ஓஸ்மா மேற்றிராசனத்தில் சாமிநாதர்
மற்றொரு சமயம், குருமடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, அர்ச். சாமிநாதர் ஒரு ஏழைப் பெண்ணை சந்தித்தார். அவள் மீளாத் துயருடன் இருந்தாள். அவளுடைய மகன் மகமதியரான மூர் இனத்தாரால் அடிமையாக பிடிபட்டு கொண்டு செல்லப்பட்டதால், அவள் அளவில்லாத வேதனை அடைந்தாள். இதை அறிந்தவுடன் அர்ச்.சாமிநாதர் அவள் மேல் மிகுந்த இரக்கம் கொண்டார். அவளுடைய மகனை மீட்பதற்கு தன்னிடம் போதிய பணம் இல்லாததை உணர்ந்தவராக, அர்ச்.சாமிநாதர் அவளிடம் தன்னை அவளுடைய மகனுக்கு பதிலாக அந்த மகமதியர்களிடம் விற்றுக் கொள்ளும்படி வேண்டினார். ஆனால் அந்தப் பெண் அதற்கு உடன்படிவில்லை. இந்நிகழ்ச்சி அர்ச்.சாமிநாதரின் அளவற்ற இரக்க சிந்தையை நமக்கு எடுத்துரைக்கின்றது. அவருடைய இளமையில் ஏற்பட்ட கிறிஸ்துவ அடிமைகளை மீட்கும் ஆவல், பின்னாளில் அவர் கிறிஸ்துவ அடிமைகளை
மகமதியர்களிடமிருந்து மீட்பதற்காகவே ஒரு துறவற சபையை ஏற்படுத்துவதற்கான திட்டங்களில் ஈடுபடலானார். ஆனால் அத்தகைய துறவற சபை அர்ச்.மாத்தா அருளப்பரால் ஏற்படுத்தப்பட்டது.
அர்ச்.சாமிநாதர் தமது 25வது வயதில் 1195ம் ஆண்டில் குருப்பட்டம் பெற்றார். அப்போது வந்.மார்டின் டி பாசான் ஆண்டகை ஓஸ்மா நகரத்து மேற்றிராணியாராக இருந்தார். அவருடைய விருப்பத்தின்படியும், மேற்றிராசனத்தின் சு+ழல்கள் மற்றும் தேவைகளின் பேரில் சாமிநாதர் மேற்றிராணியாருடைய இல்லத்திற்கு வரவழைக்கப்பட்டார். மேற்றிராசனத்தின் துறவற மடங்களுக்கு மேற்றிராணியாரே மடாதிபதியாக பொறுப்பேற்றிருந்தார். அதற்கு உதவும் பொருட்டு அனேக குருக்கள் மேற்றிராணியாருடைய இல்லத்தில் தங்கியிருந்தனர். திருச்சபையின் சட்ட திட்டங்களையும் ஒழுங்குகளையும் தனது மேற்றிராசனத்தில் நிலைநிறுத்தி அதனை சீர்திருத்துவதில் இந்த மேற்றிராணியார் பெரிதும் அயராமல் உழைத்தார். இவ்வலுவலில் மேற்றி;ராணியாருக்கு சங். டான் டீகோ டி
அஸ்வெடோ சுவாமியார் உறுதுணையாக இருந்தார். இக்குருவானவரும் மேற்றராணியாரும் அர்ச்.சாமிநாதரைப் பற்றிக் கேள்விபட்டு அவரை தங்களுடைய இல்லத்திற்கு வரவழைத்தனர். இங்குதான் சாமிநாதர் ஜெபத்திலும் வேதசாஸ்திரநுரல்களைப் படிப்பதிலும் ஆழ்ந்து ஈடுபடலானார்.
கிராமபுற பங்குகளை சந்தித்து வந்தார். அவருடைய அர்ச்சிஷ்டதனமும் அவரிடம் மறைந்திருந்த அற்புதமான திறமைகளும் ஞானமும் உலகத்திற்குப் புலப்படும்படி வெளிப்படலாயின. இரண்டு வருடங்களுக்குள் அங்கிருந்த உதவி செய்யும் குருக்களின் மடத்தின் துணை அதிபராக நியமிக்கப்பட்டார். மற்ற எல்லாரையும் விட இவரே வயதில் இளையவராக இருந்தார். 2 வருடங்களுக்குப் பிறகு, வந்.மார்டின் ஆண்டகை இறந்தார். சங்.டான் டீகோ சுவாமியார் ஓஸ்மா நகர மேற்றிராணியாரானார். இவர் ஆன்ம இரட்சணிய ஆவல் மிக்கவர். அர்ச்சிஷ்ட ஜீவியம் ஜீவித்து வந்தார். 9 வருடங்கள் ஓஸ்மா மேற்றிராசனத்தை சீர்திருத்தும் அலுவலில் அர்ச்.சாமிநாதர் மேற்றிராணியாருக்கு உதவிபுரிந்து வந்தார். சாக்சனி ஜோர்டான் என்ற சாமிநாதசபைத் துறவி இக்காலத்தில் அர்ச்.சாமிநாதர் வாழ்ந்த ஜீவியத்தைப் பற்றி பின்வருமாறு விவரிக்கின்றார்:
“அர்ச்.சாமிநாதர், சகோதர குருக்களிடையே எல்லாருக்கும் முன்பாக செல்லும் ஒரு பற்றி எரிந்து சுடர்விடும் தீப்பந்தம் போல பரிசுத்த தனத்தில் முதன்மையாக விளங்கினார். தாழ்ச்சிமிகுந்த அர்ச்.சாமிநாதர் மற்ற எல்லாரைவிட தன்னை கடையராக நிறுத்திக் கொள்வார்.
கோடைகால குளிர்தரும் இனிய நறுமணத்தை வீசுபவராக எல்லாருக்கும் ஞான ஜீவியம் தரும் ஜீவிய மணத்தை தன்னைச் சுற்றி ஒளிரச் செய்பவராக திகழ்ந்தார். பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் எப்பொழுதும் இடைவிடாமல் தேவாலயத்தில் ஜெபத்தில் ஈடுபட்டிருப்பார். பாவிகளுக்காகவும் துன்பப்படுகிறவர்களுக்காகவும் அழுது மன்றாடுவதற்கான தேவவரப்ரசாதத்தை
சர்வேசுரன் சாமிநாதருக்குக் கொடுத்திருந்தார். வேதனைபடுபவர்களின் துயரங்களை, அர்ச்.சாமிநாதர் தனது பரிசுத்த இரக்கத்தினுடைய அந்தரங்க சன்னிதானத்திற்குள் வைத்துத் தாங்கிக் கொண்டிருந்தார்.
எனவே இந்த உன்னதமான இரக்க சுபாவ மிகுதியினால் அவருடைய இருதயம் அழுத்தப்பட்டபோதெல்லாம் கண்ணீராக அவ்விரக்கம் அவருடைய கண்களிலிருந்து வழிந்தோடியது. அவர் தன் அறையில் கதவை மூடிக் கொண்டு ஜெபம் செய்வதிலும், சர்வேசுரனிடம் உரையாடுவதிலும் இரவு நேரத்தை செலவிடுவது அவருடைய அன்றாட வழக்கமாகும். ஆனால் அவருடைய விருப்பத்திற்கு மாறாக அவருடைய முனகல்களும் பெருமூச்சுகளும் வெளியே கேட்கும். மெய்யான தேவசிநேகமே அவர் சர்வேசுரனிடம் மன்றாடிக் கேட்ட நிலையான வரமாகும். நமது இரட்சணியத்துக்காக தமக்காக ஒன்றையும் ஒதுக்காமல் தம்மை முழுவதுமாக பலியிட்ட நமது திவ்ய இரட்சகரின் முன்மாதிரிகையைப் பின்பற்றி கிறிஸ்துவின் உண்மையான அங்கத்தினராகும் வண்ணம் அர்ச். சாமிநாதர் ஆத்தும இரட்சணிய அலுவலுக்காக தன்னை அர்ப்பணிப்பதில் எப்பொழுதும் பிரமாணிக்கமுடன் ஈடுபட்டிருந்தார்” (தொடரும்)
†
அர்ச்.கன்னிமாமரியே வாழ்க!