Quotes in Tamil
சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்
- அர்ச். பிலிப்புநேரி
"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்
- அர்ச். தெரேசம்மாள் -
சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்
- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்
Pages
- Home
- Download Tamil Catholic Songs
- Download Our Lord Songs
- Tamil Catholic Prayers & Quotes in Image
- அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம்
- பாரம்பரிய கத்தோலிக்க ஜெபங்கள் (Download Catholic Books & prayers)
- கத்தோலிக்க சிறுகதைகள்
- Little Month of St. Joseph
- Traditional Latin - Tamil Mass Missal
- லத்தீன் - தமிழ் பூசை புத்தகம்
- கத்தோலிக்க புத்தகங்கள் வாங்க!!! - 9487609983
- தேவ தோத்திர பாடல்கள்
செவ்வாய், 23 ஜனவரி, 2024
அர்ச்சியசிஷ்டவர் அர்ச். கிறகோரியார் திருநாள். ST. GRÉGOIRE LE GRAND.
திங்கள், 22 ஜனவரி, 2024
அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - பொலொஞா பட்டணத்து அர்ச். கத்தரீனம்மாள் (STE. CATHERINE DE BOLOGNE.)
அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - அர்ச். குழந்தை தெரேசம்மாள் ( St. Therese of Child Jeus)
சிறிய புஷ்பம்
அவள் சொல்லால் ஏற்பட்டதைக் காட்டிலும் அவளுடைய செய்கையால் ஏற்பட்டதே “சேசுவின் சிறிய புஷ்பம்.
அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - அர்ச். மாக்ஸிமிலியன் கோல்ப் (st. maximilian kolbe)
தன்னையே பலியாக்கியவர்
"ஒருவன் தன் சிநேகிதர்களுக்காக தன் பிராணனை கொடுக்கிறதைவிட அதிகமான சிநேகம் எவனிடத்திலும் இல்லை " (அரு. 15:13)
ஒருவன் தன் சிநேகிதர்களுக்காக தன் பிராணனை கொடுக்கிறதைவிட அதிகமான சிநேகம் எவனிடத்திலும் இல்லை" (அரு. 15:13) என்று நமது திவ்விய இரட்சகர் திருவாய் மலர்ந்தருளினார். தன் சிநேகிதர்களுக்காக ஒருவன் தன் உயிரைப் பலியாக்குதல் உயரிய சிநேகம் என்றால், அந்நியனான ஒருவனுக்காக, தனக்கு அறிமுகமில்லாத ஒருவனுக்காக ஒருவன் தன் உயிரைத் தியாகம் செய்வானாகில் அது மிகவும் உயரிய சிநேகமன்றோ? இத்தகைய ஒரு தியாகத்தைத்தான் சங், மாக்ஸிமிலியன் கோல்ப் சுவாமிகள் செய்தார்.
1941-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ஆம் நாள். பரிசுத்த கன்னிமரியம்மாள் ஆன்ம சரீரத்தோடு பரலோகத்துக்கு எழுந்த நாளுக்கு முந்தின நாள். அன்று தான் சங். மாக்ஸிமிலியன் கோல்ப் சுவாமிகள் மரணத் தீர்வைப் பெற்றிருந்த குடும்பத் தலைவன் ஒருவனுக்குப் பதிலாக தமது உயிரைத் தியாகம் செய்து நாஸி முகாம் ஒன்றில் உயிர் துறந்தார்.
1941-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் இறுதி வாரத்தில் ஒரு நாள் நாஸிகள் முகாமிலுள்ள 14-வது விடுதியிலுள்ளோருக்கு அன்று இரவு தூக்கம் பிடிக்க வில்லை. காரணம், அவர்களோடு அடைபட்டுக் கிடந்த கைதியொருவன் தப்பி ஓடி விட்டதும், அதன் விளைவாக முகாமின் தலைவன் விடுத்த ஆணையும் தான் காரணம். "தப்பியோடிய கைதி நாளை காலைக்குள் பிடிபடாவிட்டால் உங்களில் பத்துப்பேர் பட்டினி போட்டு சாகடிக்கும் விடுதிக்கு அனுப்பப் படுவீர்கள்” என்று சொல்லியிருந்தான் முகாம் தலைவன். இதை கேட்ட ஒரு சிறுவன் பயத்தினால் நடுநடுங்கிக்கொண்டிருந்தான்.
அவனது முகத்தில் பெருங் கலவரம் குடி கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த பெரியவர் சிறுவனைத் தேற்றினார்; "பயப்படாதே தம்பி, சாவுக்கு நாம் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை". இவ்விதம் சிறுவனைத் தேற்றியவர் வேறு யாரும் இல்லை, சங். மாக்ஸிமிலியன் கோல்ப் சுவாமிதான். சிறுவனுக்கு மாத்திரமின்றி விடுதியிலுள்ள எல்லோருக்கும் சங். சுவாமிகள் ஆறுதல் கூறி எல்லோரின் உள்ளங்களையும் பரலோக நினைவால் நிரப்பி வந்தார்.
மறுநாள் விடிந்தது. வழக்கம் போல் ஆஜர் எடுத்து முடிந்ததும் 14ம் இலக்க விடுதியிலுள்ளோர் தவிர மற்றவர்கள் தங்கள் தங்கள் விடுதிக்கு அனுப்பப்பட்டனர். 14-ம் இலக்க விடுதியிலுள்ளோர் அன்று முழுவதும் கொளுத்தும் வெயிலில் நிறுத்தப்பட்டனர். வெயிலின் கொடூரம் தாங்க முடியாமல் அநேகர் மயங்கி கீழே சாய்ந்தனர். அவர்களை நாஸிகள் இரக்கமின்றி நையப் புடைத்தனர். சரீரங்கள் அசைவற்றவுடன் அவைகளையெல்லாம் ஒன்றின் மேல் ஒன்றாய் புளி மூட்டைகளை அடுக்குவது போல் அடுக்கினர். சங், கோல்ப் சுவாமியார் காச வியாதியுற்றவராயிருந்தும் கூட மயங்கி விழவில்லை. பயப்படவில்லை, சிலுவையடியில் நின்ற வியாகுல அன்னையைப் போல அவரும் வைரம் பாய்ந்த உள்ளத்தோடு அந்த உச்சி வெயிலில் நின்று கொண்டிருந்தார்.
பிற்பகல் 3 மணிக்கு வெயிலில் நின்றுகொண்டிருந்த கைதிகளுக்கு சூப் அருந்துவதற்காக சிறிது ஓய்வு கொடுக்கப் பட்டது. அவர்களில் பத்து பேருக்கு அதுவே கடைசி உணவு. சூப் அருந்தி முடித்ததும் கைதிகள் எல்லோரும் மறுபடியும் வரிசையாக நிறுத்தப்பட்டனர். மாலைப் பொழுதும் வந்தது. முகாம் தலைவன் 14ம் இலக்க விடுதிக் கைதிகளைப் பார்வையிட வந்தான். நாஸிகளின் சித்திரவதைக்கு இலக்காகி நின்ற அந்த நடைப் பிணங்களைக் கண்டதும் கோரமாக அவன் நகைத்தான். "தப்பியோடியவன் இன்னும் கண்டுப்பிடிக்கப் படவில்லை. ஆகவே நான் சொன்னபடி உங்களில் பத்துப் பேர் சாக வேண்டும்; அடுத்த முறை இவ்விதம் நடந்தால் இருபது பேர் சாக வேண்டியிருக்கும்”. என்று முழங்கினான் முகாம் தலைவன்.
கைதிகளை ஒவ்வொருவராய்ப் பார்த்துக்கொண்டே சென்றான் முகாம் தலைவன். "வாயைத் திற, நாக்கை நீட்டு, பல்லைக் காட்டு" என்று ஒவ்வொரு கைதியிடமும் அவன் கூறிச் சென்றது. கசாப்புக்கு ஆடுகளை தெரிவு செய்வது போல் இருந்தது. எல்லோரையும் பார்வையிட்டப் பின்னர், அவர்களில் பத்துப் பேரை பொறுக்கியெடுத்தான் முகாம் தலைவன். அவர்களது எண்களை யெல்லாம் குறித்துக்கொண்டான் அவனது உதவியாளன்.
"ஐயோ, என் நேச மனைவி மக்களை நான் இனி என்று காண்பேன்?.... கண்மணிகளே" என்று உள்ளங் குமுறி அழுதான் அப்பத்து பேர்களில் ஒருவன். சிறுபிள்ளைப் போல் அவன் தேம்பித் தேம்பி அழுத காட்சி பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
சங். கோல்ப் சுவாமிகள் அந்த மனிதனையே பார்த்துக் கொண்டிருந்தார். நெஞ்சைப் பிழியும் அவனது அழுகுரல் அவரது மென்மையான இருதயத்தைத் தொட்டது. அவரது கண்களிலும் அவரை அறியாமலே நீர் சுரந்தது.
சாவுக்கு தீர்வையிடப்பட்ட பத்துக் கைதிகளுக்கும் ஆணை பிறந்தது. "ம்... செல்லுங்கள் பட்டினி விடுதிக்கு". அடி மேல் அடியெடுத்து வைத்த அவர்கள் தங்கள் சாவை எதிர் நோக்கிச் சென்றனர்.
திடீரென எதிர்பாராத ஒன்று நடந்தது. சங். கோல்ப் சுவாமிகள் ஓடி வந்தார். முகாம் தலைவனை அணுகினார். முகாம் தலைவன் உடனே தனது கைத்துப்பாக்கியை கையில் எடுத்தான். "உனக்கு என்ன வேண்டும் நாயே" என்று குருவானவரைப் பார்த்து கர்ஜித்தான்.
"இவர்களில் ஒருவருக்குப் பதிலாக நான் சாகத் தயாராயிருக்கிறேன்" என்று அமைதியான குரலில் பதில் அளித்தார் சங், கோல்ப் சுவாமிகள்
இதைக் கேட்ட முகாம் தலைவனுக்கு ஒரே ஆச்சரியம். “ஏன் அவ்வாறு கூறுகிறாய்" என்று கேட்டான் அவன்.
"நான் வயோதிகன், உதவாக்கரை. நான் இனியும் இவ்வுலகில் இருப்பதனால் ஒரு பயனும் விளையப்போவது இல்லை" என்றார் குருவானவர்.
"யாருக்குப் பதிலாய் நீ சாக விரும்புகிறாய்"என்று முகாம் தலைவன் கேட்டான்.
பரிதாபமாக அழுத அந்தக் குடும்பத் தலைவனைச் சுட்டிக் காட்டினார் குரு. “இவருக்குப் பதிலாகத்தான். இவருக்கு மனைவியும் மக்களும் இருக்கின்றார் கள். இவரது பராமரிப்பு அவர்களுக்குத் தேவையாயி ருக்கின்றது"
"நீ யார்?"மறுபடியும் குருவானவரைப் பார்த்துக் கேட்டான் முகாம் தலைவன்.
“நான் ஒரு குரு”
ஒரு கணம் அமைதி நிலவியது. பிறகு உறுதியான குரலில் “சரி நீ அவனுக்குப் பதிலாக சாகலாம், அவன் வீட்டிற்கு போகலாம்" என்றான் முகாம் தலைவன். குடும்பத் தலைவன் விடுதலையடைந்தான். குருவானவர் மற்ற ஒன்பது கைதிகளோடும் சேர்ந்து கொண்டார். அன்றிலிருந்து அந்தப் பத்துக் கைதிகளுக்கும் பசி தீர்க்க உணவு கிடையாது. தாகந் தீர்க்க தண்ணிருங் கிடையாது. ஜன்னலே இல்லாத அந்த பாழறையில் அந்த பத்துப் பேரும் அடைக்கப்பட்டனர்.
அந்த அறையில் புதிதாக வந்தவர்களோடு மொத்தம் முப்பது பேர் அடைக்கப்பட்டிருந்தனர். வழக்கமாக அந்த அறையில் அழுகையும் கூப்பாடுமாகத்தான் இருக்கும். ஆனால் சங். கோல்ப் சுவாமிகள் அங்கு சென்றதிலிருந்து அழுகையும் கூப்பாடும் நின்று ஜெபங்களும் ஞான கீர்த்தனைகளும் கேட்க ஆரம்பித்தன.
“எங்களுக்கு உணவு தராவிட்டாலும் கொஞ்சம் தண்ணீராவது தாருங்களேன்", என்று கெஞ்சுங் குரலில் கேட்பார்கள் கைதிகள். ஆனால் அவர்களது வேண்டுகோள் நிராகரிக்கப்படும். சங். கோல்ப் சுவாமிகள் ஒன்றுமே கேட்க வில்லை. அவர் எப்பொழுதும் நின்றுகொண்டு அல்லது முழந்தாளிலிருந்து ஜெபித்த வண்ணமிருப்பார். அவரைப் பார்த்த ஒரு அதிகாரி, "இந்த மாதிரி ஒரு மனிதனை நாங்கள் என்றுமே கண்டதில்லை" என்று கூறினான்.
சித்திரவரை 15 நாட்களுக்கு மேல் நீடித்தது. ஆகஸ்டு மாதம் 14-ஆம் நாள், அன்று பட்டினி விடுதியில் நான்கு பேர் மட்டும் எஞ்சியிருந்தனர். இவர்களில் சுய அறிவோடிருந்தவர் சங். கோல்ப் சுவாமிகள் மாத்திரம்தான். திடீ ரென அறைக் சுதவுகள் திறந்தது. எஞ்சியிருந்தவர்களை தீர்த்துக்கட்டும்படி ஆணை பெற்றிருந்த ஒரு அதிகாரி அறைக்குள் நுழைந்தான்.
சுவரில் சாய்ந்த வண்ணம் உட்கார்ந்து கொண்டிருந்தார் சங். கோல்ப் சுவாமிகள்.
“கையை நீட்டு” என்றான் அதிகாரி. குருவானவர் கையை நீட்டினார். விஷத்தை ஊசி மூலம் அவரது உடம்பில் செலுத்தினான் அதிகாரி.
சங். கோல்ப் சுவாமிகளின் முகத்தில் எவ்விதமான கலவரமும் காணப்படவில்லை. ஆழ்ந்த அமைதி அதிலே பிரதிபலித்தது. இன்னதென்று சொல்ல முடியாத ஒரு ஒளி அவரது வதனத்தைச் சூழ்ந்திருப்பது போல் தோன்றியது.
சங், கோல்ப் சுவாமிகளின் ஆன்மா விண்ணகம் நோக்கிப் பறந்தது. அவரது உடலையோ நாஸிகள் நெருப்புக்கு இரையாக்கினர்.
இவருக்கு 1971-ல் முத்திப்பேறு பட்டமும், 1984-ல் அர்ச்சியசிஷ்டப் பட்டமும் கொடுக்கப்பட்டது
சாங்க்தா மரியா - ஜனவரி - மார்ச் 2016
Please read more about the Sacramentals here . . .
அருட்கருவிகள் (Sacramentals) பற்றி மேலும் தெரிந்து கொள்ள in Tamil
சனி, 20 ஜனவரி, 2024
தேவதிரவிய அநுமானங்கள் II - உறுதிபூசுதல் (Confirmation)
உறுதிபூசுதல்
- ஆரம்பத்தில் மேற்றிராணியார் கரங்களை விரித்து மன்றாடுவதும், பின்னர் பரிமள தைலத்தால் நெற்றியில் பூசுவதும் திவ்விய இஸ்பிரீத்து சாந்துவை அளிப்பதற்கான வெளிச் சடங்குகள்.
- கன்னத்தில் தட்டுவதினால், நமது விசுவாசத்தினிமித்தம் எவ்வித உபத்திரவங்களுக்கும் அஞ்சாமல் சேசு கிறீஸ்துநாதருக்காகத் துன்பமும் மரணமுமே அடைய, நாம்: பயப்படாதிருக்கவேண்டுமென்று நமக்கு நினைப்பூட்டுகிறார்.
- ஐந்து மந்திரங்களும், பிரதான சத்தியங்களும், விசேஷமாய் உறுதிபூசுதல் பெறுவது எதற்காக என்பனதயும் அறிந்திருக்கவேண்டும்.
- முந்தினநாள் பாவசங்கீர்த்தனம் செய்து உறுதிபூசுதல் பெறுகிற அன்று திவ்விய நற்கருணையும் உட்கொள்வது நல்லது.
- முந்தின நாளிலேயே பங்கு குருவானவரிடமிருந்து உறுதிபூசுதல் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.
- உறுதிபூசுதல் பெறவேண்டிய தினத்தன்று, ஆலயத்திற்கு போகையில் கூடியமட்டும் சுத்தமாகவும், தலை முடி அலங்கோலமாய்த் தொங்களி டாமல் விசேஷமாய் நெற்றியில் விழாமல், ஒழுங்காய்ச் தலை வாரியிருத்தல் நல்லது.
- வழக்கமாய் திவ்விய பலிபூசை முடிவில் மேற்றிராணியார் உறுதிபூசுதல் கொடுப்பதால் பூசை முடியும் போது. அவர்கள் முன்கூறிய வண்ணம் இரு வரிசையாய் கோவில் நடுவில் அல்லது கிராதியில் சப்தம் செய்யாமல் முழந்தாளில் இருக்கவேண்டும்.
- உறுகிபூசுதலின் இறுதியில் மேற்றிராணியார் அளிக்கும் ஆசீர்வாதத் திற்கு எல்லோருமிருந்து, அதற்குப்பின் விசுவாச மந்திரம், பரலோக மந்திரம், அருள்நிறை மந்திரத்தை எல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து சொல்லவேண்டும்.
வெள்ளி, 19 ஜனவரி, 2024
தேவதிரவிய அநுமானங்கள் 1 - Baptism
ஞானஸ்நானம்
நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941
தேவதிரவிய அநுமானங்களைப் பெறுவதினால் நமக்கு உண்டாகும் ஞான நன்மைகளை நமக்கு வெளி அடையாளங்களால் நினைப்பூட்டும்படியாகத் திருச்சபை, தேவதிரவிய அநுமானங்களை நிறைவேற்றுகையில் சில சடங்கு களைச் செய்யும்படி கற்பித்திருக்கிறது. இந்தச் சடங்குகள் பெரும்பாலும் மிகவும் பழமையானவைகள். அந்தந்த தேவதிரவிய அநுமானத்தின் வழியாக நமது ஆத்துமத்திற்கு அருளப்படும் தேவ கொடைகளையும் வரப்பிரசாதங் களையும் உருவகமாக எடுத்துக்காட்டுவதற்காகவே இந்தச் சடங்குகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
தேவதிரவிய அநுமானங்களுள் முதலில் பெறுவது ஞானஸ்தானம். அப்போஸ் தலராகிய அர்ச் சின்னப்பர் சொல்லும் வண்ணம். அதனால் நாம் சேசுநாதரை ஆடையாக அணிந்துகொள்கிறோம். அதற்குரிய சடங்குகள் மூன்று காரியங் களை நமக்கு நினைப்பூட்டுகின்றன:
- நாம் பாவத்தில் ஜெனித்தோம் என்பதையும்,
- இவ்வுலகில் நமக்குப் பற்பல சோதனைகள் உண்டென்பதையும்,
- நாம் நித்திய ஜீவியத்திற்காக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் அவைகள் ஞாபகப்படுத்துகின்றன.
பூர்வீக வழக்கம்:
இக்காலத்தில் அனுசரிக்கிற ஞானஸ்நானச் சடங்குகள் பூர்வீக வழக்கத்தி லிருந்து உண்டானவைகளே. அர்ச். அம்புரோஸ் அதைப்பற்றி வெகு விரிவாய் எழுதியிருக்கிறார். அவரது காலத்தில், பெரிய சனிக்கிழமை மட்டும் வயது வந்தவர்களுக்குப் பகிரங்கமாய் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. இக்காலத் திலும் இதனிமித்தமே ஞானஸ்நானத் தீர்த்தம் பெரிய சனிக்கிழமையில் மந்திரிக்கப்படுகிறது. பூர்வீசக காலத்தில், ஆடம்பர ஞானஸ்நானம் கொடுத்து வந்தது மேற்றிராணியாரே: குருக்களும் தியாக்கோன்மாரும் அவருக்கு உதவி செய்வார்கள். அக்காலத்தில், தண்ணீரில் உடம்பு முழுவதும் மூழ்கும்படி செய்து ஞானஸ்தானம் கொடுப்பது வழக்கமாயிருந்தது. ஆனால் இவ்விதஞ் செய்வது அத்தியாவசியமல்ல.
இந்த வழக்கம் 9-ம் நூற்றாண்டுவரை நடைமுறையில் இருந்து வந்தது. ஞானஸ்நானம் பெற்றவன் உடனே வெண்ணாடை தரித்து, உறுதிபூசுதலும் பெற்று, திவ்விய பலி பூசை கண்டு, தற்கருணை வாங்குவதும் வழக்க மாயிருந்தது.
இக்கால வழக்கம்:
இக்காலத்தில் குழந்தைகள் பிறந்தவுடன் கூடிய சீக்கிரம் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று திருச்சபை விரும்புவதால், வயது வந்தவர்களின் ஞானஸ்நானத்தைவிடக் குழந்தைகளின் ஞானஸ்நானமே வெகு சாதாரண மாய் நடைபெற்று வருகிறது. குழந்தையின் ஞானத் தாய் அல்லது ஞானத் தகப்பன் குழந்தையைக் கோவிலுக்குக் கொண்டுவந்து, கோவில் பெரிய வாசற்படி அருகில் நிற்கும்போது, குருவானவர் சர்ப்பிளிஸும் ஊதா ஸ்தோலாவும் அணிந்து, குழந்தைக்கு இடவேண்டிய பெயரை சொல்லி,
“சர்வேசுரனுடைய திருச்சபையிடமிருந்து என்ன கேட்கிறாய்?" என்க, ஞானத்தாய் தகப்பன் “விசுவாசம்" என்கிறார்கள்.
பின்னும் குருவானவர் "விசுவாசத்தால் உனக்கு கிடைப்பதென்ன?" என்று கேட்க, ஞானத்தாய் தகப்பன் “நித்திய ஜீவியம்” என்று பதிலுரைக்கிறார்கள்.
அப்போது குருவானவர், "ஆகையால், நித்திய ஜீவியத்தை அடைய விரும்புவாயாகில், கற்பனையை அனுசரி; உன் தேவனாகிய ஆண்டவரை உன் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமத்தோடும் முழு மனதோடும் சிநேகிப்பாயாக; உன் பிறனையும் உன்னைப்போல் சிநேகிப்பாயாக" என்று சொல்விக் குழந்தையின் முகத்தில் ஊதுகிறார்.
அச்சமயம் அவர் சொல்லும் ஜெபமாவது: "அசுத்த அரூபியே, அவனைவிட்டு அகன்றுபோ, தேற்றுகிறவராகிய திவ்விய இஸ்பிரித்துவுக்கு இடங்கொடு." பூர்வீக காலந்தொட்டு வழங்குகிற இந்தச் சடங்கு திவ்விய இஸ்பிரித்துவை அளிப்பதற்கு அடையாளமாகும்.
பின்னர், குழந்தையின் மனதும் இருதயமும் சுத்தமாயிருக்கவேண்டுமென்ற கருத்துக்காக குருவானவர் அதன் நெற்றியிலும் நெஞ்சிலும் சிலுவை வரைந்து, கிறீஸ்து நாதரின் சிலுவை அடையாளத்தை அடைந்த அக்குழந்தை அவரது கற்பனைகளை அனுசரித்து நித்திய ஜீவியத்தைச் சுதந்தரித்துக் கொள்ள வேண்டுமென்ற கருத்து அடங்கிய ஜெபத்தைச் சொல்லுகிறார். இச்செபம் முடிந்ததும், குருவானவர் தமது கரத்தைக் குழந்தையின் தலைமேல் வைக்கிறார்; இது பலத்தையும் அதிகாரத்தையும் கொடுக்கும் அடையாளம். தலைமேல் கையை வைத்து, விசுவாச வெளிச்சத்திற்கு அழைக்கப்பட்ட இக்குழந்தை சகலவித இருதயக் குருட்டாட்டத்தினின்றும் சாத்தானுடைய மாய்கைகளினின்றும் விடுதலையாகி, ஞானத்தால் நிரம்பி, கடவுளுக்கு அவரது திருச்சபையில் ஊழியஞ்செய்து, தினந்தோறும் பரிசுத்ததனத்தில் நேர்ச்சி அடைய வேண்டுமென்று மன்றாடுகிறார்.
அதன்பின், குருவானவர் "ஞானத்தின் உப்பைப் பெற்றுக்கொள், அது உனக்கு நித்திய ஜீவியத்தை அடைந்து தரும் பரிகார மருந்தாய் இருக்கக்கடவது" என்று சொல்லிக் கொண்டு, ஏற்கனவே மந்திரித்திருக்கிற உப்பில் சிறிதளவு எடுத்துக் குழந்தையின் வாயில் போடுகிறார். திருச்சபை சடங்கு முறையில் உப்புக்குப் பலவகைப்பட்ட அர்த்தமுண்டு. ஞானம், புதுப்பித்தல், சுத்திகரித்தல், அழியாமற் காப்பாற்றுதல் என்று பலவகை அர்த்தங்கொள்ளும். உள்ளபடியே இந்த அர்த்தங்களெல்லாம் குருவானவர் சொல்லுகிற அடுத்த ஜெபத்தில் அடங்கியிருக்கின்றன. இந்த உப்பை ருசிபார்த்தவன் அர்ச்சிப்படைய வேண்டுமென்றும், பரலோக போஜனத்தால் திருப்தி அடைய வேண்டு மென்றும், மனதில் உருக்கமும், நம்பிக்கையில் ஆனந்தமும், தேவ ஊழியத்தில் பிரமாணிக்கமும் அவனுக்கு இருக்கவேண்டுமென்றும் மன்றாடுகிறார்.
இந்த மன்றாட்டுக்குப்பின், பசாசை ஓட்டுஞ் செபம் சொல்லப்படுகிறது. ஞானஸ்நானம் பெறாதவனின் ஆத்துமம் விசேஷ விதமாய் அந்தகார அரூபி களுடைய ஆளுகையில் இருக்கிறது என்று திருச்சபையின் மூதாதையர்கள் படிப்பிக்கிறார்கள். இந்தப் படிப்பினையை அனுசரித்து, இச்சடங்கு ஏற்பட்டது. பின்னும் ஓர் தடவை நெற்றியில் சிலுவை வரைகிறார்; இனிமேல், பசாசு இந்த ஆத்துமத்தைக் கெடுக்கத் தேடி உபயோகிக்கும் தந்திரங்களுக்கு விரோத மாய்த் தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்பதை இது குறிக்கின்றது.
மீண்டும் குருவானவர் தமது கரத்தைக் குழந்தையின் தலைமேல் வைத்து, "சர்வ வல்லபமுள்ள பிதாவே, பரிசுத்த ஆண்டவரே, நித்திய சர்வேசுரா, உண்மைக்கும் ஒளிக்கும் காரண கர்த்தாவே, உமது ஊழியனாகிய இவனை அறிவால் பிரகாசிப்பித்து, சுத்தம் செய்து அர்ச்சித்து, மெய்யான அறிவை இவனுக்குக் கட்டளையிட்டு, இவன் ஞானஸ்நானத்தின் அருளால் உமக்கு அருகனாகி, உறுதியான நம்பிக்கையையும் சரியான யோசனையையும், பரிசுத்த போதகத்தையும் கைக்கொள்ளும்படியாக இவன்பேரில் உமது உன்னத நீதிக் குரிய இரக்கத்தைக் காண்பித்தருள வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்” என்று ஜெபிக்கிறார்.
இந்தச் செபம் முடிந்தவுடன், குழந்தையின் தலையின் மேல் ஸ்தோலாவின் நுனியை வைத்து, “கிறீஸ்துநாதரோடு நித்திய ஜீவியத்தில் உனக்குப் பங்கு கிடைக்கும்படியாக, சர்வேசுரனுடைய ஆலயத்தில் பிரவேசி" என்கிறார்.
அப்போது ஞானத்தாய் தகப்பனும் குழந்தையோடு கோவிலுக்குள் பிரவேசிக்கிறார்கள். பூர்வீக காலங்களில், ஞானஸ்நானம் பெற வேண்டிய வர்கள் சுற்றுப்பிரகாரமாய் வந்து ஆடம்பரமாய் கோவிலுக்குள் செல்வது வழக்கமாயிருந்தது; அதை அனுசரித்து இந்தச் சடங்கு இன்றைக்கும் நடைபெறுகிறது. கோவிலுக்குள் வந்ததும், ஞானத்தாய் தகப்பன் குழந்தைபேரால் குருவானவருடன் சேர்ந்து விசுவாச உச்சாரணமாக, விசுவாச மந்திரஞ் சொல்லுகிறார்கள்; அதற்குப்பின் பரலோக மந்திரமும் சொல்லு கிறார்கள்.
இரண்டாந் தடவையாக பசாசை ஓட்டும் ஜெபத்தைச் சொன்னபிறகு, குருவானவர் தமது நாவில் விரலை வைத்து, குழந்தையின் காதுகளையும், நாசிகளையும் தொட்டு, "எப்பேத்தா -அதாவது: திறக்கப்படு, இனிமையின் சுகந்தத்தில் (திறக்கப்படு); நீயோ, துஷ்ட அரூபியே, வெளியே ஓடிப்போ, ஏனெனில் தேவ தீர்ப்பு சமீபித்திருக்கின்றது" என்று சொல்லுகிறார். காதுகளைத் தொடுவது. தேவ வார்த்தையைக் கேட்டு உணரும்படி புத்தியைப் பிரகாசிப்பதற்கும், நாசிகளைத் தொடுவது ஞான ஜீவியத்தின் பரிமள சுகந்தத்திற்கும் அடையாளமாம். உமிழ்நீரை உபயோகிப்பது சேசுநாதர் சுவாமி உமிழ்நீரோடு கலந்த சேற்றைக் குருடனது கண்களில் தடவி அவனைக் குணப்படுத்தின புதுமையை ஞாபகப் படுத்துகின்றது.
அதன்பின், "பசாசையும், அதன் கிரியைகளையும் ஆடம்பரங்களையும் விட்டுவிடுகிறேன்" என்று குழந்தை பேரால் ஞானத்தாய் தகப்பன் குருவானவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலுரைத்து வார்த்தைப்பாடு கொடுக்கிறார்கள். அப்போது குருவானவர் அர்ச்சியசிஷ்ட எண்ணெயில் தமது பெருவிரல் நுனியைத் தோய்த்து குழந்தையின் நெஞ்சிலும், முதுகிலும், தோள் பட்டைகளுக்கு மத்தியிலும் அர்ச்சியசிஷ்ட எண்ணெயால் சிலுவை வரைந்து, "உனக்கு நித்திய ஜீவியம் கிடைக்கும்படியாக, நமது ஆண்டவராகிய சேசு கிறீஸ்துநாதர் பேரால் உன்னை இரட்சண்ய தைலத்தால் பூசுகிறேன்” என்று சொல்லுகிறார். நெஞ்சில் வரைகிற சிலுவை, நமது பரிசுத்த விசுவாசம் சோதனையை எதிர்க்கும் கேடயமென்றும், முதுகில் வரைகிற சிலுவை, சேசு கிறீஸ்துநாதர் வழியாய் இரட்சண்யம் அடைவதற்கு "நமது சிலுவையைச் சுமந்துகொண்டு அவரைப் பின்செல்ல வேண்டும்” என்றும் காட்டுகிறது.
தைலம் பூசினவுடன் குருவானவர் இதுவரையில் அணிந்திருந்த ஊதா ஸ்தோலாவுக்குப் பதிலாக, வெள்ளை ஸ்தோலாவை அணிந்துகொண்டு. "பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த சர்வத்துக்கும் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறாயா? - அவருடைய ஏக சுதனாகிய நமதாண்டவர் சேசு கிறிஸ்துநாதர் நமக்காகப் பிறந்து பாடுபட்டாரென்று விசுவசிக்கிறாயா? திவ்விய இஸ்பிரீத்துசாந்துவையும், பொதுவாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட சபையையும், அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீத பிரயோசனத்தையும், பாவப்பொறுத்தலையும் சரீர உத்தானத்தையும் விசுவசிக்கிறாயா?" என்று கேட்க, ஞானத்தாய் தகப்பன் ஒவ்வொரு கேள்விக்கும் "விசுவசிக்கிறேன்" என்று பதிலுரைக்கிறார்கள். விசுவாச உச்சாரணம் முடிந்ததும், "ஞானஸ்நானம் பெற ஆசையா" என்று கேட்கிறார். "ஆசிக்கிறேன்" என்று ஞானத் தாய் தகப்பன் பதில் சொல்லவே, குருவானவர் ஞானஸ்நானத் தீர்த்தத்தை ஓர் சிறு பாத்திரத்தில் எடுத்து, குழந்தையின் பெயரை உச்சரித்து "பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்துசாந்து வுடையவும் நாமத்தினாலே, நான் உன்னைக் கழுவுகிறேன்” என்று சொல்லும்போது, குழந்தையின்மேல் சிலுவை அடையாளமாக மும்முறை ஞானஸ்நானத் தீர்த்தத்தை வார்க்கிறார். இதுவே “ஞானஸ்நானத்திற்கு அத்தியாவசியமானது. தண்ணீர் வார்த்தவுடன், இப்போது அக்குழந்தை கிறீஸ்தவன் ஆகிவிட்டான் என்பதற்கு அடையாளமாக குருவானவர் அதன் தலை உச்சியில் பரிசுத்த தைலத்தால் சிலுவை வரைகிறார்.
பின்னர், ஓர் வெள்ளை வஸ்திரத்தை எடுத்துக் குழந்தையின் தலையில் விரித்து, “இந்த வெள்ளை ஆடையை ஏற்றுக்கொண்டு அதை நமதாண்ட வராகிய சேசு கிறிஸ்துநாதருடைய தீர்வை ஆசனத்திற்கு முன்பாக, மாசுபடாமல் கொண்டுபோய்ச் சேர்ப்பாயாக " என்கிறார். பூர்விக காலத்தில் ஞானஸ்நானம் பெற்றவர்கள் வெள்ளை வஸ்திரம் அணிந்து வந்ததிலிருந்து உண்டான வழக்கம் இது. மேலும், ஞானஸ்தானத்தினால் நமது ஆத்துமம் தூய்மையாக்கப்பட்டது; இந்தத் தூய்மையைக் கடைசிமட்டும் மாசுபடாமல் காப்பாற்ற வேண்டியது நமது கடமை என்று இச்சடங்கு நமக்கு நினைப் பூட்டுகிறது.
கடைசியாக, எரிகிற மெழுகுவர்த்தியை ஞானத்தாய் தகப்பன் கையில் கொடுப்பது, விசுவாச வெளிச்சத்திற்கும், சிநேக அக்கினிக்கும் அடையாளம். இதைக் கொடுக்கும் போது குருவானவர் சொல்லுவதாவது: "உனது ஞானஸ்தானத்தை மாசின்றிக் காப்பாற்று; சர்வேசுரனுடைய கற்பனை களை அனுசரி; இவ்வண்ணமாய் கலியாண விருந்திற்கு ஆண்டவர் வருகையில், மோட்ச சாலைகளிலுள்ள சகல அர்ச்சியசிஷ்டவர்களோடு நீயும் அவரைச் சந்தித்து, நித்திய ஜீவியத்தை அடைவாயாக." இங்கே கலியாண விருந்து என்பது, சன்மான நாள் என்று அர்த்தப்படும். சமாதானமாய் போ, ஆண்டவர் உன்னோடு இருப்பாராக "என்னும் மங்கள வசனம் ஞானஸ்நானச் சடங்குகளுக்கு முடிவுரை.
ஞானஸ்நானத்தால் மானிட ஆத்துமத்திற்குண்டாகும். அதிசயத்திற்குரிய பயன்களை மேற்கூரிய சடங்குகள் வெகு தெளிவாய் எடுத்துக்காட்டுகின்றன அல்லவா? மானிட ஆத்துமம் பசாசின் அடிமைத்தனத்தினின்று மீட்கப்பட்டு. ஜென்மப் பாவக்கறை நீங்கி, உலகம் பசாசு சரீரம் என்னும் முதலிய சத்துருக்களை எதிர்த்து நிற்பதற்குத் திடனை அடைகிற தென்று இவைகள் காட்டுகின்றன. அன்றியும், ஞானஸ்நானத்தால் ஆத்துமத்தில் ஓர் புதிய முத்திரை பதித்து, சர்வேசுரனுடைய இராச்சியத்திற்குச் சுதந்திரவாளியாக, கிறீஸ்துநாதர் மந்தையில் ஒரு புதிய ஆடு பிரவேசித்திருக்கிறது என்றும் இச்சடங்குகள் குறிப்பிடுகின்றன.
Please read more about the Sacramentals here . . .
அருட்கருவிகள் (Sacramentals) பற்றி மேலும் தெரிந்து கொள்ள in Tamil
அருட்கருவிகள் (Sacramentals) in Tamil
வியாழன், 18 ஜனவரி, 2024
அர்ச். எவுப்பிறாசியம்மாள் - Ste. EUPHRASIE
அர்ச். எவுப்பிறாசியம்மாள் திருநாள்.
புதன், 17 ஜனவரி, 2024
மகா பரிசுத்த கன்னிகை தன் பிள்ளைகளின்மீது கொண்டுள்ள பிரியமுள்ள அன்பு!
தேவமாதா நம் தாயானால்.....
சங், அந்தோனி சேவியர் சுவாமி
புது வருடச் சிந்தனைக்கு:
தேவமாதா நம் தாயானால், அதை நாம் ஏற்பது மெய்யானால், நாம் இப்போது இருப்பது போல் இருப்போமா? இப்படி அவர்களைப் பற்றி உணர்வற்றிருக்க முடியுமா? மாதா மட்டில் இப்படி அசிரத்தையா யிருப்பது சரியாகுமா?
மாதா அப்போஸ்தலர்கள் எனப்படுகிறவர்களும், மாதாவின் பிள்ளைகள் எனப்படு கிறவர்களும், எவ்வகையிலேனும் தங்களை மாதாவுடையவர்கள் எனக் கருதிக் கொள்பவர்களும் ஏன் தான் இப்படி இருக்கிறோம்? உணர்வற்ற மரக்கட்டைகளாக, அலட்சியமாக, தாயை மறந்தவர்களாக, மக்குப் பிடித்து, அன்னைக்கு நேரிடும் துயரங்களாலும், நிந்தைகளாலும் பாதிக்கப்படாதவர்களாக நம்மால் எப்படி இருக்க முடிகிறது?
"நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எங்களால் என்ன செய்ய முடியும்? இயன்ற அளவு செய்யத் தான் செய்கிறோம்" என்று நீங்கள் சொல்லலாம். உங்களால் பின்வருவன வற்றைச் செய்யமுடியும்:
நீங்கள் மாதாவை நேசிக்க முடியும். நேசிக்கிறீர்களா? எந்த அளவுக்கு? இப்போது நேசிப்பதை விட அதிகமாக நேசிக்க முடியாதா?
மாதாவுக்கு ஆறுதலளிக்கும் பரிகார பக்தி முயற்சிகளைக் கடைப்பிடிக்கிறீர்களா? அதிலே மூழ்கிப் போகிறீர்களா? இவ்வளவு பரிகாரம்தான் உங்களால் செய்ய முடியுமா?
பரிகார பக்தியின் அவசியத்தைப் பிறருக்கு எடுத்துச் சொல்லலாம். சொல்லி வருகிறீர்களா?
நம்மில் அநேகருக்குப் பரிகார பக்தி என்றால் என்னவென்றே சரியாகப் புரியவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. அது என்ன?
- மாதா பகைக்கப்படுவதற்கு ஈடாக அவர்களை நம் உள்ளத்தோடு நேசிப்பது பரிகாரமாகும்.
- மாதா தூஷணிக்கப்படுவதற்கு ஈடாக அவர்களை இடைவிடாமல் இருதயத்தில் வாழ்த்துவது பரிகாரமாகும்.
- மாதா மறுக்கப்படுவதற்கு ஈடாக அவர்களை நம் முழு மனதுடன் ஏற்றுக் கொள்வது பரிகாரமாகும்.
- மாதாவுடன், மாதாவுக்காக நம் வாழ்வை இரவும், பகலும் வாழ்வது பரிகார மாகும். இதையெல்லாம் செய்கிறீர்களா?
- எந்தத் துன்பத்தையும், நோயையும், கவலையையும், அவமானத்தையும் மாதாவுக்கு ஆறுதலாக, பாவிகள் மனந்திரும்பும்படி ஒப்புக்கொடுக்கிறீர்களா?
- உங்களையும், உங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் மாதாவுக்கென அர்ப்பணம் செய் திருக்கிறீர்களா?
- மாதாவின் துயரங்களை ஒவ்வொன்றாய் நினைத்து அனுதாபப்பட்டு அவற்றால் பாவிகளை இரட்சிக்க மன்றாடுகிறீர்களா?
- மரியாயின் பரிகார பக்தியாகிய முதல் சனி பக்தியை அனுசரிக்கிறீர்களா? அது மாதத்துக்கொரு நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல், பரிகார உணர்விலேயே மாதம் முழுவதும் உங்களை இருக்கச்செய்கிறதா?
- மாதாவுக்குப் பரிகாரம் செய்ய வேண்டுமென்று ஒரு நாளில் எத்தனை தடவை நினைப்பீர்கள்?
- ஒரு நாளில் மாதாவுக்கென எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? மாதா ஊழியமாக என்ன செய்கிறீர்கள்?
- மாதா சாதாரணப் பெண்தான் என்கிறார்கள் ஆங்காரிகள்.
- மாதா நமக்கு அவசியமில்லை என்கிறார்கள் பதிதர்கள்.
- மாதாவுக்கு வணக்கம் செலுத்தக்கூடாது என்கிறார்கள் மார்ட்டின் லூத்தரின் சீடர்கள்.
- மாதாவுக்கு மேலான வணக்கம் ஒன்றும் வேண்டாம். "மரியாளை" வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் என்கிறார்கள் அதிகம் படித்த மேதாவிகள்.
- ஜெபமாலை தேவையா என்று கேலியாகக் கேட்கிறார்கள் மாதாவை உள்ளூரப் பிடிக்காதவர்கள்.
- உத்தரியம் மூட பக்தி என்கிறார்கள் அதன் உண்மையைப் புரிய முடியாத அறிவாளிகள்.
- மாதாவை நேசிக்கக் கூடாது. சங்கிக்கக் கூடாது, அதெல்லாம் விக்கிரக ஆராதனை என்கிறார்கள் அக்கிரமிகள்.
நிந்தைப் பரிகாரமே சிறந்த வழி என்று உறுதிபூண்டு, அதைச் செய்யத் தீவிரம் கொண்டிருக்கிறீர்களா? மரியாயின் மாசற்ற இருதயத்திற்குப் பரிகாரம் செய்வது ஒன்றே இன்று திருச்சபையையும்,உலகத்தையும் காப்பாற்றும், மற்ற எந்த முயற்சியும் வீணாகச் செய்யப்படுகிறது.
தபசுகால ஆயத்த ஞாயிறுகள்: செப்துவாஜெஸிமா, செக்ஸாஜெஸிமா, குவின்குவாஜெஸிமா (Septuagesima, Sexagesima and Quinquagesima)
பாஸ்கு காலச் சுற்று என்பது செப்துவாஜெஸிமா ஞாயிறு முதல் தமத்திரித்துவத் திருநாள் வரை நீடிக்கும் வழிபாட்டுக் காலமாகும். வழிபாட்டு ஆண்டாகிய சக்கரத்தின் அச்சாணியாக விளங்கும் பாஸ்கு காலச் சுற்று, வழிபாட்டின் மையமான பரம இரகசியமும், நம் விசுவாசத்தின் அடிப்படை சத்தியமுமான நம் திவ்ய இரட்சகரின் உயிர்ப்பின் ஞாயிறை உள்ளடக்கியதாக இருப்பதால் அது மற்ற காலச் சுற்றுகளைவிட அதிக முக்கியமானதாக இருக்கிறது.
இந்தச் சுற்றின் தொடக்கத்தின் முதல் மூன்று ஞாயிறுகள் முறையே செப்துவாஜெஸிமா, செக்ஸாஜெஸிமா, குவின்குவாஜெஸிமா என்று அழைக்கப்படுகின்றன. இந்த மூன்று வார காலம் பொதுவாக செப்துவாஜெஸிமா காலம் என்றே அழைக்கப்படுகிறது. பாப்பரசர் முதலாம் பெலாஜியன் அல்லது அவருக்கு அடுத்து வந்த பாப்பரசர் மூன்றாம் அருளப்பரால் இந்தக் காலம் திருச்சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்காலம் அடிப்படையில் தபசு காலத்திற்கான தயாரிப்புக் காலமாக இருக்கிறது. கிறீஸ்தவ மனத்தைத் தபசுகாலத்தின் ஆழ்ந்த பக்தியார்வத்திற்கும், தவத்திற்கும் ஏற்றபடி ஆயத்தம் செய்வது இதன் நோக்கமாக இருக்கிறது.
செப்துவாஜெஸிமா (சப்தரிகை) ஞாயிறு என்பதற்கு, கிறீஸ்துநாதரின் உயிர்ப்புக்கு முன் எழுபதாம் நாள் என்பது பொருளாகும். இந்த ஞாயிறு வாசகங்கள், ஆதாமின் பாவத்தால் மனுக் குலம் துன்பத்திற்கும், சாபத்திற்கும் உட்பட்டு வருந்துவதையும், மனிதன் தன் பாவத்திற்காக வருந்தி, கடவுளின் இரக்கத்தைத் தேடினால் அவன் இரட்சிக்கப்படுவான் என்பதையும் நினைவு படுத்துகின்றன. ஆதாம் சபிக்கப்பட்டபோதே மெசையாவின் வருகையும், இரட்சணியமும் அவருக்கும். அவருடைய சந்ததிக்கும் வாக்களிக்கப்பட்டன. உரிய காலம் வந்த போது, உலகில் தோன்றிய இரட்சகர் தமது சமாதான சுவிசேஷத்தின் திராட்சைத் தோட்டத்தில் உழைக்கும்படி நம்மை அழைக்கிறார். அப்படி உழைப்பவர்களுக்கு அவர் நித்திய ஜீவியத்தையும் வாக்களிக் கிறார். "அதிகமதிகமாய் அச்ச நடுக்கத்தோடு உங்கள் ஈடேற்ற வேலையைப் பாருங்கள்" (பிலிப். 2:12) என்பதுதான் இன்றைய பூசையின் முக்கியக் கருத்து.
அடுத்து வருவது செக்ஸாஜெஸிமா (சடிகை) ஞாயிறு ஆகும். இதன் பொருள் கிறீஸ்து நாதரின் உயிர்ப்புக்கு முன் அறுபதாம் நாள் என்பதாகும். நம்முடைய உழைப்பு தவத்திற்கேற்ற பலனைத் தர வேண்டுமானால், துன்பங்களை ஏற்றுக்கொள்வது அவசியம் என்றும், மனித பலவீனத்திலேதான் கடவுளின் வல்லமை பூரணமாய் விளங்குகிறது என்றும், இதன் காரணமாக, கிறீஸ்துநாதரின் வல்லமை நம்மில் வாசம் பண்ணும்படி, நம் பலவீனங்களில்தான் நாம் சந்தோஷ மாய் மேன்மை பாராட்ட வேண்டும் என்றும் இன்றைய நிருபம் கற்பிக்கிறது, தேவ வார்த்தை என்னும் விதை விதைக்கப்பெற்று, தேவசிநேகத்தின் கனிகளைத் தருகிற நல்ல நிலமாய் நாம் இருந்து, முப்பது, அறுபது, நூறு மடங்கு பலன் தர வேண்டுமென்று இந்த ஞாயிறு சுவிசேஷ வாசகம் நமக்கு அறிவிக்கிறது.
இறுதியாக வருவது, குளின்குவாஜெஸிமா ஞாயிறு ஆகும். இதன் பொருள் கிறீஸ்து நாதரின் உயிர்ப்புக்கு முன் ஐம்பதாம் நாள் என்பதாகும். சிலுவையின் பரம இரகசியம் மனித னுடைய புத்திக்கு எப்போதும் கடினமானதாகவே தோன்றுகிறது (1 கொரி. 1:23), கிதீஸ்து நாதருடன் மூன்று ஆண்டுகளாகச் சேர்ந்திருந்த அப்போஸ்தலர்களும் இதைக் கண்டுபிடிக்க வில்லை. தனிமையாக விடப்பட்ட நம் ஆண்டவர் சிலுவையின் பாதையில் தன்னந்தனியே நடந்து செல்கிறார். துன்பங்களின் வழியாகவே பாவப் பரிகாரம் செய்யப்பட முடியும் என்னும் உண்மை சிலுவையில் அறையுண்ட கிறீஸ்துநாதரைத் தியானிப்பதால் விளங்குகிறது. மெய்யான தேவ சிநேகம் இல்லாவிடில், விசுவாசம், பிறர்சிநேகம் ஆகியவை உட்பட எந்தப் புண்ணியத்தாலும் பலனில்லை என்று திருபம் படிப்பிக்கிறது. மேலும் சிலுவையாலன்றி இரட்சணியமில்லை என்றும், இரட்சணியமடைய விசுவாசம் இன்றியமையாதது என்றும் பரிசுத்த சுவிசேஷம் உணர்த்துகிறது.
இந்த ஞாயிறுகளின் பெயர்கள் பொதுவாக, தபசுகாலத்தின் நாற்பது நாட்களையும் குறிக்கும் குவாத்ராஜெஸிமா என்னும் இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டவையாகும். தபசு காலத்திற்கான ஆயத்தம் முதலில் தபசுகாலத்தின் முதல் ஞாயிறுக்கு முந்திய ஞாயிறன்று தொடங்கியது. இது "தோமினிக்கா (ஞாயிறு) இன் குவின்குவாஜெஸிமா" (பாஸ்குத் திருநாளுக்கு ஆயத்தமான 50 நாட்களுக்குள் வரும் முதல் ஞாயிறு) எனப்பட்டது. சிறிது காலத்திற்குப் பிறகு, இக்காலம் 60 நாட்கள் உள்ளதாக ஆக்கப்பட்டு, அதன் முதல் ஞாயிறு செக்ஸாஜெஸிமா ஞாயிறு எனப்பட்டது. இறுதியாக, இக்காலம் 70 நாட்கள் என்று ஆக்கப்பட்டு, அதன் முதல் ஞாயிறு செப்துவாஜெஸிமா என்று அழைக்கப்பட்டது. இந்த 50, 60, 70 என்ற எண்கள் தோராயமானவையே.
சில வேத அறிஞர்கள் செப்துவாஜெஸிமா என்பது, இஸ்ராயேல் மக்கள் தங்கள் பாவங்களுக்காகத் தவம் செய்யும்படி அனுபவித்த எழுபது ஆண்டு அடிமைத்தனத்தை ஒரு மாதிரிகையாகக் கொண்டு திருச்சபையில் அறிமுகப்படுத்தப்பட்ட தபசுகாலத்தின் தொடக்கம் என்றும், இந்த எழுபது நாட்களிலும் கத்தோலிக்க விசுவாசிகள் உண்மையான தவ உணர்வோடு தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்து, சேசுக்கிறீஸ்துநாதரின் உயிர்ப்போடு தங்கள் உயிர்ப்பையும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டு என்று அது குறித்துக் காட்டுவதாகவும் கருதுகிறார்கள்.
மொத்தத்தில், விதை பலன் தருவதற்கு அது மண்ணோடு மண்ணாக மக்கி மடிவது அவசியம். சேசுநாதரோடு மகிமையில் உயிர்ப்பதற்கு, அவரோடு பாடுபடுவது அவசியம். சிலுவையால் அன்றி இரட்சணியம் இல்லை. துன்பம் இன்றி, நித்திய மகிமையை அடைதல் இல்லை என்பதையே இந்த செப்துவா ஜெஸிமா காலமும், அதைத் தொடர்ந்து வரும் தபசு காலமும் நமக்குப் படிப்பிக்கின்றன.
மாதா பரிகார மலர் - ஜனவரி - பிப்ரவரி, 2024