*The Purification*
*அர்ச். கன்னிமரியாயின் சுத்திகரத் திருநாள்*
அக்காலத்தில் யூதர்களின் வழக்கப்படி, குழந்தை பெற்ற தாயானவள் அசுத்தமுள்ளவளாகக் கருதப்பட்டு, சில காலம் வீட்டில் தங்கி, குறிக்கப்பட்ட நாளில் தேவாலயத்திற்குச் சென்று, மோயீசனால் ஏற்படுத்தப்பட்ட காணிக்கையைச் செலுத்தி, தன் குழந்தையை மீட்டுக்கொள்வாள். ஆனால் அர்ச். கன்னிமரியாய் இஸ்பிரீத்துசாந்துவின் அனுக்கிரகத்தால் கர்ப்பந்தரித்து சேசுநாதரை அற்புதமாய்ப் பெற்றெடுத்ததினால், முன் கூறப்பட்ட சடங்கை அனுசரிக்க அவர்களுக்கு கடமையில்லை. ஆயினும் தேவதாய் தாழ்ச்சியினிமித்தமும், மற்றவர்களுக்கு நன்மாதிரிகையைப் படிப்பிக்கவும் தாழ்ச்சிக்குரிய இச்சடங்கை நிறைவேற்றினார்கள். ஏழைகளுக்கு நியமிக்கப்பட்ட காணிக்கையாகிய இரண்டு மாடப்புறாக்களை ஒப்புக்கொடுத்து, தமது தேவ பாலனை மீட்டுக்கொண்டார்கள். அச்சமயம் தேவாலயத்தில் நீதிமானுமாய், பயபக்தியுடையவருமாய், இஸ்ராயேலரின் தேற்றரவுக்கு எதிர்பார்த்திருந்த சிமையோன் என்பவர், இஸ்பிரீத்துசாந்துவின் ஏவுதலினால் அவ்விடம் வந்தார். அவர் திருப்பாலனான சேசுநாதரைத் தமது கரங்களில் ஏந்தியவுடனே, இவர்தான் உலக இரட்சகர் என்று சர்வேசுரனால் அறிந்து, அவரை ஆராதித்து, “ஆண்டவரே நீர் வாக்குத்தத்தம் செய்த உலக இரட்சகரை நான் பார்க்கப் பாக்கியம் பெற்றதால் இக்கணமே அடியேனை உம்மிடத்தில் அழைத்துக்கொள்ளும்” என்னும் கீர்த்தனையைப் பாடினார். பிறகு குழந்தையின் தாயின் பக்கம் திரும்பி, “இப்பாலன் இனி படவிருக்கும் பாடுகளால் உமது இருதயம் வியாகுல வாளால் ஊடுருவப்படும்” என்றார். கிறீஸ்தவப் பெண்கள் தேவமாதாவின் மாதிரிகையைப் பின்பற்றி, குழந்தையைப் பெற்ற 40-ம் நாள் கோவிலுக்குச் சென்று குருவானவரால் மந்திரிக்கப்பட்டு, ஒரு மெழுகுவர்த்தியைக் காணிக்கையாகக் கொடுப்பது நல்ல வழக்கம்.
*யோசனை*
தேவ கற்பனையை அனுசரிப்பதில் வீண் சாக்குபோக்குகளைத் தேடாது இருப்பாயாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக