*St. John de Britto, M.*
*அர்ச். அருளானந்தர்*
*வேதசாட்சி - (கி.பி. 1663)*
பிரபு வம்சத்தைச் சேர்ந்த அருளானந்தர் சிறு வயதில் போர்ச்சுகல் தேசத்து இராஜாவின் குமாரனுக்குத் தோழனாக நியமிக்கப்பட்டு, இராஜ அரண்மனையில் வளர்ந்துவந்தார். அவ்விடத்தில் இவருக்கு பசாசினால் உண்டான தந்திர சோதனைகளை ஜெயித்து புண்ணியவாளராய் நடந்துவந்தார். இவர் கடினமான வியாதியில் விழுந்து, அர்ச். பிரான்சிஸ் சவேரியாரின் வேண்டுதலால் குணமடைந்து, அவருடைய மாதிரிகையைப் பின்பற்றி, சேசு சபையில் சேர்ந்தார். பிற மதத்தினரை மனந்திருப்ப ஆவல்கொண்டு, அதற்குத் தன் உறவினர்களாலும் விசேஷமாய்த் தன் தாயாராலும் ஏற்பட்ட தடைகளையெல்லாம் வெற்றிகொண்டு, இந்திய தேசத்திற்கு பயணம் செய்தார். பல இடங்களில் வேதம் போதித்து, மதுரையில் வேதத்திற்காக உழைத்தார். அவ்விடத்தில் பிற மதத்தினரால் உண்டான துன்பதுரிதங்களுக்கு அஞ்சாமல், அநேகருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். கடின வியாதியால் துன்பப்பட்ட ஒரு இராஜ பிரபு, அருளானந்தருடைய வேண்டுதலால் குணமடைந்து, ஞானஸ்நானம் பெற்றான். இவனுக்கிருந்த ஐந்து மனைவிகளில் ஒருத்தியை மாத்திரம் வைத்துக்கொண்டு மற்றவர்களை நீக்கிவிட்டான். மீதமிருந்த நான்கு ஸ்திரீகளில், அரசனுடைய பேத்தியான ஒருத்தி, அருளானந்தர்மேல் அதிக கோபாவேசங்கொண்டு அவரைக் கொல்லக் கட்டளையிடும்படி அரசனை மன்றாடினாள். அரசன் தன் பேத்தியின் பேச்சை மறுக்க முடியாதவனாய், அருளானந்தரைச் சிரச்சேதம் செய்யக் கட்டளையிட்டான். அவ்வாறே அர்ச். அருளானந்தர் ஓரியூரில் வேதசாட்சியாக மரணமடைந்தார்.
*யோசனை*
தேவ பணிவிடைக்கு ஆண்டவரால் அழைக்கப்படுகிறவர்களுக்கு உண்டாகும் தடைகளை தைரியத்துடன் வெல்லவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக