Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 24 மே, 2024

அர்ச். ஜெம்மா கால்கானி St. Gemma

அர்ச். ஜெம்மா கால்கானி (1878 - 1903)
"சேசு எந்த வழியை எனக்குச் சித்தம் செய்கிறாரோ, அதில் நான் மகிழ்ச்சி அடைவேன்.  எனது வாழ்வைப் பரித்தியாகம் செய்ய விரும்புகிறார் என்றால், உடனே அதனை அவருக்குக் கொடுப்பேன்.  வேறு எதையாவது விரும்புகிறாரோ, அதற்கும் நான் தயாராகவே இருக்கிறேன்.  எனக்கு ஒன்று மட்டுமே போதும்: அது எனது கணக்கற்ற பாவங்களுக்காகவும், கூடுமானால் அகில உலகினுடைய பாவங்களுக்கும் கூட பரிகாரம் செய்ய, நான் சேசுவினுடைய பலிப் பொருளாகவே விரும்புகிறேன்..." - அர்ச். ஜெம்மா கால்கானி.

இளவயதிலேயே தேவ ஐக்கியம்!

அர்ச். ஜெம்மா கால்கானி 1878 மார்ச் 12-ம் நாளன்று இத்தாலியில், லூக்கா நகருக்கு அருகேயுள்ள கமிலியானோ என்ற கிராமத்தில் பிறந்தாள். தந்தை என்ரிக்கோ கால்கானி ஒரு மருந்து வியாபாரி. தாய் அவ்ரேலியா.  பிறந்த எட்டுப் பிள்ளைகளில் ஜெம்மா முதல் பெண் குழந்தையாகப் பிறந்தாள்.  அவளது ஞானஸ்நானத்தின்போது, "இரத்தினம்" என்று பொருள் கொள்ளும் ஜெம்மா என்ற பெயர் சூட்டப்பட்டாள்.

குடும்பம் லூக்கா நகருக்கு இடம் பெயர்ந்தது.  அவளது தாய் சிறு வயதிலேயே ஜெம்மாவுக்கு தேவ விசுவாசத்தையும், சிநேகத் தையும் ஊட்டி வளர்த்தாள். லூக்கா தேவாலயத் தில் பழங்காலத்தைய புதுமையான பாடுபட்ட சிலுவை வணங்கப்பட்டு வந்தது. குழந்தை ஜெம் மாவை அவளது தாய் அடிக்கடி அச்சுரூபத்திற்கு முன்பாக முழந்தாளிட்டு ஜெபிக்கும்படி அழைத்துச் செல்வாள். நமதாண்டவரின் பாடுகளை உருக்கமாக அவளுக்கு எடுத்துக் கூறி, "பார்த்தாயா, ஜெம்மா!  நம் ஆண்டவர் உன் மீது கொண்டுள்ள அன்பை! பார் ஜெம்மா!  நம் சேசு ஆண்டவர் நமக்காக உயிர் விட்டதை" என்று பச்சாத்தாபம் காட்டி, குழந்தையின் பிஞ்சு உள் ளத்தில் சேசுவின் மீதான அன்பை ஊட்டினாள். இதனால் சிறு வயதிலேயே தனிமையில் ஜெபிப் பதில் ஜெம்மா ஆர்வம் கொண்டாள்.

1887 ஜூன் 17-ம் நாள் ஜெம்மா புது நன்மை பெற்றாள். அதுபற்றி பின்னாளில் குறிப்பிடும்போது "... சேசு எனது ஆன்மாவின் ஆழத்தில் தம்மையே பதித்தார்.  அந்தக் கணத்திலேயே உலகத்தைப் போலல்லாமல் மோட்சம் எவ்வளவு மகிழ்ச்சி நிறைந்தது என்பதை உணர்ந்தேன்.  என் கடவுளோடு என்றென்றும் ஐக்கியம் கொண்டிருக்க வேண்டுமென்ற ஆவலால் ஆட்கொள்ளப்பட்டேன்" என்று எழுதுகிறாள்.

சிலுவையில் அறையுண்டிருக்கும் சேசுவுக்காக மட்டுமே வாழ்வதாக அவள் உறுதி செய்து கொண்டாள்.

பலியாகும் ஆன்மாவாகத் தேர்வு

1899-ம் ஆண்டின் பரிசுத்த வாரம் ஜெம்மாவைப் பொறுத்தவரை மிகவும் மறக்க முடியாததாக அமைந்தது.  ஆம்! மிகப் பெரிய வரப்பிரசாதம் தனக்குச் சர்வேசுரனால் அருளப் படவிருப்பதை உணர்ந்துகொண்ட ஜெம்மா, அதற்காகத் தன்னையே தயாரித்து வந்தாள்.  ஆண்டவருடைய திருப்பாடுகளின்மீது தனி பக்தியைக் காட்ட விரும்பி, வியாழனன்று திருமணி ஆராதனை செய்ய ஆன்ம குருவிடம் உத்தரவு பெற்றாள். இதுபற்றி அவள், "அது பெரிய வியாழக்கிழமை. திடீரென்று என் பாவங்களுக்காக என்னிடம் உள்ளரங்கமான துயரம் எழுந்தது. இதுமாதிரி இதுவரை வந்ததில்லை.  என் வேதனையில் நான் மரித்து விடுவது போலத் தோன்றியது.  எனது அறிவு, என் பாவங்கள் கடவுளை எந்த அளவுக்கு வேதனைப்படுத்து கின்றன என்பதை ஆழ்ந்த விதமாய்ப் புரிந்து கொண்டது!... அப்போது நமதாண்டவர் உடல் முழுவதும் இரத்தம் தோய்ந்த நிலையில் நிற்கக் கண்டேன்.  அவர், "பார் மகளே, இந்தக் காயங்களெல்லாம் உன்னுடைய பாவங்களால்தான் உண்டாயின.  ஆனால் நீ பட்ட துயரத்தால் - வேதனையால் இந்தக் காயங்கள் எல்லாம் மறைந்து விட்டன என்பதை நினைத்து ஆறுதல் அடைவாயாக. இனி பாவம் செய்யாதே.  நான் உன் மீது அன்பு செலுத்துவது போல நீயும் என் மீது அன்பு செலுத்துவாயாக" என்று திரும்பத் திரும்பக் கூறினார்" என்று குறிப்பிடுகிறாள். இங்கு ஜெம்மாவை பலியாகும் ஆன்மாவாக சேசு கண்டுகொள்கிறார்.  எப்படியெனில் "என் காயங்களுக்கெல்லாம் உன் பாவங்களே காரணம்" என்ற ஆண்டவரின் வார்த்தைகள், அவரை அதிகமாக நேசிக்கும்படி ஜெம்மாவைத் தூண்டின. அவருக்கு ஆறுதல் தரவும், துன்புறவும் அவள் ஆர்வம் கொண்டாள். அதிகமாக தவ முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்ற ஆவல் கிளர்ந்தெழ, கிணற்றுப் பக்கத்தில் கிடந்த முரட்டுத் தாம்புக் கயிற்றை எடுத்து தன் உடலைச் சுற்றிக் கட்டிக் கொண்டு, அது ஏற்படுத்திய வேதனையை சேசுவின் அன்புக்காக ஒப்புக் கொடுத்தாள். இருப்பினும், தான் கன்னியர் மடம் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கம் அவள் மனதில் எழ, அந்தத் துன்பத்தையும் ஒப்புக்கொடுத்தாள்.  அப்போது சேசு அவளை நோக்கி, "அஞ்சாதே! நான் உனக்காகக் கல்வாரியில் காத்திருப்பேன்" என்று கூறினார்.

ஐந்து காய வரம்!

பரிசுத்த வாரம் கடந்து ஜூன் மாதம் சேசுவின் திரு இருதயத் திருநாள். முந்தின நாள் நமதாண்டவர் "கல்வாரியில் காத்திருப்பேன்" என்று கூறியபடி, தமது பாடுகளில் பங்கடைய தமது சின்ன மகள் ஜெம்மாவுக்கு பாக்கியம் அளித்தார்.

அர்ச். ஸித்தாவின் சகோதரி நடத்தி வந்த பள்ளியில் ஜெம்மா சேர்க்கப்பட்டாள். படிப்பில் சிறந்த அவள் எப்போதும் அமைதியாக, அடக்கமாக காணப்படுவாள்.  புன்னகை தவழும் அவளை கன்னியர்களும், ஆசிரியர்களும் பெரிதும் விரும்பினார்.

ஒரு முறை சபைத் தலைவி, ஜெம்மா இருந்த வகுப்பறையில் கடைசி தேவத் திரவிய அனுமானத்தைப் பெற மறுக்கும், சாகக் கிடந்த ஒரு மனிதர் மனந்திரும்ப ஜெபிக்குமாறு கேட்டாள்.  உடனே அனைவரும் அந்தக் கருத்துக்காக ஜெபித்தனர். ஜெபம் முடிந்து எழுந்த ஜெம்மா உடனே ஆசிரியையிடம் சென்று, அவள் காதுகளில், "அந்த வேண்டுதல் கிடைத்து விட்டது" என்று கூறினாள்!  அன்று மாலையே அவர் மனந்திரும்பிய தகவல் கிடைத்தது.

ஏழையான ஜெம்மா!

புத்திசாலி மாணவியாக ஜெம்மா திகழ்ந்தாலும், உடல் சுகவீனமடைந்ததால் படிப்பைப் பாதியில் விட நேர்ந்தது.  தனது வாழ்நாளில் அவள் பலவிதமான சுகவீனத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருந்தாள்.  இதற்கிடையில் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்தாததால் ஜெம்மாவின் தந்தை நொடித்துப் போனார்.  குடும்பம் வறுமையில் விழ, 1897-ல் அவர் மரணமடைந்தார்.  வீட்டில் வறுமை.  19 வயதே நிரம்பிய ஜெம்மா, தனது சகோதர சகோதரிகளைப் பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்க வேண்டிய நிலை வந்தது.  தனது வறுமையை மிகவும் இயல்பாக ஏற்றுக் கொண்ட ஜெம்மா, தன்னை "ஏழைப் பெண்" என்றே அழைத்துக் கொள்வாள்.  நெருங்கிய உறவினர்கள் உதவினர். திருமண ஏற்பாட்டை மறுத்து, தன்னை முழுவதும் நமதாண்டவருக்கு அர்ப்பணித்து, அமைதியில், மறைந்த வாழ்வு வாழ ஜெம்மா விரும்பினாள்.  இதற்கிடையில் இனந்தெரியாத நோயால் பீடிக்கப்பட்டு, உடல் செயலிழந்து போனாள். தனது நோயினால் ஏற்பட்ட துன்பத்தை ஆண்டவரின் அன்புக்காக ஏற்றுக் கொண்ட ஜெம்மா பாடுகளின் சபைத் துறவி, அர்ச். வியாகுல மாதாவின் காபிரியேலின் பரிந்துரையால் அற்புதமாகக் குணமடைந்தாள்.  பாடுகளின் சபையில் கன்னியராக உட்பட ஆசித்த ஜெம்மாவுக்கு ஏமாற்றமே கிடைத்தது. தினமும் ஆலயத்திற்குச் சென்று, வீட்டில் வேலை நேரம் போக ஓய்வு நேரத்தில் ஜெபத் தியானத்தில் ஈடுபடுவாள்.  ஆன்ம குருவின் அனுமதியோடு தன்னை முழுவதும் சேசுவுக்கு அர்ப்பணித்து, கற்பு என்ற வார்த்தைப்பாடு கொடுத்தாள்.

இதற்கிடையில் அவளது குடும்பத்தில் நிலவி வந்த சூழ்நிலை ஜெம்மாவின் ஞான வாழ்வுக்கு உகந்ததாக இல்லாததை உணர்ந்த ஆன்ம குரு, பக்தியுள்ள ஜியான்னீனி என்ற பெண்மணியின் இல்லத்தில் வாழ அனுமதித்தார்.  அவளும் ஜெம்மாவை தனது மகளாகத் தத்தெடுத்துக் கொண்டாள். அங்கே வீட்டு வேலைகளில் உதவி செய்த ஜெம்மா, தனிமையில் ஜெபத் தியானங்களில் ஈடுபட முடிந்தது. அங்கே அந்த வீட்டில் இருந்த போதுதான், அநேக அசாதாரணமான வரங்களையும், பரவச நிலைகளையும் ஜெம்மா பெற்றுக் கொண்டாள்.

பலி நிறைவேறியது!

எப்படியாவது கன்னியர் மடத்தில் சேர வேண்டும், குறிப்பாக திருப்பாடுகளின் சபையில் உட்பட வேண்டும் என்ற ஜெம்மாவின் ஆவல் கடைசி வரையிலும் நிறைவேறாமல் போய்விட்டது.  அவளது வாழ்வின் கடைசி மூன்று வருடங்கள் அவளது பலியாகும் ஆன்ம வாழ்வின் உச்சக்கட்டம் போன்றது எனலாம்.  இதுபற்றி அவள் எழுதுகையில், "...பத்து நாட்களுக்கு முன் திவ்விய நற்கருணை உட் கொண்டு ஆண்டவரின் மிக நெருங்கிய ஐக்கியத்தில் இருந்த போது, அவர் "மகளே, என் மீது உனக்கு உண்மையாகவே அன்பு உண்டா!  அதிக அன்பு உண்டா!!" என்று கேட்டார்.  என் இதயத் துடிப்பே அந்தக் கேள்விக்குப் பதிலாக அமைந்தது.  பின்னர் சேசு உலகம் எவ்வளவு பாவத்தால் நிறைந்துள்ளது, எப்பக்கமும் நன்றிகெட்டதனமே!  பாவம் செய்பவர்கள் பிடிவாதமாகத் தங்கள் பாவ வாழ்க்கையிலேயே அமிழ்ந்து கிடக்கின்றனர்!... என் குருக்களைப் பற்றி என்ன சொல்வேன்?... நான் படைத்த மனிதர்களிடமிருந்து நான் பெறுவதல்லாம் நன்றியின்மையே!" என்று உலகின் அக்கிரமங்களைச் சொல்லிக் கொண்டே போனார்... "எனக்கு ஆறுதல் தரக்கூடிய ஆன்மாக்களைத் தேடுகிறேன்.  என் தந்தையின் கோபத்தைத் தணிக்க தங்களையே பலியாக்கும் ஆன்மாக்கள் தேவைப்படுகிறார்கள். இந்த விஷயத்தைப் பற்றி - எனது விருப்பத்தைப் பற்றி பாப்பானவரிடம் கூறுமாறு உன் ஆன்ம குருவுக்கு உடனே கடிதம் எழுது.  கொடியதொரு தண்டனை உலகின் மேல் விழப் போகிறது என்று எழுதச் சொல்.  பலி ஆன்மாக்கள் தேவை என்றும் சொல்..." என்றார் சேசு" என்று குறிப்பிடுகிறாள்.  இதன் மூலம் பலியாகும் ஆன்மாக்கள் தேவைப் படுகிறார்கள் என்ற உண்மை அவருக்கு வெளிப் படுத்தப்பட்டது.

ஜெம்மாவின் இறுதி நாட்கள் நெருங்குகின்றன.  

அவளைப் பீடித்திருந்த நோயினால் ஏற்பட்ட வேதனைகள், சாத்தானின் தொல்லைகள், பிறரால் கிடைத்த ஏளனப் பேச்சுகள், கடின உபவாசங்கள் முதலியவைகள் அவளைப் பாதித்தாலும், நற்சுகம் உள்ளவளாகவே காணப் பட்டாள்.

அன்று நடந்தவற்றை எழுதுகையில் ஜெம்மா, "உலகின் பாவங்களுக்காக மிகுந்த வருத்தமடைந்தேன்.  அதே நேரத்தில் கடவு ளுக்கு விரோதமாகச் செய்யப்பட்ட பாவங்கள் அனைத்தும் நினைவில் வர, அது மீட்பரை எந்த அளவுக்கு துன்ப வேதனைக்குட்படுத்தியது என்பதை உணர்ந்தேன்.  அவற்றை வெறுத் ததோடு, பரிகாரமாக எந்த வேதனையையும் தாங்கிக் கொள்ளத் தூண்டப்பட்டேன்.

இந்த உணர்வுகளுக்குப் பின் நான் பரவசமானேன்.  தேவ அன்னையையும், எனது காவல் தூதரையும் கண்டேன். தேவதாய் தனது மேலாடையை விரித்து, அதனுள் என்னை அணைத்துக் கொண்டார்கள். அந்த நொடியில் சேசு தம் காயங்களோடு காட்சியளித்தார்.  இப் போது அக்காயங்கள் இரத்தம் சிந்துபவையாக அல்லாமல் நெருப்புச் சுவாலையை வீசுவதாகக் கண்டேன். எதிர்பாராத விதமாய் அந்தச் சுவாலைகள் என் கைகளையும், பாதங்களையும், நெஞ்சையும் தொட்டன.  உயிரே போவது போல் இருந்தது.  மரணம் அடைந்தது போல தரையில் சாய்ந்திருப்பேன்.  ஆனால் அன்புள்ள மோட்ச அன்னை என்னைத் தாங்கிக் கொண் டார்கள். இவையயல்லாம் நிகழ்ந்த போது, நான் தேவதாயின் போர்வையின் அரவணைப் பில் இருந்தேன்.  இந்த நிலை சில மணி நேரம் நீடித்தது.  என் வானக அன்னை என் நெற்றியில் முத்தமிட்டார்கள்.  அதன்பின் எல்லாம் மறைந்தது. தரையில் நான் முழங்காலிட்டவளாக இருந்தேன்.  வலி ஏற்பட்ட பகுதிகளிலிருந்து இரத்தம் வழிந்தோடுவதைப் பார்த்தேன்.  அவற்றை இயன்ற வரை துணியால் முடி மறைத்தபின், என் காவல் தூதரின் துணையோடு படுக்கைக்குச் சென்றேன்... மறுநாள் திரு இருதயத் திருநாள், வெள்ளிக்கிழமை பிற் பகல் 3 மணி வரை இந்த வலி நீடித்தது" என்று குறிப்பிடுகிறாள்.

ஜெம்மாவின் இந்தக் காயங்கள் ஒவ்வொரு வியாழனன்றும் வழக்கமான திருமணி ஆராதனையின்போது வெளிப்பட்டு, மறுநாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் மூன்று மணி வரை அப்படியே இருக்கும்.  ஞாயிறு வருவதற்குள் காயங்கள் மறைந்து அவை இருந்த இடத்தில் சிறு தழும்புகள் மட்டுமே காணப்படும்.

அவளது வாழ்வின் இறுதிப் பகுதியில் ஜெம்மாவின் ஆன்ம குருவின் ஆலோசனைப்படி காயங்கள் வெளிப்படையாகக் காணப்படாமலிருக்க அவள் ஆண்டவரிடம் மன்றாடிப் பெற்றுக் கொண்டாள்.  ஆனால் காயங்களால் ஏற்படும் வலியும், வேதனைகளும் அவளது மரணம் வரையில் நீடித்து அவளை அலைக்கழித்தன.  இரவெல்லாம் தூக்கமின்றி துன்புறம் நேரத்தில் மனத்தாலும் அன்பாலும் தான் கல்வாரியில் இருப்பதாக நினைத்து ஜெபிப்பாள்.  ஒரு முறை அவள் படும் வேதனையைக் கண்ட சிலர் பரிதாப்பட்டு, "பாவம், என்ன செய்வாள், அவளால் தாங்க முடியவில்லை" என்று கூறினர்.  உடனே ஜெம்மா, "இல்லை, இல்லை, இன்னும் சிறிது தாங்க முடியும்.  ஆண்டவரின் மீதுள்ள அன்பின் பொருட்டு நிச்சயமாக முடியும்" என்றாள்.

வேறொரு சமயம், ஜெம்மாவைப் பார்க்க வந்த ஒருவர் அவளிடம், "ஜெம்மா, உடனே இறந்து ஆண்டவரிடம் போவது, அல்லது அவரது மகிமைக்காக இங்கேயே இருந்து இன்னும் வேதனைப்படுவது ஆகியவை உன் கையிலிருந்தால், நீ எதைத் தேர்ந்து கொள்வாய்?" என்று கேட்டார். அதற்கு அவள் உடனே, "அவருடைய மகிமைக்காக வேதனைப்படுவதே மேல்" என்று பதிலளித்தாள்.

1903-ம் ஆண்டு பரிசுத்த வாரம் ஜெம்மாவிற்கு துன்ப நாட்களாகவே அமைந்தது. பெரிய சனிக்கிழமை பிற்பகலில் சுவரில் இருந்த மாதா சுரூபத்தை ஏறெடுத்துப் பார்த்து, "அம்மா" என்று ஆசையோடு அழைத்து, "என் ஆன்மாவை உம்மிடம் ஒப்படைக்கிறேன். என்னிடம் இரக்கம் காட்டுமாறு மகனிடம் சொல்லும்" என்று வேண்டியவள், "சேசுவே, என் ஆன்மாவை உம் கையில் ஒப்படைக்கிறேன்" என்று கூறினாள். அவையே அவளது கடைசி வார்த்தைகள்.  முகத்தில் ஒரு தெய்விகப் புன்சிரிப்பு தவழ, பாக்கியமாக மரணமடைந்தாள்.  அப்போது பிற்பகல் ஒரு மணி, அன்று 1903, ஏப்ரல் 11-ம் தேதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக