Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 4 மே, 2024

சேசுவின் திரு இருதயம் எங்கும் சிநேகிக்கப்படுவதாக - May the Sacred Heart of Jesus be loved everywhere

 

"சேசுவின் திரு இருதயம் எங்கும் சிநேகிக்கப்படுவதாக!”


சேசுவின் மகா பரிசுத்த திரு இருதயம் தேவ-மனிதரின் இருதய மாக இருக்கிறது. மனிதாவதாரப் பரம இரகசியத்தின் வழியாக, தேவ சுதன், இஸ்பிரீத்துசாந்து நிழலிட்டதால், பரிசுத்த கன்னி மாமரியின் மாசற்ற இருதயத்திலிருந்து ஒரு மனித இருதயத்தை எடுத்துக்கொண்டார். திரு இருதயப் பிரார்த்தனையில், தேவ சுதனின் மனிதாவதாரத்தைப் பற்றிய மிக அழகிய மன்றாட்டு ஒன்று உள்ளது: “பரிசுத்த கன்னித் தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திரு இருதயமே." இதற்கு அடுத்த மன்றாட்டு, சேசுவின் மனித இருதயம் அவரது தேவ சுபாவத்தோடு ஒன்றித்திருக்கிறது என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது: “தேவ வார்த்தையாகிய சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திரு இருதயமே...” சுவிசேஷங்களில்: “என் மக்களிடம் என் இருதயம் பரிவுகொள்கிறது (மத். 15:32) என்றும், “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, என் அண்டையில் வாருங்கள். நான் உங்க ளுக்கு இளைப்பாறுதல் தருவேன்... என்னிடமிருந்து கற்றுக்கொள் ளுங்கள். ஏனெனில் நான் சாந்தமும், இருதயத் தாழ்ச்சியும் உள்ளவன். உங்கள் ஆத்துமங்களும் இளைப்பாற்றியைக் கண்டடையும். ஏனெனில் என்நுகம் எளியது, என் சுமை இனியது" (மத். 11:28) என்றும் கிறீஸ்துநாதர் கூறும்போது, அவர் தமது சொந்த இருதயத்தையே குறிப்பிடுகிறார்.

தேவ உயிர் நம்மீது பொழியப்படும் செயல், கிறீஸ்துவின் திறக்கப்பட்ட இருதயத்திலிருந்து வழிந்தோடிய இரத்தத்தாலும், நீராலும் குறித்துக் காட்டப்படுகிறது. இச்செயல் அவருடைய திருச்சபையில், விசேஷமாக தேவத்திரவிய அனுமானங்களில் தொடர்கிறது. சேசுவின் ஊடுருவப் பட்ட திரு இருதயத்திலிருந்து வழிந்த தண்ணீரிலும், இரத்தத்திலும் திருச்சபை எப்போதும் ஞான ஸ்நானம், திவ்ய நற்கருணை ஆகிய தேவத் திரவிய அனுமானங்களைக் காண்கிறது. இவற்றினால், இஸ்பிரீத்துசாந்து நம் ஆத்துமங்களுக்குள் ஊற்றப்படுவதன் வழியாக, திருச்சபையில் நாம் உயிர் பெறுகிறோம். இவற்றின் மூலமாகத்தான் நம்மில் வாசம் செய்கிற இஸ்பிரீத்துசாந்து வானவரின் உயிர், கிறீஸ்துநாதரின் மெய்யான சரீரமாகிய பரலோக உணவால் போஷிக்கப்படுகிறது.

திவ்ய கன்னிகை தேவ அடிமையாகத் தன்னை அர்ப்பணித்ததும், தேவ சுதனின் தேவ சுபாவத் தோடு மனித சுபாவம் இணைந்து, சேசுவின் திரு இருதயம் துடிக்கத் தொடங்கியது. அவர் நமக்காகப் பிறந்தார், நமக்காக வாழ்ந்தார், நமக்காகவே மரித்தார். தமது கொலைஞர்களின் வன்முறையைவிட அதிகமாக அன்பினாலேயே அவர் சிலுவையில் அறையப்பட்டார்; “அவர் என்னை நேசித்து, எனக்காகத் தம்மையே கையளித்தார்" என்ற அப்போஸ்தலரின் கூற்றுப்படி, அவர் ஒவ்வொரு மனிதனுக்கும் தம்மையே உன்னதக் கொடையாகத் தந்தார். அவர் தமது இருதயத்தில் வைத்துள்ள பேறுபலன்களின் அளவற்ற பொக்கிஷத்தை இரட்சிக்கப்பட்ட மனித இனத்தின்மீது பொழிகிறார்.

அவர் அர்ச். மர்கரீத் மரியம்மாளிடம்: "மனிதர்களை எவ்வளவோ அதிகமாக நேசித்த என் இருதயத்தைப் பார். பதிலுக்கு அவர்களிடமிருந்து நான் பெறுவதெல்லாம் நன்றியற்றதனமும்,  நிந்தை அவமானங்களுமே. இவற்றிற்குப் பரிகாரம் செய்வதன் மூலம் நீயாவது எனக்கு ஆறுதல் அளிக்க முயற்சியெடு" என்றார். மனிதர்களில் பெரும்பாலானவர்கள் கடவுளிடமிருந்து நன்மை களைப் பெற்றுக்கொள்வதுதான் பக்தி என்று நினைக்கிறார்கள். ஆனால் இங்கோ, சேசுவின் திரு இருதயம் மனிதர்களிடம் ஆறுதல் கேட்கிறது. சர்வ வல்லபர் அற்பப் புழுவிடம் ஆறுதலைக் கேட்பது எவ்வளவு பரிதாபம்! ஆனால் அதையும் நாம் தர மறுப்பது எத்தகைய அக்கிரமம்! இதைப் புரிந்து கொண்டால், அவரை நேசிப்பதும், அவருக்கெதிரான நிந்தைகளுக்குப் பரிகாரம் செய்வதும் நமக்கு எவ்வளவு எளிதாயிருக்கும்!

சேசுவின் இந்த வல்லமை மிக்க திரு இருதயத்திற்கு மனித ஆறுதல் என்பது தேவைதானா? இந்தத் திரு இருதயம் வல்லமை மிக்க சர்வேசுரனும், மனிதனுமானவரின் திரு இருதயம் என்ற முறையில் அதற்கு மனித ஆறுதல் அற்ப அளவிலும் கூட தேவையில்லை. ஆனால் இங்கே இருதயம் என்பது தேவனும், மனிதனுமானவர் மனிதர் மீது கொண்ட அளவற்ற பேரன்பிற்கு ஒரு மாற்றுச் சொல் லாகப் பயன்படுத்தப்படுகிறது. பெத்லகேமிலும், நாசரேத்தின் மறைந்த வாழ்விலும், அவருடைய பொது ஜீவியத்திலும், எல்லாவற்றிற்கும் மேலாக, கல்வாரியின்மீதும் அளவற்ற விதமாக மனிதர் மீது பொழியப்பட்ட இந்தத் தெய்வீகப் பேரன்பு, மனிதர்களின் பாவங்களால் காயப்படுத்தப்படு கிறது. அவரது மனித சுபாவம், அவரால் மீட்டு இரட்சிக்கப்படும் ஆத்துமங்களிடமிருந்து பதிலன்பைத் தேடுகிறது, அவர்களுக்குத் தாம் செய்த சகல நன்மைகளுக்கும் அவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்க அவர் முழு உரிமையுள்ளவராக இருக்கிறார்.

ஆனால் தங்கள் இரட்சணியத்தை அலட்சியம் செய்பவர்களும், தங்களுக்காகச் சிந்தப்பட்ட மகா பரிசுத்த திவ்ய இரத்தத்தை வீணாக்குபவர்களும், அவர் தங்களுக்குக் காண்பித்துள்ள அன்புக்குப் பிரதிநன்றியாக, காரணமேயின்றி அவரைத் தங்கள் செயல்களால் வெறுத்துப் பகைப்பவர்களுமான மனிதர்களைக் குறித்து அவருடைய திவ்ய இருதயம் மீண்டும் பல முறை வியாகுல ஈட்டியால் குத்தித் திறக்கப்படுகிறது. இந்த அளவற்ற வேதனையில்தான் அவருடைய திரு இருதயம், அவரை நேசிப்பவர்களிடம் ஆறுதலுக்காகத் திரும்புகிறது.

ஆகவே, சேசுவின் திரு இருதய பக்தியின் முதல் நோக்கம், சேசுவின் மட்டில் இகழ்ச்சி அல்லது குறைந்த பட்சம் அசட்டைத்தனம் உள்ளவர்கள்மீது அவர் கொண்ட பேரன்புக்குப் பிரதியன்பு செலுத்துவதும், நமது நன்றியறிதலாலும், எல்லா வகையான சங்கை மரியாதையாலும், திவ்ய நற்கருணையில் சேசு நமக்குக் காட்டும் நேசத்திற்கு மகிமையும், நன்றியறிதலும் செலுத்துவதும் ஆகும். நற்கருணையில் தம்மை அறிந்துள்ள மக்களால் கூட அவர் மிகக் குறைவாக நேசிக்கப் படுகிறார். இந்த பக்தியின் இரண்டாவது நோக்கம், அவரது இவ்வுலக வாழ்வில் அவருடைய அன்பு அவரை எவற்றிற்கு உட்படுத்தி வைத்திருந்ததோ, அந்த நிந்தை, அவமானங்களுக்கும், திவ்ய நற்கருணையில் ஒவ்வொரு நாளும் தமது அன்பினால் அவர் எதிர்கொள்கிற நிந்தை அவமானங்களுக்கும் நம்மால் முடிந்த எல்லா வழிகளிலும் பரிகாரம் செய்வது ஆகும்.

சேசுவின் திரு இருதயத் திருநாள் அனுசரிப்புகள்:

தமது திரு இருதயத்தின் மகிமைக்காக ஒரு நாளை (திவ்ய நற்கருணைத் திருநாளுக்குப் பின் வரும் வெள்ளி) அவர் நியமித்திருக்கிறார். இத்திருநாளின் தேதி அவராலேயே தேர்ந்தெடுக்கப்பட்டது. அவரது தேவசிநேகம் உட்பட, நம் இரட்சகர் வாக்களித்துள்ள இந்தப் பெரும் வரப்பிரசாதங்களைத் தவறாமல் பெற்றுக்கொள்வதற்கு, இத்திருநாள் சேசுவின் திரு இருதயத்தை மகிமைப்படுத்தும் கருத்தோடு செலவழிக்கப்பட வேண்டும். இத்திருநாளில் நாம் செய்ய வேண்டியவை

(1) பாவசங்கீர்த்தனம் செய்து, பூசை கண்டு, சேசுவின் திரு இருதயத்திற்கு எதிராகச் செய்யப்படும் நிந்தைகளுக்குப் பரிகாரமாக திவ்ய நன்மை உட்கொள்ள வேண்டும்; 

(2) ஒரு முறையாவது ஆழ்ந்த தியானத்தோடு திவ்ய நற்கருணையைச் சந்திக்க வேண்டும். திவ்ய நற்கருணையை ஸ்தாபிப்பதில் காண்பிக்கப்பட்ட அளவற்ற சிநேகத்திற்காக சேசுவுக்கு நன்றி கூறுவதும், நாம் திவ்ய நன்மை உட்கொண் டுள்ள எல்லா வேளைகளுக்காகவும், நாம் பெற்றுக்கொண்ட எல்லா விசேஷ ஆசீர்வாதங்களுக் காகவும் அவருக்கு நன்றி கூறுவதும், சகல நிந்தைகளுக்கும் பரிகாரம் செய்வதும், நம் ஆழ்ந்த சங்கை யாலும், மேரை மரியாதையாலும், சங்கைக் குறைவுகள், அவபக்திகள் மற்றும் தேவத்துரோகங் களுக்குப் பரிகாரம் செய்வதும் இந்த நற்கருணை சந்திப்பின் நோக்கமாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து ஒன்பது தலைவெள்ளிகளில் நாம் பூசை கண்டு, பரிகார நன்மை உட்கொள்ள வும், சேசுவின் திரு இருதயத் திருநாள் அனுசரிப்புகள் அனைத்தையும் தலைவெள்ளிக்கிழமை களிலும் அனுசரிக்கவும் வேண்டும். குறிப்பாக, இந்நாளில், திரு இருதயப் பிரார்த்தனையும், ஜெபமாலையும், முடிந்தால், திரு இருதய கட்டளை ஜெபமும் சொல்லப்பட வேண்டும். பணிச் சுமையால் இது இயலாதபோது, அடிக்கடி சேசுவின் அன்பை நினைத்து, பக்தியுருக்கத்தோடு, "என் ஆண்டவரே, என் தேவனே!" "சேசுவே, உம்மை நேசிக்கிறேன்!" "சேசுவின் திரு இருதயம் எங்கும் ஸ்துதிக்கப்படுவதாக என்பவை போன்ற மனவல்லய ஜெபங்களைச் சொல்ல வேண்டும். மனதுருக்கத்தோடு இந்த பக்தியைத் தொடங்குபவர்கள் படிப்படியாக, ஒரு வாடிக்கைச் சடங்காக விருப்பமேயின்றித் தொடர்ந்து அதைச் செய்வது மனித பலவீனம். ஜெபத்தாலும், தியானத்தாலும், நம் நிலையான முயற்சிகளாலும் இந்த அசட்டைத்தனத்தின் மீது நாம் வெற்றிகொள்ள வேண்டும். மேலும், பாவ வாழ்வையும், புண்ணிய வாழ்வையும் பிரிப்பது நம் சித்தம் என்ற நூல் வேலி மட்டுமே, அது எளிதாக அறுந்துவிடும் என்பதை மனதில் கொண்டு, புண்ணிய வாழ்வில் நிலைபெறும்படி ஜெபத்தாலும், பாடுகளின் தியானத்தாலும், தவத்தாலும், ஒறுத்தல் பரித்தியாகங்களாலும் நாம் "நாள்தோறும்," "இடைவிடாமல்" இந்த நூல்வேலியை அறுந்து போகாத இரும்புச் சங்கிலியாக மாற்றிக்கொள்ள வேண்டும். பரிகாரம் என்பது தேவசிநேகமேயன்றி வேறில்லை! கடவுளை நேசிக்காத வனால் அவருக்குப் பாவப் பரிகாரம் செய்யவே இயலாது!

எல்லாவற்றிற்கும் மேலாக, சகல அக்கிரமங்களும் நிறைந்த இவ்வுலகில் நம் ஆண்டவர் வாழ்ந்த போது, அவரைப் பாவ வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் அடைக்கலமாக இருந்த "அமல உற்பவ இருதயத்தை" நாம் நேசிக்க வேண்டும். அந்த மாசற்ற இருதயத்தைக் கண்டுபாவித்து, அத்திரு இருத யத்தின் பள்ளியில் சேசுவின் திரு இருதயத்தை நேசிக்க நாம் பயிற்சி பெற வேண்டும். தேவமாதா தனக்காக அன்றி, சேசுவுக்காகவே அவரை நேசித்தார்கள். நம் மீட்பின் நிமித்தம் அவரது திருப் பாடுகளில் பங்குபெற்றார்கள். நித்தியத்திற்கும் சேசுவின் திரு இருதயத்தில் இளைப்பாற ஏங்கும் யாரும், மரியாயின் மாசற்ற இருதயத்தின் இந்த இரு உன்னதப் புண்ணியங்களைப் பின்பற்றி, தனக்காக அன்றி, சேசுவுக்காகவே அவரை நேசிக்கவும், தன்னுடையவும், மற்றவர்களுடையவும், "நன்றியற்றதனத்திற்கும், நிந்தை அவமானங்களுக்கும்" பரிகாரமாக, தனக்கு வரும் துன்பங்களை அமைந்த மனதோடு தாங்குவதன் மூலம் திருப்பாடுகளில் பங்குபெறவும் வேண்டும். அப்போது, சேசு, மரிய இருதயங்கள் ஆறுதல் பெறும்; நித்திய ஆறுதல் நம்முடையதாகும்.

மரியாயே வாழ்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக