Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 26 மே, 2024

மகா பரிசுத்த தமதிரித்துவ திருநாள்

⭐இன்றைய திருநாள்⭐
 
🇻🇦மே 2️⃣6️⃣ம் தேதி


✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
✨ மகா பரிசுத்த தமதிரித்துவ சர்வேசுரனின் திருநாள்     ✨
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

🌹இன்று நம் தாய் திருச்சபை மகா பரிசுத்த தமதிரித்துவ திருநாளை வெகு ஆடம்பரமாகக்  கொண்டாடுகிறது. இந்த திருநாள், மகா பரிசுத்த தமதிரித்துவத்தின் பேரில், கிறீஸ்துவர்கள் கொண்டிருக்கிற  மகா பெரிய அடிப்படை விசுவாச சத்தியங்களுக்கு தோத்திர மகிமையாக, திவ்ய இஸ்பிரீத்து சாந்துவானவரின் திருநாள் அனுசரிக்கப்படுகிற ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.
மகா பரிசுத்த தமதிரித்துவ சர்வேசுரன்- மூன்று தேவ ஆட்களாக ஒரே சுபாவத்துடன் விளங்குகின்றார்! பிதா, சுதன், இஸ்பிரீத்து சாந்து என்கிற மூன்று தேவ ஆட்களாக, மகா பரிசுத்த தமதிரித்துவ சர்வேசுரன் விளங்குகின்றார்; மூவரும் தேவ ஆட்களாகவும், சமமான தேவ இலட்சணங்களுடையவர்களாகவும், அதே சமயம், ஒரே சர்வேசுரனாகவும் இருக்கின்றனர்; அவர்களுடைய தேவ சுபாவத்தில் வித்தியாசமோ, பாகுபாடோ கிடையாது! இம் மூன்று தேவ ஆட்களும் பிரிக்கப்படக் கூடாதவர்களாக இருக்கின்றனர்! மகா பரிசுத்த தமதிரித்துவம் என்பது, மகா பெரிய பரம இரகசியமாகத் திகழ்கிறது! இம்மகா உன்னத வேத சத்தியத்தை, ஒரு மாபெரும் பரம இரகசியமாக, திருச்சபை நமக்குப் போதிக்கிறது! ஆனால்,  அதே சமயம், பரம இரகசியமான மகா பரிசுத்த தமதிரித்துவம் என்கிற நம் சத்திய வேதத்தின் முதல் வேத சத்தியமானது, நம் மனித அறிவிற்கு எட்டாத மிக உயரத்திலுள்ள ஒரு நிஜமாகத் திகழ்கிறது! என்பதையும் நமக்கு திருச்சபைக் கற்பிக்கின்றது. 

🛑 
மகா பரிசுத்த தம திரித்துவம் என்கிற பரம இரகசியமான வேத சத்தியத்தை நம்மால் முழுமையாக ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது! மகா பரிசுத்த தமதிரித்துவத்தைப் பற்றி சில நிமிட நேரங்களைக் கடந்து நீண்ட நேரமாக  பேசுவாயாகில்,  நீ ஏதாவது ஒரு பதிதத் தப்பறையினுள் விழ நேரிடும்! ஏனெனில், அப்போது, நீ சர்வேசுரனை மிக ஆழமாக ஆராய முற்படுவாய்! என்று பொதுவான ஞானம் உனக்குக் கற்பிக்கும்!
🛑
பழைய ஏற்பாட்டில், விவரிக்க முடியாத, நித்திய காலத்திற்குமான உன்னத உறவுகளுடன் திகழ்கிற மகா பரிசுத்த தமதிரித்துவ சர்வேசுரனின் மூன்று தேவ ஆட்களைப் பற்றி வாசிக்கிறோம். இந்த வேத சத்தியத்தைப் பற்றிப் பேசுகிற  பழைய ஏற்பாட்டின் பகுதிகள், யூதர்களால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாமல் போனது, என்பது தான், ஒரே வித்தியாசமான காரியமாக இருக்கிறது!
ஆதியாகமத்தில், “நம்முடைய சாயலாகவும், பாவனையாகவும், மனிதனைப் படைப்போமாக!” (ஆதி 1:26) என்று  சர்வேசுரன் தம்மைப் பற்றி பன்மையில் பேசுகிறதை, நாம் காணலாம். பரிசுத்த வேதாகமத்தின் இவ்வாக்கியத்தை யூதர்கள் தலை வணங்கி  ஏற்று, விசுவசிப்பார்கள்! ஆனால், இப்பரிசுத்த வேதாகமப் பகுதியை, அவர்கள் புரிந்து கொள்கிறதில்லை! இதற்கு மாறாக, கத்தோலிக்கர்கள், சர்வேசுரனுடைய முழுமையான வெளிப்படுத்துதலினால் அறிவூட்டப்பட்டவர்களாக, சிங்கார தோட்டமான ஈடன் தோட்டத்தில், ஆதாமை சிருஷ்டிக்கிற அலுவலில், பிதா, சுதன், இஸ்பிரீத்து சாந்து என்கிற மூன்று தேவ ஆட்களும் சேர்ந்து செயல்படுகிறதை, இவ்வேதாகமப் பதத்தினுடைய குறிப்பில், தெளிவாகக் காண்கின்றனர்!

பழைய ஏற்பாட்டில், இசையாஸ் தீர்க்கதரிசி, சர்வேசுரனுடைய பத்திராசனத்தைச் சுற்றிலும், பக்திசுவாலகர்களான சம்மனசுகள் நின்றபடி, “சேனைகளின் தேவனான ஆண்டவர்,பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!” என்று பாடுகிறதைக் கேட்டதாக இசையாஸ் ஆகமத்தில், வாசிக்கிறோம்; ஆனால், ஏன் “பரிசுத்தர்!” (இசை 6:3) என்று மும்முறை சர்வேசுரனை சம்மனசுகள் ஸ்துதித்து ஆராதிக்கின்றனர்? என்பதற்கான காரணத்தை, மனிதர்களுக்கு யார் விளக்கிக் கூறுவார்?

காலம் நிறைவுறும் வரை உலகம் காத்திருக்க வேண்டியிருந்தது!  அதன் பின், சர்வேசுரன், தமது ஏக குமாரனை உலகத்திற்கு அனுப்புவார்; சர்வேசுரனுடைய இம்மகா இரக்கமுள்ள நோக்கத்திற்கான இரட்சணிய அலுவல் நிறைவேற்றப்பட்டது! வார்த்தையானவர் மாம்சமாகி, இஷ்டப்பிரசாதமும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசமாயிருந்தார். அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவின் ஏக சுதனுக்குரிய மகிமைக்கு நிகராயிருந்தது. (அரு 1:14). அவருடைய மகிமையைக் காண்பதன் மூலமாக, அதாவது, பிதாவாகிய சர்வேசுரனுடைய ஏக குமாரனுடைய மகிமையைக் காண்கிறதன் மூலம்,சர்வேசுரனில், பிதாவும், சுதனும் இருக்கின்றனர், என்பதை கண்டறிந்து கொள்கிறோம்.

பிதாவினால் உலகத்திற்கு அனுப்பப்பட்ட சுதன், தம்முடன் இனி வரும் நித்திய காலத்திற்குமாக இணைத்துக்கொண்ட மனித சுபாவத்துடன், பரலோகத்திற்கு ஆரோகணமானார்! மேலும், இதோ! பிதாவும், சுதனும், அவர்கள் இருவரிடமிருந்தும் புறப்படுகிறவரான திவ்ய இஸ்பிரீத்து சாந்துவானவரை உலகத்திற்கு அனுப்புகின்றனர்; இது, ஒரு புதிய கொடையாக இருக்கிறது! இவ்வுன்னத தேவகொடையான திவ்ய இஸ்பிரீத்து சாந்துவானவர் தாமே, ஆண்டவராகிய சர்வேசுரன், மூன்று தேவ ஆட்களாயிருக்கிறார், என்கிற வேத சத்தியத்தை  மனிதனுக்குக் கற்பித்தார்!
பெந்தேகோஸ்தே திருநாளன்று, திவ்ய இஸ்பிரீத்து சாந்துவானவரின் தேவ வரப்பிரசாதத்தை, அப்போஸ்தலர்கள் பெற்றுக்கொண்டு, சகல தேசங்களுக்கும் சென்று போதிக்கவும், சகல ஜனங்களுக்கும் மகா பரிசுத்த தமதிரித்துவ சர்வேசுனுடைய பரிசுத்த நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கவும் துவக்கினர்!
திருச்சபை , சர்வேசுரனுக்கு செலுத்துகிற தேவாராதனைக்கான  தனது திருவழிபாட்டின் ஒவ்வொரு ஸ்தோத்திர ஸ்துதி புகழ்ச்சியிலும், அதன் மையப்பொருளாக மகா பரிசுத்த தமதிரித்துவத்தையேக் கொண்டிருக்கிறது! கால நேரமும், நித்தியமும்,  மகா பரிசுத்த தமதிரித்துவத்திற்கே சொந்தமாயிருக்கிறது!  ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு  மணி நேரமும் மகா பரிசுத்த தமதிரித்துவத்திற்குச் சொந்தமாயிருக்கிறது! நம் இரட்சணியத்தினுடைய பரம இரகசியங்களுடைய ஞாபகார்த்தமாக ஸ்தாபிக்கப்பட்ட சகல திருநாட்களும், மகா பரிசுத்த தமதிரித்துவத்தையே, அவற்றின் மையமாகக் கொண்டிருக்கின்றன! மகா பரிசுத்த தேவமாதாவினுடையவும், அர்ச்சிஷ்டவர்களுடையவும், திருநாட்கள் எல்லாம், ஒரே வஸ்துவாகவும், மூன்று தேவ ஆட்களாகவும் விளங்கும் மகா பரிசுத்த தமதிரித்துவ சர்வேசுரனிடம் நம்மை வழிநடத்திச் செல்லக்கூடிய வழிமுறைகளாக மட்டுமே திகழ்கின்றன!
ஆகையால் தான், ஒரே சர்வேசுரன் மூன்று தேவ ஆட்களாக இருக்கிறார், என்கிற பரம இரகசியத்திற்கு தோத்திர மகிமையாக, கொண்டாடப்படவேண்டிய ஆடம்பர திருநாள், பெந்தேகோஸ்தே திருநாளுக்குப் பின் உடனடியாகக் கொண்டாடப்படுவது, நீதியான ஏற்புடைய காரியமாக இருக்கிறது!  இவ்விரு உன்னதமான திருநாட்களும், அவற்றிற்குள்  இடையே பரம இரகசிய தொடர்பைக் கொண்டிருக்கின்றன! இருப்பினும், அடுத்து அடுத்து வந்த பல யுகங்களுடைய  பல நூற்றாண்டுகள் வரை, மகா பரிசுத்த தமதிரித்துவத்தினுடைய இம்மகா ஆடம்பரமான திருநாள், திருச்சபையின் திருவழிபாட்டின் கால அட்டவணைக்குள் சேர்க்கப்படாமலிருந்தது!
எட்டாம் நூற்றாண்டில், கற்றறிந்த வேதசாஸ்திரியான ஆல்குயின் என்கிற ஒரு துறவி, மகா பரிசுத்த தமதிரித்துவத்தைப் பற்றிய பரம இரகசியத்திற்கு தோத்திரமாக திவ்ய பலிபூசை ஜெபங்களை இயற்றினார்! வடக்கு ஜெர்மனியின் அப்போஸ்தலரான அர்ச்.போனிஃபேஸ் தான், இவரை இந்த திவ்ய பலிபூசை ஜெபங்களை இயற்றுவதற்கு தூண்டியவர். மகா பரிசுத்த தமதிரித்துவத்திற்குத் தோத்திரமாக இயற்றப்பட்ட இந்த திவ்யபலிபூசை, பின்னர், 1022ம் வருடம், செலிஜென்ஸ்டாட் என்ற இடத்தில் நிகழ்த்தப்பட்ட திருச்சபை சங்கத்தில், அகில ஜெர்மனியாலும் அங்கீகரிக்கப்பட்டது!
கிபி 920ம் வருடம், பெல்ஜியத்திலுள்ள லீஜ் என்கிற நகரின் மேற்றிராணியாரான வந். ஸ்டீஃபன் ஆண்டகை, தனது மேற்றிராசனததில், மகா பரிசுத்த தமதிரித்துவத்தின் திருநாளை வெகு ஆடம்பரமாக ஸ்தாபித்தார்; மேலும், இம்மாபெரும் பரம இரகசியத்திற்குத் தோத்திர மகிமையாக அதற்கான முழு கட்டளை ஜெபத்தையும் இயற்றினார்!இம்மேற்றிராணியாருக்கு அடுத்து வந்த மேற்றிராணியாரான வந்.ரெகுயர் ஆண்டகையும் தொடர்ந்து இம்மாபெரும் திருநாளை கொண்டாடி வந்தார்; பின், சிறிது சிறிதாக பெல்ஜியம் நாடு முழுவதும், இந்த திருநாளை அநுசரிக்கலாயிற்று!
அர்ச்.ஆசீர்வாதப்பர் துறவற சபை ரெயிச்சனாவ்வின் முதல்  மடாதிபதியான பெர்னோ சுவாமியிடமிருந்து, இத்திருநாளுக்குரிய ஆவணங்களைப் பெற்று, இந்த திருநாளை பரப்புவதற்கான சகல காரியங்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது! குளூனியிலும், இதே நூற்றாண்டின் துவக்கத்தில்,இம்மாபெரும் திருநாள் ஸ்தாபிக்கப்பட்டது! என்பதை, இப்பிரசித்தபெற்ற துறவற மடத்தின் குறிப்பேட்டிலிருந்து அறிந்து கொள்கிறோம். இக்குறிப்பேட்டில், கிபி 1091ம் வருடம் எழுதப்பட்ட ஒரு குறிப்பில், மகா பரிசுத்த தமதிரித்துவத்தின் திருநாளைப் பற்றியும், இந்த திருநாள் வெகு காலத்திற்கு முன்பாக ஸ்தாபிக்கப்பட்ட திருநாள் என்றும், எழுதப்பட்டிருந்தது!
இவை எல்லாவற்றிலிருந்தும், பரிசுத்த பாப்பரசரின் தலைமை ஸ்தானமே, இம்மகா பரிசுத்த திருநாளை அகில உலகமெங்கும் அனுசரிப்பதற்கான அனுமதியை அளிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். திவ்ய இஸ்பிரீத்து சாந்துவான சர்வேசுரனால்  தனது சகல காரியங்களிலும் வழிநடத்தப்படுகிறதைப்போல், பரிசுத்த தாய் திருச்சபையானது, மகா பரிசுத்த தமதிரித்துவ சர்வேசுரனுக்கு மிக ஆடம்பரமாக ஸ்துதி புகழ்ச்சி ஸ்தோத்திர ஆராதனைகளை செலுத்துவதற்கான  ஒரு விசேஷ நாளை ஒரு வருடத்தில் ஏற்படுத்துவதிலும், அதே திவ்ய இஸ்பிரீத்து சாந்துவான சர்வேசுரனால், வழிநடத்தப்பட்டது!  கிபி 1334ம் வருடம், 22ம் அருளப்பர் பாப்பரசர், இம்மகா ஆடம்பரமான திருநாளுக்கான அலுவலை நிறைவேற்றி, இத் திருநாளை அகில உலகமும் அனுசரிக்க வேண்டும் என்கிற பாப்பரசரின் ஒரு ஆணை மடலைப் பிரகடனம் செய்தார்.🌹✝️
பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்துசாந்துவுடையவும் நாமத்தினாலே! ஆமென் ( சிலுவை அடையாளம் வரைந்து கொண்டு ஜெபி்த்தால் -100 நாள் பலன்; தீர்த்தம் தொட்டு வரைந்தால் 300 நாள் பலன்)
🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹

✝️
🔵

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக