Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 6 ஜனவரி, 2024

தேவமாதாவின் மகிமைமிகு மோட்சாரோபணம்

 "ஆதித்திருச்சபையின் மகாத்துமாவானவரும் வேதவல்லுனருமான ஓரிஜன் என்பவர் தேவமாதாவின் மோட்சாரோபணத்தை பின்வருமாறு விவரிக்கின்றார்: " மோட்சத்தில் மகிமையுடன் தேவமாதா பிரவேசிப்பதைக் கண்ணுற்ற பரிசுத்த ஆத்துமங்கள், "முள்ளும் உபாதனைகளும் நிறைந்த பூமியாகிய பாலைநிலத்திலிருந்து, நமது நேச ஆண்டவரே வெகுவாய் களிகூர்ந்து தம்முடன் மாபெரும் மகிமையுடன் அழைத்துவரும் பேரெழில் மிக்க இப்பெண்மணி யார்? (உன்னத சங்கீதம் 8:5)
ஆண்டவர் தமது திருத்தோள்மேல் சாய்ந்து கொண்டு வருபவர்களும் மகா பரிசுத்தமும் அதிஉன்னத புண்ணியங்களும் நிறைந்தவர்களுமான இவர்கள் யார்?" என்று ஒருமித்தகுரலில் வினவியபோது, தேவமாதாவுடன் சூழ்ந்து வந்த சம்மனசுகள், "அவர்கள், நமது தேவாதி தேவனும் ராஜாதி ராஜாவுமான சர்வேசுரனின் தாயார்' பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களும், பிரியதத்தத்தினால் பூரணமானவர்களுமான அவர்கள் நம் இராக்கினி' அர்ச்சிஷ்டவர்களுக்கெல்லாம் மேலானவர்களும் நம் சர்வேசுரனின் பிரிய நேசமான பத்தினியும் அமல உற்பவியும் பரிசுத்த புறாவுமாக விளங்குகின்றார்கள்' சகல சிருஷ்டிகளிலும் அதி உன்னத மேன்மைமிகுந்த சிருஷ்டியாக திகழ்கிறார்கள் என்று பதில் கூறினர். உடனே சகல மோட்சவாசிகளும் தேவமாதாவைப் போற்றிப் புகழ்ந்து ஆர்ப்பரித்து, "ஓ! எங்கள் ஆண்டவளே! எங்கள் இராக்கினியே! நீரே எங்கள் பரலோக நாட்டின் மகிமையும் மகிழ்ச்சியுமாகவும் எங்கள் அனைவருக்கும் மகிமையாகவும் விளங்குகின்றீர். உமது வரவு நல்வரவாகுக! நீர் எப்போதும் ஆசீர்வதிக்கப்படுவீராக! இதோ உமது அரசு! இதோ உமது ஊழியரான நாங்கள் எப்போதும் உமது கட்டளைகளுக்கு கீழ்ப்படிய காத்திருக்கிறோம்!" என்று பாடினர்.

தேவமாதாவை தங்களுடைய இராக்கினியாக வணங்கி வாழ்த்தி வரவேற்பதற்காக எல்லா அர்ச்சிஷ்டவர்களும் அங்கு ஒன்று கூடி வந்தனர். அப்போது பரிசுத்த கன்னியர்கள் தங்களுடைய திவ்ய இராக்கினியிடம்," ஓ மிகவும் பரிசுத்த ஆண்டவளே! நாங்களும் இப்பரலோகத்தின் அரசிகள் தான். ஆனால் நீரே எங்கள் அனைவருக்கும் இராக்கினி! ஏனென்றால், நீரே முதலில் உமது பரிசுத்த கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்து, எங்கள் அனைவருக்கும் மேன்மைமிகுந்த நன்மாதிரிகையாக திகழ்கின்றீர்! அதற்காக உம்மைப் போற்றி உமக்கு நன்றி செலுத்துகின்றோம்!" என்று கூறினர். அதன் பிறகு ஸ்துதியர்களும் வேதபாரகருமான சகல அர்ச்சிஷ்டவர்களும், தமது பரிசுத்த ஜீவித்தினால், தங்களுக்கு மிக அழகிய உன்னதமான நற்புண்ணியங்களைக் கற்பித்து அவற்றில் நடப்பித்த தங்கள் தேவ ஆண்டவளுக்கு நன்றியும் வாழ்த்துதலும் வணக்கமும் செலுத்தினர்.

பிறகு, சகல வேதசாட்சிகளும் தங்களுடைய திவ்ய இராக்கினியிடம் வந்தனர். தமது திவ்ய குமாரனின் பரிசுத்த பாடுகளின் மீதான வேதனைகள் மற்றும் வியாகுலங்களில் இவ்வுலக ஜீவியம் முழுவதும் நிலைத்திருந்த தேவமாதா தங்களுடைய தேவஆசிரியையாகவும் வேதசாட்சியத்தில் திவ்ய சேசுநாதர் சுவாமிக்காக தங்கள் உயிரை விடுவதற்கு தேவையான ஞானபலத்தை தமது பேறுபலன்களினால் பெற்றுத் தந்ததற்காகவும் தங்களுடைய திவ்ய இராக்கினிக்கு நன்றியும் ஸ்துதியும் தோத்திரமும் செலுத்தினர்” அர்ச்.கன்னிமாமரியின் மகிமைகள்- அர்ச்.அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார் +


எல்லா அப்போஸ்தலர்களுடைய சார்பில் அர்ச். யாகப்பர் தேவமாதாவிடம் வந்து இவ்வுலகில் இருந்தபோது தங்களுக்கு தேவமாதா செய்த அனைத்து உதவிகளுக்கும் நன்றி செலுத்தினார். அடுத்ததாக தீர்க்கதரிசிகள் வந்தனர். தேவமாதாவை அவர்கள் வணங்கி வாழ்த்தி, "எங்கள் ஆண்டவளே! எங்களுடைய எல்லா தீர்க்கதரிசனங்களும் முன்குறிக்கும் அடையாளங்களாக உம்மையே சுட்டிக் காட்டின” என்றனர். பிறகு, பிதாப்பிதாக்கள் வந்தனர். தேவமாதாவிடம் அவர்கள், "ஓ மிகவும் பரிசுத்த மரியாயே! நீரே எங்கள் நம்பிக்கையாக விளங்கினீர். உமது வரவிற்காக நாங்கள் நீண்ட காலம் வெகு பக்திபற்றுதலுடனும் பெருமூச்சுகளுடனும் காத்திருந்தோம்" என்று கூறினர். அவர்களுடன் நமது ஆதிப்பெற்றோரான ஆதாமும் ஏவாளும் வந்தனர். அவர்கள் மாதாவுக்கு மகா பிரியத்துடன் நன்றிசெலுத்திக் கொண்டே தேவமாதாவிடம், "ஆ பிரிய குமாரத்தியே! நாங்கள் மனுக்குலத்திற்கு ஏற்படுத்திய காயத்தைக் குணப்படுத்தினீர். எங்கள் அக்கிரமத்தினால் இழந்துபோன தேவஆசீரை மனுக்குலத்திற்கு நீர் பெற்றுக் கொடுத்தீர்! உம்மாலேயே நாங்கள் இரட்சணியமடைந்தோம். அதன்பொருட்டு நீர் நித்தியத்திற்கும் ஆசீர்வதிக்கப்படுவீராக!" என்று கூறினர். அர்ச். சிமியோன் தேவமாதாவின் திவ்ய பாதங்களை முத்தமிட்டார். அதன்பிறகு, தன் கைகளில் திவ்ய பாலனை ஏந்திய நாளைப்பற்றி மிக ஆனந்த அகமகிழ்வுடன் தேவமாதாவிடம் ஞாபகப்படுத்தினார். அர்ச். சக்கரியாஸ்,

அர்ச். எலிசபெத்தம்மாளுடன் வந்தார். மகா தாழ்ச்சியுடனும் உத்தம சிநேகத்துடனும் தங்களை சந்திக்க தங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்தமைக்காக மாதாவுக்கு நன்றி செலுத்தினர். அதனால் தாங்கள் திரளான தேவவரப்ரசாதங்களைப் பெற்றதாகக் கூறினர். அர்ச்.ஸ்நாபக அருளப்பரும் அங்கு வந்தார். மாதா, தமது திவ்ய குரலினால் தன்னை அர்ச்சித்ததற்காக அவர் மிகுந்த சிநேகத்துடன் தேவமாதாவுக்கு நன்றி செலுத்தினார். மாதாவுடைய பரிசுத்த பெற்றோர்களான அர்ச். ஜோக்கிம், அர்ச். அன்னம்மாள் மாதாவை அணுகி, ஓ ஆண்டவரே! எத்தகைய கனிவுடன் அவர்கள் தேவமாதாவை ஆசீர்வதித்தனர்! அவர்கள் மாதாவை வாழ்த்திக் கொண்டே, “ஓ நேச குமாரத்தியே! உம்மை எங்கள் குழந்தையாகப் பெற்றது எத்தகைய பெரிய பாக்கியம்! இப்பொழுது நீர் எங்களுடைய இராக்கினியாக இரும். ஏனெனில் நீர் எங்கள் சர்வேசுரனுடைய தாயார்! உம்மை வணங்கி தோத்தரித்து ஸ்துதிக்கிறோம்!" என்றனர்.

அர்ச்.சூசையப்பர் அங்கு தோன்றுகிறார். அவர் எத்தகைய உன்னதமான சிநேகத்துடன் மாதாவிடம் வருகிறார் என்று யாரால் சரிவர உணரக்கூடும்? பரிசுத்த பிதாப்பிதாவான அர்ச். சூசையப்பர், தமது திவ்ய பத்தினி மகத்தான வெற்றி வாகையுடன் பரலோக மகிமைக்குள் நுழைவதையும் அங்கு பரலோக இராக்கினியாக முடிசூட்டப்படுவதையும் காணும்போது, எத்தகைய ஆனந்த அக்களிப்பு எய்தினார் என்பதை யாரால் விவரிக்கமுடியும்? அவர் மகா கனிவுடன், "ஓ என் ஆண்டவளே! என் பிரிய பத்தினியே! நமது ஆண்டவரின் தாயாரான உம்மை எனது பத்தினியாக ஏற்படுத்தத் திருவுளமான நமது சர்வேசுரனுக்கு நான் எவ்வாறு நன்றி செலுத்தப்போகிறேன? நித்திய வார்த்தையானவரின் திவ்ய பாலத்துவத்தைப் போஷித்து அவருக்கு பணிவிடைசெய்தும் அவரை எனது கரங்களில் ஏந்தியும் மகிழ்ந்தேன். அதனால் வெகுவான விசேஷ தேவவரப்ரசாதங்களைப் பெற்றுக் கொள்ள தேவையான உன்னத அந்தஸ்தை உமது வழியாகவே நான் அடைந்தேன். திவ்ய சேசுவுக்கும் என் பரிசுத்த பத்தினியான உமக்கும் நான் இப்பூமியில் ஊழியம் செய்த அந்த மணித்துளிகள் எப்பொழுதும் ஆசீர்வதிக்கப்படுவனவாக! இதோ நம் சேசு! பெத்லேகமில் நாம் அவரைப் பார்த்தது போல இனி அவர் மாட்டுக் கொட்டிலில் வைக்கோலின் மேல் படுத்துறங்க மாட்டார். நசரேத்தில் ஒரு தச்சுக்கூடத்தில் நம்முடன் வாழ்ந்தது போல அவர் யாவராலும் வெறுக்கப்பட்ட ஒரு தரித்திரராக இருக்க மாட்டார். உலகின் இரட்சணியத்திற்காக அந்த அவமான மரத்தில் இனி அவர் அறையப்படமாட்டார். ஆனால், அவருடைய தந்தையான பிதாவாகிய சர்வேசுரனின் வலது பாரிசத்தில் பரலோக பூலோக அரசராகவும் ஆண்டவராகவும் முடிசூட்டப்பட்டு வீற்றிருக்கிறார். மேலும், இப்பொழுது என் இராக்கினியே! இனிமையான அவருடைய திவ்ய பாதங்களைவிட்டு நாம் ஒருபோதும் பிரிக்கப்பட மாட்டோம்! அங்கு அவரை நாம் நித்தியத்திற்கும் ஸ்துதித்துக்கொண்டும் சிநேகித்துக் கொண்டும் இருப்போம்" என்றார்.
பிறகு, எல்லா சம்மனசுக்களும் வந்து, சம்மனசுக்களின் இராக்கினியை வணங்கினர். அவர்களைக் கண்ட தேவமாதா பூமியில் அவர்கள் தமக்களித்த அனைத்து பணிவிடைகள் மற்றும் உதவிகளுக்கு நன்றி செலுத்தினார்கள். விசேஷமாக மாதாவின் மகிமைகளை சுமந்து சென்றவரான அர்ச்.கபிரியேல் அதிதூதர், தம்மிடம் மகிழ்ச்சியின் துாதுவராக வந்து, தான் சர்வேசுரனின் தாயாராக சர்வேசுரனாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட சுபசெய்தியை அறிவிக்க வந்ததற்காக நன்றி செலுத்தினார்கள். அதன்பிறகு, தாழ்ச்சி மிகுந்த மகா பரிசுத்த கன்னிகை சர்வேசுரனின்தேவமகத்துவத்தை முழங்காலில் இருந்து ஆராதித்தார்கள். தனது ஒன்றுமில்லாமையில் மூழ்கியவர்களாக, தேவமாதா, தனக்கு சர்வேசுரனுடைய பரிசுத்த நன்மைத்தனம் அளித்த எல்லா தேவவரப்ரசாதங்களுக்காகவும் விசேஷமாக நித்திய வார்த்தையானவருக்கு தன்னை தாயாராக ஏற்படுத்தியமைக்காகவும் நன்றி செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

பிறகு, மகாபரிசுத்த அர்ச்.தமதிரித்துவம் எத்தகைய அளவில்லா சிநேகத்துடன் மாதாவை ஆசீர்வதித்ததை யாரால் புரிந்து கொள்ளக் கூடும்? அவ்வாறு புரிந்து கொள்பவரால் மட்டுமே பரமபிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்ய குமாரத்தியையும், திவ்ய சுதனாகிய சர்வேசுரன் தமது பரிசுத்த மாதாவையும், திவ்ய இஸ்பிரீத்துசாந்துவான சர்வேசுரன் தமது பரிசுத்த பத்தினியையும் எவ்வாறு வரவேற்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பிதாவாகிய சர்வேசுரன் தமது வல்லமையை அளித்து மாதாவுக்கு முடிசூட்டினார். அவ்வாறே, சுதனாகிய சர்வேசுரன் தமது ஞானத்தைக் கொண்டும் திவ்ய இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரன் தமது சிநேகத்தைக் கொண்டும் மாதாவுக்கு முடிசூட்டினார்கள். மூன்று தேவஆட்களும் சேசுநாதர்சுவாமியின் வலதுபக்கத்தில் மாதாவை அமரச் செய்தனர். அங்கு பரலோக பூலோக இராக்கினியாக தேவமாதாவுக்கு முடிசூட்டினர். மகாபரிசுத்த அர்ச்.தமதிரித்துவம், சும்மனசுக்களுக்கும் எல்லா சிருஷ்டிகளுக்கும் தேவமாதாவை தங்கள் இராக்கினியாக ஏற்றுக் கொள்ளவும் மாதாவுக்கு ஊழியம் செய்து மாதாவுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும் கட்டளையிட்டனர்.

சேசுசபையை உண்டாக்கின அர்ச்.இலொயோலா இஞ்ஞாசியார் (St. Ignatius of Loyalo)

 திருநாள் ஜூலை 31ம் தேதி.



ஸ்பெயின் நாட்டில் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த உத்தம கத்தோலிக்க கிறிஸ்துவ பெற்றோர்களுக்கு மகனாக அர்ச்.இஞ்ஞாசியார் 1491ம் வருடம் பிறந்தார். இஞ்ஞாசியார் மேல் அந்நாட்டின் அரசன் மிகவும் பிரியமாயிருந்ததினால் அரண்மனையில் இருந்த அரச அலுவலர்களிடையே அவர் மிகுந்த மகிமையுடன் திகழ்ந்தார். இராணுவத்தில் சேர்ந்து வீர தீரச் செயல்கள் புரிந்து புகழ்பெற்றார். "பாம்பலோனா" என்ற கோட்டையை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காகப் போரிட்டபோது இவர் கால்முறிபட்டு கடினக் காயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
 அப்போது அவர் அங்கு, அர்ச்சிஷ்டவர்களுடைய சரித்திரத்தை வாசிக்கிறபோது இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்டவர்களைப் அனுக்கிரகத்தினாலேயே பின்பற்றி ஜீவிப்பதற்கு தீர்மானித்தார். பிரதான அப்போஸ்தலரான அர்ச்.இராயப்பர் அவருக்குத் தோன்றி புதுமையாக அவருடைய காலைக் குணப்படுத்தினார். மேலும் மோட்ச இராக்கினியான தேவமாதாவும் அவருக்குத் தோன்றி, பசாசு அவரை உபாதித்து வந்த கற்புக்கு எதிரான சோதனைகளையும், பாவநாட்டங்களையும் அவரிடமிருந்து அகற்றினார்கள். தேவமாதா செய்த புதுமையினால், அன்றிலிருந்து சாகுமட்டும், அர்ச்.இஞ்ஞாசியார் அத்தகைய சோதனைகளிலிருந்து ஜீவியகாலம் முழுவதும் காப்பாற்றப்பட்டார். தன் அரண்மனை ஜீவியத்தை விட்டு விட்டு, சாங்கோபாங்கமான அர்ச்சிஷ்ட ஜீவியத்தைக் கடைபிடிக்கும் பொருட்டு மோன்செராத் என்ற தேவமாதாவின் தேவாலயத்திற்கு தவயாத்திரையாகச் சென்றார். பயணத்தின்போது ஒரு பிச்சைக்காரனுக்கு தன்னுடைய நல்ல உடைகளைக் கொடுத்தார். அவனுடைய தரித்திர உடையை வாங்கி அணிந்து கொண்டார். இத்தரித்திர கோலத்திலேயே தேவமாதாவின் கோவிலுக்குச் சென்றார். தன்னுடைய போர்வாளை தேவமாதாவின் சந்நிதியில் வைத்தார். பிறகு மிகுந்த மனஸ்தாபத்துடன் பொதுப் பாவசங்கீர்த்தனம் செய்தார். தன் ஆத்துமத்தைப் பரிசுத்தப்படுத்தினார். தன் ஜீவியகாலம் முழுவதும் கற்புநிறை விரத்தனாயிருப்பதாக வார்த்தைப்பாடு கொடுத்தார். நித்தியத்திற்கும் தேவமாதாவின் சொந்த அடிமையாக தன்னை ஒப்புக்கொடுத்தார். பரிசுத்த கற்புநிறை விரதத்துவ ஜீவியம் தனக்குக் கிடைக்கும்படி ஒரு இரவு முழுவதும் தூங்காமல் தேவமாதாவின் சுரூபத்தின்முன் அழுதுகொண்டே மன்றாடிக் கொண்டிருந்தார். அந்த தயைமிகுந்த திவ்ய மோட்ச இராக்கினி அவருடைய மன்றாட்டை ஏற்றுக் கொண்டதினால் அவர் பெரிய அர்ச்சிஷ்டவரானார். அதன்பிறகு இஞ்ஞாசியார் வியாகுலமாதாவின் சுரூபத்தை தன் கழுத்திலே தரித்துக் கொண்டார். அநேக ஆபத்துக்களிலிருந்து வியாகுல மாதா தன்னைக் காப்பாற்றினார்கள் என்று அவரே வெளிப்படுத்தினார்.
மன்ரேசா என்ற ஊருக்குச் சென்று அங்கிருந்த நோயாளிகளுக்கும் தரித்திரர்களுக்கும் ஊழியம் செய்து வந்தார். கடின தபசும் அனுசரித்து வந்தார். ஆனால் அவ்வூர் மக்கள், தரித்திர கோலத்தில் இருந்த போதிலும் அவர் ஒரு உயர்குடிமகன் என்று அறிந்து அவருக்கு மிகவும் சங்கை மரியாதை செய்தனர். இதைத் தவிர்க்கும் பொருட்டு உடனே, இஞ்ஞாசியார் ஊரை விட்டு வெளியேறி, அருகிலிருந்து மலைக்குகைக்குச் சென்று மறைந்து ஜீவித்தார். நேச ஆண்டவருடைய பாடுபட்ட சுரூபத்தை தன் கழுத்தில் அணிந்து கொண்டார். அவர் அங்கு மிகுந்த கடினமான தபசுகளை அநுசரித்து வந்தார். பிச்சையெடுத்தே உண்டு வந்தார்.

 ஞாயிற்றுக் கிழமைதவிர மற்ற நாட்களில் ரொட்டியும் தண்ணீரும் மட்டுமே உட்கொண்டு ஒருசந்தியிருப்பார். நித்திரையை மிகவும் ஒறுத்துக் குறைப்பார். காயம் வருத்துவிக்கிற இரும்புமுள் ஒட்டியானத்தையும் மகா வேதனை வருத்துவிக்கிற சங்கிலியையும் இடுப்பிலே கட்டிக் கொள்வார். தினமும் தன் சரீரத்தை இரத்தம் புறப்படுகிறவரை அடித்துக் கொள்வார். இவ்வாறாக ஒருவருட காலம் அந்த "மன்ரேசா" குகையிலே கடின தபசு செய்தார்.

அப்படி ஒரு தபசில் ஈடுபட்டிருந்தபோது, விசேஷ தெளிவும் ஞான வெளிச்சமும் அடைந்து ஆண்டவராலே பிரகாசிக்கப்படுகிற போது வெகு ஆனந்தத்தை அவர் அனுபவித்ததுமல்லாமல் மேலான உன்னதமான உணர்ச்சிகள் அவருக்கு உண்டாயிற்று. இதைப்பற்றி குறிப்பிடுகையில் அவர், "அந்தக் குகையில் பரிசுத்த வேதாகமங்கள் இல்லாமல் போனாலும், ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தின வேதகாரியங்களைப் பற்றி மாத்திரம், வேதத்திற்காக என் உயிரைக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறேன்" என்று கூறினார். அர்ச். பரமதிரித்துவ இரகசியத்தை அவர் தரிசனமாகக் காட்சி கண்டார். தேவமாதாவும் அநேகமுறை அவருக்கு அக்குகையில் தோன்றினார்கள்.
அப்போது அதுவரை கல்வி சாஸ்திரங்களைப் படியாமல் இருந்த இஞ்ஞாசியார், அந்தக் குகையிலே "ஞான தியான பயிற்சிகள்" என்ற ஞானதியானத்திற்குரிய ஆச்சரியமான புத்தகத்தை எழுதினார். ஞானத்துக்கு இருப்பிடமான தேவமாதாவே அப்புத்தகத்தை அவர் எழுதும்படிச் செய்தார்கள். அத்தியானங்களின் வழியாக அர்ச்.இஞ்ஞாசியார் வெகு பக்தி சுறுசுறுப்பும் அடைந்ததுமல்லாமல் எண்ணமுடியாத அநேக ஆத்துமங்கள் அப்புத்தகத்தினால் ஞான நன்மையடைந்தன. பாப்பரசர் அதனால் ஏற்படும் ஞானநன்மைகளின் பொருட்டு, உடனே அப்புத்தகத்தை அங்கீகரித்தார். ஆத்துமங்களை இரட்சிக்க கல்வி சாஸ்திரம், முக்கிய தேவை என்று தீர்மானித்த அர்ச். இஞ்ஞாசியார் சிறு பிள்ளைகளுடன் சேர்ந்து பள்ளிக்கூடத்தில் தனது 30வது வயதில் சேர்ந்து கல்வி பயின்றார். அதற்குள்ளாக தான் உண்டாக்கின ஞான தியானங்களைக் கொண்டு அநேக பாவிகளை மனந்திருப்பினார். அதனால் காய்மகாரம் கொண்ட பசாசினாலேயும், மனந்திரும்பாத பாவிகளினாலேயும் அவருக்கு வந்த உபாதைகளுக்குக் கணக்கில்லை. அவரை மாயவித்தைக்காரன் என்று சொல்லி விலங்கிட்டு காவலிலே வைத்தார்கள். ஒருசமயம் பாவிகள் அவரைக் கொடூரமாய் அடித்ததினால் அவர் நினைவில்லாமல் கீழே விழுந்து கிடந்தார்.
ஒரு பாவியை மனந்திருப்புவதற்காக பனிஉறைந்திருக்கிற ஆற்றுத்தண்ணீரிலே வெகுநேரம் நின்றார். அதனால் அவருக்கு ஏற்பட்ட கடின அவஸ்தையையும் சட்டைபண்ணாமல் பாவியின் ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டு மிகப் பொறுமையுடன் சகித்துக் கொண்டார். இஞ்ஞாசியார், தன் நல்ல நேச ஆண்டவரான சேசுநாதர்பேரில் கொண்டிருந்த சிநேகத்தின்பொருட்டு அளவற்ற ஜெருசலேமுக்கு திருயாத்திரையாகச் சென்றார். அங்கிருந்த திவ்ய கர்த்தர் பாடுபட்ட ஸ்தலங்களுக்கு சென்று அவற்றை, மகா உருக்கத்துடனும்அழுகையுடனும் சேவித்தார்.

இஞ்ஞாசியார் தவயாத்திரையை முடித்துக் கொண்டு பாலஸ்தீனத்திலிருந்து பாரீஸ் நகருக்குச் சென்றார். அங்கு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து உயர்கல்வி சாஸ்திரங்களைப் பயின்றார். அங்கிருந்த பல்கலைக்கழக மாணவர்களான இளைஞர்கள் சிலரைக் கொண்டு ஒரு துறவற சபையை உருவாக்க திட்டமிட்டார். தனது ஞானதியானங்களின் வழியாக அவர்களை ஞானஒடுக்கம் செய்ய வைத்தார். அதன்விளைவாக அவ்விளைஞர்கள் பக்தி சுறுசுறுப்புள்ளவர்களானார்கள். அர்ச். பிரான்சிஸ் சவேரியாரும் அந்த இளைஞர்களில் ஒருவர். அவர் அதே பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியராக பணியாற்றினார். உலக மகிமையைத் தேடி தீவிரமாக அவர் அலைந்தபோது தான் இஞ்ஞாசியார் அப்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவராக சேர்ந்தார்.
 "ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆத்துமத்தை இழந்துபோனால் அதனால் அவனுக்கு என்ன பயன்" என்ற சுவிசேஷ வார்த்தைகளின் போதனையைக் கொண்டு அர்ச்.இஞ்ஞாசியார் யார் அவரை மனந்திருப்பியிருந்தார். அந்த இளைஞர் களுடன் இஞ்ஞாசியாரும் சேர்ந்து 7 பேராக வேதசாட்சிகளின் இராக்கினியான தேவமாதாவின் தேவாலயத்திற்குச் சென்று கற்பு, கீழ்படிதல், தரித்திரம் என்ற மூன்று வார்த்தைப்பாடுகள் கொடுத்து இஞ்ஞாசியார் தொடங்கவிருந்த சந்நியாச சபைக்கு அஸ்திவாரமிட்டனர்.

 இஞ்ஞாசியார், தன் படிபபை முடித்ததும், குருப்பட்டம் பெற்றார். நம் ஆண்டவர் மேல் அவர் வைத்திருந்த அளவில்லாத நேசத்தின் பொருட்டும், தாழ்ச்சியினிமித்தமும், இஞ்ஞாசியார், தனது சபைக்கு "சேசுசபை" என்று பெயரிட்டார். பிறகு, ரோமாபுரிக்குச் சென்று தனது சபைக்கு பாப்பரசரிடத்தில் அங்கீகாரம் பெற்றார். பிறகு தன் சபையார் மூலம் சத்தியவேதம் போதிக்கவும் அப்பொழுதுதான் திருச்சபையை உலகெங்கும் சீர்குலைக்கும்படியாக தோன்றியிருந்த புரோட்டஸ்டான்ட் பதிதங்களை நிர்மூலம் பண்ணவும் கிறிஸ்துவர்களை சாங்கோபாங்கத்தின் சுகிர்தநெறியில் திருப்பவும் வேண்டிய அலுவல்களில் ஈடுபடலானார். சிந்துதேசமான இந்தியாவிற்கு அர்ச். பிரான்சிஸ் சவேரியாரின் தலைமையில் சில குருக்களை அனுப்பி அங்கு சத்திய வேதத்தைப் போதிக்கச் செய்தார். தேவபராமரிப்பினால் சேசுசபை உலகெங்கும் வெகுவிரைவாக பரவி ஆங்காங்கே சத்தியவேதம் போதிக்கப்பட்டது. “எல்லாம் சர்வேசுரனுடைய அதிமகிமைக்காக" A.M.D.G (AD MAJOREM DEI GLORIAM) என்பதையே விருதுவாக்காகக் கொண்டு இஞ்ஞாசியாரால் நிறுவப்பட்ட சேசுபையால் உலகம் முழுவதிலும் இருந்த அஞ்ஞானத்துக்கும் பதிதங்களுக்கும் குறிப்பாக லுாத்தரன் என்ற பதிதத்திற்கும் பசாசின் இராஜ்யங்களுக்கும் பெரும் அழிவு ஏற்பட்டது.
கிறிஸ்துவர்களிடையே தாழ்ந்து குளிர்ந்து போயிருந்த பக்திபற்றுதலை மறுபடியும் தூண்டி உயர்த்தும்படியாக அர்ச். இஞ்ஞாசியார் வெகுவாய் உழைத்தார். தேவாலயங்களை புதுப்பித்து வேதத்தைக் கடைபிடியாதவர்களுக்கு ஞானஉபதேசம் கற்பிக்கிறதும், ஞானபிரசங்கங்கள் கொடுப்பதும், பாவசங்கீர்த்தனத்தின் வழியாக ஆத்தும சுத்தம் பண்ணி திவ்ய நற்கருணை பந்திக்கு கிறிஸ்துவர்களை ஆயத்தம் செய்வதுமான பல்வேறு ஞான காரியங்களெல்லாம் அர்ச். இஞ்ஞாசியாராலே எங்கும் முக்கியமாக புண்ணிய பழக்க வழக்கங்களாக அனுசரிக்கப்படலாயின. இஞ்ஞாசியாரின் கட்டளையின்படி சேசுசபையார் அனைவரும் உலகெங்கும் பல நாடுகளில் மடங்களைக் கட்டி இளைஞர்களுக்கு இலவசமாக கல்விக் கற்பித்தனர். வேதசாஸ்திரங்களில் அவர்களைப் பயிற்றுவித்தனர்.
சேசுசபையில் உட்படும்படியாக ஏராளமான இளைஞர்கள் முன் வந்தனர். ஜெர்மனி தேசத்திலிருந்து சேசுசபையில் சேர்வதற்காக வந்த ஏராளமான அரசகுலத்தைச் சேர்ந்த ஆண்களுக்காக ரோமாபுரியில் ஒரு பெரிய குருமடத்தை நிறுவினார். அங்கு மற்ற நாடுகளினின்று வரும் இளைஞர்களுக்கும் வெவ்வேறு சிறு மடங்களையும் கட்டினார். திருமணமாகியும் இல்லறத்தில் ஈடுபடாமல் போன ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களுடைய பரிசுத்த கற்பைக் காப்பாற்றும்படியாகவும் அவர்கள் உத்தம கிறிஸ்துவ ஜீவியம் ஜீவிப்பதற்காகவும் அவர்களுக்கும் தனித்தனியாக மடங்களை ஏற்படுத்தினார். மேலும், அனாதை பெண்களுக்கும், சிறுவர்களுக்கும், ஆண்களுக்கும் ஞான உபதேசம் கற்பவர்களுக்கும் தனித்தனியாக மடங்களை நிறுவினார்.
 திருச்சபையிடமிருந்தும், பல்வேறு உபகாரிகளின் உதவியினாலும் இஞ்ஞாசியார், தான் நிறுவிய எல்லா மடங்களையும் போஷித்து வந்தார். பசாசுகளை ஓட்டுவதிலே இஞ்ஞாசியார் எவ்வளவுக்கு வல்லமை வாய்ந்தவரென்றால் அவருடைய உருவத்திற்கும் அவர் எழுதிய கடிதத்திற்கும் பயந்து பசாசுகள் ஓடின என்பதை அவருடைய சபைக்குருக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். தேவசிநேகத்தின் சுவாலை அவருடைய இருதயத்திலே அடிக்கடி கொளுந்து விட்டு எரியும். அப்போதெல்லாம் அவர் அடைந்த ஞான சந்தோஷத்தினாலே தன் இரு கண்களும் குருடாகும் அளவிற்கு வெகுவாய் கண்ணீர் விடுவார்.

அவர் திவ்யபலிபூசை நிறைவேற்றும்போது தேவசிநேக சுவாலை அவருடைய இருதயத்தில் மிகுதியாக கிளம்பினதால், திவ்யபலிபூசை முடிந்தவுடன் நடக்கக்கூட முடியாதபடிக்கு மிகவும் பலவீனமாகி சோர்ந்து போவார். அப்போது அவரை அவருடைய அறைக்குத் தூக்கிக் கொண்டு போவார்கள். அவர் தியானத்தில் இருக்கும்போது அநேகமுறை பரவசத்தில் ஆழ்ந்துவிடுவார். ஒருமுறை இஞ்ஞாசியார் அவ்வாறு ஒன்றும் சாப்பிடாமலும், பேசாமலும் 8 நாட்கள் தொடர்ந்து பரவசநிலையிலேயே இருந்தார். ஒருசமயம் இஞ்ஞாசியார் ரோமாபுரிக்கு போகிறபோது நம் ஆண்டவர் சிலுவை சுமந்த பிரகாரமாக அவருக்குக் காட்சி தந்து, "நாம் உனக்கு ரோமாபுரியில் பிரசன்னமாயிருப்போம்" என்றார். அன்றிலிருந்து இஞ்ஞாசியாரின் முகத்தைச் சுற்றிலும் ஒளிக்கதிர் புதுமையாக வீசுகிறதை அர்ச். பிலிப் நேரியார் முதலிய சிலர் கண்டனர். அர்ச். சவேரியார் இஞ்ஞாசியாரை மிகவும் சங்கை செய்தவராதலால் அவருக்குக் கடிதம் எழுதும்போது முழங்காலில் இருந்து எழுதுவார். அவரை அர்ச்சிஷ்டவரென்றே அழைப்பார். வேறுபெயரினால் அழைக்கமாட்டார். அர்ச்.இஞ்ஞாசியார் எழுதிய கடிதத்தின் இறுதியில் இருந்த அவருடைய கையொப்பத்தை சவேரியார் கத்தரித்து எடுத்து அதை ஒரு அர்ச்சிஷ்ட பண்டமாக தன் கழுத்திலே தரித்துக் கொண்டார். இதைப்பற்றிக் குறிப்பிடுகையில் சவேரியார், அவருடைய கையொப்பத்தை நம்பிக் கொண்டு பூமியிலேயும் கடலிலேயும் யாதொரு பயமுமின்றி பயணம் செய்யலாம். மேலும் நான் புண்ணியத்தில் உயர்வதற்கும் என்னுடைய வழியாக சிந்துதேசத்தாருக்கு வருகிற ஞான நன்மைகள் எல்லாவற்றிற்கும் அர்ச். இஞ்ஞாசியாருடைய புண்ணியங்கள் காரணமாயிருக்கின்றன. அவர் மகாபெரிய அர்ச்சிஷ்டவர்” என்றார்.

 அர்ச். இஞ்ஞாசியார் வாக்குக்கெட்டாத பக்திசுறுசுறுப்போடே புண்ணிய ஜீவியம் ஜீவித்தார். 65வது வயதில் அவஸ்தைபட்டு அர்ச்சிஷ்டவராக மரித்தார். அவரால் திருச்சபைக்கு விளைந்த திரளான ஞான நன்மைகளையும் அவர் செய்த எண்ணற்ற புதுமைகளையும் கண்ட 15ம் கிரகோரியார் பாப்பரசர் இஞ்ஞாசியாருக்கு 1622ம் ஆண்டு அர்ச்சிஷ்ட பட்டம் அளித்தார். தேவமாதாவின் கட்டளையின்படியே அர்ச். இஞ்ஞாசியார் ஒருதடவை உலகிற்கு வந்து அப்போது ஜீவித்துக்கொண்டிருந்த அர்ச். பாசி மரியமதலேனம்மாளுக்கு தாழ்ச்சி என்ற புண்ணியத்தின்பேரிலே ஞான பிரசங்கம் செய்தார். சேசுசபை என்ற இந்த மாபெரும் உன்னத சந்நியாச சபையினாலே இதுவரைக்கும் உண்டான மகாத்துமாக்களான அர்ச்சிஷ்டவர்களும் வேதசாஸ்திரிகளும் எவ்வளவு பேர் என்றும் இதனால் உலகிற்கு விளைந்த ஞான நன்மைகள் எவ்வளவு என்றும் மனிதரால் சொல்லமுடியாது. சம்மனசுக்குரிய உயர்ந்த புத்தியும் வார்த்தையும் தான் அந்த ஞானநன்மைகளைப்பற்றி விவரிக்கக்கூடும். A.M.D.G.t

ஞாயிறு, 31 டிசம்பர், 2023

அருட்கருவிகள் - குருத்தோலைகள் (Palm)

 குருத்தோலைகள்

 நன்றி கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941




மதாண்டவர் தமது மரணத்துக்குச் சில தினங்களுக்கு முன்பு ஜெருசலேம்! பட்டணத்தின் மகிமையாய் பிரவேசித்ததின் ஞாபகார்த்தமாக, குருத்து ஞாயிற்றுக் கிழமையில் குருத்துக்களை மந்திரித்துக் கொடுக்கிற வழக்கம் ஏற்பட்டது. நமது திவ்விய இரட்சகர் பட்டணத்தை நெருங்கி வரும்போது திரளான ஜனங்கள் அவரை எதிர்கொண்டு வந்தார்கள். அவர்களில் ஒருசிலர் அற்புதமானவரும் புகழ் பெற்ற தீர்க்கதரிசியுமானவரைப் பார்க்க வேண்டுமென்ற வினோதப் பிரியத்தால் வந்தவர்கள். வேறு சிலர் அவருக்குள்ள அற்புத வரத்தைக் காட்டி ஏதாவது புதுமை செய்வாரென்று எண்ணி வந்தவர்கள் இன்னும் சிலர் அவர்மட்டில் விசுவாசங்கொண்டு அவரே வெரு காலமாய் எதிர்ப் பார்க்கப் பட்ட இரட்சகர் என்று அங்கீகரித்தவர்கள்.

ஜனங்கள் கையில் குருத்தோலை பிடித்து, மங்களம் பாடிக்கொண்டு, சேசுநாதர் வரும் வழியில் தங்கள் வஸ்திரங்களை விரித்துச் சங்கைசெய்து, அவரை ஆடம்பரத்துடன் அழைத்துச் சென்றார்கள் என்று சுவிசேஷத்தில் சொல்லியிருக்கிறது. கீழ்த்திசை நாடுகளில் உள்ள ஈந்து ஓலைகள்தான் அவர்கள் கையில் பிடித்திருந்தவை.


ஈந்தோலையின் கருத்து: ஈந்து ஓலை அல்லது குருத்து ஓலை வெற்றிக்கு அடையாளம். சந்தோஷத்தையும் குதூகலத்தையும் காட்டுவதற்கு இதை உபயோகப்படுத்தும் வழக்கம் வெகு சாதாரண மானது. அஞ்ஞான ஜனங்களுள், ஜெயசீலரான தளபதிகளும் வெற்றி வீரரும், ஈந்து ஓலைகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டு மகிமையாய்ச் செல்வது நீண்டகால வழக்கம். யூதர்கள், கூடாரத் திருநாள் எனப்பட்ட மாசூல் உற்சவத்தைச் சிறப்பிப்பதற்குக் குருத்து ஓலைகளை உபயோகித்தார்கள். கிறிஸ்தவ வழக்கப்படி வேதசாட்சி களின் வெற்றியைக் குறிப்பிடுவதற்குக் குருத்து ஓலை உபயோகிக் கப்படுகிறது. குருத்துக்களுள்ள மரம் நிழழும் கனியும் தருவதின் பொருட்டுத் தேவ பராமரிப்பின் பாதுகாவலையும் அருட் கொடை  யையும் கட்டிக்காட்டும் குறியாய் விளங்குகிறது.

குருத்து ஞாயிற்றுக்கிழமையில் மந்திரிப்பதற்கு மிகவும் தகுதியான ஓலை ஈந்து (ஈச்ச மர) ஓலைதான் என்று சொல்லத் தேவையில்லை. இது அகப்படாத இடங்களில், தென்னங் குருத்துகளை அல்லது ஒலிவக் கிளைகளை உபயோகித்துக் கொள்ளலாம்.

குருத்து மந்திரித்தல்: இந்த சடங்கு எக்காலத்தில் ஆரம்பமாயிற்று என்று திட்டமாய்த் தெரியவில்லை. திருச்சபை பஞ்சாங்கங்களுள் மிகப் பழமையானவைகளிலும் இதர புத்தகங்களிலும் காணக் கிடக்கிற சில குறிப்புகளைக் கவனிக்கும்போது. 5-வது நூற்றாண் டிலேயே இது அனுசரிக்கப் பட்டுவந்ததென்று நினைக்கக் காரண முண்டு, ஆயினும், இதைப்பற்றித் திட்டமான விபரம் சுமார் 700-ம் ஆண்டில் அர்ச். பேதா காலத்தில்தான் காண்கிறோம்.

இந்தச் சடங்கு பெரிய பூசைக்கு முன்பு நடைபெறும். பூசை செய்யப் போகிற குருவானவர் ஊதா  காப்பா (மேலங்கி) அணிந்து, இஸ்ராயேலர் வனாந்தரத்தின் வழியாய் சீனாய் மலைக்குச் சென்ற பிரயாணத்திற் கண்ட பன்னிரண்டு நீரூற்றுகளையும், எழுபது ஈத்து மரங்களையும், சர்வேசுரன் அவர்களுக்கு பரமண்டலத்திலிருந்து மன்னாவென்னும் போஜனத்தை அனுப்புவதாக வாக்களித்ததையும் எடுத்துரைக்கிற பழைய ஆகமத்தின் பாகங்களை வாசிக்கிறார். இதன்பின் நமது ஆண்டவர் ஜெருசலேம் பட்டணத்தில் பிரவேசித்த சம்பவத்தை விவரிக்கிற பாகத்தை அர்ச். மத்தேயு சுவிசேஷத்தி லிருந்து வாசிக்கிறார். இது முடிந்ததும், நமக்கு வெற்றியின் குருத் தோலை கிடைக்கும்படியாக மன்றாடும் ஜெபத்தைச் சொல்லி, குருத்துக்களின் பேரிலும் அவற்றைப் பற்றுதலுடன் வைத்திருப் பவர்கள் பேரிலும் தேவ ஆசிரை மன்றாடி, பேழையிலிருந்த நோவாவிடம் புறா கொண்டு வந்த ஒலிவக்கிளையைக் குறித்தும், குருத்து வெற்றிக்கு அடையாளம் என்பதைச் சுட்டிக்காட்டியும் நேர்த்தியான முகவுரை ஒன்று வாசிக்கிறார் அல்லது பாடுகிறார். சாங்க்துஸ் பாடினபின், ஐந்து வெவ்வேறு ஜெபங்கள் சொல்லி (அர்ச்சியசிஷ்டவாரம் என்னும் புத்தகத்தில் காண்க.) குருத்துகளின் பேரில் மும்முறை தீர்த்தம் தெளித்து மும்முறை தூபங்காட்டிப் பின்னும் ஓர் ஜெபம் சொல்லி முடிப்பார்.

இவ்விதம் மந்திரித்தபிறகு, முதன்முதல் குருக்களுக்கும், அவர்களுக் கொடுப்பார். கிராதியருகில் போய்க் குருத்தை வாங்குவது வழக்கமா யிருந்தாலும், நமது தேவாவயங்களில் ஜனத்திரளின் நெருக்கத்தை முன்னிட்டு, அவ்விதம் செய்ய இயலாததால், ஜனங்கள் இருக்கிற இடத்திலே அவைகளை வாங்கிக்கொள்வது பெரும்பாலும் வழக்க மாயிற்று. பூசை நேரத்தில் நமதாண்டவருடைய பாடுகளின் வரலாற்றை வாசிக்கும் போது, கையில் குருத்துகளைப் பிடித்திருக்க வேண்டும்.

அக்காலத்தில் குருத்தைப் பிடித்துக்கொண்டு ஒரு கோவிலிலிருந்து வேறொரு கோவிலுக்குச் சுற்றுப்பிரகாராமாய் சென்று, இரண்டாவது கோவிலில் பூசை காண்பது வழக்கமாயிருந்தது. இக்காலத்தில் ஒரே கோவிலைச் சுற்றி வருகிறோம். அச்சமயத்தில் குருத்தைப் பிடித்துக் கொண்டு, நமதாண்டவரை ஜெருசலேம் பட்டணத்துக்குள் ஆடம்பர மாய் அழைத்துச் சென்ற சம்பவத்தை ஞாபகப்படுத்தி, மோட்சமாகிய ஜெருசலேம் நகருக்கு நாம் போய்ச்சேரும் வரத்தை ஆண்டவர் நமக்கு அளித்தருளும்படி மன்றாடுவோமாக!

குரு தூபக்கலசத்தில் சாம்பிராணியைப் போட்ட பிறகு: “ஆண்டவரே, நீர் ஈசோப் என்கிற புல்லினால்" என்று துவங்கும் ஆரம்ப வாக்கியத்தை மட்டும் சொல்லிக்கொண்டு தீர்த்தத்தால் மும்முறை குருத்தோலைகளின்மேல் தெளித்து, மும்முறை தூபம் காட்டுகிறார்.


செபம்

சர்வேசுரா, தேவரீருடைய திருக்குமாரனும் எங்கள் ஆண்டவருமான சேசு கிறீஸ்துநாதரை எங்களுடைய இரட்சண்யத்தின் பொருட்டு அவர் எங்களிடமாய்த் தம்மைத் தாழ்த்தி, எங்களைத் தேவரீரிடத்தில் மீளவும் சேர்க்கும்படி இவ்வுலகத்திற்கு அனுப்பினீரே: அவர் வேதாகமங்கள் நிறைவேறும் பொருட்டு ஜெருசலேமிற்கு எழுந்தருளினபோது. திரளான விசுவாசிகள் மிகுந்த பற்றுதலுள்ள பக்தியோடு தங்களுடைய வஸ்திரங்களையும் குருத்தோலை களையும் அவரது பாதையில் விரித்தார்களே: நாங்களும் அவருக்கு விசுவாசத்தின் பாதையை ஆயத்தஞ் செய்யவும், இடறும் கல்லும், துர்மாதிரிகையின் பாறையும் அப்பாதையிலிருந்து அப்புறப்படுத்தப் பட்டு, உமது திவ்விய சமூகத்தில் எங்களுடைய நற்கிரியைகள் நீதியென்னும் கிளைகளை விட்டுத் தழைக்கவும். நாங்கள் அவருடைய திருப்பாதச் சுவடுகளை பின்செல்ல அருகராகவும் அநுக்கிரகஞ் செய்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில் சர்வேசுரனும், சதாகாலமும் சீவியரும் இராச்சிய பரிபாலனஞ் செய்கிறவருமாயிருக்கிற உமது திருக்குமாரனும் எங்கள் ஆண்டவருமான சேசு கிறீஸ்துவின் பேரால் ஆமென்.

வெள்ளி, 29 டிசம்பர், 2023

கிறிஸ்துநாதர் அனுசாரம்

 20.ஆம் அதிகாரம்

ஏகாந்தத்தின் பேரிலும் மௌனத்தின் பேரிலும் வைக்கவேண்டிய பிரியம்





1. நீ தனித்திருந்து உன்னைத்தானே கவனிக்கத்தக்க சமயத்தைத் தேடு; சர்வேசுரனுடைய நன்மைகளை அடிக்கடி நினை. வீண் விநோத விசாரணைகளையெல்லாம் விட்டுவிடு : புத்தியை யோசிக்கச் செய்யும் விஷயங்களைவிட உன் மனதை அனுதாபப்படுத்தி இளகச் செய்யும் விஷயங்களை வாசி. மட்டுத்திட்டமின்றிப் பேசுவதையும், அவசரமின்றி இங்குமங்கும் திரிவதையும், நூதனமானதும் வீணானதுமான பிரஸ்தாபங்களைக் கேட்பதையும் விட்டு நீ விலகினால், பக்திக்குரிய தியானங்களில் நீ கவனஞ் செலுத்துவதற்குப் போதுமானதும் தகுந்ததுமான அவகாசம் உனக்குக் கிடைக்கும். மகா பெரிய அர்ச்சியசிஷ்டர்கள் மனிதருடைய சகவாசத்தைக் கூடுமானபோதெல்லாம் விலக்கி, சர்வேசுரனைச் சேவிக்கும்படி ஏகாந்தத்திற் சீவிப்பதைத் தெரிந்துகொண்டார்கள்.

2.-"மனிதருடன் நான் பழக்கஞ் செய்யும்போதெல்லாம் குறைந்த மனிதனானேன்" என்று செனேக்கா சாஸ்திரி சொல்லியிருக்கின்றார். வெகுநேரம் சம்பாஷிக்கிறவர்கள் அதன் உண்மையை அடிக்கடி அனுபவத்தால் அறிந்துகொள்வார்கள். பேச்சில் மட்டுக் கடவாதிருப்பதை விட ஒன்றும் பேசாமலே இருப்பது அதிக எளிது. மானிடர்கள் நடுவில் தன்னை யோக்கியமாய்க் காப்பதைவிட அறையில் அமைதியாய்த் தனித்திருப்பது அதிக எளிது. அந்தரங்கமும் ஞானமுமான சீவியத்தைச் சீவிக்க விரும்புகிறவன் எவனோ அவன் யேசுநாத சுவாமியுடன் ஜனக்கும்பலினின்று அகன்றுபோக வேண்டியது. அந்தரங்கத்தில் சீவிக்கப் பிரியங் கொள்ளாதவன் ஆபத்தின்றித் தன்னை வெளியே காண்பியான். மௌனப் பிரியனாயிராதவன் எவனும் ஆபத்தின்றிப் பேசான். மனப் பூர்வமாய்த் தாழ்ந்து போகாதவன் எவனும் ஆபத்தின்றி மேலான அந்தஸ்தில் நிலைகொள்ளான். நன்றாய்க் கீழ்ப்படியக் கற்றுக்கொள்ளாதவன் எவனும் ஆபத்தின்றி அதிகாரஞ் செலுத்தான். தனக்குள்ளாக நல்ல மனசாக்ஷி யில்லாதவன் எவனும் ஆபத்தின்றி சந்தோஷங் கொள்ளான்.

3. அர்ச்சியசிஷ்டர்களுடைய உறுதியான நிலைமையோ எப்போதும் தேவபயத்தில் பலமாய் வேரூன்றியிருந்தது. தங்களிடத்தில் சிறப்பாக விளங்கும் புண்ணியங்களையும் வரப்பிரசாதங்களையும் நம்பித் தாங்கள் கவனக்குறைவுள்ளவர்களாகவும் தாழ்ச்சிக் குறையுள்ளவர்களாகவும் இருக்கலாமேயென்று அவர்கள்  கருதவில்லை. பாவிகளுடைய உறுதியோ வெனில் ஆங்காரத்தின் பேரிலும் மிஞ்சின நம்பிக்கையின் பேரிலும் ஊன்றியிருக்கிறது; ஆனதால் அது கடைசியில் மோசமாக முடிகின்றது. நீ உத்தம சந்நியாசியாகவும் பக்தியுள்ள வனவாசியாகவும் காணப்பட்ட போதிலும், இவ்வுலகத்தில் பயமில்லாமல் சஞ்சரிக்கலாமென்று பரிச்சேதம் எண்ணாதே.

4. மனிதருடைய எண்ணத்தில் உத்தமராயிருந்தவர்கள்,தங்கள் மிதமிஞ்சின சுய நம்பிக்கையினிமித்தம், அநேகமுறை அதிக பெருத்த ஆபத்துகளுக்கு உள்ளானார்கள். ஆகையால் அனேகர் சற்றும் பயமற்றவர்களா யிராதபடிக்கும், ஆங்காரத்தினால் பெருமை கொள்ளாதபடிக்கும், புறத்தி ஆறுதல்களை அதிக மன உற்சாகத்தோடு தேடாதபடிக்கும் அவர்கட்கு முற்றும் தந்திரசோதனை அற்றுப் போகாதிருப்பதும் அவர்களை அடிக்கடி தந்திர சோதனை அலைக்கழிப்பதும்கூட அதிகப் பிரயோசனமாயிருக்கும். நிலையற்ற இன்பங்களை ஒருபோதுந் தேடாது, உலகக் காரியங்களைப்பற்றி ஒருபோதும் கவலை கொள்ளாதவன் எவ்வளவோ தூய மனதுடையவனாயிருப்பான்! ஒ! வீண் கவலையெல்லாம் முற்றிலும் ஒழித்துவிட்டு, இரக்ஷணியத்திற்கும் சர்வேசுரனுக்கும் அடுத்தவைகளை மாத்திரமே சிந்தித்து, தன் நம்பிக்கையை யெல்லாம் சுவாமியின் பேரில் வைத்திருக்கிறவன், எவ்வளவோ ஆழ்ந்த சமாதானமும் அமரிக்கையும் அடைவான்!

5.- துக்க மனஸ்தாபப்படத் தன்னைத்தானே சுறுசுறுப்புடன் அப்பியாசப் படுத்திக்கொள்ளாத எவனும் மேலான ஆறுதலுக்குப் பாத்திரவானல்ல. உண்மையான மனஸ்தாப முணர உமக்கு மனதிருக்குமேயானால், "உங்கள் படுக்கை யறையில் மனஸ்தாபப்படுங்கள்" என்று எழுதப்பட்டிருக்கிற பிரகாரம் உன் அறையிற் பிரவேசித்து உலக சந்தடியை நீக்கிவிடு. உன் அறையில் தனிவாசம் செய்வதனால், வெளியில் நீ அநேகமாய் இழந்து போகும் நன்மைகளைக் கண்டடைவாய். அறையில் சாதாரணமாய்த் தங்கி வாசஞ் செய்வது இன்பத் தருகின்றது. அதை அடிக்கடி விட்டகன்று போகிறவனுக்கு அது சலிப்புக் கிடமாகின்றது. நீ மனந் திரும்பின துவக்கத்திலேயே உன் அறைமீது நீ பிரியம் கொண்டு அதில் தங்கியிருந்தால், பிற்காலத் தில் உனக்கு அது பிரிய சிநேகிதன் போலவும், மிகவும் பெரிய ஆறுதலாகவுமிருக்கும்.


6.- மவுனத்திலும் அமரிக்கையிலுமே பக்தியுள்ள ஆத்துமம் விருத்தியடையும்; வேதாகமங்களில் மறைத்திருக்கிற இரகசிய ஞான அர்த்தங்களையுங் கண்டுபிடிக்கும். அப்போது இரவில் கண்ணீர்த் தாரைகளைக் கண்டடையும். அவை அதன் பாவக் கறைகளைச் சுத்தப்படுத்தி எவ்வளவுக்கு அது உலக சந்தடிகளை அகற்றிவிட்டதோ அவ்வளவுக்கு அதைக் கர்த்தருடன் நெருக்கமாய் ஐக்கியப்படுத்துகின்றன. தனக்கு அறிமுகமும் சிநேகமுமானவர்களை விட்டுப் பிரிகிறவன், சர்வேசுரனும் அவருடைய பரிசுத்த சம்மனசுகளும் தன்னை அணுகுவதாக வுணருவான். புதுமை செய்வதைவிட, அந்தகாரச் சீவியத்தில் சீவித்துத் தன் ஆத்தும ரக்ஷணியத்தைக் கவனிப்பது உத்தமம். அரிதாய் வெளியே போகிறதும், தன்னைக் காண்பிப்பதை விலக்குவதும், பிறர் கண்ணுக்கு முதலாய்த் தென்படா மல் ஒதுங்கி ஜீவிக்கிறதும் சந்நியாசியிடத்தில் புகழ்ச்சிக் குரியது.

7.- நீ வைத்துக்கொள்ளக் கூடாதவைகளைக் பார்க்கிறதற்கு ஆசைப்படுவதேன்? 'பூலோகமும் அதன் சுகானுபவங்களும் ஒழிந்துபோகின்றன.' புலன்களின் இச்சைகளால் நீ வெளியே செல்லவும், பயணத்திற்கும் இழுக்கப்படுவாய். ஆனால் அக்காலம் கடந்தபின் மனச்சாக்ஷியில் கலக்கமும் இருதயத்தில் பராக்குமேயன்றி வேறென்ன பயனுண்டாகும்? சந்தோஷமாய் வெளியே புறப்படுகிறவன் பலமுறை கஸ்தியாய்த் திரும்பி வருவான். இரா விழிப்பதில் அநுபவித்த சந்தோஷம் காலையில் துக்கமாக மாறுகின்றது. இவ்விதமாக இலௌகீக சந்தோஷ மெல்லாம் இன்பத்தோடு ஆத்துமத்தில் நுழைந்து, கடைசியில் அதைக் காயப்படுத்திச் சாகடிக்கின்றது. இங்கே நீ பார்க்காத வேறென்னத்தை மற்ற விடங்களில் காணப்போகிறாய்? இதோ வானமும் பூமியும் சகல பூதியங்களும் இருக்கின்றன. பார். அவைகளினின்றே சகலமும் உண்டாக்கப்பட்டிருக்கின்றன.

8.- பூவுலகில் நெடுநாள் நிலைத்திருக்கிற பொருள் யாதொன்றை எவ்விடத்திலாகிலும் நீ காணக்கூடுமோ? நீ சிலசமயம் திருப்தியடைவதாய் நம்புகிறாய்; ஆனால் உன் நம்பிக்கை வீணாய்ப்போம். உன்முன் சகலத்தையும் நீ கண்டாலும், அது விண்காட்சியே தவிர வேறென்ன? பரலோகத்திலிருக்கிற சர்வேசுரனை நோக்கிப் பார்த்து உன் பாவங்களுக்காகவும் அசட்டைத் தனங்களுக்காகவும் அவரை மன்றாடு. விண் காரியங்களை வீணருக்கு விட்டுவிடு; நீயோ சர்வேசுரனுக்குக் கீழ்ப்படிவதைமட்டும் கவனி. உன் அறையின் கதவைச் சாத்திக்கொண்டு, உன் நேசரான யேசுவை உன்னண்டையில் அழைத்துக்கொள். உன் அறையில் அவருடன் தங்கியிரு. வேறெந்த விடத்திலும் அவ்வளவான சமாதானங் காணமாட்டாய். நீ வெளியே புறப் படாமலும் ஊர்ச் செய்திகளைக் காதிற் போட்டுக்கொள்ளாமலு மிருந்தால், உத்தம சமாதானத்தில் அதிக உறுதியாய் நிலைத்திருப்பாய். ஆனால் எப்போது உலக செய்திகளைக் கேட்க நீ பிரியங்கொள்ளுகிறாயோ அப்போது உன் இருதயம் கலக்கத்தினால் வருந்த நேரிடுவது தப்பாது.



அருட்கருவிகள் - விபூதி (Ash)

விபூதி

நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941

விபூதி என்பது சாம்பல், தபசுகாலத்துக்கு ஆரம்பமாகியிருக்கிற புதன்கிழமை விபூதித் திருநாள் என்று பெயர் வழங்கிவருகிறது. தபசுகாலம் நாற்பது நாள் அடங்கியது. நாம் நமது சரீரத்தைத் தண்டித்து அடக்க வேண்டும் என்பதின் அவசியத்தைத் திருச்சபை நமக்கு இந்த நாட்களில் நினைப்பூட்டுகிறது. தபசு செய்யாமல் அலட்சியமாயிருக்கிறவன் கெட்டழிந்துபோகும் ஆபத்தைத் தேடிக் கொள்கிறான். கிறீஸ்தவன் தனது கடைசி முடிவையும், மண்ணுக்குத் திரும்பிப் போகவேண்டியதையும் எக்காலமும் மறந்துபோகக் கூடாது என்பதும் திருச்சபையின் கருத்து.



நாம் பிறக்கும்பொழுதே, பாவத்தோடு பிறக்கிறோம். பின்னும் புத்தி விபரம் அறிந்தது முதல் எத்தனையோ பாவங்களைக் கட்டிக் கொள்கிறோம். இவைகளால் சர்வேசுரனுக்கு உண்டாகும் கோபத் தைத் தபசினாலும் பரித்தியாக முயற்சிகளினாலும் தணிக்கப் பிரயாசப்பட வேண்டுமென்று திருச்சபை வலியுறுத்துகிறது. நம் மேல் சுமத்தப்பட்ட இந்தக் கடமையை நமக்கு எடுத்துரைப்பதற்காகவே விபூதி திருநாள் அன்று சாம்பலை மந்திரித்து நெற்றியில் பூசுகிற சடங்கு ஏற்படலாயிற்று.

பூர்வீக வழக்கம்:

இருச்சபையில் வழங்கி வருகிற மற்ற அநேக ஆசாரங்களைப் போலவே, சாம்பலின் உபயோகமும் ஜனங்களுக்குள். ஏற்கனவே அநுசரிக்கப்பட்டுவந்த வழக்கங்களில் ஒன்றுதான். பழைய ஆகமங்களில் இதன் உபயோகத்தைப் பற்றிப் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தாவீது இராஜா தன் பாவங்களுக்காகப் பச்சாதாபப்பட்டு, "சாம்பலைப் போஜனம் போலும் புசித்துக் கண்ணீரால் என் பானத்தைக் கலந்தேன்" என்று கூவினார். யோனாஸ் தீர்க்கதரிசி செய்த பிரசங்கத்தின் பயனாக, நினிவே நகரத்தார் தபசு செய்யத் தீர்மானித்து சாக்குத் துணியை உடுத்திக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்து இருந்தார்கள். ஆகையால் திருச்சபை ஆரம்பத்தில் மனந்திரும்பின யூதர் இந்த வழக்கத்துக்குக் காரணமாயிருந்தார்கள் என்று சொல்ல நியாயமுண்டு.

திருச்சபை ஆரம்ப காலங்களில் சாம்பல் பெரும் பாவிகளுக்கு விதித்த தண்டனைகளில் ஒன்றாயிருந்தது. கனமான பாவங்களைக் கட்டிக்கொண்டவர்கள் மன்னிப்படைய வேண்டுமானால், விபூதித் திருநாட் காலையில் தபசுக்குரிய உடை உடுத்திக் கோவில் வாசற்படியில் வந்து நிற்பார்கள். அப்போது அவர்களுக்குச் சாக்குத்துணியை அணிந்துகொள்ளக் கொடுத்துச் சாம்பலை அவர்கள் மேல் தூவுவார்கள். அன்று முதல் பெரிய வியாழக்கிழமை வரைக்கும் கோவிலில் பிரவேசிக்கக்கூடாது என்று சட்டம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

பிரசித்தமான பாவிகளல்லாதவர்களில், பக்திமான்கள் சிலர் தாழ்ச்சியின் காரணமாக மேற்கூறினவர்களுக்குப் போலவே தங்கள் பேரிலும் சாம்பலைத் தூவும்படி கேட்டுக் கொண்டார்கள். இதிலிருந்துதான், நாளாவட்டத்தில் கத்தோலிக்கர் யாவருக்கும் சாம்பல் பூசுகிற வழக்கம் உண்டானது. 1090-ம் வருடத்தில் இதைப்பற்றிச் சட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

தற்கால வழக்கம்:

முந்தின வருடக்கில் குருத்து ஞாயிறன்று மந்திரித்த குருத்துகளைச் சுட்டு அந்த சாம்பலைத்தான் விபூதித் திருநாள் அன்று உபயோகிக் கிறார்கள். சில ஞான ஆசிரியர் இதற்கு ஓர் அர்த்தமுங் கூறி விளக்கி யிருக்கிறார்கள். குருத்து வெற்றிக்கு அடையாளம். பாவத்தின் பேரி லும், பசாசின் பேரிலும் நாம் வெற்றி அடையவேண்டும். தாழ்ச்சியும் தபசுமின்றி இந்த வெற்றியை நாம் அடைய முடியாது என்பதற்குச் சாம்பல் அடையாளம் என்று சொல்கிறார்கள்.


சாம்பலை மந்திரிக்கும் போது குருவானவர் சொல் கிற நான்கு ஜெபங்களில் வெகு நேர்த்தியான கருத் துக்கள் நிறைந்துள்ளன. பாவிகளாகிய நம்மை சர்வேசுரன் காப்பாற்றி, சாம்பலும் தூசியுமான நமது பேரில் இரக்கமா யிருந்து, இந்த சாம்பலை  நமக்கு இரட்சண்ய மருந் தாக்கி, நினிவே நகரத் தார் தபசு செய்யத் தீர்மானித்ததைக் கண்டு சர்வேசுரன் அவர்களை அழித்துப் போடாமல் காப்பாற்றின வண்ணம் தபசு செய்து மன்னிப்படைய விரும்புகிற நம்மையும் காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடுவதே இந்த ஜெபங்களில் உள்ள சாராம்சம்.

சாம்பலை மந்திரித்தபின் குருவானவர் அதை எடுத்து இதர குருக்கள் உச்சியிலும் விசுவாசிகளின் நெற்றியிலும் பூசி, "மனிதனே. நீ தூசியாயிருக்கிறாய், மீண்டும் தூசியாய் போவாய் என்று நினைத்துக்கொள்” என்று சொல்கிறார். நாம் எல்லோரும் ஒருநாள் மரிக்கவேண்டும் என்னும் சத்தியத்தை இது நமக்கு நினைப்பூட்டு கிறது. ஓர் ஞான ஆசிரியர் சொல்லியிருப்பதுபோல் சுட்ட சாம்பலை இன்னும் சுடாத சாம்பலோடு கலக்கிறார். ஆண், பெண், பெரியோர், சிறியோர் சகலரும் இதை நெற்றியில் தரித்துத் தங்கள் கடைசி முடிவை ஞாபகப்படுத்திக் கொள்வார்களாக. சாம்பலை மந்திரித்துப் பூசுவது நாம் ஒருநாள் மரிக்க வேண்டும் என்பதையும், தாழ்ச்சியும், தபசு முயற்சிகளும் பாவத்துக்குப் பரிகரிக்க அவசியம் என்பதையும் நினைப்பூட்டுவதற்காகவேயன்றி வேறல்ல.

விபூதி மந்திரிக்கும் சடங்கு:

முந்தைய ஆண்டு குருத்து ஞாயிறன்று மந்திரித்த ஒலிவ மரக் கொம்புகள் அல்லது குருத்தோலைகளைச் சுட்டெரித்து எடுத்த சாம்பலைக் குருவானவர் பூசைக்குமுன் மந்திரிக்கிறார். (குரு ஊதா காப்பாவைத் தரித்துக்கொண்டு, பீடத்திலேறி நடுவில் முத்தஞ்செய்து, நிருபப்பக்கஞ் சென்று பின்வருமாறு சொல்லுவார். பாடகர் பாடுவார்கள்.)

ஆரம்ப வாக்கியம் - சங். 68:17:

ஆண்டவரே. உமது இரக்கம் மகா பட்சம் நிறைந்த தாகையால், எங்கள் விண்ணப்பத்திற்கு செவிசாய்த்தருளும். ஆண்டவரே, தேவரீருடைய இரக்கங்களின் பெருக்கத்திற் கேற்றபடி எங்களை நோக்கியருளும். (சங். டிெ:2) சர்வேசுரா. தேவரீர் என்னை இரட்சியும்; ஏனெனில் வெள்ளம் என் ஆத்துமம் மட்டும் பெருகி நுழைந்தது. பிதாவுக்கும். (மறுபடியும்: "ஆண்டவரே...."சங்கீதம் வரையில்)

 (குரு அங்கேயே நின்றுகொண்டு, கரங்களைக் குவித்த வண்ணம்:)

குரு: ஆண்டவர் உங்களுடனே இருப்பாராக;
பரி: உமது ஆவியோடும் இருப்பாராக.

செபிப்போமாக: (செபம் 1)

சர்வ வல்லபரான நித்திய சர்வேசுரா, பச்சாதாபப் படுகிறவர்களை மன்னித்தருளும்; தேவரீரை மன்றாடுகிறவர்கள்மீது இரக்கமாயிரும்: பரமண்டலங்களிலிருந்து உமது பரிசுத்த சம்மனசானவரைத் தயவுகூர்ந்து அனுப்பி, இந்தச் சாம்பலை (இரு முறை சிலுவை அடையாளம் வரைந்து கொண்டு) ஆசீர்வதித்து அர்ச்சிக்கும்படி செய்தருளும். உமது பரிசுத்த நாமத்தைத் தாழ்ச்சியோடு மன்றாடு கிறவர்களுக்கும். தங்கள் பாவங்களைத் தாங்களே மனதார உணர்ந்து தங்கள் குற்றங்களைக் தாங்களே ஒப்புக்கொண்டு, உமது தெய்வீகத் தயவின் சமுகத்தில் தங்கள் அக்கிரமங்களை நினைத்து, மனம் நொந்து வருந்துகிறவர்களுக்கும், அல்லது உமது தாராளம் நிறைந்த நன்மை பெருக்கத்தைத் தாழ்மையோடும் தளரா நெஞ்சத் தோடும் இரந்து மன்றாடுகிற யாவருக்கும். இந்தச் சாம்பல் இரட் சண்ய சுகந்தரும் மருந்தாயிருப்பதாக! இந்தச் சாம்பலை இட்டுக் கொள்ளுகிறவர்கள் எல்லோரும் மது மகா பரிசுத்த நாமத்தை மன்றாடுவதின் மூலமாகத் தங்கள் பாவங்களினின்று விடுதலை யடையவும், சரீர சுகத்தையும் ஆத்துமப் பாதுகாப்பையும் பெற்றுக் கொள்ளவும் அநுக்கிரகஞ் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துவின் பேரால் -ஆமென்.

செபிப்போமாக: (செபம் 2)

பாவிகள் அழிந்துபோகவேண்டுமென்றல்ல. ஆனால் அவர்கள் பச்சாதாபப்படவேண்டுமென்று விரும்புகிற சர்வேசுரா, மனித சுபாவத்தின் பலவீனத்தைத் தயவாய்க் கண்ணோக்கி, தாழ்ச்சிக்கு அடையாளமாகவும், பாவமன்னிப்படையப் பேறுபெற்றவர்களாகவும் எங்கள் நெற்றியிலிட்டுக் கொள்ள நாங்கள் தீர்மானித்திருக்கும் இந்தச் சாம்பலை உமது நன்மைத்தனத்தை முன்னிட்டு (சிலுவை அடையாளம் வரைந்துகொண்டு)ஆசிர்வதித்தருளக் கிருபை செய்து, தாங்களும் சாம்பலாயிருக்கிறோமென்றும், எங்கள் அக்கிரமத்துக் குத் தண்டனையாக மீளவும் சாம்பல் ஆவோமென்றும் அறிந்திருக் கிற நாங்கள் சகல பாவங்களுக்கும் மன்னிப்பையும், மனஸ்தாபப் படுகிறவர்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கிற சம்பாவனையையும் தேவர்ருடைய இரக்கத்தால் அடையும் அநுக்கிரகஞ் செய்தருளும். - எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துவின் பேரால் -ஆமென்.


செபிப்போமாக: (செபம் 3)

தாழ்மையைக் கண்டு மனம் இளகுகிறவரும், பாவப் பரிகாரத்தினால் கோபந் தணிகிறவருமான சர்வேசுரா, எங்கள் விண்ணப்பங்களுக்குத் தேவரீருடைய அன்பின் செவிசாய்த்து, இந்தச் சாம்பலைப் பூசிக் கொள்ளும் உம் அடியார்கள் சிரசின் மீது உமது ஆசீர்வாத அருளைப் பரிவுடன் பொழிந்து, அவர்களை மனஸ்தாப உணர்ச்சியால் நிரப்பி, அவர்கள் நியாயமாய் கேட்கும் வரங்களைத் தவறாமல் தந்து, தந்தருளிய கொடைகள் எந்நாளும் பழுதின்றி நிலைத்திருக்கும்படி கட்டளையிட்டருளும். -எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துளின் பேரால் -ஆமென்,

செபிப்போமாக: (செபம் 4)

சர்வ வல்லபரான நித்திய சர்வேசுரா, சாம்பலும் சாக்குத் துணியும் அணிந்து தவம் செய்த நினிவே நகரத்தாருக்கு தேவரீருடைய இரட்சண்ய சுகந்தரும் மன்னிப்பையளிக்கச் சித்தமானீரே; தாங்களும் அவர்களைப் போல் மன்னிப் படைவதற்கு ஏற்ற வண்ணம், அவர்களுடைய தவத்தை வெளியரங்கமாய்ச் சாம்பல் பூசிப் பின்பற்றும்படி எங்களுக்குத் தயவாய் அநுக்கிரகஞ் செய்தருளும் எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துவின் பேரால் -ஆமென்.

லூர்துமாதா திருநாள் - Our Lady of Lourdes_

 லூர்துமாதா திருநாள்

பிப். 11

-சங். J.M. நிக்கொலாஸ் சுவாமி


பெர்ந்தெத் சூபிரு என்பவள் ஏழை பெற்றோரிடம் பிறந்தவன். அவளுக்கு வயது பதினான்கு. நேர்மையானவள், கீழ்ப்படிந்து நடப்பவள், தன் வாழ்நாளில் மனது பொருந்தி அற்பப் பாவமே செய்யாதவள். அவளுக்கு ஜெபம் என்றால் அதிக பிரியம். வயல் வெளிகளில் அடிக்கடி ஜெபமாலை ஜெபிப்பாள்.

1858-ம் ஆண்டு பெப்ருவரி 11-ம் நாளன்று பெர்ந்தெத். அவளுடைய சகோதரி அந்துவானெற், ஜோன் அபதி என்னும் சிநேகிதி, இம்மூவரும் ஒரு குறுகிய ஓடைப்பக்கம் நடந்துகொண்டிருந்தனர். ஓடையின் அகலம் முப்பது அல்லது நாற்பது அடி இருக்கும். அன்று வெகு குளிராயிருந்தது. அவர்கள் மூவரும் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தனர். ஓடையின் இடதுபக்கமாக அவர்கள் நடந்து சென்று மஸபியேல் கெபிக்கு எதிராக வந்தார்கள். காலணிகளையும், கால் உறைகளையும் கழற்றிவிட்டு தண்ணீரில் நடத்து ஓடையின் மறுபக்கத்தையடைந்து விறகு பொறுக்குவோம் என பெண்களில் ஒருத்தி கூறினாள். குளிர்ந்த நீரில் நடந்தால் தனக்கு இளைப்பு வியாதி வரும் என பெர்ந்தெத் அஞ்சி, ஜோனை நோக்கி, “என்னை உன் தோளில் வைத்து தூக்கிக் கொண்டு போ” என்றனள். “உனக்கு வரப்பிரியமில்லை யானால் இங்கேயே இருந்துகொள்" என அவள் சொல்லி விட்டாள். பெர்ந்தெத்தைத் தனியே விட்டுவிட்டு இருவரும் மறுபக்கம் சென்றனர்.

பெர்நதெத் தன் காலுறையைக் கழற்ற ஆரம்பிக்கையில், புயல் வீசுவதுபோல் பெரும் சத்தம் கேட்டது. பெர்நதெத் அங்கு மிங்கும் பார்த்தாள். ஒன்றையும் காணோம். சிறிது நேரம் கழித்து முன்போல் அதே சத்தம் கேட்டது. பெர்ந்தெத் பயந்து நிமிர்ந்து நின்று மஸபியேல் கெபிப்பக்கம் திரும்பினாள். குகையினுள்ளிருந்து தங்க நிறமான மேகம் ஒன்று வெளிவந்தது. அதற்குப்பின் ஒரு பெண் காணப்பட்டாள். வாலிபப் பெண், மிக அழகுடனிருந்தாள். "அவள் என்னைத் தாயன்புடன் நோக்கி, புன்சிரிப்புக் காண்பித்து, வரும்படி எனக்கு சயிக்கினை காட்டினாள். பயம் என்னை விட்டகன்றது. கண்களைக் கசக்கி மூடித் திறந்தேன். அந்தப் பெண் அதே இடத்தில் இன்னும் புன்முறுவலுடன் நின்றாள். என்னையறியாமலே ஜெபமாலை யைக் கையில் எடுத்து முழந்தாளிட்டேன். இது தனக்குப் பிரியம் எனத் தெரிவிக்குமாப்போல் அந்தப் பெண் தலையை அசைத்து, தன் வலது கையில் தொங்கிய ஜெபமாலையை எடுத்தாள். ஜெபமாலை தொடங்குமுன் சிலுவை அடையாளம் வரையவேண்டும். வலது கரத்தால் நெற்றியைத் தொட முயன்றேன். கையை உயர்த்த முடிய வில்லை. திமிர்வாதம் போல் இருந்தது. அந்தப் பெண் சிலுவை அடையாளம் வரைந்த பின்னரே. நான் என் கையை உயர்த்தக் கூடியவளானேன். நான் தனியே ஜெபமாலை செய்தேன். அவள் மணிகளை உருட்டிக்கொண்டிருந்தாள், ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. பத்துமணி ஜெபத்துக்குப்பின் என்னுடன் சேர்ந்து, “பிதாவுக்கும் சுதனுக்கும்" என்ற திரித்துவ ஆராதனையைச் சொன்னாள். ஜெபமாலை முடிந்ததும், அவள் குகையினுள் திரும்பினாள். அவளுடன் பொன் நிற மேகமும் மறைந்தது. அவளுக்கு வயது பதினாறு அல்லது பதினேழு இருக்கும்.".

பெர்நதெத் ஜெபித்துக்கொண்டிருப்பதை அந்துவானெற்றும் ஜோனும் பார்த்தனர். அங்கு ஜெபித்துக் கொண்டிருக்கும் அவளுக்குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். கோவிலில் அநேக ஜெபங்களைச் சொல்லவேண்டியிருக்கிறது. அது பற்றாதா? ஜெபிப்பதைத் தவிர வேறு எதற்கும் அவள் உதவ மாட்டாள்" என ஜோன் கூறினாள்.

விறகு பொறுக்கிவிட்டு பெண்கள் இருவரும் கெபிப் பக்கமாய்த் திரும்பினர். பெர்ந்தெத் இன்னும் ஜெபித்துக் கொண்டிருந்தாள். மும்முறை அவளை அழைத்தார்கள். அவள் பதிலளிக்கவில்லை. கல் எறிந்தார்கள். ஒரு கல் அவள் தோள் மேல் அடித்தது. அதற்கும் அவள் அசையவில்லை. அவள் செத்துப்போனாளோ என அந்துவானெற் அஞ்சினாள். "செத்துப்போனாள் கீழே விழுந்திருப்பாளே" என ஜோன் சொல்லி அவளுடைய பயத்தை அகற்றினாள். அவர்கள் இவ்விதம் பேசிக்கொண்டிருக்கையில் பெர்ந்தெத் திடீரென பரவசத்தைவிட்டு விழிந்தாள்.

வீட்டுக்குப் போகும் வழியில், தான் ஒரு பெண்ணைப் பார்த்ததாகவும், அவள் வெள்ளையும் நீலமும் கலந்த நிறத்தில் உடை தரித்திருந் தாளென்றும், ஒவ்வொரு பாதத்தின் கீழும் ஒரு மஞ்சள் ரோஜா மலர் இருந்ததென்றும், பெர்ந்தெத் அறிவித்தாள். யாருமே இதை நம்பவில்லை.

இன்னொரு நாள் பெர்நதெத் தன் சிநேகிதிகளுடனும் இன்னும் இருபது சிறுவர்களுடனும் மஸ்பியேல் கெபியருகே நிற்கையில் அந்தப் பெண் தோன்றினாள். பெர்நதெத் கெபியில் தீர்த்தத்தைத் தெளித்தாள். உடனே அந்தப் பெண் புன்முறுவல் பூத்தாள்.

அந்தப் பெண் யாராயிருக்கலாமென பலர் பலவிதமாய் பேசினார்கள். உதவி கேட்டு உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து வந்த ஆத்துமம் என சிலர் நினைத்தார்கள். இவ்விதம் நினைத்தவர்களில் ஒருவர், பெர்ந்தெத்தைப் பார்த்து "அடுத்த முறை அந்தப் பெண் வந்ததும் அவளுக்கு பேனா, மை. காகிதம் இவற்றைக் கொடுத்து, அவளுடைய விருப்பத்தை எழுதும்படி கேள். தான் வருவதன் நோக்கத்தையாவது எழுதட்டும்" என்றார். பெர்நதெத் அவ்விதமே செய்தாள்.

அந்தப் பெண் சிரித்துக்கொண்டு "நான் சொல்ல இருக்கும் செய்தியை எழுத அவசியமில்லை. இங்கு தொடர்ந்து பதினைந்து நாட்களாக ஒவ்வொரு நாளும் வருவாயா? என்றனள். பெர்நதெத் சரி என்றதும், அந்தப் பெண் "இந்த உலகத்திலல்ல, ஆனால் மறு உலகத்தில் உன்னை நான் பாக்கியவதியாக்குவதாக வாக்களிக்கிறேன்" என்றாள்.

1858-ம் ஆண்டு தபசுகாலத்தில் முதல் ஞாயிறன்று மாதா ஆறாவது முறையாகக் காட்சியளித்தாள், பெர்ந்தெத்திடமிருந்து தன் பார்வையை அவள் அகற்றி கூட்டத்திலிருந்த ஒவ்வொருவருடைய முகத்தையும் நோக்கினாள். உடனே மாதாவின் முகத்தில் துயர் பரவியது. திரும்பவும் பெர்நதெத்தை நோக்கி "பாவிகளுக்காக ஜெபி” என முறையிடுகிறாற் போல் மொழிந்தாள்.

பெப்ருவரி 25-ம் நாள் வியாழக்கிழமை ஒன்பதாவது காட்சி. போய் ஊற்று நீரில் கழுவி அதைப் பருகும்படி, தேவதாய் பெர்நதெத்திடம் சொன்னாள். அங்கு ஊற்று ஒன்றும் கிடையாது. ஊற்று அகப்படுமா எனத்தேடிப் பார்த்தாள், ஒன்றும் அகப்படவில்லை.

ஆதலின் அவள் கெபிப் பக்கமாய்த் திரும்பி அன்னை மொழிந்த வார்த்தைகளின் அர்த்தத்தைக் கேட்டான். அந்தப் பெண் பதிலளிக்கவில்லை. பெர்நதெத் கெபியின் பின்பக்கமாய் ஏறி முழந்தாளிட்டு மணல் கிடந்த ஓர் இடத்தில் தன் கைகளால் ஒரு பள்ளத்தைத் தோண்டினாள். அதுவரை அங்கு ஊற்று கிடையாது. பெர்நதெத் தோண்டியதும் சிறிது தண்ணீர் கழுவவேண்டும், குடிக்கவேண்டும் என மாதா சொல்லி இருந்ததால், மண் கலந்திருந்த அந்த நீரை எடுத்து பெர்ந்தெத் தன் முகத்தில் பூசி, ஊற்றிலிருந்து வந்த நீரை மண்ணோடு குடித்தாள். இன்னொரு விசுவாச முயற்சியையும், தாழ்ச்சி யையும் தேவதாய் கேட்டாள். அருகிலிருந்த சில இலைகளைச் சாப்பிடும்படி தேவதாய் சொன்னதும் பெர்நதெத் அவ்விதமே செய்தாள்.

இந்த நிலையில் அவள் தன் பழைய இடத்திற்கு வருவதைக் கண்ட மக்களில், விசுவாசிகள் விசனித்தார்கள். அவிசுவாசிகள் சத்தமாய்க் கேலி செய்தார்கள். பின் பெர்நதெத் தன் முகத்தைக் கழுவிகொண்டு மாதாவை நோக்கலானாள்.

அந்த அற்புத ஊற்று சீக்கிரம் உலகப் பிரசித்தியடைந்தது. மறுநாளே அந்த ஊற்று நீர் பெருக்கெடுத்து கேவ் நதியில் போய் விழத் தொடங்கியது. லூயி பூரியெட் என்னும் கல்வெட்டும் குருடன் அந்த ஊற்று நீரில் தன் கண்களைக் கழுவினான். உடனே கண் பார்வை பெற்றான். இதுவே லூர்து நாயகியின் முதற் புதுமை வைத்தியர் களால் பிழைக்காது என்று கைவிடப்பட்ட ஒரு குழந்தையை அதன் தாய், ஊற்று நீரில் குளிப்பாட்டினாள். குழந்தை உடனே முழுச் சுகமும் பலமும் பெற்றது. பாக்களின் அவிசுவாசம் அகன்றது.

"பாவிகளுக்காக" இன்னொரு தாழ்ச்சி முயற்சியும் தபசு முயற்சியும் செய்யும்படி தேவதாய் பெப்ருவரி 26-ம் நாளன்று. அதாவது பத்தாவது காட்சியில் அறிவித்து, “தவம்!, தவம்!, தவம்!" என்றான். "பாவிகளுக்காகத் தரையை முத்தி செய்" என அன்னை கூறியதும், பெர்நதெத் அவ்விதமே செய் தாள். ஆற்றை நோக்கி வந்த சரிவில் கெபியின் முன் முழந்தாளிட்டு அப்படியே நகர்ந்து தரையை முத்தமிட்டுக்கொண்டே உயர ஏறினாள், மக்களும் அவளைப் பின்பற்றி தரையை முத்தி செய்தார்கள். அவள் சயிக்கினை காட்டியதும் அநேகர் முழந்தாளிட்டு பாவிகளுக்காக தரையை முத்தி செய்துகொண்டே பர ஏறினார்கள். இவ்விதம் பலமுறை நடந்தது.

பதினோராவது முறையாக காட்சியளிக்கையில் அந்தப் பெண் “குருக்களிடம் போய், இங்கு எனக்கு ஒரு கோவில் கட்டச்சொல்" என்றாள்.

பெர்நதெத் போன சமயத்தில், பங்குக் குருவான பெரமால் சுவாமியார் தோட்டத்தில் கட்டளை ஜெபங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். தோட்ட வாசலைத் திறந்த சத்தம் கேட்டதும் ஏறெடுத்துப் பார்த்து, “யார்? என்ன வேண்டும்?" என்றார்.

நான் பெர்ந்தெத் சூபிரு" என அவள் கூறியதும், அவர் அவளை உச்சிமுதல் பாதம்வரை நோக்கிவிட்டு, "ஓ நீயா அந்த சிறுமி? உன்னைப்பற்றி பல அபூர்வக் கதைகளைக் கேட்டு இருக்கிறேன். உள்ளே வா" என்றார்.

தான் வந்த நோக்கத்தை பெர்நதத் அறிவித்தாள். அவளிடம் அவர் பல கேள்விகள் கேட்க, யாவற்றிற்கும் அவள் தக்க பதிலளித்தாள். விசாரணை முடிந்ததும் அவர் எழுந்து அறையில் அங்குமிங்கும் உலாவியபின், பெர்நதெத்தின் முன் நின்று, “உன்னை அனுப்பிய அந்த அழகிய பெண்ணிடம் பின்வருமாறு சொல் "தான் அறியாதவர் களுடன் ஒன்றும் வைத்துக்கொள்ள பங்கு சுவாமி விரும்புவதில்லை; எல்லாவற்றிற்கும் முன் அவள் தன் பெயரைச் சொல்லவேண்டும்; கோவில் கட்ட தனக்கு உரிமை உண்டென அவள் எண்பிக்க வேண்டும்; கோவில் கட்டப்பட அவளுக்கு உரிமை உண்டானால், நான் சொல்வதன் பொருள் அவளுக்கு விளங்கும். அவளுக்கு விளங்கா விட்டால் பங்குக் குருவுக்கு இனிமேலாக செய்தி சொல்லி  அனுப்பலாகாது என அவளிடம் சொல்" என்றார்.

மார்ச் 2-ம் நாள் பதினான்காம் முறையாக அந்தப் பெண் தோன்றினாள். கோவில் கட்டப்பட வேண்டும் என்றதுடன் சுற்றுப்பிரகாரங்கள் அங்கு வர தான் விரும்புவதாக அவள் தெரிவித்தாள்.

இன்னொரு முறை பெர்ந்தெத் பங்குக் குருவை அணுகினாள். இம்முறை அவர் கோபித்தார். "நீ பொய் சொல்கிறாய். அவளுக்காக எப்படி நாம் சுற்றுப்பிரகாரங்களை நடத்துவது? உன்னைப்போன்ற வர்களை லூர்து நகரில் வைத்திருப்பதே துன்பம். பட்டணத்தையே நீ குழப்பிவிடுகிறாய். மக்கள் உன் பின் ஓடும்படி செய்கிறாய். உனக்கு ஒரு மெழுகுதிரி தருகிறேன். நீயே சுற்றுப்பிரகாரமாயிரு. அவர்கள் உன்னைப் பின்செல்வார்கள். குருக்கள் தேவையில்லை" என்றார்.

"தான் எவரையும் என் பின் வரும்படிச் சொல்லவில்லை. அவர்கள் தாமாக வருகிறார்கள். சுற்றுப் பிரகாரங்களைப்பற்றி அந்தப் பெண் கேட்டதை நான் எவரிடமும் சொல்லவில்லை; உங்களிடம் மாத்திரமே சொல்லியிருக்கிறேன்" என பெர்நதெத்  மொழிந்ததும், அவர் பெர்நதெத் பக்கமாய்த் திரும்பி, “நீ ஒன்றையும் பார்க்கவில்லையா? குகையிலிருந்து ஒரு பெண் வர முடியாது. அவளுடைய பெயர் உனக்குத் தெரியாது. அப்படியானால் அங்கு ஒன்றும் இருக்க முடியாது" என்றார்.

பெர்நதெத் பயந்து, சுண்டெலியைப்போல் தன்னை அடக்கிக் கொண்டாள். சுவாமியாருக்கு முரட்டுச் சத்தம். அங்குமிங்கும் நடந்துகொண்டு "யாராவது இப்பேர்ப்பட்ட கதையைக் கேட்டது உண்டா? ஒரு பெண்ணாம்! அவளுக்குச் சுற்றுப் பிரகாரம் வேண்டுமாம்!" எனக் கத்தினார். பின் அவர் "கெபியில் ஒரு காட்டு ரோஜாச் செடி மேல் அவள் காட்சியளிப்பதாகச் சொல்கிறாய். அந்தச் செடி பூக்கும்படி அவள் செய்யட்டும். அப்படியானால் நீ சொல்வதை நான் நம்புகிறேன். உன்னுடன் நானும் மஸபியேல் கெபிக்கு வருவதாக வாக்களிக்கிறேன்” என்றார்.

நடந்ததைக் கேள்விப்பட்டு இருபதாயிரம் ஜனங்கள் கெபியருகே கூடிவிட்டார்கள். இராணுவ வீரர்களை அங்கு கொண்டுவர வேண்டி யிருந்தது. உருவிய வாளை ஏந்திய ஒருவன் துணையாக நின்று பெர்ந்தெத்தைப் பத்திரமாய் அழைத்துச் சென்றான்.

அந்தப் பெண் தோன்றியதும் பங்கு கவாமியாருடைய விருப்பத்தை பெர்ந்தெத் தெரிவித்தாள். பெண் சிரித்தாளேயொழிய தான் இன்னார் என்று சொல்லவில்லை.

மார்ச் 24-ம் நாளன்று பெர்ந்தெத் கெபிக்குச் சென்றாள். ஏற்கனவே அந்தப் பெண் அங்கு நின்றாள். அவளைக் காத்திருக்கப் பண்ணியதற்காக பெர்நதெக் மன்னிப்புக் கேட்டாள். மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை என அந்தப் பெண் கூறியதும் பெர்நதத் தன் உள்ளத்தில் இருந்ததையெல்லாம் எடுத்துக்கூறி, ஜெபமாலையை எடுத்தாள். ஜெபிக்கையில் ஒரு யோசனை வந்தது. அவள் யார் எனக் கேட்க ஆசை உண்டாயிற்று. "தான் யாரெனச் சொல்லும்படி அவளைக் கெஞ்சிக் கேட்டேன். அந்தப் பெண்ணோ இதற்குமுன் செய்தது போலவே செய்தாள்; தலை குனிந்து புன்சிரிப்புப் பூத்தாள்; பதில் அளிக்கவில்லை. எனக்கு இன்னும் சற்று துணிவு வந்தது. தயவுசெய்து உங்கள் பெயரைத் தெரிவியுங்கள் என்றேன். முன்போலவே அவள் தலைகுனிந்து புன்னகை பூத்தாளேயொழிய பதிலொன்றும் சொல்ல வில்லை. மௌனமாயிருந்தாள். நான் அவளுடைய பெயரை அறிய பாத்திரவதியல்ல என அங்கீகரித்து மூன்றாம் முறையாகக் கேட்டேன்."

அந்தப் பெண் ரோஜாச் செடிமேல் நின்றுகொண்டிருந்தாள். புதுமைச் சுரூபத்தின் மாதா நிற்கிறாப்போல் நின்றாள். நான் மூன்றாம் முறையாக என் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்ததும், அவளுடைய முகம் மாறியது. தாழ்ச்சியுடன் தலை குனிந்தாள். கரங்களைக் குவித்து அவற்றை மார்புவரை உயர்த்தினாள். பரலோகத்தை அண்ணார்ந்து பார்த்து, மெதுவாகக் கரங்களை விரித்து, என் பக்கமாய்ச் சிறிது சாய்த்து "அமல உற்பவம் நானே" என்று சொல்லி உடனே மறைந்தாள்.

அந்த வார்த்தைகளை மறந்து விடாதபடி பெர்ந்தெத் வீட்டுக்கு வரும் வழியில் அவற்றைச் சொல்லிக் கொண்டே வந்தாள். நேரே பங்கு சுவாமியாரிடம் போய்த் தெரிவித்தாள். கோவில் கட்ட பணம் இருக்கிறதா என அவர் கேட்க, பெர்நதெத் இல்லை என்றாள். "என்னிடமும் கிடையாது. அந்தப் பெண்ணைத் தரச் சொல்" என அவர் கூறினார்.

அந்தப் பெண் கேட்ட கோவில் அவளுக்குக் கிடைத்தது. பெரமால் சுவாமியே அதைக் கட்டினார். இன்று அது தற்கால உலகிலேயே மிக்க அழகுவாய்ந்த ஆலயங்களில் ஒன்றாய்த் திகழ்கிறது.

அந்த அழகிய பெண்ணை பெர்நதெத் கடைசி முறையாகப் பார்த்தது 1858-ம் ஆண்டு ஜூலை 16-ம் நாள் கார்மேல் மாதா திருநாளன்று. அன்றைய காட்சி பதினைந்து நிமிடம் நீடித்தது.



Short History of Our Lady of Lourdes


புதன், 27 டிசம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 19 - அர்ச். பிரான்சிஸ் சவேரியார் (St. Francis Xavier)

 வாழ்க்கை வரலாறு

அர்ச். பிரான்சிஸ் சவேரியார், இந்தியா மற்றும் கீழ்த்திசை நாடுகளுக்கும் சென்று சத்திய வேதத்தைப் போதித்ததினால் அவர் சிந்து தேசத்தின் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் நமது ஞானத் தந்தையாகவும் இருக்கிறார். ஆனால் இந்த நவீன காலங் களில் அவர் மீதான பக்தி மறைந்து வருகிறது. ஆன்ம தாகம் நிறைந்த அவரது வாழ்வை அறிந்து, அவரைக் கண்டுபாவித்து, அவர் உதவியை நாடுவது மிகவும் நல்லது. அவர் மீது விசேஷ பிள்ளைக் குரிய பக்தி கொள்ளச் செய்யும் நோக்கத்தில் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. (ஆர்)

இந்தியாவின் அப்போஸ்தலர்

உ லகமெங்கும் சென்று சகல ஜாதி ஜனங்களுக்கும் சுவிசேஷத்தைப் போதிக்கும் உன்னத அலுவல் நமது ஆண்டவரால் திருச்சபை வசம் ஒப்பு விக்கப்பட்டது. இந்த அலுவலைக் கத்தோலிக்கத் திருச்சபை, அப்போஸ்தலர் காலமுதல் இதுவரையில் பிரமாணிக்கமாய் நிறைவேற்றி வருகிறது. ஒவ்வொரு நூற்றாண்டிலும் இவ்வுத்தம தொழிலுக்கு தேவ திருவுளத்தால் தெரிந்துகொள்ளப்பட்ட வேத போதகர் திருச்சபையின் அதிகாரமும், அங்கீகாரமும் பெற்று தூர தேசங்களுக்குச் சென்று கத்தோலிக்க சத்தியங்களைப் போதித்து ஆயிரக்கணக்கான அஞ்ஞானிகளைத் திருச்சபையின் செல்வ மக்களாக்கியிருக்கின்றனர். 16-ம் நூற்றாண்டில் மிகப் பிரசித்திப் பெற்ற வேதபோதகர்களுள் முதன்மையானவர் அர்ச். பிரான்சிஸ் சவேரியார் என்றால் மிகையாகாது. இவருக்கு அக்காலத்தில் வசித்த பரிசுத்த பாப்புவாகிய 8-ம் உர்பன் இந்தியாவின் அப்போஸ்தலர் என்னும் பட்டமளித்தார். 

பிறப்பு 

இந்தப் பெரிய அப்போஸ்தலர் பிறந்த இடம் ஸ்பெயின் தேசத்தைச் சேர்ந்த நவார் நாட்டிலுள்ள சேவியேர் மாளிகை. இவர் பிறந்தது 1506-ம் ஆண்டு. இவரது தாய் இராஜ வம்சத்தைச் சேர்ந்தவள். தந்தை நவார் நாட்டு இராஜாவாகிய 3-ம் ஜான் ஆல்பிரட் என்பவரின் பிரதான மந்திரிகளுள் ஒருவர்.

அர்ச். சவேரியார் பிறந்த சேவியேர் மாளிகை

பிரான்சிஸ் சவேரியாரின் குடும்பத்தில் உதித்த ஆறு மக்களுள் இவர்தான் கடைசிப்பிள்ளை. இவரது சகோதரி மதலேன் என்பவள் காந்தியா நாட்டிலுள்ள அர்ச். கிளாரா மடத்து சிரேஷ்ட தாயாராக மாட்சிமை பொருந்திய உத்தியோகத்தை வகித்து வந்தார். சகோதரரோ அக்காலத்து வழக்கம்போல் இராணுவத்தில் சேர்ந்து கீர்த்திப் பெற்று விளங்கினர். 

பாரீஸ் நகர் பல்கலைக்கழகம் 

பிரான்சிஸ் சிறுவயதிலேயே கல்வி கற்பதில் பெரும் ஆவல் கொண்டிருந்தபடியால், அவரது தாய் தந்தையர் அவரைப் பாரீஸ் நகர் பல்கலைக்கழகத்திற்குத் தமது கல்விப் பயிற்சியைத் தொடர்ந்து நடத்தும்படி அனுப்பினர். 16-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலுள்ள உயர்தரக் கல்வி ஸ்தாபனங்களுள் அதிமிக சிறப்பும், மேன்மையும் பெற்று விளங்கியது பாரீஸ் பல்கலைக் கழகமாகும். பலதேசத்து மாணவர் வந்துகூடி படிக்குமிடமும் இதுவாகவே இருந்தது. ஐரோப்பிய ஆசிரியருள் பிரசித்திபெற்ற அறிஞர்கள் ஆசிரியர் தொழில் நடத்திவந்ததும் இந்தப் பல்கலைக்கழகத்திலேதான். சுபாவத்தில் நுட்பமான புத்தியுள்ள இளைஞனாகிய பிரான்சிஸ் வெகு கவனமாய்ப் பல சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்து இளமையிலேயே உயர்ந்த கல்விப் பட்டங்களைப் பெற்று, பெரியோரால் நன்கு மதிக்கப்பட்டு வந்தார். இவரை அர்ச். பார்பரா கல்லூரியின் பிரதம ஆசிரியருள் ஒருவராக நியமித்தார்கள். தமது சகோதரர்கள் இராணுவத்தில் பெயரும். புகழும் பெறுவதுபோல், தாம் கல்வி துறையில் கீர்த்தியும் செல்வாக்கும் அடையவேண்டுமென்பது பிரான்சிஸ் சவேரியாரின் ஒரே ஆசையாயிருந்தது.

அர்ச். இஞ்ஞாசியார்

ஆனால் மனிதன் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று செய்யும் என்னும் பழமொழிக்கேற்ப நமது நல்ல ஆண்டவர் பெருந்தன்மையும், புத்தி தீட்சண்யமுமுள்ள சவேரியாரை தமது ஊழியத்துக்கு அழைக்க சித்தமாயிருந்தார். "நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை. நானே உங்களைத் தெரிந்துகொண்டேன்" என்று உலக இரட்சகர் தமது அப்போஸ்தலர்களுக்குத் திருவுளம்பற்றியிருக்கிறாரன்றோ? அவ்வாறே இப்போது தாம் சவேரியாரைத் தமது அப்போஸ்தலராகத் தெரிந்துகொண்டதாக அவருக்கு அறிவிக்கும்படி அர்ச். இஞ்ஞாசியாரை அவரிடம் அனுப்பினார். 

அர்ச். இஞ்ஞாசியார் சவேரியாரைப் போலவே ஸ்பெயின் தேசத்து பிரபுகுலத்தில் பிறந்தவர். அவரைப் போலவே தொடக்கத்தில் இவ்வுலக பெருமை, மகிமையை நாடித் திரிந்தவர். ஆனால் இஞ்ஞாசியார் தேவ திருவுளத்தால் அற்புதமாய் ஏவப்பட்டு, பூலோக சுக செல்வங்கள் அழிவுக்குரியவையென்று உணர்ந்து, உலகத்தைத் துறந்து, கடுந்தபம் புரிந்து, தன்னை அடக்கி, சேசுவின் திரு ஊ ழியத்துக்குத் தன்னை முழுவதும் கையளித்திருந்தவர். இவர் தம்மோடு சேர்ந்து தேவ பணிபுரிய ஓர் புதிய சன்னியாச சபையை ஏற்படுத்த கருத்துக் கொண்டவராய் பாரீஸ் பல்கலைக் கழகத்திற்கு வந்து, பிரான்சிஸ் சவேரியாரின் அரும்பெருங் குணாதிசயங்களைக் கண்ணுற்ற அவரைத் தமது தோழனாகத் தெரிந்துகொள்ளத் தீர்மானித்து, அவரிடம் சென்று. "பிரான்சிஸ், உலக முழுவதையும் உன்னுடையதாக்கிக் கொண்டாலும் உன் ஆத்துமத்தை இழந்துபோவாயானால் என்ன பிரயோசனம்” என்று சொல்வார். ஆனால் வின் மகிமை யென்னும் உலக மாய்கையில் சிக்குண்டு அழைக்கழிக்கப்பட் டிருந்த அவரது இருதயத்துக்கு அர்ச். இஞ்ஞாசியார் சொன்ன புத்திமதி வேப்பங்காயைப் போல கசப்பாயிருந்தது. உலக சுக செல்வத்தை ஒருங்கே மறுத்து சன்னியாசக்கோலம் பூண்டு தரித்திர திசையில் நடமாடித்திரிந்த இஞ்ஞாசியாரை ஓர் ஏழை மாணவன் என்று எண்ணியிருந்த சவேரியார் அவரை இகழ்ந்து அலட்சியம் செய்தார்.

ஆயினும் இஞ்ஞாசியார் அவதைரியப்படாமல், அர்ச்சியசிஷ்டவர் களுக்குரிய அற்புத தாழ்ச்சி, பொறுமையுடன் சவேரியாரை அணுகி, அவருடைய குலம், குணம், கல்வி, ஒழுக்கம், சாதுர்ய சாமர்த்தியம், யுக்தி, யோசனை ஆகிய சுபாவ நன்மைகளைப் புகழ்ந்துப் பேசி, இத்தகைய சுகிர்த இலட்சணங்களை ஆபரணமாகக் கொண்டு, சிறந்து விளங்கும் கத்தோலிக்க வாலிபன் இவ்வுத்தம சுபாவக் கொடைகளைத் தன் இரட்சகரின் திரு ஊழியத்தில் செலவழிப்பதே அழிவில்லாப் புகழ்பெற ஏற்ற வழி என்று அவர் உணருமாறு எடுத்துரைத்தார். சவேரியார் இஞ்ஞாசியாரோடு நெருங்கிப் பழகவே, அவரது யதார்த்த குணத்தையும் பெருந்தன்மையையும் உயர்குலப் பிறப்பையும் கண்டு, மனச்சாட்சியின் குரலுக்குச் செவிக்கொடுத்து, திவ்விய இஸ்பிரித்துசாந்துவின் பரிசுத்த ஏவுதலுக்கு இணங்கி, தம்மை இஞ்ஞாசியார் வசம் ஒப்படைத்தார். இஞ்ஞாசியாரும், அவரை உற்சாகப்படுத்தி தமது உற்ற தோழனாக ஏற்றுக் கொண்டார். பின்னாளில் அர்ச் இஞ்ஞாசியார் சேசு சபையை ஸ்தாபிக்கும்போது அச்சபையின் அஸ்திவாரக் கற்கள்போன்ற பத்துபேருள் பிரான்சிஸ் சவேரியார் ஒருவராயிருந்தார்.

இந்தியா வருகை 

1537-ம் ஆண்டு அர்ச். ஸ்நாபக அருளப்பர் திருநாள் அன்று சவேரியாருக்கு வெனிஸ் நகரில் குருப்பட்டம் அளிக்கப் பட்டது. அதன்பின் அர்ச். இஞ்ஞாசியாரும் அவர் தோழர் களும் உரோமையில் ஆத்தும இரட்சண்ய அலுவலில் ஈடுபட்டு உழைத்துக் கொண்டிருக் கையில், போர்த்துக்கல் தேசத்து இராஜா இந்தப் புது குருமாரின் பக்திப் பற்றுதலையும், வேதபோதகத் திறமையையும் கேள்வியுற்று, இவர்களுள் ஆறுபேரை இந்தியாவுக்கு அனுப்பவேண்டுமென்று பரிசுத்த பாப்பரசருக்கு மனு செய்துகொண்டார். அக்காலத்தில் நமது தேசமாகிய இந்தியாவில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க முன்வந்து முயற்சி செய்தவர்கள் போர்த்துக்கீசியரே. நமது பரிசுத்த பிதா இராஜாவின் மன்றாட்டுக்கிணங்கி அர்ச் இஞ்ஞாசியார் விருப்பப் பிரகாரம் பிரான்சிஸ் சவேரியார். சீமோன் ரொட்ரிகோஸ் என்னும் இரண்டு சேசுசபைக் குருமாரைப் போர்த்துக்கலுக்கு அனுப்பினார். ரொட்ரிக்கோஸ் சுவாமியார் லிஸ்பன் நகரில் இருக்க நேர்ந்ததால், பிரான்சிஸ் சவேரியார் மாத்திரம் இந்தியாவுக்குப் புறப்பட வேண்டிய தாயிற்று. சங். சவேரியார் சுவாமி தமது 35-ம் வயதில், 1541-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி சுப்பலேறி, தமது சொந்த தேசம், அன்புள்ள தாய், சகோதரர், சகோதரி, உற்றார் உறவினர் சகலரையும் விட்டு அந்நியராகிய அஞ்ஞான இந்தியர்களுக்கு சத்திய வேதத்தைப் போதிக்க இந்தியாவை நோக்கிப் புறப்பட்டு 1542-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி கோவா துறைமுகத்தில் வந்திறங்கினார்.

கோவா 

அர்ச். சவேரியார் காலத்தில் இந்தியாவின் மேற்கு கடற்கரை யோரத்திலுள்ள சில துறைமுகப் பட்டணங்கள் போர்த்துக்  கீசியருக்குச் சொந்தமானவையாயிருந்தன. இவைகளுள் பிரதான மானது கோவா நகர். இந்த கோவா மாநகரில்தான் மேற்றிராணியாரும் அரச பிரதிநிதியாகிய உயர் அதிகாரிகளும் வசித்தனர். புதிதாய் வந்திறங்கின சங். சவேரியார் சுவாமியார் தினமும் அதிகாலையில் திவ்விய பலிபூசை நிறைவேற்றியபின், கோவாவிலுள்ள தர்ம மருத்துவமனைகளுக்குச் சென்று வியாதியஸ் தருக்கு ஆத்தும சரீர நன்மைகள் செய்வார். தொழுநோய் மருத்துவ மனையே அவரது விசேஷ அன்புக்குரியதாயிருந்தது. பிறகு சிறைச் சாலைகளுக்குப் போய் அங்குள்ள கைதிகளுக்கு ஆறுதலளிப்பார். கோவாவில் வீடு வீடாய்ச் சென்று தான் சேகரித்தப் பொருட்களையும் தர்ம பணத்தையும் நோயாளிகளுக்கும் கைதிகளுக்கும் பகிர்ந்துக் கொடுப்பார். மாலை நேரத்தில் ஓர் சிறு மணியை அடித்துக்கொண்டு வீதிகள்தோறும் நடந்துபோய் சிறுவர்களையும் சிறுமிகளையும் கூட்டிச் சேர்த்துவந்து அவர்களுக்கு ஞானோபதேசம் கற்றுக் கொடுப்பார். பிள்ளைகளின் ஆத்துமத்தைக் காப்பாற்றி அவர் களுடைய இளம் பிராயத்தில் புண்ணிய நற்பண்புகளை விதைத்தால், பிள்ளைகள் மூலமாய்ப் பெற்றோரை மனந்திருப்பி உத்தம கிறீஸ்தவர்களாக்குவது எளிது என்பதே அவருடைய அபிப்பிராயம். சங். சவேரியார் சுவாமியுடைய முயற்சியின் பலனாக பிள்ளைகள் கூட்டங் கூட்டமாய் அவரைப் பின்சென்று அவருடன் கோவிலுக்குள் சென்று வேத ஞான சத்தியங்களை உற்சாகத்துடன் கற்றுக் கொள்வார்கள். கற்றுக்கொண்டதை அநுசரித்து பக்தி விசுவாசமுள்ள சிறு சம்மனசுகளாக மாறிவிட்டதுமன்றி, வேத விசுவாசத்தில் சீர்குலைந்து திரிந்த தங்கள் தாய் தந்தையரையும் தங்களோடு ஞானோபதோத்துக்கு அழைத்துச் செல்வார்கள். கோவா நகர் கிறீஸ்தவர்களும் தங்கள் மத்தியில் ஓர் பரிசுத்த குருவானவர் எழுந்தருளி வந்திருக்கிறாரென்று நன்குணர்ந்து அவரது பிரசங் கத்தைக் கேட்க ஓடிவருவார்கள். அவரது பக்தியார்வம் நிறைந்த வார்த்தைகள் பாவிகளின் இருதயத்தில் ஆணிபோல் பதிந்து தெய்வ பயத்தை உண்டாக்கி அவர்களை நடுங்கச் செய்தன. தங்கள் பாவ வாழ்க்கையைவிட்டு உத்தம கிறீஸ்தவர்களானார்கள். 


தென்கீழ்க் கடலோரப் பகுதியில் 

பகலில் இவ்வாறு ஆத்தும இரட்சண்யத்திற்காக அயராது உழைத்த அர்ச். சவேரியார் இரவில் அதிக நேரத்தை ஜெபத் தியானத்தில் செலவிடுவார். தனது சரீர சுகத்தை ஒரு பொருட்டாய் எண்ணாது, களைப்புக்கும் தவிப்புக்கும் அஞ்சாமல், பிறர் ஆத்தும நன்மைக்காக அவர் சில மாதங்கள் உழைத்தபின், இந்தியாவின் தென்கீழ்க் கடலோரமாகிய முத்துக்குளித்துறையில், கன்னியாகுமரிக்கும் மன்னாருக்கும் நடுவிலுள்ள ஊர்களில் வசித்த பரதகுல மக்களுக்கு ஞான உதவி புரியும்பொருட்டு 1542-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அங்கு வந்து சேர்ந்தார்.


அர்ச். சவேரியார் முத்துக்குளித்துறைக்கு வந்ததும் அங்குள்ள பரதர்களில் அநேகர் சில வருஷங்களுக்குமுன் ஞானஸ்நானம் பெற்றிருந்தும். அவர்களை வேதத்தில் ஸ்திரப் படுத்த குருமார் இல்லாத குறையால் இந்தப் புதுக் கிறீஸ்தவர்கள் தங்களைச் சுற்றியிருந்த அஞ்ஞானிகளைப் போலவே வேத ஞான அறிவில்லாத வர்களாயிருப்பதைக் கண்டார். கோவாவில் எப்படி கிறீஸ்தவர்கள் மத்தியில் உழைத்தாரோ அதே விதமாய்ப் பரதர்கள் மத்தியிலும் உழைத்து, புதுக் கிறீஸ்தவர்களை விசுவாசத்தில் திடப்படுத்தி, இன்னும் ஞானஸ்நானம் பெறாதிருந்த அஞ்ஞானப் பரதர்களுக்கு வேதம் போதித்து தமது கையாலேயே ஞானஸ்தானம் கொடுத்தார்.

முத்துக்குளித்துறையில் தனக்குக் கிடைத்த பாக்கியத்தையும் ஞான ஆறுதலையும் தக்கவாறு வர்ணிக்கத் தன்னால் இயலாது என்று அர்ச். சவேரியார் உரோமைக்குத் தனது சபைக் குருமாருக்கு எழுதி யிருக்கிறார். திரளான கூட்டமாய் தன்னிடம் வந்த பரதகுலத்தாருக்கு ஞானஸ்நானம் கொடுத்ததினால் தனது கரங்களைத் தூக்க முடியவில்லை என்றும், களைப்பினால் பேசமுதலாய் பலமில்லை யென்றும் சொல்லுகிறார். அம்மக்களின் ஆச்சரியத்துக்குரிய பக்திப் பற்றுதலையும், வேத சத்தியங்களைக் கற்றறிய அவர்களுக்கு இருந்த அணைகடந்த ஆவலையும் எடுத்துக் கூறியிருக்கிறார். அவர்கள் எப்போதும் என்னோடுகூட இருக்க ஆசித்து, என்னை எப்போதும் சூழ்ந்துகொண்டிருப்பதால் ஜெபிக்க நேரமின்றி, அவர்களுக்குத் தெரியாமல் எங்கேயாவது ஓடி ஒளிந்துகொண்டு என் கட்டளை ஜெபத்தை ஜெபித்து முடிக்கிறேன் என்று எழுதியிருக்கிறார். அவர்களுக்குள் யாராவது வியாதியாய் விழுந்தால் சவேரியாருடைய ஜெபமாலை அல்லது பாடுபட்ட சுரூபத்தை வாங்கிக்கொண்டு போய் குணப்படுத்துவார்கள். 

முத்துக்குளித்துறையில் மரணத்தறுவாயிலிருந்த அஞ்ஞானக் குழந்தைகளைத் தேடிச்சென்று ஞானஸ்நானம் கொடுப்பார். இவ்வாறு இவர் கையால் ஞானஸ்நானம் பெற்று இறந்து மோட்சபாக்கியம் பெற்ற குழந்தைகள் ஏறக்குறைய ஆயிரத்திற்கு மேல் இருக்கு மென்று அர்ச். சவேரியார் கணக்கிட்டிருக்கிறார்.

அர்ச் சவேரியார் மணப்பாட்டு வழியாய் பலமுறை பிரயாணஞ் செய்தும் அவ்வூரிலேயே அநேக மாதம் தங்கியும் இருக்கிறார். 1542-ம் ஆண்டு மணப்பாடு அவருடைய பரிசுத்த பாதங்களினால் முதன் முதலாக அர்ச்சிக்கப்பட்டது. மறு வருடம் சுமார் நான்கு மாதம் அங்கேயே தங்கியிருந்தார். 1544 ம் வருடத்தில் மாத்திரம் மணப்பாட்டிலிருந்து 12 கடிதங்கள் எழுதினாரென்றால் எத்தனை முறை அவர் அங்கு சென்றிருக்கவேண்டுமென நாமே எளிதில் யூகித்துக் கொள்ளலாம். 1548-ம் ஆண்டில் தமது தோழர்களுக்கு தியானம் கொடுத்து அவர்களுக்கான புத்திமதிகளை எழுதிக் கொடுத்தது மணப்பாட்டில்தான். ஏழைகளின் உணவாகிய சாதமும் தண்ணீருமே அவர் அருந்திய அநுதின உணவு. வேலை முடிந்தபின் ஓர் எளிய குடிசையில் தரையில் மூன்று மணி நேரம் படுத்துறங்குவார். மீதி நேரத்தில் ஜெபத் தியானத்தில் ஆழ்த்திருப்பார். அவர் வழக்கமாய் ஜெபதபம் புரிந்துவந்த குகையை இன்றும் மணப்பாட்டில் காணலாம்.

இந்தியாவின் தென்கோடி முனையில் முத்துக்குளித் துறையெனப் பெயர்பெற்று விளங்கும் பரதர் நாடே அர்ச். சவேரியாரின் விசேஷ அன்பின் ஸ்தானமாயிருந்தது என்று மேற்கூறியவைகளைக் கொண்டு எளிதாக அறிந்துக் கொள்ளலாம். அவரது ஞான மக்களாகிய பரத குலத்தாரும் அர்ச். சவேரியார் தங்கள் முன்னோருக்குச் செய்தருளிய எண்ணிலா உபகார சகாயங்களை மறவாமல் அவரைத் தங்கள் அருமைத் தந்தையென்று போற்றிப் புகழ்ந்து ஸ்துதித்து வருகின்றனர். அர்ச். சவேரியார் வேதம் போதிக்கச் சென்ற இடங்களில் நடந்த சம்பவங்களையெல்லாம் இங்கு எடுத்துக் கூறுவது எளிதல்ல. ஆனால் அவர் இலங்கை, மலாக்கா, மொலுக்கஸ், ஜப்பான் முதலிய நாடுகளுக்குப் போய் இந்தியாவுக்குத் திரும்புகையில் தமது பரதருல மக்களை பாசத்தோடு சந்தித்து அன்புடன் ஆசீர்வதிக்க ஆவலுடன் முத்துக்குளித் துறைக்குப் போவார்.

சீனதேசம்


அர்ச். சவேரியார் இந்தியாவை விட்டு கடைசியாக புறப்பட்டது 1552-ம் வருடம் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி. சீனதேசம் புகுந்து அங்குள்ள அஞ்ஞான சீனருக்கு வேதம் போதிக்கவேண்டுமென்பது அவரது தீராத ஆவல், ஆனால் அந்நிய தேசத்தார் எவரும் சீனதேசத்துக்குள் பிரவேசிக்கக் கூடாதென்பது அத்தேசத்தின் கண்டிப்பான சட்டம். அப்படி இச்சட்டத்தை மீறி தேசத்திற்குள் பிரவேசிப்பவர்களைச் சிரச்சேதம் செய்வது வழக்கம். அர்ச். சவேரியார் இதை அறிந் திருந்தும், தேவசிநேகத்தால் பற்றியெறிந்த அவர் இருதயம் சீனர்களுக்கு வேத ஞானப்பிரகாசம் அளிக்கவேண்டுமென்று அவரை ஏவித்தூண்டிக்கொண்டேயிருந்தது. ஆதலால் தனக்கு வரவிருக்கும் உயிர்சேதத்தையும் பொருட்படுத்தாமல் துணிந்து சீனதேசத்துக்குச் செல்லத் தீர்மானித்து, 1552-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சான்ஷியன் தீவு போய்ச் சேர்ந்தார். இந்த இடம் சீன தேசத்தின் கீழ்க்கரையோரத்தில் கான்டன் நகருக்கு எதிரே இருக்கும் ஓர் சிறு தீவு, அங்கே வந்திருந்த போர்த்துக்கீசிய வர்த்தகர்கள் அர்ச்சியசிஷ்டவரை சந்தோஷத் துடன் வரவேற்று, அவர் திவ்விய பலிபூசை செய்ய ஓர் சிற்றாலயமும் கட்டிமுடித்தனர். சிலநாள் அத்தீவில் சிறுவர்களுக்கு ஞானோபதேசம் கற்றுக்கொடுத்துவந்தார். அங்கிருந்து சீன தேசத்திற்குப் போக ஏதாவது வர்த்தக கப்பல் வருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென அவருக்கு கொடிய ஜுரம் கண்டது. 

மரணம்

மரணம் அடுத்திருக்கிறது என்று தூரதிருஷ்டியால் அறிந்துகொண்ட அர்ச். சவேரியார் தமது நேச ஆண்டவரின் வருகைக்கு தன்னைத் தயார்செய்து கொண்டு ஆவலோடு காத்திருந்தார். “ஒ. மிகவும் பரிசுத்த திரித்துவமே, தாவீதின் குமாரனாகிய சேசுவே, என்மீது இரக்கமாயிரும்." "தாயே உம்மைத் தாயென்று காண்பித் தருளும்" என்னும் மனவல்ய ஜெபங்களே அவரது கடைசி சம்பாஷனையாக இருந்தது. 1552, டிசம்பர் 2-ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 2 மணிக்கு தனது கரங்களில் பாடுபட்ட சுரூபத்தை இறுகப் பிடித்து அதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்துகொண்டே மெதுவாய்,

"ஆண்டவரே, உம்மை நம்பினேன், ஒருபோதும் கைவிடப் படேன்” என்னும் இனிய ஜெபத்தை உச்சரித்துக்கொண்டே தனது ஆத்துமத்தைத் தன் அதிமிக அன்புக்குரிய ஆண்டவரிடம் கையளித்தார்.

பிரான்ஸ் தேசத்தின் பெயர்பெற்ற பிரசங்கியாகிய பூர்தலு என்பவர் அர்ச். சவேரியாரைப்பற்றி பின்வருமாறு புகழ்ந்து கூறியுள்ளார்: அப்போஸ்தலர்கள் செய்த புதுமைகளையெல்லாம் அர்ச். சவேரியாரும் செய்தார். அவர்களைப் போலவே அற்புதமாய் பல பாஷை பேசும் வரமும், தீர்க்கதரிசன வரமும், புதுமை செய்யும் வரமும் அவருக்கிருந்தது. பல தேசங்களில் திரிந்து கணக்கற்ற அஞ்ஞானிகளை மனந்திருப்பியதில் அப்போஸ்தலர்களுக்கு சம அப்போஸ்தலராயிருந்தது மாத்திரமல்ல, அவர்களில் பலருக்கு மேலானவருமாயிருந்தார். அவர் கரங்களில் ஞான தீட்சைப் பெற்றவர்கள் 12 லட்சத்திற்கு அதிகமான அஞ்ஞானிகள், சத்திய வேதத்தைக் கேட்டிராத 200-க்கு அதிகமான இராச்சியங்களில் வேதத்தைப் போதித்து ஏக திரித்துவ மெய்யங்கடவுளின் மேலான ஆராதனையை ஸ்தாபித்தார். எண்ணிறந்த அஞ்ஞான விக்கிர கங்களை உடைத்துத் தகர்த்தார். கடலிலும் தரையிலும் அவர் செய்த பிரயாணங்கள் உலக முழுவதையும் மும்முறை சுற்றி வருவதற்கு ஒப்பாகும். அவர் சென்றவிட மெல்லாம் சத்திய திருச்சபை செழித்தோங்கி வளர்ந்தது. அவருக்குமுன் குருக்கள் பாதம் படாத ஜப்பான் தேசத்தில் முதன்முதலில் சத்திய வேதத்தை நாட்டினவர் இந்த அர்ச்சியசிஷ்டவர்தான்.

சவேரியாரே எம் நல்ல தந்தையே!
தாரும் உறுதியை எங்களுக்கு
நாளும் உமது நல்ல மாதிரியை
நாங்களும் கண்டு ஒழுகிடவே

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 18 அர்ச். அருளப்பர், (St. John)

  அர்ச். அருளப்பர், 

அப்போஸ்தலர், சுவிசேஷகர் 

 

அர்ச். அருளப்பர் செபதேயுவின் மகனும், அர்ச்.  பெரிய யாகப்பர் (St. James) அவர்களின் சகோதரரும் ஆவார். ஆண்டவருடைய பொது ஊழியத்தின் முதல் ஆண்டில், நம்முடைய கர்த்தரால் அப்போஸ்தலராக அழைக்கப்பட்டார்.

📜✍🏻+ அர்ச். மார்க் (3, 17): "(மற்றவர்கள் யாரெனில்) செப்தேயுவின் குமாரனாகிய யாகப்பர், யாகப்பருடைய சகோதரனாகிய அருளப்பர்; இவ்விருவருக்கும் இடியின் மக்களென்று அர்த்தமுள்ள போவா னெர்கேஸ் என்று பெயரிட்டார்."

யாகப்பர் மற்றும் அருளப்பர் ஆகியோர் சேசுவால் "போனெர்ஜஸ்" அல்லது "இடியின் மகன்கள்" என்று அழைக்கப்பட்டனர், ஒருவேளை அர்ச். மார்க் 9:38 மற்றும்  இயேசுவை ஏற்றுக்கொள்ளாத சமாரிய நகரங்களை தண்டிக்க அர்ச். லூக். 9:54 ல் "அவருடைய சீஷர்களாகிய இயாகப்பரும் அருளப்பரும் இதைக்கண்டு: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால் வானத்தினின்று அக்கினி இறங்கி இவர்களைச் சுட்டெரிக்கும்டி சொல்லுகிறோம் என்றார்கள்.. இல் காட்டப்பட்டுள்ள வைராக்கியம் போன்ற சில குணாதிசயங்களின் காரணமாக இருக்கலாம்.

அருளப்பர் எப்போதும் சேசுநாதரால் சிநேகிக்கப்பட்ட சீடராக அழைக்கப்படுகிறார், மேலும் பன்னிரண்டு பேரில் ஒருவரே இரட்சகரை அவரது பாடுகளின் நேரத்தில் கைவிடாது தொடர்ந்து சென்றார். நம் ஆண்டவர் அவரைத் தன் தாயின் பாதுகாவலராக ஆக்கியபோது அவர் சிலுவையின் அடியின் மரியாளோடு நின்றார். 

அர்ச். அருளப்பர் சுவிசேஷம் 19:26-27 "சேசுநாதர் தமது தாயாரையும், அங்கு நின்ற தம்மால் சிநேகிக்கப்பட்ட சீஷனையும் கண்டபோது, தம்முடைய தாயாரை நோக்கி: ஸ்திரீயே, இதோ உன் மகன் என்றார். பின்னும் சீஷனை நோக்கி: இதோ உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்த சீஷன் அவளைத் தன் இல்லத்தில் ஏற்றுக்கொண்டார். 

* 27. மெய்யான கிறீஸ்துவர்களெல்லோரும் சேசுநாதரால் சிநேகிக்கப்பட்டு அவருக்குச் சீஷர்களாயிருக்கிறார்கள். ஆகையால் அவர் தம்மால் சிநேகிக்கப்பட்ட சீஷனை நோக்கி, இதோ! உன் தாயென்று சொல்லும்போது, தம்முடைய திரு மாதாவை எல்லாக் கிறீஸ்தவர்களுக்கும் தாயாராக ஒப்புக்கொடுத்தாரென்பது மெய்.

அருளப்பரின் பிற்கால வாழ்க்கை முக்கியமாக ஜெருசலேமிலும் எபேசஸிலும் கழிந்தது. ஆசியா மைனரில் பல தேவாலயங்களை நிறுவினார். அவர் நான்காவது சுவிசேஷத்தையும், 3 நிருபங்கள் மற்றும் காட்சியாகமம் புத்தகத்தையம் எழுதியுள்ளார். - இவை அனைத்தும் கி.பி 70 இல் ரோமானியர்களால் ஜெருசலேம் அழிக்கப்பட்ட பின்னர் இயற்றப்பட்டது.

அருளப்பர் எப்போதும் கழுகுடன் ஒப்பிடப் படுகிறார். ​​அவரது உயர்ந்த சிந்தனையின் மூலம், அர்ச். அருளப்பர், நாசரேத்தின் இயேசுவின் தெய்வீகத்தின் வேடபாரகர் ஆவார். வியக்க வைக்கும் நினைவாற்றலைக் கொண்ட அவர், கிறிஸ்துவின் பிரசங்கங்களை வாசகருக்கு புரியும் படியாகவும்,  தெளிவாகவும் எழுதினார். இதனாலே பிற்காலத்திலும் கூட மீண்டும் உருவாக்க முடிந்தது. 

அர்ச். அருளப்பர் 95ம் வருடம் ரோமை அரசர் Domitian உத்தரவால் ரோமையில் கைது செய்யப்பட்டார். அவரை கொதிக்கும் எண்ணெயில் தள்ளினர். ஆனால் அவருக்கு ஒரு தீங்கும் ஏற்படவில்லை. மாறாக அவர் முன்னிலும் அதிக ஆரோக்கியமுள்ளவராக வெளியே வந்தார்.


பேரரசர் பின்னர் அர்ச். அருளப்பரை பாத்மோஸ் தீவுக்கு வெளியேற்றினார், ஆனால் ஒரு வருடம் கழித்து விடுவிக்கப்பட்டார். அப்போஸ்தலர்களில் அருளப்பர் மட்டுமே மற்ற அப்போஸ்தலர்களை போல் வேதசாட்சி மரணம் அடையாமல் எபேசுஸ் நகரில் இயற்கையான மற்றும் அமைதியான மரணம் அடைந்தார். Saint Epiphanus கூற்றுப்படி அருளப்பருடைய மரணத்தின் பொது அவருக்கு வயது 96.

கிறிஸ்தவ சித்திரங்களில் (holy picture)(படம்) எப்போதும் ஒரு கழுகு இருக்கும். இது தீர்க்கதரிசி எசேக்கியேல் தீர்க்கதரிசனமாக சொல்லியது. (எசே. 1:10) "அவைகளின் முகச் சாயல் ஏதெனில், நாலுக்கும் முன்னாலே மானிடமுகமிருந்தது. இதன் வலது புறத்தில் நாலுக்கும் சிங்க முகமும், அதன் இடது புறத்தில் நாலுக்கும் எருது முகமும், மேற்புறத்தில் நாலுக்கும் கழுகு முகமும் இருந்தன." 



English ::

December 27

APOSTLE ST. JOHN THE EVANGELIST

John, the son of Zebedee, and the brother of St. James the Great, was called to be an Apostle by our Lord in the first year of His public ministry.

📜✍🏻+ St. Mark (3, 17): "And James the son of Zebedee, and John the brother of James; and he named them Boanerges, which is, The sons of thunder:"

James and John were called by Jesus “Boanerges,” or “sons of thunder,” perhaps because of some character trait such as the zeal exemplified in Mark 9:38 and Luke 9:54, when John and James wanted to call down fire from heaven to punish the Samaritan towns that did not accept Jesus.

John is also called "beloved disciple" and the only one of the Twelve who did not forsake the Saviour in the hour of His Passion. He stood faithfully at the cross when our Lord made him the guardian of His Mother.

John's later life was passed chiefly in Jerusalem and at Ephesus. He founded many churches in Asia Minor. He wrote the fourth Gospel, the 3 Epistles, and the Book of Revelation, - all of which were composed after the destruction of Jerusalem by the Romans in 70 A.D.

Compared with an eagle by his flights of elevated contemplation, Saint John is the supreme Doctor of the Divinity of Jesus of Nazareth. Endowed with an astounding memory, he was able even in his later years, to reproduce the discourses of Christ in such a way as to make the reader experience their power and impact on their audiences as if present to hear them.

John was arrested and brought to Rome in 95 AD and he was by order of Emperor Domitian cast into a cauldron of boiling oil but came forth unhurt and more healthy.

The emperor then banished St. John  to the island of Pathmos, but was freed a year later. He is the only Apostle who died a natural death, surviving all his fellow apostles.

Saint John died in peace at Ephesus in the third year of the reign of emperor Trajan, that is, the hundredth of the Christian era, or the sixty-sixth from the crucifixion of our Lord, Saint John then being about ninety-four years of age, according to Saint Epiphanus.

     🍁🍁🍁🍁🍁🍁🍁


John the Evangelist is usually depicted as a young man. In Christian art, John is symbolically represented by an eagle, one of the creatures envisioned by Ezekiel (1:10)