Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 19 ஜனவரி, 2024

தேவதிரவிய அநுமானங்கள் 1 - Baptism

 ஞானஸ்நானம்

நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941

தேவதிரவிய அநுமானங்களைப் பெறுவதினால் நமக்கு உண்டாகும் ஞான நன்மைகளை நமக்கு வெளி அடையாளங்களால் நினைப்பூட்டும்படியாகத் திருச்சபை, தேவதிரவிய அநுமானங்களை நிறைவேற்றுகையில் சில சடங்கு களைச் செய்யும்படி கற்பித்திருக்கிறது. இந்தச் சடங்குகள் பெரும்பாலும் மிகவும் பழமையானவைகள். அந்தந்த தேவதிரவிய அநுமானத்தின் வழியாக நமது ஆத்துமத்திற்கு அருளப்படும் தேவ கொடைகளையும் வரப்பிரசாதங் களையும் உருவகமாக எடுத்துக்காட்டுவதற்காகவே இந்தச் சடங்குகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

தேவதிரவிய அநுமானங்களுள் முதலில் பெறுவது ஞானஸ்தானம். அப்போஸ் தலராகிய அர்ச் சின்னப்பர் சொல்லும் வண்ணம். அதனால் நாம் சேசுநாதரை ஆடையாக அணிந்துகொள்கிறோம். அதற்குரிய சடங்குகள் மூன்று காரியங் களை நமக்கு நினைப்பூட்டுகின்றன: 

  • நாம் பாவத்தில் ஜெனித்தோம் என்பதையும், 
  • இவ்வுலகில் நமக்குப் பற்பல சோதனைகள் உண்டென்பதையும், 
  • நாம் நித்திய ஜீவியத்திற்காக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் அவைகள் ஞாபகப்படுத்துகின்றன.

பூர்வீக வழக்கம்: 

இக்காலத்தில் அனுசரிக்கிற ஞானஸ்நானச் சடங்குகள் பூர்வீக வழக்கத்தி லிருந்து உண்டானவைகளே. அர்ச். அம்புரோஸ் அதைப்பற்றி வெகு விரிவாய் எழுதியிருக்கிறார். அவரது காலத்தில், பெரிய சனிக்கிழமை மட்டும் வயது வந்தவர்களுக்குப் பகிரங்கமாய் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. இக்காலத் திலும் இதனிமித்தமே ஞானஸ்நானத் தீர்த்தம் பெரிய சனிக்கிழமையில் மந்திரிக்கப்படுகிறது. பூர்வீசக  காலத்தில், ஆடம்பர ஞானஸ்நானம் கொடுத்து வந்தது மேற்றிராணியாரே: குருக்களும் தியாக்கோன்மாரும் அவருக்கு உதவி செய்வார்கள். அக்காலத்தில், தண்ணீரில் உடம்பு முழுவதும் மூழ்கும்படி செய்து ஞானஸ்தானம் கொடுப்பது வழக்கமாயிருந்தது. ஆனால் இவ்விதஞ் செய்வது அத்தியாவசியமல்ல.

இந்த வழக்கம் 9-ம் நூற்றாண்டுவரை நடைமுறையில் இருந்து வந்தது. ஞானஸ்நானம் பெற்றவன் உடனே வெண்ணாடை தரித்து, உறுதிபூசுதலும் பெற்று, திவ்விய பலி பூசை கண்டு, தற்கருணை வாங்குவதும் வழக்க மாயிருந்தது.

இக்கால வழக்கம்: 

இக்காலத்தில் குழந்தைகள் பிறந்தவுடன் கூடிய சீக்கிரம் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று திருச்சபை விரும்புவதால், வயது வந்தவர்களின் ஞானஸ்நானத்தைவிடக் குழந்தைகளின் ஞானஸ்நானமே வெகு சாதாரண மாய் நடைபெற்று வருகிறது. குழந்தையின் ஞானத் தாய் அல்லது ஞானத் தகப்பன் குழந்தையைக் கோவிலுக்குக் கொண்டுவந்து, கோவில் பெரிய வாசற்படி அருகில் நிற்கும்போது, குருவானவர் சர்ப்பிளிஸும் ஊதா ஸ்தோலாவும் அணிந்து, குழந்தைக்கு இடவேண்டிய பெயரை சொல்லி, 

சர்வேசுரனுடைய திருச்சபையிடமிருந்து என்ன கேட்கிறாய்?" என்க, ஞானத்தாய் தகப்பன் “விசுவாசம்" என்கிறார்கள். 

பின்னும் குருவானவர் "விசுவாசத்தால் உனக்கு கிடைப்பதென்ன?" என்று கேட்க, ஞானத்தாய் தகப்பன் “நித்திய ஜீவியம்” என்று பதிலுரைக்கிறார்கள்.

அப்போது குருவானவர், "ஆகையால், நித்திய ஜீவியத்தை அடைய விரும்புவாயாகில், கற்பனையை அனுசரி; உன் தேவனாகிய ஆண்டவரை உன் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமத்தோடும் முழு மனதோடும் சிநேகிப்பாயாக; உன் பிறனையும் உன்னைப்போல் சிநேகிப்பாயாக" என்று சொல்விக் குழந்தையின் முகத்தில் ஊதுகிறார். 

அச்சமயம் அவர் சொல்லும் ஜெபமாவது: "அசுத்த அரூபியே, அவனைவிட்டு அகன்றுபோ, தேற்றுகிறவராகிய திவ்விய இஸ்பிரித்துவுக்கு இடங்கொடு." பூர்வீக காலந்தொட்டு வழங்குகிற இந்தச் சடங்கு திவ்விய இஸ்பிரித்துவை அளிப்பதற்கு அடையாளமாகும்.

பின்னர், குழந்தையின் மனதும் இருதயமும் சுத்தமாயிருக்கவேண்டுமென்ற கருத்துக்காக குருவானவர் அதன் நெற்றியிலும் நெஞ்சிலும் சிலுவை வரைந்து, கிறீஸ்து நாதரின் சிலுவை அடையாளத்தை அடைந்த அக்குழந்தை அவரது கற்பனைகளை அனுசரித்து நித்திய ஜீவியத்தைச் சுதந்தரித்துக் கொள்ள வேண்டுமென்ற கருத்து அடங்கிய ஜெபத்தைச் சொல்லுகிறார். இச்செபம் முடிந்ததும், குருவானவர் தமது கரத்தைக் குழந்தையின் தலைமேல் வைக்கிறார்; இது பலத்தையும் அதிகாரத்தையும் கொடுக்கும் அடையாளம். தலைமேல் கையை வைத்து, விசுவாச வெளிச்சத்திற்கு அழைக்கப்பட்ட இக்குழந்தை சகலவித இருதயக் குருட்டாட்டத்தினின்றும் சாத்தானுடைய மாய்கைகளினின்றும் விடுதலையாகி, ஞானத்தால் நிரம்பி, கடவுளுக்கு அவரது திருச்சபையில் ஊழியஞ்செய்து, தினந்தோறும் பரிசுத்ததனத்தில் நேர்ச்சி அடைய வேண்டுமென்று மன்றாடுகிறார்.

அதன்பின், குருவானவர் "ஞானத்தின் உப்பைப் பெற்றுக்கொள், அது உனக்கு நித்திய ஜீவியத்தை அடைந்து தரும் பரிகார மருந்தாய் இருக்கக்கடவது" என்று சொல்லிக் கொண்டு, ஏற்கனவே மந்திரித்திருக்கிற உப்பில் சிறிதளவு எடுத்துக் குழந்தையின் வாயில் போடுகிறார். திருச்சபை சடங்கு முறையில் உப்புக்குப் பலவகைப்பட்ட அர்த்தமுண்டு. ஞானம், புதுப்பித்தல், சுத்திகரித்தல், அழியாமற் காப்பாற்றுதல் என்று பலவகை அர்த்தங்கொள்ளும். உள்ளபடியே இந்த அர்த்தங்களெல்லாம் குருவானவர் சொல்லுகிற அடுத்த ஜெபத்தில் அடங்கியிருக்கின்றன. இந்த உப்பை ருசிபார்த்தவன் அர்ச்சிப்படைய வேண்டுமென்றும், பரலோக போஜனத்தால் திருப்தி அடைய வேண்டு மென்றும், மனதில் உருக்கமும், நம்பிக்கையில் ஆனந்தமும், தேவ ஊழியத்தில் பிரமாணிக்கமும் அவனுக்கு இருக்கவேண்டுமென்றும் மன்றாடுகிறார்.

இந்த மன்றாட்டுக்குப்பின், பசாசை ஓட்டுஞ் செபம் சொல்லப்படுகிறது. ஞானஸ்நானம் பெறாதவனின் ஆத்துமம் விசேஷ விதமாய் அந்தகார அரூபி களுடைய ஆளுகையில் இருக்கிறது என்று திருச்சபையின் மூதாதையர்கள் படிப்பிக்கிறார்கள். இந்தப் படிப்பினையை அனுசரித்து, இச்சடங்கு ஏற்பட்டது. பின்னும் ஓர் தடவை நெற்றியில் சிலுவை வரைகிறார்; இனிமேல், பசாசு இந்த ஆத்துமத்தைக் கெடுக்கத் தேடி உபயோகிக்கும் தந்திரங்களுக்கு விரோத மாய்த் தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்பதை இது குறிக்கின்றது.

மீண்டும் குருவானவர் தமது கரத்தைக் குழந்தையின் தலைமேல் வைத்து, "சர்வ வல்லபமுள்ள பிதாவே, பரிசுத்த ஆண்டவரே, நித்திய சர்வேசுரா, உண்மைக்கும் ஒளிக்கும் காரண கர்த்தாவே, உமது ஊழியனாகிய இவனை அறிவால் பிரகாசிப்பித்து, சுத்தம் செய்து அர்ச்சித்து, மெய்யான அறிவை இவனுக்குக் கட்டளையிட்டு, இவன் ஞானஸ்நானத்தின் அருளால் உமக்கு அருகனாகி, உறுதியான நம்பிக்கையையும் சரியான யோசனையையும், பரிசுத்த போதகத்தையும் கைக்கொள்ளும்படியாக இவன்பேரில் உமது உன்னத நீதிக் குரிய இரக்கத்தைக் காண்பித்தருள வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்” என்று ஜெபிக்கிறார்.

இந்தச் செபம் முடிந்தவுடன், குழந்தையின் தலையின் மேல் ஸ்தோலாவின் நுனியை வைத்து, “கிறீஸ்துநாதரோடு நித்திய ஜீவியத்தில் உனக்குப் பங்கு கிடைக்கும்படியாக, சர்வேசுரனுடைய ஆலயத்தில் பிரவேசி" என்கிறார்.

அப்போது ஞானத்தாய் தகப்பனும் குழந்தையோடு கோவிலுக்குள் பிரவேசிக்கிறார்கள். பூர்வீக காலங்களில், ஞானஸ்நானம் பெற வேண்டிய வர்கள் சுற்றுப்பிரகாரமாய் வந்து ஆடம்பரமாய் கோவிலுக்குள் செல்வது வழக்கமாயிருந்தது; அதை அனுசரித்து இந்தச் சடங்கு இன்றைக்கும் நடைபெறுகிறது. கோவிலுக்குள் வந்ததும், ஞானத்தாய் தகப்பன் குழந்தைபேரால் குருவானவருடன் சேர்ந்து விசுவாச உச்சாரணமாக, விசுவாச மந்திரஞ் சொல்லுகிறார்கள்; அதற்குப்பின் பரலோக மந்திரமும் சொல்லு கிறார்கள்.

இரண்டாந் தடவையாக பசாசை ஓட்டும் ஜெபத்தைச் சொன்னபிறகு, குருவானவர் தமது நாவில் விரலை வைத்து, குழந்தையின் காதுகளையும், நாசிகளையும் தொட்டு, "எப்பேத்தா -அதாவது: திறக்கப்படு, இனிமையின் சுகந்தத்தில் (திறக்கப்படு); நீயோ, துஷ்ட அரூபியே, வெளியே ஓடிப்போ, ஏனெனில் தேவ தீர்ப்பு சமீபித்திருக்கின்றது" என்று சொல்லுகிறார். காதுகளைத் தொடுவது. தேவ வார்த்தையைக் கேட்டு உணரும்படி புத்தியைப் பிரகாசிப்பதற்கும், நாசிகளைத் தொடுவது ஞான ஜீவியத்தின் பரிமள சுகந்தத்திற்கும் அடையாளமாம். உமிழ்நீரை உபயோகிப்பது சேசுநாதர் சுவாமி உமிழ்நீரோடு கலந்த சேற்றைக் குருடனது கண்களில் தடவி அவனைக் குணப்படுத்தின புதுமையை ஞாபகப் படுத்துகின்றது.

அதன்பின், "பசாசையும், அதன் கிரியைகளையும் ஆடம்பரங்களையும் விட்டுவிடுகிறேன்" என்று குழந்தை பேரால் ஞானத்தாய் தகப்பன் குருவானவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலுரைத்து வார்த்தைப்பாடு கொடுக்கிறார்கள். அப்போது குருவானவர் அர்ச்சியசிஷ்ட எண்ணெயில் தமது பெருவிரல் நுனியைத் தோய்த்து குழந்தையின் நெஞ்சிலும், முதுகிலும், தோள் பட்டைகளுக்கு மத்தியிலும் அர்ச்சியசிஷ்ட எண்ணெயால் சிலுவை வரைந்து, "உனக்கு நித்திய ஜீவியம் கிடைக்கும்படியாக, நமது ஆண்டவராகிய சேசு கிறீஸ்துநாதர் பேரால் உன்னை இரட்சண்ய தைலத்தால் பூசுகிறேன்” என்று சொல்லுகிறார். நெஞ்சில் வரைகிற சிலுவை, நமது பரிசுத்த விசுவாசம் சோதனையை எதிர்க்கும் கேடயமென்றும், முதுகில் வரைகிற சிலுவை, சேசு கிறீஸ்துநாதர் வழியாய் இரட்சண்யம் அடைவதற்கு "நமது சிலுவையைச் சுமந்துகொண்டு அவரைப் பின்செல்ல வேண்டும்” என்றும் காட்டுகிறது.

தைலம் பூசினவுடன் குருவானவர் இதுவரையில் அணிந்திருந்த ஊதா ஸ்தோலாவுக்குப் பதிலாக, வெள்ளை ஸ்தோலாவை அணிந்துகொண்டு. "பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த சர்வத்துக்கும் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறாயா? - அவருடைய ஏக சுதனாகிய நமதாண்டவர் சேசு கிறிஸ்துநாதர் நமக்காகப் பிறந்து பாடுபட்டாரென்று விசுவசிக்கிறாயா? திவ்விய இஸ்பிரீத்துசாந்துவையும், பொதுவாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட சபையையும், அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீத பிரயோசனத்தையும், பாவப்பொறுத்தலையும் சரீர உத்தானத்தையும் விசுவசிக்கிறாயா?" என்று கேட்க, ஞானத்தாய் தகப்பன் ஒவ்வொரு கேள்விக்கும் "விசுவசிக்கிறேன்" என்று பதிலுரைக்கிறார்கள். விசுவாச உச்சாரணம் முடிந்ததும், "ஞானஸ்நானம் பெற ஆசையா" என்று கேட்கிறார். "ஆசிக்கிறேன்" என்று ஞானத் தாய் தகப்பன் பதில் சொல்லவே, குருவானவர் ஞானஸ்நானத் தீர்த்தத்தை ஓர் சிறு பாத்திரத்தில் எடுத்து, குழந்தையின் பெயரை உச்சரித்து "பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்துசாந்து வுடையவும் நாமத்தினாலே, நான் உன்னைக் கழுவுகிறேன்” என்று சொல்லும்போது, குழந்தையின்மேல் சிலுவை அடையாளமாக மும்முறை ஞானஸ்நானத் தீர்த்தத்தை வார்க்கிறார். இதுவே “ஞானஸ்நானத்திற்கு அத்தியாவசியமானது. தண்ணீர் வார்த்தவுடன், இப்போது அக்குழந்தை கிறீஸ்தவன் ஆகிவிட்டான் என்பதற்கு அடையாளமாக குருவானவர் அதன் தலை உச்சியில் பரிசுத்த தைலத்தால் சிலுவை வரைகிறார்.

பின்னர், ஓர் வெள்ளை வஸ்திரத்தை எடுத்துக் குழந்தையின் தலையில் விரித்து, “இந்த வெள்ளை ஆடையை ஏற்றுக்கொண்டு அதை நமதாண்ட வராகிய சேசு கிறிஸ்துநாதருடைய தீர்வை ஆசனத்திற்கு முன்பாக, மாசுபடாமல் கொண்டுபோய்ச் சேர்ப்பாயாக " என்கிறார். பூர்விக காலத்தில் ஞானஸ்நானம் பெற்றவர்கள் வெள்ளை வஸ்திரம் அணிந்து வந்ததிலிருந்து உண்டான வழக்கம் இது. மேலும், ஞானஸ்தானத்தினால் நமது ஆத்துமம் தூய்மையாக்கப்பட்டது; இந்தத் தூய்மையைக் கடைசிமட்டும் மாசுபடாமல் காப்பாற்ற வேண்டியது நமது கடமை என்று இச்சடங்கு நமக்கு நினைப் பூட்டுகிறது.

கடைசியாக, எரிகிற மெழுகுவர்த்தியை ஞானத்தாய் தகப்பன் கையில் கொடுப்பது, விசுவாச வெளிச்சத்திற்கும், சிநேக அக்கினிக்கும் அடையாளம். இதைக் கொடுக்கும் போது குருவானவர் சொல்லுவதாவது: "உனது ஞானஸ்தானத்தை மாசின்றிக் காப்பாற்று; சர்வேசுரனுடைய கற்பனை களை அனுசரி; இவ்வண்ணமாய் கலியாண விருந்திற்கு ஆண்டவர் வருகையில், மோட்ச சாலைகளிலுள்ள சகல அர்ச்சியசிஷ்டவர்களோடு நீயும் அவரைச் சந்தித்து, நித்திய ஜீவியத்தை அடைவாயாக." இங்கே கலியாண விருந்து என்பது, சன்மான நாள் என்று அர்த்தப்படும். சமாதானமாய் போ, ஆண்டவர் உன்னோடு இருப்பாராக "என்னும் மங்கள வசனம் ஞானஸ்நானச் சடங்குகளுக்கு முடிவுரை.

ஞானஸ்நானத்தால் மானிட ஆத்துமத்திற்குண்டாகும். அதிசயத்திற்குரிய பயன்களை மேற்கூரிய சடங்குகள் வெகு தெளிவாய் எடுத்துக்காட்டுகின்றன அல்லவா? மானிட ஆத்துமம் பசாசின் அடிமைத்தனத்தினின்று மீட்கப்பட்டு. ஜென்மப் பாவக்கறை நீங்கி, உலகம் பசாசு சரீரம் என்னும் முதலிய சத்துருக்களை எதிர்த்து நிற்பதற்குத் திடனை அடைகிற தென்று இவைகள் காட்டுகின்றன. அன்றியும், ஞானஸ்நானத்தால் ஆத்துமத்தில் ஓர் புதிய முத்திரை பதித்து, சர்வேசுரனுடைய இராச்சியத்திற்குச் சுதந்திரவாளியாக, கிறீஸ்துநாதர் மந்தையில் ஒரு புதிய ஆடு பிரவேசித்திருக்கிறது என்றும் இச்சடங்குகள் குறிப்பிடுகின்றன.



Please read more about the Sacramentals here . . .

அருட்கருவிகள் (Sacramentals) பற்றி மேலும் தெரிந்து கொள்ள  in Tamil




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக