Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வேதசாட்சி தேவசகாயம் பிள்ளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேதசாட்சி தேவசகாயம் பிள்ளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 செப்டம்பர், 2013

நற்கருணைக்குரிய மரியாதை!

இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின் எந்த சாத்தானின் வேலையோ, திவ்ய நற்கருணைக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகச் செலுத்தப்பட்டு வந்த வணக்கமும், மரியாதையும் திடீரென்று குறைந்து விட்டது. சில இடங்களில் போயே விட்டது. திவ்ய நற்கருணை ஒழிந்தால் திருச்சபையும் ஒழியும் என்பதை நன்கு உணர்ந்த சாத்தானின் வேலையே இது என்பதில் ஐயமில்லை.

1. நற்கருணை பேழை இருக்க வேண்டிய இடம் வத்திக்கான் சங்கத்துக்குப் பின் உரோமையிலிருந்து வந்த அதிகாரப்பூர்வமான அறிக்கைகளுள் ஒன்று நற்கருணை பேழை எப்போதும் ஒரு பீடத்தின் மீதுதான் இருக்க வேண்டும் என்பது. அதற்குத் தக்க காரணம் இல்லாமல் இல்லை. பூசையில் பலியான இயேசு, பூசை முடிந்த பின்பும் பலியானவராகவே இருக்கிறார். வேறெப்படி இருக்க முடியும்? பலியானது பலியானதுதான். ஆகவே, கிறிஸ்து நற்கருணைப் பேழையில் இருக்கும் போதும் பலியான நிலையில்தான் இருக்கிறார். அதனால்தான் பூசைக்கு வெளியே நற்கருணை உட்கொண்டாலும் உண்மையான பலியான ஆண்டவரை உட்கொள்கிறோம் என்பதில் ஐயமேயில்லை. ஆகவே, பலியான நிலையில் உள்ளவரை பலி நிகழும் பீடத்தின்மீது வைத்திருப்பதே பொருத்தம் என்று திருச்சபை எப்போதும் போதித்து வந்துள்ளது. ஆனால், வத்திக்கான் சங்கத்திற்குப் பின் சுவருக்குள்ளே (பணப்பெட்டி போல) புதைத்து வைப்பது, தூண்மேல் வைப்பது, கோவிலில் எங்காவது ஒரு மூலையில் வைப்பது இவை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சிலர் சிறியதொரு மேசை மேல் வைத்து ஆண்டவருக்கு மிக அருகே அமர்ந்து ஆராதனை செய்கிறார்களாம். கிறிஸ்துவை விசுவாசத்தால் நெருங்கலாமே தவிர அருகாமையில் அல்ல. திருச்சபை ஒழுங்கை மீறி செய்யப்படும் எதுவும் நிச்சயமாக சர்வேசுரனுக்கு ஏற்காது என்பதில் ஐயமில்லை.

2. நற்கருணை பேழை கூடாரம் போல் காட்சியளிக்க வேண்டும் பேழை என்று தமிழில் வழங்கும் சொல் ஆங்கிலத்தில் TABERNACLE எனப்படுகிறது (இது இலத்தீன் மொழியிலிருந்து பிறந்த சொல்). இச்சொல்லுக்கு கூடாரம் என்று பொருள். பழைய ஏற்பாட்டுக் கூடாரத்தை நினைவுறுத்துவதோடு, புதிய ஏற்பாட்டில் 'வார்த்தை மனு உருவானார். நம்மிடையே குடிகொண்டார்' (அரு. 1:14) என்னும் அருள்வாக்கை நினைவுறுத்துகிறது. குடிகொண்டார் என்ற சொல்லுக்குக் கிரேக்க மூலத்தில் கூடாரம் அடித்தார் என்ற பொருளே உண்டு என்பது மறைநூல் அறிஞர் விளக்கம். அவரும் (மனு உருவானவரும்) மனு உருவில் நம்மிடையே வாசம் செய்வது நித்தியத்துக்கல்ல. உலகம் இருக்கும் வரையில்தான் என்ற பொருளோடு, நாமும் இவ்வுலகில் கூடாரத்தில் வாழ்பவர் போல் ஒழுக வேண்டும். இது நமது நித்தியமான இல்லம் அல்ல (எபி 13:14) என்ற பொருளையும் குறிக்கவேயாம். நற்கருணைப் பேழையை வைக்க வேண்டிய முறையில் வைக்காவிட்டால் மேற்சொன்ன பொருளுக்கு இடமேயில்லையே!

3. நற்கருணையுள்ள பேழைக்கருகில் விளக்கு ஒன்று இரவும் பகலும் தொடர்ந்து எரிய வேண்டும் பழைய ஏற்பாட்டில் ஆசாரக் கூடாரம் எனப்பட்ட கூடாரத்தில் சந்நிதித் திரைக்கு வெளியே, தூய்மையான ஒலிவ எண்ணெய் விளக்கு எப்போதும் எரிந்து கொண்டிருக்க வேண்டும் என இறைவன் கட்டளையிட்டிருந்தார் (விப 27:20-21). இதன் நினைவில்தான் புதிய ஏற்பாட்டில் நற்கருணைக் கூடாரத்துக்கு முன் விளக்கு ஒன்று எரிய வேண்டும் என்ற ஒழுங்கு திருச்சபையில் ஏற்பட்டிருக்க வேண்டும். ஒலிவ எண்ணெய்யும் குறிப்பிடப்பட்டுள்ளது கவனித்தே. நம் நாட்டில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற தாவர வகை எண்ணெய் - VEGETABLE OIL. பயன்படுத்தப்பட்டு வந்தது. வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு எப்படியோ மண்ணெண்ணெய் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. சில இடங்களில் அதுவுமில்லை. மின்சார மின்மினி விளக்குகள் உள்ளன. மின்சாரம் இல்லையென்றால் விளக்கு இல்லை. இதுதான் இன்று பல இடங்களில் நற்கருணை நாதருக்குக் காட்டப்படும் மரியாதை. மற்ற எண்ணெய் விலைகள் அதிகம் என்று சாக்குப்போக்குக் கூறுபவர்கள் இருக்கலாம். வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு எத்தனையோ தேவையில்லாச் செலவுகளுக்குப் பணமிருக்க இந்த ஒன்றுக்கு மட்டும் பணமில்லாமல் போய்விட்டதா? ஆதியில் இறைவன் விளக்கு பற்றி சொன்னபோது தூய்மையான ஒலிவ எண்ணெய்யைக் கொண்டு வருமாறு இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடுவாய் (விப 27:20) என்றார். நம் பங்கு மக்களிடம் கேட்டுக் கொண்டால் கூட தேவைக்கு மேலாகவே கொண்டு வருவார்களே. பங்கு குருக்களுக்கு இந்த ஆர்வம் இருந்தால் தானே. மிகச்சில பங்குகளில் மட்டுமே மக்கள் எண்ணெய் கொண்டுவருவது காண்கிறோம். எண்ணெய் விளக்கு ஒருவிதத்தில் உயிருள்ள விளக்கென்னலாம். நம் முயற்சியில் சம்பாதிப்பதும் ஆகும். நம்மிடம் உயிருள்ள விசுவாசம் இருந்தால், இந்த உயிருள்ள விளக்குகளுக்குப் பஞ்சம் இராது. இந்த விளக்கு பகல் நேரத்திலாவது அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டேயிருக்குமாறு கவனத்துடன் பார்த்துக் கொள்வது நற்கருணைக்குச் செலுத்தப்படும் தனி வணக்கமாகும்.

4. திவ்ய நற்கருணைக்கு முன் மரியாதை பேழைக்குள் - இருந்தால் ஒரு முழங்கால் மண்டியிடுவது. ஸ்தாபகம் செய்திருந்தால் இரு முழங்கால்களும் மண்டி இடுவது என்று பல நூற்றாண்டுகளாகவே ஒழுங்கு இருந்தது. இன்று முழந்தாளிடுவது இந்தியப் பண்பல்ல என்ற கருத்தை சில அறிஞர்கள் பரப்பி வருகிறார்கள். இயேசுவின் பெயருக்கு (அதாவது இயேசுவுக்கு) விண்ணவர், மண்ணவர், கீழுலகோர், அனைவரும் மண்டியிட (பிலிப் 2:10) என்ற திருவசனம் இந்தியாவைப் பொறுத்தமட்டில் செல்லாதோ. முழங்காலிடுவது இந்தியப் பண்பாடல்ல என்கிறார்கள். சாஷ்டாங்கசமாக விழுவது இந்தியப் பண்பாடுதானே. இப்படி சாஷ்டாங்கசமாக விழுவதில் முழந்தாளிடுவது அடங்கியுள்ளதே. முழங்காலிடாமல் சாஷ்டாங்கசமாக விழுந்து பாருங்கள் தெரியும். ஒரு முழந்தாளிடுவது ஒரு விதமாக இருக்கிறதென்றார் ஒருவர். சரி, இரு முழந்தாளிடுங்களேன். மேலும் மரியாதையாயிருக்கும். இன்று நம் நாட்டில் அஞ்சலி HASTHA என்ற ஒரு கருத்து உலவுகிறது. இது நம் நாட்டுக்கு ஏற்றதென்பர். சரி, இதையாவது சரியாகச் செய்யக் கூடாதா? அஞ்சலி HASTHA என்றால் தலைமேல் கரங்குவித்து வணங்குவது அப்படியென்றால் அதை ஒழுங்காகச் செய்யுங்களேன். 'தலைவா, உனை வணங்க தலைமேல் கரம் குவித்தேன்" - என்று பாடுகிறார்கள். கரங்களைக் கட்டிக்கொண்டு. என்ன பொருத்தம். பிள்ளையார் முதலான தெய்வங்கள் சந்நிதியில் வணக்கம் செய்வோர் எப்படி வணங்குகிறார்கள் என்று சற்று கவனியுங்கள். நடுத்தெருவில் கூட தலைமேல் கரம் குவித்து வணங்குகிறார்கள். பிள்ளையாருக்குக் கிடைக்கிற மரியாதை கூட தம்மை வெறுமையாக்கிக் கொண்ட உண்மைக் கடவுள் நம் ஆண்டவருக்கு இப்போது கிடைப்பதில்லை. அந்தோ, கத்தோலிக்கமே, கழுத்துக்கு எங்கே சுளுக்கு வரப்போகிறதோ என்று பயந்து திவ்ய நற்கருணை முன் தலைமிகச் சிறிது வணங்கி பெரிய ஆராதனை செய்து விட்டதாக நினைத்துக் கொள்பவர் ஏராளம். இதற்கு முன் மாதிரி பெரும்பாலும் குருக்களும், துறவியருந்தான். சாதாரண மக்கள் இவர்கள் செய்வதைப் பார்த்து அப்படியே செய்கிறார்கள். மறைந்துள்ள தெய்வ மகத்துவத்துக்கு நாம் செய்யும் மரியாதை இதுதானா? எவ்வளவுக்கெவ்வளவு மறைந்துள்ளாரோ அவ்வளவுக்கவ்வளவு அதிக மரியாதை செலுத்துவதே முறை.

5. திருப்பலிக்குத் திருஉடைகள் திருப்பலி நிறைவேற்றும் நேரத்தில் குறிப்பிட்ட திரு உடைகளை அணிய வேண்டுமென்று திருச்சபை விதிகளைத் தந்துள்ளது. இந்த விசயத்திலும் குருக்கள் பலர் தவறுவது மிகவும் வருந்தத்தக்கது. ஏற்ற அதாவது திருச்சபை குறிப்பிட்டுள்ள உடைகளை முறையாக உடுத்துவது நற்கருணைக்கு நாம் காட்டும் மரியாதைக்கு அடையாளம். அங்கனம் செய்யாவிடில் இவ்வுன்னத அருட்சாதனத்தை அவமதிப்பதற்குச் சமமாகும்.

6. நன்மை வாங்கிய பின் நன்றியறிதல் அப்ப குணங்களில் ஆண்டவர் ஒரு பத்து - பதினைந்து நிமிடமாவது (அதாவது அப்பத்தின் குணங்கள் ஜீரணம் ஆகும் வரையில்) பிரசன்னம் நம் உடலில் உள்ளது. அந்த நேரத்தைச் சரியான முறையில் செலவழிக்காவிடில் நம் உள்ளத்தில் வரத்திருவுளமான இறைமகனுக்கு என்ன மரியாதை. நன்மை வாங்கிப் பயன் என்ன?

7. அப்பத்துண்டு துணுக்குகள் இவை பற்றி இன்று குருக்கள் அதிக அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. தட்டு எதுவும் பயன்படுத்தாமல் நன்மை கொடுப்பது. சாதாரணமாகி விட்டது. தட்டில் துணுக்குகள் காணப்பட்டால் அவற்றை மரியாதையோடு விரலால் சேகரித்து இரசத்தோடு அல்லது தண்ணீரோடு சேர்த்து உட்கொள்ள வேண்டும். குருக்கள் சிலர் இத்துணுக்குகளைச் சேகரிப்பதைப் பார்க்கும்போது அச்சிறு துண்டுகளிலும் ஆண்டவருடைய திருஉடல் உண்டு என்று நம்புகிறார்களா என்று கேட்கத் தோன்றும். அப்பங்களை ஆண்டவர் பருகச் செய்த புதுமையின்போது, மிகுந்திருந்த துண்டுகளைச் சேகரிக்கச் சொன்னது. உணவு வீணாகக் கூடா என்ற காரணத்துக்காக மட்டுமா? தாம் ஏற்படுத்தப் போகும் நற்கருணை அருட்சாதனத்தை முன் குறித்தது இப்புதுமை என்பது பொதுவான கருத்து. அப்படியானால் நற்கருணை - அப்பத்துண்டுகளும் சேகரிக்கப்பட வேண்டும் - மரியாதையோடு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் ஆண்டவருடைய மனதில் இருந்திருக்கக் கூடாதா? அப்படி ஒன்றுமில்லை என்றாலும், ஒவ்வொரு சிறு துண்டிலும் இயேசுவின் உடல் இருக்கிறது என்பதே திருச்சபையின் கருத்து. அப்பத் துண்டுகளைப் பாத்திரத் துணியால் துடைத்துச் சேகரிக்கும் குருக்கள் உளர். அப்படிச் செய்யும்போது துணியில் அப்பத் துண்டுகளை ஒட்டிக் கொள்ளக்கூடாதா? அவற்றின் கதிஎன்ன?

8. கோயிலில் பேசுதல் பூசை முடிந்த பின் ஆண்டவர் கோவிலை விட்டுப் போவதில்லை என்பதையும் உணராமல் அவர் எதிரிலேயே பலவிதமான பேச்சுகள் நடத்துபவர் இல்லாமல் இல்லை. ஒரு கவர்னர், முதலமைச்சர் போன்ற பெரிய மனிதர்கள் சந்நிதியில் செய்யத்துணியாததை மன்னாதி மன்னர் முன்னிலையில் செய்வது மரியாதையா? பூசை நேரத்தில் செபங்களைக் குருக்களும் சரி, மக்களும் சரி, சரியான கவனம் செலுத்தாமல் மடமடவென்று சொல்வதும் மரியாதைக்குறையேயன்றி வேறென்ன? இதுபோன்ற வேறு அவமரியாதைச் செயல்களும் உள்ளன. இவை எல்லாம் நற்கருணையில் உள்ள விசுவாசக் குறைவைத்தான் காட்டுகின்றன. இவையெல்லாம் நற்கருணையின் பெரிய விரோதியாகிய சாத்தான் செயலால் அன்றி வேறு எங்னம் நடக்க முடியும். இவற்றிற்கெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டிய கடமை நற்கருணையில் ஆழ்ந்த விசுவாசம் கொண்டுள்ளவர்கள் கடமை என உணர்வோமா?

Source from:http://www.anbinmadal.org

கார்மேல் - உத்தரியமாதா

பரிசுத்த பூமியாம் பாலஸ்தீன நாட்டின் மேற்கு திசையில் மத்தியதரைக்கடலுக்கு அருகாமையில் ஒரு உயர்ந்த மலை இருக்கிறது. இதற்கு கார்மேல் மலை என்றுப் பெயர். கடற்கரையோரத்தில் இருக்கும் இம்மலையைப் பற்றி விவிலியத்தில் அருமையான வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.

அதன் அழகிய சிகரம் எபிரேய மொழியில் " தோட்டம் " அல்லது " நடப்பட்ட திராட்சை தோட்டம் " உள்ற சிறப்பு பெயர் பெற்றிருக்கின்றது.இந்த மலையில் எலியாஸ் இறைவாக்கினரும் அவருக்குபின் எலிசேயுஸ் என்பவரும் தங்கி செப,தபங்களால் பல அரிய வல்ல செயல்கள் செய்து வந்தனர். இவர்கள் கார்மேல் மலை சன்னியாசி என்ற அழைக்கப்பட்டனர்.
இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் என்னும் கார்மேல் மாதா சபையைச் சார்ந்த ஒரு மடம் இருந்தது. இச்சபையின் தலைவர் அர்ச்  சைமன்ஸ்டாக் என்பவர் 1251ஆம் ஆண்டு ஜீலை மாதம் 16 ஆம் நாள் தேவஅன்னையின் அடைக்கலத்தை நாடி பக்தியாக செபித்துக் கொணடிருந்தார். அச்சமயத்தில் அன்னை மரியா தமது கரத்தில் ஒரு உத்தரியத்தை ஏந்திவளாய் அவர்க்கு காட்சி தந்தார்.

அவரைப் பார்த்து 'என் பிரிய மகனே, இதோ இந்த உத்தரியத்தை என் விருதாக (வெற்றிச்சின்னமாக) ஏற்றுக் கொள். இதை அணிந்துக் கொண்டு மரிக்கின்றவன் நித்திய நரக ஆக்கினையின்று தப்பித்துக் கொள்வான். இது காக்கிறவரின் அட்டையாளமாகவும், ஆபத்த சமயத்தில் கேடயமாகவும், என்னுடைய உதவியின் ஆரம்பமாகவும் இருக்கிறது. " என்று சொன்னார்கள்.

1301 ஆண்டு உத்தரியமாதா 22ஆம் அருளப்பர் என்ற திருதந்தைக்கு தரிசனமாகி உத்தரியசபைமார் மரித்து உத்தரிக்கிறஸ்தலத்திற்குப் போயிருந்தால் கூடிய விரைவில் நான் அவர்களை மீட்டுக் கொள்வோன். என்றார். மேலும் மரணத்திற்கு பிறகு வரும் முதல் சனிக்கிழமைகளில் அவர்கள் அவ்விடத்திலிருந்து விடுதலை ஆவார்கள்என மொழிந்தர்ர்கள்.

கார்மேல் மாதாவுடைய பேருதவியை கார்மேல் சபையினர்க்கு மட்டுமல்ல, அவரது உத்தரியத்தை அணியும் அனைவரும் பலன் அடைவார்கள். உத்தரியத்திற்கு பதிலாக உத்தரிய சுருபத்தை அணியலாம். இந்த பக்தியானது மோட்ச இராக்கினியின் ஞானபிள்ளைகளாக வாழ்வதற்கு உதவிபுரியும்.

அர்ச்  கன்னிமரியாளைப் பின்பற்றி அவரைப் போல் பரிசுத்தமாய் வாழ்ந்து அவர்களுக்கு சொந்தமானவர் என்று வெளிப்படையாக வாழ்ந்து காட்டுவது பெரும் பாக்கியமாகும்.

பரிசுத்த உத்தரியத்தை நாமும் அணிந்து தீயோனிடமிருந்து நம்மை காப்போம். எல்லா நேரங்களிலும் உத்தரியமாதா நம்மை காத்திடுவாள் என்பது திண்ணம்.

உத்தரியமாதாவே! எங்களுக்காக உமது திருகுமாரனிடம்  பரிந்து பேசுவீராக!

வேதசாட்சி தேவசகாயம் பிள்ளை


1712 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் கன்னியாக்குமரி மாவட்டத்தில்
நட்டாலம் என்ற ஊரில் தேவசகாயம் பிறந்தார். உயர்சாதி வைதீக இந்து நாயர் குடும்பத்தில் பிறந்த இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நீலகண்டபிள்ளை. இவரது தந்தை கேரளாவில் உள்ள காயங்குளம் கிராமத்தையும், தாய் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியையும் சேர்ந்தவர்கள். இந்து சாஸ்திரங்களின்படி துறைப்படி மத நம்பிக்கைகளையும், பாரம்பரியங்களையும் உறுதியாகப் பினபற்றும்படி கற்பிக்கப்பட்டார்.
இளம்வயதில் அரசுப் பணியில் சேர்ந்த தேவநகாயம் பிள்ளை 28ஆம் வயதில் திருவாங்கூர் அரசில் பத்மநாபபுரம் அரண்மனையில் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். புத்மநாபபுரத்திற்கு அருகிலுள்ள உதயகிரி கோட்டையிலிருந்த மன்னரின் இராணுவ அதிகாரி பெநேடிச்டுஸ் தே டிலனாய் என்ற ஐரோப்பியர் மூலமாக இயேசுவின் அன்பை தேவசகாயம் பிள்ளை கேள்விப்பட்டார். யாருடைய கட்டாயமும் இல்லாமல் தன் சொந்த விருப்பத்தின்படி தேவசகாயம் பிள்ளை கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். திருமுழுக்கின் போது இவர் “லாசரு” என்று அழைக்கப்பட்டார். அப்பெயர்க்கு தமிழிலும், மலையாளத்திலும் “தேவசகாயம்” என்று அர்த்தம்.
இன்றைய நெல்லை மாவட்டத்திலுள்ள வடக்கன்குளம் கிராமத்திலுள்ள ஆலயத்தில் திருமுழுக்குப் பெற்ற தேவசகாயம் பிள்ளை அக்கிராமத்தைச் சேர்ந்த ஞானப்ப அம்மாள் என்ற பெண்ணை மணம் புரிந்தார். இவருடைய மனைவியும் குடும்பத்தில் சிலரும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர். ஆனால் சிலமதவாதசக்திகளும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அவருடைய இனமக்களும் தேவசகாயம் பிள்ளை மீது பொய்க்குற்றங்களைச் சாட்டி பதவியைப் பறித்ததோடு, அன்றைய மாகாண எல்லையான ஆரல்வாய் மொழிக்கு அவரை அனுப்பிவிட்டனர்.
நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு மதம் மாறியதற்காகக் கைது செய்யப்பட்ட இவர் கிறிஸ்துவை மறுதலிக்கும்படி பலமுறை எச்சரிக்கப்பட்டும் இவர் கிறிஸ்துவின் அன்பைவிட்டு விலகுவதில்லை என்று உறுதியுடன் இருந்தார் . இதனால் கோபம்கொண்ட ராஜா மார்த்தாண்ட வர்மா அவரை மரண தண்டனைக்காக சிறையில் அடைத்தார். அவருடைய உடம்பில் கரும் புள்ளியும், செம் புள்ளி குத்தப்பட்டது. கைகள் பின்புறமாககட்டப்பட்டு கழுத்தில் எருக்கம் பூ மாலை அணிவிக்கபட்டு எருமை மாட்டின் மீது பின்னோக்கி அமரவைத்து அவரை கேவலப்படுத்தும் படியாகவும் கிறிஸ்தவத்திற்கு மாறினால் இப்படித்தான் மற்றவருக்கும் இருக்கும் என்பதற்கு பாடமாகவும் அவரை ஊர்ஊராக அழைத்து சென்றார்கள்.
புலியூர்குறிச்சி என்ற இடத்தலி தங்கியிருந்த இவர் முழங்கால்படியிட்டு செபித்த பாறையில் இன்றும் காணப்படும் ஒரு சிறுதுவாரத்தின் மூலமாகத் தண்ணீர் பீறிட்டு வரச் செய்து கர்த்தர் அவர் தாகத்தைத் தணித்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். பெருவிளை என்ற கிராமத்தில் அவர் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு வேப்பமரத்தின் இலைகள் சுகவீனத்திலிருந்து மக்களை விடுவித்தாகவும் நம்பப்படுகிறது. கடும் சித்திரவதைகள், சிறைவாசம், கொடுமைகள் எதுவும் தேவசகாயம் பிள்ளையின் விசுவாசத்தை அசைக்க முடியவில்லை. ஆரல்வாய்மொழி காடுகளுக்குள் கடத்தப்பட்ட இவர் ஆழ்ந்ததியானத்தில் ஈடுபட்டார். இந்த பரிசுத்தவானைக் காண அருகிலிருந்த கிராம மக்கள் வந்தனர்.
அன்றைய சமுதாயத்தின் ஒரு பிரிவினர் இவருக்கு விரோதமாகத் திட்டம் வகுத்தனர். போர்வீரர்கள் காடுகள் நிறைந்த மலைப்பகுதிக்குள் சென்று தேவசகாயம் பிள்ளையைத் துப்பாக்கியால் சுடடுக் கொல்ல முயற்சி செய்தனர். ஆனால் அந்தத் துப்பாக்கிகள் வெடிக்காததால் அவரைக் கொல்ல முடியவில்லை. ஆனால் தேவசகாயம் பிள்ளை அத்துப்பாக்கிகளை தன் கையில் எடுத்து ஆசீர்வதித்து போர்வீரகளிடம் திருப்பி கொடுத்து “ நீங்கள் விரும்பினால் என்னை சுட்டுக் கொல்லுங்கள்” என்றாராம். போர்வீரர்கள் துப்பாக்கியை எடுத்து ஐந்து முறை அவரை நோக்கி சுட்டனர். இவ்வாறாக 1752ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதியன்று போர் வீரர்களால் தேவசகாயம் பிள்ளை சுடடுக் கொல்லப்பட்டார். தான் இறப்பதற்கு முன்பாக தன்னை சந்தித்த குருவிடமிருந்து நற்கருணை பெற்றுகொண்டார். தேவசகாயம் பிள்ளையின் உடல் நாகர்கோயிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்துவின் மேல் கொண்ட விசுவாவத்திற்காக ஒரு சிறந்த கிறித்தவர் வேதசாட்சியாக மரித்தார் என்று சரித்திரத்தின் பக்கங்கள் கூறுகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டறு தூய சவேரியார் பேராலயத்தின் வலது பக்கம் இவரது புனிதர் பட்டத்திற்காக மன்றாடும் வகையில் பீடம் அமைக்கப்பட்டுள்ளது.
இவருக்கு புனிதர் பட்டம் கிடைக்க நாமும் ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

Source from:http://www.anbinmadal.org