ஜனவரி 1ம் தேதி
வேதசாட்சியான அர்ச். ஆல்மாகியுஸ்
கி.பி. 313ம் வருடம் மகா கான்ஸ்டன்டைன் சட்டப்படி கிறீஸ்துவ வேதத்தை அங்கீகரித்து, ஏற்றுக் கொண்டு, அதற்கான அரச ஆணையை பிரகடனம் செய்த பிறகு,காட்டு மிருகங்களிடம், கிறீஸ்துவர்களை தள்ளிவிட்டு, உரோமையர்கள் விளையாடும் கொடூர விளையாட்டு நிறுத்தப்பட்டது. இருப்பினும், ஆங்காங்கே, சில அஞ்ஞானிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில், கிறீஸ்துவர்களை உபாதிக்கும் அதே கொடூர விளையாட்டுகளைத் தொடர்ந்து நடத்தி வந்தனர்! கிறீஸ்துவர்களை மிருகங்களுக்கு இரையாக போடும் இக்கொடூர விளையாட்டு, மறுபடியும் வேத விசுவாசத்தை இழந்தவனும் வேத விரோதியுமான ஜூலியன் ஆட்சிகாலத்தில், அதிகார பூர்வமாக நாடெங்கிலும் நடைபெறலாயிற்று. இச்சமயம், கிளாடியேட்டர்ஸ் என்ற யெரில், தனிச் சண்டையில், கிறீஸ்துவர்கள் இறக்கி விடப்பட்டனர்; மைதானத்தில், கிறீஸ்துவர்கள், இறக்கும் வரை சண்டையிடும் கொடூர விளையாட்டு நடைபெறலாயிற்று.
அடுத்து வந்த ஹொனோரியுஸ் சக்கரவர்த்தி, கி.பி.395ம் வருடம் முதல், கி.பி.423ம் வருடம் வரை ஆட்சி செய்தார்; கத்தோலிக்கரான இவருடைய ஆட்சிகாலத்தில், கிறீஸ்துவ வேதம் நன்றாக வளர்ந்த போதிலும், முந்தின அஞ்ஞானிகளுடைய ஆட்சியின் காலத்திலிருந்த படியே, இரத்தவெறி கொண்ட கிளாடியேட்டர்ஸின் கொடிய விளையாட்டு, இன்னும் நிறுத்தப்படாமல், விடப்பட்டிருந்தது.
இருப்பினும், கி.பி.404ம் வருடம், உரோமை சாம்ராஜ்ஜியத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து அர்ச்.ஆல்மாகியுஸ்,உரோமாபுரிக்கு வந்தார். இவர் ஒரு துறவி.ஐனவரி 1ம் தேதியன்று, கிளாடியேட்டர்ஸின் வீர விளையாட்டு எப்படி இருக்கிறது? என்று அந்த விளையாட்டு நடை பெற்ற ஸ்டேடியத்திற்கு, இவர் சென்று பார்த்தார். அங்கு, இரண்டு கிளாடியேட்டர்ஸ் உயிர்போகும் வரை இரத்தக்களரியாக சண்டை போட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்து, மனமுருகியபடி, இவர் மைதானத்திற்குள் சென்று, இருவரையும் பிரித்து விட முயற்சித்தார்; மேலும், அவர், “இன்று, நமதாண்டவர் பிறந்த 8ம் நாள்.விக்கரகங்களை வழிபடுவதை நிறுத்துங்கள்! அசுத்த பலிசெலுத்தும் அஞ்ஞான சடங்குகளிலிருந்து விலகியிருங்கள். கொலை செய்யக்கூடாது! என்று சர்வேசுரன் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரல்லவா? குறிப்பாக இந்தக்காட்டுமிரான்டி மக்கள் கூட்டத்தினரை மகிழ்விப்பதற்காகக் கொலை செய்வதையும் சண்டைபோடுவதையும் விலக்கி விடுங்கள்!” என்று கூக்குரலிட்டுக் கூறினார்.
இதைக் கண்ட ஸ்டேடியத்தின் பார்வையாளர்கூட்டம், கோப வெறிகொண்டது. அவர்களுடைய விளையாட்டில் தலையிடுகிற இத்துறவி யார்? என்று கூச்சலிட்டபடி, அவர் அருகில் வந்த மூர்க்கர்களுடைய கூட்டம், அவர் மீதுகற்களை எரிந்து, அவரைக் கொன்று போட்டது! மனிதன் மனிதனைக் கொல்லக் கூடாது! என்று கூறி, மனித கொலையைத் தடுக்க வந்த அர்ச். ஆல்மாகியுஸ், அந்த மூர்க்கர்களால் இறுதியில் கொல்லப்பட்டார்.
இறுதியில், அர்ச்.அல்மாகியுஸ், அவரை உபாதித்துக் கொன்றவர்கள் மேலும், அவர்களுடைய தீமையின் மேலும் வெற்றி கொண்டார். ஏனெனில், இந்த துயர செய்தியைப் பற்றி அறிந்த ஹொனோரியுஸ் சக்கரவர்த்தி, அர்ச்சிஷ்டவரின் அறிவுரையை நாட்டு மக்கள் ஏற்று ஜீவிக்க வேண்டும்! என்று கட்டளையிட்டார்; அர்ச். ஆல்மாகியுஸ் ஒரு கிறீஸ்துவ வேதசாட்சி என்று சக்கரவர்த்தி கூறி, அர்ச்சிஷ்டவரை மகிமைப்படுத்தினார்; 404ம் வருடம், இனி ஒருபோதும் கிளாடியேட்டர்ஸ் சண்டை விளையாட்டு அனுமதிக்கப்படாது என்கிற நித்திய சட்டத்தையும் பிரகடனம் செய்தார்.
வேதசாட்சியான அர்ச்.ஆல்மாகியுஸ்! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
Life History of Saints in Tamil - Jan 1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக