ஜனவரி 03ம் தேதி
அர்ச். ஜெனவியேவ்
அர்ச்.ஜெனவியேவ், கி.பி.422ம் வருடம் பாரீஸ் நகருக்கருகிலுள்ள நான்டெரே என்ற இடத்தில் பிறந்தாள். இவள் 7 வயதானபோது, அர்ச். ஆக்சரே ஜெர்மேயின், பெலாஜியுஸ் பதிதத் தப்பறையை எதிர்த்து, அதை அழிக்கும்படியாக தனது தாய் நாடான பிரான்சிலும், இங்கிலாந்திலும் பிரசங்கிக்கும்படியாக பல நகரங்களுக்குச்சென்ற போது, வழியில், இவளுடைய கிராமத்திற்கும் வந்தார். அச்சமயம், பரிசுத்த மேற்றிராணியாரான அர்ச். ஜெர்மேயினைக் காணும் படியாக, ஊர் மக்கள் கூடியிருந்தபோது, கூட்டத்தின் நடுவில், ஜெனவியேவ் நின்றிருந்தாள்; அவளைத் தனியாகக் கூப்பிட்டு, அர்ச்.ஜெர்மேயின், அவள் எதிர்காலத்தில் பெரிய அர்ச்சிஷ்டவளாவாள், என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார்; அவளுடைய விருப்பத்தின்படி, பரிசுத்த மேற்றிராணியார், அவளை,சகல கூட்டத்தினருடனும் தேவாலயத்திற்கு நடத்திச் சென்று, அவளுடைய கன்னிமையை சர்வேசுரனுக்கு அர்ப்பணித்து ஒப்புக்கொடுத்தார்.
கி.பி.451ம் வருடம், அட்டிலா என்ற கொள்ளையன், கொள்ளைக் கூட்டத்தினருடன், பாரீஸ் நகரத்திற்குள் நுழைய திட்டமிட்டிருந்தான். மக்கள் அந்நகரத்தை விட்டு வெளியேற ஆயத்தமாயிருந்தபோது, “அவர்களுடைய நகரத்தைக் கொள்ளையிட வருகிற அட்டிலா என்பவன் அந்நகரத்திற்கு தேவ சாபத்தின் தண்டனையாக இருக்கிறான்!” என்று கூறிய ஜெனவியேவ், இத்தண்டனையிலிருந்து தப்பிக்கவும், பரலோக உதவியை நிச்சயிக்கவும், நகர மக்கள் எல்லோரையும், ஜெபத்திலும், உபவாசத்திலும் ஈடுபடும்படிச் செய்தாள். அர்ச்.ஜெனவியேவின் தூண்டுதலின்படி பாரீஸ் நகர மக்கள் செய்த ஜெப தப மன்றாட்டுகளுக்கு பரலோகம் செவிசாய்த்தது! காட்டுமிராண்டியான அட்டிலாவின் கொள்ளைக் கூட்டம், பாரீஸ் நகரத்தைத் தொடாமலே, ஆர்லியன்ஸ் நகரத்திற்குச் சென்றது.
சில வருடங்களுக்குப் பிறகு,மெரோவிக் பாரீஸ் நகரத்தை ஆக்ரமித்தான்; இவனையும், இவனுக்குப் பின் வந்த சில்டெ ரிக்,குளோவிஸ் ஆகியவர்களிடம், ஜெனவியேவ் வேண்டி மன்றாடி,பாரீஸ்நகர மக்களை, அவர்கள் இரக்கத்துடன் நடத்தும்படிச் செய்தாள்.
அர்ச்.ஜெனவியேவின் ஜீவியம் முழுவதும் மாபெரும் தபசும், இடைவிடாத ஜெபமும் , தேவசிநேகத்திற்கடுத்த பிறர்சிநேக அலுவல்களும் நிறைந்திருந்தது! கி.பி.512ம் வருடம், இவள் பாக்கியமாய் மரித்தாள்; முதலாம் குளோவிஸ் அரசனுடைய கல்லறைக்கு அருகில் புகைக்கப்பட்டாள்.
இவள் பாரீஸ் நகரத்தின் பாதுகாவலியாக வணங்கப்படுகிறாள்;கண் நோய்க்கும், காய்ச்சலுக்கும் இவளிடம் வேண்டிக் கொண்டால், அந்த நோய்கள் புதுமையாகக் குணமடையும்.
கி.பி.1129ம் வருடம், மால்டெஸ் ஆர்டென்ட்ஸ் என்ற ஒருகொடிய கொள்ளை நோய் பாரீஸ் நகரைத் தாக்கியபோது, 14000 பேர் மாண்டனர்; அர்ச்.ஜெனவியேவின் பரிசுத்த அருளிக்கங்கள், பக்தி பற்றுதலுடன் பாரீஸ்நகரம் முழுவதும் சுற்றுப் பிரகாரமாக எடுத்துச் செல்லப்பட்டவுடன், இந்த கொள்ளை நோய், புதுமையாக நின்றுபோனது; நகரத்தை விட்டு அகன்று போனது!
கி.பி. 1130ம் வருடம், 2ம் இன்னசன்ட் பாப்பரசர், எதிர் பாப்பரசரான அனக்ளீடஸுக்கு எதிராக பிரான்ஸ் அரசனிடம் உதவி கேட்கும்படியாக, பாரீஸ் நகரத்திற்கு வந்தபோது, அர்ச்.ஜெனவியேவின் இப்புதுமையைப் பற்றி தானே நேரில் ஆய்வுசெய்து பார்த்தார். அதில் பெரிதும், திருப்தியடைந்தவராக, நவம்பர் 26ம் தேதி , அர்ச்.ஜெனவியேவின் திருநாளைக் கொண்டாடும்படி கட்டளையிட்டார். 1793ம் வருடம், நாசகார பிரஞ்சுப் புரட்சிக்காரர்கள், அர்ச். ஜெனவியேவின் பரிசுத்த அருளிக்கங்களை அழித்துப்போட்டனர்.
அர்ச்.ஜெனவியேவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக