Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

*பெப்ருவரி மாதம் 6-ம் தேதி*



*St. Dorothy, V.M.*
*அர்ச். டொரோத்தி*
*கன்னிகை, வேதசாட்சி* 
*(கி.பி. 208)* 

இக்கன்னிகையின் தாய் தந்தையர் சேசுநாதருக்காக வேதசாட்சிகளாக மரித்தபின், டொரோத்தி சகல புண்ணியங்களையும் விசேஷமாக கற்பென்னும் புண்ணியத்தையும் பிரமாணிக்கமாக அனுசரித்துவந்தாள். இவள் வேதத்திற்காகப் பிடிபட்டு, பயங்கரமான ஆயுதங்களால் துன்புறுத்தப்பட்டும், இவள் அஞ்சாததினால், வேதத்தை ஏற்கனவே மறுதலித்த இரு பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டாள். டொரோத்தி தன் நற்புத்திமதியால் அவ்விரு துஷ்ட பெண்களையும் மனந்திருப்பினாள். பின்பு மனந்திரும்பின அப்பெண்கள் இருவரும் நெருப்பில் போட்டு சுட்டெரிக்கப்பட்டார்கள். டொரோத்தி மறுபடியும் அதிபதியின் உத்தரவுப்படி சித்திரவதை செய்யப்பட்டும், இவள் வேதத்தில் உறுதியாயிருப்பதைக் கொடுங்கோலன் அறிந்து, சினங்கொண்டு, இவளைச் சிரச்சேதம் செய்யும்படி தீர்ப்பளித்தான். சேவகர் டொரோத்தியைக் கொலைக் களத்திற்கு நடத்திக் கொண்டுபோகையில், வேத விரோதியான தெயோபிலிஸ் என்பவன் அப்புண்ணிய மாதைப் பார்த்து, “நீ பிதற்றும் வேத பத்தாவினிடத்தினின்று இந்தக் குளிர்காலத்தில் காணமுடியாத நேர்த்தியான புஷ்பங்களையும், கனிகளையும் எனக்கு அனுப்பு” என்று பரிகாசமாகச் சொன்னான். டொரோத்தியும் அப்படியே ஆகட்டுமென்று சொல்லி, கொலைக்களம் போய்ச் சேரவே, ஒரு சம்மனசு ஒரு சிறு பிள்ளையாகக் காணப்பட்டு, நேர்த்தியான புஷ்பங்களையும், கனிகளையும் இவளுக்குக் கொடுத்தது.  டொரோத்தி அவைகளைத் தெயோபிலிசுக்குக் கொடுக்கும்படி  சொல்லிவிட்டு, தலை வெட்டுண்டு மரித்தாள். இவள் சொன்னது போல சம்மனசு அவனுக்கு அவைகளைக் கொடுத்தது. இதை அவன் கண்டு, அதிசயித்து கிறீஸ்தவனாகி வேதசாட்சி முடி பெற்றான்.

*யோசனை*

நமது நல்ல ஒழுக்கத்தால் பிறரை மனந்திருப்புவோமாக.


வியாழன், 6 பிப்ரவரி, 2020

*பெப்ருவரி மாதம் 5-ம் தேதி*



*St. Agatha, V.M.*
*அர்ச். ஆகதா*
*கன்னிகை, வேதசாட்சி*  
*(கி.பி. 251)* 


செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த ஆகதா, தன்னுடைய பெற்றோரால் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டாள். இப்பெண் பசாசினாலும், துஷ்டராலும் ஏற்பட்ட தந்திர சோதனைகளை ஜெயித்து, தன் ஆத்துமமும் சரீரமும் பாவத்தால் கறைப்படாதபடிக்கு வெகு கவனமாய் இருந்தாள். ஆகதாவின் உத்தம குடும்பத்தையும், அழகையும், பெரும் சொத்துக்களையும்பற்றி கேள்விப்பட்ட குயிந்தானுஸ் என்னும் அதிகாரி, இவளை மணமுடித்துக்கொள்ள செய்த முயற்சிகளெல்லாம் வீணானதால், இவள் கிறீஸ்தவளென்று  குற்றஞ்சாட்டி, இவளது கற்பைப் பறிக்கும்படி ஒரு விபச்சார ஸ்திரீயிடம்  கையளித்தான். இப்புண்ணியவதி பாவத்திற்கு சம்மதியாததை அறிந்த அதிகாரி, இவளைக் கொடூரமாய் அடித்தும், நயமாகப் பேசியும், பயமுறுத்தியும் பார்த்தான். எதற்கும் இவள் அஞ்சாததினால், இவளுடைய மார்பை அறுத்து சிறையிலடைக்கும்படி கட்டளையிட்டான். அன்று இரவு அப்போஸ்தலரான    அர்ச். இராயப்பர் ஆகதாவுக்குத் தோன்றி, அவளைத் தைரியப்படுத்தி, அவள் காயம் முழுவதையும் குணமாக்கினார். இதைக் கேள்விப்பட்ட அதிகாரி கோபத்தால் பொங்கியெழுந்து, தரையில் பரப்பியிருந்த நெருப்பில் அவளைப் புரட்டச் சொன்னான். அந்நேரத்தில் அந்நகரம் அதிர்ந்ததைக் கண்ட அதிபதி, ஜனங்கள் தன்னை எதிர்த்துக் குழப்பம் செய்வார்களென்று பயந்து, அப்புண்ணியவதியை சிறைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான். ஆகதா தான் பட்ட காயங்களினால் வேதனையை அனுபவித்து, சிறையில் உயிர் துறந்து வேதசாட்சியானாள்.

*யோசனை*

கற்பென்னும் புண்ணியம் ஒரு தேவ கொடை. அதை கவனமாக ஜெபத்தாலும் ஐம்புலன்களின் அடக்கத்தாலும் பழுதின்றிக் காப்பாற்றுவோமாக.

*பெப்ருவரி மாதம் 4-ம் தேதி*



*St. John de Britto, M.*
*அர்ச். அருளானந்தர்*
*வேதசாட்சி - (கி.பி. 1663)* 

பிரபு வம்சத்தைச் சேர்ந்த அருளானந்தர் சிறு வயதில் போர்ச்சுகல் தேசத்து இராஜாவின் குமாரனுக்குத் தோழனாக நியமிக்கப்பட்டு, இராஜ அரண்மனையில் வளர்ந்துவந்தார். அவ்விடத்தில் இவருக்கு பசாசினால் உண்டான தந்திர சோதனைகளை ஜெயித்து புண்ணியவாளராய் நடந்துவந்தார். இவர் கடினமான வியாதியில் விழுந்து,   அர்ச். பிரான்சிஸ் சவேரியாரின் வேண்டுதலால் குணமடைந்து, அவருடைய மாதிரிகையைப் பின்பற்றி, சேசு சபையில் சேர்ந்தார். பிற மதத்தினரை மனந்திருப்ப ஆவல்கொண்டு, அதற்குத் தன் உறவினர்களாலும் விசேஷமாய்த் தன் தாயாராலும் ஏற்பட்ட தடைகளையெல்லாம் வெற்றிகொண்டு, இந்திய தேசத்திற்கு பயணம் செய்தார். பல இடங்களில் வேதம் போதித்து, மதுரையில் வேதத்திற்காக உழைத்தார்.  அவ்விடத்தில் பிற மதத்தினரால் உண்டான துன்பதுரிதங்களுக்கு அஞ்சாமல், அநேகருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். கடின வியாதியால் துன்பப்பட்ட ஒரு இராஜ பிரபு, அருளானந்தருடைய வேண்டுதலால் குணமடைந்து, ஞானஸ்நானம் பெற்றான். இவனுக்கிருந்த ஐந்து மனைவிகளில் ஒருத்தியை மாத்திரம் வைத்துக்கொண்டு மற்றவர்களை நீக்கிவிட்டான். மீதமிருந்த நான்கு ஸ்திரீகளில், அரசனுடைய பேத்தியான ஒருத்தி, அருளானந்தர்மேல் அதிக கோபாவேசங்கொண்டு அவரைக் கொல்லக் கட்டளையிடும்படி அரசனை மன்றாடினாள். அரசன் தன் பேத்தியின் பேச்சை மறுக்க முடியாதவனாய், அருளானந்தரைச் சிரச்சேதம் செய்யக் கட்டளையிட்டான். அவ்வாறே அர்ச். அருளானந்தர் ஓரியூரில் வேதசாட்சியாக மரணமடைந்தார். 

*யோசனை*

தேவ பணிவிடைக்கு ஆண்டவரால் அழைக்கப்படுகிறவர்களுக்கு உண்டாகும் தடைகளை தைரியத்துடன் வெல்லவேண்டும்.

*பெப்ருவரி மாதம் 3-ம் தேதி*



*St. Blaise, B.M.*
*அர்ச். பிளேய்ஸியார்*
*ஆயர், வேதசாட்சி -  (கி.பி. 316)* 
இவருடைய அரிதான புண்ணியங்களினிமித்தம் செபாஸ்த் என்னும் நகருக்கு ஆயரானார். அக்காலத்தில் உண்டான பயங்கரமான வேத கலாபனையின் காரணமாக, இவர் ஒரு மலைக்குகைக்குச் சென்று அவ்விடத்தில் ஜெபதபம் புரிந்துவந்தார். பல பிணிகளால் வருந்திய சிங்கம், புலி முதலிய காட்டு மிருகங்கள் அக்குகைக்குள் சென்று, இவரால் குணமடைந்து வந்தன. ஒரு நாள் அந்நாட்டு அதிபதியின் ஊழியர் அந்தக் காட்டில் வேட்டையாடுகையில், காட்டு மிருகங்கள் மேற்கூறிய குகையில் ஜெபம் செய்யும் பிளேய்ஸியாருக்காகக் காத்திருப்பதைக் கண்டு, அதைத் தங்கள் எஜமானுக்கு அறிவித்தார்கள். அதிகாரியின் உத்தரவுப்படி சேவகர் பிளேய்ஸியாரைப் பிடித்துக்கொண்டு வருகையில், இறந்துபோன ஒரு குழந்தையை உயிர்ப்பித்ததைக் கண்ட சேவகரில் சிலர் கிறீஸ்தவர்களானார்கள். வேதத்தை மறுதலித்துப் பொய் தேவர்களை வணங்கும்படி பிளேய்ஸியாருக்கு அதிகாரி கட்டளையிட்டான். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த பிளேய்ஸியாரை அதிகாரி கொடூரமாய் அடித்து, சிறையிலடைத்தான்.  சிறையிலும் அநேக நோயாளிகள் அவரால் குணப்படுத்தப்பட்டார்கள். இவரது காயங்களிலிருந்து வடியும் இரத்தத்தை சில ஸ்திரீகள் பக்தியோடு தொட்டு தங்கள்மேல் பூசிக்கொண்டதினால், அதிபதி அவர்களை நெருப்பில் போட்டு சுட்டெரிக்கும்படி உத்தரவிட்டான். ஆனால் நெருப்பு அவர்களைச் சுடாததினால் சிரச்சேதம் செய்வித்தான். பிளேய்ஸியாரை அதிபதியின் கட்டளைப்படி ஆழமான நீரில் அமிழ்த்தியும், இவர் இறக்காமல் இருந்ததினால், இவர் தலை வெட்டப்பட்டு வேதசாட்சி முடி பெற்றார்.

*யோசனை*

நாம் பக்தியோடு ஜெபிப்பதுடன், பக்திமான்களைப் பழித்துப் பரிகாசம் செய்யாமலும் இருப்போமாக.

புதன், 5 பிப்ரவரி, 2020

பெப்ருவரி மாதம் 2-ம் தேதி*

*The Purification*
*அர்ச். கன்னிமரியாயின் சுத்திகரத் திருநாள்* 

அக்காலத்தில் யூதர்களின் வழக்கப்படி, குழந்தை பெற்ற தாயானவள் அசுத்தமுள்ளவளாகக் கருதப்பட்டு, சில காலம் வீட்டில் தங்கி, குறிக்கப்பட்ட நாளில் தேவாலயத்திற்குச் சென்று, மோயீசனால் ஏற்படுத்தப்பட்ட காணிக்கையைச் செலுத்தி, தன் குழந்தையை மீட்டுக்கொள்வாள். ஆனால் அர்ச். கன்னிமரியாய் இஸ்பிரீத்துசாந்துவின் அனுக்கிரகத்தால் கர்ப்பந்தரித்து சேசுநாதரை அற்புதமாய்ப் பெற்றெடுத்ததினால், முன் கூறப்பட்ட சடங்கை அனுசரிக்க அவர்களுக்கு கடமையில்லை. ஆயினும் தேவதாய் தாழ்ச்சியினிமித்தமும், மற்றவர்களுக்கு நன்மாதிரிகையைப் படிப்பிக்கவும் தாழ்ச்சிக்குரிய இச்சடங்கை நிறைவேற்றினார்கள்.  ஏழைகளுக்கு நியமிக்கப்பட்ட காணிக்கையாகிய இரண்டு மாடப்புறாக்களை ஒப்புக்கொடுத்து, தமது தேவ பாலனை மீட்டுக்கொண்டார்கள். அச்சமயம் தேவாலயத்தில் நீதிமானுமாய், பயபக்தியுடையவருமாய், இஸ்ராயேலரின் தேற்றரவுக்கு எதிர்பார்த்திருந்த   சிமையோன் என்பவர், இஸ்பிரீத்துசாந்துவின் ஏவுதலினால் அவ்விடம் வந்தார். அவர் திருப்பாலனான சேசுநாதரைத் தமது கரங்களில் ஏந்தியவுடனே, இவர்தான் உலக இரட்சகர் என்று சர்வேசுரனால் அறிந்து, அவரை ஆராதித்து, “ஆண்டவரே நீர் வாக்குத்தத்தம் செய்த உலக இரட்சகரை நான் பார்க்கப் பாக்கியம் பெற்றதால் இக்கணமே அடியேனை உம்மிடத்தில் அழைத்துக்கொள்ளும்” என்னும் கீர்த்தனையைப் பாடினார். பிறகு குழந்தையின் தாயின் பக்கம் திரும்பி, “இப்பாலன் இனி படவிருக்கும் பாடுகளால் உமது இருதயம் வியாகுல வாளால் ஊடுருவப்படும்” என்றார். கிறீஸ்தவப் பெண்கள் தேவமாதாவின் மாதிரிகையைப் பின்பற்றி, குழந்தையைப் பெற்ற 40-ம் நாள் கோவிலுக்குச் சென்று குருவானவரால் மந்திரிக்கப்பட்டு, ஒரு மெழுகுவர்த்தியைக் காணிக்கையாகக் கொடுப்பது நல்ல வழக்கம்.

*யோசனை*

தேவ கற்பனையை அனுசரிப்பதில் வீண் சாக்குபோக்குகளைத் தேடாது இருப்பாயாக

சனி, 1 பிப்ரவரி, 2020

*பெப்ருவரி மாதம் 1-ம் தேதி*



*St. Ignatius, M.*
*அர்ச். இஞ்ஞாசியார்* 
*வேதசாட்சி - (கி.பி. 107)*

இவர் அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பரால் ஞானஸ்நானம் பெற்று, அவருக்கு சீஷனாகி, அந்தியோக்கியா நகரின் ஆயராக நியமிக்கப்பட்டார். சக்கரவர்த்தியான தொமீஷியன் காலத்தில் நடந்த பயங்கரமான வேத கலாபனையில், இவருடைய மறைமாவட்டக் கிறீஸ்தவர்கள், இவர் செய்த ஜெபதபத்தால் காப்பாற்றப்பட்டார்கள். ஆனால் திராஜான் என்பவன் சக்கரவர்த்தியானபின், அந்தியோக்கியாவுக்குச் சென்று, கிறீஸ்தவர்களை வேதத்தின் நிமித்தம் உபாதிக்கையில், அவன் அர்ச். இஞ்ஞாசியாரைப் பார்த்து “நீ யார்? பேயனே” என்றதற்கு, “ஆண்டவரை என்னில் கொண்டிருக்கும் என்னைப் பேயன் என்று அழைக்க வேண்டாம்” என்றார். கிறீஸ்தவ வேதத்தை மறுதலித்து, பொய்த் தேவர்களை ஆராதியாததைக் கண்ட இவரை, இராயன் துஷ்ட மிருகங்களுக்கு இரையாகப் போடும்படி தீர்ப்பு கூறினான். அவ்வாறே, இவர் காவல் சேவகருடன் உரோமைக்குக் கொண்டுபோகும் வழியில் ஆங்காங்கு சிதறிப்போயிருந்த கிறீஸ்தவர்கள் இவருடைய புத்திமதிகளைக் கேட்கவும், இவருடைய ஆசீரைப் பெறவும் கூட்டங்கூட்டமாய் இவரிடம் வந்தார்கள். இவர் உரோமையை அடைந்து அரங்கத்தில் நிறுத்தப்படவே, “ஆண்டவருடைய கோதுமையாகிய நான், அவருக்கு உகந்த அப்பமாகச் சமர்ப்பிக்கப்பட சிங்கங்களின் பற்களால் அரைக்கப்படப் போகிறேன்” என்றார்.  உடனே அவர்மேல் விடப்பட்ட சிங்கங்கள், அவரைக் கடித்துக் குதறி விழுங்கின. அங்கு மீதமிருந்த அவருடைய சில எலும்புகளை விசுவாசிகள் பக்தியோடு எடுத்துச் சென்றனர்.

*யோசனை*

இவர் எழுதிய நிருபங்களில் திருச்சபைக்கும், கிறீஸ்தவர்களுக்கும் ஐக்கியம் இருக்க வேண்டுமென்று உணர்த்தியதுபோல், நாம் திருச்சபைக்கு உகந்த பிள்ளைகளாய் நடப்போமாக.

வெள்ளி, 31 ஜனவரி, 2020

*ஜனவரி மாதம் 31-ம் தேதி*

*St. John Bosco, C.*
*அர்ச். ஜான் போஸ்கோ*
*துதியர் - (கி.பி.1888).
1815-ம் வருடம், ஆகஸ்டு மாதம்    16-ம் தேதி இத்தாலியில் பெக்கி என்னும் சிற்றூரில் ஓர் எளிய குடும்பத்தில் ஜான் போஸ்கோ பிறந்தார்.  இவருக்கு இரண்டு வயது ஆகுமுன்னே இவர் தமது தந்தையை இழந்தார்.  பிற்காலத்தில் லட்சக்கணக்கான அனாதைப் பிள்ளைகளுக்குத் தந்தையாக இருப்பதற்காக, ஜான் போஸ்கோ தாமே இளம் வயதில் அனாதையாக வேண்டுமென்று கடவுள் சித்தங்கொண்டார். புண்ணியவதியான இவருடைய தாய் மார்கரீத் மரியம்மாள் இவரைத் தெய்வப் பக்தியிலும், கிறீஸ்தவ ஒழுக்கத்திலும் நன்றாக வளர்த்தாள்.  

ஜான் போஸ்கோ சிறுவயதிலே அன்பான வார்த்தைகளினாலும், இனிய பாடல்களினாலும், நல்ல விளையாட்டுகளினாலும் தனது தோழர்களைத் தன் வசப்படுத்தி, அவர்கள் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட விளையாட்டுக்களையும் விலக்கும்படி செய்தார். திடீரென்று விளையாட்டை நிறுத்தி, எல்லோரும் தன்னோடு சேர்ந்து ஜெபமாலை ஜெபிக்கும்படி செய்வார். இவருடைய குடும்பத்தின் வறுமையினால் இவர் அநேக கஷ்டங்களை அனுபவிக்க                  வேண்டியிருந்தாலும், தான் ஒரு குருவானவர் ஆகி ஏழைப் பிள்ளைகளுக்காகவும் அனாதைகளுக்காகவும் உழைக்க வேண்டுமென்கிற ஒரே எண்ணம் இவர் மனதில் எப்போதும் குடிகொண்டிருந்தது.

குருப்பட்டம் பெற்ற பிறகு தூரின் பட்டணத்திற்குச் சென்று, அங்கு தேவ ஏவுதலால் கிறீஸ்தவ ஜீவியத்தின் அடிப்படையான சத்தியங்களையும் ஒழுங்குகளையும் வாலிபர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்து, “ஆரட்டரி” என்று சொல்லப்படும் சலேசியன் ஸ்தாபனத்திற்கு அஸ்திவாரமிட்டார்.  சிறிது காலத்திற்குப்பின், வரப்போகிற நிகழ்வுகளை இவருக்குச் சிறு வயதிலே கனவுகளின் வழியாக முன்னறிவித்த பரிசுத்த கன்னிமரியாயின் சகாயத்தினால், ஆண்களுக்காக சலேசியன் சபையையும், பெண்களுக்காக      கிறீஸ்தவர்களின் சகாயியான அர்ச். மரியாயின் கன்னியர் சபையையும் ஸ்தாபித்தார். சலேசியருடைய பற்பல பணிகளுக்கு ஜெபத்தினாலும் பொருளினாலும் உதவி புரிவதற்காகப் “பரோபகாரிகளின் சபை” ஒன்றையும் ஏற்படுத்தினார். ஜான் போஸ்கோ ஆத்துமங்களின் இரட்சணியத்தின் மீது தணியாத தாகங்கொண்டிருந்தார். ஏழைப் பிள்ளைகளுக்காக அநாதை மடங்களையும், பள்ளிக்கூடங்களையும், தொழிற்சாலைகளையும், தேவ வழிபாட்டிற்காக தேவாலயங்களையும் உலகமெத்திசையிலும் கட்ட முயற்சி செய்தார்.  விசுவாச வாழ்வில் ஓங்கி வளரவும், கிறீஸ்தவர்கள் அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்து திவ்விய நன்மை வாங்கவும் கடினமாக உழைத்தார். பிறமதத்தினரை மனந்திருப்பத் தமது சபை குருக்களைப் பலமுறை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தார். இவர் எதார்த்தமும் நேர்மையுமுள்ள தேவ மனிதனாக விளங்கினார். கற்பு என்னும் புண்ணியத்தை அதிகமாய் நேசித்தார்.  

இடைவிடாமல் கடவுளோடு மனதால் ஒன்றித்திருந்து, ஏராளமான தேவ வரங்களை நிரம்பப் பெற்றார். அநேக புதுமைகளைச் செய்து, தேவ பராமரிப்பில் மட்டற்ற நம்பிக்கை வைத்திருந்தார். தமது மக்களுக்கு மூன்று வித பக்தியை ஊட்டினார். அதாவது அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்து, தேவ நற்கருணை உட்கொள்ளவும், கிறீஸ்தவர்களின்  சகாயியான அர்ச். மரியாயை அதிகமாய் நேசிக்கவும், பரிசுத்த பாப்பானவருக்குப் பிள்ளைக்குரிய பாசத்துடன் பணிந்து நடக்கவும் கற்றுக்கொடுத்தார். அர்ச்.ஜான் போஸ்கோ “சிறுவரின் அப்போஸ்தலர், அனாதைகளின் தந்தை, பாவசங்கீர்த்தனத்தின் அப்போஸ்தலர், திருச்சபையின் காவலர்” என்ற அழியாத பெயர் பெற்றார். கடின உழைப்பினால் பலம் குன்றி வியாதியுற்ற இவர், 1888-ம் வருடம் பெப்ருவரி மாதம் 7-ம் தேதி தமது 73-வது வயதில் பாக்கியமாய் மரித்து, மோட்ச சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்.

*யோசனை*

அர்ச். ஜான் போஸ்கோவின் படிப்பினையையும், முன்மாதிரிகையையும்  பின்பற்றி, தேவநற்கருணையையும், தேவதாயையும், பரிசுத்த தந்தையையும் உள்ளன்புடன் நேசிப்போமாக.

*ஜனவரி மாதம் 30-ம் தேதி*

*St. Bathildes, Q.*
*அர்ச். பத்தில்தேஸ்*
*அரசி - (கி.பி. 680).*

பத்தில்தேஸ் என்ற இந்தப் பெண்மணி இங்கிலாந்தில் பிறந்து, சிறு வயதில் பிரான்ஸ் தேசத்துக்குக் கொண்டுபோகப்பட்டு, அடிமையாக விற்கப்பட்டாள். இவளை விலைக்கு வாங்கின பிரபு, இவளுடைய புண்ணிய வாழ்வையும் ஒழுக்கத்தையும் அறிந்து, இவளைத் தன் அரண்மனைக்குத் தலைவியாக நியமித்தான். இவளுடைய புகழ் அத்தேசமெங்கும் பரவியதினால், பிரான்சு தேசத்து அரசனான  2-ம் குளோவிஸ் என்பவர், தன் தேசம் முழுவதும் சந்தோஷித்து மகிழ அப்புண்ணிய மாதை மணமுடித்துக்கொண்டார். பத்தில்தேஸ் இராணி தனக்கு உண்டான உந்நத மகிமையால் பெருமை கொள்ளாமல், முன்னிலும் அதிகமாய் நற்குணத்தில் சிறந்து விளங்கி, அரசனுடைய அனுமதியுடன் அநேக கோவில்களையும், மடங்களையும் கட்டினாள். தன் கணவன் இறந்தபின், பட்டத்திற்குரிய தன் மகன் இளைஞனானபடியால், இப்புண்ணியவதியே அரசு புரிந்து, தன்னால் இயன்ற நன்மைகளையெல்லாம் அத்தேசத்திற்குச் செய்துவந்தாள். ஆயர் வேத விஷயமாக செய்த திருத்தங்களை நிலைநிறுத்தப் பிரயாசைப்பட்டாள். தம் குமாரனுக்கு பட்டாபிஷேகம் செய்தபின் பத்தில்தேஸ் இராணி கன்னியர் மடத்தில் சேர்ந்து, அங்கே தாழ்ச்சிக்குரிய அலுவல்களையும் அரிதான புண்ணியங்களையும் செய்துவந்தாள். இவளுக்கு அடிக்கடி உண்டான கடின நோய் நொடிகளைப் பொறுமையுடன் சகித்துப் பெரிய புண்ணியவதியாய் மரித்தாள். 

*யோசனை*


சர்வேசுரன் நமக்கு அளிக்கும் புத்தி, திறமை, அழகு, படிப்பு, செல்வம் முதலியவைகளைப்பற்றி பெருமை கொள்ளாமல் தாழ்ச்சியாயிருப்போமாக.

வியாழன், 30 ஜனவரி, 2020

ஜனவரி மாதம் 29-ம் தேதி*

*St. Francis Sales, B.C.*
*அர்ச். பிரான்சிஸ் சலேசியார்*
*ஆயர், துதியர் - (கி.பி. 1622).*


இவர் உயர்ந்த குடும்பத்திலுள்ள, பக்தியுள்ள தாய் தந்தையரிடமிருந்து பிறந்தார். இவர் பாரிஸ், பதுவா முதலிய இடங்களுக்கு அனுப்பப்பட்டு, கல்வி சாஸ்திரங்களைத் திறமையுடன் கற்றறிந்தார். தம்மைப் போல பிரபு குடும்பத்திலுள்ள ஒரு பெண்ணை தனது தந்தை தனக்கு மணமுடித்து வைக்க ஏற்பாடு செய்ததையறிந்து, அதற்குச் சம்மதிக்காமல் குருத்துவத்திற்கு படித்து, குருவாகி, ஊர் ஊராயும், கிராமம் கிராமமாயும் சுற்றித் திரிந்து அநேகரை நேர்மையாய் வாழ மனந்திருப்பினார். இவருக்கு இயற்கையாகவே முன்கோபம் அதிகமாயிருந்ததால், அத்துர்குணத்தை தம் இடைவிடா முயற்சியால் முற்றிலும் ஜெயித்து சர்வ சாந்தமும், பொறுமையுமுள்ளவரானார். இவருடைய புண்ணியங்களினிமித்தம் பரிசுத்த பாப்பரசராலும், அரசர்களாலும் இவர் வெகுவாய் மதிக்கப்பட்டார். கல்வீன் என்னும் பதிதர் இவரைப் பகைத்து, இவரைக் கொல்வதற்குப் பலமுறை முயற்சித்தனர். ஆனால் இவர் அற்புதமாய்க் காப்பாற்றப்பட்டார். இவர் ஆயராக நியமிக்கப்பட்டபின், முன்னிலும் அதிக ஊக்கத்துடனும் பிரயாசையுடனும் சத்திய வேதத்திற்காக உழைத்துவந்தார். 72000 பதிதரைச் சத்திய வேதத்தில் சேர்த்து கணக்கற்றப் பாவிகளை மனந்திருப்பினார். அர்ச். ஷாந்தாள் பிரான்சிஸ்காவோடு, “தேவதாய் எலிசபெத்தம்மாளைச் சந்தித்த கன்னியர் சபையை” உண்டாக்கினார். கடைசியாய் இவர் புண்ணியங்களை ஒழுங்காய் அநுசரித்து 56-ம் வயதில் தமது ஆன்மாவை, நமது கர்த்தர் கையில் ஒப்படைத்தார்.

*யோசனை*

நாமும் இந்த அர்ச்சியசிஷ்டவரைப் பின்பற்றி பொறுமையுள்ளவர்களாக முயற்சிப்போமாக.

*ஜனவரி மாதம் 28-ம் தேதி

*

*St. Peter Nolasco, C.*
*அர்ச். நொலஸ்கோ இராயப்பர்* 
*துதியர் - (கி.பி. 1258).*

இவர் உத்தம குலத்தில் பிறந்து, சிறுவயதிலேயே ஏழைகள் மட்டில் இரக்கம் காட்டி, அவர்களுக்குத் தர்மம் கொடுத்துவந்தார். இராயப்பருக்குத் திருமணம் செய்துவைக்க குடும்பத்தார் முயற்சிக்கையில், இவர் தமது கற்பை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்து, தனக்கு இருந்த மிகுதியான செல்வத்தை தேவ காரியங்களுக்காகக் கையளித்தார். அந்நாட்களில் ஸ்பெயின் தேசத்தின் பெரும் பகுதியையும், ஆப்பிரிக்காவையும் முகமதியர் கைப்பற்றிக்கொண்டு கிறீஸ்தவர்களைக் குரூரமாய் உபாதித்துவந்தனர். இதைக் கண்ட இராயப்பர் மனம் சகிக்காமல், அவர்களை மீட்கும்படி முயற்சிக்கையில், தேவதாயார் இராயப்பருக்கும், ரேய்மன்ட்டுக்கும், அத்தேசத்து அரசனுக்கும் தோன்றி, கிறீஸ்தவர்களை மீட்பதற்காக ஒரு சபையை உண்டாக்கும்படிக் கூறினார்கள்.  இவ்வலுவலில் இராயப்பர் அதிக உற்சாகத்துடன், பாப்பரசருடைய அனுமதியைப் பெற்று அச்சபையை ஸ்தாபித்தார். அரசரும், மக்களும் இத்தேவ காரியத்திற்கு உதவினபடியால், அடிமையாயிருந்த அநேகக் கிறீஸ்தவர்கள் முகமதியரிடமிருந்து மீட்கப்பட்டார்கள். இராயப்பர் இச்சபைக்காகக் கடினமான பிரயாணங்களை மேற்கொள்ளும் வேளையில், ஒருநாள் முகமதியர் இவரை நடுச்சமுத்திரத்தில் பாயில்லாத ஒரு தோணியில் ஏற்றிவிட்டு ஓடிப்போனார்கள். அப்போது இவர் தமது போர்வையைக் கடலில் விரித்து, அதில் ஏறிக்கொண்டு பிரயாணம் செய்து சுகமாய் கரை வந்து சேர்ந்தார். இவ்வாறு இவர் அடிமைகளுக்காக துன்பங்கள், வேதனைகள் பட்டு சாகும் தறுவாயில் ஏராளமாய்க் கண்ணீர் சொரிந்து, அடிமைகளை மீட்கும்படி சபையோரை மன்றாடி உயிர் துறந்தார். 

*யோசனை*

நாமும் ஜெபத்தாலும், நன்னடத்தையாலும், பொருளுதவியாலும் பிறருடைய ஆன்ம சரீரக் காரியங்களுக்கு உதவிடுவோமாக.

*ஜனவரி மாதம் 27-ம் தேதி*


St. John Chrysostom, A.B.M.*
*அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பர்*
*மடாதிபதி, ஆயர், வேதசாட்சி*
*(கி.பி. 407)*
இவர் அந்தியோக்கியா நகரில் 344-ம் வருடம் பிறந்து, சிறு வயதில் கல்வி சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்து சகலராலும் புகழப்பட்டார். இவர் சிறந்த பேச்சாளராக சிறப்புடன் பிரசங்கித்ததினால் கிறிசோஸ்தோம் அதாவது “பொன் வாயோன்” என்னும் சிறப்பு பெயர் பெற்றார். இவர் தமக்குக் கிடைத்துவந்த பெயரையும் புகழையும் விட்டொழித்து, ஆறு வருட காலம் மௌனத்தை அனுசரித்து, தனிமையாக காட்டில் வாழ்ந்துவந்தார். உத்தமதனத்தை அடைந்தபின் குருப்பட்டம் பெற்று, பிறகு கான்ஸ்தாந்திநோப்பிள் நகருக்கு ஆயர் ஆனார். இவர் தமது வாக்கு சாதுரியத்தினால் பிரசங்கங்கள் பல செய்து, அநேக மக்களை மனந்திருப்பினார். நாள்தோறும் திவ்விய பலிபூசை காணும்படி சகலருக்கும் புத்திமதி கூறினார். பெருமை பாராட்டிக்கொண்டு ஆடைகளையும் ஆபரணங்களையும் அணியும் ஸ்திரீகளைக் கண்டித்தார். ஏழைகள்மேல் அதிக இரக்கம் காட்டி, தமது கையில் பணமில்லாதபோது தமது வீட்டிலுள்ள பாததிர பண்டங்களை விற்று அவர்களுக்கு உதவி செய்தார். இவர் முகத்தாட்சண்யமின்றிப் பாவிகளைத் தமது பிரசங்கத்தால் கண்டித்தபடியால், துஷ்ட மந்திரிகளின் துர் ஆலோசனைப்படி, சக்கரவர்த்தி அருளப்பரை நாடுகடத்திவிட்டான். அன்றிரவே பயங்கரமான பூகம்பம் உண்டானதால் அருளப்பர் மறுபடியும் நாட்டுக்குள் வரவழைக்கப்பட்டார். ஆனால் சில காலத்திற்குபின் இவருடைய விரோதிகளின் முயற்சியால் இவர் மறுபடியும் நாடுகடத்தப்பட்டார். அப்போது பிரயாணத்தில் ஏற்பட்ட கஷ்டத்தால் வழியில் நோயுற்று, கடைசி தேவதிரவிய அனுமானங்களைப் பெற்று உயிர் துறந்து மோட்சம் சேர்ந்தார். 

*யோசனை*

நாள்தோறும் திவ்விய பலிபூசை காண முயற்சிப்போமாக.

ஞாயிறு, 26 ஜனவரி, 2020

*ஜனவரி மாதம் 26-ம் தேதி*



*St. Polycarp, B.M.*
*அர்ச். பொலிக்கார்ப்* 
*ஆயர், வேதசாட்சி - (கி.பி. 156).*

இவர் அப்போஸ்தலர் காலத்தில் வாழ்ந்து, அவர்களுடன் பேசிப்பழகி, அர்ச். அருளப்பருக்கு சீஷராகி, அவரால் ஸ்மெர்னா நகருக்கு ஆயராக நியமிக்கப்பட்டவர். இவர் பதிதர்களையும், சத்திய வேதத்தை மறுதலித்தவர்களையும் காண சகிக்கமாட்டார். ஒரு நாள் மார்ஸியோன் என்னும் ஒரு பதிதன் பொலிக்கார்ப்பைப் பார்த்து “நீர் என்னை அறிவீரோ” என்றதற்கு, “ஆம், நீ பசாசின் தலைச்சன் பிள்ளையென்று அறிவேன்” என்றார். இவர் வேதத்திற்காக வெகு ஊக்கத்துடன் உழைத்து, அநேகரை சத்திய வேதத்தில் சேர்த்தார். வேத கலாபனையில் பொலிக்கார்ப் வேதத்திற்காகப் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதிபதி பொலிக்கார்ப்பைப் பார்த்து “வயோதிகனே! கிறீஸ்துவை மறுதலித்து, நாட்டுத் தேவர்களை ஆராதிப்பாயாக” என்று கூறினான். அதற்கு பொலிக்கார்ப், “கடந்த 86 வருடகாலமாய் என் இரட்சகருக்கு ஊழியம் புரிந்தேன். மேலும் எனக்கு அவர் ஒரு தீங்கும் செய்தவரல்ல. இப்பேர்ப்பட்டவரை நான் எப்படி மறுதலிப்பேன்” என்றார். “அப்படியானால் நீ நெருப்பில் சுட்டெரிக்கப்படுவாய்” என்று கோப வெறிகொண்டு கூறினான் அதிபதி. “என் இரட்சகரை மறுதலித்து நித்தியமாய் நெருப்பில் வேகிறதைவிட இப்போது அதில் சற்று நேரம் வேதனைப்பட்டு நித்திய சம்பாவனையைப் பெறுவது உத்தமமல்லவா?” என்று பொலிக்கார்ப் பதிலளித்தார். இதைக் கேட்ட அதிபதி மிகவும் சினங்கொண்டு, இவரைச் சுற்றிலும் மரக்கட்டைகளை அடுக்கி, நெருப்பில் சுட்டெரிக்கக் கட்டளையிட்டான். அவ்வாறே மூட்டப்பட்ட அக்கினிச் சுவாலை, இவரைத் தொடாததைக் கண்ட அதிபதி கோபாவேசங் கொண்டு இவரை ஈட்டியால் குத்திச் சாகடிக்க கட்டளையிட்டான். அப்படியே இவர் குத்திக் கொல்லப்பட்டு, நெருப்பில் சுட்டெரிக்கப்பட்டார். அங்கு கிடந்த இவருடைய எலும்புகளை விசுவாசிகள் வெகு பக்தியாய் எடுத்துக்கொண்டு போனார்கள். 

*யோசனை*

வேத விரோதிகளுடன் தர்க்கிப்பதைவிட, அவர்கள் கூட்டத்தைவிட்டு விலகுவது நலமாகும்.

*ஜனவரி மாதம் 25-ம் தேதி*


*Conversion of St. Paul*
*அர்ச். சின்னப்பர் மனந்திரும்பின திருநாள்.*


அர்ச். சின்னப்பர் யூத பெற்றோரிடமிருந்து பிறந்தார். இளமையில் கல்வி கற்கும்படி இவரை ஜெருசலேம் நகருக்கு அனுப்பிவைத்தார்கள். அவ்விடத்தில் இவர் உலகக் கல்வியுடன் வேதாகமங்களையும் வாசித்துவந்தார். இவர் பரிசேயர் வகுப்பைச் சேர்ந்து, மோயீசனின் ஒழுங்கு ஆசாரங்களை வெகு கவனமாய் அனுசரித்து வந்தார். அர்ச். முடியப்பர் கிறீஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவருடைய வேதத்தைக் கடைபிடித்ததினால், யூதர் அவரைக் கல்லால் எறிந்து கொன்றனர். அப்போது சின்னப்பர் அவர்களுடைய வஸ்திரங்களைப் பத்திரமாய் பார்த்துக்கொண்டு இருந்தார். மேலும் இவர் கிறீஸ்தவர்களைத் தேடிப் பிடித்து, அவர்களை யூத சங்கத்தாரிடம் இழுத்துக்கொண்டுபோய் விடுவார். ஆகையால் கிறீஸ்தவர்கள் இவர் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் அஞ்சி நடுங்குவார்கள். தமாஸ்கு நகருக்குச் சென்று, அங்குள்ள சகல கிறீஸ்தவர்களையும் பிடித்துக் கட்டி ஜெருசலேமுக்கு கொண்டுபோகும்படி, யூத சங்கத்தின் உத்தரவு பெற்று, சின்னப்பர் அவ்விடத்திற்கு புறப்பட்டார். இவர் மத்தியான வேளையில் தமாஸ்கு நகரின் அருகில் செல்லும்போது, சூரியனின் ஒளியைவிட அதிக பிரகாசமான ஒளி இவர்மேல் படவே, இவர் கீழே விழுந்தார். அப்போது, “சவுலே, சவுலே! என்னை ஏன் உபாதிக்கிறாய்?” என்னும் சப்தத்தை இவர் கேட்டு, “நீர் யார் ஆண்டவரே?” என்று வினவியபோது, “நீ உபாதிக்கும் சேசு நானே. என்னை ஏன் உபாதிக்கிறாய்?” என்றார். அதற்கு சின்னப்பர், “ஆண்டவரே! உமது சித்தத்தை அறிவித்தால் அதன்படி செய்கிறேன்” என்றார். பிரகாசமான ஒளியினால் கண் பார்வை இழந்த இவர், தேவ உத்தரவின்படி தமாஸ்கு நகருக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டு, அங்கு மூன்று தினங்களாக உண்ணாமலும் குடியாமலும் தன் பாவங்களுக்கு அழுது துக்கப்பட்டுகொண்டிருந்தார். அந்நேரம் அனனியாஸ் என்பவர் தேவ கட்டளைப்படி சின்னப்பர் தலையின்மேல் தமது கரங்களை நீட்டவே, அவர் கண்பார்வை அடைந்தார். அது முதற்கொண்டு, சின்னப்பர் கிறீஸ்தவ வேதத்திற்காக சகல கஷ்டங்களையும், வேதனைகளையும் அனுபவித்து, சத்திய வேதத்தை தேசமெங்கும் போய் போதித்து அதற்கு சாட்சியாகத் தமது இரத்தத்தைச் சிந்தி மரணமடைந்தார்.

*யோசனை*

தேவ ஏவுதலுக்கு நமது இருதய வாசலைத் திறந்துவைப்போமாக.

*ஜனவரி மாதம் 24-ம் தேதி*

*ஜனவரி மாதம் 24-ம் தேதி*



*St. Timothy, B.M.*
*அர்ச். திமோத்தி*          
*ஆயர், வேதசாட்சி - (கி.பி. 97).*
திமோத்தியின் தந்தை அஞ்ஞானியும், தாய் யூத இனத்தைச் சேர்ந்தவர்களுமாய் இருந்தார்கள். அர்ச். சின்னப்பர் காடு காடாய்ச் சென்று பிரசங்கித்தபோது, திமோத்தியும் இவருடைய தாயும் மற்றும் பாட்டியும் அவ்விடத்தில் ஞானஸ்நானம் பெற்றார்கள். திமோத்தியின் பக்தி, அறிவை அறிந்த அப்போஸ்தலர், இவருக்கு குருப்பட்டம் கொடுத்து தமது பிரயாணங்களில் இவரைத் தமது துணைவராகத் தெரிந்துகொண்டார். அர்ச். சின்னப்பர் இவரைத் துன்பப்படும் கிறீஸ்தவர்களிடம் அனுப்பினார். சில சமயங்களில் வேதத்தில் தத்தளிக்கும் விசுவாசிகளிடமும் இவரை அனுப்பிவந்தார். தமது குருவும், ஆசிரியருமான அர்ச். சின்னப்பரின் புத்திமதியை கேட்டு, அவருடைய ஆலோசனைப்படி திமோத்தி நடந்துகொண்டபடியால், எபேசு நகருக்கு ஆயராக இவர் நியமிக்கப்பட்டார். அர்ச். சின்னப்பர் வேதத்தினிமித்தம் சிறையிலிருந்த காலத்தில், தமது சீஷனாகிய திமோத்திக்கு வேத விஷயமாக இரு நிருபங்களை எழுதி அனுப்பினார். இவர் அநேக புண்ணியங்களையும் தவச்செயல்களையும் செய்து, பிறமதத்தினரால் வேதத்திற்காக தடிகளால் அடிக்கப்பட்டு மரித்து, வேதசாட்சி முடி பெற்றார்.            

*யோசனை*

அர்ச். திமோத்தியைப் போல நாமும் குருக்கள் முதலிய பெரியோர்களுடைய புத்திமதிகளைக் கேட்டு நடப்போமாக.