*
*St. Peter Nolasco, C.*
*அர்ச். நொலஸ்கோ இராயப்பர்*
*துதியர் - (கி.பி. 1258).*
இவர் உத்தம குலத்தில் பிறந்து, சிறுவயதிலேயே ஏழைகள் மட்டில் இரக்கம் காட்டி, அவர்களுக்குத் தர்மம் கொடுத்துவந்தார். இராயப்பருக்குத் திருமணம் செய்துவைக்க குடும்பத்தார் முயற்சிக்கையில், இவர் தமது கற்பை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்து, தனக்கு இருந்த மிகுதியான செல்வத்தை தேவ காரியங்களுக்காகக் கையளித்தார். அந்நாட்களில் ஸ்பெயின் தேசத்தின் பெரும் பகுதியையும், ஆப்பிரிக்காவையும் முகமதியர் கைப்பற்றிக்கொண்டு கிறீஸ்தவர்களைக் குரூரமாய் உபாதித்துவந்தனர். இதைக் கண்ட இராயப்பர் மனம் சகிக்காமல், அவர்களை மீட்கும்படி முயற்சிக்கையில், தேவதாயார் இராயப்பருக்கும், ரேய்மன்ட்டுக்கும், அத்தேசத்து அரசனுக்கும் தோன்றி, கிறீஸ்தவர்களை மீட்பதற்காக ஒரு சபையை உண்டாக்கும்படிக் கூறினார்கள். இவ்வலுவலில் இராயப்பர் அதிக உற்சாகத்துடன், பாப்பரசருடைய அனுமதியைப் பெற்று அச்சபையை ஸ்தாபித்தார். அரசரும், மக்களும் இத்தேவ காரியத்திற்கு உதவினபடியால், அடிமையாயிருந்த அநேகக் கிறீஸ்தவர்கள் முகமதியரிடமிருந்து மீட்கப்பட்டார்கள். இராயப்பர் இச்சபைக்காகக் கடினமான பிரயாணங்களை மேற்கொள்ளும் வேளையில், ஒருநாள் முகமதியர் இவரை நடுச்சமுத்திரத்தில் பாயில்லாத ஒரு தோணியில் ஏற்றிவிட்டு ஓடிப்போனார்கள். அப்போது இவர் தமது போர்வையைக் கடலில் விரித்து, அதில் ஏறிக்கொண்டு பிரயாணம் செய்து சுகமாய் கரை வந்து சேர்ந்தார். இவ்வாறு இவர் அடிமைகளுக்காக துன்பங்கள், வேதனைகள் பட்டு சாகும் தறுவாயில் ஏராளமாய்க் கண்ணீர் சொரிந்து, அடிமைகளை மீட்கும்படி சபையோரை மன்றாடி உயிர் துறந்தார்.
*யோசனை*
நாமும் ஜெபத்தாலும், நன்னடத்தையாலும், பொருளுதவியாலும் பிறருடைய ஆன்ம சரீரக் காரியங்களுக்கு உதவிடுவோமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக