Quotes in Tamil
சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்
- அர்ச். பிலிப்புநேரி
"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்
- அர்ச். தெரேசம்மாள் -
சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்
- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்
Pages
- Home
- Download Tamil Catholic Songs
- Download Our Lord Songs
- Tamil Catholic Prayers & Quotes in Image
- அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம்
- பாரம்பரிய கத்தோலிக்க ஜெபங்கள் (Download Catholic Books & prayers)
- கத்தோலிக்க சிறுகதைகள்
- Little Month of St. Joseph
- Traditional Latin - Tamil Mass Missal
- லத்தீன் - தமிழ் பூசை புத்தகம்
- கத்தோலிக்க புத்தகங்கள் வாங்க!!! - 9487609983
- தேவ தோத்திர பாடல்கள்
புதன், 17 ஜனவரி, 2024
மகா பரிசுத்த கன்னிகை தன் பிள்ளைகளின்மீது கொண்டுள்ள பிரியமுள்ள அன்பு!
தேவமாதா நம் தாயானால்.....
சங், அந்தோனி சேவியர் சுவாமி
புது வருடச் சிந்தனைக்கு:
தேவமாதா நம் தாயானால், அதை நாம் ஏற்பது மெய்யானால், நாம் இப்போது இருப்பது போல் இருப்போமா? இப்படி அவர்களைப் பற்றி உணர்வற்றிருக்க முடியுமா? மாதா மட்டில் இப்படி அசிரத்தையா யிருப்பது சரியாகுமா?
மாதா அப்போஸ்தலர்கள் எனப்படுகிறவர்களும், மாதாவின் பிள்ளைகள் எனப்படு கிறவர்களும், எவ்வகையிலேனும் தங்களை மாதாவுடையவர்கள் எனக் கருதிக் கொள்பவர்களும் ஏன் தான் இப்படி இருக்கிறோம்? உணர்வற்ற மரக்கட்டைகளாக, அலட்சியமாக, தாயை மறந்தவர்களாக, மக்குப் பிடித்து, அன்னைக்கு நேரிடும் துயரங்களாலும், நிந்தைகளாலும் பாதிக்கப்படாதவர்களாக நம்மால் எப்படி இருக்க முடிகிறது?
"நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எங்களால் என்ன செய்ய முடியும்? இயன்ற அளவு செய்யத் தான் செய்கிறோம்" என்று நீங்கள் சொல்லலாம். உங்களால் பின்வருவன வற்றைச் செய்யமுடியும்:
நீங்கள் மாதாவை நேசிக்க முடியும். நேசிக்கிறீர்களா? எந்த அளவுக்கு? இப்போது நேசிப்பதை விட அதிகமாக நேசிக்க முடியாதா?
மாதாவுக்கு ஆறுதலளிக்கும் பரிகார பக்தி முயற்சிகளைக் கடைப்பிடிக்கிறீர்களா? அதிலே மூழ்கிப் போகிறீர்களா? இவ்வளவு பரிகாரம்தான் உங்களால் செய்ய முடியுமா?
பரிகார பக்தியின் அவசியத்தைப் பிறருக்கு எடுத்துச் சொல்லலாம். சொல்லி வருகிறீர்களா?
நம்மில் அநேகருக்குப் பரிகார பக்தி என்றால் என்னவென்றே சரியாகப் புரியவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. அது என்ன?
- மாதா பகைக்கப்படுவதற்கு ஈடாக அவர்களை நம் உள்ளத்தோடு நேசிப்பது பரிகாரமாகும்.
- மாதா தூஷணிக்கப்படுவதற்கு ஈடாக அவர்களை இடைவிடாமல் இருதயத்தில் வாழ்த்துவது பரிகாரமாகும்.
- மாதா மறுக்கப்படுவதற்கு ஈடாக அவர்களை நம் முழு மனதுடன் ஏற்றுக் கொள்வது பரிகாரமாகும்.
- மாதாவுடன், மாதாவுக்காக நம் வாழ்வை இரவும், பகலும் வாழ்வது பரிகார மாகும். இதையெல்லாம் செய்கிறீர்களா?
- எந்தத் துன்பத்தையும், நோயையும், கவலையையும், அவமானத்தையும் மாதாவுக்கு ஆறுதலாக, பாவிகள் மனந்திரும்பும்படி ஒப்புக்கொடுக்கிறீர்களா?
- உங்களையும், உங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் மாதாவுக்கென அர்ப்பணம் செய் திருக்கிறீர்களா?
- மாதாவின் துயரங்களை ஒவ்வொன்றாய் நினைத்து அனுதாபப்பட்டு அவற்றால் பாவிகளை இரட்சிக்க மன்றாடுகிறீர்களா?
- மரியாயின் பரிகார பக்தியாகிய முதல் சனி பக்தியை அனுசரிக்கிறீர்களா? அது மாதத்துக்கொரு நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல், பரிகார உணர்விலேயே மாதம் முழுவதும் உங்களை இருக்கச்செய்கிறதா?
- மாதாவுக்குப் பரிகாரம் செய்ய வேண்டுமென்று ஒரு நாளில் எத்தனை தடவை நினைப்பீர்கள்?
- ஒரு நாளில் மாதாவுக்கென எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? மாதா ஊழியமாக என்ன செய்கிறீர்கள்?
- மாதா சாதாரணப் பெண்தான் என்கிறார்கள் ஆங்காரிகள்.
- மாதா நமக்கு அவசியமில்லை என்கிறார்கள் பதிதர்கள்.
- மாதாவுக்கு வணக்கம் செலுத்தக்கூடாது என்கிறார்கள் மார்ட்டின் லூத்தரின் சீடர்கள்.
- மாதாவுக்கு மேலான வணக்கம் ஒன்றும் வேண்டாம். "மரியாளை" வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் என்கிறார்கள் அதிகம் படித்த மேதாவிகள்.
- ஜெபமாலை தேவையா என்று கேலியாகக் கேட்கிறார்கள் மாதாவை உள்ளூரப் பிடிக்காதவர்கள்.
- உத்தரியம் மூட பக்தி என்கிறார்கள் அதன் உண்மையைப் புரிய முடியாத அறிவாளிகள்.
- மாதாவை நேசிக்கக் கூடாது. சங்கிக்கக் கூடாது, அதெல்லாம் விக்கிரக ஆராதனை என்கிறார்கள் அக்கிரமிகள்.
நிந்தைப் பரிகாரமே சிறந்த வழி என்று உறுதிபூண்டு, அதைச் செய்யத் தீவிரம் கொண்டிருக்கிறீர்களா? மரியாயின் மாசற்ற இருதயத்திற்குப் பரிகாரம் செய்வது ஒன்றே இன்று திருச்சபையையும்,உலகத்தையும் காப்பாற்றும், மற்ற எந்த முயற்சியும் வீணாகச் செய்யப்படுகிறது.
தபசுகால ஆயத்த ஞாயிறுகள்: செப்துவாஜெஸிமா, செக்ஸாஜெஸிமா, குவின்குவாஜெஸிமா (Septuagesima, Sexagesima and Quinquagesima)
பாஸ்கு காலச் சுற்று என்பது செப்துவாஜெஸிமா ஞாயிறு முதல் தமத்திரித்துவத் திருநாள் வரை நீடிக்கும் வழிபாட்டுக் காலமாகும். வழிபாட்டு ஆண்டாகிய சக்கரத்தின் அச்சாணியாக விளங்கும் பாஸ்கு காலச் சுற்று, வழிபாட்டின் மையமான பரம இரகசியமும், நம் விசுவாசத்தின் அடிப்படை சத்தியமுமான நம் திவ்ய இரட்சகரின் உயிர்ப்பின் ஞாயிறை உள்ளடக்கியதாக இருப்பதால் அது மற்ற காலச் சுற்றுகளைவிட அதிக முக்கியமானதாக இருக்கிறது.
இந்தச் சுற்றின் தொடக்கத்தின் முதல் மூன்று ஞாயிறுகள் முறையே செப்துவாஜெஸிமா, செக்ஸாஜெஸிமா, குவின்குவாஜெஸிமா என்று அழைக்கப்படுகின்றன. இந்த மூன்று வார காலம் பொதுவாக செப்துவாஜெஸிமா காலம் என்றே அழைக்கப்படுகிறது. பாப்பரசர் முதலாம் பெலாஜியன் அல்லது அவருக்கு அடுத்து வந்த பாப்பரசர் மூன்றாம் அருளப்பரால் இந்தக் காலம் திருச்சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்காலம் அடிப்படையில் தபசு காலத்திற்கான தயாரிப்புக் காலமாக இருக்கிறது. கிறீஸ்தவ மனத்தைத் தபசுகாலத்தின் ஆழ்ந்த பக்தியார்வத்திற்கும், தவத்திற்கும் ஏற்றபடி ஆயத்தம் செய்வது இதன் நோக்கமாக இருக்கிறது.
செப்துவாஜெஸிமா (சப்தரிகை) ஞாயிறு என்பதற்கு, கிறீஸ்துநாதரின் உயிர்ப்புக்கு முன் எழுபதாம் நாள் என்பது பொருளாகும். இந்த ஞாயிறு வாசகங்கள், ஆதாமின் பாவத்தால் மனுக் குலம் துன்பத்திற்கும், சாபத்திற்கும் உட்பட்டு வருந்துவதையும், மனிதன் தன் பாவத்திற்காக வருந்தி, கடவுளின் இரக்கத்தைத் தேடினால் அவன் இரட்சிக்கப்படுவான் என்பதையும் நினைவு படுத்துகின்றன. ஆதாம் சபிக்கப்பட்டபோதே மெசையாவின் வருகையும், இரட்சணியமும் அவருக்கும். அவருடைய சந்ததிக்கும் வாக்களிக்கப்பட்டன. உரிய காலம் வந்த போது, உலகில் தோன்றிய இரட்சகர் தமது சமாதான சுவிசேஷத்தின் திராட்சைத் தோட்டத்தில் உழைக்கும்படி நம்மை அழைக்கிறார். அப்படி உழைப்பவர்களுக்கு அவர் நித்திய ஜீவியத்தையும் வாக்களிக் கிறார். "அதிகமதிகமாய் அச்ச நடுக்கத்தோடு உங்கள் ஈடேற்ற வேலையைப் பாருங்கள்" (பிலிப். 2:12) என்பதுதான் இன்றைய பூசையின் முக்கியக் கருத்து.
அடுத்து வருவது செக்ஸாஜெஸிமா (சடிகை) ஞாயிறு ஆகும். இதன் பொருள் கிறீஸ்து நாதரின் உயிர்ப்புக்கு முன் அறுபதாம் நாள் என்பதாகும். நம்முடைய உழைப்பு தவத்திற்கேற்ற பலனைத் தர வேண்டுமானால், துன்பங்களை ஏற்றுக்கொள்வது அவசியம் என்றும், மனித பலவீனத்திலேதான் கடவுளின் வல்லமை பூரணமாய் விளங்குகிறது என்றும், இதன் காரணமாக, கிறீஸ்துநாதரின் வல்லமை நம்மில் வாசம் பண்ணும்படி, நம் பலவீனங்களில்தான் நாம் சந்தோஷ மாய் மேன்மை பாராட்ட வேண்டும் என்றும் இன்றைய நிருபம் கற்பிக்கிறது, தேவ வார்த்தை என்னும் விதை விதைக்கப்பெற்று, தேவசிநேகத்தின் கனிகளைத் தருகிற நல்ல நிலமாய் நாம் இருந்து, முப்பது, அறுபது, நூறு மடங்கு பலன் தர வேண்டுமென்று இந்த ஞாயிறு சுவிசேஷ வாசகம் நமக்கு அறிவிக்கிறது.
இறுதியாக வருவது, குளின்குவாஜெஸிமா ஞாயிறு ஆகும். இதன் பொருள் கிறீஸ்து நாதரின் உயிர்ப்புக்கு முன் ஐம்பதாம் நாள் என்பதாகும். சிலுவையின் பரம இரகசியம் மனித னுடைய புத்திக்கு எப்போதும் கடினமானதாகவே தோன்றுகிறது (1 கொரி. 1:23), கிதீஸ்து நாதருடன் மூன்று ஆண்டுகளாகச் சேர்ந்திருந்த அப்போஸ்தலர்களும் இதைக் கண்டுபிடிக்க வில்லை. தனிமையாக விடப்பட்ட நம் ஆண்டவர் சிலுவையின் பாதையில் தன்னந்தனியே நடந்து செல்கிறார். துன்பங்களின் வழியாகவே பாவப் பரிகாரம் செய்யப்பட முடியும் என்னும் உண்மை சிலுவையில் அறையுண்ட கிறீஸ்துநாதரைத் தியானிப்பதால் விளங்குகிறது. மெய்யான தேவ சிநேகம் இல்லாவிடில், விசுவாசம், பிறர்சிநேகம் ஆகியவை உட்பட எந்தப் புண்ணியத்தாலும் பலனில்லை என்று திருபம் படிப்பிக்கிறது. மேலும் சிலுவையாலன்றி இரட்சணியமில்லை என்றும், இரட்சணியமடைய விசுவாசம் இன்றியமையாதது என்றும் பரிசுத்த சுவிசேஷம் உணர்த்துகிறது.
இந்த ஞாயிறுகளின் பெயர்கள் பொதுவாக, தபசுகாலத்தின் நாற்பது நாட்களையும் குறிக்கும் குவாத்ராஜெஸிமா என்னும் இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டவையாகும். தபசு காலத்திற்கான ஆயத்தம் முதலில் தபசுகாலத்தின் முதல் ஞாயிறுக்கு முந்திய ஞாயிறன்று தொடங்கியது. இது "தோமினிக்கா (ஞாயிறு) இன் குவின்குவாஜெஸிமா" (பாஸ்குத் திருநாளுக்கு ஆயத்தமான 50 நாட்களுக்குள் வரும் முதல் ஞாயிறு) எனப்பட்டது. சிறிது காலத்திற்குப் பிறகு, இக்காலம் 60 நாட்கள் உள்ளதாக ஆக்கப்பட்டு, அதன் முதல் ஞாயிறு செக்ஸாஜெஸிமா ஞாயிறு எனப்பட்டது. இறுதியாக, இக்காலம் 70 நாட்கள் என்று ஆக்கப்பட்டு, அதன் முதல் ஞாயிறு செப்துவாஜெஸிமா என்று அழைக்கப்பட்டது. இந்த 50, 60, 70 என்ற எண்கள் தோராயமானவையே.
சில வேத அறிஞர்கள் செப்துவாஜெஸிமா என்பது, இஸ்ராயேல் மக்கள் தங்கள் பாவங்களுக்காகத் தவம் செய்யும்படி அனுபவித்த எழுபது ஆண்டு அடிமைத்தனத்தை ஒரு மாதிரிகையாகக் கொண்டு திருச்சபையில் அறிமுகப்படுத்தப்பட்ட தபசுகாலத்தின் தொடக்கம் என்றும், இந்த எழுபது நாட்களிலும் கத்தோலிக்க விசுவாசிகள் உண்மையான தவ உணர்வோடு தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்து, சேசுக்கிறீஸ்துநாதரின் உயிர்ப்போடு தங்கள் உயிர்ப்பையும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டு என்று அது குறித்துக் காட்டுவதாகவும் கருதுகிறார்கள்.
மொத்தத்தில், விதை பலன் தருவதற்கு அது மண்ணோடு மண்ணாக மக்கி மடிவது அவசியம். சேசுநாதரோடு மகிமையில் உயிர்ப்பதற்கு, அவரோடு பாடுபடுவது அவசியம். சிலுவையால் அன்றி இரட்சணியம் இல்லை. துன்பம் இன்றி, நித்திய மகிமையை அடைதல் இல்லை என்பதையே இந்த செப்துவா ஜெஸிமா காலமும், அதைத் தொடர்ந்து வரும் தபசு காலமும் நமக்குப் படிப்பிக்கின்றன.
மாதா பரிகார மலர் - ஜனவரி - பிப்ரவரி, 2024
சேசுநாதர் புறஜாதியாருக்கும் ஆண்டவர் மூன்று அரசர்கள் திருநாள்: ஜனவரி 6
பரிசுத்த குவாடலூப்பே மாதாவின் அற்புதச் சித்திரம்
செவ்வாய், 16 ஜனவரி, 2024
அருட்கருவிகள் - மெழுகுவர்த்தி
நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம்.
திருச்சி, 1941
தேவ ஆராதனைகளில் தீபம் உபயோகிப்பது தொன்று. தொட்டு வழங்கி வரும் ஓர் நல்ல வழக்கம். யூதரும் அஞ்ஞானிகளுமே இதைப் பிரயோகித்து வந்தார்கள் என்பதற்குச் சந்தேகமில்லை. கிறிஸ்துவர்களுக்குள் இதன் பிரயோகம் ஆரம்பத்தில் அவசியத்தினிமித்தம் உண்டானது என்று சொல்லக் காரணமுண்டு. அது எவ்வாறெனில், பொழுது விடியுமுன்னர் அல்லது சுரங்கங்களில் திவ்விய பலி ஆராதனை நிறைவேற்ற வேண்டியிருந்த காலத்தில் இருளைப் போக்குவதற்குத் தீபம் அவசியமாயிருந்தது. ஆனால் தீபப் பிரயோகத்தில் உன்னதமான ஞானக்கருத்துகள் அடங்கி இருக்கின்றன வென்பதைக் கிறீஸ்தவர்கள் ஆரம்பத்திலேயே தெளிவாய்க் கண்டு கொண்டார்கள் என்பது நிச்சயம்,
வெளிச்சம் சுத்தமானது. அது அந்தகாரத்தை ஊடுருவுகிறது. அதன் எல்கைக்குள் இருப்பதையெல்லாம் பிரகாசிப்பிக்கிறது. ஆதலால், மகா பரிசுத்தரும், சர்வ வியாபியும், சகல வரங்களுக்கும் ஊற்றுமாயிருக்கிற சர்வேசுரனுக்கு அது உச்சிதமான அறிகுறி என்பது வெளிப்படை. அது தமது திவ்விய இரட்சகரையும் அவரது அலுவலையும் உருவகப்படுத்துகிறது. ஏனெனில், அவர் உலகத்தின் ஒளி, அந்தகாரத்திலும் மரண நிழலிலும் உட்கார்ந்திருப்பவர்களைப் பிரகாசிப்பிக்க வந்தவர். மெழுகுவர்த்தியை உபயோகிப்பதற்கும் விசேஷ காரணமுண்டு. மெழுகு மாசற்றதாயிருப்பதி னிமித்தம், கிறீஸ்துநாதரின் மாசற்ற சரீரத்துக்கு உருவகமாய் இருக்கிறது. அதற்குள் இருக்கிற திரி அவரது ஆத்துமத்துக்கு அடையாளம், அதிலிருந்து புறப்படும் சுடர் ஒரே தெய்வீக ஆளிடமாய் தேவ சுபாவமும் மனுஷ சுபாவமும் ஒன்றித்து இருப்பதைக் காட்டுகின்றது.
பச்சாத்தாபம் ஒன்று நீங்கலாக, மற்ற தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றுகையிலெல்லாம் மெழுகுவர்த்தி உபயோகப்படுகிறது. திவ்விய பலிபூசை வேளையிலும், வேறு தேவ ஆராதனை முயற்சிகளிலும், சுற்றுப்பிரகாரங்களின் போதும், இன்னும் இதர சமயங்களிலும் மெழுகுவர்த்தி கொளுத்தி வைக்கிறார்கள்.
பீடத்தின்மேல் மெழுகுவர்த்தியை வைப்பது 11-ம் நூற்றாண்டில்தான் ஏற்பட்டது என்று சொல்லாம். அதற்கு முந்தின காலங்களில், பீடத்துக்கு அருகாமையில் உயரமான தண்டுகளில் அல்லது சுவரிலிருந்து கொளுவியில் ஊன்றி வைப்பது வழக்கம்.
பெரிய பாட்டுப் பூசையில் ஆறு மெழுகுவர்த்திகளும், சாதாரண பாட்டுப் பூசையில் ஒரே குருவானவர் மாத்திரம் நிறைவேற்றும்போது நான்கு திரிகளும், மேற்றிராணியார் செய்யும் பாட்டுப்பூரையில் ஏழு திரிகளும், மேற்றிராணியா ருடைய சாதாரண பூசையில் நான்கும், குருக்கள் செய்யும் சாதாரண பூசையில் இரண்டு திரிகளும் கொளுத்துவது முறை. ஆயினும், உற்சவ ஆடம்பர தினங்களில் இந்த எண்ணிக்கைக்கு அதிகமாய் வைப்பதில் ஆட்சேபனையில்லை.
இதுவரையும் நாம் சொல்லி வந்தது தேன் மெழுகினால் செய்த திரிகளைப் பற்றியேயன்றி, மீன் திரி என்று நமது நாட்டில் வழங்கும் திரிகளைப் பற்றியல்ல. மேலே சொன்ன சமயங்களில் உபயோகிக்கிற திரி தேன்மெழுகினால் செய்து, தேவமாதாவின் சுத்திகரத் திருநாளன்று அல்லது அதற்குப் புறம்பாய் மந்திரிக்கப்பட்டிருப்பதே ஒழுங்கு. மீன் திரி அல்லது கொழுப்புத் திரி பலிபீடத்திலாவது தேவதிரவிய அதுமானங்களை நிறைவேற்றுகையிலாவது உபயோகிப்பது ஒழுங்கல்ல. இந்தத் திரிகளை மந்திரிக்கிறதுமில்லை. இவைகள் வேண்டுதல் திரி எனப்படும். இவைகள் சாதாரணமாய் ஏதாவது ஒரு அர்ச்சியசிஷ்டவருடைய கரூபத்துக்கு முன்பாக எரிகிறவைகள், விசுவாசிகள் அந்தந்த அர்ச்சியசிஷ்டவர் மட்டில் தங்களுக்குள்ள விசேஷ பற்றுதல் வணக்கத்தைக் காட்டுவதற்காக இவைகளை உபயோகிக்கிறார்கள்.
மந்திரித்த மெழுகுதிரி ஒவ்வொரு கத்தோலிக்கர் வீட்டிலும் இருக்க வேண்டும். குருவானவர் அவ்வீட்டில் யாருக்காவது நற்கருணை அல்லது அவஸ்தைபூசுதல் கொடுக்கும்போது அந்தத் திரிகளைக் கொளுத்தி வைக்க வேண்டும். மரணத் தறுவாயிலிருக்கிறவன் கையில் மந்திரித்த திரியைப் பிடித்திருக்கும்படி செய்வது மகா பக்திக்குரிய ஓர் வழக்கம். இந்தத் திரியின் சுடர் அவனது விசுவாசத்துக்கும். அவன் பெற்றுக்கொண்ட தேவ வரங்களுக்கும். அவன் பெறப் போகிற நித்திய மகிமைக்கும் அடையாளமாயிருக்கிறது.
அர்ச். பெரிய யாகப்பர் சீஷனாகிய பிலேத்தென்பவர் (Philete Disciple of St. James)
அர்ச். பெரிய யாகப்பர் சீஷனாகிய
பிலேத்தென்பவர் சரித்திரம்.
PHILÉTE DISCIPLE DE ST. JACQUES LE MAJEUR.
பிலேத்தென்பவன் ஒரு மாயவித்தைக்காரனிடம் மாய்கை கற்றுப் பழகினான். இப்படி இருக்கையில் அப்போஸ்தலரான அர்ச். பெரிய யாகப்பர் யூதேயா தேசத்தில் சர்வேசுரனுடைய திவ்விய வேதத்தைப் போதிக்கிறபோது அவர் பண்ணின ஆச்சரியமான புதுமைகளை உலகத்தார் கண்டு அவரோடே தர்க்கம் பண்ணப் பிலேத்து கெட்டிக்காரனென்று எண்ணி அதற்கு அவனைத் தெரிந்து கொண்டார்கள். அப்படி யே பிலேத்து அர்ச். யாகப்பரோடு தர்க்கம் பண்ணு மிடத்தில் அவன் தோல்வியடைந்ததுமன்றி அர்ச். யாகப்பர் சொன்ன நியாயங் களைக் கண்டுபிடித்து மனந்திரும்பி அக்கியானத்தையும் மாய்கை வித்தைத் தொழிலையும் விட்டுவிட்டு ஞானஸ்நானம் பெற்றான்.
பிறகு தனக்கு மாய்கை வித்தை சாஸ்திரம் படிப்பித்தவனிடத்தில் போய் நடந்த செய்திகளை வெளிப்படுத்தி அவனுஞ் சேசுநாதருடைய வேதத்தைத் தழுவும் பொருட்டுப் புத்தி சொன்னான். எர்மொஜேனென்னும் அந்த மனிதன் இந்தச் செய்தியை அறிந்து மிகக் கஸ்திப்பட்டுத் தன்னுடைய சீஷன் கிறீஸ்துவனானதி னாலே அவன் பேரிலே மிகக் கோபம் கொண்டு பில்லி சூனியம் வைத்துப் பிலேத்தின் கை கால் வழங்காதிருக்கப் பண்ணினான். இதை அர்ச். யாகப்பர் அறிந்து தமது கையிலிருந்த ஒரு சின்ன சீலையை அவரிடம் அனுப்பினார். பிலேத்து அதை மிக வணக்கத்தோடு வாங்கின உடனே அதைக்கொண்டு அந்தப் பில்லி சூனியம் நீங்கிப்போய்க் கை கால்கள் எப்போதும்போல் நன்றாய் விழங்கி வந்தது. அவருக்குக் குணமான பிற்பாடு ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்ட ஆரோக்கியத்தை வேதம் போதிக்கச் சுற்றித் திரிந்து பிரயாசைப்படுவதிலே செலவழித்தார். இப்படி இருக்கையிலே திருச்சபையின் எதிரிகள் அவரைப் பிடித்துக் காவலிலே வைத்தார்கள். அவர் அநேக நாள் காவலிலே இருந்து கடைசியிலே வேதசாட்சியாக மரணத்தை அடைந்தார்.
கிறீஸ்துவர்களே ! அர்ச். பிலேத், உலகத்தானும் மாய்கை வித்தைக்காரனுமாய் இருந்தாலும், அர்ச். யாகப்பரோடே தர்க்கம் பண்ணுமிடத்தில் சத்தியத்தைக் கண்டுபிடித்தவுடனே, முன்னையைப்போல தீய வழியில் நடவாமல் நியாயத் தின்படியே நடக்கத் துவக்கினார். அவ்வாறே நீங்களும் நடக்கவேண்டும். இருட் டிலே நடக்கிறவனுக்குப் பள்ளம், மேடு, கிணறு, தாழ்வு, சேறு, பாம்பு இன்னவிடத்தில் இருக்கிறதென்று தெரியாதென்பது உண்மை. ஆனால் அவனுக்கு முன்னே தீ வர்த்தியின் வெளிச்சம் அவனுக்கு நல்ல வழிகாட்டிப் போகிறபோது, அதற்குப் பின் நடந்தால் அவனுக்குக் கேடுவராது. அவன் அந்தத் தீவர்த்தியின் பிறகே போகாமல் தன்மனதின்படியே நடக்கிறபோது கிணறு பள்ளங்களில் விழுவது இயற்கை, அறியாமையாகிய அந்தகாரத்திலே சத்தியமானது ஞானப்பிரகாசம்போல் இருக்கிறதன்றி ஆண்டவர் மனிதர்களுக் குக் கட்டளையிட்ட புத்தியைக்கொண்டு சத்தியத்தைக் கண்டு பிடிக்கலாம்.
அதைக் கண்டுபிடித்த பிறகு, அதின்படியே நடக்க மனிதனுக்குக் கடமை யுண்டு. இதை நன்றாய்க் கண்டுபிடிக்க இப்போது சொல்லப்போகிற உவமையை கேளுங்கள். மாடானது நல்ல பயிரைக் கண்டவுடனே அதைத் தின்கிறபோது பயிரிட்டவனுக்கு வெகு சேதமென்று நினையாமல் தன் பசி அமருமட்டும் அந்தப் பயிரைத் தின்னும். புலியானது காட்டிலே தனிமையாய்ச் சிறு குழந்தையையோ பெரிய இராசாவையோ கண்டவுடனே அவர்கள்மேல் பாய்ந்து பட்சிக்கிறபோது, அதிலே பெரும் தீங்கு இருக்கிறதென்று நினையா மல் தன் சுபாவ கொடுமையின்படியே பாயும். யானை மதமெடுத்துத் திரிகிற போது, அதன் முன்பாக வீடு வாசல் மாடு மனிதர் என்ன எதிர்பட்டாலும் அதை அழித்துத் தகர்த்துப் போடும். அது பெரிய அநியாயமாயிருந்தாலும் அதை நினையாமல் தன் ஆங்காரத்தின்படியே செய்யுமே. மிருகங்களுக்குப் புத்தி இல்லாததினாலே அவைகள் நீதி நியாயங்களைக் கண்டு பிடிக்கவில்லை என்பது உண்மை. மனிதரோவெனில், மெய்யான தேவனை வணங்காமல், பொய்யான தேவர்களை வணங்குகிறதும், பில்லி சூனியம் வைக்கிறதும், களவு செய்வதற்குத் துர்ப்புத்தி சொல்லுவதும், கோள் சொல்லுகிறதும், இவை முதலான பல பொல்லாங்கு செய்கிறதும் அநியாயமென்று 'அவரவருக்குச் சர்வேசுரன் கொடுத்த புத்தியைக் கொண்டு கண்டு பிடிக்கலாம்.
ஆனால் சில பேர்கள் தங்கள் இஷ்டத்தின்படியே பொல்லாத ஆசையை அநுசரிக்க மனதாயிருக்கிறதே யல்லாமல், நியாயத்தின்படியே நடக்க மனதில்லாமல் இருக்கிறார்கள். இதினாலே இத்தகையோர்களுடைய நடத் தைக்கும் மிருகங்களுடைய நடத்தைக்கும் வேற்றுமை காணோம். நீங்கள் புத்தியில்லாத வஸ்துவைப் போல நடவாதபடிக்கு நியாயத்தைக் கண்டுபிடித்த வுடனே அதற்குத் தக்கபடி நடக்கவேண்டும். பழி வாங்குகிறதும் மோக பாவத்தைக் கட்டிக்கொள்ளுகிறதும் ஆகாதென்று கோபக்காரனும் பொல்லாத இச்சையுள்ளவனும் முதலாய் ஒத்துக்கொள்ளுவார்கள். கோப வெறியிலும் காம வெறியிலும் புத்தி மயங்கித் தங்களுக்குச் சில நியாயந் தோன்றுகிற தென்று அவர்கள் சொல்லுவார்களாக்கும். பச்சைக் கண்ணாடியை மூக்கிலே வைத்துப் பார்க்கிறவனுக்கு எல்லாம் பச்சையாய்த் தோன்றும். அதை எடுத்து விட்டுப் பார்க்கிறபோது, பச்சை நிறம் நீங்கி எல்லாம் இயற்கையாய்க் காணப்படும்.
அப்படி கோபக்காரனுக்கும் பொல்லாத இச்சை யுள்ளவனுக்கும் நியாயமில்லா திருந்தாலும் அந்தப் பாவ மயக்கம் இருக்குமட்டும் அடாத நியாயந் தோன்றும். அந்த மயக்கம் நீங்கின பிறகு, முந்தி நியாயமென்று தோன்றினது அநியாயமாகத் தோன்றும். தாகமுள்ள வியாதிக்காரன் வைத்தியன் விலக்கின தண்ணீரின் பேரிலே வெகு ஆசையாயிருக்கிறபடியினாலே தண்ணீரைக் குடிக்க வேண்டுமென்று ஆயிரம் விசை சொன்னாலும் அவன் அப்படி சாதிக்கிறது நியாயமல்ல. அவன் வைத்தியனைக் கேட்டுத் தண்ணீர் குடிக்கலாமென்று இவன் சொன்னால் அப்போது அது ஞாயந்தானென்று ஒத்துக்கொள்ளலாம். அவ்வண்ணமே ஞான வியாதிக்காரராகிய பாவிகள் தங்கள் துராசைகளை அநுசரிக்காமல் ஞான வைத்தியராகிய குருக் களையோ, பத்தியுள்ள நல்ல கிறீஸ்துவர்களையோ புத்தி கேட்டுத் தங்களுக்குத் தோன்றுகிற சந்தேகங்களைச் சொல்லி அவர்கள் சொல்லும் ஞாயத்தின்படியே நடக்கவேண்டும்.
Download Tamil Catholic Songs Click here
Read more saints lives history in tamil.
அர்ச். முதலாம் மர்செல்லுஸ் (St. Marcellus - I)
ஜனவரி 16
வேதசாட்சியான
அர்ச். முதலாம் மர்செல்லுஸ்
தியோக்ளேஷியனுடைய ஆட்சியின் இறுதி காலத்தில், பாப்பரசர் மர்செல்லினுஸ் வேதசாட்சியாகக் கொல்லப்பட்டபிறகு, பாப்பரசர் ஸ்தானம், மூன்றரை வருட காலம் காலியாகவே இருந்தது. கி.பி.308ம் வருடம், முதலாம் மர்செல்லுஸ் பாப்பரசரானார். இவர், திருச்சபை அதிகார அமைப்பை சீர்திருத்தம் செய்தார்; விசுவாசத்தை இழந்தவர்கள் மறுபடியும் மனந்திரும்பி வந்தபோது, அவர்கள் மேல், இவர் மிகவும் இரக்கமாயிருந்தார். ஆனால், லாப்சி என்கிற மக்கள், விசுவாசத்தை மறுதலித்தபிறகு, அதற்காக மனஸ்தாபப் படாததால், இவர் அவர்களை மன்னிக்கவில்லை.
மாக்சென்ஷியுஸ் சக்கரவர்த்தி, இவரை நாடு கடத்தினான். பின்னர், குருக்கள் இவரை விடுவித்துக் காப்பாற்றி, லூசினா என்கிற ஒரு விதவையின் இல்லத்தில் தங்க வைத்தனர். லூசினா என்ற பக்தியுள்ள விதவை, பாப்பர சருக்குரிய மேரை வணக்கத்தையும் செலுத்தினாள்; தன் இல்லத்தை, பாப்பரசருக்கு ஒரு தேவாலயமாகப் பயன்படுத்தும் படியாக விட்டுக் கொடுத்தாள். கிறீஸ்துவ திருவழிபாடுகள் இந்த தேவாலயத்தில் நிகழ்வதைப் பற்றிக் கேள்வியுற்ற சக்கரவர்த்தி, இந்த தேவாலயத்தை, ஒரு குதிரை இலாயமாக மாற்றினான். அதிலிருந்த மிருகங்களை கவனிக்கும்படி, பாப்பரசரை வலுவந்தம் செய்தான்.
வேதனைக்குரிய இந்த துயரமான சூழலில், பாப்பரசர் மர்செல்லுஸ், கி.பி.310ம் வருடம், ஜனவரி 16ம் தேதியன்று, மரித்தார். முதலில் இவர், சுரங்கக் கல்லறையிலிருந்த அர்ச்.பிரிஸ்சிலாவின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்; பின்னர், உரோமாயுரி அர்ச்.இராயப்பர் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
அர்ச்.மர்செல்லுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
திங்கள், 15 ஜனவரி, 2024
நம் கடமையைச் செய்வோம்! - Duty of the State
(திருச்சபையிலும் நம் சமுதாயத்திலும் நிலவும் குழப்பத்திற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால், அதற்கு பதில் வெகு தெளிவானது. மக்கள் தங்கள் கடமைகளிலிருந்து தவறியதால் ஏற்பட்ட விளைவே! தலைவர்கள் தங்கள் பொறுப்பை அலட்சியப்படுத்தியதால், பெற்றோர்கள் தங்களுடைய கடமையை கட்டிக்கழித்தால் இப்படி பலர் செய்த தவறுகள்தான் இன்றைய சீர்கேட்டிற்கு காரணம். இதை சீர்செய்ய நாம் செய்ய வேண்டியது கடவுள் நமக்களித்த பொறுப்பை சரியாய் செய்வதேயாகும். இதைத்தான் திருச்சபை நம்மிடம் எதிர்ப்பார்க்கிறது. இதைக் குறித்து சங். லெகு சுவாமிகள் எழுதிய பொதுக் கடிதத்தின் தமிழாக்கத்தை உங்களுக்கு அளிக்கிறோம். வாசகர்களே! இதை நன்றாக சிந்திக்க உங்களை அழைக்கிறோம். ஆ.ர்.)
நம் அன்றாட வாழ்க்கை போராட்டத்தின் மத்தியில், மனுக்குலத்தின் எதிரியின் தாக்குதலிலிருந்து நம்மை அவசியம் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவேதான் ஒவ்வொரு நாளும் இரவு கட்டளை ஜெபத்தில் நாம் "சகோதர்களே Fratres Sobrii estote et vigilate" என்று பாடி ஜெபிக்கின்றோம்.
இந்த போருக்காக சாத்தான் தனக்கு சாதகமாய் எல்லாவித போர்க் கருவி களையும் பயன்படுத்துகிறான். வெற்றி ஒன்றே அவனது குறிக்கோள். அவனது இலக்கு: ஆன்மாக்களை வீழ்த்தி அவற்றை அடிமைப்படுத்துவதே! அதற்காக அவன் தன்னிடமுள்ள பேய்தனமான வெறுப்புடன் படிப்படியாக புத்திசாலித் தனத்துடன் நகர்கிறான். அழிவு பாதையில் அவன் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை.
ஆன்மாக்களை ஏமாற்றுவதற்காக அவன் பல வித்தைகளைப் பயன்படுத்தி னாலும், ஒரேயொரு வித்தையில் மட்டுமே பல வெற்றியுடன் ஜொலிக்கிறான். அது தன்னைத் தானே ஒளியின் தூதனாய் மாற்றி மக்களை ஏமாற்றுவது. எளிதில் கண்டுபிடிக்க முடியாத தீங்கினை மக்களால் எவ்வாறு தவிர்க்க முடியும்? மக்களை கனவு உலகத்திலே வாழ வைக்கிறான். ஜெபத்தின் வாழ்வில்கூட புகுந்து ஆன்மாக்களை ஏமாற்றி, அதன் மூலம் கனவு வாழ்க்கையா? நனவு வாழ்க்கையா? என்று தெரியாமலே எப்படி வாழ்வது?
இதற்கு பதில் மிக எளிமையானது. ஒருவேளை நம்முடைய சிக்கலான மூளைக்கு புரிந்துகொள்ள முடியாத அளவு எளிமையானதாய் இருக்கலாம்.
நம்முடைய கடமையில் பிரமாணிக்கமாய் இருப்பதே! கடவுளால் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கையில் நாம் சந்தேகமின்றி பயணிக்கிறோம் என்பதற்கு சாட்சியாய் அமைகிறது. வாழ்வின் தினசரி போராட்டத்தினால், ஒரே பணியை அதே போல் செய்வதால் நம்முடைய கடமைகள் கவர்ச்சியற்று தோன்றுகிறது. ஆனால் அச்செயல்களே கடவுள் விரும்பிய அந்த ஸ்தானத்தில் நம்மை நிலைநிறுத்த செய்கிறது. கடவுள் சித்தத்துடன் நம்மை ஒன்றிணைப்பதே அர்ச்சிஷ்டதனத்தின் அடிப்படை கூறு. அதுவே மோட்சத்திற்கு செல்ல நாம் செய்ய வேண்டிய மிக முக்கிய காரியம்.
நம்முடைய கடமையைச் செய்வதற்கு கடவுள் நமக்கு அளிக்கின்ற விசுவாச ஒளியும், வரப்பிரசாதமுமே போதுமானது. நம்முடைய அன்றாட காரியங்களை துணிவுடன் எதிர்கொள்ளவும், கடவுள் சித்தத்தை நேசத்துடன் செயலாற்றவும் கடவுளின் உதவி நம்மோடு இருக்கத்தான் செய்கிறது.
நம் முன்னோர்கள் இதனை நன்கு அறிந்திருந்தனர். செய்யும் தொழிலை அவர்கள் வணங்கினர். கடமையைச் சரியாய் செய்வது ஜெபத்தின் தொடர்ச்சி என்று கருதினர். தொடர்ச்சி மட்டுமல்லாது அதுவே தயாரிப்பாய் அவர்களுக்கு அமைந்தது.
கடமையை அலட்சியப்படுத்தும் தற்கால போக்கின் விளைவு, நாம் திருச்சபையிலும், சமுதாயத்திலும், வன்மையாய் எதிலொலிப்பதை கண்டு கொண்டே இருக்கிறோம்.
நம்முடைய மதம் வாழும் மனிதாவதாரத்தின் தேவ இரகசியம். நம் கடமையை சரியாய் செய்வது அத்தகைய அவதாரத்தின் நிச்சயமான வெளிபாடு. கடவுளை இவ்வுலகத்திற்கு வெளிப்படுத்துவது முக்கியமான செயல் அல்லவா? அவற்றை அலட்சியப்படுத்தலாமா?
ஒரு கிறீஸ்தவன் அவனுடைய அன்றாட செயலினால் சேசுநாதரின் பாடுகளிலும், அவருடைய இரட்சிப்பு பணியிலும் பங்குபெறுகிறான். கடவுளின் சந்நிதானத்தில் நாம் தினமும் வளர வேண்டுமானால், நம்முடைய ஆன்மாவில் அமைதி நிலவ வேண்டுமானால் நம்முடைய கடமையை சிறப்பாய் செய்வோம்!
Tamil Catholic Blog : வியாகுலப் பிரசங்கங்கள்
ஞாயிறு, 14 ஜனவரி, 2024
Tamil Catholic Blog : அர்ச். பிரான்சிஸ் அசிசியார் (Part -II)
அர்ச். ஜான் போஸ்கோ
சனி, 13 ஜனவரி, 2024
அர்ச். கொந்திறான் - ST. GONTRAN.
மார்ச் மாதம் 28-ம் தேதி.
அர்ச். கொந்திறான் இராசா
ST. GONTRAN.
கிளோத்தேமென்னும் பிரெஞ்சு இராசாவின் குமாரனாகிய அர்ச்சியசிஷ்ட கொந்திறான் மிகப் பேர்பெற்ற குளோவிஸ் இராசாவுக்கும் அர்ச்சியசிஷ்ட குளோத்தில்தம்மாளுக்கும் பேரனாய் இருந்தார். அவருடைய தகப்பனாகிய இராசா இறந்த பிறகு தன் சகோதரர்களோடு இராச்சியத்தைப் பங்கிட்டு ஒர்லெயான் பகுதிக்கும் புர்கொஞ் பகுதிக்கும் இராசாவானார். தன் சகோதரர்களால் அவர்களோடும் லொம்பாரென்னும் மக்களோடுஞ் சண்டை போடக் கட்டாயப்பட்டு வெற்றி கொண்டிருந்தாலும் வெற்றி பெற்றவர்களைத் தயவோடே நடத்தித் தன் சகோதார்களுடைய மக்களை ஆதரித்துச் சமாதானத்திற்குரிய சாந்த குணத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கினார்.
தமது பிரசைகளை பாக்கியவான்களாக்க மாத்திரம் ஆசைப்பட்டு நல்ல தகப்பனாரைப்போல் அவர்களை விசாரித்து நடத்துவார். அவரிடத்தில் தயை பத்தி விசுவாசம் நிறைந்ததினால் தரித்திரர்களை மிகுந்த தயவோடு விசாரித்து அவர்களுக்கு மிகுந்த தர்ம நன்மைகளைச் செய்து கொண்டு வருவார்.
விசேஷமாய்த் தொற்று வியாதி காலத்திலும் பஞ்சத்திலும் எளியோர்கள் பேரிலும் மற்றவர்கள் பேரிலும் அவருடைய பிறசிநேகம் மிகவும் விளங்கினது. வியாதிக்காரர்களுக்கு குறைவற்ற உதவி செய்யப்படும் பொருட்டு அவர் கண்டிப்பான கட்டளை இட்டதுமல்லாமல் தமது செபங்களினாலும் ஒருசந்தி முதலான தவங்களினாலுந் தேவ கோபத்தைத் தணிக்கவும் பிரயாசைப் படுவார். அந்த ஆக்கினை தமது பாவங்களினால் வந்ததென்றெண்ணி அதை ஒழிக்கும்படி இரவும் பகலுந் தவத்தினால் தம்மைச் சர்வேசுரனுக்குப் பலியாக ஒப்புக்கொடுப்பார். அவருக்குப் பிறந்த பிள்ளைகளெல்லாரும் இள வயதிலே மரித்திருந்தாலுந் தமது இராச்சியத்தைச் சுதந்தரித்துக்கொள்ள வேறு பிள்ளை இல்லையென்று அவர் கண்டிருந்தாலும், அதினால் புத்தி மயங்காமலுஞ் சுகிர்த ஒழுக்கம் விடாமலும் பொறுமையோடே தேவசித்தத்திற்குக் கீழ்ப்படிந்து சர்வேசுரனுக்குப் பத்திப் பிரமாணிக்கமாய் இருந்தார்.
போர்ச் சேவகர்களுடைய துர் நடத்தைகளை அடக்க அவர் மிகவும் விவேக முள்ள நல்லொழுக்கக் கட்டளைகளை ஏற்படுத்தினார். அவரிடத்தில் நீதி நியா யப் பற்றுதலிருந்தமையால் பாதகங்களைக் கண்டிப்பாய்த் தண்டிப்பார். ஆயினும் தமக்கே செய்யப்பட்ட குற்றங்களை மிகுந்த தயவோடே பொறுப்பார். பிறே தெகொந்தென்னுங் கொடிய இராக்கினி தம்மைக் கொல்ல அனுப்பின இரண்டு கொலைப்பாதகர்களில் ஒருவனை மாத்திரம் சிறையிலே போட்டு, மற்றொருவன் ஓர் கோவிலில் அடைக்கலமாய்ப் போனதைப் பற்றி அவனை விடுதலையாக்கினார். தம்மைக் கொல்ல அனுப்பியிருந்த இராக்கினிக்கும் பொறுத்தல் கொடுத்து அவளிடத்தில் பழிவாங்காமலும் அவளைப் பகையாளிகளுக்குக் கையளியாமலும் ஆதரித்துக் காப்பாற்றினார். அரசருக் குரிய பெருந்தன்மையுடன் சிறப்பான அநேகங் கோவில்களையும் மடங்களை யும் கட்டுவித்தார். மேற்றிராணிமார்களை மிகுந்த வணக்கத்தோடே சங்கித்து அவர்களைத் தகப்பன்மார்களாக எண்ணி அவர்களுடைய புத்தி யோசனைக ளைக் கேட்டு அனுசரிப்பார். சுகிர்த சற்குணமுள்ள இந்த நல்ல இராசா முப்பத்திரண்டு வருஷம் ஆட்சி செய்த பின்பு 595-ம் வருஷத்தில் அர்ச்சியசிஷ்டராக மரித்துத் தாம் கட்டுவித்திருந்த ஓர் கோவிலில் அடக்கஞ் செய்யப்பட்டார். அவருடைய கல்லறையில் நடந்த அநேகம் புதுமைகளை டூர்ஸ் நகரத்து மேற்றிராணியாராகிய அர்ச். கிறகோரியார் எழுதி வைத்தார்.
கிறீஸ்துவர்களே! இந்த அர்ச். இராசாவிடத்தில் எத்தனையோ புண்ணியங்கள் விளங்குகின்றன. நீதியுள்ள சண்டையில் அடைந்த வெற்றிகளால் பிற தேசங்களை அபகரிக்கத் தேடாமல், தமது பிரசைகளை மகிழ்விக்க மாத்திரம் விரும்புவார். அப்படியே பெரியோர்கள் பிறர் உடமையை அபகரிக்கத் தேடாமல், தங்கள் சொந்தப் பொருளைக்கொண்டு தர்மங்களைச் செய்யக் கடவார்கள். விசேஷமாய் இந்த அர்ச்சியசிஷ்டவரைப்போல் கொள்ளை நோய் பஞ்சம் முதலிய பொதுத் துன்பம் வருகிறபோது, தரித்திரர்களுக்கும் வியாதிக் காரர்களுக்கும் கூடியமட்டுந் தர்மஞ் செய்ய முயற்சி பண்ணக்கடவார்கள். இராசாக்கள் தங்கள் இராச்சியத்தைத் தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுவிடவுந் தங்கள் சந்ததி இராசாங்கத்திலே நீடித்திருக்கவும் ஆசைப்படுகிறது வழக்க மானாலும் பத்தியுள்ள இந்த இராசா தன் மக்கள் எல்லாரும் இளவயதில் சாவதைக் கண்டு பொறுமையோடே தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்தாரே. நீங்களோவெனில், உங்கள் பிள்ளைகள் இறந்து போகிற சமயத்திலே தேவ சித்தத்திற்கு விரோதமாய் முறையிட்டுச் சர்வேசுரனைத் தூஷணிப்பது எவ்வளவு பாவம்!
பிள்ளையில்லாதவர்கள் தேவசித்தத்திற்கு விரோதமாய் முறைப்படுகிறதும், தங்களுக்குப் பிள்ளைகள் உண்டாகும்படிக்கு வேதத்திற்குத் துரோகமான காரியங்களைச் செய்கிறதும் அவர்கள் ஆத்துமத்திற்குத் தின்மையாகு மொழிய நன்மையாகமாட்டாது. தக்க முறையாய்ச் சர்வேசுரனிடத்திலுந் தேவமாதா முதலிய அர்ச்சியசிஷ்டர்கள் மூலமாகவும் பிள்ளை வரம் கேட்ட பின்பு, அதற்குத் தேவ சித்தம் இல்லாமற் போனால் பொறுமையோடே கீழ்ப்படிந்து, ஓர் அநாதைப் பிள்ளையை தனக்குப் பிள்ளையாகச் சுவீகரித்துக் கொண்டு வளர்ப்பது உத்தம புண்ணியமாகும். இந்த இராசா தம்மைக் கொலை செய்விக்கத் தேடினவளுக்கு முதலாய் மன்னிப்பு கொடுத்து நன்மை செய்தார். அப்படியிருக்கத் தனக்குச் சொல்லப்பட்ட சில தூஷணம் முதலான அற்ப முகாந்தரங்களைப்பற்றி, மாறாத பகை வர்மம் வைத்திருப்பவர்கள் தேவ கற்பனை மீறுவதற்கு என்ன நியாயஞ் சொல்லக்கூடும். அவர்கள் தங்கள் பாவங்களுக்குத் தேவனிடத்தில் பொறுத்தலை அடையும் படி தாங்களுந் தங்கள் பகையாளிகளுக்கு மெய்யாகவே பொறுத்தலைக் கொடுக்க வேண்டுமென்பது திண்ணம்.
திரிகால ஜெபம் - The Angelus
(இந்த ஜெபத்தை முழங்காலிலிருந்து வேண்டிக்கொள்ள வேண்டும். ஆனால் சனிக்கிழமை சாயந்திரமும், ஞாயிற்றுக்கிழமையிலும் இதை நின்று கொண்டு சொல்ல வேண்டியது)
ஆண்டவருடைய சம்மனசானது மரியாயுடனே விஷேஷ் சொல்லிற்று.
அவள் இஸ்பிரீத்துசாந்துவினாலே கர்ப்பிணியானாள். (அருள்)
இதோ ஆண்டவருடைய அடிமையானவள் உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது" (அருள்)
வார்த்தையானது மாம்சமாகி,
எங்களுடனே கூட வாசமாயிருந்தது (அருள்)
முதல்: சேசு கிறீஸ்துநாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக.
எல்: சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பிரார்த்திக்கக்கடவோம்
சர்வேசுரா சுவாமி! சம்மனசு சொன்னதினாலே உமக்கு குமாரனாகிய சேசு கிறீஸ்து மனுஷனானதை அறிந் திருக்கிற நாங்கள், அவருடைய பாடுகளினாலேயும், சிலுவையினாலேயும் உத்தானத்தின் மகி மையை அடையத் தக்கதாக, எங்களுக்கு அநுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று தேவரீரை வேண்டிக்கொள்கிறோம். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய சேசு கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
பாஸ்கு காலத்தின் திரிகால ஜெபம்
(இது பெரிய சனி மாலை முதல் அர்ச். தமதிரித்துவத்தின் திருநாள் வரைக்கும் நின்றுகொண்டு சொல்லத்தக்கது )
பரலோகத்துக்கு இராக்கினியே ! மனங் களிகூறும் அல்லேலூயா அதேதெனில் பாக்கியவதியான உமது திரு உதரத்தில் அவதரித்தவர் - அல்லேலூயா
திருவுளம்பற்றின வாக்கின்படியே உயிர்த்தெழுந்தருளினார் - அல்லேலூயா
எங்களுக்காக சர்வேசுரனை மன்றாடும்- அல்லேலூயா
எப்போதும் கன்னிகையான மரியாயே அகமகிழ்ந்து பூரிக்கக்கடவீர் - அல்லேலூயா
அதேதெனில் ஆண்டவர் மெய்யாகவே உத்தான மானார் - அல்லேலூயா.
பிரார்த்திக்கக்கடவோம்
சர்வேசுரா சுவாமி! உம்முடைய திருக்குமாரனுமாய், எங்கள் ஆண்டவருமாயிருக்கிற சேசு கிறீஸ்துவின் உத்தானத்தினாலே உலகங்களிக்கச் சித்தமானீரே. கன்னி மரியாயாகிய அவருடைய திருத்தாயாராலே நித்திய ஜீவியமான பரலோக வாழ்வை நாங்கள் அடையும்படிக்கு அநுக்கிரகம் பண்ணியருளும். இந்த
மன்றாட்டுக்களை யெல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுநாதருடைய திரு முகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் - ஆமென்.
The Angelus prayer in Tamil (Paschal time) |
The Angelus Prayer in Tamil |
அருட்கருவிகள் - திரிகால ஜெபம் (The Angelus)
திரிகால ஜெபம்
நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941