Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 17 ஜனவரி, 2024

மகா பரிசுத்த கன்னிகை தன் பிள்ளைகளின்மீது கொண்டுள்ள பிரியமுள்ள அன்பு!

 


அர்ச். பெர்னார்ட்: "தன்னை நேசிப்பவர்களை மாமரி அடையாளம் கண்டு, அவர்களை அதிகக் கனிவுள்ள அன்போடு நேசிக்கிறார்கள்" என்கிறார். 

முத்திப்பேறு பெற்ற ரேமண்ட் ஜோர்டான் என்பவர் இதைத் தொடர்ந்து: "தன்னை நேசிப்பவர்களை மாமரி நேசிப்பது மட்டுமின்றி, அவர்களுக்குப் பணிவிடைகளும் செய்கிறார்கள்!" என்கிறார். அர்ச். பெர்க்மான்ஸ் அருளப்பர் கூறுகிறபடி, "நான் மாமரியை நேசிக்கிறேன் என்றால், நிலைமை வரத்தைப் பற்றி நான் உறுதியாயிருப்பேன். கடவுளிடமிருந்து நான் கேட்கிற எதையும் பெற்றுக்கொள்வேன்."

அர்ச். ஸ்தனிஸ்லாஸ் கோஸ்ட்கா இந்தப் பிரியத்திற்குரிய மாதாவை எந்த அளவுக்குக் கனிவுள்ள அன்போடு நேசித்தார் என்றால், அவர்களோடு முகமுகமாய்ப் பேசுவது போலத் தான் அவர் எப்போதும் அவர்களோடு பேசுவார். ஸால்வே ரெஜினா பாடப்படுவதைக் கேட்கும்போது, அவர் நேசத்தால் பற்றியெரிவது போல, அவருடைய முகம் முழுவதும் ஒளியால் தகதகக்கத் தொடங்கி விடும்.

அர்ச். பிலிப் நேரியார் அவர்களைத் தன் மகிழ்ச்சி என்றழைத்தார். அர்ச். பெர்னார்ட் அவர்களை இருதயங்களை ஆட்கொள்பவர்கள் என்று அழைத்தார். அர்ச். அலோய்ஷியஸ் கொன்ஸாகா மாமரியின் திருப்பெயரைக் கேட்ட போதெல்லாம் அக்களிப்புக் கொண்டார். அர்ச். சொலானோ பிரான்சிஸ், தன் தாயை மகிழ்விக்கப் பாடும் சிறு குழந்தையைப் போல், அவர்களுடைய ஆலயங்களில் மாதா பாடல்கள் பாடினார். மாமரி கடவுளால் மிக அதிகமாக நேசிக்கப்பட்டார்கள் என்ற அறிவு தமக்குத் தந்த ஆறுதலைப் போல வேறெதும் தமக்கு ஆறுதல் தந்ததில்லை என்று அர்ச். ப்ரிட்ஜத்தம்மாளின் மகனான சார்ல்ஸ் கூறினார். அர்ச். அல்போன்ஸ் ரொட்ரீகஸ் மாமரியின் மீதான தம் அன்பிற்குச் சாட்சியமாக அவர்களுக்காகத் தம் உயிரைக் கையளிப்பதாக வாக்களித்தார். மாமரியின் மீது விசேஷ அன்பு கொண்டிருப்பது ஒரு பெரிய நற்பேற்றின் அடையாளம் என்று அர்ச். பொனவெந்தூர் அழுத்திக் கூறுகிறார். இந்த அன்னைக்கு மகனாய், மகளாய் இருப்பதை விடப் பெரிய பாக்கியம் ஏதுமில்லை!

("மரியாயின் மகிமைகள்" என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக