Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

சனி, 4 மே, 2024

குழந்தை சூசை தேவாலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. - Presentation of St. Joseph in Temple

 

குழந்தை சூசை தேவாலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

 

(கன்னிகையான மரிய செசீலியா பெய்ஜுக்கு வெளிப்படுத்தப்பட்ட அர்ச். சூசையப்பரின் வாழ்க்கை வரலாறு என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.)



தாய்மாரின் சுத்திகரம் தொடர்பாக மோயீசனின் திருச்சட்டம் நியமித்த காலம் நிறைவுற்ற போது, சூசையின் பெற்றோர் அவரோடு ஜெருசலேமுக்குப் புறப்பட்டார்கள். சூசையின் தாய் தன் சுத்திகரத்திற்காகவும், தன் மகனைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து, சட்டப்படி காணிக்கை தந்து அவரை மீட்டுக்கொள்ளவும் ஆலயத்திற்குச் சென்றாள். அவர்கள் கடவுள் இப்பேர்ப்பட்ட ஒரு குழந்தை யைத் தந்ததற்காகத் தங்கள் நன்றியை வெளிப்படுத்தும் அடை யாளமாக, வழக்கத்தை விட மிக அதிகமான நற்கொடைகளை ஆலயத்திற்குக் கொண்டு வந்திருந்தார்கள்.

இந்தப் பயணம் முழுவதும் சூசையப்பரின் முக பாவனை அவரது அசாதாரணமான மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. இது அவரது பெற்றோர் இருவருக்கும் மிகுந்த ஆறுதல் தந்தது. அவரது ஆத்துமத்தில் வரப்பிரசாதம் எப்படித் தன்னை பொழிந்து கொண்டிருந்தது என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். இந்த இளம் வயதிலேயே அது இவ்வளவு அதிகமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது என்றால், அவருக்கு அதிக வயதாகும்போது, இன்னும் எவ்வளவு அதிகமான வரப்பிரசாத வெளிப்பாட்டை அவரிடம் எதிர் பார்க்க முடியும்! இது அவருடைய பெற்றோருக்கு, தங்களில் கடவுளின் மீது இன்னும் அதிக

மான அன்பையும், நன்றியறிதலையும் தூண்டிக் கொள்வதற்கான ஓர் உந்துதலாக இருந்தது.

தனது சுத்திகரச் சடங்கின்போது, சூசையின் தாய் தன் மகன் பெற்ற தேவ கொடைகளைப் பற்றி அதிகமான ஞான உணர்த்துதல்களைப் பெற்றுக்கொண்டாள். யூத குரு சூசையைத் தம் கரங் களில் ஏந்தி, கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தபோது, ஓர் அசாதாரணமான சந்தோஷ உணர்வையும், ஞான ஆறுதலையும் அனுபவித்தார். அவர் தம் உள்ளரங்கத்தில் ஒளிர்விக்கப்பட்டு, இந்தக் குழந்தை கடவுளின் கண்களில் எவ்வளவு பிரியத்திற்குரியவராக இருந்தார் என்பதை அறிந்துகொண்டார். சூசையின் கண்கள் திறந்திருந்தன, அவை பரலோகத்தை நோக்கி உயர்த்தப்பட்டிருந்தன.

அவர் முழு இருதயத்தோடு தம்மையே கடவுளுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுப்பதன் மூலம் குருவின் ஒப்புக்கொடுத்தலோடு தம்மை இணைத்துக்கொண்டார். இந்த முழு ஆடம்பரச் சடங்கின்போதும், அவர் முழுமையாகக் கடவுளுக்குள் பொதிந்துகொள்ளப்பட்டார். கடவுள் அவரில் தேவ வரப்பிரசாத வாழ்வை அதிகரித்த அதே சமயத்தில் அவருக்கு ஒரு சிறப்பான ஞான வெளிச்சத்தையும் தந்தருளினார். அதன் மூலம், தமது முழுமையான அர்ப்பண நேரத்தில் கடவுள் மிக தாராளமான முறையில் தமக்குத் தந்தருளிய கொடை எவ்வளவு உயர்ந்ததும் பக்திக்குரியதுமானதாயிருந்தது என்பதை அவர் உய்த்துணர்ந்தார். ஆகவே அவர் மீண்டும் பக்தியுருக்கத்தோடு கடவுளுக்கு நன்றி செலுத்தினார்.

அவரது பெற்றோர் வழக்கமான காணிக்கையைச் செலுத்தி, அவரை மீட்டுக்கொண்டார்கள். குரு குழந்தையைத் தாயிடம் திருப்பித் தந்தபோது, அவள் நல்ல கவனத்தோடு அவரை வளர்த்து வர வேண்டுமென்றும், அவர் மீது தனி கவனம் செலுத்தி வர வேண்டும் என்றும் அவளுக்கு அறிவுறுத்தினார். ஏனெனில் இந்தக் குழந்தை தனிப்பட்ட முறையில் கடவுளுக்குப் பிரியமான வராக இருப்பார் என்பதும், பெரிய காரியங்களுக்காகக் கடவுள் அவரை நியமித்திருக்கிறார் என்பதும் அவருக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது; மேலும், இக்குழந்தை தமது அசாதாரணமான குணநலன்களின் காரணமாக, ஒரு நாள், தம்மோடு தொடர்பு கொள்ளவிருந்த அனைவருக்கும் மிகுந்த ஆறுதலின் காரணமாக இருப்பார் என்பதையும் அந்தக் குரு கண்டுணர்ந்தார்.

இதெல்லாம் உண்மைதான் என்பதைப் பிற்காலம் நிரூபித்தது. உண்மையில், சூசையப்பர் வாழ்வில் தம்மோடு தொடர்பு கொண்டவர்களுக்கு மட்டுமின்றி, எதிர்காலத்தில் தம்மீது அன்பும், பக்தியும் உள்ளவர்களாக இருக்கவிருக்கும் அனைவருக்கும் கூட மிகுந்த ஆறுதலைக் கொண்டு வந்தார். இறப்பவர்களின் பாதுகாவலராக இருக்கும்படி கடவுள் அவரை நியமம் செய்திருந்த தால், அவர் ஒருநாள், மரணத்திற்கு எதிரான போராட்டத்தில் அவர்களுக்கும் பயனுள்ள முறை யில் ஆறுதலும், பலமும் வருவிப்பவராக இருப்பார்.

குழந்தை தங்களிடம் திருப்பித் தரப்பட்டவுடன், பெற்றோர், தங்கள் இருதயங்கள் ஆழமாகத் தொடப்பட்டதாலும், மகிழ்ச்சியால் நிரப்பப்பட்டதாலும், கண்ணீர் சிந்தியபடி, கடவுளுக்கு நன்றி செலுத்தினார்கள். அவர்கள் சூசையை ஒரு பொக்கிஷமாக, தெய்வீகமான விதத்தில் தங்களுக்குத் தந்தருளப்பட்ட ஒரு கொடையாகச் சுமந்துகொண்டு வீடு திரும்பினார்கள். சின்ன சூசை வீடு திரும்பும் பயணத்தில், கடவுளில் முழுமையாகப் பொதியப்பட்டவராக, மிகவும் அமைதியாக இருந்தார். தேவசிநேக வளர்ச்சியில் மிகுந்த முன்னேற்றம் காண தமக்கு உதவிய வரப்பிரசாதங்களுக்காக அவர் கடவுளுக்கு நன்றி செலுத்தினார். தாம் மிகவும் நேசித்த சகல புண்ணியங் களையும் அனுசரிப்பது அவருக்கு (வயதின் காரணமாக) சாத்தியமற்றதாக இருந்தபோதிலும், அவற்றிற்காக ஆசை கொள்வதில் தம்மைப் பயிற்றுவிக்க அவர் கடுமையாக முயன்றார். போதிய முதிர்ச்சி அடையும் வரையில் அவர் இப்படிச் செய்து வந்தார். அதற்குப் பிறகு, அவர் அவற்றை மிகுந்த உத்தமமான முறையில் அனுசரித்து வந்தார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக