Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 20 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 4

  ஆல்பிஜென்சிய பதிதர்களின் அட்டூழியம்


காஸ்டிலின்
அரசனான 8ம் அல்போன்ஸ் தன் மூத்த மகனுக்கு டென்மார்க் நாட்டின் அரசனான வால்டேமாரின் மகளான இளவரசிக்கு திருமணம் ஏற்பாடு செய்வதற்காக அந்நாட்டு அரசனிடம் தன் நாட்டின் பல உயர்குல அரண்மனை அதிகாரிகள் மற்றும் குருக்கள் அடங்கிய தூதுக்குழு ஒன்றை அனுப்பினான். வந். டீகோ மேற்றிராணியாரையும் அவர்களுடன் செல்வதற்கு அரசன் ஏற்பாடு செய்தான். எனவே 1203ம் ஆண்டில் டென்மார்க் செல்வதற்கான பயணத்தில் தன்னுடன் தன் உற்ற நண்பரான அர்ச்.சாமிநாதரையும் மேற்றிராணியார் அழைத்துச் சென்றார். வடக்கு ஐரோப்பிய நாடான டென்மார்க்கை நோக்கி அரசாங்க தூதுக்குழு பயணம் செய்தபோது 300 மைல் தூரம் சென்றபோது பிரான்சின் தெற்கு பிராந்தியத்தை அடைந்தனர். அப்பகுதியிலுள்ள கத்தோலிக்கு தேவாலயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு கிராமங்களும் நகரங்களும் சு+றையாடப்பட்டிருப்பதையும் வயல்வெளிகள் எரிக்கப்பட்டு கருமையாக காட்சியளிப்பதையும் மிகவும் அதிர்ச்சியுடனும் துயரத்துடனும் பார்த்தனர். அதற்கான காரணத்தை வினவியபோது, ஆல்பி என்ற நகரில் உருவாகி பிரான்சு நாடு முழுவதையும் சீர்குலைத்து வரும் ஆல்பிஜென்சிய பதிதர்கள் கத்தோலிக்கு வேதத்தை அழிப்பதற்காக கையாண்ட வெறியாட்ட செயல்முறையே அது என்று கண்டறிந்தனர்.

அப்பதிதர்கள் கத்தோலிக்கர் வசிக்கும் ஊர்களைக் கொள்ளையடித்து சுறையாடுவது மட்டுமல்லாமல் அங்கிருக்கும் சிறுவர்களையும் சிறைபிடித்துச் சென்றனர் என்பதையும் கண்டறிந்தனர். சில வருடங்களாகவே ஆல்பிஜென்சிய பதிதர்கள் கத்தோலிக்கருக்கு எதிரான கலகத்தில் ஈடுபட்டிருப்பது இவர்களுக்குத் தெரிய வந்தது. ஏற்கனவே கிழக்கு ஐரோப்பாவில் டைனிப்பர், ஓல்கா ஆற்றங்கரைகளில் வசித்துவரும் டார்டார் என்ற காட்டுமிராண்டி இனத்தவர்கள் அவ்வப்போது மேற்கத்திய கிறிஸ்துவ நாடுகளைக் கொள்ளையடித்து பெரும் சேதத்தை விளைவித்துவருவதைக் குறித்து அக்காட்டுமிராண்டிகளிடம் சென்று வேதபோதக அலுவலை மேற்கொள்வதற்காக மேற்றிராணியார் வந்.டீகோ ஆண்டகையை பாப்பரசர் அனுமதிப்பாரேயாகில் அவருடன் அவ்வுன்னத அப்போஸ்தலிக்க அலுவலை நிறைவேற்றுவதில் என் ஜீவியத்தின் எஞ்சிய காலத்தை அகமகிழ்வுடன் கழிப்பேன். அதுவே என் பெரும் பாக்கியமாகும்என்று அர்ச்.சாமிநாதர் அடிக்கடி தனக்குள் சொல்லிக் கொள்வார். ஆல்பிஜென்சியர்களையும் டார்டார் இனத்தவரையும் மனந்திருப்புவதற்கான ஆன்ம இரட்சணிய அலுவலை உடனே துவக்குவதற்கான உன்னத தேவசிநேக நெருப்பினால் இருவருடைய இருதயங்களும் பற்றியெரிந்தன.

அரசாங்க திருமண ஏற்பாட்டிற்காக சென்று கொண்டிருந்த அரண்மனைக் குழுவிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, மேற்றிராணியாரும் சாமிநாதரும், ஆல்பிஜென்சிய பதிதர்களால் நலிவடைந்திருந்த ஏழைக் குடியானவர்களுக்கு உதவிடும்வகையில் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பண உதவி செய்தனர். அர்ச்.சாமிநாதர் மேற்றிராணியாரிடம், “ஆண்டவரே! அந்தப் பதிதர்களைப் பற்றி நன்கு அறியும்படியாகவும் அவர்களால் பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு நாம் உதவும் வகையில் சிறிது நேரம் நம் பயணத்தை ஒத்தி வைப்போம். நன்றாக சாப்பிட்டவுடன் நடந்ததைப்பற்றி அவர்கள் நமக்கு விளக்கமாகக் கூறமுடியும். அதனால் நம்மாலான உதவியை அவர்களுக்கு அளிக்கலாம்என்றார்

அதற்கு மேற்றிராணியாரும் சம்மதித்தார். அர்ச்.சாமிநாதர் கொடுத்த் உணவை உண்டபிறகு, புத்துணர்வை அடைந்த அந்த எளிய குடியானவர்களிடம், வந். டீகோ ஆண்டகை, “ அன்பான பிள்ளைகளே! அந்தப் பதிதர்களைப்பற்றி விரிவாகக் கூறுங்கள்என்றார். அதற்கு அவர்கள், “ ஆண்டவரே! ஆல்பிஜென்சிய பதிதர்கள் இரண்டு கடவுள்கள் இருக்கிறார்கள் என்றும் ஒரு கடவுள் நல்லவர் என்றும் மற்றொருவர் கெட்டவர் என்றும் போதிக்கிறார்கள். நல்ல கடவுள் ஆத்துமத்தையும் கெட்ட கடவுள் சாPரத்தையும் படைத்தாரென்றும் ஆனால் கெட்ட கடவுள் படைத்த சாPரம் கெட்டதாக இருப்பதால் அதை அழிக்க வேண்டும் என்ற கொள்கையை பரப்பி அவர்கள் தற்கொலை செய்வதை நடைமுறைபடுத்தி வருகின்றனர். அவர்கள் திருமணத்தையும் மற்ற எந்த தேவதிரவிய அனுமானத்தையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள். சுவிசேஷத்தையும் திவ்யபலிபூசையையும் அவர்கள் ஏற்காமல் பகைக்கிறார்கள். நாங்கள் அவர்களுடைய பதித போதனைகளை ஏற்காததால் எங்களுடைய வயல்களை எரித்தனர். தேவாலயங்களையெல்லாம் அழித்துப் போட்டனர்என்றனர். இதைக் கேட்ட மேற்றிராணியாருடைய முகம் துயரத்தால் கருத்தது.

அவர்களிடம் அவர் பின்வருமாறு உரையாடினார்:

பரிசுத்த ஸ்தலங்களை கொள்ளையிட்ட பொருட்களை வைத்து அவர்கள் என்ன செய்கின்றனர்?”

ஆண்டவரே! அவற்றை அவர்கள் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்துகின்றனர்

பரிசுத்த பண்டங்களையுமா?”

ஆமாம்

அது அவசங்கையாயிற்றே!”

ஆமாம். ஆண்டவரே

அப்பகுதியைச் சேர்ந்த தூலோஸ் மற்றும் பெசியர்ஸ் குறுநிலங்களின் பிரபுக்களும் இந்த பதிதர்களின் வஞ்சக வலையில் சிக்குண்டு பதிதர்களாக ஜீவிக்கலாயினர். அவர்கள் அந்தப் பதித மத வளர்ச்சிக்காக தங்களுடைய பதவி பெயர் கீர்த்திபணத்தைக் கொண்டு உதவிவந்தனர். தன் பேரப்பிள்ளைகளை பதிதர்கள் சிறைபிடித்துச் சென்றதால் மிகவும் வருத்தத்துடன ஒரு வயதுமுதிர்ந்த குடியானவன், மேற்றிராணியாரிடம் வந்து, “ ஆண்டவரே, இப்போது உங்களுடைய உதவி மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. இன்னும் சில நாட்களில் ஆல்பிஜென்சியர் மீண்டும் இங்கு திரும்பி வருவார்கள். எங்களுக்கு என்ன நேருமோ என்று பயமாயிருக்கிறதுஎன்றார்.

மேற்றிராணியார் அவர்களை திடப்படுத்தி ஆறுதல் சொல்ல முற்பட்டபோது, அரசனுடைய தூதுக் குழுவினரை அழைத்துச் சென்ற படைவீரர்கள் இருவர் குதிரையில் வந்து மேற்றிராணியாரிடம்,“ஆண்டவரே உங்களுக்காக இரண்டு மணி நேரம் காத்திருக்கிறோம். என்ன நேர்ந்தது?”என்றுவினவினர்.

அதற்குமேற்றிராணியார்

நானும் சங்.தோமினிக் சுவாமியாரும் இந்த விவசாயிகள் தங்களுக்கு பதிதர்களால் நிகழ்ந்த கொடுமைகளையும் இழப்புகளையும் பற்றி கூறக் கேட்டுக் கொண்டிருந்தோம்என்றார்.

அதற்கு அவ்வீரர்கள், “இது போல ஆயிரக்கணக்கான மக்கள் அவதியுறுகின்றனர். ஆல்பிஜென்சிய பதிதர்களோ அதிக படைபலம் மிக்கவர்கள். நாம் ஒன்றும் செய்ய முடியாதுஎன்று கூறினர்.

ஆனால் அதைப்பற்றி நாம் சிந்தித்தால் ..”

அதற்கு நமக்கு நேரமில்லை ஆண்டவரே! நாம் நமது பயணத்தைத் தொடரவேண்டும்டென்மார்க் நாட்டைஅடைவதற்கு இன்னும் ஆயிரக்கணக்கான மைல் தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்ததால் மேற்றிராணியார் குடியானவர்களிடம், “ என் பிரியமான பிள்ளைகளே! உங்களுக்கு எங்களால் தற்போது செய்யக்கூடிய மிகச்சிறந்த உதவி ஜெபமாகும்என்று கூறிக்கொண்டே தனது வலது கரத்தை அவர்களுக்கு மேல் உயர்த்தி சிலுவை அடையாளமிட்டு ஜெபம் சொல்லி ஆசீர்வதித்தார். இதுவரை தன் ஜீவியத்தில் யாதொரு நிச்சயமான குறிக்கோளும் இல்லாமல் இருந்ததை உணர்ந்திருந்த அர்ச்.சாமிநாதர்

இப்பொழுது ஆல்பிஜென்சிய பதிதத்தை வேருடன் அழிக்கும்படியாகவும் அப்பதிதர்களை மனந்திருப்பும்படியாகவும் மாபெரும் அப்போஸ்தலிக்க அலுவலுக்காகவே தான் விசேஷமாக அழைக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தார்.

தூலோஸ் நகரிலிருந்த ஒரு இல்லத்தில் ஒரு இரவு தங்க நேரிட்ட போது, அந்த வீட்டுக்காரன் ஆல்பிஜென்சியன் என்பதை அறிந்தனர். இந்த ஒரு ஆத்துமத்தையாவது ஆண்டவரிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று அர்ச்.சாமிநாதர் மிகவும் ஆவல் கொண்டார். அன்று இரவு முழுவதும் அவன் அர்ச்.சாமிநாதரிடம் தர்க்கம் செய்வதில் ஈடுபட்டான். அர்ச்.சாமிநாதரின் தெளிந்த மகோன்னதமான ஞானஉபதேசத்தினாலும் பக்தி பற்றுதலினாலும் அடுத்த நாள் காலையில் அப்பதிதன் தன் கல்நெஞ்சு இளகியவனாக சர்வேசுரனிடம் மனந்திரும்பி திருச்சபைக்குள் சேர்க்கப்பட்டான்.†

அர்ச்.அமலோற்பவ மாமரியே வாழ்க! (தொடரும்)


அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 2


அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 3

   ஓஸ்மா மேற்றிராசனத்தில் சாமிநாதர்

மற்றொரு சமயம், குருமடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, அர்ச். சாமிநாதர் ஒரு ஏழைப் பெண்ணை சந்தித்தார். அவள் மீளாத் துயருடன் இருந்தாள். அவளுடைய மகன் மகமதியரான மூர் இனத்தாரால் அடிமையாக பிடிபட்டு கொண்டு செல்லப்பட்டதால், அவள் அளவில்லாத வேதனை அடைந்தாள். இதை அறிந்தவுடன் அர்ச்.சாமிநாதர் அவள் மேல் மிகுந்த இரக்கம் கொண்டார். அவளுடைய மகனை மீட்பதற்கு தன்னிடம் போதிய பணம் இல்லாததை உணர்ந்தவராக, அர்ச்.சாமிநாதர் அவளிடம் தன்னை அவளுடைய மகனுக்கு பதிலாக அந்த மகமதியர்களிடம் விற்றுக் கொள்ளும்படி வேண்டினார். ஆனால் அந்தப் பெண் அதற்கு உடன்படிவில்லை. இந்நிகழ்ச்சி அர்ச்.சாமிநாதரின் அளவற்ற இரக்க சிந்தையை நமக்கு எடுத்துரைக்கின்றது. அவருடைய இளமையில் ஏற்பட்ட கிறிஸ்துவ அடிமைகளை மீட்கும் ஆவல், பின்னாளில் அவர் கிறிஸ்துவ அடிமைகளை
மகமதியர்களிடமிருந்து மீட்பதற்காகவே ஒரு துறவற சபையை ஏற்படுத்துவதற்கான திட்டங்களில் ஈடுபடலானார். ஆனால் அத்தகைய துறவற சபை அர்ச்.மாத்தா அருளப்பரால் ஏற்படுத்தப்பட்டது.

அர்ச்.சாமிநாதர் தமது 25வது வயதில் 1195ம் ஆண்டில் குருப்பட்டம் பெற்றார். அப்போது வந்.மார்டின் டி பாசான் ஆண்டகை ஓஸ்மா நகரத்து மேற்றிராணியாராக இருந்தார். அவருடைய விருப்பத்தின்படியும், மேற்றிராசனத்தின் சு+ழல்கள் மற்றும் தேவைகளின் பேரில் சாமிநாதர் மேற்றிராணியாருடைய இல்லத்திற்கு வரவழைக்கப்பட்டார். மேற்றிராசனத்தின் துறவற மடங்களுக்கு மேற்றிராணியாரே மடாதிபதியாக பொறுப்பேற்றிருந்தார். அதற்கு உதவும் பொருட்டு அனேக குருக்கள் மேற்றிராணியாருடைய இல்லத்தில் தங்கியிருந்தனர். திருச்சபையின் சட்ட திட்டங்களையும் ஒழுங்குகளையும் தனது மேற்றிராசனத்தில் நிலைநிறுத்தி அதனை சீர்திருத்துவதில் இந்த மேற்றிராணியார் பெரிதும் அயராமல் உழைத்தார். இவ்வலுவலில் மேற்றி;ராணியாருக்கு சங். டான் டீகோ டி

அஸ்வெடோ சுவாமியார் உறுதுணையாக இருந்தார். இக்குருவானவரும் மேற்றராணியாரும் அர்ச்.சாமிநாதரைப் பற்றிக் கேள்விபட்டு அவரை தங்களுடைய இல்லத்திற்கு வரவழைத்தனர். இங்குதான் சாமிநாதர் ஜெபத்திலும் வேதசாஸ்திரநுரல்களைப் படிப்பதிலும் ஆழ்ந்து ஈடுபடலானார்.

கிராமபுற பங்குகளை சந்தித்து வந்தார். அவருடைய அர்ச்சிஷ்டதனமும் அவரிடம் மறைந்திருந்த அற்புதமான திறமைகளும் ஞானமும் உலகத்திற்குப் புலப்படும்படி வெளிப்படலாயின. இரண்டு வருடங்களுக்குள் அங்கிருந்த உதவி செய்யும் குருக்களின் மடத்தின் துணை அதிபராக நியமிக்கப்பட்டார். மற்ற எல்லாரையும் விட இவரே வயதில் இளையவராக இருந்தார். 2 வருடங்களுக்குப் பிறகு, வந்.மார்டின் ஆண்டகை இறந்தார். சங்.டான் டீகோ சுவாமியார் ஓஸ்மா நகர மேற்றிராணியாரானார். இவர் ஆன்ம இரட்சணிய ஆவல் மிக்கவர். அர்ச்சிஷ்ட ஜீவியம் ஜீவித்து வந்தார். 9 வருடங்கள் ஓஸ்மா மேற்றிராசனத்தை சீர்திருத்தும் அலுவலில் அர்ச்.சாமிநாதர் மேற்றிராணியாருக்கு உதவிபுரிந்து வந்தார். சாக்சனி ஜோர்டான் என்ற சாமிநாதசபைத் துறவி இக்காலத்தில் அர்ச்.சாமிநாதர் வாழ்ந்த ஜீவியத்தைப் பற்றி பின்வருமாறு விவரிக்கின்றார்:

அர்ச்.சாமிநாதர், சகோதர குருக்களிடையே எல்லாருக்கும் முன்பாக செல்லும் ஒரு பற்றி எரிந்து சுடர்விடும் தீப்பந்தம் போல பரிசுத்த தனத்தில் முதன்மையாக விளங்கினார். தாழ்ச்சிமிகுந்த அர்ச்.சாமிநாதர் மற்ற எல்லாரைவிட தன்னை கடையராக நிறுத்திக் கொள்வார்.

கோடைகால குளிர்தரும் இனிய நறுமணத்தை வீசுபவராக எல்லாருக்கும் ஞான ஜீவியம் தரும் ஜீவிய மணத்தை தன்னைச் சுற்றி ஒளிரச் செய்பவராக திகழ்ந்தார். பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் எப்பொழுதும் இடைவிடாமல் தேவாலயத்தில் ஜெபத்தில் ஈடுபட்டிருப்பார். பாவிகளுக்காகவும்  துன்பப்படுகிறவர்களுக்காகவும் அழுது மன்றாடுவதற்கான தேவவரப்ரசாதத்தை

சர்வேசுரன் சாமிநாதருக்குக் கொடுத்திருந்தார். வேதனைபடுபவர்களின் துயரங்களை, அர்ச்.சாமிநாதர் தனது பரிசுத்த இரக்கத்தினுடைய அந்தரங்க சன்னிதானத்திற்குள் வைத்துத் தாங்கிக் கொண்டிருந்தார்.

எனவே இந்த உன்னதமான இரக்க சுபாவ மிகுதியினால் அவருடைய இருதயம் அழுத்தப்பட்டபோதெல்லாம் கண்ணீராக அவ்விரக்கம் அவருடைய கண்களிலிருந்து வழிந்தோடியது. அவர் தன் அறையில் கதவை மூடிக் கொண்டு ஜெபம் செய்வதிலும், சர்வேசுரனிடம் உரையாடுவதிலும் இரவு நேரத்தை செலவிடுவது அவருடைய அன்றாட வழக்கமாகும். ஆனால் அவருடைய விருப்பத்திற்கு மாறாக அவருடைய முனகல்களும் பெருமூச்சுகளும் வெளியே கேட்கும். மெய்யான தேவசிநேகமே அவர் சர்வேசுரனிடம் மன்றாடிக் கேட்ட நிலையான வரமாகும். நமது இரட்சணியத்துக்காக தமக்காக ஒன்றையும் ஒதுக்காமல் தம்மை முழுவதுமாக பலியிட்ட நமது திவ்ய இரட்சகரின் முன்மாதிரிகையைப் பின்பற்றி கிறிஸ்துவின் உண்மையான அங்கத்தினராகும் வண்ணம் அர்ச். சாமிநாதர் ஆத்தும இரட்சணிய அலுவலுக்காக தன்னை அர்ப்பணிப்பதில் எப்பொழுதும் பிரமாணிக்கமுடன் ஈடுபட்டிருந்தார்” (தொடரும்)

 



அர்ச்.கன்னிமாமரியே வாழ்க!


அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 2:

சனி, 18 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 2

 அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 2: 
இளமையில் ஞானம்


அர்ச்.சாமிநாதருக்கு 14 வயதானதும் அக்காலத்தில் ஸ்பெயினில் பிரசித்தி பெற்ற பலென்சியா பல்கலைகழகத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கு 10 வருடமாக உயர்கல்வி பயின்றார். அங்கு நிலவிய யாதொரு சுழலும் அவருடைய தேவசிநேக ஜீவியத்தை பாதிக்கவில்லை. அங்கு படிப்பில் அவருடைய அபரமானஅறிவு திறமையும் பழகுவதில் அவர் கொண்டிருந்த சம்மனசைப்போன்ற பரிசுத்ததனமும் பார்ப்பவர் அனைவரையும் அவர்பால் வெகுவாய் கவர்ந்தது. அவர் பிறந்ததிலிருந்தே சர்வேசுரனுடைய காரியங்கள் மட்டுமே அவரைக் கவர்ந்திருந்ததால், தற்பொழுது அவர் இருந்த பல்கலைக் கழகத்தில் நிலவிய உலகக் கவர்ச்சிகள் அவரை சிறிதளவும் பாதிக்கவில்லை. 

அங்கு இவர் பயின்ற உலக அறிவியல் இவருடைய உன்னத ஆவல்களை திருப்திபடுத்தவில்லை. வேதஇயலைப் படிப்பதில் தன்னையே விரைந்து ஈடுபடுத்திக் கொண்டார். அதிலுள்ள உன்னத பரலோக ஜீவசுனையின் நீரானது மேலான பரலோக சத்தியத்தைக் கண்டடையும்படி தன் ஆத்துமத்தில் ஏற்பட்டிருந்த தாகத்தைத் தணிக்கக்கூடியது என்பதை உணர்ந்திருந்தார். பரிசுத்த வேதாகமத்தின் நிரூபங்களையும் தத்துவ இயலையும் ஆழ்ந்து பயில்வதில் 4 வருடங்கள் ஈடுபடலானார். வேதகல்வியை தகுதியுடன் கற்பதற்கு ஒருவனுடைய இருதயமானது தன் ஊனியல்பை மேற்கொள்ள கற்றறிந்திருக்க வேண்டும் என்று அறிந்தார். எனவே அவர் அங்கு கல்வி கற்ற 10 வருடங்களும் திராட்சை இரசம் அருந்தாமல் தபசுடன் ஜீவித்திருந்தார்.

தியோடொரிக் அப்போல்டா என்பவர் அர்ச்.சாமிநாதரைப்பற்றி,;இவர் ஒரு சிறுவனாக இருந்தபோதிலும் ஞானத்தில் ஒரு அறிவு முதிர்ந்த துறவியாக காணப்பட்டார். அவருடைய வயதிற்குரிய இன்பங்களுக்கு மேம்பட்ட வயதினராக ஜீவித்தார். நீதியின் மேல் தாகமுள்ளவராக இருந்தார். அவர் தன்னைச் சுற்றியிருந்த இலக்கு ஏதுமில்லாத மூடத்தனமான உலகத்தை விட திருச்சபையையே பெரிதும் தன் கண்ணென போற்றி மகிழ்வார்.

திருச்சபையின் பரிசுத்த உறைவிடமான மகாபரிசுத்த தேவநற்கருணை பேழையே அவருக்கும் தங்கி மகிழும் ஓய்விடமாக இருந்தது. அவருடைய அன்றாட நேரமெல்லாம் ஜெபத்திற்கும் படிப்பிற்கும் சமமாக ஒதுக்கப்பட்டிருந்தது. சாமிநாதர் கொண்டிருந்த உன்னதமான பக்தி பற்றுதலுக்கும் அவர் பக்திபற்றுதலுடன் வேதகற்பனைகளை அனுசரித்து வந்த ஜீவியத்துக்கும் சம்பாவனையாக சர்வேசுரன் உன்னத ஞானத்தை அவருக்கு அளித்தார். சாமிநாதர் அந்த ஞானத்தைக் கொண்டு மகா கடினமான கேள்விகளுக்கும் மிக எளிதாக விடைஅளிப்பவராக திகழ்ந்தார்; என்று குறிப்பிடுகின்றார்.

1190ம் ஆண்டு இலையுதிர்காலம். ஸ்பெயின் நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டாயிற்று. பலேன்சியா நகரெங்கும் வறுமை0 அதனால் மக்கள் பசி பட்டினியால் மடிந்தனர். இதைக் கண்ட 20 வயது இளைஞரான சாமிநாதர் தனனிடமிருந்த பணத்தைக் கொடுத்தும் தன் உடைமைகளை விற்றும் அநேக ஏழைகளுடைய வறுமையை நீக்கினார். மேலும் தன்னிடமிருந்த விலையுயர்ந்த புத்தகங்களையும் விற்பதற்கு தீர்மானித்தார்.

அப்போது அவருடைய சக மாணவ நண்பர்கள் அவரிடம், “ இந்த புத்தகங்கள் இல்லாமல் எவ்வாறு உன் கல்வியை தொடரமுடியும்?”; என்று வினவினர். அதற்கு சாமிநாதர், “இவ்வுலகில் வாழ லேண்டிய மனிதரின் சாரங்கள் இறக்கும் தருவாயில் உள்ளபோது, இந்த இறந்த ஆட்டுத்தோலில் எழுதப்பட்ட இப்புத்தகங்கள் நமக்கு முக்கியமானவையாகுமோ? நான் இப்புத்தகங்கள் இல்லாமலேயே நான் சமாளித்துக் கொள்வேன்” என்றார். அவருடைய இந்த பிறர்சிநேக சேவை அவருக்கு பரலோகத்திலிருந்து இன்னும் மேலான வெகுமதிகளைப் பெற்றுத் தந்தது. சாமிநாதர் எல்லா பாடங்களிலும் முன்னைவிட இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்று, தன் வகுப்பிலேயே முதல் தலைசிறந்த மாணவனாக திகழந்தார். 

இவ்வாறு ஏழைகளின் வறுமையை போக்குவதற்காக சாமிநாதர் தன் விலையுயர்ந்த புத்தகங்களையெல்லாம் விற்றதைப்பற்றி ஓஸ்மா நகர மேற்றிராணியார் கேள்விபட்டதும் தீரமிக்க இந்த மாணவர் பிற்காலத்தில் ஒரு நல்ல குருவாக தனக்கு நல்ல உதவியாளராக பணிபுரியக்கூடும் என்று எண்ணி சாமிநாதர் தன்னிடம் வரும்படி ஆசித்தார். 

(தொடரும்) 

அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 1

அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் - அத்தியாயம் 1

 அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 1: 

பிறப்பும் குழந்தைபருவமும்



மத்திய நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் திருச்சபை அதிகாரிகள், குருக்கள் மற்றும் துறவியரிடையே நிலவிய மிதமிஞ்சிய உலகப் பற்றுதலினால் தேவசிநேகம் குளிர்ந்து திருச்சபையில் இருள்சுழ்ந்த காலத்தில் தான் சத்தியவேதத்தின் ஒளியையும் தேவசிநேக நெருப்பையும் கொண்டு வரும்படியாக சர்வேசுரன் இவ்வுலகிற்கு அனுப்ப திருவுளமான அர்ச்சிஷ்டவர்களில் முக்கியமானவரும் போதக குருக்களுக்கான சந்நியாச சபையை ஏற்படுத்தியவருமான அர்ச்.சாமிநாதர் 1170ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் காலராகோ கோட்டையில் அந்நாட்டின் அரசருடைய நண்பரும் உத்தம கத்தோலிக்க வீரப் பாரம்பரியத்தையுடையவருமான தொன் ஃபெலிக்ஸ் கஸ்மனுக்கும் ஆசாவின் ஜேனுக்கும் 3வது மகனாகப் பிறந்தார். இவருடைய ஞானஸ்நானப் பெயர் தோமினிக் கஸ்மன். இவருடைய தந்தை பக்திமிகு கத்தோலிகராக ஜீவித்ததால் தன் கோட்டையை ஒரு சந்நியாச மடத்தைப்போல வைத்திருந்தார். அவருடைய தாயார் ஜேன் ஒரு அர்ச்சிஷ்டவள். இவளுக்கு 1828ம் ஆண்டு 12ம் சிங்கராயர் முத்திபேறு பட்டம் அளித்தார். 

இவர் பிறக்கும்போது இவருடைய மூத்த சகோதரர்கள் இருவரும் குருமடத்தில் படித்துக்கொண்டிருந்தனர். முதல் சகோதரர் அந்தோணியோ மேற்றிராசன குருவானார். ஏழைகளுக்கு தன் உடைமைகளையெல்லாம் விற்றுவிட்டு மருத்துவமனை ஒன்றில் நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் பணிவிடை புரிவதில் தன் இறுதிகாலத்தைப் பரிசுத்தமாகக் கழித்தார். இரண்டாவது மூத்த சகோதரர், மானெஸ், ஒரு குருவானவராக அர்ச்சிஷ்ட ஜீவியம் ஜீவித்தார். இவருக்கும் பின்னாளில் முத்திபேறு பட்டம் அளிக்கப்பட்டது. ஜேன் தன் உதரத்தில் சாமிநாதரை குழந்தையாய் தரித்திருக்கிறபோது, எரிகிற ஒரு தீப்பந்தத்தை தன் வாயிலே கவ்வியபடி ஒரு நாய்குட்டி தன் வயிற்றுக்குள்ளே இருப்பது போலவும், அங்கிருந்து அது புறப்பட்டு வெளியே வந்து அத்தீப்பந்தத்தினாலே உலகை நெருப்பினால் பற்றவைத்து ஒளிர்விப்பதுபோலவும் ஒரு கனவு கண்டாள். அர்ச்.சாமிநாதர் தம்முடைய அர்ச்சிஷ்டதனத்தின் ஒளியினாலேயும் வேதசாஸ்திர பிரசங்கத்தின் பிரகாசத்தினாலும் பாவஇருளில் அகப்பட்டவர்களை ஒளிர்விப்பார் என்றும் மனிதருடைய இருதயத்தில் தேவசிநேக அக்கினியை அவர் பற்றவைக்கப்போகிறார் என்றும் அந்தக் கனவு ஒரு தீர்க்கதரிசன அடையாளமாயிருந்தது.

அவர் ஞானஸ்நானம் பெற்றபோது, அவருடைய ஞானத்தாய் குழந்தை தோமினிக்கின் நெற்றியில் ஒரு பிரகாசமாக ஒளிரும் நட்சத்திரம் பதிந்திருப்பதையும் அதினின்று புறப்பட்ட ஒளி உலகம் முழுவதையும் ஒளிர்வித்ததையும் காட்சியாகக் கண்டாள். இதை நிச்சயப்படுத்தும் வகையில் பின்னாளில் சாமிநாதருடைய ஞானமகளான முத்.செசிலியா என்பவள், “அர்ச்.சாமிநாதருடைய நெற்றியில் இருபுருவங்களுக்கும் நடுவிலிருந்து ஒரு ஒளியானது பிரகாசிக்கும். அதனால், அவரைச் சந்திக்கும் மனிதர்கள் அனைவரும் அவர்மேல் சங்கை கொள்ளும்படியும் அவரை நேசிக்கும்படியுமான மேலான இனிய உணர்வுகளால் நிரப்பப்படுவர்” என்று அவருடைய முகத்தோற்றத்தைப்பற்றி விவரிக்கின்றாள். அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்த ஞானஸ்நானத் தொட்டி பின்னாளில் மாட்ரிட் நகருக்கு எடுத்துச்செல்லப்பட்டு அதில் இதுநாள் வரைக்கும் ஸ்பெயின் நாட்டு அரசகுடும்பத்தின் பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு வருகிறது. சாமிநாதருக்கு 7 வயதானபோது காலராகோவிற்கு சமீபத்திலிருந்த குமியல் டி இசான் என்ற நகருக்கு அனுப்பப்பட்டார். அந்நகரத்தின் தலைமை குருவாக இருந்த அவருடைய மாமாவின் பாதுகாப்பில் வேதகல்வி பயின்றார். அங்கு தேவாலயத்தில் பரிசாரக பணியில் பயிற்றுவிக்கப்பட்டார். அடிக்கடி தேவநற்கருணையை சந்திப்பதற்காக தேவாலயங்களுக்குச் சென்று மகிழ்வார். 

குருக்கள் துறவியருடைய கட்டளைஜெபத்தை சொல்லப் பழகினார். தேவாராதனைக் கீர்த்தனைப் பாடல்களை பாடவும் திவ்யபலி பூசைக்கும் பொதுதிருவழிபாட்டு சடங்குகளிலும் பரிசாரக சிறுவனாக உதவிடக்கற்றுக்கொண்டார். இவையெல்லாம் பரலோகத்தில் சம்மனசுக்களால் நிறைவேற்றப்படும் தேவசிநேகத்தின் குற்றேவல்களாக சாமிநாதர் உணர்ந்து அவற்றில் தன் முழுஇருதய நேசத்துடன்ஈடுபடுவார். இவ்வாறு இயற்கையிலே குழந்தைபருவமுதல், சாமிநாதர் உத்தம கத்தோலிக்க பக்தி காரியங்களில் மிகவும் தீவரித்தநாட்டமுடையவராக வளர்ந்து வந்தார். சாமிநாதர் ஒரு சம்மனசைப்போல மிகுந்த ஆச்சார வணக்கத்துடனும் ஸ்திரத்துடனும் மகாபரிசுத்த தேவநற்கருணையின் பிரசன்னத்தில் ஆராதித்துக் கொண்டிருப்பதையும் தேவாலயத்தின் பீடங்களை சுத்தப்படுத்தியும் அழகுபடுத்தியும் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருப்பதையும் பார்ப்பவருடைய இருதய்ஙகளில் தேவசிநேகத்தைத் தூண்டுவார். †

(தொடரும்)

அர்ச்.அமலோற்பவ மாமரியே!வாழ்க! 

தேவ பாலனின் பிறப்பு மற்றும் புத்தாண்டு ஆசீர்வாதங்கள்


 ""ஓ  ஜெருசலேமே,  மிகவும்  அக்களிப்புடன்  களிகூர்வாயாக!  ஏனெனில்  உன்னுடைய  இரட்சகர்  உன்னிடம் வருவார். அல்லேலூயா!''

இந்த வார்த்தைகள் ஆகமன காலத்தின் சிறப்புச் செய்தியைச் சுருக்கமாக நமக்குத் தெரிவிக்கின்றன. ஆகமன  காலத்தின்  நான்கு  வாரங்களும்  நம்  ஆத்துமங்களைத்  தேவ  நம்பிக்கையால்  நிரப்புவது மட்டுமல்லாமல், சேசு பாலனின் வருகையால் நமக்குக் கிடைக்கப் போகும் சிறப்பான பரலோகபாக்கியங்களை  நாம்  நினைவுகூர்ந்து  அக்களிப்பால்  அகமகிழ  வேண்டும்  என்று  நம்  தாயாகிய  பரிசுத்த திருச்சபை இந்தக் காலத்தை நமக்குத் தந்துள்ளது. பழைய ஏற்பாட்டின் நீதிமான்கள் பாவத் தளைகளினால்  அவதியுற்றபோது  வாக்களிக்கப்பட்ட  இரட்சகரைக்  கடவுள்  விரைவில்  அனுப்ப  வேண்டும்  என  ஆசித்து  உருக்கமாக ஜெபித்தார்கள். அவர்களின் ஜெபங்கள் கேட்கப்பட்டன.  இரட்சகர் உலகிற்கு அனுப்பப்பட்டார்.  ஒவ்வொரு  வருடமும்  இந்த  இரட்சிப்பின்  நிகழ்வானது  நம்  வாழ்விலும்  நடக்க  வேண்டும்  என்பதை  நம்  பரிசுத்த  திருச்சபை  நினைவூட்டுகிறது.  நமது  ஆன்மாக்களும்  தேவ  நம்பிக்கையால்  நிரப்பப்பட்டு,  சுத்தம் செய்யப்பட்ட  நம்  ஆத்துமங்களில்  தேவ  பாலன்  மீண்டும்  ஒரு  முறை  பிறக்க  வேண்டும்  என்பதே திருச்சபையின் தலையான விருப்பமாகவும் உள்ளது.

இந்த  பாக்கியத்தை  நாம்  பெற  வேண்டுமென்றால், தேவதாயையும்,  அர்ச்.  சூசையப்பரையும்  நாம்  கண்டுபாவிக்க வேண்டும். அவர்கள் அன்று மாட்டுத் தொழுவத்தை எவ்வாறு பரிசுத்த தமத்திரித் துவத்தின்  இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன் பிறப்பதற்கு ஏற்ற இடமாக மாற்றினார்களோ, அதே போன்று  நம் ஆத்துமங்களைக் கறைப்படுத்தும் பாவங்கள் மற்றும் பாவ நாட்டங்களிலிருந்து நம் ஆத்துமங்களைச் சுத்தப்படுத்தி,  சகல  புண்ணியங்களாலும்  நிரப்பி,  அவற்றைப்  பரலோக  நறுமணம்  மிகுந்த  குடில்களாக  மாற்ற  வேண்டும்.  இந்த  அவசியமான  அலுவலைத்  தேவ  பாலனுக்குப்  பிடித்த  விதத்தில்  செய்ய  தேவதாயினுடையவும்,  அர்ச். சூசையப்பருடையவும்  உதவி  நமக்கு  மிகவும்  அவசியமாக  உள்ளது.  இது  மட்டுமே பரலோகம் விரும்புகிற உத்தம கிறீஸ்தவர்களுடைய கிறீஸ்து பிறப்பு நிகழ்வாகும். 

கடந்த  வருடம்  நம்மைப்  பலவிதமான  ஆபத்துக்கள்  மற்றும்  சோதனைகளிலிருந்து  காப்பாற்றிய  சர்வேசுரனுக்கும்,  நம்  பரிசுத்த  தேவதாய்க்கும்  நன்றி  கூறுவோம்.  சேசுவுக்கு  மிகவும்  பிடித்தமான  இந்த  நன்றியறிதல் என்ற புண்ணியம் பரலோகக் கொடைகளை மீண்டும் மீண்டும் அபரிவிதமாக நாம் பெறத் தகுதியுள்ளவர்களாக நம்மை மாற்றுகிறது. தேவபாலனின் உதவிகள் இன்றி நம்மால் உத்தமதனத்தில் ஒரு படி கூட முன்னேற்றம் அடைய இயலாது. தேவ வழிபாட்டின் புதிய வருடமும், அதனைத் தொடர்ந்து வரும்  புத்தாண்டும் கடவுளின் இரக்கத்தையும், ஆசீர்வாதங்களையும் நம் தேவதாய் வழியாக நமக்குப் பெற்றுத் தரட்டும்! சேசுவுக்குப் பிடித்தமான பரிசுத்த வாழ்வை வாழத் தீர்மானிப்போம்! இந்த இதழானது இப்படிப்பட்ட பரலோகச் சிந்தனைகளால் உங்கள் ஆத்துமங்களை நிரப்புவதாக!

நேசமிகு தேவ பாலனோடு கன்னிமாமரி நம்மை ஆசீர்வதிப்பார்களாக! வாசகர்கள் அனைவருக்கும் தேவ  பாலனின்  பிறப்பு  மற்றும்  புத்தாண்டு  ஆசீர்வாதங்களும்,  வரப்பிரசாதங்களும்  அபரிவிதமாய்க் கிடைப்பதாக!