Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 6 பிப்ரவரி, 2020

*பெப்ருவரி மாதம் 5-ம் தேதி*



*St. Agatha, V.M.*
*அர்ச். ஆகதா*
*கன்னிகை, வேதசாட்சி*  
*(கி.பி. 251)* 


செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த ஆகதா, தன்னுடைய பெற்றோரால் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டாள். இப்பெண் பசாசினாலும், துஷ்டராலும் ஏற்பட்ட தந்திர சோதனைகளை ஜெயித்து, தன் ஆத்துமமும் சரீரமும் பாவத்தால் கறைப்படாதபடிக்கு வெகு கவனமாய் இருந்தாள். ஆகதாவின் உத்தம குடும்பத்தையும், அழகையும், பெரும் சொத்துக்களையும்பற்றி கேள்விப்பட்ட குயிந்தானுஸ் என்னும் அதிகாரி, இவளை மணமுடித்துக்கொள்ள செய்த முயற்சிகளெல்லாம் வீணானதால், இவள் கிறீஸ்தவளென்று  குற்றஞ்சாட்டி, இவளது கற்பைப் பறிக்கும்படி ஒரு விபச்சார ஸ்திரீயிடம்  கையளித்தான். இப்புண்ணியவதி பாவத்திற்கு சம்மதியாததை அறிந்த அதிகாரி, இவளைக் கொடூரமாய் அடித்தும், நயமாகப் பேசியும், பயமுறுத்தியும் பார்த்தான். எதற்கும் இவள் அஞ்சாததினால், இவளுடைய மார்பை அறுத்து சிறையிலடைக்கும்படி கட்டளையிட்டான். அன்று இரவு அப்போஸ்தலரான    அர்ச். இராயப்பர் ஆகதாவுக்குத் தோன்றி, அவளைத் தைரியப்படுத்தி, அவள் காயம் முழுவதையும் குணமாக்கினார். இதைக் கேள்விப்பட்ட அதிகாரி கோபத்தால் பொங்கியெழுந்து, தரையில் பரப்பியிருந்த நெருப்பில் அவளைப் புரட்டச் சொன்னான். அந்நேரத்தில் அந்நகரம் அதிர்ந்ததைக் கண்ட அதிபதி, ஜனங்கள் தன்னை எதிர்த்துக் குழப்பம் செய்வார்களென்று பயந்து, அப்புண்ணியவதியை சிறைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான். ஆகதா தான் பட்ட காயங்களினால் வேதனையை அனுபவித்து, சிறையில் உயிர் துறந்து வேதசாட்சியானாள்.

*யோசனை*

கற்பென்னும் புண்ணியம் ஒரு தேவ கொடை. அதை கவனமாக ஜெபத்தாலும் ஐம்புலன்களின் அடக்கத்தாலும் பழுதின்றிக் காப்பாற்றுவோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக