ஜனவரி 4 தேதி
அர்ச். லாங்கிரஸ் கிரகோரியார்
இவருடைய பேரனுடைய பேரனான அர்ச். தூர்ஸ் நகர கிரகோரியாரின் எழுத்துக்கள் மூலம், இவரைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். இவர், பிரான்ஸ் நாட்டிலுள்ள அவுட்டன் நகரத்தின் நிர்வாகியும் பிரபுவுமாயிருந்தார். இவருடைய நிர்வாகத் திறமையும் ஆட்சியும், அந்நகர மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டும் பாராட்டவும் பட்டது. 40 வருட காலம் இந்நகரத்தை இவர் ஆண்டபிறகு, இவருடைய மனைவி மரித்தாள்.உடனே இவர் தனது பதவியை இராஜினாமா செய்தார்; உலகத்தைத் துறந்து, துறவற மடத்தில் சேர்ந்தார். இவர் தன்னிகரற்ற விதமாக புண்ணியத்தில் சிறந்து விளங்கியதால், லாங்கிரஸ் நகரத்தினுடைய மேற்றிராணியாராக அபிஷேகம் செய்யப்பட்டார். உலகத்தின் மத்தியில், சகலத்தையும் துறந்து ஏகாந்தத்தில் ஜீவிக்கும் தபோதனரைப் போல் ஜீவித்தார்.அதே சமயம், போற்றுதற்குரிய விமரிசையுடனும், ஆன்ம ஈடேற்ற ஆவலுடனும், உத்தம ஞான மேய்ப்பராக அடுத்த 33 வருடங்கள்,தன் ஞான மந்தையைப் போஷிப்பதில் அயராமல் உழைத்தார்.
மேலும், தனது மகா ஆழ்ந்த தாழ்ச்சியாலும், இடைவிடா ஜெபத்தி னாலும், அசாதாரணமான தபசினாலும், சுத்த போசனத்தினாலும், இவர் தனது ஞான மேய்ப்பின் அலுவல்களை அர்ச்சித்துப் பரிசுத்தப்படுத்தினார். எண்ண முடியாத அஞ்ஞானிகளை இவர் மனந்திருப்பினார்; ஒழுங்கீனமாக ஜீவித்த அநேக உலக நேசர்களான கிறீஸ்துவர்களையும், இவர் மனந்திருப்பினார். கி.பி.539ம் வருடத் துவக்கத்தில், மூன்று இராஜாக்கள் திருநாளுக்கு சில நாட்களுக்குப் பிறகு, இவர் பாக்கியமாய் மரித்தார்.
அர்ச்.பெனிக்னுஸ் மீது இவர் கொண்டிருந்த பக்தியின் காரணமாக, அவருடைய கல்லறையின் அருகிலேயே இவரும், இவருடைய மகனும் புண்ணியவாளருமான டெட்ரிகஸ் என்பவரால் நல்லடக்கம் செய்யப் பட்டார்; டெட்ரிகஸ், இவருக்குப்பின், மேற்றிராணியா னார்.
அர்ச்.லாங்கிரஸ் கிரகோரியாரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக