Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 26 ஜனவரி, 2020

*ஜனவரி மாதம் 26-ம் தேதி*



*St. Polycarp, B.M.*
*அர்ச். பொலிக்கார்ப்* 
*ஆயர், வேதசாட்சி - (கி.பி. 156).*

இவர் அப்போஸ்தலர் காலத்தில் வாழ்ந்து, அவர்களுடன் பேசிப்பழகி, அர்ச். அருளப்பருக்கு சீஷராகி, அவரால் ஸ்மெர்னா நகருக்கு ஆயராக நியமிக்கப்பட்டவர். இவர் பதிதர்களையும், சத்திய வேதத்தை மறுதலித்தவர்களையும் காண சகிக்கமாட்டார். ஒரு நாள் மார்ஸியோன் என்னும் ஒரு பதிதன் பொலிக்கார்ப்பைப் பார்த்து “நீர் என்னை அறிவீரோ” என்றதற்கு, “ஆம், நீ பசாசின் தலைச்சன் பிள்ளையென்று அறிவேன்” என்றார். இவர் வேதத்திற்காக வெகு ஊக்கத்துடன் உழைத்து, அநேகரை சத்திய வேதத்தில் சேர்த்தார். வேத கலாபனையில் பொலிக்கார்ப் வேதத்திற்காகப் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதிபதி பொலிக்கார்ப்பைப் பார்த்து “வயோதிகனே! கிறீஸ்துவை மறுதலித்து, நாட்டுத் தேவர்களை ஆராதிப்பாயாக” என்று கூறினான். அதற்கு பொலிக்கார்ப், “கடந்த 86 வருடகாலமாய் என் இரட்சகருக்கு ஊழியம் புரிந்தேன். மேலும் எனக்கு அவர் ஒரு தீங்கும் செய்தவரல்ல. இப்பேர்ப்பட்டவரை நான் எப்படி மறுதலிப்பேன்” என்றார். “அப்படியானால் நீ நெருப்பில் சுட்டெரிக்கப்படுவாய்” என்று கோப வெறிகொண்டு கூறினான் அதிபதி. “என் இரட்சகரை மறுதலித்து நித்தியமாய் நெருப்பில் வேகிறதைவிட இப்போது அதில் சற்று நேரம் வேதனைப்பட்டு நித்திய சம்பாவனையைப் பெறுவது உத்தமமல்லவா?” என்று பொலிக்கார்ப் பதிலளித்தார். இதைக் கேட்ட அதிபதி மிகவும் சினங்கொண்டு, இவரைச் சுற்றிலும் மரக்கட்டைகளை அடுக்கி, நெருப்பில் சுட்டெரிக்கக் கட்டளையிட்டான். அவ்வாறே மூட்டப்பட்ட அக்கினிச் சுவாலை, இவரைத் தொடாததைக் கண்ட அதிபதி கோபாவேசங் கொண்டு இவரை ஈட்டியால் குத்திச் சாகடிக்க கட்டளையிட்டான். அப்படியே இவர் குத்திக் கொல்லப்பட்டு, நெருப்பில் சுட்டெரிக்கப்பட்டார். அங்கு கிடந்த இவருடைய எலும்புகளை விசுவாசிகள் வெகு பக்தியாய் எடுத்துக்கொண்டு போனார்கள். 

*யோசனை*

வேத விரோதிகளுடன் தர்க்கிப்பதைவிட, அவர்கள் கூட்டத்தைவிட்டு விலகுவது நலமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக