⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐
மே 2ம் தேதி
🌹பாரம்பரிய கத்தோலிக்க வேத விசுவாசத்தின் பாதுகாவலரும், ஸ்துதியரும், மேற்றிராணியாரும், வேதபாரகருமான
அர்ச். அத்தனாசியாரின் திருநாள்🌹
🌹மாபெரும் வேதபாரகரும் கத்தோலிக்க வேதவிசுவாசத்தின் அஞ்சா நெஞ்சரும், பாதுகாவலருமான அர்ச். அத்தனாசியார், எகிப்தின் தலைநகரான அலெக்சாண்டிரியாவில், கி.பி.294ம் வருடம் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதேசமயம் தேவபயமும் பக்தியும் உடையவர்கள். இவருடைய இளமைக் காலத்தில் மாபெரும் திறமைகளை சர்வேசுரன் இவருக்கு அருளினார்.
அலெக்சாண்டிரியா மேற்றிராணியாரால் கல்விகற்பிக்கப்பட்டார்; பின், எகிப்திலுள்ள பாலைவனத்திற்குச் சென்று, அர்ச்.வனத்து அந்தோணியாருடன் அத்தனாசியார் சிறிது காலம் தங்கியிருந்தார்; கி.பி. 319ம் வருடம் அத்தனாசியார் தியோக்கோன் பட்டம் பெற்றார்.
கி.பி.323ம் வருடம், ஆரியுஸ் என்பவன், நமதாண்டவர் நித்திய பிதாவாகிய சர்வேசுரனுடன் ஒரே வஸ்துவானவரல்லர்! ஆதலால், ஆண்டவரை சர்வேசுரனுடைய திவ்ய குமாரன் என்று கூறக்கூடாது! என்கிற பதிதத் தப்பறையைப் போதித்தான்; இப்பதிதத் தப்பறை இவனுடைய பெயராலேயே ஆரியப் பதிதம் என்று அழைக்கப்படுகிறது; அலெக்சாண்டிரியா மேற்றிராணியார், ஆரியுஸின் போதனையை, பதிதத்தப்பறை என்ற கூறி, ஆரியுஸ் என்ற பதித குருவையும், அவனுடைய கூட்டாளிகளான 11 பதிதக் குருக்களையும் தியோக்கோன்களையும் அலெக்சாண்டிரியா மேற்றிராணியாரான அர்ச்.அலெக்சாண்டர் பதவி நீக்கம் செய்தார்!
பின், ஆரியுஸ், செசரையாவிற்குச் சென்று, நிகோமேதியாவின் மேற்றிராணியாரான யுசேபியுஸின் ஆதரவையும், மற்ற அநேக சிரியா நாட்டின் மேற்றிராணிமார்களுடைய ஆதரவையும் திரட்டினான்; ஆரிய பதிதத் தப்பறைக் கருத்துகள் பாடல்களாக இயற்றப்பட்டு, பிரபலமடைந்திருந்த இசை மெட்டுகளில் கப்பல் மாலுமிகளால் பாடப்பட்டு வந்தன; ஒரு துறைமுகத்திலிருந்து மற்றொரு துறைமுகம் கப்பல் செல்கிற வரை இப்பதிதப் பாடல்கள் பாடப்பட்டு, மக்களின் இருதயங்களை ஆரியப் பதிதத் தப்பறையால் ஆக்கிரமித்தனர்; ஆரிய பதிதத் தப்பறையின் மீது தீர்வு காண்பதற்காக, 325ம் வருடம் நீசேயா சங்கம் கூட்டப்பட்டது; இச்சங்கத்தில், ஆரிய பதிதத்தைக் கைவிடும்படியாக, ஆரியுஸிற்கு எதிரான தண்டனை உறுதி செய்யப்பட்டது; நீசே விசுவாசப் பிரமாணம் பிரகடனம் செய்யப்பட்டது; இச்சங்கம், அர்ச்.அத்தனாசியாரின் ஜீவியத்தை மிகவும் பாதித்தது; இதன் பின் இவருடைய எஞ்சியிருந்த ஜீவிய காலம், நம் திவ்ய இரட்சகருடைய தேவத்துவத்திற்கான சாட்சியமாகத் திகழ்ந்தது! ஆண்டவருடைய தேவத்துவம் மற்றும், மகா பரிசுத்த தமதிரித்துவத்தைப் பற்றிய விசுவாச சத்தியத்திற்கு எதிரானதுமான ஆரிய பதித்திற்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடினார்; அதற்கு எதிரான கத்தோலிக்க வேத சத்தியங்கள் பற்றிய பிரசங்கங்கள் நிகழ்த்தி வந்தார்;
நிசேயா சங்கத்தில், அலெக்சாண்டிரியா மேற்றிராணியாரான அர்ச்.அலெக்சாண்டருடன் அவருக்கு உதவியாளராக அர்ச்.அத்தனாசியார் இருந்தார்; 5 மாத காலத்திற்குப் பின், அர்ச்.அலெக்சாண்டர் இறந்தார்; இறப்பதற்கு முன், அர்ச்.அலெக்சாண்டர், அத்தனாசியாரை, தனக்குப் பின் அலெக்சாண்டிரியாவின் பிதாப்பிதாவாக நியமிக்க ஆசித்திருந்தார்; அதன்படி, அர்ச்.அத்தனாசியார், 30வது வயதில், 326ம் வருடம்,அலெக்சாண்டிரியாவின் பிதாப்பிதாவாக ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; இவர் ஆரிய பதிதத்தப்பறையை எதிர்த்து நின்றதால், அநேக கொடிய உபத்திரவங்களையும், துன்பங்களையும், தன் ஜீவிய காலத்தில் சந்திக்க நேர்ந்தது; இவர் அதிமேற்றிராணியாராக இருந்த 46 வருட காலத்தில், 17 வருடங்களை நாடுகடத்தப்பட்ட பரதேச ஜீவியத்தில் கழித்தார்; புண்ணியங்களுடையவும், சக்கரவர்த்திகளாலும், திருச்சபை அதிகாரிகளாலும் (ஆரிய பதிதத்தைச் சேர்ந்த மேற்றிராணிமார்கள்) கொடூரமாக அநியாயமாக, நீ்ண்ட காலம் அளிக்கப்பட்ட உபத்திரவத் துன்பங்களுடையவும் ஜீவியம் ஜீவித்த பிறகு, கத்தோலிக்க வேத விசுவாசத்தை அஞ்சா நெஞ்சத்துடன் ஆரிய பதிதர்களிடமிருந்து காப்பாற்றிய திருச்சபையின் மாபெரும் வேதபாரகரும், பாதுகாவலருமான அர்ச்.அத்தனாசியார், அலெக்சாண்டிரியாவில், மே 2ம் தேதி 373ம் வருடம் பாக்கியமாய் மரித்தார்; இவருடைய பரிசுத்த சரீரம் இரண்டு முறை, இடமாற்றம் செய்யப்பட்டது: முதலில், கான்ஸ்டான்டிநோபிளுக்கும், பின்னர் வெனிஸ் நகருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டது! இவர் வாழ்ந்த காலம் திருச்சபையின் சரித்திரத்தில் மிக முக்கியமான காலமாகும்.🌹✝
“பாரம்பரியத்திற்கு விசுவாசமாயிருக்கும் கத்தோலிக்க விசுவாசிகள், எண்ணிக்கையில் குறைந்து, ஒரு கையளவாக மட்டுமே இருந்தாலும், அவர்கள் தான், நமதாண்டவரான திவ்ய சேசுகிறீஸ்து நாதரின் உண்மையான திருச்சபை!”-அர்ச்.அத்தனாசியார்.🌹✝
🌹அர்ச். அத்தனாசியாரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹
Tags:
Feast of St. Anthanasius,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக