ஜனவரி 6ம் தேதி
மூன்று இராஜாக்கள் திருநாள்
கிழக்கத்திய நாடுகளின் அரசர்களான கஸ்பார், பல்த்தசார், மெல்கியோர் ஆகியோருக்கு நமதாண்டவரின் திவ்ய பிறப்பு. ஒரு அதிசய நட்சகத்திரத்தினால் அறிவிக்கப்பட்டதால், இம் மூன்று அரசர்களும், தேவபாலனாகிய திவ்ய சேசுவை ஆராதிக்கும்படியாக, பெத்லகேமுக்கு வந்தார்கள். இவ்விதமாக, யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் உதிக்கும், என்கிற தீர்க்கதரிசனமானது நிறைவேறியது.
இம்மூன்று ஞானிகளான அரசர்கள், யூதர்களிடமிருந்து பிறக்கவிருக்கிற இரட்சகரும் அரசருமானவரைப் பற்றியே, இந்த அதிசய நட்சத்திரம் அறிவிக்கிறது, என்று கண்டுணர்ந்தனர். ஆகவே தான், இம்மூன்று அரசர்களும், பொன் தூபம், மீறை ஆகியவற்றை பிறக்கவிருக்கிற இராஜாதி இராஜாவான தேவ பாலனுக்குக் காணிக்கையாக ஓப்புக்கொடுப்பதற்குக் கொண்டு வந்தனர்.
பொன்: திவ்ய சேசுநாதார் அரசர்க்கெல்லாம் அரசர் என்பதைக் குறிக்கிறது.
தூபம் - திவ்ய சேசுநாதர், சர்வேசுரனாயிருக்கிறார் என்பதைக் குறிக்கிறது.
மீறை- திவ்ய சேசுநாதர், மனுக்குலத்தை இரட்சிக்கும்படியாக சிலுவையில் மரிக்கப்போவதையும், அவரை அடக்கம் செய் யப்போவதையும் குறிக்கிறது.
ஆண்டவர் தம்மை முதலில், இம்மூன்று இராஜாக்களுக்கு வெளிப்படுத்தினார்.
இரண்டாம் தடவையாக ஆண்டவர், தம்மை வெளிப்படுத்தியதை, இந்த திருநாளுக்குப் பின் எட்டாவது நாளன்று, அதாவது ஜனவரி 13ம் தேதியன்று, ஆண்டவருடைய ஞானஸ்நானத்தை, திருச்சபை கொண்டாடுகிறது. ஆண்டவருடைய ஞானஸ்நானத்தின்போது, தமது தேவத்துவத்தை, உலகத்திற்கு வெளிப்படுத்தினார்: யோர்தான் ஆற்றங்கரையில், அர்ச்.ஸ்நாபக அருளப்பரிடம் ஆண்டவர் ஞானஸ்நானம் பெற்றபோது, ஒருபுறாவின் வடிவில் திவ்ய இஸ்பரீத்துசாந்துவானவர், ஆண்டவர் மேல் இறங்கவும், நீரே! நமது நேச குமாரன்! உமது பேரில் நாம் பூண பிரியமாயிருக்கிறோம்! என்று பரலோகத்திலிருந்து ஒரு குரலொலி கேட்கப்பட்டபோது, ஆண்டவர் தமது தேவத்துவத்தை உலகத்திற்கு பகிரங்கமாக வெளிப்படுத்தினார். மூன்றாவது தடவை ஆண்டவர் தம்மையே உலகத்திற்கு வெளிப்படுத்தியதை, திருச்சபை, கானாவூர் கலியாணத்தின் போது, ஆண்டவர் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றி, முதல் புதுமையை செய்த திருநாளில் கொண்டாடுகிறது; இப்புதுமையைக் கண்டதால், ஆண்டவருடைய சீடர்கள், அவருடைய தேவத்துவத்தை விசுவசித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக