Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 22 ஜனவரி, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - அர்ச். குழந்தை தெரேசம்மாள் ( St. Therese of Child Jeus)

சிறிய புஷ்பம்


அவள் சொல்லால் ஏற்பட்டதைக் காட்டிலும் அவளுடைய செய்கையால் ஏற்பட்டதே “சேசுவின் சிறிய புஷ்பம்.


சிறிய புஷ்பம் என்று சொன்ன மாத்திரத்தில் அது 'அர்ச். குழந்தை தெரேசம்மாள்' என்று உடனே எவரும் சொல்லக் கூடும். சேசுவின் சிறிய புஷ்பம் என்ற காரணப் பெயர் இந்த அர்ச்சியசிஷ்ட கன்னிகைக்கு உண்டாகக் காரண மென்ன என்று கேட்டால் அது அநேகருக்குத் தெரியாது. ஆயினும் இது அவளுடைய பல உருவப் படங்களில் ஒன்றையெடுத்துச் சற்று உற்று நோக்குவோருக்குக் சட்டெனத் தெளிவாகும். எப்படியெனில், ஒரு வகையான படத்தில் அர்ச்சியசிஷ்டவள் தனது கைகளில் சிலுவையில் பாடுபட்டு மரித்த சேசுநாதரின் திருச்சுரூபத்தையும், அதோடு ரோஜா மலர்களையும் ஏந்திக் கொண்டிருப்பதைக் காணலாம். ஆனால் அதன் அர்த்தத்தைச் சிந்தித்துப் பார்த்தவர் எத்தனை பேரோ! பாடுபட்ட அவ்வுருவமும் அப்புஷ்பங்களும் அழகுக்காக அந்த அம்மாளின் கைகளில் இருக்கின்றனவா? அநேகர் பாடுபட்ட சுரூபங்களையும், படங்களையும் மற்ற உருவங்களையும் காட்சிக்கு வைத்தி ருப்பது போல் அந்த அர்ச்சியசிஷ்ட கன்னிகையும் வெளித்தோற்றத்திற்காக அதை வைத்திருக்கின்றாளா? அல்ல, அல்ல, அவள் அவ்விதம் வைத்திருப்பதன் கருத்தும் விசேஷமும் வேறு.

அதாவது, சேசுநாதர் சுவாமி பாடுபட்ட உருவத்தைப் பார்த்த அர்ச்சிய சிஷ்டவள் அவருடைய பாடுகளின் பேரில் தியானித்து அவரைப் போல் தானும் ஆத்துமங்களுக்காகச் சாகிறதானாலும் சரி, அதற்கு சம்மதம் என்றிருந்தாள். அவர் பேரிலும் ஆத்துமங்களின் பேரிலும் வைத்த சிநேகத்தால் தன் சித்தத்தையும், சரீரத்தையும் ஒறுக்க உடன்பட்டாள். இது அவள் கூறியவைகளிலிருந்து தெரிய வருகின்றது.

அவன் கூறியவைகளாவன: “என் சுய மனதை முறித்து. நாவை அடக்கி, ஒருவரும் பார்க்கக் கூடாத அற்ப சொற்ப உதவி ஊழியங்களைப் பிறருக்குச் செய்யப் பிரயாசைப் பட்டேன். யாதொரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமானால் ஏற்ற வழிவகைகளையும் தகுந்த சாதனங்களையும் தேடி உபயோகிப்பது அவசியம். சிலுவையின் வழியாக நான் ஆத்துமங்களை இரட்சிக்க வேண்டுமென்று அவர் எனக்குத் தெரிவித்திருக்கிறார்." 

"மெய்யான தேவ சிநேகமின்றி நாம் செய்யும் எந்தக் காரியமும் வீண் என்று அறிந்தேன்; மிகவும் பிரபல்யமான அதியுன்னத புண்ணிய முயற்சி முதலாய் தேவ சிநேகமில்லையானால் பிரயோஜனமற்றதே." "ஒரேயொரு காரியம் மாத்திரம் செய்ய வேண்டும். அதாவது, சிறு புண்ணியப் பலிகளாகிய பூ மலர்களை சேசுவின் சமுகத்தில் தெளித்து தன்னை முழுவதும் அவருக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்துவிடுவதுதான் அர்ச்சியசிஷ்டவளாக வழி" என்று சொல்லியிருக்கிறாள். 'பிரசங்கத்தினால் செய்யும் அப்போஸ் தலத்துவத்தைப் பார்க்கிலும் ஜெபத்தின் அப்போஸ்தலத்துவம் அதிக மேன்மையானதல்லவா? ஆயிரக்கணக்கான ஆத்துமங்களை இரட்சிக்கும் சுவிசேஷ வேலையாட்களுக்காக வேண்டிக் கொள்வது நமது அலுவலா யிருக்கும் போது நாமும் அவர்களைப் போல் ஆத்தும இரட்சணியத்துக்காக உழைக்கிறோம் என்றே சொல்ல வேண்டும்."
"பூமலர் தெளித்தல்" என்றால் என்ன? அதாவது, சிறு காரியங்களில் தன்னைத்தானே ஒறுத்தலாம்; கிரமமற்ற பார்வை, பிறச்சிநேகத்துக்கு விரோதமான வார்த்தை முதலானவைகளை அடக்கி ஜெயித்தல், நான் செய்யும் அற்பக் கிரியை முதலாய் சிநேகத்தை முன்னிட்டுச் செய்வேன். அது இன்பமானாலும் சரி. துன்பமானாலும் சரி, சகலமும் சிநேகத்துக்காகவே அனுபவிப்பேன் என்று தீர்மானித்து நடத்தல்: இதுதான் "பூமலர் தெளித்தல்" என்று சொல்லப்படும். “என் கையில் கிடைக்கும் பூக்களையெடுத்து ஓர் இதழ் விடாமல் எல்லாவற்றையும் தெளிப்பேன்." இதைப் போல் அநேக தடவைகள் அவள் சொல்லியிருப்பதுமன்றி, எத்தனையோ அற்ப சொற்பமான காரியங்களையும் செய்திருக்கிறாள்.

அவள் ஆண்டவரை அதிகமதிகமாய் நேசிக்க, நேசிக்க ஆத்தும இரட்சணிய ஆவலும் மென்மேலும் அதிகரித்தது. இந்தக் கொள்கை அவளுக்கு மட்டுமல்ல, ஆனால் சகல அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் உண்டு. ஏனெனில் சர்வேசுரனைச் சிநேகிக்கிறவர்கள் அவர் நேசிக்கிறவர்களை நேசிக்காமலிருக்க முடியாது. இதனாலேயே தேவசிநேகமும், பிறர் சிநேகமும் இணைபிரியாத சங்கிலி யெனச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆண்டவர் ஆத்துமங்களை நேசித்ததால் தமது உயிரையே கையளித்தார். அப்படியே அவரை நேசிக்கிற அர்ச்சியசிஷ்ட வர்களும் ஆத்துமாக்களுக்காகத் தங்கள் உயிரைக் கொடுக்கத் தயாரா யிருக்கிறார்கள். ஆன்மாக்களை இரட்சிக்கும் அலுவலை விட மேலானது வேறொன்றுமில்லை. ஆகையால் அர்ச். சின்ன தெரேசாள் ஆண்டவரை நேசித்து அவருக்காக ஆத்துமங் களையும் நேசித்தாள்.

இந்த அலுவவைச் செய்ய அவள் தெரிந்துகொண்ட வழியென்ன? தான் வெளியில் போய்ப் பிரசங்கிக்க முடியாதென்றும், அரும்பெரும் காரியங் கனளச் செய்ய தான் ஆற்றல் இல்லாதவள் என்றும் அறிந்த அர்ச்சியசிஷ்டவள் குருக்களுக்காக வேண்டிக்கொள்ளுதலிலும், அதனோடு அற்ப சொற்ப ஒறுத்தல்களைச் சேர்த்தலிலும் தன் கவனத்தைச் செலுத்துவாளாயினள். இந்த ஒறுத்தல் முயற்சிகளைத்தான் சிறிய புஷ்பங்கள் என்று அவள் சொல்வது வழக்கம். இந்தப் பூக்கள் தான் பாடுபட்ட சுரூபத்தோடே ஒன்றித்திருக்கின்றன. இவைகள்தான் அவளுடைய படத்தில் காணப்படும் ரோஜா மலர்கள். அதாவது, சேசுநாதருடைய பாடுகளோடு தன்னுடைய அற்ப சொற்ப அலுவல்களாகிய ஒறுத்தல்களை ஒன்றிக்கிறாள். இதுதான் சேகநாதருக்குப் பிரியமானது. ஆத்துமங்களுக்காக உழைப்பதைவிட மேலாக அவர் மதிப்பதும், விரும்புவதும் வேறொன்றுமில்லை. மலர் மாலைகளைவிட இந்த ஒறுத்தல் மாலைதான் உத்தமமானது. மேலும் அற்பக் காரியங்களை அவமதித்து, பெருங்காரியங்களைச் செய்யலாமென்றிருந்தால், அவை சாத்தியமாகுமோ என்னவோ? அப்படிக் காரியங்கள் செய்யக்கூடிய காலம் வந்த போதிலும், அந்நேரத்தில் அவற்றைச் செய்யக் கூடுமெனச் சொல்வதற்கு இல்லை. சிறு கைங்கரியங்களைச் செய்து அனுபவ சித்தியடையாமல் திடீரெனப் பெரியதோர் காரியத்தைச் சாதிப்பது எவ்வாறு? இலவு காத்த கிளிபோல் ஏமாற வேண்டியதுதான். நாட்டில் உள்ள பத்துக் குருவிகளைவிட கையிலுள்ள ஒன்றே சாலச் சிறந்தது. அற்பக் காரியங்களை அசட்டை செய்தவர்கள் அரும்பெரும் காரியங்களை நிகழ்த்துவது அபூர்வம்; குதிரைக் கொம்பாகி விடும்.

மேலும் சேசுநாதர் சுவாமி மற்ற வழிகளையெல்லாம் விட்டு விட்டு பாடுபடும் பாதையையே பலனுள்ளதாகக் கொண்டார். (ஆத்துமங்களை இரட்சிப்பதற்கு) இதற்கு மேலான வழி வேறென்ன உண்டு? அவரே வழி. அவரைப் பின்பற்றுதலே முறை.

இவற்றையெல்லாம் அறிந்த நமது நாயகி குழந்தை தெரேசாள் தனது சிறு புண்ணிய முயற்சிகளைப் பூவெனக் கொண்டு அதை ஆண்டவரின் பாடு களோடு ஒன்றித்து, அதன் பலனை ஆத்துமாக்களுக்கு அளிப்பதே தனது அலுவல் எனக் கொண்டாள். பரலோகத்திற்குத் தான் சென்ற போதும் அங்கிருந்து பூமியிலுள்ள நமக்கு இப்பூக்களைத் தருவதாக சித்தங் கொண்டாள். வான்வீட்டில் கஷ்டங்களில்லை. ஆகையால் அங்கிருந்து அவள் அள்ளியிறைக்கும் மலர்களோ சர்வேசுரனின் வரப்பிரசாதங்களேயன்றி வேறல்ல: இந்தச் செய்கையைக் குறிக்கும் படத்தையும் காணலாம். அவள் இவ்வுலகிலிருந்த போது தனது சிறிய புஷ்பங்களைச் சேசுவின் பாடுகளோடு ஒன்றித்ததன் பலன்களை இப்போது அவள் பரலோகத்தில் அனுபவிப்பதோடு நமக்கும் தாராளமாய்த் தருகிறாள். இதனோடு அவள் மடத்தில் சேரும்போது தன்னைத்தானே சிறிய புஷ்பம் என்று அழைத்தாள். 

அதாவது கார்மெல் மடத்தை ஒரு பூந்தோட்டமாகவும், அதில் தான் பிரவேசித்ததால் அங்கு இருந்த கன்னிகா மலர்க் கூட்டத்தில் தன்னை ஒரு சிறு கன்னிகையாகப் பாவித்து, "சிறிய புஷ்பம்" எனச் சொல்லிக்கொண்டாள். அவள் சொல்லால் ஏற்பட்டதைக் காட்டிலும் அவளுடைய செய்கையால் ஏற்பட்ட தே "சேசுவின் சிறிய புஷ்பம்."

அவளுடைய கிரியைகளால், சிறு ஒறுத்தல் முயற்சிகள் ஆகிய மலர்களால் அவளுடைய சிறிய புஷ்டமானது எது என்று நன்றாய் விளங்குகிறது. இச்சிறு புஷ்பங்கள் சகலருக்கும் உண்டு, அவைகளைச் சேசுநாதருடைய திருப்பாடு களோடு ஒன்றித்து நறுமணம் கமழும் ரோஜா புஷ்பங்களாக மாற்றினாள் தமது அர்ச்சியசிஷ்டவள். நம்மில் அப்படிச் செய்கிறவர்கள் எத்தனை பேர்? நாம் ஏன் அவள் செய்தது போலச் செய்யக் கூடாது? "கேளுங்கள் கொடுக்கப் படும். தட்டுங்கள் திறக்கப்படும். தேடுங்கள் கண்டடைவீர்கள்" என்று திருவாய் மலர்ந்தருளிய திருவள்ளல் எப்போதும் அருள்புரியச் சித்தமாயிருக்கிறார். 

"மனமுண்டானால் இடமுண்டு," "செவியுள்ளோர் கேட்கட்டும், கண்ணுள்ளோர் காணட்டும்" என்கிறார். நமது ஆத்துமக் காதுகளும், கண்களும் இன்னும் திறக்கப்பட வில்லையா? எவ்வளவு காலம். அவருக்குக் காது கொடாமலும், அவரை உற்று நோக்காமலுமிருப்போம்? எவ்வளவு காலம் அசமந்தமா யிருப்போம்? எவ்வளவு காலம் சோம்பேறிகளாய் ஜீவிப்போம்? நமக்குப் புத்தி வருவது எப்போது? குழந்தை தெரேசம்மாள் சிறிய புஷ்பம்தான்; ஆனால் அவள் பெரிய அர்ச்சியசிஷ்டவள். அவள் என்ன பெருங்காரியத்தைச் செய்தாள்? தன் அந்தஸ்தின் கடமைகளைச் செய்தாள். அதைப் பிரமாணிக்கமாய்ச் செய்தாள்; சேசுநாதரின் பாடுகளோடு தனது அற்ப அலுவல்களை ஒன்றித்தாள். வேறொன்றும் செய்யவில்லை. நமது கடமைகளை நாம் ஏன் பிரமாணிக்க மாய்ச் செய்ய முடியாது? அவைகளை நாம் ஏன் சேசுவின் திருப்பாடுகளோடு ஒன்றிக்க முடியாது? நாம் ஏன் ஆத்துமாக்களுக்காக வேண்டிக்கொள்ள முடியாது? இனிமேலாவது சுறுசுறுப்பாய் எழுந்திருப்போம்: அர்ச்சியசிஷ்ட வளைப் பின் செல்வோம்;சேசுநாதரைத் தொடர்வோம்.

ஆத்துமங்களை இரட்சிக்க நம்மால் கூடியதெல்லாம் செய்வோம். ஆண்டவர் நமக்குத் திருவருள் பாலிப்பார். அர்ச். குழந்தை தெரேசம்மாள் சகாயம் செய்வாள். சேசுவின் சிறிய புஷ்பமென்னும் பெரிய அர்ச்சியசிஷ்டவளே, எங்களுக்காக எப்போதும் வேண்டிக்கொள்ளும். உமது மூலமாய் ஆண்டவர் எனக்குப் புரிந்த சகல நன்மைகளுக்காகவும் மிகவும் நன்றியறித் திருக்கிறோம். கடமைகளைச் சரியாய்ச் செய்யாதவர்களென்று கண்டனத் திற்கு நாங்கள் உட்படாதபடி எங்கள் சிறு அலுவல்கள், ஒறுத்தல் முயற்சி களெல்லாம் சர்வேசுரன் முன்பாகப் பேறுபலனுள்ள அநேக சிறு மலர்களாய் மாறும் படிக்கு எங்களுக்கு உதவி புரியும். 

நாங்கள் செய்யும் சிற்சில ஒறுத்தல் உபவாச முயற்சிகளும், தவக் கிரியைகளும், மற்றும் அற்பப் புண்ணியச் செய்கைகளும், எங்களுக்கு வீண் பெருமை சிலாக்கியத்தை உண்டுபண்ணாமல் சகல மகிமையும் தோத்திரமும் சர்வேசுரனுக்கே சதா காலமும் உண்டாகக்கடவதென்று சமாதானமாய் ஆண்டவரில் அகமகிழ எங்களுக்கு அருள்புரிய உமது பூமாரியைப் பொழியத் தீவிரியும். கர்த்தரின் திருத்தாயான அர்ச். கன்னிமரியன்னையையும் நோக்கி வேண்டிய எங்களை அவர்களது பிள்ளைகளாக அந்த அம்மணியின் அடைக்கலத்தில் சேரும்; அப்பெருமாட்டியின் பேருபகாரத்தை எங்களுக்காகக் கோரும். கன்னிகா ரத்தினமே, கருணைக் களஞ்சியமே, சேசுவின் சிறிய புஷ்பமே, பெரிய அர்ச்சியசிஷ்டவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.





Virgin and Doctor of the Church

Parents:   Marie Françoise-Thérèse Martin
Born:       2 January 1873
Place:      Alençon,[1] Orne, France
Died 30 September 1897 (aged 24)
                Lisieux, Calvados, France

Beatified 29 April 1923 by Pope Pius XI
Canonized 17 May 1925 by Pope Pius XI


Feast

3 October (Pre-1969 Roman Calendar, Melkite Calendar)

Patronage Missionaries, France, Russia, those suffering with HIV/AIDS or tuberculosis, florists and gardeners, orphaned children, those who are homeless, and aviators

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - அர்ச். மாக்ஸிமிலியன் கோல்ப் (st. maximilian kolbe)

 தன்னையே பலியாக்கியவர்



"ஒருவன் தன் சிநேகிதர்களுக்காக தன் பிராணனை கொடுக்கிறதைவிட அதிகமான சிநேகம் எவனிடத்திலும் இல்லை " (அரு. 15:13)

ஒருவன் தன் சிநேகிதர்களுக்காக தன் பிராணனை கொடுக்கிறதைவிட அதிகமான சிநேகம் எவனிடத்திலும் இல்லை" (அரு. 15:13) என்று நமது திவ்விய இரட்சகர் திருவாய் மலர்ந்தருளினார். தன் சிநேகிதர்களுக்காக ஒருவன் தன் உயிரைப் பலியாக்குதல் உயரிய சிநேகம் என்றால், அந்நியனான ஒருவனுக்காக, தனக்கு அறிமுகமில்லாத ஒருவனுக்காக ஒருவன் தன் உயிரைத் தியாகம் செய்வானாகில் அது மிகவும் உயரிய சிநேகமன்றோ? இத்தகைய ஒரு தியாகத்தைத்தான் சங், மாக்ஸிமிலியன் கோல்ப் சுவாமிகள் செய்தார்.

1941-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ஆம் நாள். பரிசுத்த கன்னிமரியம்மாள் ஆன்ம சரீரத்தோடு பரலோகத்துக்கு எழுந்த நாளுக்கு முந்தின நாள். அன்று தான் சங். மாக்ஸிமிலியன் கோல்ப் சுவாமிகள் மரணத் தீர்வைப் பெற்றிருந்த குடும்பத் தலைவன் ஒருவனுக்குப் பதிலாக தமது உயிரைத் தியாகம் செய்து நாஸி முகாம் ஒன்றில் உயிர் துறந்தார்.

1941-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் இறுதி வாரத்தில் ஒரு நாள் நாஸிகள் முகாமிலுள்ள 14-வது விடுதியிலுள்ளோருக்கு அன்று இரவு தூக்கம் பிடிக்க வில்லை. காரணம், அவர்களோடு அடைபட்டுக் கிடந்த கைதியொருவன் தப்பி ஓடி விட்டதும், அதன் விளைவாக முகாமின் தலைவன் விடுத்த ஆணையும்  தான் காரணம். "தப்பியோடிய கைதி நாளை காலைக்குள் பிடிபடாவிட்டால் உங்களில் பத்துப்பேர் பட்டினி போட்டு சாகடிக்கும் விடுதிக்கு அனுப்பப் படுவீர்கள்” என்று சொல்லியிருந்தான் முகாம் தலைவன். இதை கேட்ட ஒரு சிறுவன் பயத்தினால் நடுநடுங்கிக்கொண்டிருந்தான்.

அவனது முகத்தில் பெருங் கலவரம் குடி கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த பெரியவர் சிறுவனைத் தேற்றினார்; "பயப்படாதே தம்பி, சாவுக்கு நாம் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை". இவ்விதம் சிறுவனைத் தேற்றியவர் வேறு யாரும் இல்லை, சங். மாக்ஸிமிலியன் கோல்ப் சுவாமிதான். சிறுவனுக்கு மாத்திரமின்றி விடுதியிலுள்ள எல்லோருக்கும் சங். சுவாமிகள் ஆறுதல் கூறி எல்லோரின் உள்ளங்களையும் பரலோக நினைவால் நிரப்பி வந்தார்.

மறுநாள் விடிந்தது. வழக்கம் போல் ஆஜர் எடுத்து முடிந்ததும் 14ம் இலக்க விடுதியிலுள்ளோர் தவிர மற்றவர்கள் தங்கள் தங்கள் விடுதிக்கு அனுப்பப்பட்டனர். 14-ம் இலக்க விடுதியிலுள்ளோர் அன்று முழுவதும் கொளுத்தும் வெயிலில் நிறுத்தப்பட்டனர். வெயிலின் கொடூரம் தாங்க முடியாமல் அநேகர் மயங்கி கீழே சாய்ந்தனர். அவர்களை நாஸிகள் இரக்கமின்றி நையப் புடைத்தனர். சரீரங்கள் அசைவற்றவுடன் அவைகளையெல்லாம் ஒன்றின் மேல் ஒன்றாய் புளி மூட்டைகளை அடுக்குவது போல் அடுக்கினர். சங், கோல்ப் சுவாமியார் காச வியாதியுற்றவராயிருந்தும் கூட மயங்கி விழவில்லை. பயப்படவில்லை, சிலுவையடியில் நின்ற வியாகுல அன்னையைப் போல அவரும் வைரம் பாய்ந்த உள்ளத்தோடு அந்த உச்சி வெயிலில் நின்று கொண்டிருந்தார்.

பிற்பகல் 3 மணிக்கு வெயிலில் நின்றுகொண்டிருந்த கைதிகளுக்கு சூப் அருந்துவதற்காக சிறிது ஓய்வு கொடுக்கப் பட்டது. அவர்களில் பத்து பேருக்கு அதுவே கடைசி உணவு. சூப் அருந்தி முடித்ததும் கைதிகள் எல்லோரும் மறுபடியும் வரிசையாக நிறுத்தப்பட்டனர். மாலைப் பொழுதும் வந்தது. முகாம் தலைவன் 14ம் இலக்க விடுதிக் கைதிகளைப் பார்வையிட வந்தான். நாஸிகளின் சித்திரவதைக்கு இலக்காகி நின்ற அந்த நடைப் பிணங்களைக் கண்டதும் கோரமாக அவன் நகைத்தான். "தப்பியோடியவன் இன்னும் கண்டுப்பிடிக்கப் படவில்லை. ஆகவே நான் சொன்னபடி உங்களில் பத்துப் பேர் சாக வேண்டும்; அடுத்த முறை இவ்விதம் நடந்தால் இருபது பேர் சாக வேண்டியிருக்கும்”. என்று முழங்கினான் முகாம் தலைவன்.

கைதிகளை ஒவ்வொருவராய்ப் பார்த்துக்கொண்டே சென்றான் முகாம் தலைவன். "வாயைத் திற, நாக்கை நீட்டு, பல்லைக் காட்டு" என்று ஒவ்வொரு கைதியிடமும் அவன் கூறிச் சென்றது. கசாப்புக்கு ஆடுகளை தெரிவு செய்வது போல் இருந்தது. எல்லோரையும் பார்வையிட்டப் பின்னர், அவர்களில் பத்துப் பேரை பொறுக்கியெடுத்தான் முகாம் தலைவன். அவர்களது எண்களை யெல்லாம் குறித்துக்கொண்டான் அவனது உதவியாளன்.

"ஐயோ, என் நேச மனைவி மக்களை நான் இனி என்று காண்பேன்?.... கண்மணிகளே" என்று உள்ளங் குமுறி அழுதான் அப்பத்து பேர்களில் ஒருவன். சிறுபிள்ளைப் போல் அவன் தேம்பித் தேம்பி அழுத காட்சி பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

சங். கோல்ப் சுவாமிகள் அந்த மனிதனையே பார்த்துக் கொண்டிருந்தார். நெஞ்சைப் பிழியும் அவனது அழுகுரல் அவரது மென்மையான இருதயத்தைத் தொட்டது. அவரது கண்களிலும் அவரை அறியாமலே நீர் சுரந்தது.

சாவுக்கு தீர்வையிடப்பட்ட பத்துக் கைதிகளுக்கும் ஆணை பிறந்தது. "ம்... செல்லுங்கள் பட்டினி விடுதிக்கு". அடி மேல் அடியெடுத்து வைத்த அவர்கள் தங்கள் சாவை எதிர் நோக்கிச் சென்றனர்.

திடீரென எதிர்பாராத ஒன்று நடந்தது. சங். கோல்ப் சுவாமிகள் ஓடி வந்தார். முகாம் தலைவனை அணுகினார். முகாம் தலைவன் உடனே தனது கைத்துப்பாக்கியை கையில் எடுத்தான். "உனக்கு என்ன வேண்டும் நாயே" என்று குருவானவரைப் பார்த்து கர்ஜித்தான்.

"இவர்களில் ஒருவருக்குப் பதிலாக நான் சாகத் தயாராயிருக்கிறேன்" என்று அமைதியான குரலில் பதில் அளித்தார் சங், கோல்ப் சுவாமிகள்

இதைக் கேட்ட முகாம் தலைவனுக்கு ஒரே ஆச்சரியம். “ஏன் அவ்வாறு கூறுகிறாய்" என்று கேட்டான் அவன்.

"நான் வயோதிகன், உதவாக்கரை. நான் இனியும் இவ்வுலகில் இருப்பதனால் ஒரு பயனும் விளையப்போவது இல்லை" என்றார் குருவானவர்.

"யாருக்குப் பதிலாய் நீ சாக விரும்புகிறாய்"என்று முகாம் தலைவன் கேட்டான்.

பரிதாபமாக அழுத அந்தக் குடும்பத் தலைவனைச் சுட்டிக் காட்டினார் குரு. “இவருக்குப் பதிலாகத்தான். இவருக்கு மனைவியும் மக்களும் இருக்கின்றார் கள். இவரது பராமரிப்பு அவர்களுக்குத் தேவையாயி ருக்கின்றது"

"நீ யார்?"மறுபடியும் குருவானவரைப் பார்த்துக் கேட்டான் முகாம் தலைவன்.

நான் ஒரு குரு

ஒரு கணம் அமைதி நிலவியது. பிறகு உறுதியான குரலில் “சரி நீ அவனுக்குப் பதிலாக சாகலாம், அவன் வீட்டிற்கு போகலாம்" என்றான் முகாம் தலைவன். குடும்பத் தலைவன் விடுதலையடைந்தான். குருவானவர் மற்ற ஒன்பது கைதிகளோடும் சேர்ந்து கொண்டார். அன்றிலிருந்து அந்தப் பத்துக் கைதிகளுக்கும் பசி தீர்க்க உணவு கிடையாது. தாகந் தீர்க்க தண்ணிருங் கிடையாது. ஜன்னலே இல்லாத அந்த பாழறையில் அந்த பத்துப் பேரும் அடைக்கப்பட்டனர்.

அந்த அறையில் புதிதாக வந்தவர்களோடு மொத்தம் முப்பது பேர் அடைக்கப்பட்டிருந்தனர். வழக்கமாக அந்த அறையில் அழுகையும் கூப்பாடுமாகத்தான் இருக்கும். ஆனால் சங். கோல்ப் சுவாமிகள் அங்கு சென்றதிலிருந்து அழுகையும் கூப்பாடும் நின்று ஜெபங்களும் ஞான கீர்த்தனைகளும் கேட்க ஆரம்பித்தன.

“எங்களுக்கு உணவு தராவிட்டாலும் கொஞ்சம் தண்ணீராவது தாருங்களேன்", என்று கெஞ்சுங் குரலில் கேட்பார்கள் கைதிகள். ஆனால் அவர்களது வேண்டுகோள் நிராகரிக்கப்படும். சங். கோல்ப் சுவாமிகள் ஒன்றுமே கேட்க வில்லை. அவர் எப்பொழுதும் நின்றுகொண்டு அல்லது முழந்தாளிலிருந்து ஜெபித்த வண்ணமிருப்பார். அவரைப் பார்த்த ஒரு அதிகாரி, "இந்த மாதிரி ஒரு மனிதனை நாங்கள் என்றுமே கண்டதில்லை" என்று கூறினான்.

சித்திரவரை 15 நாட்களுக்கு மேல் நீடித்தது. ஆகஸ்டு மாதம் 14-ஆம் நாள், அன்று பட்டினி விடுதியில் நான்கு பேர் மட்டும் எஞ்சியிருந்தனர். இவர்களில் சுய அறிவோடிருந்தவர் சங். கோல்ப் சுவாமிகள் மாத்திரம்தான். திடீ ரென அறைக் சுதவுகள் திறந்தது. எஞ்சியிருந்தவர்களை தீர்த்துக்கட்டும்படி ஆணை பெற்றிருந்த ஒரு அதிகாரி அறைக்குள் நுழைந்தான்.

சுவரில் சாய்ந்த வண்ணம் உட்கார்ந்து கொண்டிருந்தார் சங். கோல்ப் சுவாமிகள்.

“கையை நீட்டு” என்றான் அதிகாரி. குருவானவர் கையை நீட்டினார். விஷத்தை ஊசி மூலம் அவரது உடம்பில் செலுத்தினான் அதிகாரி.

சங். கோல்ப் சுவாமிகளின் முகத்தில் எவ்விதமான கலவரமும் காணப்படவில்லை. ஆழ்ந்த அமைதி அதிலே பிரதிபலித்தது. இன்னதென்று சொல்ல முடியாத ஒரு ஒளி அவரது வதனத்தைச் சூழ்ந்திருப்பது போல் தோன்றியது.

சங், கோல்ப் சுவாமிகளின் ஆன்மா விண்ணகம் நோக்கிப் பறந்தது. அவரது உடலையோ நாஸிகள் நெருப்புக்கு இரையாக்கினர்.

இவருக்கு 1971-ல் முத்திப்பேறு பட்டமும், 1984-ல் அர்ச்சியசிஷ்டப் பட்டமும் கொடுக்கப்பட்டது


சாங்க்தா மரியா - ஜனவரி - மார்ச் 2016



Please read more about the Sacramentals here . . .

அருட்கருவிகள் (Sacramentals) பற்றி மேலும் தெரிந்து கொள்ள  in Tamil


Life History of St. Maximillian Kolbe

சனி, 20 ஜனவரி, 2024

தேவதிரவிய அநுமானங்கள் II - உறுதிபூசுதல் (Confirmation)

உறுதிபூசுதல் 

நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், 
திருச்சி, 1941 




சாதாரணமாய் உறுதிபூசுதல் கொடுப்பதற்கு உரிமை உள்ளவர் மேற்றிராணியாரே, விசேஷ அனுமதியின் பேரில் மாத்திரம் குருக்கள் உறுதிபூசுதல் கொடுக்கலாம் (தி. ச. 772). உறுதிபூசுதல் கொடுக்க வேண்டிய மேற்றிராணியார், அமிஸ், ஸ்தோலா, வெள்ளைக்காப்பா இம்மூன்றும் அணித்து கொண்டு பீடத்தின் நடுவில் ஓர் ஆசனத்திலே அமர்ந்து கரங்களைக் கழுவின பின்னர், எழுந்து, ஜனங்கள் பக்கமாய் நின்று, உரத்த சத்தமாய், "திவ்விய இஸ்பிரீத்துசாத்துவானவர் உங்கள் பேரில் இறங்கி வருவாராக; அதி உன்னதமானவரின் வல்லபம் பாவத் தினின்று உங்களைப் பாதுகாப்பதாக" என்று சொல்கிறார். பிறகு, உறுதிபூசுதல் பெறவேண்டியவர்களை நோக்கிச் சிலுவை அடையாளம் வரைந்து அவர்கள் மேல் தமது சுரங்களை விரித்து, மன்றாடுவதாவது: "வல்லமுள்ள நித்திய சர்வேசுரா. உமது அடியார் களாகிய இவர்களை தண்ணீராலும் இஸ்பிரித்துசாந்துவினாலும் புதுப்பித்தருளினீரே, இவர்களுடைய பாவங்களை யெல்லாம் மன்னித்து கொண்டீரே; இவர்கள் மேல் பரலோகத்திலிருந்து தேற்று கிறவராகிய ஏழு வரங்களைக் கொடுக்கும் உமது இஸ்பிரீத்துவை அனுப்பியருளும், ஆமென். ஞானம், அறிவு என்பனவகளின் இஸ்பிரித்துவை, ஆமென். விமரிசையும் திடனுமுள்ள இஸ்பிரித் துவை, ஆமென். புத்தி பக்திக்குரிய இஸ்பிரித்துவை, ஆமென். உமது பயத்தின் இஸ்பிரித்துவால் அவர்களை நிரப்பி, நித்திய சீவியத்தை அடையும்படி கிறீஸ்துநாதருடைய சிலுவையால் அவர்களை வரந்தருளும்."


மேலே குறிப்பிட்டவைகளை மேற்றிராணியார் சொல்லுகையில், உறுதிபூசுதல் பெறவேண்டியவர்கள் தங்கள் பெயர் எழுதியிருக்கிற சீட்டைக் கையில் வைத்துகொண்டு இரு வரிசையாய் கோவில் நடுவில் அல்லது கிராதியருகில், முழந்தாளிலிருந்து, தலைகுனிந்து, மேற்றிராணியாரோடு ஒன்றித்து, தங்கள்பேரில் திவ்விய இஸ்பிரித்துசாந்துவானவர் தமது ஏழு வரங்களுடன் எழுந்தருளி வரும்படியாக மன்றாட வேண்டும். முன் கூறிய செபம் முடிந்ததும், அவர்கள் ஒவ்வொருவராக சீட்டை உதவி செய்யுங் குருவானவரிடம் கொடுத்து விட்டு, நிமிர்ந்து நெற்றியைக் காட்ட வேண்டும். அப்போது, மேற்றிராணியார் தமது வலது கரத்துப் பெரு-விரலைப் பரிமளதைலத்தில் தோய்த்து, நெற்றியில் சிலுவை அடையாளமாகப் பூசி. "(பெயர் சொல்லி) நான் உன்னை சிலுவை அடையானத்தால் குறியிட்டு, பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்துசாந்துவுடையவும் நாமத்தினாலே இரட்சண்ய தைலத்தால் உன்னை உறுதிப்படுத்துகிறேன்” என்று சொல்லுவார். “உனக்குச் சமாதானம் உண்டாவதாக" என்று சொல்லிக்கொண்டு, கன்னத்தில், இலேசாய்த் தட்டுவார். உதவிபுரியும் குருக்களில் ஒருவர், பஞ்சால் தைலத்தைத் துடைத்து விடுவார். உறுதிபூசுதல் பெறவேண்டியவர்களுக் கெல்லாம் இவ்விதம் செய்துமுடித்ததும், மேற்றிராணியார் முன்போல் தமது ஆசனத்தில் அமர்ந்து தமது சுரங்களைக் கழுவுவார். அச்சமயத்தில், உதவிபுரியும் குருக்கள் பின்வரும் வாக்கியத்தைப் பாடுவார்கள் அல்லது வாசிப்பார்கள்: “சர்வேசுரா சுவாமி, ஜெருசலேமிலுள்ள உமது பரிசுத்த ஆலயத்திலிருந்து, எங்களிடமாய்ச் செய்தருளின இக்கிரிகையை உறுதிப்படுத்தியருளும்." 

கடைசியாய், மேற்றிராணியார் பின்வரும் செபத்தைச் சொல்லி, ஆசீர்வாதம் அளிப்பார். "ஆண்டவரே, எங்களுக்கு உமது இரக்கத்தைக் காண்பித்து, உமது இரட்சண்யத்தைத் தந்தருளும்.... சர்வேசுரா சுவாமி, உமது அப்போஸ்தலர் களுக்கு திவ்விய இஸ்பிரீத்துசாந்துவை அளித்து, அவர்களாலும் அவர்களைப் பின் தொடர்ந்து வருகிறவர்களாலும் மற்ற விசுவாசிகளுக்கு அவர் அளிக்கப்பட வேண்டுமென்று சித்தமாயிருக்கிறீரே; எங்கள் தாழ்மையின் செயலைத் தயவாய்க் கண்ணோக்கி, நாங்கள் யார் யாருடைய நெற்றிகளில் பரிசுத்த தைலத்தை பூசி சிலுவை அடையாளம் வரைந்திருக்கிறோமோ. அவர்கள்மேல் அந்த இஸ்பிரீத்துவானவர் இறங்கி வந்து, அவர்கள் இருதயங்களைத் தமது மகிமையின் ஆலயமாக்கியருளும்படி அநுக்கிரகித்தருளும்... ஆண்டவருக்குச் செவிகொடுக்கிற ஒவ்வொருவனும் இவ்விதமே ஆசீர்வதிக்கப்படுவான்."  "ஆண்டவர் சீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதித்து நீங்கள் உங்கள் சீவிய கால மெல்லாம் ஜெருசலேமின் நல்ல காரியங்களைக் கண்டு நித்திய சீவியத்தை அடைவீர்களாக ஆமென்.” ஆசிர்வாதம் அளித்தானபின், உறுதிபூசுதல் பெற்றவர்களெல்லோரும் ஒன்று சேர்ந்து உரத்த சத்தமாய், விசுவாச மந்திரம், பரலோக மந்திரம், அருள்நிறை மந்திரம் சொல்வார்கள். 

உறுதிபூசுதல் ஏழு தேவதிரவிய அநுமானங்களில் ஒன்று. அது நமதாண்டவர் தாமே ஏற்படுத்தினது என்று தவறாத திருச்சபை போதிக்கிறது. நமது திவ்விய இரட்சகர் அதை எச்சமயத்தில் ஏற்படுத்தினார் என்பதைப்பற்றி சுவிசேஷங் களில் யாதொரு வார்த்தையுங் கிடையாது; ஆயினும், ஆண்டவர் உயிர்த்தபின், இவ்வுலகில் இருந்த நாற்பது நாட்களில்  காலத்தில்தான் அதை ஏற்படுத்தினார் என்பது வேதபாரகரின் பொதுவான அபிப்பிராயம், சுவிசேஷங்களில் உறுதி பூசுதலைப்பற்றிச் சொல்லாவிடினும், அப். நடபடி ஆகமம் எட்டாவது அதிகாரத்தில் இதைப்பற்றிக் கூறியிருக்கிறது. அர்ச். பிலிப்பு (தியாக்கோன்) சமாரித்தனரிற் சிலரை மனந்திருப்பி, இதை அர்ச். இராயப்பருக்கும் அர்ச். அருளப்பருக்கும் தெரிவித்தபொழுது, இந்த அப்போஸ்தலர்கள் ஜெருசலே மிலிருந்து அவர்களிடம் போய், அவர்கள்பேரில் தமது கரங்களை விரித்தார்கள். அவர்களும் இஸ்பிரீத்துசாந்துவைப் பெற்றுக்கொண்டார்கள் என்று எழுதியிருக்கிறது. அர்ச். சின்னப்பர் தமது நிருபங்களில் பல இடங்களிலும் இதைப்பற்றிப் பேசுகிறார். திருச்சபையின் ஆரம்பத்தில், ஞானஸ்நானம் கொடுத்தவுடன் உறுதிபூசுதலும் கொடுக்கப்பட்டது என்று தெரியவருகிறது. 

திவ்விய இஸ்பிரித்துசாத்துவைப் பெற்று, அவரது வரங்களின் பலனைக் கொண்டு விசுவாசத்தில் உறுதியும் திடனும் அடைவதே இந்தத் தேவதிரவிய அநுமானத்தால் உண்டாகும் விசேஷ வரப்பிரசாதம். ஞானஸ்நானத்தால் சர்வேசுரனுக்கும் திருச்சபைக்கும் பிள்ளைகள் ஆகிறோம். கிறீஸ்தவர்கள் ஆகிறோம்: உறுதிபூசுதலினால், சேசு கிறீஸ்துநாதரின் படை வீரர் ஆகிறோம். உறுகிபூசுதலுக்குரிய சடங்குகளும் ஜெபங்களும் சுருக்கமானவைகள். அவைகளின் விபரமும் எளிதானது. 
  1. ஆரம்பத்தில் மேற்றிராணியார் கரங்களை விரித்து மன்றாடுவதும், பின்னர் பரிமள தைலத்தால் நெற்றியில் பூசுவதும் திவ்விய இஸ்பிரீத்து சாந்துவை அளிப்பதற்கான வெளிச் சடங்குகள்.
  2. கன்னத்தில் தட்டுவதினால், நமது விசுவாசத்தினிமித்தம் எவ்வித உபத்திரவங்களுக்கும் அஞ்சாமல் சேசு கிறீஸ்துநாதருக்காகத் துன்பமும் மரணமுமே அடைய, நாம்: பயப்படாதிருக்கவேண்டுமென்று நமக்கு நினைப்பூட்டுகிறார். 


உறுதிபூசுதலிலும் ஒரு ஞானத்தாய் அல்லது தகப்பன் இருக்கவேண்டுமென்று திருச்சபை சுட்டளையீடுகிறது. உறுதிபூசுதல் பெறப்போகிற ஆண்பிள்ளைகள் எல்லோருக்கும் ஒரே ஞானத்தகப்பனும், பெண்பிள்ளைகள் எல்லோருக்கும் ஒரே ஞானத்தாயும் இருப்பது போதுமானது; இதுவே அநேக இடங்களில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஞானத்தாய் அல்லது ஞானத்தகப்பன் உறுகிபூசுதல் பெறுகிறவர்களுடைய தோளின் மேல் தனது கையை வைத்திருப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவேண்டியதில்லை. ஞானத்தாய் அல்லது ஞானத்தகப்பன் கத்தோலிக்கராகவும் உறுதிபூசுதல் பெற்றவர் களாகவும் இருக்க வேண்டும் என்று சொல்லாமலே விளங்கும். 


உறுதிபூசுதல் பெறப்போகிறவர்கள் அனுசரிக்க வேண்டியவை

  1. ஐந்து மந்திரங்களும், பிரதான சத்தியங்களும், விசேஷமாய் உறுதிபூசுதல் பெறுவது எதற்காக என்பனதயும் அறிந்திருக்கவேண்டும். 
  2. முந்தினநாள் பாவசங்கீர்த்தனம் செய்து உறுதிபூசுதல் பெறுகிற அன்று திவ்விய நற்கருணையும் உட்கொள்வது நல்லது. 
  3. முந்தின நாளிலேயே பங்கு குருவானவரிடமிருந்து உறுதிபூசுதல் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். 
  4. உறுதிபூசுதல் பெறவேண்டிய தினத்தன்று, ஆலயத்திற்கு போகையில் கூடியமட்டும் சுத்தமாகவும், தலை முடி அலங்கோலமாய்த் தொங்களி டாமல் விசேஷமாய் நெற்றியில் விழாமல், ஒழுங்காய்ச் தலை வாரியிருத்தல் நல்லது. 
  5. வழக்கமாய் திவ்விய பலிபூசை முடிவில் மேற்றிராணியார் உறுதிபூசுதல் கொடுப்பதால் பூசை முடியும் போது. அவர்கள் முன்கூறிய வண்ணம் இரு வரிசையாய் கோவில் நடுவில் அல்லது கிராதியில் சப்தம் செய்யாமல் முழந்தாளில் இருக்கவேண்டும். 
  6. உறுகிபூசுதலின் இறுதியில் மேற்றிராணியார் அளிக்கும் ஆசீர்வாதத் திற்கு எல்லோருமிருந்து, அதற்குப்பின் விசுவாச மந்திரம், பரலோக மந்திரம், அருள்நிறை மந்திரத்தை எல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து சொல்லவேண்டும். 

வெள்ளி, 19 ஜனவரி, 2024

தேவதிரவிய அநுமானங்கள் 1 - Baptism

 ஞானஸ்நானம்

நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941

தேவதிரவிய அநுமானங்களைப் பெறுவதினால் நமக்கு உண்டாகும் ஞான நன்மைகளை நமக்கு வெளி அடையாளங்களால் நினைப்பூட்டும்படியாகத் திருச்சபை, தேவதிரவிய அநுமானங்களை நிறைவேற்றுகையில் சில சடங்கு களைச் செய்யும்படி கற்பித்திருக்கிறது. இந்தச் சடங்குகள் பெரும்பாலும் மிகவும் பழமையானவைகள். அந்தந்த தேவதிரவிய அநுமானத்தின் வழியாக நமது ஆத்துமத்திற்கு அருளப்படும் தேவ கொடைகளையும் வரப்பிரசாதங் களையும் உருவகமாக எடுத்துக்காட்டுவதற்காகவே இந்தச் சடங்குகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

தேவதிரவிய அநுமானங்களுள் முதலில் பெறுவது ஞானஸ்தானம். அப்போஸ் தலராகிய அர்ச் சின்னப்பர் சொல்லும் வண்ணம். அதனால் நாம் சேசுநாதரை ஆடையாக அணிந்துகொள்கிறோம். அதற்குரிய சடங்குகள் மூன்று காரியங் களை நமக்கு நினைப்பூட்டுகின்றன: 

  • நாம் பாவத்தில் ஜெனித்தோம் என்பதையும், 
  • இவ்வுலகில் நமக்குப் பற்பல சோதனைகள் உண்டென்பதையும், 
  • நாம் நித்திய ஜீவியத்திற்காக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் அவைகள் ஞாபகப்படுத்துகின்றன.

பூர்வீக வழக்கம்: 

இக்காலத்தில் அனுசரிக்கிற ஞானஸ்நானச் சடங்குகள் பூர்வீக வழக்கத்தி லிருந்து உண்டானவைகளே. அர்ச். அம்புரோஸ் அதைப்பற்றி வெகு விரிவாய் எழுதியிருக்கிறார். அவரது காலத்தில், பெரிய சனிக்கிழமை மட்டும் வயது வந்தவர்களுக்குப் பகிரங்கமாய் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. இக்காலத் திலும் இதனிமித்தமே ஞானஸ்நானத் தீர்த்தம் பெரிய சனிக்கிழமையில் மந்திரிக்கப்படுகிறது. பூர்வீசக  காலத்தில், ஆடம்பர ஞானஸ்நானம் கொடுத்து வந்தது மேற்றிராணியாரே: குருக்களும் தியாக்கோன்மாரும் அவருக்கு உதவி செய்வார்கள். அக்காலத்தில், தண்ணீரில் உடம்பு முழுவதும் மூழ்கும்படி செய்து ஞானஸ்தானம் கொடுப்பது வழக்கமாயிருந்தது. ஆனால் இவ்விதஞ் செய்வது அத்தியாவசியமல்ல.

இந்த வழக்கம் 9-ம் நூற்றாண்டுவரை நடைமுறையில் இருந்து வந்தது. ஞானஸ்நானம் பெற்றவன் உடனே வெண்ணாடை தரித்து, உறுதிபூசுதலும் பெற்று, திவ்விய பலி பூசை கண்டு, தற்கருணை வாங்குவதும் வழக்க மாயிருந்தது.

இக்கால வழக்கம்: 

இக்காலத்தில் குழந்தைகள் பிறந்தவுடன் கூடிய சீக்கிரம் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று திருச்சபை விரும்புவதால், வயது வந்தவர்களின் ஞானஸ்நானத்தைவிடக் குழந்தைகளின் ஞானஸ்நானமே வெகு சாதாரண மாய் நடைபெற்று வருகிறது. குழந்தையின் ஞானத் தாய் அல்லது ஞானத் தகப்பன் குழந்தையைக் கோவிலுக்குக் கொண்டுவந்து, கோவில் பெரிய வாசற்படி அருகில் நிற்கும்போது, குருவானவர் சர்ப்பிளிஸும் ஊதா ஸ்தோலாவும் அணிந்து, குழந்தைக்கு இடவேண்டிய பெயரை சொல்லி, 

சர்வேசுரனுடைய திருச்சபையிடமிருந்து என்ன கேட்கிறாய்?" என்க, ஞானத்தாய் தகப்பன் “விசுவாசம்" என்கிறார்கள். 

பின்னும் குருவானவர் "விசுவாசத்தால் உனக்கு கிடைப்பதென்ன?" என்று கேட்க, ஞானத்தாய் தகப்பன் “நித்திய ஜீவியம்” என்று பதிலுரைக்கிறார்கள்.

அப்போது குருவானவர், "ஆகையால், நித்திய ஜீவியத்தை அடைய விரும்புவாயாகில், கற்பனையை அனுசரி; உன் தேவனாகிய ஆண்டவரை உன் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமத்தோடும் முழு மனதோடும் சிநேகிப்பாயாக; உன் பிறனையும் உன்னைப்போல் சிநேகிப்பாயாக" என்று சொல்விக் குழந்தையின் முகத்தில் ஊதுகிறார். 

அச்சமயம் அவர் சொல்லும் ஜெபமாவது: "அசுத்த அரூபியே, அவனைவிட்டு அகன்றுபோ, தேற்றுகிறவராகிய திவ்விய இஸ்பிரித்துவுக்கு இடங்கொடு." பூர்வீக காலந்தொட்டு வழங்குகிற இந்தச் சடங்கு திவ்விய இஸ்பிரித்துவை அளிப்பதற்கு அடையாளமாகும்.

பின்னர், குழந்தையின் மனதும் இருதயமும் சுத்தமாயிருக்கவேண்டுமென்ற கருத்துக்காக குருவானவர் அதன் நெற்றியிலும் நெஞ்சிலும் சிலுவை வரைந்து, கிறீஸ்து நாதரின் சிலுவை அடையாளத்தை அடைந்த அக்குழந்தை அவரது கற்பனைகளை அனுசரித்து நித்திய ஜீவியத்தைச் சுதந்தரித்துக் கொள்ள வேண்டுமென்ற கருத்து அடங்கிய ஜெபத்தைச் சொல்லுகிறார். இச்செபம் முடிந்ததும், குருவானவர் தமது கரத்தைக் குழந்தையின் தலைமேல் வைக்கிறார்; இது பலத்தையும் அதிகாரத்தையும் கொடுக்கும் அடையாளம். தலைமேல் கையை வைத்து, விசுவாச வெளிச்சத்திற்கு அழைக்கப்பட்ட இக்குழந்தை சகலவித இருதயக் குருட்டாட்டத்தினின்றும் சாத்தானுடைய மாய்கைகளினின்றும் விடுதலையாகி, ஞானத்தால் நிரம்பி, கடவுளுக்கு அவரது திருச்சபையில் ஊழியஞ்செய்து, தினந்தோறும் பரிசுத்ததனத்தில் நேர்ச்சி அடைய வேண்டுமென்று மன்றாடுகிறார்.

அதன்பின், குருவானவர் "ஞானத்தின் உப்பைப் பெற்றுக்கொள், அது உனக்கு நித்திய ஜீவியத்தை அடைந்து தரும் பரிகார மருந்தாய் இருக்கக்கடவது" என்று சொல்லிக் கொண்டு, ஏற்கனவே மந்திரித்திருக்கிற உப்பில் சிறிதளவு எடுத்துக் குழந்தையின் வாயில் போடுகிறார். திருச்சபை சடங்கு முறையில் உப்புக்குப் பலவகைப்பட்ட அர்த்தமுண்டு. ஞானம், புதுப்பித்தல், சுத்திகரித்தல், அழியாமற் காப்பாற்றுதல் என்று பலவகை அர்த்தங்கொள்ளும். உள்ளபடியே இந்த அர்த்தங்களெல்லாம் குருவானவர் சொல்லுகிற அடுத்த ஜெபத்தில் அடங்கியிருக்கின்றன. இந்த உப்பை ருசிபார்த்தவன் அர்ச்சிப்படைய வேண்டுமென்றும், பரலோக போஜனத்தால் திருப்தி அடைய வேண்டு மென்றும், மனதில் உருக்கமும், நம்பிக்கையில் ஆனந்தமும், தேவ ஊழியத்தில் பிரமாணிக்கமும் அவனுக்கு இருக்கவேண்டுமென்றும் மன்றாடுகிறார்.

இந்த மன்றாட்டுக்குப்பின், பசாசை ஓட்டுஞ் செபம் சொல்லப்படுகிறது. ஞானஸ்நானம் பெறாதவனின் ஆத்துமம் விசேஷ விதமாய் அந்தகார அரூபி களுடைய ஆளுகையில் இருக்கிறது என்று திருச்சபையின் மூதாதையர்கள் படிப்பிக்கிறார்கள். இந்தப் படிப்பினையை அனுசரித்து, இச்சடங்கு ஏற்பட்டது. பின்னும் ஓர் தடவை நெற்றியில் சிலுவை வரைகிறார்; இனிமேல், பசாசு இந்த ஆத்துமத்தைக் கெடுக்கத் தேடி உபயோகிக்கும் தந்திரங்களுக்கு விரோத மாய்த் தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்பதை இது குறிக்கின்றது.

மீண்டும் குருவானவர் தமது கரத்தைக் குழந்தையின் தலைமேல் வைத்து, "சர்வ வல்லபமுள்ள பிதாவே, பரிசுத்த ஆண்டவரே, நித்திய சர்வேசுரா, உண்மைக்கும் ஒளிக்கும் காரண கர்த்தாவே, உமது ஊழியனாகிய இவனை அறிவால் பிரகாசிப்பித்து, சுத்தம் செய்து அர்ச்சித்து, மெய்யான அறிவை இவனுக்குக் கட்டளையிட்டு, இவன் ஞானஸ்நானத்தின் அருளால் உமக்கு அருகனாகி, உறுதியான நம்பிக்கையையும் சரியான யோசனையையும், பரிசுத்த போதகத்தையும் கைக்கொள்ளும்படியாக இவன்பேரில் உமது உன்னத நீதிக் குரிய இரக்கத்தைக் காண்பித்தருள வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்” என்று ஜெபிக்கிறார்.

இந்தச் செபம் முடிந்தவுடன், குழந்தையின் தலையின் மேல் ஸ்தோலாவின் நுனியை வைத்து, “கிறீஸ்துநாதரோடு நித்திய ஜீவியத்தில் உனக்குப் பங்கு கிடைக்கும்படியாக, சர்வேசுரனுடைய ஆலயத்தில் பிரவேசி" என்கிறார்.

அப்போது ஞானத்தாய் தகப்பனும் குழந்தையோடு கோவிலுக்குள் பிரவேசிக்கிறார்கள். பூர்வீக காலங்களில், ஞானஸ்நானம் பெற வேண்டிய வர்கள் சுற்றுப்பிரகாரமாய் வந்து ஆடம்பரமாய் கோவிலுக்குள் செல்வது வழக்கமாயிருந்தது; அதை அனுசரித்து இந்தச் சடங்கு இன்றைக்கும் நடைபெறுகிறது. கோவிலுக்குள் வந்ததும், ஞானத்தாய் தகப்பன் குழந்தைபேரால் குருவானவருடன் சேர்ந்து விசுவாச உச்சாரணமாக, விசுவாச மந்திரஞ் சொல்லுகிறார்கள்; அதற்குப்பின் பரலோக மந்திரமும் சொல்லு கிறார்கள்.

இரண்டாந் தடவையாக பசாசை ஓட்டும் ஜெபத்தைச் சொன்னபிறகு, குருவானவர் தமது நாவில் விரலை வைத்து, குழந்தையின் காதுகளையும், நாசிகளையும் தொட்டு, "எப்பேத்தா -அதாவது: திறக்கப்படு, இனிமையின் சுகந்தத்தில் (திறக்கப்படு); நீயோ, துஷ்ட அரூபியே, வெளியே ஓடிப்போ, ஏனெனில் தேவ தீர்ப்பு சமீபித்திருக்கின்றது" என்று சொல்லுகிறார். காதுகளைத் தொடுவது. தேவ வார்த்தையைக் கேட்டு உணரும்படி புத்தியைப் பிரகாசிப்பதற்கும், நாசிகளைத் தொடுவது ஞான ஜீவியத்தின் பரிமள சுகந்தத்திற்கும் அடையாளமாம். உமிழ்நீரை உபயோகிப்பது சேசுநாதர் சுவாமி உமிழ்நீரோடு கலந்த சேற்றைக் குருடனது கண்களில் தடவி அவனைக் குணப்படுத்தின புதுமையை ஞாபகப் படுத்துகின்றது.

அதன்பின், "பசாசையும், அதன் கிரியைகளையும் ஆடம்பரங்களையும் விட்டுவிடுகிறேன்" என்று குழந்தை பேரால் ஞானத்தாய் தகப்பன் குருவானவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலுரைத்து வார்த்தைப்பாடு கொடுக்கிறார்கள். அப்போது குருவானவர் அர்ச்சியசிஷ்ட எண்ணெயில் தமது பெருவிரல் நுனியைத் தோய்த்து குழந்தையின் நெஞ்சிலும், முதுகிலும், தோள் பட்டைகளுக்கு மத்தியிலும் அர்ச்சியசிஷ்ட எண்ணெயால் சிலுவை வரைந்து, "உனக்கு நித்திய ஜீவியம் கிடைக்கும்படியாக, நமது ஆண்டவராகிய சேசு கிறீஸ்துநாதர் பேரால் உன்னை இரட்சண்ய தைலத்தால் பூசுகிறேன்” என்று சொல்லுகிறார். நெஞ்சில் வரைகிற சிலுவை, நமது பரிசுத்த விசுவாசம் சோதனையை எதிர்க்கும் கேடயமென்றும், முதுகில் வரைகிற சிலுவை, சேசு கிறீஸ்துநாதர் வழியாய் இரட்சண்யம் அடைவதற்கு "நமது சிலுவையைச் சுமந்துகொண்டு அவரைப் பின்செல்ல வேண்டும்” என்றும் காட்டுகிறது.

தைலம் பூசினவுடன் குருவானவர் இதுவரையில் அணிந்திருந்த ஊதா ஸ்தோலாவுக்குப் பதிலாக, வெள்ளை ஸ்தோலாவை அணிந்துகொண்டு. "பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த சர்வத்துக்கும் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறாயா? - அவருடைய ஏக சுதனாகிய நமதாண்டவர் சேசு கிறிஸ்துநாதர் நமக்காகப் பிறந்து பாடுபட்டாரென்று விசுவசிக்கிறாயா? திவ்விய இஸ்பிரீத்துசாந்துவையும், பொதுவாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட சபையையும், அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீத பிரயோசனத்தையும், பாவப்பொறுத்தலையும் சரீர உத்தானத்தையும் விசுவசிக்கிறாயா?" என்று கேட்க, ஞானத்தாய் தகப்பன் ஒவ்வொரு கேள்விக்கும் "விசுவசிக்கிறேன்" என்று பதிலுரைக்கிறார்கள். விசுவாச உச்சாரணம் முடிந்ததும், "ஞானஸ்நானம் பெற ஆசையா" என்று கேட்கிறார். "ஆசிக்கிறேன்" என்று ஞானத் தாய் தகப்பன் பதில் சொல்லவே, குருவானவர் ஞானஸ்நானத் தீர்த்தத்தை ஓர் சிறு பாத்திரத்தில் எடுத்து, குழந்தையின் பெயரை உச்சரித்து "பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்துசாந்து வுடையவும் நாமத்தினாலே, நான் உன்னைக் கழுவுகிறேன்” என்று சொல்லும்போது, குழந்தையின்மேல் சிலுவை அடையாளமாக மும்முறை ஞானஸ்நானத் தீர்த்தத்தை வார்க்கிறார். இதுவே “ஞானஸ்நானத்திற்கு அத்தியாவசியமானது. தண்ணீர் வார்த்தவுடன், இப்போது அக்குழந்தை கிறீஸ்தவன் ஆகிவிட்டான் என்பதற்கு அடையாளமாக குருவானவர் அதன் தலை உச்சியில் பரிசுத்த தைலத்தால் சிலுவை வரைகிறார்.

பின்னர், ஓர் வெள்ளை வஸ்திரத்தை எடுத்துக் குழந்தையின் தலையில் விரித்து, “இந்த வெள்ளை ஆடையை ஏற்றுக்கொண்டு அதை நமதாண்ட வராகிய சேசு கிறிஸ்துநாதருடைய தீர்வை ஆசனத்திற்கு முன்பாக, மாசுபடாமல் கொண்டுபோய்ச் சேர்ப்பாயாக " என்கிறார். பூர்விக காலத்தில் ஞானஸ்நானம் பெற்றவர்கள் வெள்ளை வஸ்திரம் அணிந்து வந்ததிலிருந்து உண்டான வழக்கம் இது. மேலும், ஞானஸ்தானத்தினால் நமது ஆத்துமம் தூய்மையாக்கப்பட்டது; இந்தத் தூய்மையைக் கடைசிமட்டும் மாசுபடாமல் காப்பாற்ற வேண்டியது நமது கடமை என்று இச்சடங்கு நமக்கு நினைப் பூட்டுகிறது.

கடைசியாக, எரிகிற மெழுகுவர்த்தியை ஞானத்தாய் தகப்பன் கையில் கொடுப்பது, விசுவாச வெளிச்சத்திற்கும், சிநேக அக்கினிக்கும் அடையாளம். இதைக் கொடுக்கும் போது குருவானவர் சொல்லுவதாவது: "உனது ஞானஸ்தானத்தை மாசின்றிக் காப்பாற்று; சர்வேசுரனுடைய கற்பனை களை அனுசரி; இவ்வண்ணமாய் கலியாண விருந்திற்கு ஆண்டவர் வருகையில், மோட்ச சாலைகளிலுள்ள சகல அர்ச்சியசிஷ்டவர்களோடு நீயும் அவரைச் சந்தித்து, நித்திய ஜீவியத்தை அடைவாயாக." இங்கே கலியாண விருந்து என்பது, சன்மான நாள் என்று அர்த்தப்படும். சமாதானமாய் போ, ஆண்டவர் உன்னோடு இருப்பாராக "என்னும் மங்கள வசனம் ஞானஸ்நானச் சடங்குகளுக்கு முடிவுரை.

ஞானஸ்நானத்தால் மானிட ஆத்துமத்திற்குண்டாகும். அதிசயத்திற்குரிய பயன்களை மேற்கூரிய சடங்குகள் வெகு தெளிவாய் எடுத்துக்காட்டுகின்றன அல்லவா? மானிட ஆத்துமம் பசாசின் அடிமைத்தனத்தினின்று மீட்கப்பட்டு. ஜென்மப் பாவக்கறை நீங்கி, உலகம் பசாசு சரீரம் என்னும் முதலிய சத்துருக்களை எதிர்த்து நிற்பதற்குத் திடனை அடைகிற தென்று இவைகள் காட்டுகின்றன. அன்றியும், ஞானஸ்நானத்தால் ஆத்துமத்தில் ஓர் புதிய முத்திரை பதித்து, சர்வேசுரனுடைய இராச்சியத்திற்குச் சுதந்திரவாளியாக, கிறீஸ்துநாதர் மந்தையில் ஒரு புதிய ஆடு பிரவேசித்திருக்கிறது என்றும் இச்சடங்குகள் குறிப்பிடுகின்றன.



Please read more about the Sacramentals here . . .

அருட்கருவிகள் (Sacramentals) பற்றி மேலும் தெரிந்து கொள்ள  in Tamil




அருட்கருவிகள் (Sacramentals) in Tamil

 



Ashes, holy water, palms. Crucifixes, rosaries, holy cards, lit candles, and all things and
persons and places blessed to praise God and pray for His gifts are sacramentals.

வியாழன், 18 ஜனவரி, 2024

அர்ச். எவுப்பிறாசியம்மாள் - Ste. EUPHRASIE

மார்ச் மாதம் 13-ந் தேதி. 

அர்ச். எவுப்பிறாசியம்மாள் திருநாள். 

 Ste. EUPHRASIE. 








 கொன்ஸ்காண்டி னொப்பொலி பட்டணத்திலே துரை மக்களான தாய் தகப்பனிடத்தில் அர்ச். எவுப்பிறாசியம்மாள் பிறந்தாள். அவர்கள் அவ்வரசின் இரா யனுக்கு நெருங்கிய உறவாயிருந்ததினால் அவர்களுக்கு வெகு மகிமையாய் இருந்தது. அவளுடைய தாயானவள் மிகப் புண்ணியவதியாயிருந்தமையால் தன்னுடைய மகள் தரும வழியிலே நடக்கப் புத்திமதி சொல்லித் தேவ பத்தியில் பழக்க வெகு பிரயாசைப்பட்டாள். பாவத்தைப் பகைத்துச் சேசுநாதரையும் அவருடைய திருத் தாயாரையுஞ் சிநேகித்திருக்க மகளுக்குத் தாயானவள் அடிக்கடி புத்தி சொன்னதினாலே  ஐந்து வயதுள்ள எவுப்பிறாசியம்மாள் அப்படி நடக்கிறதை கண்டு ஆச்சரியப்பட்டார்கள். இந்தச் சிறு பிள்ளை தாயாருடன் இராயன் அரண்மனைக்குப் போகிற போது இராயனும் இராணியும் அரண்மனையிலேயிருந்த மற்றவர்களும் இந்தம்மாளுடைய பத்தியையும் புத்தியையுங் கண்டு இவளை மிகவுங் கொண்டாடிப் போற்றுவார்கள். இந்தப் பெண் ஒரு துரைமகனுக்கு வாழ்க்கைப்பட வேண்டுமென்று அரசன் கட்டளையிட்டான். 

எவுப்பிறாசியம்மாளுடைய தகப்பனார் காலஞ் சென்ற பிறகு அவளுடைய தாய் அவள் பேரில் அதிக பட்சம் வைத்து வெகு நேர்த்தியாய் விசாரித்து நடத்தினாள். எவுப்பிறாசியம்மாளுக்கு ஏழு வயது நடக்கும் போது தாயும் இவளும் எஜிப்து தேசத்திற்குப் போய்க் கன்னியர் மடத்திற்குப் போனார்கள். எவுப்பிறாசியம்மாள் அந்தக் கன்னியர்கள் மடத்தையுங் கண்டு அவர்களுடைய தரும நடக்கையையும் அறிந்து அவர்களுடன் தானும் இருக்க ஆசைப்பட்டதினாலே தான் அங்கே யிருக்கிறதன்றி வெளியிலே போகிறதில்லை யென்று சொன்னாள். தாயுங் கூடவந்த மற்றவர்களும் அந்த மடத்தை விட்டுத் தங்கள் அரண்மனைக்கு அவளைக் கூட்டிக் கொண்டு போக எவ்வளவு பிரயாசைப்பட்டாலும் எவுப்பிறாசியம்மாள் அதற்குச் சம்மதிக்கவில்லை. தாய் இதைக் கண்டு ஞான சந்தோஷப்பட்டதுமன்றி மகள் கேட்ட காரியத்திற்குஞ் சம்மதித்தாள். ஆதலால் தாய் தன்னுடைய அரண்மனைக்குப் போன போது எவுப்பிறாசியம்மாள் அந்தக் கன்னியர்கள் மடத்திலே இருந்து விட்டாள். அவளுக்கு வயது கொஞ்சமாய் இருந்ததினாலே மற்ற கன்னியர்களைப் போல அவள் ஒரு சந்தியாயிருக்கமாட்டாள், செபம் பண்ணமாட்டாள், தபசு பண்ணமாட்டாள், அதற்குத் தக்க பிராயமாகுமட்டும் பிள்ளைகளுக்குரிய விதமாய் அவளை நடத்தவேண்டி இருக்குமென்று அந்தக் கன்னியர்கள் நினைத்திருக்கிறது, அவர்கள் நினைத்ததற்கு மாறாக மற்றவர்களை விட அந்தப் புண்ணியங்களை அதிக சுறுசுறுப்போடே செய்துகொண்டு வந்தாள். 



அந்தக் கன்னியர்கள் அதைக் கண்டு ஆச்சரியப் பட்டு இவள் பேரில் விசேஷமான பட்சம் வைத்தார் கள். இவளுடைய தாய் மரணமடைந்த செய்தியை இராயன் அறிந்து தம்மாலே குறிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு எவுப்பிறாசியம்மாள் வாழ்க்கைப்பட வேண்டுமென்று இந்தம்மாளுக்குச் சொல்லி அனுப்பினான். ஆனால் எவுப்பிறாசியம்மாள் இராயனுக்கு அனுப்பின கடிதத்தில் எழுதியிருந்ததாவது: இராயரே, உம்மாலே குறிக்கப்பட்ட மாப்பிள்ளையை விட மேலானவர் சேசுநாதர். சேசுநாதருக்கு என்னுடைய கன்னிமையை ஒப்புக்கொடுத்ததினால் என்னை முழுவதும் அவருக்கு ஒப்புக்கொடுத்துவிட்டேன். ஆகையினால் நான் சாகுமட்டும் எப்பொழுதுங் கன்னிகையாய் இருக்கிறதன்றி நான் ஒருவருக்கும் வாழ்க்கைப்பட மாட்டேன். என்னுடைய ஆஸ்தியெல்லாந் தரும காரியத்திலே செலவழிக்கத் தேவரீரை மன்றாடுகிறேனென்று எழுதினாள். 

இராயன் அந்தக் கடிதத்தை வாசித்த பிறகு ஞான சந்தோஷப்பட்டு அவள் ஆசைப்பட்டதிற்கு விக்கினம் பண்ணினதில்லை. 

அந்தம்மாள் அந்த மடத்திலே பண்ணின ஆச்சரியமான புண்ணியங்களால் அங்கேயிருந்த கன்னியர்கள் மிகவும் அவளைப் புகழ்வார்கள். இந்தப் புகழ்ச்சி அவர் களுக்குள்ளே ஒருத்திக்குப் பொருந்தாமல் பொறாமை வருவித்ததினாலே இவள் அந்தப் புண்ணியவதி பேரிலே வர்மம் வைத்து அவளுக்கு அநியாய தொந்தரவு  பண்ணத் துவக்கினாள். எவுப்பிறாசியம்மாள் மிகுந்த பொறுமை காட்டி தாழ்ச்சியி னாலே அவளுடைய காலிலே விழுந்து மன்னிப்பு கேட்டாள். பசாசு அவளுக்கு வருவித்த எண்ணப்படாத சோதனைகளை யெல்லாம் வேண்டுதலைக்கொண்டு நீக்கி வென்றாள்.  ஆச்சரியத்திற்குரிய அநேகம் புதுமைகளைச் செய்தாள். 

தனக்கு சாவு கிட்டியிருக்கிறதென்று ஆண்டவராலே புதுமையாய் அறிந்து மரணத்திற்கு உத்தமமான ஆயத்தம் பண்ணினாள். அவளுக்குக் காய்ச்சல் வந்த பிறகு அவள் நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ணித் தேவநற்கருணையும் அவஸ்தைப் பூசுதலும் பெற்று சேசு மரியே என்னும் திருநாமங்களைப் பத்தியோடே சொல்லி 412-ம் வருஷத்தில் நல்ல மரணத்தை அடைந்தாள். 

கிறீஸ்துவர்களே! ஒரு சிறு பிள்ளையின் ஆச்சரியமான பத்தியுஞ் சாதுரியப் பேச்சும் யாவரும் அதிசயமாய் எண்ணுவதுபோல் கொஞ்ச வயதுள்ள அர்ச். எவுப்பிறாசியம் மாளிடத்திலே உண்டான உத்தம பத்தியையும் நீங்கள் ஆச்சரியத்தோடே பார்த்துக் கண்டு பாவிக்கப் பிரயாசைப்பட வேண்டும். அந்தம்மாளுக்கு ஏழு வயது நடக்கிற போது அவள் மெத்த வயதுள்ளவளைப்போல் புண்ணியங்களைச் செய்து வந்தாளென்று கேட்டீர்களே; அவளுடைய தாய் இந்தச் சிறு பிள்ளைக்குச் சொன்ன நல்ல புத்தியானது அந்த ஆச்சரியமான பத்தி வொழுக்கத்திற்கு ஓர் காரணமா யிருந் தது. 

"தாய் தகப்பன்மார்களே! அத்தகைய நல்லொழுக்கம் உங்கள் மக்களிடத்திலே காண வேண்டுமானால் உங்களுடைய கடனின்படியே அவர்களுக்கான புத்தி சொல்ல வேண்டும். சில தாய்மார் தங்கள் மக்களுடைய சரீரத்தை அலங்கரிக்க மிகுந்த உடமைகளைச் சம்பாதித்துக் கொடுக்கப் பிரயாசைப்படுவதொழிய மக்கள் ஆத்துமத்தை அலங்கரிக்க மக்களுக்குப் புண்ணிய சற்குணம் வருவிக்கப் பிரயாசைப்படுகிறதில்லை. அதினால் தங்கள் பிள்ளைகள் சிலாக்கியம் ஆங்கார முதலிய துராசாபாசங்களினால் கெட்டுப்போவதற்குக் காரணமாகிறார்கள். இத்தகைய தாய்மார்கள் சர்வேசுரனுக்கு என்ன கணக்கு சொல்லப்போகிறார்கள்? அர்ச். எவுப்பிறாசியம்மாள் கொன்ஸ்தான்டினோப்பிள் இராயன் சொன்னபடிக்குத் தனக்கு நியமித்திருந்த மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டால் உலக செல்வ பாக்கியம்   அவளுக்குத் திரளாய் வந்திருக்கும். ஆனால் அவள் அந்தப் பாக்கிய மெல்லாஞ் சாகிறபோது கட்டாயமாய் விடவேண்டியிருந்ததினாலே அந்தம்மாள் அந்தப் பாக்கியத்தைத் தனக்கு வேண்டாமென்று புத்தியுள்ளவள்போல் சொன்னாள், 

ஊழியம் பண்ணுகிற ஒருவன் தன்னுடைய எசமான் தன்னை இனிமேல் தள்ளுவா னென்று நிச்சயமாய் அறிந்திருந்தால் எசமான் தன்னை அவமானத்தோடே தள்ளுவதற்கு முந்தித் தன் எசமானை விட்டுவிடுவது மேல் அல்லவோ? உலகத்திற்கு ஊழியம் பண்ணுகிறவர்கள் எத்தனை ஆஸ்தி எத்தனை மகிமை அனுபவித்தாலும் வாழ்வு நாளில் அவர்களுக்குப் பல பாவ தந்திரத்திற்குக் காரணமான அந்தப் பாக்கிய மெல்லாம் அவர்கள் சாகும்போது அவர்களை விட்டு விடும். 

இதைக் கேட்கிறவனே உலக பாக்கியம் உன்னை ஏமாற்றி விடுகிறதற்கு முந்தி நீயே அதை விட்டு விடுவது மேல். ஒரு ஆஸ்கிக்காரன் சாகிற போது தன்னுடைய ஆஸ்திகளையெல்லாம் எட்டுவிட வேண்டுமென்பதினாலே அவனுக்கு வெகு துக்க துயரமுஞ் சலிப்பும் வரும். ஒரு பிச்சைக்காரன் சாகிற போது விடுவதற்கு ஒன்றுமில்லாததினாலே முன் சொல்லப்பட்ட துக்க துயர சலிப்பு அவனுக்கு வருவ தற்கு இடமில்லை. நீங்கள் உலக பாக்கியத்தின் பேரிலே ஆசை விருப்பம் வையாமலிருந்தால் அந்தப் பாக்கியத்தை விட்டுவிடுவதுபோல் ஆகும்.





புதன், 17 ஜனவரி, 2024

மகா பரிசுத்த கன்னிகை தன் பிள்ளைகளின்மீது கொண்டுள்ள பிரியமுள்ள அன்பு!

 


அர்ச். பெர்னார்ட்: "தன்னை நேசிப்பவர்களை மாமரி அடையாளம் கண்டு, அவர்களை அதிகக் கனிவுள்ள அன்போடு நேசிக்கிறார்கள்" என்கிறார். 

முத்திப்பேறு பெற்ற ரேமண்ட் ஜோர்டான் என்பவர் இதைத் தொடர்ந்து: "தன்னை நேசிப்பவர்களை மாமரி நேசிப்பது மட்டுமின்றி, அவர்களுக்குப் பணிவிடைகளும் செய்கிறார்கள்!" என்கிறார். அர்ச். பெர்க்மான்ஸ் அருளப்பர் கூறுகிறபடி, "நான் மாமரியை நேசிக்கிறேன் என்றால், நிலைமை வரத்தைப் பற்றி நான் உறுதியாயிருப்பேன். கடவுளிடமிருந்து நான் கேட்கிற எதையும் பெற்றுக்கொள்வேன்."

அர்ச். ஸ்தனிஸ்லாஸ் கோஸ்ட்கா இந்தப் பிரியத்திற்குரிய மாதாவை எந்த அளவுக்குக் கனிவுள்ள அன்போடு நேசித்தார் என்றால், அவர்களோடு முகமுகமாய்ப் பேசுவது போலத் தான் அவர் எப்போதும் அவர்களோடு பேசுவார். ஸால்வே ரெஜினா பாடப்படுவதைக் கேட்கும்போது, அவர் நேசத்தால் பற்றியெரிவது போல, அவருடைய முகம் முழுவதும் ஒளியால் தகதகக்கத் தொடங்கி விடும்.

அர்ச். பிலிப் நேரியார் அவர்களைத் தன் மகிழ்ச்சி என்றழைத்தார். அர்ச். பெர்னார்ட் அவர்களை இருதயங்களை ஆட்கொள்பவர்கள் என்று அழைத்தார். அர்ச். அலோய்ஷியஸ் கொன்ஸாகா மாமரியின் திருப்பெயரைக் கேட்ட போதெல்லாம் அக்களிப்புக் கொண்டார். அர்ச். சொலானோ பிரான்சிஸ், தன் தாயை மகிழ்விக்கப் பாடும் சிறு குழந்தையைப் போல், அவர்களுடைய ஆலயங்களில் மாதா பாடல்கள் பாடினார். மாமரி கடவுளால் மிக அதிகமாக நேசிக்கப்பட்டார்கள் என்ற அறிவு தமக்குத் தந்த ஆறுதலைப் போல வேறெதும் தமக்கு ஆறுதல் தந்ததில்லை என்று அர்ச். ப்ரிட்ஜத்தம்மாளின் மகனான சார்ல்ஸ் கூறினார். அர்ச். அல்போன்ஸ் ரொட்ரீகஸ் மாமரியின் மீதான தம் அன்பிற்குச் சாட்சியமாக அவர்களுக்காகத் தம் உயிரைக் கையளிப்பதாக வாக்களித்தார். மாமரியின் மீது விசேஷ அன்பு கொண்டிருப்பது ஒரு பெரிய நற்பேற்றின் அடையாளம் என்று அர்ச். பொனவெந்தூர் அழுத்திக் கூறுகிறார். இந்த அன்னைக்கு மகனாய், மகளாய் இருப்பதை விடப் பெரிய பாக்கியம் ஏதுமில்லை!

("மரியாயின் மகிமைகள்" என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.)

தேவமாதா நம் தாயானால்.....

 


சங், அந்தோனி சேவியர் சுவாமி




புது வருடச் சிந்தனைக்கு:


தேவமாதா நம் தாயானால், அதை நாம் ஏற்பது மெய்யானால், நாம் இப்போது இருப்பது போல் இருப்போமா? இப்படி அவர்களைப் பற்றி உணர்வற்றிருக்க முடியுமா? மாதா மட்டில் இப்படி அசிரத்தையா யிருப்பது சரியாகுமா?

மாதா அப்போஸ்தலர்கள் எனப்படுகிறவர்களும், மாதாவின் பிள்ளைகள் எனப்படு கிறவர்களும், எவ்வகையிலேனும் தங்களை மாதாவுடையவர்கள் எனக் கருதிக் கொள்பவர்களும் ஏன் தான் இப்படி இருக்கிறோம்? உணர்வற்ற மரக்கட்டைகளாக, அலட்சியமாக, தாயை மறந்தவர்களாக, மக்குப் பிடித்து, அன்னைக்கு நேரிடும் துயரங்களாலும், நிந்தைகளாலும் பாதிக்கப்படாதவர்களாக நம்மால் எப்படி இருக்க முடிகிறது?

"நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எங்களால் என்ன செய்ய முடியும்? இயன்ற அளவு செய்யத் தான் செய்கிறோம்" என்று நீங்கள் சொல்லலாம். உங்களால் பின்வருவன வற்றைச் செய்யமுடியும்:

நீங்கள் மாதாவை நேசிக்க முடியும். நேசிக்கிறீர்களா? எந்த அளவுக்கு? இப்போது நேசிப்பதை விட அதிகமாக நேசிக்க முடியாதா?

மாதாவுக்கு ஆறுதலளிக்கும் பரிகார பக்தி முயற்சிகளைக் கடைப்பிடிக்கிறீர்களா? அதிலே மூழ்கிப் போகிறீர்களா? இவ்வளவு பரிகாரம்தான் உங்களால் செய்ய முடியுமா?

பரிகார பக்தியின் அவசியத்தைப் பிறருக்கு எடுத்துச் சொல்லலாம். சொல்லி வருகிறீர்களா?

நம்மில் அநேகருக்குப் பரிகார பக்தி என்றால் என்னவென்றே சரியாகப் புரியவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. அது என்ன?

  • மாதா பகைக்கப்படுவதற்கு ஈடாக அவர்களை நம் உள்ளத்தோடு நேசிப்பது பரிகாரமாகும்.
  • மாதா தூஷணிக்கப்படுவதற்கு ஈடாக அவர்களை இடைவிடாமல் இருதயத்தில் வாழ்த்துவது பரிகாரமாகும்.
  • மாதா மறுக்கப்படுவதற்கு ஈடாக அவர்களை நம் முழு மனதுடன் ஏற்றுக் கொள்வது பரிகாரமாகும்.
  • மாதாவுடன், மாதாவுக்காக நம் வாழ்வை இரவும், பகலும் வாழ்வது பரிகார மாகும். இதையெல்லாம் செய்கிறீர்களா?
  • எந்தத் துன்பத்தையும், நோயையும், கவலையையும், அவமானத்தையும் மாதாவுக்கு ஆறுதலாக, பாவிகள் மனந்திரும்பும்படி ஒப்புக்கொடுக்கிறீர்களா?
  • உங்களையும், உங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் மாதாவுக்கென அர்ப்பணம் செய் திருக்கிறீர்களா?
  • மாதாவின் துயரங்களை ஒவ்வொன்றாய் நினைத்து அனுதாபப்பட்டு அவற்றால் பாவிகளை இரட்சிக்க மன்றாடுகிறீர்களா?
  • மரியாயின் பரிகார பக்தியாகிய முதல் சனி பக்தியை அனுசரிக்கிறீர்களா? அது மாதத்துக்கொரு நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல், பரிகார உணர்விலேயே மாதம் முழுவதும் உங்களை இருக்கச்செய்கிறதா?
  • மாதாவுக்குப் பரிகாரம் செய்ய வேண்டுமென்று ஒரு நாளில் எத்தனை தடவை நினைப்பீர்கள்?
  • ஒரு நாளில் மாதாவுக்கென எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? மாதா ஊழியமாக என்ன செய்கிறீர்கள்?
இவற்றைச் சிந்தித்து. இதுவரை நீங்கள் செய்ததை விட, இனி சற்றுக் கூடுதலாகச் செய்யுங்கள். "இன்னும் கூடுதலாகச் செய்ய வேண்டும்" என்று தூண்டப்படுகிறீர்களா? இல்லையென்றால், மாதாமட்டில் அசமந்தம் உங்களில் தொடங்கியுள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
    மாதாவுக்கு நாம் இடைவிடாமல் நிந்தைப் பரிகாரம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. ஒரு கிறீஸ்தவனின் வாழ்வே கடவுளுக்கும், அவரது அன்னைக்கும் பரிகார வாழ்வாகத்தான் இருக்க வேண்டும். காரணம்: கடவுளுக்கும், மாதாவுக்கும் எதிராக இடைவிடாமல் நிந்தைகளும், அலட்சியங்களும், துரோகங்களும் நடக்கின்றன. பல தடவைகளில் அவை திட்டமிடப்பட்டே செய்யப்படுகின்றன.
      மிகச் சிறந்த வரப்பிரசாத சலுகைகளால் மாதாவை நமக்கெனவே சர்வேசுரன் மகிமைப் படுத்தியிருக்க, மனிதர்கள் அவற்றை மறுப்பதும், பழிப்பதும் அன்றாட நடைமுறையாகி விட்டது.
      • மாதா சாதாரணப் பெண்தான் என்கிறார்கள் ஆங்காரிகள்.
      • மாதா நமக்கு அவசியமில்லை என்கிறார்கள் பதிதர்கள்.
      • மாதாவுக்கு வணக்கம் செலுத்தக்கூடாது என்கிறார்கள் மார்ட்டின் லூத்தரின் சீடர்கள்.
      • மாதாவுக்கு மேலான வணக்கம் ஒன்றும் வேண்டாம். "மரியாளை" வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் என்கிறார்கள் அதிகம் படித்த மேதாவிகள்.
      • ஜெபமாலை தேவையா என்று கேலியாகக் கேட்கிறார்கள் மாதாவை உள்ளூரப் பிடிக்காதவர்கள்.
      • உத்தரியம் மூட பக்தி என்கிறார்கள் அதன் உண்மையைப் புரிய முடியாத அறிவாளிகள்.
      • மாதாவை நேசிக்கக் கூடாது. சங்கிக்கக் கூடாது, அதெல்லாம் விக்கிரக ஆராதனை என்கிறார்கள் அக்கிரமிகள்.
      இதையெல்லாம் நீங்கள் கேள்விப்படவில்லையா?  இவற்றிற்கு மாற்றாக என்ன செய்கிறீர்கள்? உங்கள் இருதயம் துடிக்கவில்லையா? இரத்தம் கொதிக்கவில்லையா? விசேஷமாக மாதாவின் தெய்வீகத் தாய்மையையும், நித்தியக் கன்னிமையையும், அவர்களின் அமல உற்பவத்தையும் அவமானப்படுத்தும் பதிதர்களின் பேச்சுக்களை யும், பிரசுரங்களையும் பார்க்கும்போது உங்கள் உள்ளம் பற்றியெரிந்து மூண்டு எழ வில்லையா? ஆயினும் வெறும் உணர்ச்சிவசப்படுதல் அல்ல.

      நிந்தைப் பரிகாரமே சிறந்த வழி என்று உறுதிபூண்டு, அதைச் செய்யத் தீவிரம் கொண்டிருக்கிறீர்களா? மரியாயின் மாசற்ற இருதயத்திற்குப் பரிகாரம் செய்வது ஒன்றே இன்று திருச்சபையையும்,உலகத்தையும் காப்பாற்றும், மற்ற எந்த முயற்சியும் வீணாகச் செய்யப்படுகிறது.

      மாதா உண்மையானால், அவர்கள் தம் தாயானால், நம் வாழ்க்கை முழுவதும் பரிகார வாழ்வாக மாற வேண்டும். இவ்வன்புத் தாயாரைக் கண்கலங்க நாம் விடலாமா? நம்மையே அவர்கள் நம்பியிருக்கும்போது, நாம் அவர்களைக் கைவிடலாமா? ஆண்டவரும், மாதாவும் உலகில் வாழ்ந்தபோது, அவர்களுக்கு என்ன ஆறுதல் இருந்தது? 33 ஆண்டுகளின் கண்ணீரைத் தவிர? தாங்கள் பட இருந்த பாடுகளின் நினைவு அவர்களிடம் எப்போது இல்லாதிருந்தது? இந்த அன்பின் இருதயங்களுக்கு நம்மைத் தவிர வேறு யாரால் ஆறுதல் வரும்? மாதாவுக்கு நித்தைப் பரிகாரம் செய்வதே சேசுவுக்கும் ஆறுதலாயிருக்கிறது. ஏனெனில் தம் துயரத்தை விட. தாயின் துயரமே அவரை அதிகமாகப் பாதித்தது.

      ஆகவே, மாதாவுக்குப் பரிகார பக்தி என்பது ஏதோ ஒரு காலத்தில் வந்து போகும் பக்தி முயற்சி அல்ல. அது நிரந்தரமானது. ஏனென்றால் மாதாவுக்குச் செய்யப்படும் பரிகாரமே கடவுளுக்குச் செய்யப்படும் பரிகாரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, நாம் செய்யும் சகலமுமே மாதாவுக்குப் பரிகார முயற்சிகளாக மாற வேண்டும். அந்தக் கருத்துடனே அனைத்தையும் இந்தப் புது வருடத்திலிருந்து ஊக்கத்துடன் செய்யத் தொடங்குவோமாக! 
      மரியாயே வாழ்க!



      மாதா பரிகார மலர் - ஜனவரி - பிப்ரவரி, 2024



      தபசுகால ஆயத்த ஞாயிறுகள்: செப்துவாஜெஸிமா, செக்ஸாஜெஸிமா, குவின்குவாஜெஸிமா (Septuagesima, Sexagesima and Quinquagesima)

       


      பாஸ்கு காலச் சுற்று என்பது செப்துவாஜெஸிமா ஞாயிறு முதல் தமத்திரித்துவத் திருநாள் வரை நீடிக்கும் வழிபாட்டுக் காலமாகும். வழிபாட்டு ஆண்டாகிய சக்கரத்தின் அச்சாணியாக விளங்கும் பாஸ்கு காலச் சுற்று, வழிபாட்டின் மையமான பரம இரகசியமும், நம் விசுவாசத்தின் அடிப்படை சத்தியமுமான நம் திவ்ய இரட்சகரின் உயிர்ப்பின் ஞாயிறை உள்ளடக்கியதாக இருப்பதால் அது மற்ற காலச் சுற்றுகளைவிட அதிக முக்கியமானதாக இருக்கிறது.

      இந்தச் சுற்றின் தொடக்கத்தின் முதல் மூன்று ஞாயிறுகள் முறையே செப்துவாஜெஸிமா, செக்ஸாஜெஸிமா, குவின்குவாஜெஸிமா என்று அழைக்கப்படுகின்றன. இந்த மூன்று வார காலம் பொதுவாக செப்துவாஜெஸிமா காலம் என்றே அழைக்கப்படுகிறது. பாப்பரசர் முதலாம் பெலாஜியன் அல்லது அவருக்கு அடுத்து வந்த பாப்பரசர் மூன்றாம் அருளப்பரால் இந்தக் காலம் திருச்சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்காலம் அடிப்படையில் தபசு காலத்திற்கான தயாரிப்புக் காலமாக இருக்கிறது. கிறீஸ்தவ மனத்தைத் தபசுகாலத்தின் ஆழ்ந்த பக்தியார்வத்திற்கும், தவத்திற்கும் ஏற்றபடி ஆயத்தம் செய்வது இதன் நோக்கமாக இருக்கிறது. 

      செப்துவாஜெஸிமா (சப்தரிகை) ஞாயிறு என்பதற்கு, கிறீஸ்துநாதரின் உயிர்ப்புக்கு முன் எழுபதாம் நாள் என்பது பொருளாகும். இந்த ஞாயிறு வாசகங்கள், ஆதாமின் பாவத்தால் மனுக் குலம் துன்பத்திற்கும், சாபத்திற்கும் உட்பட்டு வருந்துவதையும், மனிதன் தன் பாவத்திற்காக வருந்தி, கடவுளின் இரக்கத்தைத் தேடினால் அவன் இரட்சிக்கப்படுவான் என்பதையும் நினைவு படுத்துகின்றன. ஆதாம் சபிக்கப்பட்டபோதே மெசையாவின் வருகையும், இரட்சணியமும் அவருக்கும். அவருடைய சந்ததிக்கும் வாக்களிக்கப்பட்டன. உரிய காலம் வந்த போது, உலகில் தோன்றிய இரட்சகர் தமது சமாதான சுவிசேஷத்தின் திராட்சைத் தோட்டத்தில் உழைக்கும்படி நம்மை அழைக்கிறார். அப்படி உழைப்பவர்களுக்கு அவர் நித்திய ஜீவியத்தையும் வாக்களிக் கிறார். "அதிகமதிகமாய் அச்ச நடுக்கத்தோடு உங்கள் ஈடேற்ற வேலையைப் பாருங்கள்" (பிலிப். 2:12) என்பதுதான் இன்றைய பூசையின் முக்கியக் கருத்து.

      அடுத்து வருவது செக்ஸாஜெஸிமா (சடிகை) ஞாயிறு ஆகும். இதன் பொருள் கிறீஸ்து நாதரின் உயிர்ப்புக்கு முன் அறுபதாம் நாள் என்பதாகும். நம்முடைய உழைப்பு தவத்திற்கேற்ற பலனைத் தர வேண்டுமானால், துன்பங்களை ஏற்றுக்கொள்வது அவசியம் என்றும், மனித பலவீனத்திலேதான் கடவுளின் வல்லமை பூரணமாய் விளங்குகிறது என்றும், இதன் காரணமாக, கிறீஸ்துநாதரின் வல்லமை நம்மில் வாசம் பண்ணும்படி, நம் பலவீனங்களில்தான் நாம் சந்தோஷ மாய் மேன்மை பாராட்ட வேண்டும் என்றும் இன்றைய நிருபம் கற்பிக்கிறது, தேவ வார்த்தை என்னும் விதை விதைக்கப்பெற்று, தேவசிநேகத்தின் கனிகளைத் தருகிற நல்ல நிலமாய் நாம் இருந்து, முப்பது, அறுபது, நூறு மடங்கு பலன் தர வேண்டுமென்று இந்த ஞாயிறு சுவிசேஷ வாசகம் நமக்கு அறிவிக்கிறது.

      இறுதியாக வருவது, குளின்குவாஜெஸிமா ஞாயிறு ஆகும். இதன் பொருள் கிறீஸ்து நாதரின் உயிர்ப்புக்கு முன் ஐம்பதாம் நாள் என்பதாகும். சிலுவையின் பரம இரகசியம் மனித னுடைய புத்திக்கு எப்போதும் கடினமானதாகவே தோன்றுகிறது (1 கொரி. 1:23), கிதீஸ்து நாதருடன் மூன்று ஆண்டுகளாகச் சேர்ந்திருந்த அப்போஸ்தலர்களும் இதைக் கண்டுபிடிக்க வில்லை. தனிமையாக விடப்பட்ட நம் ஆண்டவர் சிலுவையின் பாதையில் தன்னந்தனியே நடந்து செல்கிறார். துன்பங்களின் வழியாகவே பாவப் பரிகாரம் செய்யப்பட முடியும் என்னும் உண்மை சிலுவையில் அறையுண்ட கிறீஸ்துநாதரைத் தியானிப்பதால் விளங்குகிறது. மெய்யான தேவ சிநேகம் இல்லாவிடில், விசுவாசம், பிறர்சிநேகம் ஆகியவை உட்பட எந்தப் புண்ணியத்தாலும் பலனில்லை என்று திருபம் படிப்பிக்கிறது. மேலும் சிலுவையாலன்றி இரட்சணியமில்லை என்றும், இரட்சணியமடைய விசுவாசம் இன்றியமையாதது என்றும் பரிசுத்த சுவிசேஷம் உணர்த்துகிறது.

      இந்த ஞாயிறுகளின் பெயர்கள் பொதுவாக, தபசுகாலத்தின் நாற்பது நாட்களையும் குறிக்கும் குவாத்ராஜெஸிமா என்னும் இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டவையாகும். தபசு காலத்திற்கான ஆயத்தம் முதலில் தபசுகாலத்தின் முதல் ஞாயிறுக்கு முந்திய ஞாயிறன்று தொடங்கியது. இது "தோமினிக்கா (ஞாயிறு) இன் குவின்குவாஜெஸிமா" (பாஸ்குத் திருநாளுக்கு ஆயத்தமான 50 நாட்களுக்குள் வரும் முதல் ஞாயிறு) எனப்பட்டது. சிறிது காலத்திற்குப் பிறகு, இக்காலம் 60 நாட்கள் உள்ளதாக ஆக்கப்பட்டு, அதன் முதல் ஞாயிறு செக்ஸாஜெஸிமா ஞாயிறு எனப்பட்டது. இறுதியாக, இக்காலம் 70 நாட்கள் என்று ஆக்கப்பட்டு, அதன் முதல் ஞாயிறு செப்துவாஜெஸிமா என்று அழைக்கப்பட்டது. இந்த 50, 60, 70 என்ற எண்கள் தோராயமானவையே.

      சில வேத அறிஞர்கள் செப்துவாஜெஸிமா என்பது, இஸ்ராயேல் மக்கள் தங்கள் பாவங்களுக்காகத் தவம் செய்யும்படி அனுபவித்த எழுபது ஆண்டு அடிமைத்தனத்தை ஒரு மாதிரிகையாகக் கொண்டு திருச்சபையில் அறிமுகப்படுத்தப்பட்ட தபசுகாலத்தின் தொடக்கம் என்றும், இந்த எழுபது நாட்களிலும் கத்தோலிக்க விசுவாசிகள் உண்மையான தவ உணர்வோடு தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்து, சேசுக்கிறீஸ்துநாதரின் உயிர்ப்போடு தங்கள் உயிர்ப்பையும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டு என்று அது குறித்துக் காட்டுவதாகவும் கருதுகிறார்கள்.

      மொத்தத்தில், விதை பலன் தருவதற்கு அது மண்ணோடு மண்ணாக மக்கி மடிவது அவசியம். சேசுநாதரோடு மகிமையில் உயிர்ப்பதற்கு, அவரோடு பாடுபடுவது அவசியம். சிலுவையால் அன்றி இரட்சணியம் இல்லை. துன்பம் இன்றி, நித்திய மகிமையை அடைதல் இல்லை என்பதையே இந்த செப்துவா ஜெஸிமா காலமும், அதைத் தொடர்ந்து வரும் தபசு காலமும் நமக்குப் படிப்பிக்கின்றன.



      மாதா பரிகார மலர் - ஜனவரி - பிப்ரவரி, 2024


      சேசுநாதர் புறஜாதியாருக்கும் ஆண்டவர் மூன்று அரசர்கள் திருநாள்: ஜனவரி 6

       "தூய இருதயமுள்ளவர்கள் பாக்கியவான்கள்: ஏனெனில் அவர்கள் சரிவேசுரனைத் தரிசிப்பார்கள்" என்கிறார் தம் ஆண்டவர் (மத் 5:8). தேவ வார்த்தையாகிய ஆத்துமங்களின் ஒளி உலகில் தோன்றியபோது, உலகமும் குறிப்பாக, திவ்ய இரட்சகரின் வருகைக்காகவே ஆயத்தம் செய்யப்பட்டிருந்த இஸ்ராயேல் இனமும் இருளில் மூழ்கியிருந்தது. "அவர் தமக்குரியவர்களிடத்தில் வந்தபோதும், அவருக்குரியவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. " அவர்கள் உலக செல்வச்செழிப்பிலும், வானளாவிய உலக அதிகாரத்திலும், உலகத்தையே அடக்கியாளும் வல்லமையிலும் மெசையாவைத் தேடிக்கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக ஏழ்மையே உருவான ஓர் உத்தம கன்னிகையின் திருவுதரத்தில் இருந்த உலகத்தின் ஒளியானவரைத் தங்கள் இல்லத்திலும் கூட ஏற்றுக்கொள்ள அவர்கள் முன்வரவில்லை. சத்திரமும் கூட அவருக்கு இடம் தரவில்லை.

      ஆனால் பெத்லகேமிலிருந்து ஏறத்தாழ 1500 கி.மீ. தொலைவில், அநேகமாக பெர்சியாவில் இருந்த மூன்று சோதிட சாஸ்திரிகளுக்குத் தம்மை வெளிப்படுத்த சர்வேசுரன் சித்தங்கொள்கிறார். அர்ச். மத்தேயு அவர்களுடைய பெயர்களை நமக்கு அறிவிக்கவில்லை. ஆனால் உரோமைத் திருச்சபையின் பாரம்பரியம், அவர்களுடைய பெயர்கள் கஸ்பார். மெல்கியோர் மற்றும் பல்தசார் என்று அறிவிக்கிறது. அவர்கள் நட்சத்திரங்களை ஆராய்ந்து எதிர்காலத்தை உரைக்கிற அஞ்ஞானப் பொய் மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அப்படியிருக்க, யூதர்களில் பெரும் ஞானிகளுக்கும். விவேகிகளுக்கும் தம் உலக ஆகமனத்தை மறைத்துக்கொண்டு, திவ்ய இரட்சகர் இந்தப் புறஜாதியாரான அஞ்ஞானிகள் மூவருக்குத் தம்மை வெளிப்படுத்தக் காரணம் என்ன? தமது நட்சத்திரத்தைக் கொண்டு அவர்களைத் தம்மிடம் அவர் அழைத்து வந்த காரணமென்ன?

      நாம் தொடக்கத்திலேயே கூறியபடி, அவர்கள் தூய இருதயமுள்ளவர்களாய் இருந்தார்கள். தாங்கள் முன்பின் அறியாத நாட்டில், தங்களுக்குத் தெரியாத ஒரு சிறு கிராமத்தில் பிறந்திருக்கிற "யூதர்களின் அரசரைக்" காணும் ஆர்வம் அவர்களுக்கு ஞான சுறுசுறுப்பைத் தருகிறது. ஒட்டகங்களின்மீது அமர்ந்து, 1500 கி.மீ. தூரம் இலக்கு சரியாகத் தெரியாமல், வழியில் வரக் கூடிய வழிப்பறிக் கொள்ளையரின் தாக்குதல், உஷ்ணம், குளிர், மழை, உடல் சோர்வு, போன்ற எந்த ஆபத்தையும் சற்றும் பொருட்படுத்தாமல், திவ்ய இரட்சகரைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஒரே குறிக்கோளோடு அவர்கள் புறப்பட்டார்கள். அந்த பக்தியார்வத்திற்குத் தம்முடைய திவ்ய காட்சியின் மூலம் தேவ பாலன் சம்பாவனையளித்தார்.

      அவர்கள் தாழ்ச்சியோடு இருந்தார்கள், அவர்களது பயண காலம் மூன்று மாதங்கள் நீடித்தது என்று வேத அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்த மூன்று மாதங்களுக்குள் குசையப்பர் தம்முடைய திருக்குடும்பம் தங்குவதற்கான ஓர் எளிய வீட்டை அல்லது குடிசையை நிச்சயம் கண்டுபிடித்திருப்பார். இவர்களோ அரசர்கள், ஞானிகள். பிறந்திருப்பவரோ பரம ஏழையான ஒரு பரிசுத்த கன்னிகையின் மடியில், ஏதுமறியாதவராகவும், அனைத்திற்கும் தம் தாயைச் சார்ந்திருப்பவராகவும் இருக்கிற ஒரு பச்சிளங் குழந்தையாயிருக்கிறார். ஆனால் அவரே தங்கள் தேவனும், இரட்சகருமானவர் என்று தங்களுக்கு மேலிருந்து தரப்பட்ட புதிய விசுவாசத்தில் அவர்கள் உறுதியாயிருந்தார்கள். "வீட்டில் பிரவேசித்துப் பாலனை அவர் தாயான மரியம்மாளோடு கண்டு, சாஷ்டாங்கமாக விழுந்து அவரை ஆராதித்தார்கள்" (மத்.1:11) என்று மத்தேயு அறிவிக்கிறார். இதில் வெளிப்பட்ட உத்தமமான தாழ்ச்சி அவர்களைத் தூய இருதயத்தினர் என்று நிரூபிக்கிறது.

      இதன்பின் அவர்கள் தங்கள் சர்வேசுரனும், இரட்சகருமான திவ்ய பாலனுக்குத் தந்த காணிக்கைகளின் மூலம், தாங்கள் அவரைத் தங்கள் அரசராகவும் (பொன்), சர்வேசுரனாகவும் (தூபம்). இரட்சகராகவும் (மீரை) ஏற்றுக்கொண்டதை அவர்கள் அறிக்கையிட்டார்கள். இவ்வாறு, கீழ்த்திசையிலிருந்து ஓர் உலகத்தன்மையான பயணத்தை மட்டுமல்ல, மாறாக, அவர்கள் அஞ்ஞானவாதத்திலிருந்து புறப்பட்டு, நித்திய இரட்சணியத்தின் கர்த்தராகிய திவ்ய பாலனை நோக்கித் தங்கள் இருதயங்களிலும் ஒரு ஞானப் பயணத்தை நடத்தி, அவரை வந்தடைத்திருந்தார்கள். தங்களுக்குத் தரப்பட்ட விசுவாச ஒளியை, எந்தத் தடையைப் பற்றிய கவலையும் இன்றி அவர்கள் இறுகப் பற்றிக்கொண்டார்கள். நட்சத்திரங்களைக் கணக்கிட்டு, எதிர்காலம் உரைக்கும் சோதிட சாஸ்திரிகளாக, பொய் மதத்தினராக இருந்தவர்கள். உண்மையில் மனுவுருவான சர்வேசுரனால் மீட்டு இரட்சித்துக் கொள்ளப்பட்ட முதல் புறஜாதியாராக ஆனார்கள். மேலும், புறஜாதியாரின் பிரதிநிதிகளாயிருந்து, அவதரித்த வார்த்தையானவர் யூதர்களுக்கு மட்டுமின்றி, புறஜாதியாருக்கும். உலகம் முழுவதற்குமே இரட்சகராயிருக்கிறார் என்று தங்கள் செயல்களின் மூலம் அவர்கள் அறிக்கையிட்டார்கள். இந்த விசுவாசம் சிறு குழந்தை வடிவில் சர்வேசுரனைத் தரிசிக்கும்" பாக்கியத்தை அவர்களுக்குப் பெற்றுத் தந்தது.

      அவர்கள் கள்ளங்கபடற்றவர்களாகவும் இருந்தார்கள். யூதர்களின் இராஜாவாயிருந்த ஏரோதிடமே சென்று, "யூதருடைய இராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? ஏனெனில் கீழ்த் திசையில் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரை ஆராதிக்க வந்தோம்" என்று அவர்கள் விசாரித்ததில் அவர்களுடைய இந்த மாசற்ற தன்மை வெளிப்படுகிறது. மேலும், சேசுபாலனைக் கண்டு, அவரை ஆராதித்து, அவருக்குக் காணிக்கைகள் செலுத்தியபின், தங்களுக்குத் தரப்பட்ட தேவ கட்டளையின்படி, வேறு வழியாகத் தங்கள் நாட்டிற்குத் திரும்பிச் சென்றதன் மூலம், அவர்கள் தங்கள் கீழ்ப்படிதல் என்னும் புண்ணியத்தையும் நிரூபிக்கிறார்கள்.

      நாமும் இந்தப் பரிசுத்த ஞானிகளைப் போல, திவ்ய பாலனை நோக்கி, நம் இருதயங்களில் ஒரு ஞானப் பயணத்தை நிகழ்த்தி அவரிடம் வந்து சேர்வோமாக. நாமும் ஒரு வகையில் அஞ்ஞானிகள்தான். உலக செல்வத்தையும், சரீர இச்சையையும், பொன்னையும், பொருளையும், மண்ணையும் தெய்வமாக ஏற்று ஆராதிக்கிற விக்கிரக ஆராதனையாளர்களாகத் தான் நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கிறோம். அவரோ நேசப் பொறாமையுள்ளவராயிருக்கிறார். தம்மை விட ஒருவன் தன் சொந்தத் தந்தையையும், தாயையும், மனைவி, மக்களையும் கூட அதிகமாக நேசிப்பதை அவர் அனுமதிப்பதில்லை. பிளவுபட்ட நேசத்தை அவர் விரும்புவதில்லை. ஆகையால் கீழ்த்திசையின் ஞானிகளைப் போல நாமும் நம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமத் தோடும், முழு சத்துவத்தோடும் அவரைத் தேடி வந்து, நம் தேவசிநேகமாகிய பொன்னையும், நம் தாழ்ச்சியாகிய மீரையையும், நம் ஆராதனையாகிய தூபத்தையும் அவருக்குக் காணிக்கையாகச் செலுத்துவோம். அவருக்கு மட்டுமே சொந்தமாயிருப்போம் என்று வாக்களித்து, இத்திருநாளின் பேறுபலன்களை நிறைவாய்ப் பெற்றுக்கொள்வோம்.

      மரியாயே வாழ்க! 

      பரிசுத்த குவாடலூப்பே மாதாவின் அற்புதச் சித்திரம்

      1979 ஆம் ஆண்டில் குவாடலூப்பே மாதாவின் அற்புதச் சித்திரம் மிகக் கடுமையான விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்தப்பட திருச்சபையால் அனுமதிக்கப்பட்டது.இந்த ஆய்வைச் செய்தவர் டாக்டர் பிலிப் கல்லதரன் என்பவர் ஆவார். இவர் ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் உயிர் இயம்பியல் ஆய்வு வல்லுனர் ஆவார். இவர் ஓர் ஒவியரும். புகைப்பட கலைஞரும், விஞ்ஞான எழுத்தாளரும் கூட. பழைய சித்திரங்களைப் பற்றிய விமர்சன ஆய்வுக்காகப் பரிந்துரைக்கப்படும் செயல்முறைப்படி அகச்சிவப்பு ஒளியில் இவர் முதல் தடவையாக நம் மாதாவின் அற்புதச் சித்திரத்தை மிக விஸ்தாரமாகப் புகைப்படங்கள் எடுத்தார். அப்போது இந்த சித்திரத்தில் சில சிறிய செயற்கை அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்ததை அவர் கண்டுபிடித்தார். அவை மாமரியைச் சுற்றியுள்ள சூரியக் கதிர்கள், அவர்களது நீல நிற மேற்போர்வையின்மீது காணப்படும் பொன்னிற நட்சத்திரங்கள், பொன்னிறத் துணிப்பின்னல் அலங்காரங்கள். இருண்ட நிலவு. அலங்கார நூற்குஞ்சங்கள், நிலவின் காணப்படும் தேவதூதரின் உருவம் போன்றவை ஆகும். இந்தச் செயற்கை அலங்காரங்களில் காணப்பட்ட வண்ணங்கள் காலத்தால் சிதைந்தும், மங்கியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அநேக ஆண்டுகளுக்குப் பிறகு அநேகமாக 1629-1634-ம் வருடங்களில் மெக்ஸிகோ நகரத்தில் ஏற்பட்ட பெருவெள்ளங்களுக்குப் பிறகு மனிதக் கைகளால் வரையப்பட்டிருக்கவோ, அல்லது சேர்க்கப்பட்டிருக்கவோ வேண்டும். இந்தப் பெருவெள்ளங்களால் இந்தப் பரிசுத்த சித்திரத்தைத் தாங்கியிருந்த டில்மா என்னும் சாக்குத் துணி போன்ற மேலாடை சிறிது பாதிக்கப்பட்டது.(மாதாவைச் சுற்றிக் காணப்படும் சூரியக் கதிர்கள் இச்சித்திரத்தின் தொடக்க கால செவ்வித்திய நகல்களில் காணப்படவில்லை என்பது இவை பிற்காலத்தில் வரையப்பட்டவை என்பதை உறுதி செய்கின்றது.) ஆனால் மாமரியின் முகம் மற்றும் உருவம் ஆகியவை உட்பட சித்திரத்தின் எஞ்சியிருக்கும் பகுதியைப் பொறுத்த வரை, டாக்டர் சுல்லஹனின் முடிவு மிகவும் வேறுபட்டதாக இருக்கிறது. "மேற்போர்வை ஒருவித இருண்ட பச்சை நீல நிறமுடையதாக உள்ளது. இது விளக்கப் பட முடியாதது. ஏனெனில் இத்தகைய நிறமிகள் எல்லாமே நிரந்தரமற்றவை. காலப்போக்கிலும், குறிப்பாக வெப்பமான காலநிலைகளிலும், மிக வேகமாக மங்கி விடக் கூடியவை. செவ்வித்திய மாயன் நீலநிற சுவர்ச் சித்திரங்கள் ஏற்கனவே மிக மோசமாக மங்கிப்போய் விட்டன. ஆயினும் இந்த நீல நிற மேற்போர்வை மட்டும் ஏதோ போன வாரம்தான் வரையப்பட்டது போல பிரகாசமான நிறத்துடன் காணப்படுகிறது. "மாதாவின் மேலங்கியைப் பொறுத்த வரை, எல்லாவற்றிலும் மேலாகக் குறிப்பிடத் தக்கது வியக்கத்தக்க விதத்தில் அது வீசும் ஒளியாகும். கண்ணால் காணக் கூடிய அதிகமான ஒளிப்


      பிரதிபலிப்பு அதில் காணப்படுகிறது. ஆனாலும் அகச் சிவப்புக் கதிர்களில் அது ஊடுருவிக் காணக்கூடியதாக இருக்கிறது... நீல நிற மேற்போர்வையிலிருப்பது போல இளஞ்சிவப்பு ஆடையின் ஒளி-நிழல் வேறுபாடானது (Shade of colour), வர்ணப்பூச்சோடு கலந்து காணப்படுகிறது. இளஞ்சிவப்பு நிறமியின் கீழ் எந்த ஒரு செயற்கையான ஓளியமும் காணப்படவில்லை. "இந்த இளஞ்சிவப்பு நிறமி வார்த்தைகளால் விவரிக்கப்பட முடியாததாகத் தோன்றுகிறது.இந்த ஓவியத்தில் நிஜமாகவே விநோதமாக இருக்கும் அம்சங்களில் ஒன்று, அந்த டில்மா சரியான அளவுடையது அல்ல என்பதாகும். அது மட்டுமல்ல, அதன் மீது சித்திரங்களைப் பாதுகாக்கக் கூடிய வார்னிஷ் பூச்சுக்கான தடயமேயில்லை. இப்படி எந்த விதமான பாதுகாப்புக்குரிய மேற்பூச்சும் இல்லாதிருந்தும், மாதாவின் உள்ளங்கியும், மேற்போர்வையும், இப்போதுதான் நெய்யப்பட்டவை போலப் பிரகாசமாகவும், நல்ல நிறங்களுடனும் இருக்கின்றன. மேலும் நெய்யப்பட்ட இதன் இழைகள் அவ்வளவு நெருக்கமானவை அல்ல. ஆகவே அதிக இடை வெளிகள் உள்ள சாக்குத் துணி போன்ற இந்தத் துணியில் இவ்வளவு அற்புதமான நுணுக்கங்கள் நிறைந்த சித்திரத்தை வரைவது என்பதற்கு சாத்தியமேயில்லை. "குவாடலூப்பே கன்னிகையின் முகத்தோற்றம் ஒரு கலை அற்புதமாகும். வடிவழகிலும், பாவனையை வெளிப்படுத்தும் எளிமையிலும், திறங்களைப் பயன்படுத்தியுள்ள கலைநுட்பத்திலும் உலகின் மிகச் சிறந்த கலைப் படைப்புகளுக்கு இந்தச் சித்திரம் எந்த விதத்திலும் குறையாததாக இருக்கிறது. மேலும் இதே போன்ற முறையில் வரையப்பட்டுள்ள எந்த ஒரு சித்திரத்தையும் நான் ஒருபோதும் கண்டதில்லை."

       "இந்தச் சித்திரத்திற்குத் தத்ரூபமான தோற்றம் தருவதில் பயன்படுத்தப்பட்டுள்ள உத்திகள் உண்மையாகவே அற்புதமானவை. நம் வார்த்தைகளுக்கு எட்டாதவை. அவற்றில் ஒன்று, சரியான அளவுகளில் இல்லாத அந்த டில்மாவில் இயற்கையாகயே இருக்கும் மடிப்பு களை அல்லது பிசிறுகளை, அல்லது கசங்கல்களைக் கூட, அந்த ஓவியத்திற்கு ஆழமும் உயிரோட்டமும் தரும் விதத்தில் பயன்படுத்தியிருப்பது ஆகும். குறிப்பாக வாயில் இது தெளிவாகத் தெரிகிறது. அங்கு அந்தத் துணியின் ஒரு முரட்டு இழை, துணியின் மற்றப் பகுதிகளின் மட்டத்திற்குச் சற்று மேலாக எழுந்துள்ளது. இது உதட்டின் மேற்பகுதியின் விளிம்போடு மிக மிகச் சரியாகப் பொருந்துகிறது! இதே போன்ற முரட்டுத்தனமான குறைபாடுகள் இடது கன்னத்தின் நிழலூட் டப்பட்ட பகுதியிலும் வலது கண்ணின் மேற்பகுதியிலும், வலப் பகுதியிலும் காணப்படுகின்றன. இதனால் இந்த ஓவியத்திற்கு ஒரு விதமான முப்பரிமாணத் தோற்றம் கிடைத்து, அதன் தத்ரூபத் தோற்றம் நுல்லியம் பெறுகிறது. இப்படி தத்ரூபத் தோற்ற விளைவைத் தரும்படி ஏற்கனவே மிகத் துல்லியமான இடங்களில் மடிப்புகளும், பிசிறுகளும் உள்ள ஒரு டில்மாவை எந்த ஒரு மனித ஓவியனும் தேர்ந்தெடுப்பது முற்றிலும் இயலாத காரியம் என்று நான் உறுதியாக நினைக்கிறேன்.

      இது தற்செயலாக நிகழ்ந்திருக்கவும் வாய்ப்பில்லை. கண்கள், மற்றும் தலைமுடியின் கறுப்பு நிறம் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் இரும்பு ஆக்ஸைடோ அல்லது வேறு ஏதாவது நிறமியோ அல்ல. ஏனெனில் அவை காலப் போக்கில் உடைந்து, பழுப்பு நிறமாகவும் மாறி விடும். மற்றொரு மிக வியப்பான அம்சம் முகத்திலும், கரங்களிலும் காணப்படும் ஒளி-நிழல் வேறுபாடாகும். வர்ணக் கலவையில் இருந்து பிரதிபலிக்கும் ஒளியின் இயற்கை விளையு எப்படியிருக்குமோ, அவ்வாறே அந்த முரட்டு டில்மாவிலிருந்தும் பிரதிபலிக்கிறது!... தூரத்திலிருந்து பார்க்கும் போது, நிறமியும், துணியின் மேல்மட்ட கலைத்திறனும் ஒன்றோடொன்று கலக்கிற இடத்தில், ஒலிவ நிறமான திவ்ய கன்னிகையின் அதியற்புத அழகு ஏதோ மந்திரம் போட்டது போல் வெளிப்படுகிறது. அவர்களது முகபாவனை வணக்கத்துக்கு உரியதாகவும். அதே சமயம் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் திடீர் திடீரென மாறி மாறித் தோன்றுகிறது. அவர்கள் செவ்விந்தியப் பெண்ணாகவும், அதே வேளையில் ஐரோப்பியப் பெண்ணாகவும் தோன்றுகிறார்கள். ஒலிவ நிறத் தோலுடனும், ஆனாலும் வெண்ணிறமாகவும் காணப்படுகிறார்கள்!"

      "மேலும், மிகப் பெரும் அளவில் பெரிதாக்கப்பட்ட மாமரியின் வலது கண்ணின் புகைப்படங்களில் மூன்று மனித உருவங்கள் காணப்படுகின்றன. அவர்களில் ஒருவர் ஹுவான் டியேகோ போலத் தோன்றுகிறார். மற்றொருவர் சுமர்ராகா ஆயர். மூன்றாமவர் ஆயருக்கு மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்ட ஹுவான் கொன்சாலஸ் போலத் தோன்றுகிறார். (பிற்பாடு இவர் குவாடலூப்பே மாதா பக்தியின் ஆர்வமிக்க ஆதரவாளராக மாறினார்.) ஹுவான் டியேகோ, ஹவான் கொன்சாலஸ் ஆகிய இருவரின் ஓவியங்களும் நம்மிடமுள்ளன. இவை, தேவ அன்னையின் கண்ணில் உள்ள இரண்டு உருவங்களோடு ஒத்துப்போகின்றன."

      டாக்டர் கல்லஹன் மாதாவின் அற்புதச் சித்திரத்திலுள்ள வலது கண்ணை ஆஃப்தால் மாஸ்கோப் என்னும் கண் பரிசோதனைக் கருவியின் முன் வைத்துப் பரிசோதித்தபோது, ஆச்சரியத்தால் அதிர்ந்து போனார். அது படத்திலுள்ள கண்ணைப் போலவே அவருக்குத் தோன்றவில்லை. ஒரு உண்மையான மனிதக் கண்ணிலுள்ள விழித்திரை, லென்ஸ், கண் ரசங்கள் போன்ற அனைத்து பாகங்களையும் அவரால் துல்லியமாக அதில் காண முடிந்தது மட்டுமின்றி. ஒளி கண்ணில் ஏற்படுத்தும் பிரதிபலிப்பின் அனைத்து அம்சங்களையும் அந்தச் சித்திரக் கண்ணிலும் அவர் கண்டார். மாதாவின் கண்கள் சற்று மூடிய தோற்றமாக இருந்தன என்று நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். எந்த அளவுக்கு டாக்டர் கல்லஹன் இந்த அதிசயத்தால் கவரப்பட்டார் என்றால், ஒரு கணம் அவர் தாம் அற்புதச் சித்திரத்தின் முன் இருப்பதையே அடியோடு மறந்தவ ராக, "கொஞ்சம் தலையை உயர்த்துங்கள் அம்மா!" என்றார்! “இது எப்படி சாத்தியம் என்று எனக்குப் புரியவில்லை. இது மனித அறிவுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட காரியம் என்பதை மட்டுமே என்னால் கூற முடியும்" என்று அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

      ஓ, அற்புதங்களின் அன்னையே! பரிசுத்த குவாடலூப்பே மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

      செவ்வாய், 16 ஜனவரி, 2024

      அருட்கருவிகள் - மெழுகுவர்த்தி


        நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம்.
      திருச்சி, 1941


      தேவ ஆராதனைகளில் தீபம் உபயோகிப்பது தொன்று. தொட்டு வழங்கி வரும் ஓர் நல்ல வழக்கம். யூதரும் அஞ்ஞானிகளுமே இதைப் பிரயோகித்து வந்தார்கள் என்பதற்குச் சந்தேகமில்லை. கிறிஸ்துவர்களுக்குள் இதன் பிரயோகம் ஆரம்பத்தில் அவசியத்தினிமித்தம் உண்டானது என்று சொல்லக் காரணமுண்டு. அது எவ்வாறெனில், பொழுது விடியுமுன்னர் அல்லது சுரங்கங்களில் திவ்விய பலி ஆராதனை நிறைவேற்ற வேண்டியிருந்த காலத்தில் இருளைப் போக்குவதற்குத் தீபம் அவசியமாயிருந்தது. ஆனால் தீபப் பிரயோகத்தில் உன்னதமான ஞானக்கருத்துகள் அடங்கி இருக்கின்றன வென்பதைக் கிறீஸ்தவர்கள் ஆரம்பத்திலேயே தெளிவாய்க் கண்டு கொண்டார்கள் என்பது நிச்சயம்,

      வெளிச்சம் சுத்தமானது. அது அந்தகாரத்தை ஊடுருவுகிறது. அதன் எல்கைக்குள் இருப்பதையெல்லாம் பிரகாசிப்பிக்கிறது. ஆதலால், மகா பரிசுத்தரும், சர்வ வியாபியும், சகல வரங்களுக்கும் ஊற்றுமாயிருக்கிற சர்வேசுரனுக்கு அது உச்சிதமான அறிகுறி என்பது வெளிப்படை. அது தமது திவ்விய இரட்சகரையும் அவரது அலுவலையும் உருவகப்படுத்துகிறது. ஏனெனில், அவர் உலகத்தின் ஒளி, அந்தகாரத்திலும் மரண நிழலிலும் உட்கார்ந்திருப்பவர்களைப் பிரகாசிப்பிக்க வந்தவர். மெழுகுவர்த்தியை உபயோகிப்பதற்கும் விசேஷ காரணமுண்டு. மெழுகு மாசற்றதாயிருப்பதி னிமித்தம், கிறீஸ்துநாதரின் மாசற்ற சரீரத்துக்கு உருவகமாய் இருக்கிறது. அதற்குள் இருக்கிற திரி அவரது ஆத்துமத்துக்கு அடையாளம், அதிலிருந்து புறப்படும் சுடர் ஒரே தெய்வீக ஆளிடமாய் தேவ சுபாவமும் மனுஷ சுபாவமும் ஒன்றித்து இருப்பதைக் காட்டுகின்றது.

      பச்சாத்தாபம் ஒன்று நீங்கலாக, மற்ற தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றுகையிலெல்லாம் மெழுகுவர்த்தி உபயோகப்படுகிறது. திவ்விய பலிபூசை வேளையிலும், வேறு தேவ ஆராதனை முயற்சிகளிலும், சுற்றுப்பிரகாரங்களின் போதும், இன்னும் இதர சமயங்களிலும் மெழுகுவர்த்தி கொளுத்தி வைக்கிறார்கள்.

      பீடத்தின்மேல் மெழுகுவர்த்தியை வைப்பது 11-ம் நூற்றாண்டில்தான் ஏற்பட்டது என்று சொல்லாம். அதற்கு முந்தின காலங்களில், பீடத்துக்கு அருகாமையில் உயரமான தண்டுகளில் அல்லது சுவரிலிருந்து கொளுவியில் ஊன்றி வைப்பது வழக்கம்.

      பெரிய பாட்டுப் பூசையில் ஆறு மெழுகுவர்த்திகளும், சாதாரண பாட்டுப் பூசையில் ஒரே குருவானவர் மாத்திரம் நிறைவேற்றும்போது நான்கு திரிகளும், மேற்றிராணியார் செய்யும் பாட்டுப்பூரையில் ஏழு திரிகளும், மேற்றிராணியா ருடைய சாதாரண பூசையில் நான்கும், குருக்கள் செய்யும் சாதாரண பூசையில் இரண்டு திரிகளும் கொளுத்துவது முறை. ஆயினும், உற்சவ ஆடம்பர தினங்களில் இந்த எண்ணிக்கைக்கு அதிகமாய் வைப்பதில் ஆட்சேபனையில்லை.

      இதுவரையும் நாம் சொல்லி வந்தது தேன் மெழுகினால் செய்த திரிகளைப் பற்றியேயன்றி, மீன் திரி என்று நமது நாட்டில் வழங்கும் திரிகளைப் பற்றியல்ல. மேலே சொன்ன சமயங்களில் உபயோகிக்கிற திரி தேன்மெழுகினால் செய்து, தேவமாதாவின் சுத்திகரத் திருநாளன்று அல்லது அதற்குப் புறம்பாய் மந்திரிக்கப்பட்டிருப்பதே ஒழுங்கு. மீன் திரி அல்லது கொழுப்புத் திரி பலிபீடத்திலாவது தேவதிரவிய அதுமானங்களை நிறைவேற்றுகையிலாவது உபயோகிப்பது ஒழுங்கல்ல. இந்தத் திரிகளை மந்திரிக்கிறதுமில்லை. இவைகள் வேண்டுதல் திரி எனப்படும். இவைகள் சாதாரணமாய் ஏதாவது ஒரு அர்ச்சியசிஷ்டவருடைய கரூபத்துக்கு முன்பாக எரிகிறவைகள், விசுவாசிகள் அந்தந்த அர்ச்சியசிஷ்டவர் மட்டில் தங்களுக்குள்ள விசேஷ பற்றுதல் வணக்கத்தைக் காட்டுவதற்காக இவைகளை உபயோகிக்கிறார்கள்.

      மந்திரித்த மெழுகுதிரி ஒவ்வொரு கத்தோலிக்கர் வீட்டிலும் இருக்க வேண்டும். குருவானவர் அவ்வீட்டில் யாருக்காவது நற்கருணை அல்லது அவஸ்தைபூசுதல் கொடுக்கும்போது அந்தத் திரிகளைக் கொளுத்தி வைக்க வேண்டும். மரணத் தறுவாயிலிருக்கிறவன் கையில் மந்திரித்த திரியைப் பிடித்திருக்கும்படி செய்வது மகா பக்திக்குரிய ஓர் வழக்கம். இந்தத் திரியின் சுடர் அவனது விசுவாசத்துக்கும். அவன் பெற்றுக்கொண்ட தேவ வரங்களுக்கும். அவன் பெறப் போகிற நித்திய மகிமைக்கும் அடையாளமாயிருக்கிறது.