Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 3 பிப்ரவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 36


சகோ.ரெஜினால்டு, தமது சபை அதிபர் தமக்கு அளித்த மடத்துத் தலைவர் பதவியைக் குறித்து, துவக்கத்தில் கலங்கினார். பரலோக உதவி கிடைக்கும்படியாக தேவமாதாவிடம் மன்றாடினார். ஆனால், உடனடியாக யாதொரு பரலோக உதவியும் கிடைக்காதது போல தோன்றியது. அப்போது, ரெஜினால்டு, தான் ஒரு துறவறசபைத் துறவி என்றும், சபையில் நுழையும் போது கொடுத்த பரிசுத்த கீழ்ப்படிதல் என்னும் வார்த்தைப்பாட்டிற்கேற்ப, அதிபர் சுவாமியார் தமக்களித்த அலுவலை, சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக, முழு உற்சாகத்துடனும் பிரமாணிக்கத்துடனும், நிறைவேற்றுவதில் ஈடுபடலானார்.

“அர்ச்.மரிய மஸ்கரெல்லா தேவாலயத்திற்கு கொஞ்சம் பேர் மட்டுமே வந்தாலும் போதும். அந்த சிலரில் ஒருவரையாவது, தமது முன்மாதிரிகையுடன் கூடிய, பரிசுத்த துறவற ஜீவியத்தினாலும், உன்னதமான ஞானதியான பிரசங்கங்களாலும், உத்தம அர்ச்சிஷ்டதனத்தின் பரிசுத்த அந்தஸ்திற்கு உயர்த்த முடிந்தால், அதுவே தமக்குக் கொடுக்கப்பட்ட அலுவலுக்கான வெற்றி. ஓ மகா சிநேகமான தேவமாதாவே! உங்களைப் பற்றி மக்களுக்கு பிரசங்கிப்பேன். அதில் முக்கியமாக, உங்களை நோக்கி வாழ்த்தி மன்றாடும் அந்த ஜெபத்தை, எங்களுடைய அதிபர் சுவாமியாரின் உதடுகளில் எப்பொழுதும் அடிக்கடி உச்சரிக்கப்படும், அருள்நிறை மந்திரத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பேன்” என்று ரெஜினால்டு எண்ணி தம்மையே உற்சாகப்படுத்திக் கொண்டார். பரலோகத்தின் தூண்டுதலால் எடுக்கப்பட்ட, ரெஜினால்டுவின் இந்த ஞானமிக்க திர்மானம், மிகுந்த ஞானநன்மைகளை விளைவித்தது. தேவமாதாவின் மகிமைகளைப் பற்றி சகோ.ரெஜினால்டு செய்த ஞானதியான பிரசங்கங்கள், எளிதாகவும், சுருக்கமாகவும் இருந்தபோதிலும், கோவிலுக்கு சிறு கூட்டமாக வந்த மக்களின் இருதயங்களைப் பெரிதும் கவர்ந்தன. அவர்கள் தங்களுடைய ஜிவியத்தை பரிசுத்தமும் உத்தமுமான கத்தோலிக்க ஜிவியமாக மாற்றினர். சகோ.ரெஜினால்டுவின் ஞானதியான பிரசங்கங்களைக் கேட்பதற்காக வரும் மக்கள் கூட்டம் குறுகிய காலத்திற்குள்ளாகவே, நம்பமுடியாத அளவுக்கு அதிகரித்தது. “வெகு காலத்திற்குப்பிறகு, இப்பொழுது பொலோஞாவில் மிகச்சிறந்த பிரசங்கியார், நமக்குக் கிடைத்திருக்கிறார். அவர் தான் சகோ.ரெஜினால்டு. அவருடைய பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நேரம் போவதே தெரியவில்லை. அர்ச்.சின்னப்பரே, அல்லது அர்ச்.எலியாஸ் திர்க்கதரிசியே உலகிற்கு திரும்ப வந்துவிட்டார், என்று எண்ணத் தோன்றுகிறது”,  “அவர் உண்மையாகவே தேவமாதாவை நேரில் பார்த்தவர்போல பிரசங்கம் செய்கிறார்”, “ஆம். சில மாதங்களுக்கு முன்பாகத்தான் அவர் ரோமாபுரியில் தங்கியிருந்தபோது, தேவமாதாவே நேரில் வந்து அவரை திராதக் காய்ச்சலிலிருந்து புதுமையாகக் குணப்படுத்தினார்கள்”, “அவர் இப்புதுமையைப் பற்றிக் கூறும்போது, அழுதுவிடுகிறார்” என்றெல்லாம்மக்கள் பேசினர். மோட்ச இராக்கினி, ரெஜினால்டுவிற்கு அளித்த வெண்கம்பளி உத்தரியத்தைப் பற்றியும், புதுமையாக அவரை குணப்படுத்தியதை பற்றியும் செய்தி அனேக இடங்களுக்குப் பரவியது.

அதனால் அர்ச்.சாமிநாதருடைய துறவற சபையில் சேர்வதற்கான ஆர்வம், இளைஞர்களிடையே மாபெரும் அளவிற்கு அதிகரித்தது. அர்ச்.சாமிநாதர் சகோ.ரெஜினால்டுவைப் பற்றிக் கண்ட கனவு நனவாகிறதுபோல, சில பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் விநோதப்பிரியத்தினால் உந்தப்பட்டவர்களாக, அர்ச்.மரிய மஸ்கரெல்லா தேவாலயத்திற்கு வந்தனர். ஆர்லியன்ஸ் நகரத்தைச் சேர்ந்தவரும், பாரிஸ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான, ரெஜினால்டுவின் மிகுந்த கல்வி ஞானத்தைப் பற்றி தங்கள் வகுப்பறைகளில் அதிகம் கேள்விப்பட்ட இம்மாணவர்கள், இப்பொழுது இம்மடத்தில் கறுப்பு வௌளை துறவற உடையுடன் காணப்படும் சகோ.ரெஜினால்டுவும் அப்பேராசிரியரும் ஒருவர்தானா, என்றெண்ணி வியந்தனர்.

புதன், 2 பிப்ரவரி, 2022

catholic Stories - கத்தோலிக்க சிறுகதைகள் - 9

 மகாப் பரிசுத்த தேவநற்கருணைப்புதுமை அர்ச். பிலிப் நேரியார் திவ்ய பலிபூசை செய்ததால் நான்கு யூதர்கள் மனந்திரும்பின புதுமை


16வது நூற்றாண்டில், ரோமாபுரியில் ஜீவித்த அநேக அர்ச்சிஷ்டவர்களுள் அர்ச்.பிலிப் நேரியாரும் ஒருவர். இவர் தமது ஆன்ம இரட்சணிய அலுவலினாலும், ஞானமிக்க பிரசங்கங்களினாலும், எண்ணற்ற பாவிகளை மனந்திருப்பினார். அப்பொழுது அந்நகரத்தில், நான்கு யூத சகோதரர்கள் வசித்து வந்தனர். அவர்கள் கன்னெஞ்சர்கள். குருக்கள் சொன்ன நற்புத்திமதிகளை எத்தனை முறை கேட்டாலும், மனந் திரும்பாமல் இருந்தனர். இந்த நான்கு யூதர்களையும், சிலர், அர்ச். பிலிப்பு நேரியாரிடம் கூட்டிச் சென்றனர். அர்ச். பிலிப் நேரியார், அவர்களுக்கு அதிக சிநேகத்தைக் காண்பித்து, அவர்களிடம், "மோட்சத்துக்குப் போகிற மெய்யான வழி எது என்று நீங்கள் அறியும்படிக்கு, உங்களுடைய பிதாக்களாகிய அபிரகாம், ஈசாக், யாக்கோபு என்பவர்களைப் படைத்த சர்வேசுரனைப் பார்த்து வேண்டிக் கொள்ளுங்கள்'' என்றார். அதற்கு அவர்கள் சம்மதித்தனர். அர்ச். பிலிப், "நாளைக்கு நாமும் திவ்ய பலிபூசையில் வேண்டிக் கொள்வோம்" என்றார். 

பின்பு அவர்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள். கூட வந்தவர்கள், "அர்ச்சிஷ்டவர், அவர்களுக்கு வேறு புத்தி எதுவும் சொல்லவில்லை", என்று ஆச்சரியப்பட்டார்கள். இதை அவர் கண்டு, அவர்களைப் பார்த்து, "நாளைக்கு நாம் திவ்ய பலிபூசை நிறைவேற்றுகிறபோது, அவர்கள் மனந்திரும்புவார்கள்'' என்று கூறினார். அந்த நான்கு யூதர்களும் தங்களுடைய வீட்டிற்குப் போனபிறகு, மற்ற யூதர்கள் அவர்களிடத்தில் வந்து, அர்ச். பிலிப் நேரியார் அவர்களுக்கு என்ன புத்தி சொன்னார் என்று கேட்க, "அவர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அவர் எத்தனைப் புத்தி சொன்னாலும், நாங்கள் கேட்போமா , நம் வேதத்தை விடுவோமா?'' என்று அவரைப் பரிகாசம் பண்ணும் வகையில் பேசினார்கள். ஆனால், மறுநாள் அர்ச்சிஷ்டவர், திவ்ய பலிபூசை செய்கையில், அந்த நான்கு யூதர்களும் புதுமையாக மனந்திரும்பினர். மற்ற யூதர் முன்பாக, தாங்கள் கிறிஸ்துவர்களாக விரும்புவதாகத் தெரிவித்தனர். அந்த நான்கு யூதர்களும் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன், ஞான உபதேசம் கேட்கிறபோது, அவர்களில் ஒருவனுக்குக் கடின காய்ச்சல் கண்டு படுக்கையில் கிடந்தான். அர்ச். பிலிப், இதை அறிந்து அந்தக் காய்ச்சல்காரனிடத்தில் போய், "நீ கிறிஸ்துவனான தினால் உனக்கு சாவு வந்தது" என்பார்கள். நாளைக்கு நான் திவ்ய பலிபூசை நிறைவேற்றுகையில் உனக்காக வேண்டிக்கொள்ள ஆள் அனுப்பு" என்றார். அன்று இரவு அவனுடைய உடல் நிலை மிக மோசமாயிருந்தது. மருத்துவர், இவன் பிழைக்கமாட்டான் என்று தெரிவித்து விட்டார். மறுநாள் அவன் பேச்சில்லாமல் அவஸ்தையாயிருந்த போது, அருகிலிருந்தவன் உரத்த சத்தமாய், "பிலிப்பு நேரியார் நேற்று சொன்னபடி, உனக்காக வேண்டிக்கொள்ள ஆள் ஆனப்ப வேண்டுமோ?" என்று கேட்டான். அவன் தலையசைத்து, ஆமென்று அடையாளம் காண்பித்தான். 

அப்படியே பிலிப்பு நேரியாரிடம், ஆள் போய், வியாதிக்காரன் தனக்காகப் பூசையில் வேண்டிக்கொள்ள மன்றாடினாரென்று சொன்னதும் தவிர, அவனும் திவ்ய பலிபூசையைப் பக்தியுடன் கண்டான். அப்படியே அர்ச். பிலிப்பு பூசையில் வேண்டிக் கொண்டார். திவ்ய பலிபூசை முடிந்த பிறகு, அவன் திரும்பிச் சென்றான். அவஸ்தைக்காரன் வீட்டிற்கு சென்றதும், அங்கு நோயாளி நலமுடனிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான் . " எப்படி உனக்கு திடீரென்று சுகம் கிடைத்தது? எந்த நேரத்தில் உனக்கு சுகம் கிடைத்தது?" என்று நோயாளியிடம் கேட்டதற்கு, அர்ச். பிலிப் நேரியார் திவ்ய பலிபூசை செய்கிற நேரத்தில் அவனுக்குக் குணமானது என்று அறிந்து கொண்டான்.

கிறிஸ்துவர்களே! ஆத்துமத்தின் வியாதியாகிய பாவமும், சரீரத்தின் வியாதியும் திவ்ய பலிபூசைப்பலத்தினால் நீங்கிப்போகும். உங்கள் உறவினர் அல்லது மற்றவர்களுக்குள்ளே பாவியாயிருக்கிறவர்கள் மனந்திரும்ப , நீங்கள் பக்தியோடு காண்கிற பூசையில் அவர்களுக்காக மகா பக்தி சுறுசுறுப்போடு வேண்டிக்கொண்டு, அந்தப் பூசையைப் பிதாவாகியசர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுங்கள். தேவ பூசையின் பலத்தினால் அப்பேர்பட்ட பாவிகள் மனந்திரும்புவார்கள். கல்வாரி மலைமேல் சிலுவை மரத்தில் நிறைவேற்றப்பட்ட திவ்ய பலிபூசையில், அருகில் இருந்த நல்ல கள்ளன் மனந்திரும்பினான். இரத்தம் சிந்தப்பட்ட அந்தப் பூசைக்குள்ள பலன், இரத்தம் சிந்தாத இந்தப் பூசைக்கும் இருக்கிறதினால், அதனுடைய பலத்தினால் அப்போது பாவி மனந்திரும்பினதுபோல், இந்தப் பூசை பலத்தினால் இப்போதும் பாவிகள் மனந்திரும்புவர். உங்கள் உறவினருள் யாதொரு வியாதிக்காரன் உண்டானால், நீங்கள் கோவிலுக்குப் போய் பக்தியோடு பூசைக்கண்டு, ஆண்டவருக்கு சித்திமிருந்தால் இந்த வியாதிக்காரனுக்குக் குணமுண்டாகும்படி, நீங்கள் கண்ட பூசையை ஒப்புக்கொடுத்தால் அந்தப் பூசையின் பலத்தினால் வியாதிக்காரருக்கு சுகம் கிடைக்கும்.

தபசுகாலத்தின் நான்காவது ஞாயிறுக்கான தியானம்- St. Alphonsus Liguori

தபசுகாலத்தின் நான்காவது ஞாயிறுக்கான தியானம்



பாவிகள் மேல் நமது நேச ஆண்டவர் கொண்டிருக்கும் கனிவுமிக்க கருணையின் பேரில் தியானம்: அர்ச். அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார்
சேசுகிறிஸ்துநாதர் சுவாமியின் திவ்யபாடுகளுக்கான காலம் சமீபத்தில் இருந்தபோது, ஒருநாள் சமாரியாவிற்கு சென்றார். அங்கு சமாரியா;கள் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதைக் கண்டு வெகுண்டெழுந்தவர்களாக  “அவருடைய சீஷர்களாகிய இயாகப்பரும் அருளப்பரும், “ஆண்டவரே, உமக்கு சித்தமானால் வானத்தினின்று அக்கினி இறங்கி இவர்களைச் சுட்டெரிக்கும்படி சொல்கிறோம் என்றார்கள்” (லூக் 9:54) ஆனால், அதற்கு, தம்மை நிந்திப்பவர்களிடமும் மதுர தயாளம் நிறைந்தவராக விளங்கும், திவ்ய சேசுநாதர்சுவாமி, “உங்களுக்கு யாருடைய புத்தியுண்டென்று உங்களுக்குத் தெரியவில்லை. மனுமகன் ஆத்துமங்களைச் சேதமாக்குவதற்கல்ல, அவைகளை இரட்சிக்கவே வந்தார்” என்றார் (லூக்.
9:55,56). 

மேலும் ஆண்டவர், தமது சீடர்களிடம், “நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவனாயிருக்கிறேனென்று என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள்” (மத் 11:29) என்று கூறியதன்மூலம், திமை செய்பவர்களை பழிவாங்கி தண்டிப்பது, சர்வேசுரனை ஏற்றுக் கொள்ளாதவர்களை அழிப்பது என்ற மனப்பான்மை நம் நேச ஆண்டவருக்கு ஏற்புடையதல்ல என்றும், பொறுமையும் தயாளமும், சாந்தமும் உடைய நமது ஆண்டவர் மனிதரை அழிப்பதற்கல்ல, அவர்களுடைய பாவங்களை மன்னித்து, அவர்களை இரட்சிப்பதற்கே வந்தார் என்றும், இங்கு நமக்கு உணர்த்துகின்றார். மேலும் பின்வரும் உவமையில் நமது திவ்ய இரட்சகர், எத்தகைய கனிவுமிக்க சிநேக இருதயத்துடன் பாவிகளை நேசிக்கிறார் என்று எவ்வளவு அழகாக விவரிக்கிறார்! “உங்களில் நுரறு ஆடுகளை உடைய எவனாயினும் அவைகளில் ஒன்று காணாமற் போனால், மற்ற தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்தில் விட்டுவிட்டு, காணாமற்போன ஆட்டைக் காணுந்தனையும் தேடித்திரிவானோ? அதைக் கண்டுபிடித்தபின்பு, சந்தோஷமாய் அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக் கொண்டு, வீட்டுக்கு வந்து, தன் சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடித்தேன், ஆகையால் என்னோடு கூடக் களிகூறுங்களென்று சொல்லுவானல்லோ?” (லூக்.15:4-6). 

ஆனால் ஓ எங்கள் நேச ஆண்டவரே! இங்கு திவ்ய மேய்ப்பராகிய நிரல்ல, அகமகிழவேண்டியது! தனது திவ்ய மேய்ப்பரும் சர்வேசுரனுமாகிய உம்மைக் கண்டடைந்த காணாமல்போன ஆடுதான் அதிக சந்தோஷமடைய வேண்டியது! ஆம். உண்மையில், தனது மேய்ப்பரைக் கண்டடைந்த ஆடு அகமகிழ்வடைந்தது என்று ஆண்டவரும் இதையே, “காணாமல் போன ஆட்டைக் கண்டடைந்ததினிமித்தம் மாபெரும் சந்தோஷமுண்டாயிற்று”
என்று குறிப்பிடுகின்றார். இவ்வழகிய உவமையை“அவ்விதமே தவஞ்செய்ய அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நிதிமான்களைப் பற்றி உண்டாகிற சந்தோஷத்தைவிட, தவஞ்செய்கிற ஒரு பாவியினிமித்தம் மோட்சத்திலே அதிக சந்தோஷமுண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்.15:7) என்று நம் ஆண்டவர் முடிக்கின்றார். பாவி; தன் பாவங்களுக்காக மனஸ்தாபப்
படுவானேயாகில், அவனை தமது கனிந்த சிநேகத்தினால் அரவணைத்து, தமது திவ்ய தோள்கள்மேல் சுமந்து செல்வதற்கு சித்தமாயிருக்கும் நமது நேச ஆண்டவரின் அளவில்லாத சிநேகத்தையும் இரக்கத்தையும் கண்டுபிடிக்கும் போது, எந்த பாவிதான் உடனே ஓடோடிபோய் தனது திவ்ய இரட்சகரின் திவ்ய திருப்பாதங்களில் விழுந்து கிடப்பதற்கு விரும்பாத கன்னெஞ்சனாயிருப்பான்? 

நம் நேச ஆண்டவர் மனஸ்தாபப்படும் பாவிகள் மேல் மிகுந்த கனிவுமிக்க தயையுடன் இருக்கிறார் என்பதை ஊதாரிப்பிள்ளையின் உவமையில் அறிவிக்கிறார் (லூக்.15:12). இவ்வுவமையில் நல்ல தகப்பனார் தன் ஊதாரிப் பிள்ளையின் நிர்ப்பந்தத்தின் பேரில், அவனுக்குச் சேர வேண்டிய சொத்தின் பாகத்தை, மிகுந்த துயரத்துடன் அவனுடைய அழிவைக்குறித்து அழுது கொண்டே, அவனிடம் கொடுக்கிறார். அவன் தன்னுடைய சொத்தையெல்லாம் திய வழியில் விரயம் செய்கிறான். பன்றிகளுக்குப் போடும் கோதுகள்கூட
அவனுக்குக் கிடைக்காத நிலைக்கு வறியவனான அவன், சர்வேசுரனைவிட்டுப் பிரிந்தவனும், தேவவரப்ரசாதத்தையும் பேறுபலன்களையும் இழந்து விட்டவனும், நிர்ப்பாக்கியமான அந்தஸ்தில் பசாசின் அடிமையாக உபாதனை நிறைந்தவனுமான, ஒரு பாவியின் உருவகமாகவே ஊதாரிப்பிள்ளை நமக்குக்
காண்பிக்கப்படுகிறான். திவ்ய சேசுநாதர்சுவாமியின் உருவகமாக விளங்கும் அந்த தகப்பனார், மனந்திரும்பிய ஊதாரிப்பிள்ளையைக் கண்டதும், அவனுடைய அக்கிரமத்திற்காக அவனைத் தண்டித்துத் துரத்தாமல், இரக்கத்தால் மனம் உருகி, அவனை அரவணைத்து முத்தமிடுகிறார். 



அர்ச்.ஜெரோம் மற்றும் அர்ச்.அகுஸ்தினார், அவனுக்கு உடுத்தப்படுகிற முதல்தர ஆடை என்பது, மனந்திரும்பும் பாவிக்கு பாவமன்னிப்பின் மூலம், கிடைக்கப்பெறும் தேவவரப்ரசாதங்களையும் பரலோகக் கொடைகளையும்
குறிக்கிறது என்று குறிப்பிடுகின்றனர்.அவனுக்குஅணிவிக்கப்படும் மோதிரமானது, தேவஇஷ்டப்பிரசாத அந்தஸ்திற்குள் நுழைந்த ஆத்துமம் கிறிஸ்துநாதரின் பத்தினியாக மறுபடியும் மாறுகிறது என்பதற்கான
அடையாளமாக இருக்கிறது. “கொழுத்த கன்றை அடித்துக் கொண்டாடுவோம்” என்ற வாக்கியம், பரலோகவாசிகளின் ஜீவிய அப்பமாகிய, மகா பரிசுத்த தேவ நற்கருணையைக் குறிக்கிறது. அதாவது, மனந்திரும்பிய பாவியின் ஆத்துமத்திற்கு தேவையான திவ்யபோஜனத்திற்காக திவ்யபலிபூசை நேரத்தில், நமது நேச ஆண்டவர், நமது தேவாலயப் பீடங்களில் தம்மையே பலியாக ஒப்புக்கொடுப்பதையேக் குறிக்கிறது. 

எனவே நாம் அந்த தேவவிருந்தை உண்டு அகமகிழ்வோமாக! ஆனாலும், ஓ ஆண்டவரே! எங்கள் தேவபிதாவே! ஒரு நன்றிகெட்ட மகன் திரும்ப வந்ததற்காக ஏன் இவ்வளவாக நாம் மகிழ வேண்டும்? “ஏனென்றால், இறந்து போன, இந்த மகன், மறுபடியும் உயிருடன் வந்திருக்கிறான். இவன் காணாமல் போனான். இப்போது, நான் அவனைக் கண்டடைந்தேன்” என்று நமது பரலோக தந்தை, நமக்கு பதிலளிக்கிறார். 

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 8 முத். எவரார்டு லாங்கரஸ் EVERARD OF LANGRES(d. 1221)

 முத். எவரார்டு லாங்கரஸ் EVERARD OF LANGRES(d. 1221)

நமது நல்ல தந்தை அர்ச். சாமிநாதர் இறந்த அதே நேரத்தில், அவருடைய உத்தம சீடரான எவரார்டு, பிரான்சு நாட்டில் இறந்தார். இவர் தமது சபையின் அதிபரான சாமிநாதரின் அரும்பெரும் அப்போஸ்தல அலுவல்களைப்பற்றி கேள்விப்பட்டு, அவரை சந்திக்கும்படி ஆவலுடன் சென்றார். ஆயினும், இறப்பானது இருவரையும் இப்பூமியில் சந்திக்காமல் பிரித்தது. சங்.எவரார்டு சுவாமியார், லாங்கரஸ் நகர பேராலயத்தின் மதிப்பிற்குரிய மூத்த துணை அதிபராக இருந்தார். அந்நகரத்தின் பெரும் செல்வாக்கையும் புகழையும் இவர் பெற்றிருந்தார். ஒரு சமயம் அந்நகருக்கு அர்ச். சாமிநாதருடைய சபைத் துறவியான சகோ.சாக்சனிஜோர்டன் வந்து நிகழ்த்திய ஞானதியான பிரசங்கத்தைக் கேட்டார். பரலோகத்திலிருந்து வந்த சம்மனசு போல , தேவசிநேக அக்கினியால் பற்றியெரிந்த சகோ. ஜோர்டனின் ஆழ்ந்த ஆன்ம இரட்சணிய ஆவலைக் கண்ட சங். எவரார்டு, அர்ச். சாமிநாதருடைய சபையின் மேல் ஈர்க்கப்பட்டார். எவரார்டு பல திறமைகளுடையவராக இருந்தார். பெரிய மருத்துவமனையைக் கட்டியிருந்தார்.

லாங்க்ரஸ் நகரத்தின் பேராலயத்தை நிர்வகித்துவந்தார். அவரை லோசான் என்ற நகரின்மேற்றிராணியாராக்க, பாப்பரசர் விரும்பியபோது, தகுந்த காரணங்களைக்கூறி, சங். எவரார்டு, அப்பதவியை ஏற்றுக் கொள்ள வில்லை . 1220ம் ஆண்டு, பொலோஞாவிலிருந்து, சகோ.ஜோர்டன் பாரீஸ் வந்தபோது, எவரார்டு தமது பதவி , உடைமை யாவற்றையும் துறந்து அர்ச். சாமிநாதருடைய போதகத் துறவிகளுடைய சபையில் சேர்வதற்கு தயாராக இருப்பதைப் பார்த்தார். அச்சமயம், லொம்பார்டியைச் சேர்ந்த பிராந்தியத்திற்கு தலைமை அதிபர் பதவியை சகோ. ஜோர்டன்கிடைக்கப் பெற்றிருந்தார்.சகோ. ஜோர்டன், எவரார்டு சுவாமியாருக்கு சாமிநாதருடைய சபைத் துறவிகளுடைய உடையை அணிவித்து, பாரீஸிலுள்ள அர்ச். ஜாக்வஸ் மடத்தில் சேர்த்துக் கொண்டார். சபையில் சேர்ந்தவுடன், சங். எவரார்டு சுவாமியார், தமது சபை அதிபரான அர்ச்.சாமிநாதரைக் காண பெரிதும் ஆசித்தார். சாமிநாதருடைய அர்ச்சிஷ்டதனத்தைப் பற்றி சகோ. ஜோர்டன் அளவில்லா உற்சாகத்துடன் விவரித்திருந்தார். லாங்கரஸ் கதீட்ரல் பேராலயத்தின் பொறுப்புள்ள பதவியில் இருந்ததால், சங். எவரார்டு சுவாமியாார், பிரான்சு நாட்டை விட்டு வேறு எந்த நாட்டிற்கும் செல்லமுடியாத சூழ்நிலையில், இத்தாலியில் இருந்த தமது சபை அதிபர் சுவாமியாரைக் காண பெரிதும் ஆவல் கொண்டார். அச்சமயம், அர்ச்.சாமிநாதரோ பிரான்சுக்கு உடனே வருவதற்கானதிட்டம் ஏதும் இல்லை. ஆனால், சகோ. ஜோர்டன் லொம்பார்டிக்கு, தமது புதிய பொறுப்பை ஏற்பதற்காக செல்ல வேண்டியிருந்தது. அங்கு நிச்சயம் அர்ச். சாமிநாதர் இருப்பார் என்பதை அறிந்த எவரார்டு சுவாமியாரும் ஜோர்டனுடன் சென்றார். பர்கண்டியிலிருந்து, இத்தாலியை நோக்கிச் சென்ற பயணத்தின்போது, இந்த வயோதிக குருவானவருடைய அனுபவமிக்க ஞானமும் உற்சாகமூட்டும் அறிவும் சகோ. ஜோர்டனுக்கு மிகவும் நன்மை பயத்தன. துறவற ஜீவியத்திலுள்ள நடைமுறைப்படுத்த வேண்டிய அநேக நன்மையான காரியங்களைப் பற்றி எவரார்டு சுவாமியாரிடம் சகோ.ஜோர்டன் கற்றறிந்தார்.

சென்ற இடங்களிலெல்லாம் இருவரும் ஞானபிரசங்கங்களை நிகழ்த்தினர். அந்த தியானப் பிரசங்கங்களின் வெற்றிக்குக் காரணம் சங். எவரார்டு சுவாமியார் தான் என்று சகோ. ஜோர்டன் குறிப்பிடுகிறார். ”பிரான்சு மற்றும் பர்கண்டி நாடுகளைக் கடந்து சென்றபோது, என்னுடன் வந்த சங்.எவரார்டு சுவாமியாரைக் கண்ட யாவரும், அவரை மிகவும் சங்கை செய்து புகழ்ந்து பாராட்டினர். அவர், கிறிஸ்துவுக்காக அட்ட தரித்திரத்துடனும், யாவற்றையும் துறந்தவராகவும் பிரசங்கங்களைப் போதிக்கச் சென்றார்” என்று ஜோர்டன் குறித்துவைத்துள்ளார். நேற்றுவரை திருச்சபையின் அதிகாரியும் செல்வம் மிக்கவருமாயிருந்த சங். எவரார்டு, இன்று சேசுகிறிஸ்துநாதர் சுவாமியின் ஏழைகளுக்காக ஆர்வமுள்ள பிச்சைக்காரராக திகழ்ந்த போது, ஏழைகள் எல்லாரும் அவருடைய பராமரிப்பிற்காக அவரை அண்டி சென்றனர். எந்தெந்தப் பகுதிகளிலெல்லாம் மேற்றிராணியார்கள், சாமிநாதருடைய போதகசபைத் துறவிகளை நன்கு வரவேற்று, தியான பிரசங்கங்களை நிகழ்த்தவும், நன்கொடையாளர்களுடைய உதவியினால் மடங்களைக்கட்டவும் அனுமதிப்பார்கள் என்ற விவரத்தையும் எவரார்டு அறிவித்தார். இந்த விவரங்கள், பிற்காலத்தில் சகோ. ஜோர்டனுக்கு மடங்களைநிறுவுவதற்கு மிகவும் உதவியாக இருந்தன. தொல்லைகள் நிறைந்த கடினமான பயணத்தைப்பற்றி முறையிடாமல், இளம் துறவிகளுக்கான உலகத்தைச் சுற்றி வேதம் போதிக்கும் அலுவலில், தம் நேச இரட்சகருக்காக, தமது முதிய வயதில் எவரார்டு, உற்சாகமாக ஈடுபட்டார். கோடைகாலங்களில் மிக உஷ்ணமாக இருந்தபோதிலும், உதயசாமத்திற்கு முன்பே துவக்கி மாலை வழிபாட்டு ஜெப (vespers)நேரத்திற்கான நட்சத்திரங்கள் தோன்றும் வரை, அவர்கள் தங்கள் வேதபோதக அலுவலில் ஈடுபட்டனர். சென்ற இடங்களிலெல்லாம் தங்குவதற்கான துறவற இல்லங்கள், எவரார்டு சுவாமியாருக்கு தெரிந்திருந்ததால், அவர்களுடைய வேதபோதக யாத்திரை மிக எளிதாக இருந்தது. ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தை அவர்கள் அடைந்தபோது, எவரார்டு சுவாமியார் மிகவும் பலவீனமடைந்தார். அவர் மிகவும் நோயுற்றிருக்கிறார் என்பதை அறிய வந்தனர். சிறிது சிறிதாக முன்னேறி லோசான் என்ற ஊரை அடைந்தனர். மருத்துவர்ககள் அவரைப் பரிசோதித்துவிட்டு அவர் விரைவிலேயே இறந்துவிடுவார் என்று, அறிவித்துவிட்டு அவருக்கு அதைப்பற்றித் தெரிவிக்க வேண்டாம் என்று, கூறினர். இதை யூகித்து அறிந்து கொண்ட எவரார் சுவாமியார், ”மருத்துவர்கள் நான் இறக்கப்போகிறேன் என்பதை ஏன் என்னிடம் மறைக்க வேண்டும்.

அந்நினைவு கசப்பாக இருக்கும் மனிதர்களிடம் தான், அதை மறைக்க வேண்டும். எனக்கு மரணபயம் இல்லை ” என்று கூறினார். சில தினங்களில், தாம் மிகவும் ஆவலுடன் சந்திக்க விரும்பிய தமது சபையின் அதிபரான அர்ச்.சாமிநாதர், தமது சகோதர துறவிகளிடையே மரிப்பதற்காக, பொலோஞா நகரத்திலுள்ள தமது மடத்தை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார் என்பதை அறியாமலேயே , எவரார்டு சுவாமியார், 1221ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் நாள், பாக்கியமான மரணம் அடைந்தார். சங். எவரார்டு சுவாமியார்மேல் லாங்க்ரஸ் மேற்றிராசனம் எப்போதும் பக்தி கொண்டு விளங்குகிறது. அவருடைய நினைவுநாள் ஆகஸ்டு மாதம் 5ம் நாள் கொண்டாடப்படுகிறது.


அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 7 BLESSED JANE OF AZA - முத். ஜேன்

 BLESSED JANE OF AZA - முத். ஜேன் (1140-1202)


அர்ச். சாமிநாதருடைய தாயாரின் பெயர் ஜேன் ஆஃப் ஆசா. முத். ஜேனம்மாள் என்று அழைப்போம். மத்திய நூற்றாண்டுகளில் மற்ற ஐரோப்பிய நாடுகளும் தேவமாதாவின் பேரில் விசேஷ பக்தியுடன் திகழ்ந்தன. அதில், ஸ்பெயின் நாட்டுமக்களிடம் இயல்பிலேயே அந்த பக்திமிக அதிகமாக இருந்தது. அர்ச். சாமிநாதர் தமது சபைத்துறவிகளிடம் தேவமாதாமீது அசாதாரணமான விதத்தில் ஆழ்ந்த பக்தி கொள்ள வைத்ததற்கான ஒரே முக்கிய காரணம் அவருடைய தாயார். அவர்களுடைய குணாதிசயங்களை, எல்லா காலத்திலும் செயல்பட்டு வரும் அவர்களுடைய மகன் , சாமிநாதரால், நிறுவப்பட்ட துறவற சபையில் நாம் பார்க்க முடியும். அர்ச். சாமிநாதர் தமது தாயிடம் எவ்வளவு அதிக கனிவுள்ள பாசமுள்ளவராக இருந்தாரென்றால், அந்த நல்ல தாயாரிடம் கற்றுக்கொண்டபடி, அவர் தமது எல்லா கஷ்டநேரங்களிலும், மகிழ்ச்சியான நேரங்களிலும், எப்பொழுதும், இடைவிடாமல், தன் பரலோக தாயாரான மிகவும் பரிசுத்த தேவமாதாவை நோக்கி தமது இருதயத்தை எழுப்பி, அவர்களுடன் உரையாடி மகிழ்வார்.

அர்ச். சாமிநாதர் பிறப்பதற்கு முன், ஜேன் ஒரு கனவு கண்டார்கள். தமது மகன் ஒரு நாயைப்போல வாயில் தீப்பந்தத்தைக் கவ்வியபடி உலகம் முழுவதும் சுற்றிவந்து, அகில உலகத்தையும் ஒளிர்விப்பது போல ஜேன் கனவு கண்டார்கள். தீப்பந்தமாகிய தேவசிநேகநெருப்பை சாமிநாதருடைய ஆத்துமத்தில் பாதுகாக்கவும், அதைத் துாண்டி வளர்க்கவும் வேண்டிய அலுவலை, அவருடையதாயார், ஜேன் தமது தாய்க்குரிய நேசத்துடன் மிக நேர்த்தியாக செய்தார்கள். மேலும், ஜெபம் என்னும் அரிய பொக்கிஷத்தின் விலையுயர் தன்மையையும், அதனால் எண்ணற்ற ஆத்துமங்களை ஆண்டவருடைய தேவசிநேக இராஜ்யத்துக்குள் கொண்டுவரும் உன்னத நன்மைபயக்கும் உயர்ந்த விளைவுகளையும் பற்றி தமது மகனுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். இந்த சிறந்த போதனையின் உதவியினாலேயே, சாமிநாதர் அர்ச்சிஷ்டவருக்குரிய ஜெப தப பரித்தியாகங்களினால் திரளான பதிதர்களை மனந்திருப்பியதுடன், ஏராளமான துறவற மடங்களை சீர்திருத்தவும் முடிந்தது. முத். ஜேனம்மாள் தமது மகனுக்கு, அநேக ஆத்துமங்களுக்கு மோட்சத்தின் திறவுகோலாக விளங்கிய, தேவமாதாவை வாழ்த்திப் போற்றும், மங்களவார்த்தை ஜெபத்தைக் கற்பித்தது மட்டுமல்லாமல், தேவமாதாவைப் பின்பற்றி உத்தம கிறிஸ்துவ பெண்மணியாக எவ்வாறு ஜீவிப்பது என்று நன்மாதிரிகையுடன் வாழ்ந்தும் காண்பித்தார்கள்.

ஜேனுடைய மூன்று மகன்கள், பிற்காலத்தில் குருவானவர்களானார்கள். தேவமாதாவின் மீது பெருமதிப்பிற்குரிய அச்சத்துடனும், கனிந்த சிநேகத்துடனுமான பக்தியை, தமது பிள்ளைகளிடம், ஜேன் ஊட்டினார்கள். இதன் விளைவாகத் தான் , அர்ச்.சாமிநாதருடைய சபைத்துறவிகள், தேவவரப்ரசாதத்தின் மாதாவும், பரலோகத்தின் இராக்கினியுமான தேவமாதாவிடம், மகா உன்னதமான சிநேகத்துடன் இருந்தனர். அதனால், எப்பொழுதும் பரலோக மகிழ்வில் திளைத்திருந்தனர். ஒவ்வொரு குருவானவரும், தமது தாயை நன்மைநிறைந்தவரும், சிநேகம் நிறைந்த வருமான நல்ல பெண்மணியாக உணர்வது போலவே, அர்ச். சாமிநாதருக்கு , நன்மைகளின் முன்மாதிரியாகவும், நற்செயல்களை செய்வதற்கு துண்டுகோலாகவும், உத்தம கிறிஸ்துவ ஜீவியத்திற்கு இட்டுச் செல்லும் கலங்கரை விளக்காகவும், முதல் குருவானவரான நமதாண்டவரின் பரிசுத்த தாயாரின் உயிருள்ள படமாகவும் முத். ஜேனம்மாள் விளங்கினார்கள். அர்ச். சாமிநாதர், பரலோக இராக்கினியின் நன்மைத்தனங்களான, பரிசுத்ததனத்தையும், கனிவுமிக்க தயாளத்தையும், தேவசிநேகத்தால் துாண்டப்பட்ட உத்தமமான பிறர் சிநேகக் கிரியைகளையும் தமது தாயாரிடம் கண்டு மகிழ்ந்தார். கிறிஸ்துவ ஸ்பெயின் நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்திருந்த கலரூவேகா கோட்டையின் கவர்னரான தொன் ஃபெலிக்ஸ் கஸ்மனுடைய மனைவியான ஜேனம்மாள், தமது குடும்பத்தை உத்தம கிறிஸ்துவ நெறிகளின்படி நடத்திவந்தார்கள்.

அர்ச்.சாமிநாதர் பிறக்கும்போது, ஏற்கனவே அந்தோணி மற்றும் மானெஸ் என்ற ஜேனின் இரு மூத்த குமாரர்கள் குருத்துவத்திற்காக தயாரித்துக் கொண்டிருந்தனர். சிலோஸ் நகருக்கு ஜேன் அடிக்கடி தவயாத்திரையாக செல்வது வழக்கம். சிலோஸ் நகரின் அர்ச். தோமினிக் மேல் அதிக பக்திகொண்டிருந்ததால், ஜேன் தனது கடைசி மகனுக்கும் தோமினிக், அதாவது சாமிநாதர், என்ற பெயரை வைத்தார்கள். தன் கணவர் இந்த இளைய குமாரனை தனது விருப்பப்படி ஒரு போர்வீரனாக்காதபடிக்கு, ஜேன், சாமிநாதருடைய குழந்தை பருவத்திலிருந்தே, அவருக்கு போர்வாளுக்குப் பதிலாக நல்ல ஞான நூல்களைக் கொடுத்து உத்தம குருவானவராவதற்கு தேவையான ஞானபயிற்சிகளைக் கொடுத்துவந்தார்கள். 12ம் சிங்கராயர் பாப்பரசர், ஜேனம்மாளுக்கு 1828ம் வருடம் முத்திப்பேறு பட்டம் கொடுத்தார். மூன்று குருமகன்களை, அதுவும் மூன்று அர்ச்சிஷ்டகுருக்களை திருச்சபைக்கு தந்த முத். ஜேனம்மாள் மீது, பல நுாற்றாண்டுகளாகவே திருச்சபையில் பக்திமுயற்சிகள் அனுசரிக்கப்பட்டு வந்துள்ளன. அர்ச்சிஷ்டவர்களான அவளுடைய குருமகன்களுடைய பரிசுத்த குணாதிசயங்களைக் கொண்டு நாம் முத்.ஜேனம்மாளின் உன்னத கிறிஸ்துவ பெண்மணிக்கான குணநலன்களைக் கண்டுணரலாம். .

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 6 - அலோய்ஷியஸ் கமோ

கென்யாவின் வேதசாட்சி 

ஆப்ரிக்காவிலுள்ள கென்யா என்கிற நாடு 1895ம் ஆண்டு, ஆங்கிலேயருடைய ஆதிக்கத்தின் கீழ் வந்தது. 1920ல், ஆங்கிலேய ஆட்சி அங்கு வலுப்பெற்றது. நாட்டின் விடு தலைக்காக, ஜோமா கென்யட்டா என்பவர், ஒரு விடுதலை இயக்கத்தைத் தொடங்கினார். இயக்கத்தின் ஒரு பகுதியினர் பயங்கரவாதிகளாக மாறினர். ஆங்கிலேயரைத் துரத்தும்படி, சகல வித அக்கிரமங்களிலும் ஈடுபட்டனர். "வெள்ளையர்களுக்குச் சாவு" என்பதே, இடை விடாமல், அவர்கள் தொடர்ந்து எழுப்பிய கூச்சலாக இருந்தது.

ஐரோப்பிய நாடுகளிலிருந்து, அநேக கத்தோலிக்க வேதபோதகர்கள், கென்யாவில் ஏழை மக்களுக்காக பள்ளிக்கூடங்களும், மருத்துவமனைகளும் நடத்தி வந்தனர். ஆட்சியிலி ருந்த ஆங்கிலேயருடன் கூட, இந்த வேதபோதகர்களையும் சேர்த்து ஒழித்துக்கட்டுவதற்கு, தீவிரவாதிகள் உறுதி செய்தனர். வேத போதகர்களுக்கு உதவி செய்யும் சகலரையும் கொல் வதற்கு திட்டமிட்டனர். கமோ என்பவர், ஒரு ஆப்ரிக்கர்; தொடக்கப்பள் பணி புரிந்து வந்தார். வேத போதகர்களுக்கு அவர் உற்ற நண்பர். அவருடைய நடவடிக்கை களை, தீவிரவாதிகள் கண்காணிக்கத் துவக்கினர். கமோ, நம்முடன் சேர்வாரென்றால், நமது இயக்கம் வலுவடையும். மக்களிடம் நன்மதிப்பைப் பெறுவோம்; கமோ நம்முடன் சேர்ந்து, வெள்ளையருக்கு எதிராக வாக்குறுதி எடுக்க வேண்டும்; அல்லாவிடில், அவரைக் கொல்ல வேண்டும், என்று, அவர்கள் கூறினர்.

மேற்றிராணியார், கென்யா நாட்டு விசுவாசிகளுக்கு ஒரு சுற்றுமடல் எழுதி அனுப்பி, சுதந்திரம் பெறுவதற்கு, நியாயமான வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், மௌ மௌ என்ற தீவிரவாதிகளின் கொள்கைகளை, யாரும் பின்பற்றக் கூடாது; அவை திருச்சபைக்கு விரோதமானவை என்றும், அவர், அம்மடலில் எச்சரித்திருந்தார். ஏனெனில், தீவிரவாதிகள், கிறீஸ்துவ மதத்தை விட்டுவிட வேண்டும்; வெள்ளையரின் இரத்தத்தை ஒருகிண்ணத்தில் பருக வேண்டும் என்று, திருச்சபைக்கு எதிரான ஒரு ஆணையை அவ்வியக்க உறுப்பினருக்கு விடுத் திருந்தனர். இளைஞராயிருந்தபோது, கிறீஸ்துவ மதத்தில் சேர்வது, கமோவிற்கு, கடினமாகத் தோன்றியது. கிறீஸ்துவ வேதம், அநேகக் கடினமான காரியங்களைச் செய்யும்படி நம்மிடம் கேட்கிறதே, என்று கமோ கூறி வந்தார். ஆனால், தேவதிருவுளத்தின்படி, ஒரு பரிசுத்தகுருவா னவரின் ஆன்ம ஈடேற்ற அலுவலின் பயனாக, 1945ம் ஆண்டு, செப்டம்பர் 7ம் நாளன்று ஞானஸ்நானம் பெற்று, அலோய்ஷியஸ் என்ற பெருடன், கமோ, கத்தோலிக்கரானார்.

ஒரு சமயம், ஞான உபதேச வகுப்பில், கன்னியாஸ்திரி, உங்கள் வேதத்தை விடுவது அல்லது கடவுளுக்காக உயிரை விடுவது என்று நிர்ப்பந்திக்கப்பட்டால், இரண்டில் எதைத் தெரிந்து கொள்வீர்கள்? என்று ஒரு கேள்வி கேட்டார்கள். ஞான உபதேசம் கற்றுக்கொண் டிருந்த கமோ, உடனே எழுந்து, சத்திய வேதத்தை விடுவதை விட, நான் சாவையேத் தெரிந்து கொள்வேன் என்று கூறினார். பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு நாள், கமோ, கல்வி கற்பித்து வந்த 4வது வகுப்பிற்குள் நுழைந்தபோது, ஞான உபதேச புத்தகங்கள், துண்டு துண்டாகக் கிழிக்கப்பட்டு, அவர் மேஜையின் மீது போடப்பட்டிருப்பதைக் கண்டார்.

மௌ மௌ என்ற தீவிரவாத இயக்கத் தலைவன், மாணவர்களுக்குத் துர்போதனை செய்திருக்கிறான் என்பதை, கமோ, அறிந்தார்: உங்கள் ஆசிரியன், வெள்ளையர்களின் கூட்டாளி. நம்மை அடிமைகளாகவே வைத்திருப்பதற்கு, வெள்ளையர் ஆசிக்கின்றனர்; அதற்கு, உங்கள் ஆசிரியனும் ஆதரவாக இருக்கிறான். அவனுக்கு விரோதமாக, நீங்கள் எல்லோரும் எழும்ப வேண்டும். துரோகிகள் அனைவரும் கொல்லப்பட வேண்டும். ஒரு ஆழமான குழியைத் தோண்டுங்கள். உங்கள் ஆசிரியன் சைக்கிளில் வரும்போது, அதில் விழுவான்; அவனைக் கொன்று விடுங்கள், என்பதே அவன், மாணவர்களுக்களித்தத் துர்போதனை.

அதன்படி, கெட்ட மாணவரெல்லோரும் ஒன்றுகூடி, அவ்வாறே ஒரு குழி தோண்டி வைத்தனர்; ஆனால், மழைகாலம் துவங்கியதால், அவர் சைக்கிளில் வராமல், நடந்து வந்தார். உடனே, அக்கிரமிகளின் தலைவனது வேறு திட்டத்தின்படி, கமோ, வகுப்பில், கரும்பலகை யில் எழுதிக்கொண்டிருக்கும்போது, அவர் மேல் ஈட்டிகளை எறிந்து, கரும்பலகையோடு சேர்த்துக் கொல்வதற்காக, மாணவர்கள், ஈட்டிகளை, புத்தகங்களில் மறைத்து வைத்திருந்த னர். இப்பேராபத்தைப் பற்றி, ஒரு சிறுமி, ஆசிரியரிடம் தெரிவித்தாள். அலோய்ஷியஸ் கமோ, ஆண்டவரின் பேரில் வைத்த சிநேகத்தினிமித்தம், வகுப்பைத் தொடர்ந்து நடத்தினார்: அவர், மாணவரிடம், தீயவர்கள், உங்களுக்குத் துர்போதனை செய்திருப்பதைப் பற்றிவருந்து கிறேன். நம் நாடு சுதந்திரம் அடைய வேண்டும். வெள்ளையரை கென்யாவிலிருந்து விரட்ட வேண்டும். எனினும், வெள்ளையராயிருப்பது பற்றி அவர்களைக் கொல்வது சாவான பாவமா கும். நான் கிறீஸ்துவன். என் விசுவாசத்தை விட்டுவிட மாட்டேன். நேச ஆண்டவருக்காக இக்காரியத்தில் என் உயிரை அளிப்பதற்குக்கூடதயாராக இருக்கிறேன், என்று கூறினார். வீட்டில், உன் வேதத்தை விடாவிட்டால், உனக்கு சாவு நிச்சயம், என்று எழுதியிருந்த ஒரு கடிதத்தைக் கண்டார். பாடுபட்ட சுரூபத்தின் முன் பக்தியுடன் முழங்காலிலிருந்து, ஆண் டவரே! நான் ஒருபோதும், உமக்கு துரோகம் செய்ய மாட்டேன். என் விசுவாசத்தைத் திடப்படுத்தியருளும். நான் உம்மை நேசிக்கிறேன். உமக்காக என் உயிரைக் கையளிப்பேன், என்று ஜெபித்தார்.

ஒரு நாள், அவர் வீட்டுக்குத்திரும்பி வரும் வழியில், அவரைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய், வெள்ளையர்களின் இரத்தத்தில் ஆணையிட்டு, அவர்களை விரட்ட எங்களு டன் சேர்ந்துகொள். அல்லது சாவாய்! உன்னைக் கொன்று விடுவோம் என்று, தீவிரவாதிகள் அச்சுறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்தார். உடனே, அவரைக் கத்தியால் குத்தி வீழ்த்தினர். அலோய்ஷியஸ் கமோ, சேசுவே! மாதாவே! எங்களுக்குத் துணையாக வாருங்கள்! என்று தன் மீது சிலுவை அடையாளம் வரைந்தார். கொடூரமான காட்டுமிராண்டிகளான தீவிர வாத இயக்கத்தினர், அவரைத் துண்டு துண்டாக வெட்டிக்கொன்றனர்; கமோ, வேத சாட்சி யாக மரித்தார்; ஆம், அர்ச். அலோய்ஷியஸ் கமோ என்கிற இன்னொரு ஆப்ரிக்காவின் அர்ச் சிஷ்டவர், திருச்சபையில் தோன்றினார்.


திங்கள், 31 ஜனவரி, 2022

பத்து சர்வேசுரனுடைய கற்கனைகள் - Ten Commandment's in Tamil

சர்வேசுரனுடைய கற்கனைகள் எத்தனை?
பத்து.

 பத்தும் சொல்லு.
சர்வேசுரன் நமக்கு அருளிச் செய்த வேத கற்பனைகள் பத்து!

1. உனக்கு கர்த்தாவான சர்வேசுரன் நாமே; நம்மைத் தவிர வேறே சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக

2. சர்வேசுரனுடைய திருநாமத்தை வீணாகச் சொல்லாதிருப்பாயாக

3. சர்வேசுரனுடைய திருநாட்களை பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக

4. பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக

5. கொலை செய்யாதிருப்பாயாக

6. மோக பாவஞ் செய்யாதிருப்பாயாக

7. களவு செய்யாதிருப்பாயாக

8. பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

9. பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக

10. பிறர் உடைமையை விரும்பாதிருப்பாயாக

இந்தப் பத்துக் கற்பணைகளும் இரண்டு கற்பனைகளில் அடங்கும்;

1. எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது
2. தன்னைத் தான் நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது.

வியாழன், 27 ஜனவரி, 2022

அர்ச். சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 35

புதிய அதிபரை தேர்ந்தெடுத்தல் 

அர்ச். சாமிநாதர், பொலோஞா நகருக்குச் சென்றார். இங்கு தான் இந்த வருடத்தின் பெந்தேகோஸ்தே திருநாளின் போது அர்ச். பிரான்சிஸ் அசிசியாரை, அவருடைய சிறிய சகோதரர்களின் பொதுக்கூட்டத்தின் போது சந்தித்திருந்தார். ஆனால், இப்பொழுது, அவர் தமது சபையைப் பற்றிய சிந்தனையில் இருந்தார். அவருடைய சபைசகோதரர்கள், இந்நகரத்தில் பல மாதங்கள் தங்கியிருந்தபோதிலும், இன்னும் மடம் ஒன்றும் ஏற்படுத்தப்படாமல் இருந்தது. சாமிநாதசபைத் துறவிகள் பொலோஞாவிலுள்ள அர்ச். மஸ்கரெல்லா மரியம்மாளின் தேவாலயத்தில் தலைமையகத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். ஆனால், அந்த தேவாலயத்திற்கு மிகச் சொற்ப விசுவாசிகளே வந்தனர். ஏனெனில் அது ஒரு வசதிகுறைவான இடத்தில் இருந்தது. அர்ச். சாமிநாதர், சீடர்களிடம், "நமக்கு இதைவிட பெரிய தேவாலயம் தேவைப்படுகிறது. அருகில் பல்கலைக்கழகம் இருப்பதால், இம்மடத்திற்கு நல்ல பிரசங்கியாரும், இளைஞர்களை சிநேகிப்பவருமான ஒரு அதிபர் தேவைப்படுகிறார்" என்றார்.
இத்திறமைகளைக் கொண்டுள்ள அநேக துறவிகள் அர்ச். சிக்ஸ்துஸ் மடத்தில் இருந்தனர். அர்ச். சாமிநாதர், தமது இருதயத்தில் இத்தகைய திறமைகளுடன் திகழும் ஒருவரைக் கண்டறிந்தார். அவர் இம்மடத்திற்கு வந்தால் இதை வெற்றிகரமாக செயல்பட வைப்பார் என்று நினைத்தார். அவர் தான், பாரீஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான, ஆர்லியன்ஸ் நகரத்தின் சகோ. ரெஜினால்டு. சில மாதங்களுக்கு முன்பாகத்தான் தேவமாதா உத்தரியத்தை இவருக்கு அளித்து, இவருடைய தீராத காய்ச்சலிலிருந்து குணப்படுத்தியிருந்தார்கள். சகோ.ரெஜினால்டு இப்போது தமது பரிசுத்த பூமிக்கான தவயாத்திரை நேர்ச்சையை முடித்துக்கொண்டு, ஜெருசலேமிலிருந்து தமது சபை மடத்தை நோக்கி திரும்பி வருகிறார் என்று அறிந்த அர்ச். சாமிநாதர், " ஆண்டவரே சகோ. ரெஜினால்டுவின் பாதங்களைத் துரிதப்படுத்தியருளும் ! அவர் இங்கு வந்தபிறகே நான் நிம்மதியாக பிரான்சு, ஸ்பெயின் நாடுகளுக்கு செல்லமுடியும்" என்று வேண்டிக் கொண்டார். நவம்பர் மாதம் 1218ம் வருடம் சகோ. ரெஜினால்டு பொலோஞா மடத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் இன்னும் அர்ச். சிக்ஸ்துஸ் மடத்திலிருந்த மற்ற நவசந்நியாசிகளுள் ஒரு நவசந்நியாசியாக இருந்தபோதிலும், அர்ச். சாமிநாதரின் விசேஷ கட்டளைக்குப் பணிந்து பொலோஞா மடத்தின் அதிபர் பொறுப்பை கீழ்ப்படிதலினிமித்தம் ஏற்றுக் கொண்டார். 
அவரிடம் பொலோஞாவில் சட்டக்கல்லுாரி இருக்கும் பல்கலைக்கழகத்தைப் பற்றி அறிவித்த அர்ச். சாமிநாதர், "ஓ என் மகனே! நன்றாக ஜெபியுங்கள். இதுவரை இல்லாத அளவிற்கு நன்றாக இந்த இளைஞர்களுக்குப் பிரசங்கம் செய்யுங்கள். ஏனெனில் இக்கல்லுாரி மாணவர்கள் நல்ல துறவிகளாக நமது மடங்களில் சேரும் பிரகாசமான எதிர்காலம் இம்மடத்திற்கு இருக்கிறது என்று நம்புகிறேன்" என்று கூறினார். உடனே சகோ. ரெஜனால்டு , " ஆகட்டும் .சுவாமி.'' என்றார். பிறகு, அர்ச்.சாமிநாதர், அங்கிருந்து, புரோயில், துலோஸிலுள்ள தமது சபை மடங்களைச் சந்திக்கச் சென்றார். அங்கிருந்து ஸ்பெயினிலுள்ள செகோவியா நகர் மடத்திற்கு சென்றார். அங்கு யாதொரு மடமும் இதுவரை நிறுவப்படாமல் இருந்தது. தமது சபையின் அதிபர் சுவாமியார் சென்றதும், சகோ.ரெஜனால்டுவின் இருதயம் கனத்தது. இப்பொழுது தான் மற்ற நவசந்நியாசிகளுடன், துறவற ஒழுங்குகளை நன்கு பயிலும்படியாக அர்ச். சாமிநாதருடைய துறவற சபைக்குள் பிரவேசித்திருந்த சகோ. ரெஜினால்டு, தாமே மற்றவர்களுக்கு அதற்குள்ளாக வேத ஒழுங்குகளைப் பற்றி போதிக்கவும், மற்ற துறவிகளால் இதுவரை துவக்கப்படாத ஒரு துறவறமடத்தை நிறுவவும் வேண்டியிருக்கிறதே என்று நினைத்து மிகவும் கலங்கினார். உடனே அவர் தேவாலயத்திற்கு சென்று தேவமாதாவிடம், "ஓ பரிசுத்த தேவமாதாவே! நான் இத்தனைக் காரியங்களையும் எவ்வாறு நிறைவேற்றுவேன்? இளைஞர்களை எப்படி உமது திவ்ய குமாரனிடம் கொண்டு வந்து சேர்ப்பேன்? அவர்களை எவ்வாறு இந்த சிற்றாலயத்திற்குக் கொண்டு வந்து நான் பிரசங்கிப்பதைக் கேட்கச் செய்வேன்?' என்று கலக்கத்துடன் மன்றாடினார்.

தபசுகாலத்தின் மூன்றாம் ஞாயிறுக்கான தியானம்

 தபசுகாலத்தின் மூன்றாம் ஞாயிறுக்கான தியானம்



“அவர் ஊமையாயிருந்த ஒரு பசாசைத் துரத்தினார்”(லூக்.11:14). பசாசினால் நரகத்திற்குக் கூட்டிச்செல்லப்படும் பாவிகள் கண்கள் திறந்தபடியே நரகத்தில் விழுவதில்லை. நரகத்தில் விழுவதற்குமுன்பாக, பாவிகளுடைய சொந்தப் பாவங்களின் திமையினாலேயே பசாசு அவர்களைக் குருடாக்குகிறது. “ஏனெனில் அவர்கள் கெட்ட எண்ணமே அவர்களைக் குருடாக்கினது” (ஞான 2:21). அது அவ்வாறாக அவர்களை நித்தியக் கேட்டிற்கு இழுத்துச் செல்கின்றது. நாம் பாவத்தில் விழுவதற்கு முன்னால், நாம் செய்யும் திமையினால் எல்லையில்லா சிநேக தேவனான சர்வேசுரனை அவமதிக்கிறோம், ஆண்டவரை நோகச்செய்கிறோம் என்றும் அதனால் நம்மேல் அழிவைக் கொண்டு வருகிறோம் என்றும் கண்டுணராதபடிக்கு நம்மைக் குருடராக்க பசாசு திவரித்து உழைக்கின்றது. பாவத்தில் விழுந்தபிறகு வெட்கத்தினால் நமது பாவத்தை பாவசங்கீர்த்தனத்தில் வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு நம்மை ஊமையாக்கும் முயற்சியில் பசாசு ஈடுபடுகிறது.; இவ்வாறு தேவகற்பனையை மிறி பாவத்தில் விழுந்தபிறகு அப்பாவத்தை பாவசங்கீர்த்தனத்தில் மறைத்தல் என்னும் இன்னும் அதிக பயங்கரத்துக்குரிய
தேவநிந்தையான பாவத்தைக் கட்டிக்கொள்ள வைக்கிறது. இவ்வாறு இரட்டை சங்கிலிகளால் நம்மை பசாசு நரகத்திற்கு இட்டுச்செல்கிறது.
 “ஆண்டவரே என் வாயைக் காவல் படுத்தி, என் உதடுகளைச் சிறைப்படுத்தியருளும்” (சங்.140:3) என்ற தாவிதரசரின் வார்த்தைகளைப் பற்றி விவரிக்கையில் அர்ச். அகுஸ்தினார், “நமது வாயானது தேவதூஷணமாகவோ, அவதூறாகவோ விணாகவோ எதையும் பேசாதபடிக்கு ஒரு கதவினால் அடைக்கப்படவேண்டும். நாம் செய்த பாவங்களை பாவசங்கீர்த்தனத்தில்
வெளிப்படுத்துவதற்கு மட்டும் அது திறக்கப்பட வேண்டும். அந்தக் கதவு அழிவதற்கல்ல, ஆனால் திமைகளைத் தடுப்பதற்காக மட்டுமே இருக்க வேண்டும்” என்று குறிப்பிடுகின்றார். சர்வேசுரனுக்கு எதிராக பேசுவதற்கான சோதனை வரும்போதோ அல்லது பிறர்சிநேகத்திற்கு எதிரான வார்த்தைகளைக் கடும்கோபத்துடன் பேசுவதற்கு சோதனை ஏற்படும்போதோ மௌனத்தை அனுசரிப்பது ஒரு புண்ணியக் கிரியையாகும். ஆனால் பாவசங்கீர்த்தனத்தில் பாவங்களை வெளிப்படுத்தாமல் மௌனமாக இருப்பவன் தன் ஆத்துமத்தையே அழிக்கக் கூடிய மாபெரும் தேவ துரோகத்தைக் கட்டிக் கொள்கிறான்.
அர்ச்.அந்தோனினுஸ் பின் வரும் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்: ஒருசமயம் ஒரு அர்ச்சிஷ்டவர், பாவசங்கீர்த்தனம் செய்ய வந்த ஒரு பாவியின் அருகில் பசாசு நிற்பதைக் கண்டார். “அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்” என்று அவர் அதை அதட்டினார். அதற்கு அவரிடம், பசாசு, “இவர்கள் பாவத்தைக் கட்டிக்கொள்ளும் சமயத்தில் இவர்களிடத்திலிருந்து வெட்கத்தை எடுத்திருந்தேன். பாவசங்கீர்த்தனம் செய்ய வரும் இவர்களிடம், தாங்கள் செய்த பாவங்களை வெளிப்படுத்தாதபடிக்கு பாவசங்கீர்த்தனம் செய்வதே அவர்களுக்கு மிக பயங்கரமானதாகும்படிக்கு அந்த வெட்கத்தை; அவர்களிடம் மிண்டும ஏற்படுத்தவே இப்பொழுது இங்கிருக்கிறேன்” என்றது. 
“என் மதியீனத்தினால் என்னுடைய காயங்கள் புழுத்து நாறிப்போயின” (சங். 37:5) எவ்வாறு தொழுநோயினால் வரும் புண்கள் மனித சாPரத்தையேத் தின்று அழித்துக் கொல்கிறதோ, அதே போல் பாவசங்கீர்த்தனத்தில் மறைக்கும் பாவங்கள் இரணப்படுத்தும் புண்களாக மாறி ஞானஜீவியத்தையேக் கொன்று விடும் தொழுநோய்ப் புண்களாகிவிடும். அர்ச்.கிறிசோஸ்தம் அருளப்பர், “நாம் பாவத்தினின்று விலகி இருக்கும்படிக்கு, சர்வேசுரன் பாவத்தை வெட்கத்துக்குரிய ஒரு செயலாக்கினார். மேலும் நமது பாவங்களுக்காக மனஸ்தாபப்படும் போது, நம்மை மன்னிப்பதாக சர்வேசுரன் வாக்களித்திருப்பதன் மூலம் நாம் பாவசங்கீர்த்தனத்தின் மேல் முழு நம்பிக்கைக் கொள்ளச் செய்கின்றார். ஆனால் இதற்கு நேர்மாறாக, பசாசு, அளவற்ற இரக்கமுள்ள ஆண்டவா; நம்மை எப்பொழுதும் மன்னிக்கிறார் என்று கூறி நம்மை பாவம் செய்யத் தூண்டுகிறது. நாம் பாவத்தைக் கட்டிக்கொண்ட பிறகு, பாவசங்கீர்த்தனத்தில் அதை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு நம்மிடம் வெட்கத்தைத் தூண்டுகிறது” என்று பிரசங்கிக்கின்றார்.எனவே பிரியமானவர்களே! மகத்துவமிக்கவரும் மகா நன்மையானவருமான நம் நேச இரட்சகரை நோகப்படுத்துகிறோம் என்று நீங்கள் பாவத்தைக் கட்டிக் கொள்ளும் போது வெட்கப்படவேண்டும். ஆனால், நிங்கள் கட்டிக்கொண்ட பாவங்களை பாவசஙகீர்த்தனத்தில் வெளிப்படுத்து வதற்கு வெட்கப்படுவது
காரணமற்ற மூடச்செயலும் தேவதுரோகமுமாகும். அர்ச்.மரியமதலேனம்மாள் எல்லாருக்கும் முன்பாக நமதாண்டவரின் திருப்பாதங்களில் அமர்ந்து தான் ஒரு பெரும்பாவி என்று அறிவிப்பதற்கும், பலவருடங்கள் துர்மாதரிகையான பாவ ஜீவியத்தில் இருந்த அர்ச்.எகிப்து மரியம்மாள் பாவசங்கீர்த்தனம் செய்வதற்கும் வெட்கப்படவில்லையே!; அதேபோல், தன் பாவங்களுக்காக நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ததுமல்லாமல், உலகம் முழுவதும் அறியும்படியாக தனது பாவங்களை ஒரு புத்தகமாகவே எழுதி வெளியட்ட அர்ச்.அகுஸ்தினார் திருச்சபையின் வேதபாரகராக திகழ்கிறார் என்பதை அறிவோம். இவர்களெல்லாரும் நல்ல பாவசங்கிர்த்தனத்தினால் மட்டுமே பெரும் அர்ச்சிஷ்டதனத்தை அடைந்தார்கள். உலக அரசுகளின் நிதிமன்றங்களில் குற்றவாளி தன் குற்றத்தை ஒப்புக்கொள்வானேயாகில் அவனுடைய குற்றத்துக்கு ஏற்ற தண்டனை விதிக்கிறது. ஆனால் நமது நேச இரட்சகரான திவ்ய சேசுநாதர்சுவாமியின் நிதிமன்றத்திலோ தனது பாவங்களை ஏற்று மனஸ்தாபப்படும் ஒரு பாவிக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது.
மேலும் அவனுக்கு நித்திய மகிமைக்கான கிரீடத்தையும் அளிக்கிறது. “பாவசங்கீர்த்தனம் செய்த ஒவ்வொரு பாவிக்கும் ஒரு கிரீடம் கொடுக்கப்படுகிறது” என்று அர்ச்.கிறிசோஸ்தம் அருளப்பர் கூறுவார். வயிற்றுப் புண் நோயால் பாதிக்கப்பட்டவன் இறந்துவிடாதபடிக்கு மருத்துவரிடம் செல்வது போல, உங்களுடைய ஆத்துமத்தை அழித்துக் கொண்டிருக்கும் அரிக்கும் புண்களான பாவங்களை பாவசங்கீர்த்தனத்தில் சொல்வதற்கு வெட்கப்பட வேண்டாம். ஏனெனில் அவற்றால் நிங்கள் நித்தியக் கேட்டிற்கு உள்ளாவிர்கள். “உன் உயிரிழப்பதானாலும் உண்மையைச் சொல்ல நாணாதே” (சர்வ 4:24) “ஐயோ இந்தப்பாவத்தைச் சொல்வதற்கு எனக்கு மிகவும் வெட்கமாயிருக்கிறது” என்று இப்பொழுது கூறுகிறாய். ஆனால் இந்த வெட்கத்தை இப்பொழுது வெற்றிகொள். அப்போது நீ நித்தியத்திற்குமாகக் காப்பற்றப்படுவாய். “ஏனெனில் பாவத்தை ஒரு வெட்கம் கொண்டுவருவது போல், இன்னொரு வெட்கம் மகிமையையும் தேவ வரப்ரசாதத்தைக் கொண்டு வருகிறது” ( iடி.இ4:25). வெட்கம் இருவகைப்படும். 
முதல்வகையான வெட்கம் பாவத்திற்கு இட்டுச் செல்கிறது. இந்த வெட்கமே, பாவசங்கிர்த்தனத்தில் பாவத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கிறது. இரண்டாவது வகையான வெட்கம், பாவசங்கீர்த்தனத்தின் போது கிறிஸ்துவர்களிடத்தில், “இனி பாவம் செய்யமாட்டேன்”;என்ற உத்தமமான பிரதிக்னையை ஏற்படுத்துகிறது. இந்த வெட்கமே, அவனுக்கு இவ்வுலகில் தேவவரப்ரசாதத்தையும் மோட்சத்தில் நித்திய மகிமையையும் பெற்றுத் தருகிறது.

திங்கள், 24 ஜனவரி, 2022

அர்ச். சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 34

 துஷ்ட பெண் மனந்திரும்புதல்

ஒரு நாள் அர்ச்.சாமிநாதர் ஜான், ஆல்பர்ட் என்ற இரு நவசந்நியாசிகள் மிக வருத்தத்துடன் மடத்திற்கு திரும்பி வருவதைக் கவனித்து அவர்களிடம் வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு அவர்கள், "சுவாமி! நாங்கள் இன்று மதிய உணவை பிச்சை எடுப்பதற்காக சென்றோம். ஆனால் ஒரு விதவையிடமிருந்து சிறு ரொட்டித் துண்டு மட்டுமே கிடைத்தது. அதைக் கொண்டு வந்தபோது, அர்ச். அனஸ்தாசியா தேவாலயத்தினருகில் ஒரு பிச்சைக்காரன், மிகுந்த பசியால் வாடிக்கொண்டிருந்தான். அவன் எங்களுடைய கையில் இருந்த ரொட்டியை, ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். எங்களிடம் அந்த ரொட்டியைக் கொடுக்கும்படி கேட்டான். நாங்களும் தேவசிநேகத்தை முன்னிட்டு, அவனிடம் அந்த ரொட்டியைக் கொடுத்துவிட்டோம் ஆனால் நமது மடத்தின் மதிய உணவிற்கு இப்பொழுது என்ன செய்வோம்?" என்றனர்.

அதைக்கேட்ட சாமிநாதர், அவ்விரு சகோதரர்களுடைய தயாள குணத்திற்காக, அவர்களை பாராட்டினார். ”இதுவரை பராமரித்து வந்த கர்த்தர், இன்றும் நமது மடத்திற்கு உணவளிப்பார்” என்று அறிவுறுத்தினார்' தேவாலயத்திற்கு சென்று ஜெபித்துவரும்படியும், ஜெபம் முடிந்ததும் மதிய உணவிற்கான மணியை அடிக்கும்படியும் அவர்களிடம் கூறினார். அவ்விருவரும் அர்ச். சாமிநாதர் கூறியபடி உடனே கீழ்ப்படிந்து, கோவிலுக்கு சென்று ஜெபித்தனர். மதிய ஜெபம் முடிந்ததும், வெளியே வந்து உணவிற்கான மணி அடித்தனர். உடனே, காலியாக இருந்த உணவறை மேஜைகள் முன்பாக, ஒவ்வொருவராக அர்ச். சாமிநாதருடைய சீடர்கள் அனைவரும் கூடிவந்து, மதிய உணவுக்கு முன் ஜெபத்தை ஜெபித்தனர். என்ன ஆச்சரியம்! அவர்களுக்கு முன்பாக வெண்ணுடை தரித்த வசீகரமான இரு வாலிபர்கள் சாப்பாட்டறைக்குள் வந்தனர். ரொட்டித் துண்டுகள் நிறைந்த லினன் துணியிலான பைகள், அவர்களுடைய தோளுக்கு முன்னும் பின்னும் தொங்கிக் கொண்டிருந்தன. உடனே துறவிகள், ”இதோ சம்மனசுகள், மறுபடியும் நமக்கு உணவு கொண்டு வந்துள்ளனர்” என்று ஆச்சரியத்துடன் தங்களுடைய மனதுக்குள் நினைத்தனர்.

இம்முறை சகோதரர்களுக்கு, அவர்கள் முதலில் உணவை பரிமாறினர். அதன்பிறகு, நவசந்நியாசிகள், இளம் சந்நியாசிகள், மூத்த சந்நியாசிகள் என்று வரிசைக்கிரமமாக உணவைப் பரிமாறினர். கடைசியாக, அர்ச். சாமிநாதரின் மேஜைமுன்பாக வந்து, அவ்விரு இளைஞர்களும், தங்கள் பையில் இருந்த இறுதி ரொட்டித் துண்டை , அவரிடம் வைத்து விட்டு மறைந்துவிட்டனர். நீண்ட நேரம் இப்புதுமையால் பிரமிப்படைந்திருந்த சந்நியாசிகள் மௌனமாக இருந்தனர். அர்ச். சாமிநாதர், தன் சீடர்களை நோக்கி, ”சர்வேசுரன் நமக்கு அனுப்பிய உணவை உண்போம்" என்று கூறினார். அந்த ரொட்டியுடன் அவர்களுக்கு அன்று திராட்சை இரசமும் பரிமாறப்பட்டிருந்தது. அது முதல் தரமான இரசமாக அதிமிக சுவையுடன் இருந்தது. அவர்கள் உண்டு முடித்த பிறகும், ரொட்டியின் அளவும் திராட்சை இரசத்தின் அளவும் குறையாமல் இருந்த, மற்றொரு அதிசயமான புதுமையைக் கண்டு சந்நியாசிகள் இன்னும் வியப்பில் ஆழ்ந்தனர். இதற்காக துறவிகள் அனைவரும் ”சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக" என்று ஆண்டவரைப் போற்றி புகழ்ந்து நன்றி செலுத்தினர்.

இப்புதுமை அடுத்த இரு நாட்களும் தொடர்ந்து நீடித்தது. அவர்கள் சாப்பிட்ட பிறகும், ரொட்டியும் திராட்சை இரசமும் குறையாமல், சாப்பிடுவதற்கு முன் இருந்த அதே அளவு, இருந்தது. அதனால் அவ்விரு நாட்களும், துறவிகள் உணவை யாசிப்பதற்காக, வெளியே செல்லவில்லை . இதைக் கண்ட அர்ச்.சாமிநாதர், பரிசுத்த தரித்திரத்தை , தன் சீடர்கள் மறவாமல் கடைபிடிக்கும்படிக்கு, தினமும் சாப்பிட்டபிறகும் குறையாமல், வளர்ந்து வந்த உணவை, வெளியே எடுத்துச் சென்று, மற்ற ஏழைகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும், கொடுத்துவிடும்படி கூறினார்.

அர்ச்.சாமிநாதர், சீடர்களிடம், "நாம் அனைவரும் நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டோம். நமது பராமரிப்பிற்காக ஆண்டவரை மட்டுமே நம்பியதற்காகவும், நமது இரு சகோதரர்கள் ஒரு பிச்சைக்காரருக்கு உணவை மறுக்காமல் கொடுத்ததற்காகவும், திவ்யகர்த்தர், நமக்கு உணவு கொடுத்து பராமரித்தார்" என்று அறிவுறுத்தினார்.

இந்நாள் முதல் கொண்டு, அர்ச். சாமிநாதரின் சபைமடங்களில், துறவற சகோதரர்களுக்கு முதலாகவும், அதன்பிறகு நவசந்நியாசிகள், இளந்துறவிகள், மூத்த துறவிகள் என்ற வரிசையில் எல்லா துறவிகளுக்கும், இறுதியாக சபை அதிபர்சுவாமியாருக்குமாக உணவு பரிமாறப்பட வேண்டும், என்ற சபை ஒழுங்கை ஏற்படுத்தினார். இந்த சபைவிதிமுறை, மற்றெல்லா துறவறமடங்களிலும் கடைபிடித்துவந்த ஒழுங்குமுறைக்கு , முற்றிலும் நேர்மாறாக இருந்தபோதிலும், சம்மனசுகள் கொண்டு வந்த இந்த ஒழுங்குமுறையை , சம்மனசுகள் நினைவாக, எல்லா சாமிநாதர் சபை மடங்களிலும், இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் உத்தமமான பிறர்சிநேகத்தை, பிச்சைக்காரர்கள் மட்டிலும் அனுசரிக்கும்படியான , ஒரு சபைவிதியையும் ஏற்படுத்தினார்.

ஒருநாள் பதிதர்களின் தந்திரசூழ்ச்சியினால், ஒரு அசுத்த பெண் அர்ச். சாமிநாதரிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய வந்தாள். பாவசங்கீர்த்தனத்தில், தனக்கு இருக்கும் அசுத்த பாவநாட்டங்களை அகற்றுவதற்கு, ஏற்ற புத்திமதி கூறவேண்டுமென்று கேட்டாள். பிறகு, அர்ச்சிஷ்டவரை தன் பக்கம் கவர்ந்திழுக்கப் பார்த்தாள். இது பசாசின் தந்திரம் என்று அறிந்த அவர், உடனே, அவளிடம், அவளுக்கிருந்த பாவநாட்டங்களை அகற்றுவதற்கான அறிவுரையை கொடுப்பதற்காக, அன்று மாலை, ஒரு இடத்திற்கு வரும்படி கூறினார். அவளும் அதே இடத்திற்கு, அதே நேரத்திற்கு சென்றாள். அங்கு இரண்டு பெரிய புதர்களில் நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருந்தது. அவளுடைய பாவநாட்டங்களுக்குப் பரிகாரம் செய்யும் பொருட்டு, அர்ச். சாமிநாதர், அந்நெருப்பில் நன்றாக தமது சரீரத்தை புரட்டி எடுத்தார். பிறகு, அவ்விரு பெரிய நெருப்புகளுக்கு நடுவே இருந்துகொண்டு, அர்ச். சாமிநாதர் அவளை நோக்கி இப்பொழுது இங்கு வா. உன் பாவத்திற்கு ஏற்ற இடம் இதுவே என்றார். கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த அப்பயங்கரமான நெருப்பைக்கண்டதும், திகிலும் வெட்கமுமடைந்த அந்த துஷ்ட பெண் மனந்திரும்பியவளாக, அங்கிருந்து அகன்று போனாள். நெருப்பினால் யாதொரு பாதிப்புமின்றி, சர்வேசுரனுடைய ஊழியரான அர்ச். சாமிநாதர் அங்கிருந்து வெளியேறி தமது மடத்துக்கு சென்றார்.


catholic Stories - கத்தோலிக்க சிறுகதைகள் - 8

 மோட்சத்தில் யாரும் சபிப்பதில்லை


உக்ரேன் நாட்டில், சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்த உண்மை நிகழ்ச்சி: மிக்கேல் எர்லாவ் என்ற இளங்குருவானவர், குருப்பட்டம் பெற்றதும், அகதிகளின் முகா மிற்கு விசாரணைக் குருவாக நியமிக்கப்பட்டார். தூர நாடுகளுக்குச் சென்று, வேத போதகத் தில் ஈடுபட்டு, அஞ்ஞானிகளுக்கு ஆண்டவரைப் பற்றி சுவிசேஷத்தைப்பிரசங்கிக்க வேண் டும் என்பதே, இளங்குருவின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. இளம் வயதில், அவர் மிக வும் துன்பத்திற்கு ஆளானவர். அவருடைய வாழ்வு துயர் நிறைந்த வாழ்வு எனலாம். அவர், ஆறு வயது, சிறுவனாக இருந்தபோது, பெற்றோர் இருவரும் கொல்லப்பட்டனர். கத்தோ லிக்க வேதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவே, அவர்கள் கொல்லப்பட்டனர்; அதாவது, வேத சாட்சிகளாகக் கொல்லப்பட்டு, தங்கள் உயிரை நேச ஆண்டவருக்காகக் கொடுத்த னர். அவருடைய அக்காள், திடீரென்று மாயமாக மறைந்தாள். அவள் எங்கே சென்றாள், என்பது பற்றிய செய்தி  ஒன்றும்கிடைக்கவில்லை. குடும்பத்தின் நண்பர் ஒருவர் மிக்கேலை, பி ரான்சு நாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்தார். 

இரண்டாவது உலகப்போரின் போது, மிக்கேல் கைது செய்யப்பட்டார். சிறையில் மிகுந்த அவதிப்பட்டார். போருக்குப்பின் விடுதலையானதும், குரு மடத்தில் சேர்ந்து, மிக்கேல் குருப்பட்டம் பெற்று, குருவானார். அவருடைய அதிபர் சுவாமியார், ஒருநாள், அவரிடம், அகதிகள் முகாமிற்குப் போங்கள். அங்கு இருக்கும் அகதிகளின் அவலமான வாழ்வை நீங்கள் அறிவீர்கள். சர்வேசுரன் உங்களுக்கென்று, அங்கு ஏதாவது வேலை வைத்திருப்பார். ஆண்ட வர் பெயரால் போவீராக! என்று கூறி, சங். மிக்கேல் சுவாமியாரை, அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைத்தார். அங்கே செல்வதற்கு, முதலில் விருப்பமில்லாமல் இருந்தாலும், கீழ்ப் படிதலின் பேரில் உடனே, மிக்கேல் சுவாமியார், அங்கு சென்றார்.

முகாமிற்கு விசாரணைக் குருவாக சென்ற சில நாட்களுக்குள்ளேயே, மிக்கேல் சுவாமி யாரை அங்கிருந்த எல்லாரும் விரும்பினர். காலை முதல் மாலை வரை, அவர்களுக்காகவே, இளங்குருவானவர் உழைத்தார். ஒரு பெண் மாத்திரம் அவரைச் சந்திக்க விரும்பவில்லை. அவள் பெயர் நூதனமாக இருந்தது; எதிரில் குரு வந்தால் ஒளிந்து கொள்வாள். அவளுக்கு திடீரென்று இருதய நோய் வந்தது. மரண அவஸ்தைப் பட்டாள். உதவி உதவி என்று கதறி னாள். ஒருவர் குருவை, உதவிக்கு அழைத்தார். மருத்துவரை அழைத்து வரும்படி அவரை அனுப்பி விட்டு, மிக்கேல் சுவாமியார் மட்டும், நோயாளியான அப்பெண் இருந்த அறைக் குள் நுழைந்தார். உடனே, அப்பெண், நீர் யார்? உம்மை நான் சிலமுறை பார்த்திருக்கிறேன். எங்கு பார்த்தேன் என்று சரியாக நினைவில்லை, என்று கோபத்துடன் சப்தமாகக் கூறினாள். அதற்கு, இளங்குரு , மிக சாந்தமான குரலில், நான் ஒரு கத்தோலிக்கக்குருவானவர். உங்களைச் சந்தித்துப் பேசியதில்லை, என்று கூறினார். அதற்கு, அவள் மிகுந்த கோபாவேசத்துடன்," நான் நரகத்திற்குத் தீர்ப்பிடப்பட்டவள்" என்று திரும்பத் திரும்ப உரத்தக் குரலில் அலறினாள். அதற்கு இன்னும் அதிக பொறுமையுடனும் கனிவுடனும், குருவானவர், அவளிடம், அம் மா! தயவு செய்து, நீங்கள் அப்படி நினைக்க வேண்டாம். பாவசங்கீர்த்தனம் செய்யுங்கள், என்று கூறினார். உடனே, அவள் அழுதாள்; நீர் நிரம்பிய கண்களுடன், எனக்கு மன்னிப்புக் கிடையாது, என்று கூறினாள். பாவியின் சாவை சர்வேசுரன் விரும்புவதில்லை. பாவி மனந்தி ரும்ப வேண்டும் என்று தான் , அளவில்லா இரக்கமும் சிநேகமும் உள்ள சர்வேசுரன் ஆசிக் கின்றார். மன்னிக்க முடியாத பாவமே கிடையாது. சர்வேசுரனுடைய இரக்கம் எல்லை யற்றது, என்று திரும்ப திரும்ப வலியுறுத்திக்கூறி, அவளுக்கு குருவானவர் நம்பிக்கையூட்டி னார்.

அந்த பெண், கடவுளா? அவர், ஒருவேளை மன்னிக்கலாம். ஆனால், மனிதன் மன்னிக்க மாட்டான். மோட்சத்தில் கூட மன்னிக்க மாட்டான். மனிதர்களை, மோட்சத்தில் இருப்ப வர்களை, எப்பொழுதாவது நான் சந்தித்தால், அவர்கள் என்னை சபிப்பார்கள், என்று அழுது கொண்டே உரத்த சத்தமாய்க் கூறினாள். குருவானவர், அதற்கு, அவளிடம், மோட்சத்தில் யாரும் சபிப்பதில்லை. அங்கிருக்கும் எல்லோரும் அர்ச்சிஷ்டவர்கள். அவர்கள் எல்லோரும், பாவிகள் மனந்திரும்பி மோட்சத்தை அடைய வேண்டும் என்றே, எப்போதும் சர்வேசுர னின் பரிசுத்த சந்நிதானத்தில், இடைவிடாமல் வேண்டிக்கொண்டு இருக்கின்றனர், என்று மொழிந்தார். அதைக் கேட்டதும், அப்பெண், அவநம்பிக்கையுடன், தலையசைத்து, நீங்கள் என்னை அறியாததால், இப்படிக் கூறுகிறீர்கள். இப்படி உங்களுடன் பேசுவதற்கு, நான் என்னையே மிகவும் வலுவந்தம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த வலுவந்தத்திற்கான முயற்சி என் சாவுக்கேக் காரணமாயிருக்கலாம். பரவாயில்லை. எனக்கு அம்மா, அப்பா, குடும் பத்தினர் யாரும் இல்லை. என் வீட்டார் அனைவரையும் உலகப்போர் எடுத்துக் கொண்டது; அந்த போர் அவர்களை, என்னிடமிருந்து பிரித்து விட்டது.

நான் சிறுமியாக இருந்தபோது, நான் படித்த பள்ளிக் கூடத்தில், என் குடும்பத்தை முதலாய் வெறுக்க எனக்குக் கற்பிக்கப்பட்டது... எனக்கு 14 வயது நடக்கும்போது, கத்தோ லிக்க வேதத்தை அனுசரித்த என் பெற்றோரைக் காட்டிக் கொடுக்கும்படி நான் வற்புறுத்தப் பட்டேன். என் பெற்றோரைக் கைது செய்தனர். மறுநாள் காலையில் அவர்கள் இருவரும் சத்திய வேதத்திற்காகச் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனவே, நான் நரகத்திற்குப் போவது உறுதி. சில காலமாக, எதிலுமே எனக்கு நம்பிக்கை இல்லை. என் தம்பி ஆறு வயது சிறுவனாக இருக்கும் போது, பிரான்சு நாட்டிற்குச் சென்றான். அங்கு செல்வதற்கு, எனக்கு, அப்போது, அனுமதி கிடைக்கவில்லை, என்று சுருக்கமாக தன் ஜீவியத்தைப் பற்றி விவரித்தாள். இதைக் கேட்டதும், மிக்கேல் சுவாமியாரின் உடல் நடுங்கியது. அந்தப் பெண் சிறுவயதில் காணாமல் போன தன் அக்காளாக இருக்க முடியுமா, என்று சிந்தித்தார். பின் நோயாளிப் பெண்ணின் அருகில் சென்று, அன்னா! அன்னா! என்று மெதுவாக அழைத்தார். உடனே, நோயாளி, தன் கண்களை, அகலத் திறந்தாள். கலக்கமடைந்தவளாக, அவள், குருவிடம், என்ன சொன்னீர்கள்? 25 வருடங்களாக யாரும் அந்தப் பெயரைச் சொல்லி என்னை அழைத்த தில்லையே , என்று கூறினாள். ஆம். அவள், மிக்கேல் சுவாமியாரின் காணாம அன்னாவே தான். தனது அதிபர் சுவாமியார், அகதிகள் முகாமில் சர்வேசுரன், உங்களுக் கென்று ஏதாவது அலுவல் வைத்திருப்பார் என்று கூறியதை நினைவு கூர்ந்தார்; சர்வேசுரனி ன் அளவில்லா இரக்கமும் சிநேகமுமுள்ள பராமரிப்பிற்காக, மிக்கேல் சுவாமியார், நன்றி கூறினார். உடனே, நோயாளியின் கரங்களை அன்புடன் பற்றி, என் அன்புள்ள அக்கா அன்னா! என்றார். அதற்கு அன்னா, என் தம்பி, மிக்கேலா, இது? என் பாவ அக்கிரமத்தை, என் தம்பி யிடமா வெளியிட்டேன்? என்று நடுக்கத்துடன் கூறினாள். அதற்கு, அவர், அவளிடம், ஆம். என் பிரியமுள்ள அக்கா! உன் பாவ அக்கிரமங்களுக்காக மனஸ்தாபப் படு.சர்வேசுர னுடைய அளவில்லா சிநேகத்தையும் இரக்கத்தையும் பற்றி சிறிது நேரம் தியானி, என்று கூறியபடியே, சுவாமியார், அவளிடம் பாடுபட்ட சுரூபத்தைக் காண்பித்து, அதை பக்தி யுடன் முத்தி செய்யும்படிச் செய்தார்.

உடனே, அன்னா, உத்தம மனஸ்தாப மிகுதியால் தேம்பி தேம்பி அழுதுகொண்டே, அதுவரை கட்டிக்கொண்ட சகல பாவங்களுக்காகவும், தேவ நம்பிக்கையில்லாமல் இருந்த தற்காகவும், நேச ஆண்டரிடம் மன்னிப்புக் கேட்டாள்; தன் தம்பி மிக்கேல் சுவாமியாரிட மே, நல்ல பாவசங்கீர்த்தனம் செய்தாள். மிக்கேல் சுவாமியார், அவளுக்கு பாவபொறுத்தல் ஆசீர்வாதம் அளித்தார்:சர்வேசுரன் பெயரால், உனக்கு பாவ மன்னிப்பிற்கான ஆசீர்வாதத் தை அளிக்கிறேன். நம் அம்மா அப்பா பெயராலும் நான் உன்னை மன்னிப்பேன், என்று கூறி, தன் அக்காளை, ஆசீர்வதித்தார்.

குருவின் கரத்தை அன்னா நேசமுடன் பற்றிக்கொண்டு, மோட்சத்தை எனக்குத் திறந் து விட்டீர்கள். அம்மா, அப்பாவை சந்தித்ததும், பரலோகத்திற்கு எதிராகவும் உங்களுக்கு எதி ராகவும் நான் பாவம் செய்தேன். என்னை மன்னியுங்கள் என்று மனந்திரும்பிய ஊதாரிமகன், தன் நல்ல தந்தையிடம் கூறியதையேக் கூறுவேன், என்று கூறினாள். அவள் தன் கரங்களை மார்பின் மேல் வைத்தாள். குரு, இன்னொரு முறை, தன் அக்காளுக்குப் பாவப்பொறுத்தல் ஆசீர்வாதம் அளித்தார். சற்றுப் பின், அவள் இறந்தாள். அருகில் அவளுடைய ஆத்துமத்தை, சர்வேசுரனிடம் ஒப்படைக்கும்படியாக, மரிப்போருக்கான ஜெபத்தை, மிக்கேல் சுவாமி யார் முழங்காலில் இருந்து அழுதபடியே ஜெபித்துக் கொண்டிருந்தார். கம்யூனிஸ்டுகளின் பிடியில் சிக்கி, விசுவாசத்தை இழந்த தனது அக்காள், மனந்திரும்பி சர்வேசுரனிடம் வரும் படி, தன் வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் வேண்டி வந்த தன் ஜெபத்தை, தேவமாதா வும், ஆண்டவரும் கேட்டருளியதற்கு, தன் முழு இருதயத்துடன் நன்றி செலுத்தினார். தன் அக்காள் மனந்திரும்புவதற்காக, ஜெபித்துக் கொண்டிருந்த தம்பியையே குருவானவ ராக்கவும், அக்குருவானவரின் மூலமாகவே, அந்த அக்காளை, தம்முடன் ஒப்புரவாக்கவும் திருவுளம் கொண்ட அளவிலா நன்மையுடையவரான சர்வேசுரனின் பராமரிப்பு, மனித அறிவைக் கடந்த பேரதிசயமல்லவா?


catholic Stories - கத்தோலிக்க சிறுகதைகள் - 7

 உத்தரிக்கிற ஆத்துமங்களின் மாதத்திற்கான தியானம்

அர்ச். சியன்னா பெர்நர்தீனுக்கு அர்ச்சிஷ்ட பட்டம் கொடுக்கப்பட்ட சமயத்தில், இத்தாலியிலுள்ள நேப்பிள்ஸ் நாட்டின் காசியா என்ற ஊரில், பிளாசியோ மசயி என்ற பதினொரு வயது சிறுவன் இருந்தான். சிறுவனின் பெற்றோர், அர்ச். பெர்நர்தீன் மீது, அதிக பக்தி கொண்டிருந்தனர். சிறுவனின் இருதயத்திலும், அவர் மீது, பக்தியை ஏற்படுத்தினர். ஜெபமாலையின் அப்போஸ்தலராக விளங்கிய அர்ச். பெர்நர்தீனுடைய பிரிய சீடர்களாகும் படிக்கு, சிறுவனும், அவன் பெற்றோரும் தினமும் பக்தியுடன், குடும்ப ஜெபமாலை ஜெபித்து வந்தனர். சிறுவனும், அர்ச்சிஷ்டவர் மீது, பக்தியுடன் வாழ்ந்து வந்தான். ஒரு சமயம், சிறுவ னுக்கு கடின வியாதி ஏற்பட்டது; அவனது பெற்றோர், துயரத்தில் ஆழ்ந்தவர்களாக, பக்தியு டன் ஜெபமாலை ஜெபித்தபடியே, அர்ச். பெர்நர்தீனிடம் தங்களது நேச மகன் சுகமடைவ தற்காக வேண்டிக் கொண்டனர். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, சிறுவன் இறந்து போனான். அப்போது, தங்கள் நேசமகனுக்கு உயிர்பிச்சை அளிக்கும்படி, இன்னும் அதிக பக்தியுடன் அர்ச்சிஷ்டவரிடம், தொடர்ந்து வேண்டிக்கொண்டேயிருந்தனர்.

இறந்த சிறுவனின் உடலை, அடக்கம் செய்வதற்காக, கல்லறைக்கு எடுத்துச் சென்ற னர். திடீரென்று, வழியிலேயே , சிறுவன், ஆழ்ந்த நித்திரையிலிருந்து எழுந்ததைப் போல், எழுந்தான். அர்ச். சியன்னா பெர்நர்தீன், எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்திருக்கிறார். இறந்த பிறகு நிகழும் காரியங்களைப் பற்றியும், பரலோகத்தில், அவர் காண்பித்த அதிச மக்களுக்கு எடுத்துரைக்கும்படியாகவே, எனக்கு உயிர் திரும்பக் கிடைத்திருக்கிறது. இப் புதுமையைப் பற்றிய செய்தி, நேப்பிள்ஸ் நாடு முழுவதும் பரவியது. ஒரு மாதமாக, சிறு வனைப்பார்ப்பதற்காக தொடர்ந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அப்போது. அவன் அவர்களிடம், பின்வருமாறு விவரித்தான் : நான் இறந்ததும், அர்ச். பெர்நர்தீன் என் முன் தோன்றினார். என் கரத்தைப் பிடித்து. பயப் படாதே! நான் உனக்கு, காண்பிக்கப்போகிறவற்றை, கவனத்துடன் நோக்கிப் பார். அப்படி யானால், அவற்றைப் பற்றி, நீ மக்களுக்கு எடுத்துரைப்பாய், என்றார். நரகம், உத்தரிக்கிற ஸ்தலம், லிம்போ , மோட்சம் ஆகிய இடங்களுக்கு, அவர் என்னை அழைத்துச் சென்றார் கத்தில் பயங்கரத்திற்குரிய வேதனையில் ஆத்துமங்கள் மூழ்கி, கூக்குரலிட்டு அலறிக் கொண் டிருப்பதைக் கண்டேன். ஆங்காரிகளும், பேராசை பிடித்தவர்களும், கற்பை இழந்தவர்க ளும், நாஸ்திகர்களும், மற்ற மனந்திரும்பாத கன்னெஞ்சரான பாவிகளும் வெவ்வேறு வகை யான வேதனைகளை, நரகத்தில் அனுபவிப்பதைப் பார்த்தேன். எனக்குத் தெரிந்த சிலரை, அங் குப் பார்த்தேன். அப்போது இறந்துபோயிருந்த புற்சரெல்லி, வ்ராஸ்கா என்னும் இருவரும் நரகத்தில் இருந்தனர். தவறானதும் பாவகரமுமான வழியில் சம்பாதித்தப் பொருட்களை வைத்திருந்ததால், வ்ராஸ்கா, நரகத்திற்குத் தீர்ப்பிடப்பட்டிருந்தான். வ்ராஸ்காவின் மகன், இதைப் பற்றிக் கேட்டவுடன், இடி விழுந்தது போல அதிர்ச்சியடைந்தார். சிறுவன், பிளாசி யோ, கூறியது முற்றிலும் உண்மை என்பது, அவருக்குத் தெரியும். உடனே, நரகத்திற்குத் தப்பி, மோட்சத்தை அடைவதற்காக, தன் தகப்பன் சம்பாதித்திருந்த சகல பொருட்களை யும் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, ஒரு துறவற மடத்தில் சேர்ந்து சந்நியாசியானார்.

பின்வருமாறு சிறுவன் மேலும் தொடர்ந்து விவரித்தான். பின், நான் உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டேன். அங்கே, கட்டிக்கொண்டவெவ்வேறு பாவங் களுக்கேற்ப, ஆத்துமங்கள் பலவிதமான கொடிய உத்தரிப்பு வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர். எனக்குத் தெரிந்த பலரை, நான் அங்கே பார்த்தேன். தங்கள் வேதனை கள் பற்றி, தம் பெற்றோரிடமும், உறவினரிடமும் தெரிவிக்கும்படி, பலர் என்னிடம் கேட்டுக் கொண்டனர். உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து விடுதலையடைவதற்காக, என்னென்ன ஜெபங்க ளும், திவ்ய பலிபூசைகளும், ஜெபமாலைகளும், தான தர்மங்களும், தபசுமுயற்சிகளும், ஒறுத் தல் உபவாசங்களும் செய்யவேண்டும் என்று சிலர் குறிப்பிட்டுக் கூறினர். சிலர் இறந்த தங் கள் உறவினரைப்பற்றி வினவினர்: உம் தந்தை, இன்ன நாளிலிருந்து உத்தரிக்கிற ஸ்தலத்திலி ருக்கிறார். ஒரு குறிப்பிட்ட தொகையை தர்மத்தில் செலவழிக்க வேண்டுமென்று, உன் தந் தை, உனக்குக் கூறியிருந்தார். நீயோ, அந்தத் தொகையைக் கொடுக்கவில்லை, என்று சிறுவன், ஒருவனிடம் தெரிவித்தான். இன்னொருவனிடம், என் ஆன்ம இளைப்பாற்றிக்காக, இத்தனை திவ்ய பலிபூசைகள் ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று, உன் அண்ணன் கேட்டிருந்தார். அவ ருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாக, நீ வாக்களித்திருந்தாய். ஆனால், இதுவரை, அதை நீ , நிறைவேற்றவில்லை, என்று சிறுவன். கூறினான்.

மேலும், சிறுவன், மோட்சத்தைப் பற்றிக் கூறினான் : எண்ண முடியாத அணி அணி யான சம்மனசுகள் சேனையினர், மிகுந்த மாட்சிமிக்க பேரொளியுடன் பிரகாசிக்கும் சர்வே சுரனுடைய பத்திராசனத்தைச் சூழ்ந்தபடி, அவர்சந்நிதானத்தின் முன்பாக தாழ்ந்து பணிந்து, எல்லாம் வல்ல அர்ச். தமதிரித்துவசர்வேசுரனை ஆராதித்துக்கொண்டிருந்தனர். சகல அர்ச்சிஷ் டவர்களுக்கும், சம்மனசுகளுக்கும், நித்தியகாலமாக, இடைவிடாமல், சர்வேசுரனை ஆராதித் துக் கொண்டிருப்பதே, மோட்ச பேரின்பமாக இருக்கிறது. சகல அர்ச்சிஷ்டவர்கள், சம்மன சுகளுக்கு மேலாக, மகத்துவமிகுந்த வல்லமையுடனும் மாட்சிமையுடனும், சர்வேசுரனு டைய பத்திராசனத்திற்கு அருகில் வீற்றிருக்கும் தேவமாதாவின் பேரழகு, என் இருதயத் தை மிகவும் வசீகரித்துத் தன் பால் ஈர்த்தது; அங்கேயே தங்கிவிட நான் பெரிதும் ஆசித்தேன், என்று கூறி முடித்தான்.


catholic Stories - கத்தோலிக்க சிறுகதைகள் - 6

 தேவ பாலன் ஹங்கேரி நாட்டில் நிகழ்த்திய புதுமை 


புடாபெஸ்ட் பங்குகுருவாக இருந்து, பின்னர், மேற்கத்திய நாட்டிற்கு சென்றவரான சங்.நார்பெர்ட் சுவாமியார் நேரில் கண்ட இந்நிகழ்வை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்: 1956ம் வருடம், ஹங்கேரி நாடு, கம்யூனிஸ்டுகளின் ஆக்கிரமிப்பில் இருந்த காலம், அது. புடாபெஸ்டில், சிறுமியருக்கான பள்ளிக் கூடம் ஒன்றில், கம்யூனிச வெறி பிடித்த ஓர் ஆசிரியை இருந்தாள். ஜெர்த்ரூத் என்பது அவள் பெயர். அவளும் கத்தோலிக்க வேதத்தை, சிறு வயதில் அனுசரித்திருந்தாலும், கம்யூனிஸ்டு தீவிரவாதிகளின் கடுமையான சித்திரவதைக்கு உட்பட்டு, சத்திய வேதத்தை மறுதலித்திருந்தாள்; எல்லாவற்றிற்கும் மேலாக, அவளுடைய இருயத்தில் கடவுள் வெறுப்புக் கொள்கையை ஆழமாக பதித்திருந்தனர். ஆகையால், அவள் தன் வகுப்பிலுள்ள மாணவியரின் இருதயங்களிலிருந்து, கத்தோலிக்க விசுவாசத்தை அகற்று வதில் பெரிதும் ஈடுபட்டாள்; கத்தோலிக்க சத்தியங்களை கேலி செய்து நகைப்பாள்; அல்லது, அவர்கள் இருதயங்களில் கம்யூனிச தப்பறைகளை, பதியச் செய்வாள்; இதை, தன் மாபெரும் அலுவலாகக்கருதி, அது, கம்யூனிசத்திற்கு, தான் ஆற்றும் மகத்தான காரியமாக, ஆர்வத்துடன், செய்து வந்தாள். அவள் வகுப்பில், ஆஞ்சலா என்ற ஒரு பக்தியுள்ள சிறுமி இருந்தாள். புத்தி சாலியான அவள் தான், வகுப்பின் மாணவியர் தலைவியாக இருந்தாள். அவள், பங்கு குரு, சங். நார்பெர்ட் சுவாமியாரிடம் சென்று, தினமும் திவ்ய நன்மை உட்கொள்வதற்கு, தனக்கு, உத்தரவளிக்க வேண்டும் என்று கேட்டாள்.

அதற்கு, குருவானவர், அப்போது, உன் ஆசிரியை உனக்கு இன்னும் கூடுதல் கஷ்ட மான உபத்திரவங்கள் கொடுப்பாள், என்றார். அதைத் தாங்குவதற்கான ஞானபலத்தை, நிச்சயம் ஆண்டவர் தனக்களிப்பார் என்று, 10 வயது சிறுமி ஆஞ்சலா, வலியுறுத்திக் கூறி, தின மும் திவ்ய நன்மை உட்கொள்வதற்கான அனுமதியை குருவிடமிருந்து பெற்றுக் கொண் டாள். உண்மையாகவே, அந்நாளிலிருந்து, ஆஞ்சலாவிடம் ஏதோ ஒரு வித்தியாசத்தைக் கண்ட ஜெர்த்ரூத், மனரீதியான சித்திரவதையால், ஆஞ்சலாவைத் துன்புறுத்தினாள். டிசம்பர் 17ம் தேதியன்று, சிறுமியரிடையே கிறீஸ்துமஸ் திருநாளுக்கான பக்தி பற்றுதல் ஏற்பட்டிருந் தது. இதை உணர்ந்த ஜெர்த்ரூத், திவ்ய குழந்தை சேசுவின் மீது, மாணவியர் கொண்டிருந்த பக்தியை அகற்றுவதற்கு, ஓர் கொடிய தந்திரத்தை பிரயோகிப்பதில் கருத்தாயிருந்தாள்.

ஜெர்த்ரூத், இனிய குரலில், அஞ்ஞான உலகாயுதக் கொள்கைகளை, சிறுமிகளின் இரு தயங்களில் பதியச் செய்வதற்காக, நாம் காணும், அல்லது தொட்டு உணரும் பொருட்கள் மட்டுமே உண்மையில் நிஜமாக இருக்கின்றன; மற்ற எல்லாம் உண்மையில் இல்லாதவை என்று கற்பித்தாள். அதை உணர்த்துவதற்காக, ஆஞ்சலாவை வகுப்பறைக்கு வெளியே அனுப்பிவிட்டு, ஆஞ்சலா! உள்ளே வா! என்று அவளை, ஒருமித்த குரலில், எல்லா மாணவிக ளும் அழைக்கும்படிச் செய்தாள். இதில், ஒரு சதி இருக்கிறது என்ற சந்தேகத்துடன், ஆஞ்ச லா, உள்ளே வந்தாள். பிள்ளைகளே! ஆஞ்சலா, நம்மால் தொட்டு உணரப்படுபவளும் காணப்படுவளுமான ஒரு உயிருள்ள சிறுமி! அவளைக் கூப்பிட்டவுடன், அவள் நம் குரலைக் கேட்டாள்; உடனே உள்ளே வந்தாள். ஆனால், உங்கள் கிறீஸ்துமஸ் திருநாளுக்காக நீங்கள் குழந்தை சேசுவைக் கூப்பிட்டால், அவர் உங்கள் குரலைக் கேட்டு வருவாரென்று நீங்கள் நம்புகிறீர்களா? அதெல்லாம் பழைய கால கிறீஸ்துவ மதத்தின் குருட்டு நம்பிக்கைகள், என்று கம்யூனிஸ்டு வாதியான ஆசிரியை, தன் மாணவிகளிடம் அபத்தத்தைக் கற்பித்தாள். அப்போது சிறுமிகளிடையே ஒரு அழுத்தமான மௌனம் நிலவியது. பின்பு மெல்லிய குர லில், சில பிள்ளைகள், மிகுந்த பயத்துடன், ஆம்! நாங்கள் நம்புகிறோம் என்று கூறுவதை, ஆசிரியைக் கேட்டாள். உடனே, கோபமடைந்த ஜெர்த்ரூத், ஆஞ்சலா! இதற்கு உன் பதில் என்ன? என்று கேட்டாள். இது, ஒரு சூழ்ச்சி என்று இப்போது, ஆஞ்சலாவிற்கு நன்கு புரிந் தது. உடனே, அவள், மிகுந்த பக்தி பற்றுதலுடன், ஆம்! அவர் என் குரலைக் கேட்பார், என்று விசுவசிக்கிறேன்! என்று, உறுதியான தொனியுடன் பதில் கூறினாள். இதைக் கேட்டதும், ஆசிரியை, மிக சப்தமாக பரிகாசமாக சிரித்தபடியே, தன் வகுப்பிலிருக்கும் மாணவிகளைப் பார்த்து, நல்லது! அப்படியானால், நீங்கள் அவரை கூப்பிடுங்கள்! என்று பயங்கரமாக அலறி னாள். வகுப்பிலிருந்த சகல சிறுமிகளும், ஆசிரியையின் உறுமலுக்கும் மிரட்டலுக்கும் சற்றும் பயப்படாமல், அப்படியே மௌனமாக இருந்தனர். கம்யூனிஸ்டுவாதியின் தப்பறையான உபதேசங்கள், மாணவியரிடையே பயனற்றுப்போனது.

அப்போது, திடீரென்று, மாணவியர் முன்பாக, ஆஞ்சலா பாய்ந்து வந்தாள். அவளு டைய கண்களில் ஒளிவீசியது! தன் சக மாணவியரைப் பார்த்து, அவள், கவனியுங்கள் ! பிள்ளைகளே! நாம் அவரைக் கூப்பிடப்போகிறோம்! ஓ! திவ்ய குழந்தை சேசுவே! வாரும் என்று, நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்தபடி, நம்நேச ஆண்டவரை, நம் திவ்ய பாலனை, இங்கு வரவேண்டும் என்று கூவி அழைப்போமாக! என்று உரத்தக் குரலில் கூறினாள். உடனே, வகுப்பிலிருந்த எல்லா சிறுமிகளும், அங்கேயே முழங்காலில் இருந்தபடி, பக்தி பற்றுதலு டன், வாரும்! திவ்ய குழந்தை சேசுவே! ஓ! தேவ பாலனே! வாரும்! என்கிற பாடலைப் பாடத் துவக்கினர். தான் கூறியதற்கு, மாணவியர், இவ்வாறு நடந்து கொள்வார்கள், என்ப தை சற்றும் எதிர்பாராத ஜெர்த்ரூத், இதைக் கண்டு திடுக்கிட்டாள். ஆனால், சிறுமிகள் தொடர்ந்து, மிக ஊக்கத்துடனும், பக்தியுடனும் திவ்ய குழந்தை சேசுவை நோக்கிப் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுடைய சின்ன தலைவியான ஆஞ்சலாவின் இருதயத் தில் நம்பிக்கையின் ஒளி பிரகாசிக்கத் துவங்கியது. அவளும் உருக்கமாக, தன் மனதில் மன வல்லய ஜெபங்களுடன் கூட, தேவபாலனிடம் வேண்டிக்கொண்டே இருந்தாள்; அவளின் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியதும் , வகுப்பறையின் கதவு, சப்தமில்லாமல் திறந் தது; வகுப்பறைக்கு வெளியே திடீரென்று ஓர் மிகுந்த பிரகாசமுள்ள ஒளி மின்னியது; அம் மாட்சிமிக்க ஒளி மின்னியபடியே, வகுப்பிற்குள் நுழைந்தது. பிறகு, அவ்வொளி, அதிகரித் துக்கொண்டே போனது; பெரிய ஒளியாக, மாபெரும் நெருப்பாக மாறியது; அம்மாபெரும்

பிரகாசமுள்ள நெருப்பின் நடுவில், ஓர் அழகிய பூலோக வடிவிலான கோளம் இன்னும் கூடுதல் தெளிவான ஒளியுடன் தோன்றியது. ஆசிரியையும், மாணவியரும் பார்த்து கொண்டு இருக்கும்போதே, அந்த கோளம், தரையில் இறங்கி நின்று திறந்தது; உள்ளிருந்து, மாட்சிமிக்கதும் பேரெழில் மிக்கதும், பல நிறங்களுடன் பிரகாசிப்பதுமான ஓர் அங்கியு டன், திவ்ய குழந்தை அதிலிருந்து தோன்றினார். அவர், சிறுமியரைப் பார்த்துப் புன்னகைத் தார்; அது, அவர்களின் இருதயங்களை ஆழமாக ஊடுருவி, தேவபாலனிடம் ஈர்த்தது. சிறுமி களும் முழு சமாதானத்துடனும், சந்தோஷத்துடனும் தேவபாலனை நோக்கி புன்முறுவல் செய்தனர். அதன் பின்னர், அந்த கோளம் மறு படியும் மூடிக்கொண்டு, கதவின் வழியாக வெளியே சென்று மறைந்தது. இந்தக் காட்சியைக் கண்ட ஆஞ்சலாவும், சக மாணவிகளும், தேவபாலனின் கோளம் சென்ற திசையைப் பார்த்தபடியே, தொடர்ந்து பரவசத்தில் ஆழ்ந் திருந்தனர். வகுப்பு முழுவதும் ஆச்சரியத்தினாலும் பயத்தினாலும் ஆட்கொள்ளப்பட்டு, ஓர் மாபெரும் அமைதியுடனிருந்தது. அப்போது, ஆசிரியை, மிகுந்த அச்ச நடுக்கத்துடனும் ஒரு வித மனவியாதியால் பீடிக்கப்பட்டவளாக, அவர் வந்தார்! அவர் வந்தார் ! என்று அலறிக் கொண்டே, வகுப்பை விட்டு வெளியே வராந்தாவில் இறங்கி ஓடினாள்.

சங்.நார்பெர்ட் சுவாமியார், சிறுமிகள் எல்லோரையும், ஒருவர், ஒருவராகத் தனித் தனியாக, அப்போது நிகழ்ந்த சம்பவத்தைப் பற்றிய சகல காரியங்களையும், வினவினார். எல் லா மாணவிகளும், அந்த நிகழ்வை ஒரே மாதிரியாக விவரித்துக் கூறினர். யாருடைய கூற்றி லும் எந்த முரண்பாடும் இல்லை, என்பதை குருவானவர் நிச்சயப்படுத்தி அறிவிக்கிறார். மன நோயாளிகளுக்கான ஓர் இல்லத்தில், ஜெர்த்ரூத் சிகிச்சை பெற்று வந்தாள். வகுப்பறையில், சிறுமிகளுக்கு முன்பாக, தேவபாலன் அற்புதமாகத் தோன்றிய காட்சி, கடவுள் அற்ற அவ ளுடைய மனதிற்கு, பேரதிர்ச்சியாக இருந்தது; கடவுள் வெறுப்புக் கொள்கையை, ஜெர்த் ரூத்தின் மனதில் கம்யூனிஸ்டு தீவிரவாதிகள் எவ்வளவிற்கு, ஆழமாக பதிய வைத்திருந்தார் களென்றால், கடவுளான தேவபாலன், தன் மாணவியர் மத்தியில் வந்து தோன்றியதை, அவ ளால் ஏற்பதற்கும் நம்புவதற்கும் கூடாமல் போனது. அவள், அவர் வந்தார்! என்று, இடை விடாமல் தொடர்ந்து, கூறிக்கொண்டே இருந்தாள். சின்ன தலைவியான ஆஞ்சலாவின் தலைமையில், சகல மாணவிகளும், தங்களுடைய ஆசிரியையின் மனந்திரும்புதலுக்காகத் தொடர்ந்து வேண்டிக்கொண்டனர். திவ்ய குழந்தை சேசு, அவர்களுடைய மன்றாட்டை நிச்சயம் ஏற்று, ஜெர்த்ரூத்தைத் திருச்சபைக்குள் சேர்த்திருப்பார். இந்த கிறீஸ்துமஸ் திருநாள் சமயத்தில், நம் வீடுகளுக்குள் வந்து நம்மை ஆசீர்வதிக்கும்படியாக, நாமும் தேவபாலனாகிய திவ்ய குழந்தை சேசுவை, பரிசுத்த இருதயத்துடன் வரவேற்போமாக! "


வெள்ளி, 21 ஜனவரி, 2022

catholic Stories - கத்தோலிக்க சிறுகதைகள் - 5

 நம் நேச ஆண்டவருடைய திவ்யபாடுகள் மேல் பக்தி


ஒருசமயம் அர்ச்.பிரான்சிஸ் அசிசியார் போர்சியன்குலாவிலுள்ள பரிசுத்த சம்மனசுகளின் இராக்கினியின் தேவாலயத்தினருகே செல்கையில் வாய்விட்டுக் கதறி அழுவதை ஒருவன் கண்டான். உடனே அர்ச்சிஷ்டவரிடம் சென்று, அவர் ஏன் இவ்வளவு துக்கத்துடன் அழுகிறார் என்று வினவினான். அதற்கு அவர், இன்னும் அதிகமாக விம்மி அழுதுகொண்டே, “நம்முடைய நேச ஆண்டவர், மாசற்ற செம்மறிபுருவை போல நமக்காக சிலுவையில் அறையுண்டு பாடுபட்டு மரித்தபோது, யூதர்களும் மற்ற அனேக மனிதர்களும் அவருக்கு வருவித்த நிந்தை கஸ்தி நிர்ப்பந்தங்களைக் குறித்து நான் துயரப்பட்டு அழுகிறேன். நம் திவ்ய இரட்சகர் பட்டனுபவித்த இந்த எல்லா பாடுகளுக்கும் காரணமான, நீச மனுஷர்கள்; ஆண்டவருடைய எல்லையில்லா நேசத்தையும், அவர் நமக்காக அனுபவித்த கொடிய உபாதனைகளையும், மறந்து போனதையும் நினைத்து, நான் அழுகிறேன்” என்றார்.  மேலும் “எல்லையில்லா சிநேகமானவர், சிநேகிக்கப்படவில்லையே” என்று கதறிக் கூறிக்கொண்டே சென்றார். 

ஒரு சமயம் காட்டில் அர்ச்.மக்காரியார் நடந்து சென்றபோது, கிழே கிடந்த ஒரு மண்டையோட்டைத் தமது ஊன்றுகோலால் தள்ளினார். அப்போது அது புதுமையாக, அவரிடம், “இங்கே குடியிருந்த அஞ்ஞானியான பூசாரி நான். நானும் இங்கிருந்த அஞ்ஞானிகளும் நரக நெருப்புக்குள்ளே இருக்கிறோம்” என்று பேசியது. உடனேஅதனிடம், “நரகத்திலே அதிக வேதனை அனுபவிப்பவர் யார்?” என்று அர்ச்.மக்காரியார் வினவினார்.அதற்கு அந்த மண்டைஓடு, “நாங்கள் அனுபவிக்கிற வேதனையை விட கெட்டுப்போன கிறிஸ்துவர்கள் அதிக வேதனை அனுபவிக்கிறார்கள். அவர்கள் எங்களுக்குக் கீழே கிடக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு மிகுந்த நெருப்பும் அதிக வேதனையும் உண்டாயிருக்கிறது. ஏனென்றால், சேசுநாதர்சுவாமி, மனுஷருக்காக அனுபவித்த பாடுகள் மிது யாதொரு பக்தியுமின்றி, திவ்ய இரட்சகரை விட்டுவிட்டு உலகம், பசாசு, சரீரத்தின் தூண்டுதலின் பேரில் சுயஇச்சைக்கு இடம்கொடுத்து சாவான பாவத்தினால் தேவஇஷ்ட பிரசாதத்தை தங்களிடம் கொன்று போட்டனர்” என்றது.

catholic Stories - கத்தோலிக்க சிறுகதைகள் - 4

 நம் நேச ஆண்டவரின் பாடுபட்ட சுரூபத்தின் மேல் பக்தி


நமதாண்டவர் அர்ச்.ஜெர்த்ரூத்தம்மாளிடம், “நாம் பாடுபட்ட சுரூபத்தை ஒருவன் எத்தனை முறை பக்தியோடு பார்ப்பானோ அத்தனை முறையும் நாம் மிகுந்த சிநேகத்துடன் நம்முடைய அளவி;ல்லாத கருணை பொழியும் திருக்கண்களாலே அவனைப் பார்ப்போம்” என்று திருவுளம்பற்றினார். ஆஸ்திரியா நாட்டில் உயர்குடிப் பெண் சந்தொசால் கத்தரின் மிக்க அழகுடையவளாக இருந்தாள். அதனால் அவளுக்கு மிதமிஞ்சிய அகங்காரமும் இருந்தது. உயர்குடி மக்கள் பலரும் அவளை மணந்து கொள்ள ஆசித்தனர். 
அவளோ, தன்னை மணக்க தகுதியானவர் யாருமில்லை என்று  திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தாள். ஒரு நாள் அவள் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருக்கையில் தன்னைப் போல் அழகி யாருமில்லை என்று நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். அப்போது, அவள் அருகிலிருந்த சேசுநாதர்சுவாமி பாடுபட்ட சுரூபத்தைத் திடீரெனக் கணடாள். அந்தச் சுரூபத்தின் முகம் மிகுந்த துக்கமாயிருக்கிறதைக் கண்டபோது அவளுடைய இருதயத்தில் இருந்த பாவகரமான பற்றுதல்கள் அனைத்தும் புதுமையாக மறைந்ததுமல்லாமல், உத்தமமான மனஸ்தாபமும் தேவசிநேகமும் ஏற்பட்டது. அப்போது அவளிடத்தில் எழுந்த எண்ணமாவது: “எனக்காக நம் நேச ஆண்டவர் இவ்வளவு துக்கமாயிருக்கிறார். அவர் இப்படி இருக்கையில் நான் தகாத சந்தோஷப்படுவேனோ! இந்தத் தகாத சந்தோஷத்தைத் தள்ளிவிட்டு நம் திவ்ய இரட்சகர் பேரில் என் நேசமெல்லாம் வைப்பேன்”. 

உடனே அவள், தன்னை முழுவதும் பரலோக பத்தாவான திவ்ய சேசுநாதர் சுவாமியிடம் அர்ப்பணித்து அவரை முழுவதும் சிநேகித்து வந்தாள். தன் மேல் பிறருக்கு பொல்லாத பற்று உண்டாகாதபடிக்கு ஒரு சந்தியிருந்தும், தன் சரிரத்தை அடித்தும், அடிக்கடி முகத்தை வெயிலில் கருக்கப் பண்ணியும் தன் முகத்தின் வசீகர அழகைக் குலைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தாள். இறுதியாக அர்ச்.தெரசம்மாளின் கார்மேல் சபையில் உட்பட்டாள். அங்கு “சேசுவின் கத்தரீனாள்” என்று தான் அழைக்கப்பட ஆசித்தாள். 
மரணமட்டும் தேவசிநேகத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து நம் ஆண்டவரின் நேச பத்தினியாக பரிசுத்த கன்னியாஸ்திரியாக வாழ்ந்து வந்தாள். 

புறோவான்ஸ் என்ற நாட்டிலிருந்து ஒரு நல்ல கிறிஸ்துவன், நமதாண்டவர் பாடுபட்ட ஸ்தலங்களைத் தரிசிப்பதற்காக தவயாத்திரையாக பாலஸ்தீனநாட்டிற்கு வந்தான். ஆண்டவர் சஞ்சரித்த ஸ்தலங்களை யெல்லாம் மிகுந்தபக்தியோடு சேவித்துக் கபாலமலைக்குச் சென்றான். வுழியில், “இங்கு சேசுநாதர்சுவாமி முகங்குப்புற விழுந்தார், இங்கு அவர் தமது திவ்யதாயாரைச் சந்தித்தார்” என்று அழுகையோடு தியானித்தபடி சென்றான். மலைமேல் ஏறியதும், “ஆண்டவர் சிலுவையில் அறையுண்டு மரித்த இடம் இதோ”என்று காண்பித்தனர். அப்போது அவன் அந்த ஸ்தலத்தைப் பார்த்து, “என் நேச ஆண்டவரே! நான் இந்த இடத்திற்கு வருவதற்கு முன்னே, தேவரீர் பிறந்த இடத்தைக் கண்டேன். தேவரீர் புதுமைகள் செய்த இடங்களையும் பார்த்தேன். தேவரீர் சுகிர்த பிரசங்கங்கள் நிகழ்த்திய இடங்களையும் அழுதுகொண்டு தரிசித்தேன். ஆனால், தேவரீர் என் பாவத்தினால் மரணமடைந்த இடத்தைச் சாகாமல் காணமாட்டேன். ஐயோ, நான் செய்த பாவத்தினால் இவ்விடத்தில் மரணமடைந்த நம் திவ்ய இரட்சகருக்கு அல்லவா துரோகம் செய்தேன்” என்று கூறி மனஸ்தாப மிகுதியால் மயங்கிக் கிழே விழுந்து மரித்தான். அவனோடு சென்றவர்கள், அவன் மயங்கியிருக்கிறான் என்று எண்ணி அவனை எழுப்ப முயற்சித்தனர். ஆனால் அவன் இறந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.