த மனிதனும் அடையமுடியும் என்றும் கற்பிக்கலானார்.

பிறகு அந்த வெறுப்பு நிறைந்த முகங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து, “எவ்வாறு ஏக பரிசுத்த சத்திய திருச்சபை பொய்யானவைகளை போதிக்கக் கூடும்? நன்மையே உருவான சர்வேசுரனாலேயே ஏற்படுத்தப்பட்ட தேவதிரவிய அனுமானங்கள் எவ்வாறு திமையானவையாக இருக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்?” என்றார்.

“இரு கடவுளர்கள் உள்ளனர். ஒருவர் நல்லவர் மற்றவர் கெட்டவர் என்பதை மறந்துவிட்டீர்களா சுவாமி? இங்கு எங்களுடைய குழந்தைகளுக்குக் கூட தெரியுமே!” என்று இன்னொரு பெண் கூறினாள். இதைக் கேட்டதும் அர்ச்.சாமிநாதர் சிறிது நேரம் மௌனமானார்.

அவருடைய கண்கள் சாந்தமும் இரக்கமும் நிறைந்து ஒளிர்ந்தது. எத்தகைய அறியாமை இங்கு நிலவுகிறது! இம்மக்களின் மனங்கள் கடினப்பட்டு தப்பறையில் நிலைத்திருக்கின்றனவே! என்றெல்லாம் எண்ணிய அர்ச். சாமிநாதர், உடனே, இவற்றையெல்லாம் நன்கறிந்துள்ள மோட்ச இராக்கினியிடம் தஞ்சமடைந்தவராக, “என் அதிமிக நேசமுள்ள தேவதாயாரே! பதிதத்தில் இருளடைந்திருக்கும் இவர்களுடைய இருதயங்களை ஒளிர்விப்பதில் எனக்கு உதவியாக வாரும்! அவர்கள் பதிதர்களாக இருந்த போதிலும், அவர்களும் உமது பிள்ளைகள் தானே!” என்று வேண்டிக் கொண்டார். பிறகு, ஞானத் தெளிவடைந்தவராக மிக எளிய வார்த்தைகளைக் கொண்டு அப்பதிதர்களிடம் போதிக்கலானார். “ஒரு சிறு பொய் கூட, நமது ஆத்துமத்தை வருத்தப்படுத்துவதற்கும் அழிப்பதற்குமான வல்லமையைக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால், மிகப்பெரிய பொய்கள், முக்கியமாக, இவ்வுலக நாடுகளின் நித்திய கதியான, சர்வேசுரனைப்பற்றிய காரியங்களிலும் அவருடைய கற்பனைகளைப்பற்றியவற்றிலும் பயன்படுத்தப் படும் மிகப்பெரிய பொய்கள் எப்படிப்பட்ட திமை நிறைந்தவைகளாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்! பசாசு தான் முதல் மாபெரும் பொய்க்கு தகப்பனாக விளங்குகிறான். சிங்காரத் தோப்பில் அவன் ஏவாளிடம் அந்தப் பொய்யைக் கூறினான். பசாசு முதலில் ஏவாளிடம், சர்வேசுரன் கூறியதன்பேரில் சந்தேகத்தை ஏற்படுத்தி, பிறகு, அவள் அதை நம்பாமல் செய்தான். பிறகு, விலக்கப்பட்ட கனியைத் தின்றால், மாபெரும் வல்லமையையும் மகிழ்வையும், அதாவது, அவள் கடவுளாகவே மாறுவாள் என்றும், பசாசு ஏவாளிடம் வாக்களித்தது. ஆனால் அந்த மாபெரும் வல்லமையையும் மகிழ்வையும் அவள் கண்டடைந்தாளா? மாறாக, வேதனை துயரம், சாவு, நோவு போன்ற சாபத்தையே பெற்று, சிங்காரவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டாள்” என்று கூறினார். 

அப்பொழுது கர்தோலானா என்ற பெண், திடீரென்று, “ஐயோ! சுவாமி அங்கே பாருங்கள்!” என்று கூக்குரலிட்டு அலறினாள். தேவாலயத்தினுள் ஒரு மாபெரும் கருப்பு பூனையைப் போன்ற ஒரு விநோதமான பயங்கர தோற்றமுடைய ஒரு மிருகம் வருவதை அனைவரும் கண்டனர். அதனுடைய கண்கள், ஒரு எருதுவின் கண்களைப்போலும், அதன் வால், அடர்ந்த ரோமத்துடன் ஒரு நாயின் வாலைப் போலும் இருந்தன. தன் இரையைப் பிடிப்பதற்காக, அதன் செந்நிற நாவை ஆறு அங்குல நிளத்திற்கு வெளியே நிட்டிக் கொண்டு உறுமிக் கொண்டு அப்பெண்களை நோக்கி வந்தது.

(தொடரும்)





புதன், 29 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் - 13

தேவமாதா செய்த புதுமை



வந்.டீகோ ஆண்டகையும் அவருடைய தலைமையின் கிழ் வேதபோதகக் குழவினரும் பிரான்சு நாட்டின் தெற்குப்பகுதியில் அயராமல் வேதபோதக
அலுவலில் ஈடுபட்டனர். வெண் கம்பளியிலான நீண்ட அங்கியை அணிந்திருந்தனர். லினன் மேலங்கியும் கறுப்புக் கம்பளியிலான வெளி முக்காடும் அணிந்திருந்தனர்.இவ்வுடையானது ஓஸ்மா மேற்றிராணியாரின் கதிட்ரல் பேராலயத்தின் உதவிக்குருக்கள் அணிகின்ற ஆடையாக இருந்தது.
பிரான்சின் நகரங்கள் அனைத்திற்கும் சென்று பதிதர்களுடன் நம் வேதபோதகக் குழுவினர் நேருக்கு நேராக வேதவிசுவாச சத்தியங்களைக் கற்பித்தும் அவர்களுடைய தப்பறைகளைச் சுட்டிக் காட்டியும் அதற்கான தர்க்கத்தில் ஈடுபட்டு அவர்களைத்  தெளியவைத்தும் வந்தனர். 
அர்ச். சாமிநாதர் மகா பரிசுத்த தேவமாதாவிடம், “ஆனால் இது மட்டும் போதாது. நாங்கள் போதித்துக் கொண்டு இருக்கும் போதே மக்கள் தங்கள் தப்பறைகளிலேயே மடிந்து போகின்றனரே! ஓ மோட்ச இராக்கினியே! எங்கள் நேச பரிசுத்த தாயாரே! நிச்சயமாக இதை விட வேறு ஒன்றை நாங்கள் செய்யக் கூடும்! இவ்வலுவலை இன்னும் அதிக துரிதமானதாகவும் மாற்றக் கூடியதும் அதிக பலனுள்ளதுமாக மாற்றக்கூடிய வேறு ஒரு திட்டத்தை நிங்கள் எங்களுக்காக நிச்சயம் வைத்திருப்பிர்கள்!” என்று மன்றாடினார்.

1206ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் நாள் அர்ச்.மரிய மதலேனம்மாளின் திருநாளன்று, அர்ச்..சாமிநாதர் ஃபோஷோவில் இருந்தார். வந். ஃபல்க் ஆண்டகை அவருக்கு நன்கொடையாக அளித்திருந்த சிற்றாலயம் அந்நகரில் இருந்தது. அப்பொழுது அந்த சிற்றாலயத்தின் வளாகத்தை தான் அர்ச். சாமிநாதர் தமது வேதபோத அலுவலின் தலைமையகமாக ஏற்படுத்தியிருந்தார்.  அன்று மாலையில் அர்ச்.சாமிநாதர் அந்நகரத்தின் வடக்கு எல்லையில் இருந்த நகரத்தின் வாயிலை நோக்கி நடந்தார். அங்கிருந்து அருகில் இருந்த மலை, பள்ளத்தாக்கு, காடுகள், கிராமத்து வயல்கள் அனைத்தையும் பார்க்கமுடியும். அது ஒரு மிக அழகிய காட்சியாக
இருக்கும். தூரத்தில் கார்கசோன் நகரத்தின் கற்கோட்டைச் சுவர் மாலைச் சூரிய ஒளியில் பொன்னாலான அரண்மனையெனக் காட்சியளித்தது. அதன் அருகில் மோன்ட்ரியல் நகரத்தின் கோபுரங்களும், மதில் சுவர்களும் பளபளக்கும் பளிங்கிலான கூரைச்சுவர்களும் தெரிந்தன.

எல்லாம் நன்றாக இருந்த போதிலும் அர்ச்.சாமிநாதர் ஆழ்ந்த வருத்தத்தில்
மூழ்கியிருந்தார்.;இங்கு எல்லாம் நன்றாக இருந்த போதிலும், பதித தப்பறை எவ்வளவோ பரவி முன்னேறியுள்ளது. பிரான்சில் வேறு எந்த பகுதியிலும் இல்லாத அளவிற்கு, இங்கு உயர்குடிமக்கள், விவசாயிகள் என்று எல்லாரையும்
நாசகரமான அந்த தப்பறை பாதித்துள்ளதே!. இதோ இந்நேரத்தில் நுரற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர், திவ்யபலிபூசையையும், தேவதிரவிய அனுமானங்கள் மற்றும் சுவிசேஷத்தையும் வெறுக்கும்படி பயிற்றுவித்து கல்வி கற்பிக்கப்படுகின்றரே! அக்குழந்தைகளின் தாய்மார்கள், பாட்டிமார்கள் மற்றும் அத்தைமார்களே அக்குழந்தைகளின் தப்பறைக்கு பொறுப்பாளிகள்! பசாசு ஞானஜீவியத்திலும் வேத விசுவாசத்திலும் அவர்கள்
கொண்டிருக்கும் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களுடைய அடுத்த தலைமுறையையும் நேச ஆண்டவரும் தங்களுடைய பரலோக தந்தையுமானவரை அறிந்து நேசிக்காவண்ணம் அவர்களை இருளான அந்த தப்பறையிலேயே வைத்திருக்கிறது; என்று தனக்கு தானே அர்ச். சாமிநாதர் கூறிக்கொள்வார்.

பிறகு அம்மாலை நேரத்தில் சூரியன் முழுதும் மறைந்து போகவே அப்பள்ளத்தாக்கை இருள் சூழந்தது. ஆனால் ஃபோஷோ நகரத்தின் வடக்கு வாசல் கதவுகளுக்கு அப்பால் தனிமையில் நின்றுகொண்டிருந்த அர்ச்.சாமிநாதர் பொழுது சாய்ந்து இருள் பரவுவதைக் கவனிக்கவில்லை.
 "பிரான்சின் தெற்கு பகுதியில் இருந்த பெண்களின் இருதயங்களில் இருந்து அத்தீய பதிதத்தை மடடும் விரட்டியடித்தால் எவ்வளவு நன்மை உண்டாகும்!
நிச்சயமாக அப்போது, நாம் ஆல்பிஜென்சிய பதிதத்திற்கு எதிராக செய்து வரும் இப்போரில் பாதி வெற்றிஅடைந்தவர்களாவோம்! ஏனெனில் குழந்தைகள் அனைவரும் காப்பாற்றப்படுவர். பிறகு, இறுதியில் அதன்விளைவாக ஆண்களும் தங்களுடைய மனைவி மக்களை பின்பற்றி சத்தியவேதத்திற்கு திரும்புவர்!" என்ற நினைவுகளில் ஆழ்ந்திருந்தார்.

அர்ச்.சாமிநாதர் “பள்ளிக்கூடங்கள், சர்வேசுரனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கன்னியர் மடங்கள்..” என்று தனக்குள் முணுமுணுத்தார். அப்போது திடீரென்று வானத்தில் ஒரு அதிசயம் ஏற்பட்டது. வெள்ளை நிறத்தில் ஒரு கோள வடிவத்தில் ஒரு ஒளி அந்திவானத்தில் அங்குமிங்கும் வட்டமிட்டது. பிறகு அதனுடைய பிரகாசம் அதிகரித்தது. மோட்சத்திலிருந்து வந்த அவ்வொளி
அப்பள்ளத்தாக்கிலிருந்த ஒரு தேவாலயத்தின் மேல் இறங்கியது. அர்ச். சாமிநாதர் அதையே உற்றுப் பார்த்தார். பிறகு, அவர், அவ்வெண்ணொளி புரோயில் என்ற ஊரில் இருந்த அர்ச்.கன்னிமாமரியின் தேவாலயத்தின் மேல் பலமுறை வட்டமிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார்.

அது ஃபோஷோ நகருக்குக் கீழிருந்த சிற்றாலயம்.அங்கு வெகு அரிதாகவே மக்கள் ஜெபிப்பதற்கு வருவர். “இந்நிகழ்விற்கான அர்த்தம் என்ன?” என்று அவர் தனக்குள்ளே வினவினார். உடனே அவருடைய இருதயத்தில் அசாரீரியான ஒரு குரலொலி, “என்னிடம் உதவி கேட்டாய். என் மகனே! இதோ புரோயிலில் உள்ள அந்த சிற்றாலயம். இங்கு தான் உன் ஜீவியத்தின் மெய்யான அலுவலை துவக்குவாய். இங்கு தான் நீ அநேக ஆத்துமஙகளை மோட்சத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பாய்” என்று சப்தித்தது. அப்பொழுது
அர்ச்.சாமிநாதர் ஆனந்த அக்களிப்புற்றார். ஏனெனில் மோட்ச இராக்கினியான மிகவும் பரிசுத்த தேவமாதாவே தன்னிடம் பேசினார்கள் என்று கண்டுகொண்டார். உடனே தேவமாதாவிடம் கேட்பதற்காக, அவர் மனதில் அநேக கேள்விகள் உதித்தன. அப்பொழுது, புரோயில் சிற்றாலயத்தை
முழுதும் பிரகாசிக்கச் செய்து கொண்டிருந்த அவ்வெண்ணொளி தேய்ந்து மறையலாயிற்று. அவருடைய இருதயத்தில் கேட்டுக்கொண்டிருந்த அந்த அசாரீரியான அக்குரலொலியும் நின்று போயிற்று. (தொடரும்)




History of the SSPX: Part 2 - The Place of the Mass in Our Battle: 1971-...

அர்ச்.சாமிநாதரின்ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 12:

 மகா பரிசுத்த ஜெபமாலையின் உதயம்




ஆல்பிஜென்சிய பதிதத்தை அழித்து ஒழிப்பதற்கான உன்னதமான திட்டங்களை தீட்டி உத்தமமான கத்தோலிக்க வேத சத்தியங்களை மக்களுக்கு போதிப்பதிலும் பாப்பரசரின் தூதுக்குழுவினரை வழிநடத்துவதில் தன்னிகரற்ற தலைவராக திகழ்ந்த வந்.டீகோ ஆண்டகையின் பிரிவு அர்ச். சாமிநாதரை மிகவும் பாதித்தது. உத்தமமான வேதபோதக அலுவலை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பிரான்சில் கத்தோலிக்க மக்களிடையே இருந்த ஒழுங்கீனமான பிரிவினைகளையும் வந்.டீகா ஆண்டகை சிர்படுத்தி, சைமன் டி மோன்ஃபோர்ட் என்ற ஒரு உத்தம கத்தோலிக்க பிரபுவின் தலைமையின் கீழ் வேத விசுவாசத்தை பிரமாணிக்கமுடன் கடைபிடிக்கும் ஒரு ஸ்திரமான கத்தோலிக்க சமுதாயத்தை ஏற்படுத்தியிருந்தார். புரோயிலில் அர்ச். சாமிநாதர் கன்னியர்களுக்கான மடத்தை ஏற்படுத்தியதற்கான முக்கிய காரணம் அங்கு பரலோக இராக்கினியான அர்ச்.கன்னிமாமரி நிகழ்த்திய ஒரு புதுமையான நிகழ்வேயாம். அந்நிகழ்வை இப்பொழுது காணலாம்: வந்.டீகோ ஆண்டகை ஸ்பெயின் நாட்டிற்கு செல்வதற்கு முன்பாக தன்னுடைய வேதபோதக குழுவினருக்கு தலைவராக பொறுப்பேற்று நடத்தும்படி அர்ச். சாமிநாதருக்கு பணித்தார். அர்ச்.சாமிநாதர் மிக தயக்கத்துடன் தலைமை பொறுப்பேற்றார். 

அக்குழுவின் வேதபோதக அலுவல்களை வழிநடத்தினார். சிறிது காலம் சென்றது. அநேக ஜெபங்கள், ஒறுத்தல்கள், தவக்கிரியைகள் அக்குழுவினரால் மோட்சத்தை நோக்கி ஆல்பிஜென்சிய பதிதர்களின் மனந்திரும்புதலுக்காக
ஒப்புக்கொடுக்கப்பட்டு வந்தது. அப்பதித மதத்தினர் இலகுவான ஜீவியத்தை நடத்தி வந்தனர். யாதொரு வேதகற்பனையோ அல்லது ஒழுங்கோ அனுசரிக்க தேவையில்லாததால் அப்பதித மதம் மக்களை வெகுவாக கவர்ந்தது. அப்பதிதர்கள், தாங்கள், மிகவும் நவநாகரிக மக்கள் என்ற தோற்றத்தினால் மக்களை தங்களுடைய தப்பறையில் எளிதாக சிக்கவைத்தனர். இதையெல்லம் கண்ட அர்ச்.சாமிநாதரின் இருதயம் துக்கத்தால் கனத்தது. அர்ச்.சாமிநாதர், “பரிதாபத்துக்குரிய இம்மக்களை நிச்சயமாக பசாசு தன்னுடைய தீயபிடியில் வைத்துள்ளது. ஓ மிகவும் நேசமான தேவதாயாரே! இந்த திய பதிதர்களையெல்லாம் மனந்திருப்புவதற்கு எங்களுக்கு உதவியருளுங்கள்!” என்று சர்வேசுரனுடைய மாதாவிடம் மன்றாடினார். 

அப்பொழுது உடனே அசாதாரணமான ஒன்று நிகழ்ந்தது. “ஆல்பிஜென்சிய பதிதர்கள் எல்லாரும் மனந்திரும்புவர். அவர்களை தேவமாதாவே மனந்திருப்புவார்கள்” என்ற ஒரு உறுதியான நம்பிக்கை அவருடைய இருதயத்தில் உதித்தது. அதற்கு அவருடைய வேதபோதகக்குழுவினர் செய்ய வேண்டிய அவசியமான காரியம் என்னவென்றால் “அவர்கள் அனைவரும் மிகவும் பரிசுத்த தேவமாதாவிடம்
உத்தமமான பக்திபற்றுதல் கொண்டு விளங்க வேண்டும். தேவமாதாவுக்கு தோத்திரமாக செய்யப்படும் ஜெபங்களை, விசேஷமாக அருள்நிறை மந்திரத்தை சொல்வதில் பிரமாணிக்கமாக இருக்க வேண்டும்” என்றும் அர்ச்.சாமிநாதர் கண்டுணர்ந்தார்.அர்ச்.சாமிநாதர் தன் குழுவினரிடம், “நாம் இதுவரை சொல்லியது போலல்லாமல் மிகுந்த பக்தி உருக்கத்துடன் அருள்நிறை மந்திரத்தை சொல்லத் துவக்குவோம்” என்று கூறினார். 

அப்பொழுது தேவமாதா அர்ச். சாமிநாதரிடம் புதுவிதமாக அருள்நிறை மந்திரங்களை சொல்வதற்கான ஒரு வழிமுறையைக் கற்பித்தார்கள். ஆல்பிஜென்சிய பதிதர்களை மனந்திருப்புவதற்கான அந்த ஜெபமுறையானது தேவமாதாவுக்குத் தோத்திரமாக 150 அருள்நிறை மந்திரங்களையும் அவை பத்துக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பத்து அருள்நிறை மந்திரங்களுக்கு முன் ஒரு பரலோக மந்திரமும் ஆண்டவருடைய திவ்ய இரட்சணியத்தின் தேவ இரகசியங்களையும் தியானித்துக் கொண்டே ஜெபிக்கப்படும் ஜெபமாக விளங்கியது. ஜெபமாலை என்று இனி எல்லாராலும் அழைக்கப்பட இருக்கும்
இந்த ஜெபமானது பழைய ஏற்பாட்டின் 150 சங்கிதங்களின் நினைவாகவே 150 அருள்நிறை மந்திரங்களை கொண்டிருக்கிறது. ஆனால் அப்பழைய ஏற்பாட்டின் ஜெபத்தை விட இந்த ஜெபம் எவ்வளவு இனிமையானது! எவ்வளவு
எளிமையானது! எவ்வளவு மகத்தானது! எவ்வளவு சுருக்கமானது! ஒரு மனிதன் தன் அலுவலுக்குப்போகும்போதும் வரும்போதும் கூட ஒரு ஜெபமாலையை நடந்துகொண்டே சொல்லி விடலாம்.

கல்வியறிவு அற்றவர்களும் படிக்கத் தெரியாதவர்களும் கூட ஜெபமாலையை மிக எளிதாக சொல்லிவிடலாம். உடனே வந். டீகோ ஆண்டகையிடம் அர்ச்.சாமிநாதர், “ஆண்டவரே! இந்தப் பதிதர்களோடு நாம் நடத்தும் இப்போரில் அருள்நிறை மந்திரங்கள், மற்றும் ஜெபமாலையினுடைய மகத்துவ மிக்க வல்லமையினால் நாம் வெற்றியடைவோம்!” என்று கூறினார். “நீங்கள் சரியாகச் சொன்னிர்கள்! நமது மோட்ச இராக்கினி இந்த திமையான பதிதத்தை நாம் அழித்து வெற்றியடைவதற்காக நமக்கு நிச்சயம் உதவிபுரிவார்கள்!” என்று வந்.டீகோ ஆண்டகை பதிலளித்தார். (தொடரும)



செவ்வாய், 28 டிசம்பர், 2021

History of the St. Pius X Society

 Part 1



Delivered by Fr. Daniel Themann 
(Rector of Holy Cross Seminary)


அர்ச்.சாமிநாதரின்ஜீவிய சரித்திரம்:அத்தியாயம் - 11

வந்.டீகோ ஆண்டகையின் பிரிவு



இந்த சிறு கன்னியர்குழுவினருடன் மேலும் இரு உயர்குடி கத்தோலிக்கக் குடும்பஙகளிலிருந்து இருவர் சேர்ந்தனர். அவர்களில் ஒருவர் ஃபோஷோவின் கில்லமெட் என்ற பெண்மணியாவார். இவள் சிறிது காலம் கழித்து இக்கன்னியர் சபையில் சேர்ந்தபோதிலும் இவளுடைய அரிய நற்புண்ணிய ஜிவியத்தை முன்னிட்டும் கன்னியர்களை ஆண்டு நடத்தக்கூடிய திறமைகளை இவள் பெற்றிருந்ததாலும் இவளே 1225ம் ஆண்டு வரைக்கும் இம்மடத்தின் தாயாராக அர்ச்.சாமிநாதரால் நியமிக்கப்பட்டார். 1206ம் வருடம் டிசம்பர் மாதம் 27ம் நாளன்று புரொயிலில் புதிதாக கட்டப்பட்ட மடத்தில் கன்னியர் குடியேறினர். அக்கன்னியருக்கான துறவற உடை, வெள்ளை அங்கியும் பழுப்பு கலந்த மஞ்சள் நிற வெளி முக்காடும் உடையதாக விளங்கியது. அவர்கள் தினமும் சிறுபிள்ளைகளுக்கு கல்வி கற்பிப்பதுடன் நூல் நூற்பதிலும் ஈடுபட்டிருந்தனர்.அர்ச்.சாமிநாதரே அக்கன்னியர் மடத்தின் தலைமை அதிபராக பொறுப்பேற்றிருந்தார். கன்னியருடைய மடத்தின் அடைப்பிற்கு வெளியே ஒரு வீட்டில் வசித்து வந்தார். அர்ச்.சாமிநாதர் தமது வேதபோதக அலுவல்களுக்கிடையே கன்னியர்களுடைய ஞான ஜீவியத்திற்கான தேவைகளையும் பராமரித்து வந்தார். 

பிற்காலத்தில் இந்தக் கன்னியர் மடம் உலகெங்குமிருந்த அர்ச். சாமிநாதருடைய கன்னியர் சபை மடங்கள் அனைத்திற்கும் தாய் மடமாக விளங்கியது. மற்ற எல்லா கன்னியர் மடங்களுக்கும் மேல்வரிச்சட்டமாக திகழ்ந்தது. அர்ச்சிஷ்டதனத்தில் சிறந்து விளங்கிய பல கன்னியர்கள் இங்கு வாழ்ந்தனர். போர்போன் அரண்மனையைச் சேர்ந்த பல அரசகுடும்பத்தின்
பெண்கள் இம்மடத்தின் தலைமை தாயாராக பொறுப்பேற்றிருந்தனர்.

புரொயிலில் அர்ச்.சாமிநாதர் கன்னியர்களுக்கான மடத்தை ஸ்தாபித்ததைக்
கண்டபிறகே வந்.டீகோ ஆண்டகை ஸ்பெயின் நாட்டில் தமது ஓஸ்மா மேற்றிராசனத்திற்கு திரும்பிச் சென்றார். அவர் அம்மேற்றிராசனத்தைவிட்டு இந்த பிரெஞ்சு பிராந்தியத்திற்கு வந்து 2 வருட காலமாயிருந்தது.அவருடைய வேதபோதகக் குழுவினர் தூலோஸ் நகரையடுத்தப் பகுதிகளில் தங்கள் வேதபோதக அலுவலில் அட்ட தரித்திர கோலத்தில் மிக வெற்றிகரமாக ஈடுபட்டிருந்தனர். வந்.டீகோ ஆண்டகையின் இந்தக் கடைசி அப்போஸ்தலர்கள்  இப்பகுதியில் அநேக வெற்றி வாகைகளைச் சூடினர். மோன்ட்ரியல் நகரில் மட்டும் சுமார் 500 ஆல்பிஜென்சிய பதிதர்கள் தங்களுடைய தப்பறைகளைத் துறந்து மனந்திரும்பி சத்திய வேதத்தில் உட்பட்டனர். 

அதே சமயம் பேமியர்ஸ் என்ற இடத்தில் கத்தோலிக்கர்களுடைய உயர் அதிகாரிகளுக்கும் பாப்பரசரின் தூதுக்குழுவினருக்கும் இடையே ஒரு கூட்டம் நடைபெற்றது. அப்போது கத்தோலிக்க அதிகாரிகள் வெளிப்படுத்திய அதிசயத்தக்க விரத்தையும் மகத்துவத்தையும் கண்ட பல முக்கிய ஆல்பிஜென்சிய தலைவர்கள் தங்களுடைய தப்பறைகளை மிகுந்த பிரமாணிக்கத்துடன் துறந்துவிட்டு, கத்தோலிக்க வேதவிசுவாசத்திற்கு தங்களை முற்றும் கையளித்தார்கள். வந்.டீகோ இந்தக் கூட்டத்திற்கு பிறகு, தனது சொந்த ஓஸ்மா மேற்றிராசனத்தை நோக்கி பயணமானார். ஏறக்குறைய 3 வருடங்களுக்குப் பிறகே அவர் தமது சொந்த மேற்றிராசனத்திற்கு திரும்பினார். ஆனால் அவர் ஆசித்தபடி மறுபடியும் அர்ச்.சாமிநாதரை அவரால் சந்திக்க முடியாமல் போயிற்று. ஏனெனில் அதற்குள் அவர் இறக்க நேரிட்டது. ஆனால் முத்.ஜோர்டான் குறிப்பிடுவது போல தவச்சபையின் ஸ்தாபகரான அர்ச்.சாமிநாதர் தமது அப்போஸ்தல ஜீவியத்தின் ஆரம்பகாலத்தில் மிகவும் முக்கியமான அர்ச்சிஷ்டவரான வந்.டீகோ ஆண்டகையுடன் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சத்திய வேத விசுவாச சத்தியத்தை ஆல்பிஜென்சிய பதிதர்களிடையே போதிக்கும்படியாக நித்திய ஜீவியத்திற்கு முன்குறிக்கப்பட்டவரான வந்.டீகோ ஆண்டகை மெய்யாகவே பரலோகத்தால் அனுப்பப்பட்டிருந்தார் என்று அப்பதிதர்களே ஒப்புக்கொள்ளும் வண்ணம் வந்.டீகோ மேற்றிராணியார் உன்னதமான அர்ச்சிஷ்ட ஜீவியம் ஜீவித்தார். (தொடரும்)





திங்கள், 27 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்:அத்தியாயம் -10

 அர்ச்.சாமிநாதர் ஏற்படுத்திய கன்னியர் சபை



ஃபோஷோவில் நிகழ்ந்த அதிசயத்திற்கு பிறகு, அதைக்குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர் இப்புதுமையினால் ஒரு சில பதிதர்களே மனந்திரும்பினர். மற்ற அனேக பதிதர்கள் தங்கள் தப்பறையை விட்டு விட மனதில்லாதிருந்தனர் என்று குறிப்பிடுகின்றார். அதற்கு காரணம் அவர்கள் செய்த மாபெரும் பாவங்களேயாகும். நமது திவ்ய ஆண்டவர் இவ்வுலகில் செய்த அரும்பெரும் புதுமைகளைக் கண்டும் மனந்திரும்பாத யூதர்களைப்போலவும் மோயீசனும் திர்க்கதரிசிகளும் செய்த அற்புதங்களைக் கண்டும் சர்வேசுரனுக்குக் கிழ்ப்படியாத ஜனங்களைப்போலவும் எல்லா காலங்களிலும் ஒவ்வொரு பதிதம் தோன்றும்போதும் மக்கள் மிண்டும் சர்வேசுரனை நேசியாமல் தங்களுடைய கேட்டிலேயே நிலைத்திருக்கிறார்கள் என்பதையே நாம் இங்கு காண்கிறோம். கார்கசோன் என்ற மேற்றிராசனத்தைச் சேர்ந்த மோன்ட்ரியல் என்ற நகரத்தில் இதேபோன்ற புதுமை அர்ச்.சாமிநாதரால் நிகழ்த்தப்பட்டது. 

அங்கு நகரத்தினருடைய கூட்டத்தில் பதிதர்களுடன் பகிரங்கமாகவே தர்க்கத்தில் ஈடுபட்ட அர்ச்.சாமிநாதர், தான் தர்க்கத்திற்காக பயன்படுத்திய வேதாகமத்தின் மேற்கோள்களை ஒரு தாளில் எழுதினார். அந்தத் தாளில் எழுதியவேதசத்தியங்களைப் பரிட்சிப்பதற்காக அதை அருகிலுள்ள நெருப்பில் போடப்போவதாகக் கூறினார். அதற்கு பதிதர்களும் இணங்கினர். அர்ச்.சாமிநாதர் உடனே அந்தத் தாளை நெருப்பில் போட்டார். சிறிது நேரத்திற்கு பிறகு, அந்தத் தாளை நெருப்பிலிருந்து வெளியே எடுத்தபோது அந்தத் தாள் கருகிச் சாம்பலாகாமல் புதுமையாக அப்படியே இருப்பதை அனைவரும் கண்டு அதிசயித்தனர். பிறகு பலமுறை அந்தத் தாளை அந்த நெருப்பிலே போட்டும் அது கருகிப்போகாததைக் கண்டு அர்ச்.சாமிநாதரின்
போதகமே சத்திய போதகம் என்று அனைவரும் விசுவசித்தனர். அதைக் கண்ட பதிதர்கள் தங்களுடைய வாக்குறுதியின் பிரகாரம் தங்கள் பதிதமார்க்கத்தை விட்டுவிடுவதற்கு மனமில்லாதவகளாக இருந்தனர்.

சத்திய கத்தோலிக்க வேத விசுவாசத்தை ஏற்பதற்கும் உடன்படாமல் போனார்கள்.  இந்தப் புதுமையை தங்களுக்குள் இரகசியமாக வைத்துக்கொண்டனர். ஏனெனில் இதைக் கேள்விப்படும் நாட்டின் மற்ற பகுதியின் கத்தோலிக்கர் அனைவரும் இதை தங்களுடைய மாபெரும் வெற்றியாகக் கொண்டாடுவர் என்பதை தடுப்பதற்காக அவ்வாறு அப்புதுமையை தங்களுக்குள் வைத்துக் கொண்டனர். ஆனால் இதை நேரில் கண்ட பதிதத்தைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதன் மனந்திரும்பி நல்ல கத்தோலிக்குக் கிறிஸ்துவனானான். இவனுடைய நேரடி வாக்குமூலத்தையே
ஆல்பிஜென்சியரின் சரித்திரம் என்ற நுரலில் பீட்டர் தெ வோக்ஸ் செர்னே என்பவர் சேர்த்திருக்கிறார்.

இவ்வாறு நமது வேதபோதக குழவினர் சென்ற இடமெல்லாம் பதிதர்களுக்கு படுதோல்வி ஏற்பட்டது. பல பதிதர்கள் சத்திய வேதத்தில் சேர்ந்தனர். பதிதர்களின் எண்ணிக்கை நாளடைவில் வெகுவாய் குறையலாயிற்று. ஆனால் திவிரவாத பதிதர்கள் தங்களுடைய பதித தப்பறைகளை நிலைநாட்டுவதற்காக மோசடியான காரியங்களில் ஈடுபடலாயினர். சில கத்தோலிக்கு உயர்குடிமக்கள் அக்காலத்தின் அரசியல் குழப்பங்களின் காரணமாக வறியநிலைமைக்கு ஆளாயினர். அவர்கள் தங்களுடைய குழந்தைகளை பதிதர்களுடைய பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பும் சூழ்நிலை
உருவானது. அதைத் தக்கபடி பயன்படுத்திய ஆல்பிஜென்சிய பதிதர்கள் அக்குழந்தைகளின் வேதவிசுவாசத்தை அழிப்பதில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த அபாய சூழலை நன்கு உணர்ந்த அர்ச்.சாமிநாதர் உடனே தங்களுடைய வேதவிசுவாசத்தை இழந்து நித்திய நரக ஆக்கினையை நோக்கியிருந்த அந்தக் குழந்தைகளை சத்திய வேதத்தில் பயிற்றுவிக்கும்படியான பள்ளிக் கூடங்களை ஏற்படுத்தும் வழிமுறைகளை மிகுந்த தீர்மானமாக திட்டமிடலானார். அதற்கென ஒரு அடைபட்ட கன்னியர் மடத்தை ஏற்படுத்த
தீர்மானித்தார். அதற்கென்று பதிதர்களால் பாதிக்கப்பட்ட மேற்றிராசனங்களிலிருந்து நல்ல பக்தியுள்ள கத்தோலிக்கு பெண்களை வரவழைத்தார். அவர்களுக்கு உன்னதமான வேதசத்தியங்களை திருச்சபையின் பராமரிப்பினால் கற்பிப்பதற்கு ஏற்பாடு செய்தார். புரோயில் நகரத்தில் கன்னியருக்கான முதல் மடத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

இந்நகரம் தான் அர்ச்.சாமிநாதர் சபையின் ஆக்கபூவமான அநேக ஞானகாரியங்களுக்கும் சாதனைகளுக்கும் பேர்போன நகரமாக விளங்குகிறது. இந்தக் கன்னியர் மடமே உலகிலுள்ள சகல அர்ச். சாமிநதர் சபைக் கன்னியர் மடங்களுக்கும் தாய் மடமாக விளங்குகிறது. புரோயில் என்னும் அழகிய கிராமம் பிரன்னிஸ் மலையடிவாரத்தில் மோன்ட்ரீயல் நகருக்கருகில் இருக்கிறது. அங்கு ஏற்கனவே உலகப் பிரசித்தி பெற்ற தேவமாதாவுக்கு தோத்திரமாக ஒரு பேராலயம் இருந்தது.

தூலோஸ் நகரத்தின் மேற்றிராணியாரான வந்.ஃபல்க் ஆண்டகையின் பேராதரவுடன் அர்ச்.சாமிநாதர் கன்னியருக்கான மடத்தை அங்கு
ஸ்தாபித்தார். அக்கால சூழ்நிலைக்கு மிக அத்தியாவசியமானதொன்றாக இந்த மடம் விளங்கியதை அனைவரும் கண்டுணர்ந்தனர். இச்சபையின் வளர்ச்சிக்காக பலரும் தங்களாலான உதவிகளைச் செய்ய முன்வந்தனர். நார்போன் அதிமேற்றிராணியார், வந்.பெரெஞ்சர் ஆண்டகை உடனே இந்த கன்னியர் சபைக்காக தன்னிடமிருந்த ஏராளமான நிலங்களையும் மற்றும் மாதந்தோறும் வருமானம் தரக்கூடிய பல சொத்துக்களையும் அளித்தார். கத்தோலிக்கு உயர்குடிமக்கள், அரண்மனை உயர் அதிகாரிகள், சைமன் டி மோன்ஃபோர்ட் என்பவருடைய தலைமையில் தாராள மனதுடன் நன்கொடை அளித்து பல நன்மைவிளைவிக்கும் திட்டங்களையும் ஏற்படுத்தி தந்தனர். அத்திட்டங்களினால் அவர்களே அநேக நன்மைகளால் பயனடைந்தனர். 

இச்சபையில் முதலில் 9 கன்னியர் சேர்ந்தனர். அனைவரும் அர்ச். சாமிநாதரின் போதனைகள் மற்றும் புதுமைகளால் ஆல்பிஜென்சிய பதிதத்திலிருந்து
மனந்திரும்பியவர்கள்.

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 11

சனி, 25 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் - 9

அர்ச்.சாமிநாதர் பதிதர்களிடம் செய்த புதுமை

தூலோஸ் நகர மேற்றிராணியார் கூறியபடி புதிய உதவியாளர்கள் தங்களுடைய வேதபோதக அலுவலுக்கு வந்ததும் அவர்களையும் தங்களுடன் சேர்த்துக் கொண்டு, இச்சிறு வேதபோதகக் குழுவினர் அனைவரும் மிதியடிகளைக்கூட அணிந்து கொள்ளாமல் அட்ட தரித்திர கோலத்தில் அண்டை நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் சென்று ஞான உபதேசத்தைக் கற்பித்தும் வேதவிசுவாச சத்தியங்களைப் பிரசங்கித்தும் வந்தனர். அதன்பிறகு மோன்ட்பெல்லியரில் ஒரு மாநாட்டைக் கூட்டினர். அதில் பதிதர்களும் கலந்து கொண்டு வேதசத்தியங்களைப் பற்றிய தர்க்கங்களில் ஈடுபட்டனர். நமது வேதபோதகர்கள் தங்களின் நுட்பமான வேத ஞானத்தைக் கொண்டு பதிதர்களை விவாதத்தில் தோறகச் செய்தனர். அதன்பிறகு தூலோஸ் நகரத்தை நோக்கி அனைவரும் பயணத்தை மேற்கொண்டனர். திவ்ய இஸ்பிரித்துவானவரால் வழிநடத்தப்பட்டவர்களாக ஆங்காங்கே வழியில் தென்பட்ட மக்களை வேத விசுவாசத்தில் ஸ்திரப்படுத்தியும் பதிதர்களிடம் தர்க்கம் செய்து அவர்களுக்கு வேத ஞானத் தெளிவை ஏற்படுத்தியும் சென்றனர். 


இவ்வாறு வேதபோதக அலுவலில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் அனைவரும் தங்களுடைய அன்றாட தேவைகளுக்கு சர்வேசுரனுடைய தேவபராமரிப்பையே நம்பியிருந்தனர். அவர்கள் இவ்வாறு தபசு போலத்தில் ஆற்றிய வேதபோதக அலுவல் உடனே ஞான பலன்களையும் நன்மைகளையும் விளைவிக்க துவக்கியது.

பால்ட்வின், தியர்ரி என்ற இரு முக்கிய ஆல்பிஜென்சிய பதிதர்கள் வாழ்ந்துவந்த கார்மெய்ன் என்ற நகரத்தை அடைந்தனர். இந்நகரம் தூலோஸ் நகரத்தினருகில் இருந்தது. அந்நகர மக்கள் நமது வேதபோதகர்களை மிக அன்புடனும் சங்கை மரியாதையடனும் வரவேற்று உபசரித்தனர். ஏராளமான பதிதர்கள் மனந்திரும்பினர். ஆனால் மனந்திரும்பாத பதிதர்களை அந்நகரிலிருந்து அகற்றுவதற்கு அந்நகர தலைவர்கள் தடை செய்தனர். பிறகு அந்நகர மக்கள் இந்த ஞான போதகர்களை நகர எல்லை மட்டும் வந்து அன்புடன் வழியனுப்பினர். இவ்வாறே பெசியர் மற்றும் கார்க்கசோன் என்ற நகரங்களிலும் நமது போதகர்களுக்கு நிகழ்ந்தது. இவ்வாறு பிரான்சின் தெற்குப் பிரதேசத்தில் வசித்த அநேக கத்தோலிக்கர்களை வேதவிசுவாசத்தில் உறுதிப்படுத்தியும் ஏராளமான பதிதர்களை மனந்திருப்பி சத்திய திருச்சபையில் சேர்த்தும் வந்தனர். ஏராளமான மாநாடுகளின் மூலம் வேதபோதகர்கள் இப்பிரதேசத்தின் பதிதர்கள் அநேகரை திருச்சபையில் சேர்த்தனர்.இதற்கு முக்கிய காரணமாயிருந்தவர் சகோ. தோமினிக் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட சாமிநாதர். அவருடைய வேதஞானமும் பதிதர்களிடம் விவாதம் செய்வதில் தேர்ச்சியும் அவர் கொண்டிருந்த அசாதாரண பேச்சுத் திறமையும் பதிதர்களின் வாயை அடைத்துப் போட்டன.

இதனாலேயே அர்ச்.சாமிநாதர் பதிதர்களின் சம்மட்டியாக விளங்கினார். அதனால் தான் அப்பதிதர்கள் இவரை தங்களுடைய மாபெரும் எதிரி என்று எண்ணி இவரைக் கொல்வதற்கு வழிதேடினர். ஆனால் அர்ச்.சாமிநாதர் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இரவு நேரங்களில் தன்னை இரகசியமாக சந்தித்து தனது ஞான ஆலோசனையைக் கேட்க வந்த மனந்திரும்பிய பதிதர்களை ஞான ஜீவியத்தில் திடப்படுத்துவதிலும் அவர்களுக்காக இரவு முழுவதும்ஜெபிபப்பதிலும் ஜெபதபபரித்தியாக ஜீவியத்திலும் ஈடுபட்டிருந்தார். பதிதர்களுடன் தர்க்கிப்பதில் அவர் மிகுந்த ஞானத்தைக் கொண்டிருந்தார். ஆனால் அதைவிட அவர் கடைப்பிடித்த இந்த தவஜீவியமே அதிக மேன்மையாக விளங்கியது. 

ஒருதடவை ஃபோஷோ என்ற இடத்தில் அர்ச்.சாமிநாதருக்கும் ஆல்பிஜென்சிய பதிதர்களுக்கும் அந்நகர மக்களின் முண்ணிலையில் பகிரங்கமாக வேதத்தைப்பற்றிய தர்க்கம் நடைபெற்றது. இதை அர்ச்.சாமிநாதரின் சபை சரித்திர ஆசிரியர் முத்.ஜோர்டான் சகோதரர் பின் வருமாறு விவரிக்கின்றார்:“மாபெரும் நெருப்பு அந்நகரத்தின் ஒரு சதுக்கத்தில் மூட்டப்பட்டிருந்தது. நமது சத்திய வேதத்தின் உன்னத விசுவாசக் கோட்பாடுகள் ஒரு புத்தகத்தில் அர்ச்.சாமிநாதரால் எழுதப்பட்டிருந்தன. மற்றொரு புத்தகத்தில் ஆல்பிஜென்சிய பதிதர்களின் தப்பறையான கோட்பாடுகள் எழுதப்பட்டிருந்தன. இரு புத்தகங்களையும் அந்த நெருப்பில் போட்டார்கள். பதிதர்களின் புத்தகமோ உடனே நெருப்பினால் கருகி சாம்பலானது. சர்வேசுரனின் பரிசுத்த மனிதரான அர்ச்.சாமிநாதர் எழுதிய புத்தகமோ யாதொரு சேதமும் ஆகாமல் கருகிச் சாம்பலாகாமல் போனது மட்டுமல்லாமல் எல்லோர் முன்னிலையிலும் திச்சுவாலையினால் அருகிலிருந்த ஒரு மரத்தூணிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இரண்டு, மூன்று முறையும் இவ்வாறே சர்வேசுரனுடைய உத்தம வேத விசுவாசத்தின் புத்தகம் புதுமையாக, நெருப்பினால் யாதொரு சேதமும் அடையாமல் அதே தூணின்மேல் திச்சுவாலையினால் கொண்டு செல்லப்பட்டது.

இப்புத்தகத்தை எழுதியவரின் மெய்யான விசுவாசமும் பரிசுத்ததனமும் இதில் வெளிப்பட்டது” இப்புதுமை அர்ச்.சாமிநாதர் வாழ்ந்த காலத்திலேயே ஒருவரால் எழுதப்பட்டது. வந்.கான்ஸ்டன்டைன் மெடிசி என்ற ஓர்வியட்டோ நகர மேற்றிராணியார் கட்டளை ஜெபத்தில் இந்நிகழ்வைப்பற்றி பிற்சேர்க்கையில் சேர்த்தார். 1254ம் ஆண்டு பிரான்சு நாட்டின் அரசர் சார்லஸ் லெ பெல் என்பவர் இப்புதுமை நிகழ்ந்த விட்டை வாங்கி அதை அர்ச். சாமிநாதருக்கு தோத்திரமாக ஒரு தேவாலயமாகக் கட்டினார். அப்புதுமையில் அர்ச்.சாமிநாதரின் புத்தகம் நெருப்பு சுவாலையால் தாங்கி ஒரு மரத்தூணின் மேல் செல்லப்பட்டன. அந்த மரத்தூணும் அவருடைய சரித்திரத்தை காஸ்டிக்லியோ என்பவர் எழுதும் வரை பாதுகாக்கப்பட்டு வந்தது. †

(தொடரும்)


அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 10

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 8

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 7


வெள்ளி, 24 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 8

சிஸ்டர்ஷியன் சபையினருடன் உரையாடுதல்

வந். டீகோ ஆண்டகை சிஸ்டர்ஷியன் சபையின் மடாதிபதியான சங். ஆர்னால்ட் சுவாமியாரிடம் ஆல்பிஜென்சிய பதிதத்தை அழிப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி விவரிக்கலானார். அப்பதிதம் பரவியுள்ள ஊர்களுக்கு பிரசங்கிக்க செல்லும்போது சுவிசேஷத்தின் தரித்திரத்தைப் பின்பற்றும் விதத்தில் எளிய தரித்திர அங்கியை அணிந்து செல்ல வேண்டும் என்றும் மிதியடிகள் இல்லாமல் வெறும் காலுடன் நடந்து செல்ல வேண்டும் என்றும் ஆலோசனை கூறினார். மேலும் வேதபோதக அலுவலில் ஈடுபட்டிருக்கும்போது துறவிகள், வசதியான சத்திரங்களில் தங்காமல் எளிய விவசாயிகளுடைய இல்லங்களிலேயே அவர்களுடன் எளிய உணவை உட்கொண்டு அங்கேயே தங்குமாறு அறிவுறுத்தினார். 

அதற்கு அம்மடாதிபதி, “அது கண்ணியமாக இருக்காதே!” என்றார். வந்.டீகோ ஆண்டகை , “நமக்கு நமது கண்ணியம் முக்கியமா? அல்லது ஆத்துமங்கள் முக்கியமா?” என்றார்.

மடாதிபதியோ, “ உங்களுக்கு புரியவில்லை. இங்கு பிரான்சில், நாங்கள் நமது 3ம் இன்னசென்ட பாப்பரசரின் பிரதிநிதிகள். அப்படியிருக்க நாங்கள் எவ்வாறு தரித்திர பிச்சைக்கார கோலத்தில் செல்வது?” என்றார். 

இதைக் கேளாதவர் போல வந்.டீகோ ஆண்டகை, “ நாங்கள் இன்னொரு ஆலோசனையும் வைத்திருக்கிறோம்” என்று கூறிக் கொண்டே அர்ச்.சாமிநாதர் பக்கம் திரும்பி, “மகனே! அது என்ன என்று இவர்களுக்குக் கூறுகிறீர்களா?” என்றார். இதைக் கேட்டதும் புன்னகையுடன் அர்ச்.சாமிநாதர், “மடாதிபதி சுவாமியவர்களே! நமக்கு பெண் உதவியாளவர்களும் தேவைப்படுகின்றனர்!” என்றார். “பெண் உதவியாளர்களா?

அது முடியாத காரியம். பிரசங்கிப்பது என்பது ஆண்களின், அதுவும் குறிப்பாக குருக்களின் அலுவலாகும்” என்றார். அதற்கு, அர்ச்.சாமிநாதர், “ஓ சுவாமியவர்களே! எவ்வளவு பெண் உதவியாளர்களை அனுப்பமுடியுமோ அவ்வளவு பேரை இப்பொழுதே அனுப்பும்படி நாம் சர்வேசுரனை மன்றாட வேண்டும்” என்றார்.

அர்ச்.சாமிநாதர் இவ்வாறு கூறியதற்கான காரணத்தை அம்மடாதிபதி விரைவிலேயே புரிந்து கொண்டார். அப்பகுதியில் பதிதர்கள் பல பள்ளிக் கூடங்களைக் கட்டியிருந்தனர். அவற்றில் பெரும்பாலானவற்றைப் பெண்களே நிர்வகித்து வந்தனர். அங்கு கல்வி பயின்று வந்த சிறுவர் சிறுமியருக்கு தேவதிரவிய அனுமானங்கள் மிது வெறுப்பை ஏற்படுத்தியும் விசுவாசபிரமாணத்தின் எல்லா விசுவாச சத்தியங்களையும் பாப்பரசரையும் வெறுத்து பகைக்கும்படி போதித்தும் வந்தனர், ஆல்பிஜென்சிய பதிதர்கள். 

இதனிமித்தமே, அப்பகுதி மக்கள் சர்வேசுரனைப்பற்றியும் திருச்சபையைப் பற்றியும் அறியும் பொருட்டு, கத்தோலிக்க ஞான உபதேசத்தைக் கற்பிக்கும்படியான பள்ளிக்கூடங்களை அங்கு நிறுவ வேண்டும் என்று வந்.டீகோ ஆண்டகையுடன் அர்ச்.சாமிநாதர் திட்டமிடலானார்.

இத்திட்டத்தைப்பற்றி அறியவந்த மடாதிபதி, “ஆம். அது நமது அலுவலை மிகவும் எளிதாக்கும்” என்றார். சங்.ருடால்ஃப் சுவாமியார், “ஆம். மனந்திரும்பிய பெண்கள் தங்குவதற்கு இத்தகைய கல்வி நிலையங்கள் பாதுகாப்பான இடங்களாக விளங்கும். ஏனெனில் அவ்வாறு மனந்திரும்பும் பதிதர்கள் தங்கள் உறவினர் மற்றும் நண்பர்களாலேயே துன்பப்பட நேரிடும் என்று நான் கேள்விபட்டேன்” என்றார். இதைக் கேட்ட சங்.பீட்டர் சுவாமியார், “எனக்கும் இதுபற்றிய சந்தேகம் இருந்தது. மனந்திரும்பியவர்கள் எவ்வாறு பதிதர்களை விட்டு வெளியேற துணிவார்கள்? ஆனால் இத்தகைய பாதுகாப்பிடங்கள் இருக்குமானால் அவர்களை அங்கு தங்க வைக்கலாம்” என்று கூறினார்.

இதன்பிறகு, சுவிசேஷத்தின் தரித்திரத்தைப்பின்பற்றியவர்களாக, வந்.டீகோ ஆண்டகை, அர்ச்.சாமிநாதர் மற்றும் சில வேதபோதகர்களுடன் தெற்கு பிரான்சின் பல பகுதிகளுக்குச் சென்று ஞான உபதேசத்தைக் கற்பித்தும் ஞான பிரசங்கங்களை நிகழ்த்தியும் வந்தார். ஆல்பிஜென்சிய பதிதத்தை அழித்தொழிப்பதில் வந்.டீகோ ஆண்டகையின் தலைமையில் ஈடுபட்டிருந்த நமது வேதபோதகர்களுக்கு பேராதரவு தந்து கொண்டிருந்த, தூலோஸ் நகர மேற்றிராணியார் வந்.ஃபோல்க்வெஸ் ஆண்டகை இவர்களிடம் ஒருநாள், “வருத்தப்படாதிர்கள். உங்களுடைய முயற்சிகளில் சர்வேசுரன் மகிழ்ந்திருக்கிறார். விரைவிலேயே எல்லாவிற்றிலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்! உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது” என்றார்.

இந்த மேற்றிராணியார் அர்ச்.சாமிநாதருக்கு ஃபாஷோ என்ற இடத்தில் ஒரு சிற்றாலயத்தை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். இந்த சிற்றாலயத்தில் தான் இச்சிறு வேதபோதகக் குழுவினர் ஓய்வு நேரங்களில் ஜெபித்தும் அதன் வளாகத்தில் தங்கி ஓய்வெடுத்தும் பதிதத்தை அழிப்பதற்கான திட்டங்களைத் திட்டியும் வந்தனர். அந்த மேற்றிராணியார் தங்களுக்கு என்ன நல்ல செய்தி சொல்லப்போகின்றார் என்று இவர்கள் எல்லாரும் அவரை ஆவலுடன் உற்று நோக்கினர்.

தூலோஸ் நகர மேற்றிராணியார் அவர்களிடம், “எனது மேற்றிராசனத்தைச் சேர்ந்த நன்கு கற்றிறிந்தவர்களும் பரிசுத்தருமான அநேக குருக்கள் அப்பதிதத்தை அழித்தொழிப்பதில் உங்களுக்கு உதவ முன்வந்துள்ளனர் என்பதே அந்த நல்ல செய்தி” என்றார். 


அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 9

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 7