Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 26 ஜனவரி, 2020

*ஜனவரி மாதம் 25-ம் தேதி*


*Conversion of St. Paul*
*அர்ச். சின்னப்பர் மனந்திரும்பின திருநாள்.*


அர்ச். சின்னப்பர் யூத பெற்றோரிடமிருந்து பிறந்தார். இளமையில் கல்வி கற்கும்படி இவரை ஜெருசலேம் நகருக்கு அனுப்பிவைத்தார்கள். அவ்விடத்தில் இவர் உலகக் கல்வியுடன் வேதாகமங்களையும் வாசித்துவந்தார். இவர் பரிசேயர் வகுப்பைச் சேர்ந்து, மோயீசனின் ஒழுங்கு ஆசாரங்களை வெகு கவனமாய் அனுசரித்து வந்தார். அர்ச். முடியப்பர் கிறீஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவருடைய வேதத்தைக் கடைபிடித்ததினால், யூதர் அவரைக் கல்லால் எறிந்து கொன்றனர். அப்போது சின்னப்பர் அவர்களுடைய வஸ்திரங்களைப் பத்திரமாய் பார்த்துக்கொண்டு இருந்தார். மேலும் இவர் கிறீஸ்தவர்களைத் தேடிப் பிடித்து, அவர்களை யூத சங்கத்தாரிடம் இழுத்துக்கொண்டுபோய் விடுவார். ஆகையால் கிறீஸ்தவர்கள் இவர் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் அஞ்சி நடுங்குவார்கள். தமாஸ்கு நகருக்குச் சென்று, அங்குள்ள சகல கிறீஸ்தவர்களையும் பிடித்துக் கட்டி ஜெருசலேமுக்கு கொண்டுபோகும்படி, யூத சங்கத்தின் உத்தரவு பெற்று, சின்னப்பர் அவ்விடத்திற்கு புறப்பட்டார். இவர் மத்தியான வேளையில் தமாஸ்கு நகரின் அருகில் செல்லும்போது, சூரியனின் ஒளியைவிட அதிக பிரகாசமான ஒளி இவர்மேல் படவே, இவர் கீழே விழுந்தார். அப்போது, “சவுலே, சவுலே! என்னை ஏன் உபாதிக்கிறாய்?” என்னும் சப்தத்தை இவர் கேட்டு, “நீர் யார் ஆண்டவரே?” என்று வினவியபோது, “நீ உபாதிக்கும் சேசு நானே. என்னை ஏன் உபாதிக்கிறாய்?” என்றார். அதற்கு சின்னப்பர், “ஆண்டவரே! உமது சித்தத்தை அறிவித்தால் அதன்படி செய்கிறேன்” என்றார். பிரகாசமான ஒளியினால் கண் பார்வை இழந்த இவர், தேவ உத்தரவின்படி தமாஸ்கு நகருக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டு, அங்கு மூன்று தினங்களாக உண்ணாமலும் குடியாமலும் தன் பாவங்களுக்கு அழுது துக்கப்பட்டுகொண்டிருந்தார். அந்நேரம் அனனியாஸ் என்பவர் தேவ கட்டளைப்படி சின்னப்பர் தலையின்மேல் தமது கரங்களை நீட்டவே, அவர் கண்பார்வை அடைந்தார். அது முதற்கொண்டு, சின்னப்பர் கிறீஸ்தவ வேதத்திற்காக சகல கஷ்டங்களையும், வேதனைகளையும் அனுபவித்து, சத்திய வேதத்தை தேசமெங்கும் போய் போதித்து அதற்கு சாட்சியாகத் தமது இரத்தத்தைச் சிந்தி மரணமடைந்தார்.

*யோசனை*

தேவ ஏவுதலுக்கு நமது இருதய வாசலைத் திறந்துவைப்போமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக