ஜனவரி 02
வேதசாட்சியான அர்ச். டெஃபென்டன்ட்
இவர் ஒரு துணிவுமிக்க உரோமானிய படை வீரர். இவர் தீபன் பிராந்தியத்தின் உரோமானிய இராணுவ சேனையைச் சேர்ந்த கிறீஸ்துவ வேதசாட்சிகளில் ஒருவராயிருந்தார்; அர்ச்.மோரிஸியோ என்கிற இன்னொரு வேதசாட்சி, இவர்களையெல்லாம் கொலைக்களத்திற்கு உற்சாகமூட்டி வழி நடத்திச் சென்றார். தீபன் உரோம இராணுவ சேனை , முதலில் எகிப்து தேசத்தில் முகாமிட்டிருந்தது! அதன் படைவீரர்களின் அசாதாரண வீரத்துவம் வாய்ந்த துணிச்சலினால் மிகவும் பிரபலமடைந்திருந்தனர். மேலும், இந்த சேனையின் பெரும்பாண்மையான வீரர்கள் ஞானஸ்நானம் பெற்று, கத்தோலிக்க வேதத்தை பிரமாணிக்கத்துடன் அனுசரித்து வந்தனர்.
இந்த தீபன் உரோம படைவீரர்களின் சேனை, எகிப்தின் தீபன் பிராந்தியத்திலிருந்து வெளியேறி, உரோமை சாம்ராஜ்ஜியத்தின் வடக்கு எல்லைப் பகுதியில் சக்கரவர்த்திக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த பகோடே என்கிற இனத்தவர்களை அடக்குவதில், சக்கரவர்த்தியான மாக்ஸ்மியனுக்கு (250-310) உதவும்படியாக, பிரான்ஸ் நாட்டின் கால் பிராந்தியத்திற்கு வர வேண்டும் என்று, உரோமை தலைமையகத்திலிருந்து கட்டளை வந்தது.
மார்சேல்ஸ் பிரதேசத்தில் ஓடுகிற ரோன் நதியின் கரையில் உரோமை இராணுவ சேனை முகாமிட்டு, போருக்காகக் காத்திருந்தனர்; அங்கே அஞ்ஞான தேவதைகளுக்கு ஒரு ஆரவாரமான பலி செலுத்தப்பட்டது; ஆனால், இராணுவ சேனையிலுள்ள கத்தோலிக்க வீரர்கள் இந்த அஞ்ஞான சடங்கில் பங்கேற்கவில்லை!
இதைக் கேள்விப்பட்டு சீற்றமடைந்த மாக்ஸ்மியன், கிறீஸ்துவ வீரர்களை அடக்க முற்பட்டான்; அவர்களை சாட்டையால் அடிப்பிக்கச் செய்து, அஞ்ஞான தேவதையை வழிபட மறுத்த பத்து கிறீஸ்துவ வீரர்களுக்கு ஒரு வீரர் என்கிற விகிதத்தில் கிறீஸ்து வீரர்களை தலைவெட்டிக் கொன்று போட்டான்; இவ்விதமாக, அர்ச்.டெஃபென்டன்ட் கிபி 286ம் வருடம் தலைவெட்டிக் கொல்லப்பட்டார்; பாக்கியமான வேதசாட்சிய கிரீடத்தைப் பெற்றுக் கொண்டார்!
கிபி 380ம் வருடம் வந்.தியோடோர் ஆண்டகை, மார்டிக்னியின் மேற்றிராணியாராக இருந்தபோது, அர்ச்.டெஃபென்டென்ட் மற்றும் அவருடைய சக வேதசாட்சிகளின் கல்லறை கண்டெடுக்கப்பட்டது! இந்த அர்ச்சிஷ்டவர்களுக்கு தோத்திரமாக தியோடோர் ஆண்டகை , ஒரு தேவாலயத்தைக் கட்டினார்.
சிவாஸ்ஸோ, காசாலே மொன்ஃபெராட்டோ, மெஸ்ஸியா, நோவாரா, லோடி என்கிற வட இத்தாலிய நகரங்களுக்கு, அர்ச்.டெஃபென்டென்ட் பாதுகாவலராயிருக்கிறார்! உரோமானிய படை வீரருடைய உடையில் சித்தரிக்கப்பட்டிருக்கிற இந்த அர்ச்சிஷ்டவரிடம் ஓநாய்கள் மற்றும் நெருப்பினால் ஏற்படும் ஆபத்திலிருந்து காப்பாற்றும்படி, வேண்டிக் கொள்வது, பலனுள்ள பக்திமுயற்சியாக அனுசரிக்கப்படுகிறது!
தீபன் இராணுவ சேனை (இது, அகாவுனும் வேதசாட்சிகளுடைய சேனை என்றும் அழைக்கப்படுகிறது!) முழு இராணுவ சேனையாக 6666 படை வீரர்களைக் கொண்ட மிகப் பெரிய சேனையாகத் திகழ்ந்தது!. இவர்கள் அனைவரும் கொண்டிருந்த தளராத கத்தோலிக்க வேத விசுவாசத்திற்காக, கிபி286ம் வருடம், செப்டம்பர் 22ம் தேதியன்று வேதசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர். இவர்களுடைய பரிசுத்த சரீரங்களின் அருளிக்கங்கள், ஸ்விட்சர்லாந்திலுள்ள செயிண்ட் மோரிஸ் ந வாலெய்ஸ் என்கிற மடத்தின் தேவாலயத்தில் பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக