Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 29 டிசம்பர், 2023

கிறிஸ்துநாதர் அனுசாரம்

 20.ஆம் அதிகாரம்

ஏகாந்தத்தின் பேரிலும் மௌனத்தின் பேரிலும் வைக்கவேண்டிய பிரியம்





1. நீ தனித்திருந்து உன்னைத்தானே கவனிக்கத்தக்க சமயத்தைத் தேடு; சர்வேசுரனுடைய நன்மைகளை அடிக்கடி நினை. வீண் விநோத விசாரணைகளையெல்லாம் விட்டுவிடு : புத்தியை யோசிக்கச் செய்யும் விஷயங்களைவிட உன் மனதை அனுதாபப்படுத்தி இளகச் செய்யும் விஷயங்களை வாசி. மட்டுத்திட்டமின்றிப் பேசுவதையும், அவசரமின்றி இங்குமங்கும் திரிவதையும், நூதனமானதும் வீணானதுமான பிரஸ்தாபங்களைக் கேட்பதையும் விட்டு நீ விலகினால், பக்திக்குரிய தியானங்களில் நீ கவனஞ் செலுத்துவதற்குப் போதுமானதும் தகுந்ததுமான அவகாசம் உனக்குக் கிடைக்கும். மகா பெரிய அர்ச்சியசிஷ்டர்கள் மனிதருடைய சகவாசத்தைக் கூடுமானபோதெல்லாம் விலக்கி, சர்வேசுரனைச் சேவிக்கும்படி ஏகாந்தத்திற் சீவிப்பதைத் தெரிந்துகொண்டார்கள்.

2.-"மனிதருடன் நான் பழக்கஞ் செய்யும்போதெல்லாம் குறைந்த மனிதனானேன்" என்று செனேக்கா சாஸ்திரி சொல்லியிருக்கின்றார். வெகுநேரம் சம்பாஷிக்கிறவர்கள் அதன் உண்மையை அடிக்கடி அனுபவத்தால் அறிந்துகொள்வார்கள். பேச்சில் மட்டுக் கடவாதிருப்பதை விட ஒன்றும் பேசாமலே இருப்பது அதிக எளிது. மானிடர்கள் நடுவில் தன்னை யோக்கியமாய்க் காப்பதைவிட அறையில் அமைதியாய்த் தனித்திருப்பது அதிக எளிது. அந்தரங்கமும் ஞானமுமான சீவியத்தைச் சீவிக்க விரும்புகிறவன் எவனோ அவன் யேசுநாத சுவாமியுடன் ஜனக்கும்பலினின்று அகன்றுபோக வேண்டியது. அந்தரங்கத்தில் சீவிக்கப் பிரியங் கொள்ளாதவன் ஆபத்தின்றித் தன்னை வெளியே காண்பியான். மௌனப் பிரியனாயிராதவன் எவனும் ஆபத்தின்றிப் பேசான். மனப் பூர்வமாய்த் தாழ்ந்து போகாதவன் எவனும் ஆபத்தின்றி மேலான அந்தஸ்தில் நிலைகொள்ளான். நன்றாய்க் கீழ்ப்படியக் கற்றுக்கொள்ளாதவன் எவனும் ஆபத்தின்றி அதிகாரஞ் செலுத்தான். தனக்குள்ளாக நல்ல மனசாக்ஷி யில்லாதவன் எவனும் ஆபத்தின்றி சந்தோஷங் கொள்ளான்.

3. அர்ச்சியசிஷ்டர்களுடைய உறுதியான நிலைமையோ எப்போதும் தேவபயத்தில் பலமாய் வேரூன்றியிருந்தது. தங்களிடத்தில் சிறப்பாக விளங்கும் புண்ணியங்களையும் வரப்பிரசாதங்களையும் நம்பித் தாங்கள் கவனக்குறைவுள்ளவர்களாகவும் தாழ்ச்சிக் குறையுள்ளவர்களாகவும் இருக்கலாமேயென்று அவர்கள்  கருதவில்லை. பாவிகளுடைய உறுதியோ வெனில் ஆங்காரத்தின் பேரிலும் மிஞ்சின நம்பிக்கையின் பேரிலும் ஊன்றியிருக்கிறது; ஆனதால் அது கடைசியில் மோசமாக முடிகின்றது. நீ உத்தம சந்நியாசியாகவும் பக்தியுள்ள வனவாசியாகவும் காணப்பட்ட போதிலும், இவ்வுலகத்தில் பயமில்லாமல் சஞ்சரிக்கலாமென்று பரிச்சேதம் எண்ணாதே.

4. மனிதருடைய எண்ணத்தில் உத்தமராயிருந்தவர்கள்,தங்கள் மிதமிஞ்சின சுய நம்பிக்கையினிமித்தம், அநேகமுறை அதிக பெருத்த ஆபத்துகளுக்கு உள்ளானார்கள். ஆகையால் அனேகர் சற்றும் பயமற்றவர்களா யிராதபடிக்கும், ஆங்காரத்தினால் பெருமை கொள்ளாதபடிக்கும், புறத்தி ஆறுதல்களை அதிக மன உற்சாகத்தோடு தேடாதபடிக்கும் அவர்கட்கு முற்றும் தந்திரசோதனை அற்றுப் போகாதிருப்பதும் அவர்களை அடிக்கடி தந்திர சோதனை அலைக்கழிப்பதும்கூட அதிகப் பிரயோசனமாயிருக்கும். நிலையற்ற இன்பங்களை ஒருபோதுந் தேடாது, உலகக் காரியங்களைப்பற்றி ஒருபோதும் கவலை கொள்ளாதவன் எவ்வளவோ தூய மனதுடையவனாயிருப்பான்! ஒ! வீண் கவலையெல்லாம் முற்றிலும் ஒழித்துவிட்டு, இரக்ஷணியத்திற்கும் சர்வேசுரனுக்கும் அடுத்தவைகளை மாத்திரமே சிந்தித்து, தன் நம்பிக்கையை யெல்லாம் சுவாமியின் பேரில் வைத்திருக்கிறவன், எவ்வளவோ ஆழ்ந்த சமாதானமும் அமரிக்கையும் அடைவான்!

5.- துக்க மனஸ்தாபப்படத் தன்னைத்தானே சுறுசுறுப்புடன் அப்பியாசப் படுத்திக்கொள்ளாத எவனும் மேலான ஆறுதலுக்குப் பாத்திரவானல்ல. உண்மையான மனஸ்தாப முணர உமக்கு மனதிருக்குமேயானால், "உங்கள் படுக்கை யறையில் மனஸ்தாபப்படுங்கள்" என்று எழுதப்பட்டிருக்கிற பிரகாரம் உன் அறையிற் பிரவேசித்து உலக சந்தடியை நீக்கிவிடு. உன் அறையில் தனிவாசம் செய்வதனால், வெளியில் நீ அநேகமாய் இழந்து போகும் நன்மைகளைக் கண்டடைவாய். அறையில் சாதாரணமாய்த் தங்கி வாசஞ் செய்வது இன்பத் தருகின்றது. அதை அடிக்கடி விட்டகன்று போகிறவனுக்கு அது சலிப்புக் கிடமாகின்றது. நீ மனந் திரும்பின துவக்கத்திலேயே உன் அறைமீது நீ பிரியம் கொண்டு அதில் தங்கியிருந்தால், பிற்காலத் தில் உனக்கு அது பிரிய சிநேகிதன் போலவும், மிகவும் பெரிய ஆறுதலாகவுமிருக்கும்.


6.- மவுனத்திலும் அமரிக்கையிலுமே பக்தியுள்ள ஆத்துமம் விருத்தியடையும்; வேதாகமங்களில் மறைத்திருக்கிற இரகசிய ஞான அர்த்தங்களையுங் கண்டுபிடிக்கும். அப்போது இரவில் கண்ணீர்த் தாரைகளைக் கண்டடையும். அவை அதன் பாவக் கறைகளைச் சுத்தப்படுத்தி எவ்வளவுக்கு அது உலக சந்தடிகளை அகற்றிவிட்டதோ அவ்வளவுக்கு அதைக் கர்த்தருடன் நெருக்கமாய் ஐக்கியப்படுத்துகின்றன. தனக்கு அறிமுகமும் சிநேகமுமானவர்களை விட்டுப் பிரிகிறவன், சர்வேசுரனும் அவருடைய பரிசுத்த சம்மனசுகளும் தன்னை அணுகுவதாக வுணருவான். புதுமை செய்வதைவிட, அந்தகாரச் சீவியத்தில் சீவித்துத் தன் ஆத்தும ரக்ஷணியத்தைக் கவனிப்பது உத்தமம். அரிதாய் வெளியே போகிறதும், தன்னைக் காண்பிப்பதை விலக்குவதும், பிறர் கண்ணுக்கு முதலாய்த் தென்படா மல் ஒதுங்கி ஜீவிக்கிறதும் சந்நியாசியிடத்தில் புகழ்ச்சிக் குரியது.

7.- நீ வைத்துக்கொள்ளக் கூடாதவைகளைக் பார்க்கிறதற்கு ஆசைப்படுவதேன்? 'பூலோகமும் அதன் சுகானுபவங்களும் ஒழிந்துபோகின்றன.' புலன்களின் இச்சைகளால் நீ வெளியே செல்லவும், பயணத்திற்கும் இழுக்கப்படுவாய். ஆனால் அக்காலம் கடந்தபின் மனச்சாக்ஷியில் கலக்கமும் இருதயத்தில் பராக்குமேயன்றி வேறென்ன பயனுண்டாகும்? சந்தோஷமாய் வெளியே புறப்படுகிறவன் பலமுறை கஸ்தியாய்த் திரும்பி வருவான். இரா விழிப்பதில் அநுபவித்த சந்தோஷம் காலையில் துக்கமாக மாறுகின்றது. இவ்விதமாக இலௌகீக சந்தோஷ மெல்லாம் இன்பத்தோடு ஆத்துமத்தில் நுழைந்து, கடைசியில் அதைக் காயப்படுத்திச் சாகடிக்கின்றது. இங்கே நீ பார்க்காத வேறென்னத்தை மற்ற விடங்களில் காணப்போகிறாய்? இதோ வானமும் பூமியும் சகல பூதியங்களும் இருக்கின்றன. பார். அவைகளினின்றே சகலமும் உண்டாக்கப்பட்டிருக்கின்றன.

8.- பூவுலகில் நெடுநாள் நிலைத்திருக்கிற பொருள் யாதொன்றை எவ்விடத்திலாகிலும் நீ காணக்கூடுமோ? நீ சிலசமயம் திருப்தியடைவதாய் நம்புகிறாய்; ஆனால் உன் நம்பிக்கை வீணாய்ப்போம். உன்முன் சகலத்தையும் நீ கண்டாலும், அது விண்காட்சியே தவிர வேறென்ன? பரலோகத்திலிருக்கிற சர்வேசுரனை நோக்கிப் பார்த்து உன் பாவங்களுக்காகவும் அசட்டைத் தனங்களுக்காகவும் அவரை மன்றாடு. விண் காரியங்களை வீணருக்கு விட்டுவிடு; நீயோ சர்வேசுரனுக்குக் கீழ்ப்படிவதைமட்டும் கவனி. உன் அறையின் கதவைச் சாத்திக்கொண்டு, உன் நேசரான யேசுவை உன்னண்டையில் அழைத்துக்கொள். உன் அறையில் அவருடன் தங்கியிரு. வேறெந்த விடத்திலும் அவ்வளவான சமாதானங் காணமாட்டாய். நீ வெளியே புறப் படாமலும் ஊர்ச் செய்திகளைக் காதிற் போட்டுக்கொள்ளாமலு மிருந்தால், உத்தம சமாதானத்தில் அதிக உறுதியாய் நிலைத்திருப்பாய். ஆனால் எப்போது உலக செய்திகளைக் கேட்க நீ பிரியங்கொள்ளுகிறாயோ அப்போது உன் இருதயம் கலக்கத்தினால் வருந்த நேரிடுவது தப்பாது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக