ஜனவரி 10ம் தேதி
அர்ச். ஆகத்தோ பாப்பரசர்
இவர், சிசிலியில், 6ம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தார். பின்னர், இத்தாலி, பாலர்மோவிலுள்ள அர்ச்.ஹெர்ம்ஸ் மடத்தில் ஆசீர்வாதப்பர் சபைத் துறவியானார். தபசிலும், நிர்வாகத் திறமையிலும் சிறந்து விளங்கினார்.
கி.பி.678ம் வருடம், இவர் 100 வயதைக் கடந்த நிலையில், பாப்பரசரானார்; பாப்பரசர், டோனுஸ் இறந்தபிறகு, இவர் பாப்பரசரானார்.
இவர் பாப்பரசரான சிறிது காலத்திலேயே, யார்க் நகர அதிமேற்றிராணியாரான அர்ச்.விலிஃப்ரெட் உரோமாபுரிக்கு வந்தார்; இவரை, கான்டர்பரியின் தியோடோர், அநீதியாக, பதவி விலகச் செய்திருந்தார். அர்ச். ஆகத்தோ பாப்பரசர், உடனடியாக மேற்றிறாணியார்களின் கூட்டத்கை லாத்தரன் தேவாலயத்தில் கூட்டினார். யார்க் நகர மேற்றிராணியாரின் விவகாரத்தை ஆய்ந்தறிந்த பிறகு, அர்ச்.விலிஃப்ரெட்டை, மறுபடியும் யார்க் நகர மேற்றிராணியார் பதவியில், பாப்பரசர் அமர்த்தினார். இவருடைய ஆட்சிகாலத்தில், 6வது அகில உலக கிறீஸ்துவப் பொது சங்கம் 680-681 வருடங்களில் நடைபெற்றது. ஆண்டவருக்கு ஒரு சுபாவம் மட்டுமே உண்டு என்கிற பதிதத் தப்பறையை பரப்பிவந்த மோனோதெலைட் என்ற பதிதத்தப்பறையை இச்சங்கம் அடக்கி ஓடுக்கியது; இந்க பதிதர்கள், அந்நாள் மட்டும் வெகு காலமாக, திருச்சபையை இரு பிரிவுகளாகப் பிரித்து வைத்திருந்தனர்.
இந்த சங்கம், பாப்பரசர் டோனுஸ் காலத்தில் துவங்கியது. 4ம் கான்ஸ்டன்டைன் சக்கரவர்த்தி, திருச்சபையிலிருந்த இப் பிரிவினையை நீக்கி சமாதானத்தை ஏற்படுத்த ஆசித்தார். இக்காரியத்தின் மட்டில், அதாவது, பிரிவினைக்குக் காரணமான இப்பதிதத்தப்பறையின் மட்டில் ஒரு கருத்தரங்கை, வேத பாரகர்களின் உதவியுடன் நிகழ்த்த வேண்டும், என்று, சக்கரவர்த்தி பாப்பரசர் டோனுஸூக்கு ஒரு கடிதம் எழுதினார்; கடிதம் பாப்பரசருக்கு வந்தபோது, பாப்பரசர் டோனுஸ், இறந்து போனார்.
அவருக்குப் பிறகு வந்த அர்ச்.ஆகத்தோ பாப்பரசர், சமாதானம் என்கிற ஒலிவ கிளையுடன் வந்த சக்கரவர்த்தி அளித்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல், அதைப் பயன்படுத்தினார். பொதுவான கத்தோலிக்கப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் படியாக, மேற்கத்திய திருச்சபையின் மேற்றிராணிமார்கள் எல்லோரும் சங்கத்தைக் கூட்டும்படியாகக் கட்டளையிட்டார். அதே சமயம், கிழக்கத்திய திருச்சபையின் மேற்றிராணிமார்களைச் சந்திக்கும்படியாக, ஒரு பெரிய குழுவை ஏற்படுத்தி, கான்ஸ்டான்டிநோபிளுக்கு அனுப்பி வைத்தார்.
இந்த சங்கக்தின் தீர்மானத்திற்கான ஆணைகள், பாப்பரசரின் ஒப்புதலின் கையொப்பத்திற்காக உரோமாபுரியை வந்து சேர்ந்தபோது, அர்ச்.ஆகத்தோ பாப்பரசர் 681ம் வருடம், ஜனவரி 10ம் தேதியன்று, இறந்தார். இவர், உரோமாபுரியிலுள்ள அர்ச். இராயப்பா் பசிலிக்கா பேராலயத்தில் அடக்கம் செய்யப் பட்டார். இவர், இனிமையாகப் பேசும் பண்புடையவராகவும், தேவசிநேகத்திலும் பிறர்சிநேகத்திலும் உயர்ந்த நிலையை அடைந்தவராகவும் தன்னிகரற்றவிதமாக சிறந்து விளங்கினார். அநேக புதுமைகள் நிகழ்த்தியதால், புதுமை நிகழ்த்துபவர், என்கிற பெயரைப் பெற்றிருந்தார். இங்கிலாந்திலும், உரோமை ரீதியிலான திருவழிபாட்டுப் பாடல்களை, மறுபடியும், அறிமுகம் செய்வதற்காக, இவர், இசை நிபுணர்களை அனுப்பினார்.
அர்ச் ஆகத்தோவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக