Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 23 ஜனவரி, 2024

அர்ச்சியசிஷ்டவர் அர்ச். கிறகோரியார் திருநாள். ST. GRÉGOIRE LE GRAND.

மார்ச் மாதம் 12-ந் தேதி.
 வேதபாரகரும் பாப்புவுமான அர்ச். கிறகோரியார் திருநாள்.
ST. GRÉGOIRE LE GRAND.


மிகப் பெயர்பெற்ற அர்ச். கிறகோரியார் ரோமாபுரியில் உயர்ந்த கோத்திரமுள்ள தாய் தகப்பனிடத்திலே பிறந்தார். அவர் சிறுவயதிலேயே கல்வி சாஸ்திரங்களைப் படித்து புண்ணிய வழியிலே சுறுசுறுப்போடு நடந்ததால் புண்ணியத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கினார். 34-ம் வயதில் இராயனால்  ரோமாபுரிக்கு முக்கிய அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆயினும் அந்த மேலான பட்டத்தின் மகிமையைவிட பத்திக் கிருத்தியங்களை விரும்பி அனுசரிப்பார். அவருடைய தகப்பன் காலஞ் சென்ற பிறகு அவர் உலகத்தை வெறுத்துச் சந்நியாசியாய் சிசிலியென்னும் திவிலே ஆறு சந்நியாச மடமும் ரோமைப் பட்டணத்தில் தமது மாளிகையில் மற்றோர் பெரிய மடமுங் கட்டி அவைகளுக்கு வேண்டிய செலவுக்குத் தக்க காணியாட்சிகளை ஏற்படுத்தி வைத்தார். அவருடைய நடக்கை எப்போதும் புண்ணிய மாதிரிகையாய் இருந்தபடியினால் அவர் சந்நியாசியான பின்பு குருப்பட்டம் வாங்கிக் கொஞ்சத்திற்குள்ளே சிரேஷ்டர் பட்டத்திற்கு ஏற்படுத்தப்பட்டார். ஆங்கில மக்கள் இன்னும் அறியாமையில் அமிழ்ந்திருக்கிறதை அறிந்து, அர்ச் பாப்பாண்டவருடைய உத்தரவு பெற்று அவர்களுக்குச் சத்திய வேதத்தைப் பிரசங்கிக்கப் போவதற்குப் பயணப்பட்டார். ஆனால் அவர் போவது தங்களுக்கு பெரிய கஷ்டமென்று ரோமையர் மிகவும் முறையிட்டு அர்ச். பாப்பாண்டவரிடத்தில் விண்ணப்பஞ் செய்ததினால் இவர் அவரை அனுப்பாமல் நிறுத்திட்டார்.

பிறகு அவரிடத்தில் விளங்கின ஆச்சரியமான கல்வி சாஸ்திரமும் பத்தியும் முகாந்தரமாக அர்ச், பாப்பரசர் அவருக்குக் கர்தினாலென்னும் மகிமையுள்ள பட்டம் கொடுத்து அவரைக் கொன்ஸ்தாண்டி னோப்பொலி இராயனிடத்தில் தமது ஸ்தானாபதியாக அனுப்பினார், கிறகோரியார் அவ்விடத்திலிருந்த போது அந்தப் பட்டணத்தின் அதிமேற்றிராணியாராகிய எவுதிக்கியுஸ் என்பவர் சரீர உத்தானத்தை விசுவசிப்பதற்கு விரோதமாய் ஒரு புத்தகத்தை இயற்றினார் என்றறிந்து இராயனிடத்திலும் எவுசிக்கியுஸென்பவர் இடத்திலும் சொன்ன பலத்த நியாயங்களினாலே சரீர உத்தான மென்னும் சத்தியத்தை மெய்ப்பித்தார். ஆதலால் இராயன் முன் சொல்லப்பட்ட புத்தகத்தை கொளுத்திவிட்டதுமின்றி எவுதிக்கியு ஸென்கிறவர் மனது திரும்பிச் சாகிற சமயத்திலே அநேகம் பேர்கள் முன்பாகத் தம்முடைய கையின் தோலைப் பிடித்துக் காண்பித்து இந்த சரீரத்தோடே நடுத்தீர்க்கிற காலத்திலே நாம் உயிர்த்தெழுந்திருப் போமென்று உறுதியாய் விசுவசிக்கிறேன் என்றார்.

 அர்ச். கிறகோரியார் தமது ஸ்தானாபதி அலுவல்களை அனுகூலமாய்த் தீர்த்து ரோமாபுரியிலே வந்த அக்காலத்திலிருந்த பெலாஜெ அர்ச் பாப்பாண்டவர் மரணத்தை அடைந்த பிறகு அவருக்குப் பதிலாய் அந்த மேலான பட்டத்திற்கு ஒருமனமாய் நியமிக்கப்பட்டார். அந்தச் சேதியை அர்ச். கிறகோரியார் அறிந்து அந்தப் பெரிய மகிமையுள்ள பட்டந் தமக்கு வராதபடிக்குப் பற்பல முயற்சி செய்தார். அவைகள் வியர்த்தமாய்ப் போகிறதைக் கண்டு தமது வழக்கமான உடைகளை விட்டு வேஷம் மாறிக் காட்டிலே போய் ஒரு குகைக்குள்ளே ஒளிந்திருந்தார். ஆனால் அவரிருந்த ஸ்தலத்திற்கு மேலே பிரகாசமுள்ள ஒரு ஒளித் தூண் புதுமையாகத் தோன்றிற்று. அவரைத் தேடுகிறவர்கள் அதை கண்டு அங்கே போய் அவரைக் கண்டவுடனே வெகு சந்தோஷப் பட்டு அவரை மிக மகிமையோடு ரோமாபுரிக்குக் கூட்டிக்கொண்டுபோய் அர்ச். பாப்புவின் பட்டத்திலே வைத்தார்கள்.

 அந்தப் பட்டத்தில் அவர் இருந்த போது மிக மகத்தான பல காரியங்களை நிறைவேற்றினார். அவர் தினந்தோறும் பரதேசிகளுக்குச் சாப்பாடு கொடுத்துவந்த தருமஞ் சர்வேசுரனுக்கு மிகவும் பிரியப்பட்டதினால் சம்மனசுகளுஞ் சம்மனசுகளுடைய ஆண்டவராகிய சேசுநாதரும் பரதேசிகள் ரூபமாக வந்து அந்தப் பத்தியிலே சாப்பிட்டார்கள். அநேகம் பிச்சைக்காரருக்கும் உதவியில்லாத மற்ற அநேகம் பேர்களுக்கும் அவர் அன்னவஸ்திரங் கொடுப்பார்.

பற்பல இராச்சியத்து மக்களையும், பதிதர்களையும், பிரிவினைக்காரரையுஞ் சத்தியவேத நெறியில் திருப்பினார். சில விடங்களிலிருந்து மூர்க்கமான பதிதரைத் துரத்தினார். இவர் இங்கிலாந்துக்கு அநேக குருக்களை அனுப்பி, அவர்கள் வழியாக அதிலே சர்வேசுரனுடைய வேதத்தைப் போதிப்பித்தார். அவர் வியாதியினாலே மெலிந்து எப்போதுஞ் சரீரத்திலே பலவீனமா யிருந்தாலும் அவர் குறையின்றி அர்ச். பாப்புவின் பட்டத்திற்கு வேண்டிய பிரயாசையெல்லாம் பட்டுத் திருச்சபையின் ஆளுகைக்குரிய பற்பல பெரிதான காரியங்களை நிறைவேற்றினதுந் தவிர, உத்தமமான அநேக ஞான புத்தகங்களையும் இயற்றினார். அந்தப் புஸ்தகங்களை அவர் இயற்றுகிறபோது இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரன் வெள்ளை மாடப் புறா ரூபமாக அவர் தலைமேலே இறங்கினதை ஒரு மகாத்துமாவான இராயப்பர் என்கிறவர் அநேக முறை கண்டார். அவர் காலத்திலே ரோமாபுரிக்கு வந்த கொள்ளை நோய் முகாந்தரமாக வெகு பேர் இறந்ததைப் பாப்புவாகிய அர்ச். கிறகோரியார் கண்டு அந்தப் பொல்லாப்பு நீங்குமாறு அவர் தேவ மாதாவின் அடைக்கலமாய்ப் போய் அந்த ஆண்டவளை மிகச் சுறுசுறுப்போடு வேண்டிக்கொண்ட பிறகு அர்ச். லூக்கா சுவிசேஷகர் தமது கையால் வரைந்த தேவமாதாவின் படத்தைப் பகிரங்கமாகப் பட்டணத்திலே கொண்டுபோகச் செய்தார். அதை அப்படிக் கொண்டுபோகிறபோது அந்தத் திருப்படம் போகிற அந்தந்தத் தெரு வீதியிலே புதுமையாக உடனே அந்த வியாதி நீங்கிப்போயிற்று . இதல்லாமல் அத்திருப்படம் பவனி வருகிறபோது ஓர் கோபு சத்தின்மேல் வானத்திலே ஒரு சம்மனசு இரத்தந் துவைக்கப்பட்ட கத்தியைச் சுத்தம்பண்ணி உலையில் போடுகிறதை அர்ச். கிறகோரியார் கண்டு பாவத்தால் வந்த கொள்ளை  நோயாகிற ஆக்கினை தேவமாதாவின் உதவியினாலே முடிந்ததற்கு இது அடையாளமென்று கண்டுபிடித்து மிகுந்த சந்தோஷப்பட்டார்.

 மேலுந் தேவமாதாவின் திருப் படத்தைச் சுற்றி சம்மனசுகள் பாடின இன்பமான பாடலைக் கேட்டு வெகு ஆனந்தத்தை அடைந்தார். அவர் தேவமாதாவுடைய வியாகுலங்களின் பேரிலே வைத்த பத்தி முகாந்தரமாக அந்த வியாகுலங்களின் தோத்திரமாக அநேக மந்திரங்களை இயற்றினதுமன்றி அவைகளை அவர் அடிக்கடி அழுகையோடே சொல்லுவார். அத்தகைய ஆண்டவள் உதவியினாலே அர்ச். கிறகோரியார் பண்ணின ஆச்சரியமான நன்மைகளும் புதுமைகளும் புண்ணியங்களும் முகாந்தரமாகப் பெரிய கிறகோரியார் என்னும் பெயரை அடைந்தார்.

ஆயினும் மிகுந்த தாழ்ச்சியினாலே அவர் தம்மைச் சர்வேசுரனுடைய ஊழியர்களின் ஊழியனென்று சொல்லுவார். அவர் அரச். பாப்பு பட்டத்திலே பதிமூன்று வருஷமும் ஆறு மாதமும் இருந்தபிறகு கர்த்தர் பிறந்த அறு நூற்று நான்காம் வருடத்திலே இந்தத் தேதியிலே பெரிய அர்ச்சியசிஷ்டவராய் மரணத்தை அடைந்தார்.

கிறீஸ்துவர்களே! அர்ச். கிறகோரியார் தேவமாதாவின் பேரிலே மிகப்பத்தி வைத்ததினாலே இப்போது சொன்ன பிரகாரத்திற்கு அவர் அநேக நன்மைகளை கைக்கொண்டார். அப்படியே நீங்களும் அந்த ஆண்டவள் பேரிலே மிகுந்த பத்தி நம்பிக்கை வைத்து உங்கள் அவசரத்திற்கு தக்கபடி மிக விசுவாச நம்பிக்கையோடே அவளை மன்றாடவேண்டும். அர்ச். கிறகோரியாரைப்போல தேவமாதாவின் வியாகுலங்களைக் குறித்து நீங்கள் புண்ணியங்களைப் பண்ணினால் அவர் அதினால் அநேக நன்மைகளை அடைந்ததுபோல் நீங்களும் நன்மைகளை அடைவீர்கள் இந்த அர்ச்சியசிஷ்டவருடைய தாழ்ச்சியைப் பாருங்கள். அர்ச். பாப்பு பட்டத்திற்கு வெகு மகிமை உண்டாயிருந்தாலும் அந்த மகிமை தமக்கு வராத படிக்கு மிகப் பெயர்பெற்ற அர்ச். கிறகோரியார் வெகு பிரயாசைப்பட்டார்.

 உலக மகிமையின் பேரில் ஆசைப்படுகிறவர்கள் இதைக் கேட்டு வெட்கப்பட வேண்டியிருக்கிறது. அந்தப் புண்ணியத்திலுந் தருமத்திலும் பிரியப்படுகிற சேசுநாதர் தம்மைக் குறித்து அர்ச். கிறகோரியார் பரதேசிகளுக்குப் போசனங் கொடுத்த புண்ணியந் தமக்கெவ்வளவோ பிரியமாயிருக்கிறதென காண்பிக்க தாமும் சம்மனசுகளும் பரதேசி ரூபமாகப் பந்தியில் வந்திருக்கச் சித்தமானார். அத்தகைய புண்ணியத்தை நீங்களும் நிறைவேற்றினால் அதின் வழியாகக் கர்த்தருக்கு சந்தோஷமும் உங்களுக்கு வெகு பலனும் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக