வேதசாட்சி - புனிதப் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் பொது நிலையினர் புனித. தேவசகாயம் பிள்ளை!
அது 1752-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15 அல்லது 16-ம் நாளாக இருக்கும். வியாபாரத் துக்காக மங்கம்மாள் சாலையில் சென்று கொண்டிருந்த வணிகர்களின் வண்டி மாடுகள், ஆரல்வாய்மொழி காற்றாடி மலையை நெருங்கியபோது மிரண்டன. தொடர்ந்து செல்ல மறுத்து சாலை ஓரத்தின் புதர்களுக்கருகே நின்றுவிட்டன. திகிலடைந்த வியாபாரிகள் என்ன, ஏதென்று அறிய கீழே இறங்கி சோதிக்க, அங்கே சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவரின் உடலைக் கண்டனர். கழுத்தில் சிலுவைக் கயிறு தொங்கியதால் அவர் கிறீஸ்தவர் என்றும், மாடுகள் அந்த இடத்துக்கு வண்டியை இழுத்துச் சென்றதால், அவர் ஒரு புண்ணியவானாக இருக்க வேண்டும் என்றும் எண்ணி உடலைக் கவனமாக வண்டியில் ஏற்றியதும், மிரண்ட மாடுகள் அமைதியாகி தொடர்ந்து சென்றன. அவர் கொல்லப்பட்டு இரண்டு நாளாவது ஆகியிருக்க வேண்டும். ஆனால் எந்த விதமான துர்நாற்றமோ அழுகலோ இல்லாததைக் கண்ட வியாபாரிகள் அதிசயித்துப் போனார்கள். நேரே கோட்டாறு ஆலயத்திற்கு சென்று பங்குத் தந்தை பன்ஸீகா சுவாமியிடம் ஒப்படைத்தனர். அவர் உடலை கோவிலினுள் நல்லடக்கம் செய்தார். அந்தக் கல்லறை கோட்டாறு, அர்ச். சவேரியார் ஆலயத்தினுள் உள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட அந்த நபர் தேவசகாயம் பிள்ளை! ஆம், அன்று காற்றாடி மலையில் சுட்டுக் கொல்லப்பட்ட தேவசகாயம் பிள்ளை இன்று (02.12.2012 ஞாயிறு) அகில திருச்சபையயங்கும் வேதசாட்சி முத்திப்பேறு பெற்ற தேவசகாயம் பிள்ளை என்று பிரகடனப் படுத்தப்பட்டு, போற்றப்படுகிறார்!
நீதிமான் நீலகண்ட பிள்ளை.
சேரநாட்டின் திருவாங்கூர் திருவிதாங்கோடு தலைநகரான பத்மநாபபுரத்திற்கு அருகில் (இன்று கன்னியாகுமரி மாவட்டம்) உள்ள நட்டாலம் என்ற ஊரில் ஆதிகேசவப் பெருமாள் கோவில் பூசாரி வாசுதேவன் நம்பூதிரிக்கும், தேவகியம்மாளுக்கும் 1712-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் நாளன்று நீலகண்டன் பிறந்தார். கல்வி யிலும் நற்குணத்திலும் சிறந்து விளங்கியவர் அந்நாட்டு அரசன் மார்த்தாண்ட வர்மனின் இராணுவத்தில் சேர்ந்து, பல்வேறு பதவி உயர்வு களைப் பெற்று அரசனின் நம்பிக்கைக்குரிய அதி காரியாக உயர்ந்தார். தேவபக்தி கொண்ட அவர் பார்கவி அம்மாளைத் திருமணம் செய்தார்.
அக்காலத்தில் டச்சுக்காரர்களும், ஆங்கிலேயரும் சேர நாட்டின் பகுதிகளைக் கைப்பற்றுவதில் போட்டியிட்டனர். அரசன் மார்த்தாண் டன் ஆங்கிலேயரைச் சார்ந்து டச்சுக்காரர்களோடு 1741-ல் நடந்து குளச்சல் துறைமுகத் தாக்குதலில் வென்று, அவர்களின் தளபதி எஸ் தாக்கியுஸ் பெனடிக்ட் டிலனாய் உள்ளிட்ட 23 பேரைச் சிறைப் பிடித்தான். டிலனாயின் திறமைகளைக் கண்ட அரசன் அவருக்கு விடுதலை வழங்கி, தமது படையினருக்கு ஐரோப்பிய போர்ப் பயிற்சிகளை வழங்கும்படி அமர்த்திக் கொண்டான். அச்சமயத்தில் உதயகிரி கோட்டையைக் கட்டும் பணியை மேற்பார்வையிடும் நீலகண்ட பிள்ளையும், டிலனாயும் நண்பர் களாயினர். நற்குணம் கொண்ட பிள்ளைக்கு டிலனாய் மெய்யங் கடவுள் சேசு கிறீஸ்து வையும் அவரது வேதத்தையும் அறிமுகம் செய்து போதித்தார். தேவ அருளால் விசுவாச ஒளி பெற்றுக் கொண்ட நீலகண்டப் பிள்ளை மனம் மாறினார்.
தேவசகாயமான நீலகண்டன்!
பத்மநாபபுரத்திலிருந்து 33 கி.மீ. தொலைவில் இருக்கும் வடக்கன்குளத் திற்குக் கால்நடையாகப் பயணம் செய்த நீலகண்டன் அதன் பங்குத் தந்தை சங். புத்தாரி சுவாமியால் 1745 மே 14-ம் நாளன்று "லாசர்" என்ற பெயரில் ஞானஸ்நானம் பெற்றார். லாசர் என்ற சொல்லுக்கு "கடவுளின் உதவி" என்று பொருள். அதனைத் தமிழ் மொழியில் தேவசகாயம் என்று மாற்றி தம்மை அழைத்துக் கொண்டார். கிறீஸ்தவ சத்தியங்களில் உறுதியடைந்த தேவசகாயம் பிள்ளை கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தார். விரைவில் அவரது மனைவியும் "திரேசா‡ஞானப்பூ" என்ற பெயரில் ஞானஸ்நானம் பெற எதிர்ப்புகள் கடுமையாயின. அரசனிடம் அவதூறுகள் கூறப்பட, அரசனும் தேவசகாயம் பிள்ளையை வரவழைத்து விசாரித்து, "கிறீஸ்தவ மதத்தை விட்டுவிடும்படி" கட்டளையிட்டான். ஆனால் அதனை நயமாகவும், உறுதியாகவும் மறுத்து விட்ட தேவசகாயம் பிள்ளையைச் சிறையில் அடைத்தான். மனம் மாறும் வரை சித்திரவதை செய்ய உத்தரவிட்டான். 3 ஆண்டுகள் இந்தக் கலாபனையைப் பொறுமையோடு அனுபவித்த தேவசகாயம் பிள்ளை விசுவாச உறுதியைக் காண்பித்தார்.
வேதசாட்சியான தேவசகாயம்!
பல்வேறு சிற்றூர்கள் வழியாக கல்லிலும், முள்ளிலும், குளிரிலும், வெயிலிலும் கைவிலங்கோடு இழுத்து வரப்பட்ட தேவசகாயம் பிள்ளை ஆரல்வாய்மொழிக்கு அருகேயுள்ள காற்றாடி மலைக் காட்டில் சுட்டுக் கொல்லப்படும்படியான தீர்ப்பைப் பெற்றார். இதன்படி 1752 ஜனவரி, 14-ஆம் நாளன்று வேதசாட்சியமடைந்தார். மரிக்கும்போது, "சேசுவே, மரியாயே!" என்று உச்சரித்து தம் உயிரைக் கையளித்தார். கொலைஞர்கள் அவருடைய உடலை முட்புதர் களில் எறிந்துவிட்டுச் சென்றனர்.
முத். தேவசகாயம் பிள்ளையே, நமது தாய்நாடாம் இந்தியா அஞ்ஞான இருள் நீங்கி, சத்திய ஒளி பெற வேண்டிக் கொள்ளும்!
(ஆதாரம்: "இலக்கியங்கள் போற்றும் தியாகச் செம்மல் தேவசகாயம் பிள்ளை.")
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக