கிறீஸ்துமஸ் திருநாளுக்கான ஞான தியானப் பிரசங்கம்
அர்ச். அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார்
சேசுநாதர் சுவாமியுடைய பிறப்பானது, உலகளாவிய சந்தோஷத்தை, அகில உலகத்திற்கும் கொடுப்பதற்குக் காரணமாயிருந்தது. உலக இரட்சகரும் மெசியாவுமான அவரது வருகைக்காகவே அநேக வருடங்களாக உலக மக்கள் ஆவலுடன் பெருமூச்சுடன் ஏங்கிக் காத்திருந்தனர். அதன் காரணமாகவே, அவர் ஜனங்களால் ஆசிக்கப்பட்டவர் என்றும், நித்திய மலைகளின் ஆவலாக விளங்குபவர் என்றும், அழைக்கப்பட்டார்.
இதோ! நமக்காக உலகத்திற்கு இறங்கி வந்து, ஏற்கனவே, ஒரு சிறு குகையில் பிறந் திருக்கும் அவரை நோக்கிப்பாருங்கள் ! இதோ! எல்லா ஜனத்துக்கும் மகா சந்தோஷத்தை வருவிக்கும் சுப செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். அதேதெனில், இன்று தாவீதின் நகரத்தில் கிறீஸ்துநாதராகிய இரட்சகர் உங்களுக்காகப் பிறந்திருக்கிறார் (லூக் 2:10) என்று இடையர்களுக்கு அறிவித்த அதே மகா சந்தோஷத்தை, சம்மனசானவர் இந்த நாளில், நமக்கும் கூட அறிவிக்கின்றார் என்பதை, நாம் சிந்திப்போமாக!
ஓர் அரசனுக்கு முதல் பேறாக ஆண்குழந்தைப் பிறந்ததென்றால், அந்த நாட்டு மக்க ளிடையே எத்தகைய சந்தோஷக் கொண்டாட்டங்கள் நடைபெறும்! ஆனால், தேவகுமா ரன் பிறந்திருப்பதையும், அவர் தமது இரக்க உருக்கத்தினால், பரலோகத்திலிருந்து, பூலோகத் திற்கு இறங்கிவந்து நம்மைச் சந்தித்திருப்பதையும், நாம் பார்க்கும் போது, உலக அரச குமாரனுடைய பிறப்பிற்கான கொண்டாட்டங்களை விட மாபெரும் கூடுதலான அளவிற்கு எவ்வளவான அதிமிக திருவிழாக் கொண்டாட்டங்களை, நிச்சயமாக நாம் கொண்டாட வேண்டும்? அந்த இரக்க உருக்கத்தால், உன்னதத்தினின்று உதயமானவர், அந்தகாரத்திலும், மரண நிழலிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு ஒளிவீசவும், நமது பாதங்களை, சமாதானத் தின் பாதையில் நடத்தவும் நம்மைச் சந்தித்திருக்கிறார் (லூக் 1:78).
நாம் நித்தியக் கேட்டிற்குப் பாத்திரவாளர்களாகி, நம்மையே இழந்து போயிருந் தோம்; அந்த நித்திய கேட்டிலிருந்து நம்மை மீட்டு இரட்சிப்பதற்காக, இதோ, அவர் உல கிற்கு இறங்கி வந்திருக்கிறார். நமது இரட்சணியத்திற்காக, திவ்ய மீட்பர், மோட்சத்திலிருந்து, இறங்கி வந்தார். இதோ! தமது ஆடுகளின் உயிரைக் காப்பதற்காக, தமது உயிரையேக் கை யளிப்பதற்காக, உலகத்திற்கு இறங்கி வந்த திவ்ய மேய்ப்பர்! நானே நல்ல ஆயன்! நல்ல ஆயன் தன் ஆடுகளுக்காகத் தன் பிராணனைக் கொடுக்கிறான் (அரு 10:11). இதோ சர்வேசு ரனின் திவ்விய செம்மறியானவர்! சர்வேசுரனின் மக்களாவதற்குரிய தேவ கொலை நமக்குப் பெற்றுத் தருவதற்காகவும், பாவத்தின் அடிமைத்தனத்தினின்று நம்மை விடுவிப்பதற்காகவும், நமது ஜீவனாகவும், நமது ஒளியாகவும், மகா பரிசுத்த தேவ திரவிய அனுமானத்தில் நமது ஞான போஜனமாகவும் விளங்குவதற்காகவும், தம்மையே நமக்காக பலியான சர்வேசுரனின் திவ்ய செம்மறியானவர்!
இந்த காரணத்திற்காகவே, அதாவது, அவர் மனுவருவானார் என்பதையம், அவர் தம்மைத் தாமே நமக்கு உணவாகக் கையளித்தார் என்பதையும் நாம் புரிந்து கொள்ளும் படியாக, கிறீஸ்துநாதர், மிருகங்கள் உணவருந்தும் முன்னிட்டியில், தாம் தேவபாலனாகக் கிடத்தப்படுவதற்குத் திருவுளம் கொண்டார், என்று அர்ச். மாக்சிமுஸ் கூறுகின்றார். தமது சரீரம், மனிதர்களுக்கு நித்திய ஜீவியத்தை அளிப்பதற்கான ஞான போஜனமாகும் என்ப தைக் காண்பிப்பதற்காக, நமதாண்டவர், ஆடுமாடு மிருகங்களின் உணவை வைக்கும் முன்னிட்டியில், தமது சரீரமும் கிடத்தப்படுவதற்கு அனுமதித்தார்.
இதனுடன் கூட, மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில், ஒவ்வொரு நாளும், குருக்கள் உச்சரிக்கும் வசீகர வார்த்தைகளின் வழியாக, பீடத்தின் மீது இறங்கி வந்து பிறக் கின்றார். திவ்விய பலிபூசை நிறைவேற்றப்படும் பீடம், நமதாண்டவர் பிறந்த குகையாகத் திகழ்கிறது; அவருடைய திவ்ய சரீரத்தை நம் ஞான போஜனமாகப் பெற்றுக் கொள்ளும் படி, அங்குச் செல்கிறோம். சிலர், வயது முதிர்ந்த அர்ச். சிமியோனைப் போல, பரிசுத்த குழந் தையாகிய திவ்விய பாலனை ஆவலுடன், தமது கைகளில் ஏந்துவதற்குமிகுந்த ஆவல் கொள் வர். ஆனால், திவ்ய நன்மை உட்கொள்ளும் போது, பெத்லகேம் குகையின் முன்னிட்டியி லிருந்த அதே தேவ பாலனாகிய திவ்ய சேசு, நமது கரங்களில் இறங்கிவந்து தவழ்வது மட்டு மல்லாமல், நம் இருதயங்களிலும் எழுந்தருளி வருகின்றார் என்பதை, விசுவாசம் நமக்குக் கற்பிக்கின்றது. அவர் தம்மையே முழுமையாக நமக்குக் கையளிப்பதையே நோக்கமாகக் கொண்டு, பிறந்தார்.
ஒரு பாலன் நமக்குப் பிறந்தார். சுதன் நமக்கு அளிக்கப்பட்டார் (இசை 9:6). வழி தப் பிப்போன ஆட்டைப்போல நான் அலைந்து திரிந்தேன்; நான் உமது கற்பனையை மறவாத படியினாலே, உமது தாசனைத் தேடுவீராக. (சங். 118:176). ஓ! ஆண்டவரே! என் சுய இன்பங் களைத் தேடி, தாறுமாறாக ஜீவித்துப் பரிதாபத்திற்குரிய விதமாக என்னையே இழந்து போ னேன்; நானே அந்தக் காணாமல் போன ஆடு. ஆனால், தேவரீர், என் பாவப் பொறுத்தலுக் காக, உம்மையே சிலுவையின்மீது பலிப்பொருளாக ஒப்புக்கொடுப்பதற்காக, பரலோகத்தி லிருந்து, இறங்கி வந்த தேவ மேய்ப்பராகவும், திவ்விய செம்மறியாகவும் ஒருமித்து விளங் குகின்றீர்! இதோ சர்வேசுரனின் செம்மறிப்புருவையானவர்; இதோ உலகின் பாவங்களைப் போக்குகிறவர்.
ஆகையால், என் ஜீவியத்தைத் திருத்துவதற்கு ஆசிக்கிறேன். அதற்காக, ஓ! என்னை மீட்டு இரட்சிப்பதையே நோக்கமாகக் கொண்டு, உலகில் பிறந்த என் திவ்ய இரட்சகரே! தேவரீரிடத்தில், நான் ஏன் என்னை முழுவதுமாக ஒப்படைக்காமலிருக்கிறேன்? இதோ! என் ஆண்டவர் என் இரட்சகராம். அவரிடத்தில், முழு நம்பிக்கை வைப்பேன்; பயமுறேன் (இசை 12:2). ஆண்டவரே! தேவரீர் எங்கள் மட்டில் கொண்டிருக்கும் இரக்கத்திற்கு, இதை விட மேலாக வேறு எத்தகைய அத்தாட்சியை, எங்களுக்கு அளிக்கக்கூடும்? ஓ! என் அதி மிக சிநேகமுள்ள திவ்ய இரட்சகரே! உம்மிடம் நான் நம்பிக்கை வைக்கும்படி என்னை ஏவித் தூண்டுவதற்காக, தேவரீர் தாமே, உம்மையே எனக்காகக் கையளித்திருக்கின்றரே!
ஓ! என் திவ்ய குழந்தை சேசுவே! மகா சிநேகமுள்ள தேவபாலனே! உம்மை நான் நோகச் செய்தேன் என்பதைக் குறித்து, நான் எவ்வாறு அதிகமாக துக்கிக்கிறேன் ! பெத்ல கேம் குகையில், தேவரீர் அழுவதற்கு நான் காரணமாயிருந்தேன். ஆனால், தேவரீர் என்னைத் தேடி, உலகிற்கு இறங்கி வந்திருக்கிறீர் என்பதை, நான் அறிந்துகொண்டதால், இப்போது, உமது திவ்ய பாதத்தினண்டையில் நான் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறேன்; மேலும், இப்போது, இந்த குகையில், வைக்கோல் நிரம்பிய முன்னிட்டியில், மிக எளிமையாக, குளி ரினால் துன்புறும் குழந்தையாக, தேவரீர் காட்சியளித்த போதிலும், உம்மையே, என் மாட்சி மிக்க இராஜாதி இராஜன் என்றும், மகா மகிமையுள்ள உன்னதர் என்றும் ஏற்றுக்கொள்கி றேன்.
ஓ! திவ்விய பாலனே! உமது கனிவுமிக்க குழந்தையின் அழுகுரல் சத்தங்கள், தேவரீ ரை நான் நேசிக்க வேண்டும் என்பதற்காகவும், என் இருதயத்தை உமக்குத் தரவேண்டும் என்பதற்காகவும், என்னை அழைக்கும் அழுகைச்சத்தங்களாக இருக்கின்றன, என்பதை உணர் கிறேன். ஓ! என் நேச சேசுவே! என் திவ்ய இரட்சகரே! இதோ, என் இருதயத்தை, இன்று, உமது திருப் பாதத்தினண்டையில் உமக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன் !
ஓ! உமது பரிசுத்த தேவசிநேக நெருப்பை, மனித இருதயங்களில் பற்றி எரியும்படிச் செய்வதற்காகவே உலகிற்கு இறங்கி வந்த என் நேச ஆண்டவரே! என் இருதயத்தை மாற்றி யருளும்! அதில் தேவசிநேக நெருப்பைப் பற்றியெரியும்படிச் செய்தருளும்! ஓ! மகா தாழ்ச் சியும், சாந்தமும், கருணையும், சிநேகமும் கனிவும் நிறைந்தவரான தேவ பாலனே! பெத்ல கேம் குகையின் முன்னிட்டியிலிருந்து, தேவரீர் என்னைப் பார்த்து, உன் தேவனாகிய கர்த்த ரை, உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமத்தோடும், உன் முழு மனதோடும், சிநேகிப்பாயாக! (மத் 22:37) என்று கூறுவதை, நான் கேட்டதாக உணர்கிறேன். அப் போது, அதற்கு, பதில் மொழியாக, ஆ! என் திவ்ய இரட்சகரே! என் நேச சேசுவே! என் ஆண்டவரும், என் சர்வேசுரனுமான தேவரீரை நான் நேசியாவிடில், வேறு யாரை நான் நேசிப்பேன்? என்று, என் முழு மனதுடன் நான் கூறுவேன். தேவரீர், உம்மைத்தாமே, என் னுடையவர் என்று அழைக்கிறீர்! ஏனெனில், தேவரீர் உம்மையே முழுமையாக எனக்குக் கையளிக்கும்படியாகவே, பிறந்தீர்; அப்படியென்றால், என்னை முழுமையாக உம்முடை யவனாவதற்கு, நான் மறுக்க முடியுமா? இல்லை. என் நேச ஆண்டவரே! நான் என்னையே, முழுமையாக, உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்; என் முழுஇருதயத்துடன் நான் உம்மை நேசிக் கிறேன்.ஓ! உன்னத நன்மையானவரே! என் ஆத்துமத்தின் ஏக நேசமானவரே! நான் தேவரீ ரை நேசிக்கிறேன் ! நான் தேவரீரை நேசிக்கிறேன்! நான் தேவரீரை நேசிக்கி
ஓ! மகா கனிவும் இனிமையுமான தேவபாலனே! இன்று, என்னை, தேவரீர் ஏற்றுக் கொண்டு, இனி ஒருபோதும், உம்மை நேசியாமல் இந்த உலகில் ஜீவிப்பதற்கு என்னை அனு மதியாதேயும் என்று, உமது திவ்ய திருப்பாதம் முத்தி செய்து கெஞ்சி வேண்டிக் கேட்கி றேன்.
ஓ! மகா பரிசுத்த தேவமாதாவே! என் திவ்ய இராக்கினியே! முதல் முதலாக, தேவ ரீர், குழந்தையாகப் பிறந்து உமது திவ்ய குமாரனை, நோக்கிப் பார்த்த போதும், தேவ பால னுக்கு, முதல் முத்தத்தை அளித்த போதும், நீர் அனுபவித்த ஆறுதலைக் குறித்து, என்னை, அவருடைய ஊழியக்காரனாக ஏற்றுக்கொள்ளும்படியும், அவரது பரிசுத்த சிநேகம் என்ற உன்னத கொடையினால், என்னை, நித்திய காலத்திற்குமாக, அவருடன் பிணைத்தருளும்படி யும், எனக்காக, நம் நேச ஆண்டவரிடம் கெஞ்சிக் கேட்டு வேண்டிக் கொள்ள வேண்டும் என்று, தேவரீரிடம் இரந்து வேண்டி மன்றாடுகிறேன். -