ஜனவரி 5ம் தேதி
நமதாண்டவரின் மகா பரிசுத்தத் திருநாமத்தின் திருநாள்
சேசு என்கிற நமதாண்டவரின் மகா பரிசுத்தத் திருநாமத்திற்கு இரட்சகர் என்று அர்த்தம்.
13ம் இன்னசன்ட் பாப்பரசரால், 1721ம் வருடம், டிசம்பர் 20ம் தேதியன்று, இந்த திருநாள் திருச்சபையின் தேவ வழிபாட்டினுடைய காலண்டரில் சேர்க்கப்பட்டது. அர்ச். பத்தாம் பத்திநாதர் பாப்பரசர், இந்த திருநாளை, ஜனவரி 2ம் தேதியிலிருந்து 5ம் தேதிக்குள் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று, கொண்டாடவும், ஞாயிற்றுக்கிழமை இந்த நாட்களுக்குள் வராவிடில், 2ம் தேதியே கொண்டாடவும் கட்டளையிட்டார். ஆண்டவருடைய மகா பரிசுத்தத் திருநாமம், மகா வல்ல மையுள்ளது; ஏனெனில், அது திவ்ய சுதனாகிய சர்வேசுரனுடைய மகா பரிசுத்தத் திருநாமமாக இருக்கிறது. தம்முடைய மகா பரிசுத்தத் திருநாமத்தினாலே நாம் ஜெபிக்க வேண்டும் என்று, நமதுஆண்டவர்தாமே நமக்களித்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, நாம் அந்த மகா பரிசுத்தத் திரு நாமத்தை மகிமைப் படுத்துகிறோம். மேலும், நம் திவ்ய இரட்சகர் மூலமாக நாம் பெற்றுக்கொள்கிற சகல தேவ ஆசீர்வாதங்களையும், ஆண்டவருடைய மகா பரிசுத்தத் திருநாமம், நமக்கு ஞாபகப்படுத்துகிறது.
எனவே தான், அர்ச்.சின்னப்பர், “சேசுவின் நாமத்திற்குப் பரமண்டலத்தாரும், பூமண்டலத்தாரும், பாதாளத்தாருமாகிய சகலரும் முழந்தாட்படியிடவேண்டும்!” (பிலிப் 2:10) என்று பிலிப்பியருக்கு எழுதிய நிரூபத்தில் கூறுகின்றார்.
ஆண்டவருடைய மகா பரிசுத்தத் திருநாமத்தின் மீதான பக்திமுயற்சியை அனுசரிப்பதன் மூலம், ஆண்டவருடைய திரு நாமத்தை வீணாக உச்சரிக்கிற பாவங்களுக்கும், தேவதூஷணமாகிற பாவங்களுக்கும் பரிகாரம் செய்கிறோம். இன்று, விசேஷமாக நாம் நம் நேச இரட்கருடைய மகா பரிசுத்தத் திருநாமத்திற்கு எதிராக மனுக்குலத்தினர், கட்டிக்கொள்கிற தேவ தூஷணப் பாவங்களுக்கு நிந்தைப் பரிகாரம் செய்வதற்கான சில விசேஷ பக்தி முயற்சிகளையும், ஜெபங்களையும், ஆண்டவரின் மகா பரிசுத்தத் திருநாமத்திற்குத் தோத்திர மகிமையாக ஜெபிக்க வேண்டும்.
ஆண்டவரின் மகா பரிசுத்தத் திருநாமத்தின் பிரார்த்தனையை ஜெபித்தால், ஏழு வருட பலனை திருச்சபை அளிக்கிறது. இம்மகா உன்னத பக்திமுயற்சியை அர்ச். சியன்னா பெர்நர்தீன் மற்றும், அர்ச்.கபிஸ்திரான் அருளப்பர் ஆகியோர் பரப்பியுள்ளனர். இவர்கள் இருவரும் இத்தாலியின் குழப்பம் நிறைந்த நகரங்களுக்கு வேத போதக அலுவலில் ஈடுபட்டபோது, மேலே படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கிறபடி, நமதாண்டவரின் மகா பரிசுத்தத் திருநாமத்தின் ஒரு அடையாள முத்திரை வரையப்பட்ட ஒரு மரப்பலகையை அவர்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் பக்திபற்றுதலுடன் எடுத்துச் சென்றனர். சென்ற இடங்களிலெல்லாம் ஆண்டவருடைய மகா பரிசுத்தத் திருநாமத்தின் இந்த அடையாள முத்திரையைக் கொண்டு, அநேக வியாதியஸ்தர்களைக் குணப்படுத்தினா்; அநேக புதுமைகளை நிகழ்த்தினர். அர்ச்.சியன்னா பெர்னர்தீன் பயன்படுத்திய இப்பரிசுத்த மரப்பலகை, உரோமாபுரியின் ஆரா சேலியிலுள்ள தேவ மாதாவின் தேவாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.
“நீங்கள் வியாதியினாலும், துன்பத்தினாலும், உபத்திரவப்படும் போது, அல்லது பயத்தினால் பீடிக்கப்பட்டிருக்கும்போது, அல்லது பசாசினாலோ, அல்லது மனிதர்களாலோ தாக்கப்படும் போது, “சேசு” என்கிற ஆண்டவருடைய மகா பரிசுத்தத் திரு நாமத்தை வணங்கி, ஆராதித்து, உச்சரித்து, வேண்டி மன்றாடுங்கள்”!- அர்ச்.லாரன்ஸ் ஐஸ்டீனியன்
“நாம் இரட்சணியம் அடையவேண்டியதற்கு வானத்தின் கீழ் (அவருடைய நாமமல்லாது) வேறே நாமம் மனுஷருக்குக் கொடுக்கப்படவில்லை!” (அப்.நட 4:12)
ஆண்டவருடைய மகா பரிசுத்தத் திருநாமம்,எப்போதும் எல்லோராலும், நித்திய காலக்திற்குமாக ஸ்துதிக்கப் படக்கடவது!
Feast of Holy name of Jesus
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக