Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 4 மே, 2024

அறிந்துகொள்வோம் பாத்திமா செய்தியை!

 

அறிந்துகொள்வோம் பாத்திமா செய்தியை!



1917, ஜூலை 13 அன்று நிகழ்ந்த தனது மூன்றாம் காட்சியில், நம் திவ்ய அன்னை ஆத்துமங் களுடையவும், உலகத்தினுடையவும், திருச்சபையினுடைய வும் எதிர்காலங்களைத் தன்னுள் அடக்கிய மூன்று பிரிவுகளைக் கொண்ட ஒரு மாபெரும் இரகசியத்தைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினார்கள். இந்த இரகசியம் எடுத்த எடுப்பிலேயே மாதாவைப் பற்றிய ஆதி வாக்குத்தத்தத்தை வெளிப்படுத்து கிறது: “உனக்கும், ஸ்திரீக்கும், உன் வித்துக்கும், அவள் வித்துக் கும் பகையை உண்டாக்குவோம்..." என்ற இந்த தேவ வாக்குறுதி யின்படி, பாத்திமா இரகசியத்தின் முதல் பிரிவில், ஆத்துமங் களை நரகத்திற்கு இழுத்துச் செல்லத் துடிக்கும் பசாசுக்கு எதிராக, ஸ்திரீயாகிய மாமரியின் மாசற்ற இருதயம் கடவுளால் முன்னிறுத்தப்படுகிறது! “பரிதாபத்திற்குரிய ஆத்துமங்கள் செல்லும் நரகத்தை இப்போது கண்டீர்கள். அவர்களைக் காப்பாற்ற, உலகில் என் மாசற்ற இருதய பக்தியை ஏற்படுத்தக் கடவுள் விரும்புகிறார்!"

தேவ அன்னையின் இந்த வாக்கியத்தில் அவர்களே சாத் தானுக்கு எதிராக ஆதி. 3:15ல் முன் குறிக்கப்பட்ட ஸ்திரீ என்ற உண்மை முழு வீச்சில் வெளிப்படுத்தப்படுவதைக் காணுங்கள். இங்கே இரு படையணிகள் இருக்கின்றன. ஒன்றின் தளகர்த்த ராக, தன் திருக்குமாரனின் சிலுவைக் கொடியைத் தாங்கி நிற்கிற மாதா இருக்கிறார்கள். அவர் களுக்கு எதிராக, பசாசின் நரக சேனை நிற்கிறது. இவை இரண்டில் ஒன்றை இன்றே, இப்போதே நாம் தேர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான் பாத்திமா நமக்குத் தருகிற முதலாவதும், மிக முக்கிய மானதுமான செய்தி! ஏனெனில் நம் நித்திய ஜீவியம் அல்லது நித்திய தண்டனை இதில்தான் அடங்கி யிருக்கிறது! தேவ மாதாவையும், அவர்கள் பாத்திமாவில் நமக்கு விடுத்த வேண்டுகோள்களையும் புறக்கணிக்கிற யாரும் பரலோக பாக்கியத்தை ஒருபோதும் பெற்றுக்கொள்வது மிகவும் அரிது.

இனி, எந்த மனநிலையோடு மாமரியின் வேண்டுகோள்களுக்கு நாம் செவிகொடுக்க வேண்டும். என்பது பற்றி நாம் பார்ப்போம்: முதலாவதாக, நாம் மாதாவின் அன்புப் பிள்ளைகள். பாவ வாழ்வு வாழ்ந்து, நரகத்திற்குச் செல்லும் ஆபத்தில் இருக்கும் தனது எண்ணற்ற பிள்ளைகளைக் கண்டு நம் மாதாவின் மாசற்ற திரு இருதயம் இரத்தம் வடிக்கிறது. அவர்களை அந்த நித்திய அக்கினி யிலிருந்து எப்படியாவது காப்பாற்ற அது துடிக்கிறது! அதற்காக திவ்ய கன்னிகை தன் பிள்ளை களாகிய நம்மிடம் திரும்பி. தன்னோடு சேர்ந்து ஜெப, தவ, பரிகார முயற்சிகளைச் செய்து, இந்தப் பரிதாபத்திற்குரிய பாவிகளின் ஆத்துமங்களை இரட்சிப்பதில் தனக்கு உதவுகிற "சிறிய இரட்சகர் களாக இருக்கும்படி நம்மிடம் கேட்கிறார்கள். எனவே, நம் சொந்த “அம்மாவோடு சேர்ந்து, ஆன்ம இரட்சணியப் பணியில் ஈடுபடுகிறோம் என்ற உணர்வு நம்மில் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த உணர்வு இன்றிச் செய்யப்படும் பரிகாரம் எதுவும் பெரிய அளவில் பயன் தராது.

இரண்டாவதாக, பாத்திமா தவ முயற்சிகளைச் செய்யும்போது, சேசுவின் திரு இருதயமும், மரியாயின் மாசற்ற இருதயமுமாகிய இரு இருதயங்களுக்கும் எதிரான பாவங்களுக்கு நாம் பரிகாரம் செய்கிறோம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இந்த இரு இருதயங்களும் ஒன்றாகவே துடிக்கின்றன. இவை இரண்டு இருதயங்கள் அல்ல, ஒரே இருதயம்தான் என்னும் அளவுக்கு தேவ அன்பின் ஒரே தசை நார்களால் இணைக்கப்பட்டுள்ளன. மனிதர்களின் பாவ முட்கள் மரியாயின் மாசற்ற இருதயத்தைக் குத்தித் துளைக்கும்போதெல்லாம் சேசுநாதர் பரிதவிப்போடு நம்மிடம் திரும்பி, “நன்றியற்ற மனிதர்களின் பாவ முட்களால் ஒவ்வொரு கணமும் துளைக்கப்படுகிற உங்கள் மிகப் பரிசுத்த மாதாவின் இருதயத்தின்மீது இரக்கம் கொள்ளுங்கள். ஒரு பரிகாரச் செயலின் மூலம் அவற்றை அகற்றுபவர்கள் யாருமில்லை" என்கிறார் (1925, டிசம்பர் 10, போந்தவேத்ரா காட்சி). அதே பாவங்களால் தன் திருக்குமாரன் அனுபவிக்கும் வேதனையைக் காண்கிற தேவ மாதாவும் நம்மிடம் திரும்பி, ஆழ்ந்த துக்கத்தோடு, "நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் திருத்திக் கொண்டு, உங்கள் பாவங்களுக்காகக் கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்... ஏற்கெனவே மிகவும் நொந்து போயிருக்கிற ஆண்டவராகிய நம் சர்வேசுரனை இதற்கு மேலும் நோகச் செய்யாதீர்கள்" என்கிறார்கள் (13.10.1917 கடைசிக் காட்சி).

ஆகவே, சேசு, மரியாயின் திரு இருதயங்களை நேசித்து, அவற்றுக்கு ஆறுதல் அளிப்பதுதான் நம் முதல் சனி பரிகார பக்தியின் நோக்கமாக இருக்க வேண்டும். இதனாலேயே, " சேசுவே, உமது அன்பிற்காகவும், பாவிகள் மனந்திரும்புவதற்காகவும், மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு எதிராகக் கட்டிக் கொள்ளப்படும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் இதைச் செய்கிறேன்" என்று அடிக்கடி ஜெபிக்கும்படி மாதா கற்பித்தார்கள். இப்படி நாம் தரும் ஆறுதல், மிக ஏராளமான ஆத்துமங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றும் வல்லமை மிக்க ஆயுதமாக இந்தத் திரு இருதயங்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும். இதன் மூலம், எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய நித்தியப் பேரின்பமும் உறுதிப்படுத்தப்படுகிறது! பாத்திமா செய்திகளின் அடிப்படையில் தவம் செய்யும் விதம்

கடவுளுக்கும், சேசுவின் திரு இருதயத்திற்கும், மரியாயின் மாசற்ற இருதயத்திற்கும், நம் தவ முயற்சிகளாலும், பரித்தியாகங்களாலும் பரிகாரம் செய்து, அவர்களை நேசிக்க நாம் கடமைப் பட்டிருக்கிறோம். பாவங்கள் கடவுளுக்கு எதிராகச் செய்யப்படுகின்றன. தேவ கட்டளைகள் கடவுளை நேசிப்பதே நம் கடமையென அறிவிக்கின்றன. அவற்றை மீறும்போது, நாம் அவரை நோகச் செய் கிறோம்; நம்மை நேசிக்கும் தந்தையை நிந்திக்கிறோம். மேலும் கடவுளின் அன்பின் பிரதிபலிப் பாக இருக்கும் சேசுவின் திரு இருதயம் பாதிக்கப்படுகிறது, மாசற்றதனத்தாலும், இரத்த உறவாலும், இரட்சணியத்தின் ஒத்துழைப்பாலும் அந்தத் திவ்ய இருதயத்துடன் ஒன்றாக இருக்கிற மரியாயின் மாசற்ற இருதயமும் பாவத்தாலும், தான் புறக்கணிக்கப்படுவதாலும் மிகவும் பாதிக்கப்படுகிறது. சேசுவின் திரு இருதயத்தின் அன்பை பாவம் நோகச் செய்கிறது. அதேபோல் மாதாவுக்கு நம்மீதுள்ள தாயன்பையும் வேதனைப்படுத்துகிறது. மாதாவின் வேதனை சேசுவின் துயரம் தருகிறது.

பாத்திமா குழந்தைகள் தவ வாழ்வுக்கு படிப்படியாக, ஆனால் தீவிரமாகத் தயாரிக்கப்பட்டார்கள். தூதரின் இரண்டாம் காட்சியில், “செபங்களையும் பரித்தியாகங்களையும் உன்னதருக்கு ஒப்புக்கொடுங்கள்" என்று அவர்களுக்குக் கூறப்பட்டது. சம்மனசானவர் நம் அனைவரையும் நோக்கி: “நீங்கள் செய்யும் யாவற்றையும் ஒறுத்தல் முயற்சி ஆக்குங்கள். கடவுளை நோகச் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், பாவிகள் மனந்திரும்பும்படி மன்றாட்டாகவும் அவற்றை ஒப்புக்கொடுங்கள். யாவற்றிற்கும் மேலாக, நமது ஆண்டவர் உங்களுக்கு அனுப்பும் துன்பங்களை அமைந்த மனதுடன் ஏற்றுத் தாங்கிக் கொள்ளுங்கள்" என்றார்.

ஆகவே, நமக்கு நடக்கும் அனைத்தும் தவமுயற்சியாக மாற்றப்பட முடியும். நாம் மகிழ்ந் தாலும், துன்புற்றாலும் அது தவமாக்கப்பட முடியும். இவை இரண்டையும், “உன்னதருக்குப் பாவப் பரிகாரமாகவும், பாவிகள் மனந்திரும்பும்படியாகவும்ஒப்புக்கொடுப்பதில்தான் அவை பலன் தருகின்றன. அப்படி ஒப்புக்கொடுக்காவிட்டால் அவை வீணாகின்றன. இவ்வாறு வீணாகும் இன்ப, துன்பங்களுக்குக் கணக்கேயில்லை. பரிசுத்த பாத்திமா மாதா, தாயுள்ளத்துடன் இப்படி நம் வாழ்வு வீணாகப் போகாமல், நம்முடைய இன்ப, துன்பமாகிய அனைத்தையும், பாவப் பரிகாரமாகவும், பாவிகள் மனந்திரும்பும்படியாகவும் சேகரித்துப் பயன்படுத்த விரும்புகிறார்கள்.

மேலும் துன்பத்தைப் பாவப் பரிகாரமாக ஏற்று ஒப்புக்கொடுக்கும்போது அதன் கடுமை குறைந்து விடுகிறது. இன்பத்தைப் பாவப் பரிகாரமாக ஒப்புக்கொடுக்கும்போது, அது மட்டுத் திட்டம் அடைந்து விடுகிறது. ஆயினும் நாம் ஏற்றுக்கொள்ளும் துன்பமே அதிகப் பலன் தருகிறது. மாதா தன் முதல் காட்சியில், “கடவுளை மனநோகச் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், பாவிகள் மனந்திரும்பும்படி மன்றாட்டாகவும், அவர் உங்களுக்கு அனுப்பவிருக்கும் துன்பங்களை ஏற்று, அவருக்கு ஒப்புக்கொடுக்க விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்கள். மூன்றாம் காட்சியில், "பாவிகளுக்காக உங்களைப் பலியாக்குங்கள்" என்றார்கள். நான்காம் காட்சியில், “பாவிகளுக் காக ஒறுத்தல் முயற்சிகளைச் செய்யுங்கள். ஏனெனில் தங்களுக்காக செபிக்கவும் ஒறுத்தல் செய்யவும் யாருமில்லாததால், அநேக ஆன்மாக்கள் நரகத்திற்குச் செல்கிறார்கள்" என்றார்கள்.

கடவுள் நமக்கு அனுப்பும் துன்பங்களை அமைந்த மனதோடு ஏற்பது மட்டும் போதாது. நாமும் பரித்தியாக, ஒறுத்தல் முயற்சிகளைத் தேடிச் செய்ய வேண்டும் என்ற உண்மையை மாதா வின் இவ்வார்த்தைகளிலிருந்து அக்குழந்தைகள் புரிந்துகொண்டு, தவ முயற்சிகள் செய்தார்கள். அவர்கள் தங்கள் மதிய உணவை ஏழைகளுக்குத் தந்துவிட்டு, காட்டில் அகப்பட்ட இலை, தழை, கிழங்கு, காய்களைத் தின்றார்கள். கசந்த காய்களைத் தேடித் தின்று, அதனால் அதிக பரித்தியாகம் செய்தார்கள். தாகத்தைத் தாங்கிக்கொண்டார்கள். தலைவலி ஏற்படுத்தும் அரோசிகமான சத்தங் களைப் பொறுத்துக்கொண்டார்கள். வீட்டிலும் வெளியிலும் தவறாக நடத்தப்பட்டபோது தாங்கள் பட்ட வேதனைகள் உட்பட இவை அனைத்தையும் பாவப் பரிகாரமாக அவர்கள் ஒப்புக் கொடுத்தார்கள். ஜசிந்தா, மருத்துவமனையில், தனது இரு விலா எலும்புகள், மயக்க மருந்தின்றி வெட்டி எடுக்கப்பட்ட வேதனையை எவ்வளவு ஆன்ம தாகத்துடன் அமைதியாக தாங்கிக்கொண் டாள் என்பதை நாம் அறிய வேண்டும்.

ஆகவே, தவம் செய்வதில் பாத்திமா குழந்தைகளை நாம் பின்பற்றுவோம். இரத்தம் சிந்தும் அளவுக்குக் கசையடிகளையும், வனவாசத்தையும் மாதா நம்மிடம் கேட்கவில்லை. மாறாக, தொடர்ந்து ஐந்து மாதங்களின் முதல் சனிக்கிழமைகளில் (1) பாவசங்கீர்த்தனம் செய்து, (2) பரிகார திவ்ய நன்மை உட்கொண்டு. (3) 53 மணி ஜெபமாலை ஜெபித்து, (4) கால் மணி நேரம் ஜெபமாலைத் தேவ இரகசியங்களைத் தியானித்தபடி, தன்னுடன் தங்கியிருந்து, இவ்வாறு தனது மாசற்ற இருதயத்திற்கு எதிராகச் செய்யப்படும் நிந்தைகளுக்குப் பரிகாரம் செய்வதாகிய முதல் சனி பக்தியையும், நம் சொந்த சிறு சிறு பரித்தியாகங்களையும்தான் கேட்கிறார்கள். சேசுவுக் காகவும், சேசுவுடனும், மாதாவுக்காகவும், மாதாவுடனும், பாவிகளின் இரட்சணியத்திற்காக தவம், பரித்தியாகம், ஒறுத்தல் இவைகளைச் செய்யும்போது, மாதா இவற்றைப் பயன்படுத்தி, ஆத்துமங்களை நரகத்திலிருந்தும், உலகத்தைத் தப்பறை, போர்கள், இயற்கை அழிவுகள், கொள்ளை நோய்கள், பஞ்சம், பட்டினியிலிருந்தும், திருச்சபையைத் தப்பறைகளிலிருந்தும், விசுவாச மறுதலிப்பிலிருந்தும் பாதுகாப்பார்கள். இதைச் செய்வோம் என்றால், "இறுதியில் மரியாயின் மாசற்ற இருதயம் வெற்றிபெறும்"போது, அந்த வெற்றியில் நாமும் பங்கு பெறுவோம்



மரியாயே வாழ்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக