Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 14 ஜனவரி, 2024

அர்ச். ஜான் போஸ்கோ

1815, ஆகஸ்ட் 16 அன்று, இத்தாலியின் பியெத்மோன்ட் மாகாணத்திலுள்ள ஒரு சிறு கிராமமாகிய பெக்கியில், பிரான்செஸ்கோ போஸ்கோ, மார்கரீத்தா ஒச்சியேனா தம்பதியருக்கு ஜான் போஸ்கோ கடைசி மகனாவார். அவரது மூத்த சகோதரர்கள் அந்தோனியோ, ஜூசேப்பே ஆகியோராவர். அவருக்கு இரண்டு வயதானபோது, தந்தை இறந்துவிட, தாயே அவருக்குத் தந்தையுமானாள். மார்கரீத்தா அவரது எதிர்கால உருவாக்கத்தில் மிகச் சிறந்த பங்கு வகித்தாள். சிறுவன் ஜான் ஆடு மேய்க்கும் வேலை செய்தார். இளம் தோழர்களுடன் விளையாடுவார், தீமையிலிருந்து அவர்களை விடுவித்து, புண்ணியத்தை நோக்கி அவர்களை நடத்து வார். அதன்பின் அவர் தன் ஒன்றுவிட்ட சகோதரனின் வயல் களிலும், திராட்சைத் தோட்டத்திலும் வேலை செய்தார்.

ஆனால் 1824-1825 குளிர்காலத்தின்போது, பியெத்மோன்ட்டின் பனிபடர்ந்த வயல்களில் வேலைகள் ஏதும் இல்லாததால், போஸ்கோவின் தாய் அவரைப் பக்கத்துக் கிராமத்திலுள்ள ஒரு பள்ளிக்கு அனுப்பினாள். அங்கே ஒரு குரு அவருக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தார். இவர் ஜானுக்கு ஞான உபதேசம் கற்பித்து, அவரை முதல் பாவசங்கீர்த்தனத்திற்குத் தயாரித்தார். அவரது வழிகாட்டுதலின் கீழ் ஜான் ஜெபம் மற்றும் ஒறுத்தலின் மூலம் ஆன்மாவில் தேவ வரப்பிரசாதத்தைக் காப்பாற்றிக் கொள்ள அவசியமான வழிகளைக் கற்றுக்கொண்டார்.

 வாசிக்கத் தெரிந்த பிறகு, ஜான் போஸ்கோ அடிக்கடி புத்தகமும் கையுமாகவே காணப்பட்டார். ஆடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச் சென்று அவற்றைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் போதும் கூட, அவர் புத்தகங்கள் வாசிப்பதில் கருத்தாயிருந்தார். அவருடைய பொறுமையையும், சாந்த குணத்தையும் கண்டு வியந்த மற்ற சிறுவர்கள், அவருடைய நண்பர்களாகி விட்டார்கள். ஜான் போஸ்கோ அவர்களுக்கு ஞான உபதேசம் கற்பித்தார். நம் திவ்ய அன்னையின் பாடல்களைப் பாட அவர்களுக்குப் பயிற்சியளித்தார். ஜான் போஸ்கோவுக்கு ஒன்பது வயதானபோது, அவர் ஒரு கனவு கண்டார். அது, அவரது உழைப்பு மிகுந்த எதிர்கால வாழ்வில், தேவ பராமரிப்பின்படி, சிறுவர்களுக்காக அவர் செய்ய வேண்டியிருந்த மிக நீண்ட பணியை அவருக்கு வெளிப்படுத்தியது. கடவுள் அவருக்கும், அவரு டைய எதிர்காலச் சபைக்கும். அவருடைய சிறுவர்களுக்கும் தாம் செய்ய இருந்த அனைத்தையும் இந்தக் கனவுகள் மூலமாகவே கடவுள் அவருக்கு வெளிப்படுத்தினார். ஒரு கனவில் அவருடைய காவல் தூதர் நரகத்திற்கும் கூட அவரை அழைத்துச் சென்று திரும்ப அழைத்து வந்தார்!

1830-ல் அவர் இளங்குருவான ஜோசப் கஃபாஸோ என்பவரைச் சந்தித்தார். ஜானிடம் விளங்கிய இயற்கையான திறமையையும், ஞானத்தையும் கண்டுபிடித்த அவர், அவரது பள்ளிப் படிப்புக்கு உதவி செய்தார். அவரது தாயும் அவருடைய கல்விக்குத் தேவையான பணத்தை கஷ்டப்பட்டுச் சம்பாதித்து அனுப்பினாள். 1835-ல் போஸ்கோ ஷியேரி என்னுமிடத்தில், அமல உற்பவ மாமரி ஆலயத்திற்கு அடுத்திருந்த குருமடத்தில் சேர்ந்து படித்த அவர், ஆறு வருடங்களுக்குப் பின், தமத்திரித்துவத் திருநாளன்று, தமது 26-ஆம் வயதில் குருத்துவ அபிஷேகம் பெற்றார். அபிஷேகத்திற்குப் பிறகு, தூரின் நகரில், சுவாமி கஃபாஸோவின் நிர்வாகத்தில், மேற்றிராசன குருக்களுக்கு உயர் கல்வி வழங்கி வந்த அர்ச். பிரான்சிஸ் அசிசியார் நிறுவனத்திற்கு போஸ்கோ சென்றார். அங்கிருந்தபோது, கஃபாஸோவுடன் சிறைப்பட்டவர்களைச் சந்திக்க அடிக்கடி சென்ற அவர் அங்கே இளம் வயதிலேயே குற்றங்கள் செய்து, தண்டனை அனுபவித்து வந்த சிறுவர்களைச் சந்தித்தார். அந்தக் கைவிடப்பட்ட அனாதைச் சிறுவர்கள் மீது பரிதாபம் கொண்டு, அவர்களுக்காக உழைக்கத் தொடங்கிய அவர், அவர்களுக்கு ஞான உபதேசம் கற்பித்து, அவர்கள் விடுதலையாகும்போது, அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கவும் உதவினார்.

 இதன்பின் அவர் சிறுவர்களுக்காக, ஆரட்டரி (ஜெப விடுதி) என்னும் அமைப்பைத் தொடங்கினார். அதுவே சுவாமி போஸ்கோவுக்கு நிரந்தரப் பணியாக ஆனது. ஆனாலும் அனைவருக்கும் எல்லா வசதிகளையும் அவரால் செய்து தர முடியவில்லை. சில சிறுவர்கள் பாலங்களின்கீழ் அல்லது கிடைத்த இடங்களில் உறங்கினார்கள். இரு முறை தம் இல்லத்தில் அவர்களைத் தங்க வைக்க அவர் முயன்றார். ஆனால் அதில் பல பிரச்சினைகளைச் சந்தித்தார். ஆயினும் அவர் மனந்தளராமல், தம் தாயுடன் சேர்ந்து, வால்டோக்கோ சேரியில் தாம் வாடகைக்குப் பிடித் திருந்த மூன்று அறைகள் உள்ள வீட்டில் சிறுவர்களைத் தங்க வைத்தார். 1852-ல் 36 ஆக இருந்த சிறுவர்களின் எண்ணிக்கை 1861-ல் 800 ஆக உயர்ந்தது.

சிறுவர்களால் போஸ்கோ பல தொந்தரவுகளுக்கும் ஆளானார். அரசியல்வாதிகளிடமிருந்தும் காவல் துறையினரிடமிருந்தும் அவருக்குப் பல பிரச்சினைகள் வந்தன. அவரைக் கொல்லவும் கூட சில முயற்சிகள் நடந்தன. ஆனால் தேவ பராமரிப்பின்படி, சரியான சமயங்களில் அவருக்குத் துணையாக வந்த ஒரு பெரிய நாயின் உதவியால் அவர் எப்போதும் காப்பாற்றப்பட்டார்.

அவருடைய பாதுகாப்பில் வளர்ந்த இளைஞர்களான சில சிறுவர்கள் அவரைப் பின்பற்றி, கைவிடப்பட்ட சிறுவர்களுக்கு ஊழியம் செய்ய முன்வந்தனர். இதுவே சலேசிய நிறுவனத்திற்கு விதையானது. இதற்கான விதிமுறைகளை போஸ்கோ 1857ல் உருவாக்கினார். 1859-ல் அவர் அனுபவம் மிகுந்த குருவான விட்டோரியோ அலாஸோனாட்டி என்பவரையும், 15 குருமாணவர் களையும் கொண்டு அர்ச். சலேசியத் துறவற சபையை ஸ்தாபித்தார். அவர் உருவாக்கிய சபைச் சட்டத் தொகுப்பு 1873-ஆம் ஆண்டில் பாப்பரசர் ஒன்பதாம் பத்திநாதரால் அங்கீகரிக்கப்பட்டது.

1871ல், போஸ்கோ. மார்னீஸ் என்னும் மலைக் கிராமத்தில் மேரி மஸரெல்லோவுடனும், சிறுமிகள் குழு ஒன்றுடனும் பணியாற்றினார். இந்தச் சிறுமிகளுக்கு ஊழியம் செய்வதற்காக, அவர் துறவற சகோதரிகளின் குழு ஒன்றை ஸ்தாபித்தார். இவர்கள் கிறீஸ்தவர்களின் சகாயமாகிய மாமரியின் புதல்வியர் என்று அழைக்கப்பட்டார்கள்.

போஸ்கோ 1853 முதல் 1984 வரை ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரைகள் எந்த அளவுக்கு மிகச் சிறந்தவையாக இருந்தன என்றால், அவர் இறந்தபின் பாப்பரசர் பன்னிரண்டாம் பத்திநாதர் 1949-ஆம் ஆண்டில், அவரைக் கத்தோலிக்க அச்சு வெளியீட்டாளர்களின் பாதுகாவலராகப் பிரகடனம் செய்தார். சலேசிய சபையினர் சில நாடுகளில் வேதபோதகப் பணிக்காக அனுப்பப்பட்டார்கள். குறிப்பாக. 1875 அக்டோபரில், முதல் வேதபோதகர்கள் அர்ஜெண்ட்டினாவுக்குச் சென்றார்கள்.

ஜான் போஸ்கோ, 1888, ஜனவரி 31 அன்று மரித்தார். அவரது புனிதப்பட்ட விசாரணையில் அவரது சபையினர் அவரது அர்ச்சியசிஷ்டதனத்திற்கு ஏராளமான சான்றுகளை அளித்தார்கள். பாப்பரசர் 11-ஆம் பத்திநாதர் 1929 ஜூன் 2 அன்று அவருக்கு முத்திப்பேறு பட்டமும், 1934 ஏப்ரல் 1. உயிர்ப்பு ஞாயிறன்று அர்ச்சியசிஷ்டவர் பட்டமும் வழங்கினார்.


நன்றி: மாதா பரிகார மலர் - ஜனவரி-பிப்ரவரி 2024

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக