Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 30 ஜூன், 2024

June 29 - தலைமை அப்போஸ்தலரான அர்ச். இராயப்பர் திருநாள் (Feast of St. Peter)

இன்றைய அர்ச்சிஷ்டவர்
 
ஜுன் 29ம் தேதி

தலைமை அப்போஸ்தலரான அர்ச். இராயப்பர் திருநாள்

பாறை என்கிற அர்த்தத்தில், இலத்தினில் பேத்ருஸ் என்றும் கிரேக்க மொழியில் பேத்ரோஸ் என்றும் தலைமை அப்போஸ்தலரான சீமோன் இராயப்பராகிய அர்ச். பீட்டர் அழைக்கப்படுகிறார். அரமாயிக் மொழியில் நமதாண்டவரால், பாறை என்கிற அர்த்தத்தையுடைய கேபா என்று அர்ச்.இராயப்பர் (அரு 1:42, மத் 16:18) அழைக்கப்படுகிறார். 
 அர்ச். இராயப்பர், கலிலேயாவிலுள்ள பெத்சாயிதாவைச் சேர்ந்தவர், நமதாண்டவர் இவரை தமது அப்போஸ்தலராகும்படி அழைத்தபோது, ஒரு ஏரியில் மின்பிடித்துக் கொண்டிருந்தார். இவர் ஏழையாகவும், படிப்பறிவில்லாதவராகவும்,இருந்தார்; ஆனால், இவர், “நீர் உயிருள்ள மெய்யங்கடவுளான சர்வேசுரனுடைய குமாரன் என்றும், கிறீஸ்துவானவர்” என்றும் நமதாண்டவரை நோக்கி விசுவாச உச்சாரணம் செய்கிறார். நமதாண்டவர் இவரை தமது திருச்சபையைக் கட்டுவதற்கான பாறையாக ஏற்படுத்துகிறார்; பூமியில், தமது பிரதிநிதியாக இவரை ஏற்படுத்தித் திருச்சபைக்கும் அப்போஸ்தலர்களுக்கும் தலைவராக நியமிக்கிறார். பெந்தகோஸ்தே திருநாளுக்குப் பின், அப்போஸ்தெலர்களுடைய தலைவர் என்கிற பதவிக்கும் திருச்சபையினுடைய தலைவர் என்கிற பதவிக்கும் நமதாண்டவருடைய காணக்கூடிய பிரதிநிதி என்கிற பதவியினுடைய பத்திராசனத்திற்கும் ஏற்ற மகத்துவமிக்க கம்பீரத்துடன் எழுந்து நின்று, இவர் யூத மக்களுக்கு முன்பாக ஆண்டவருடைய சுவிசேஷத்தை பகிரங்கமாக பிரசங்கிக்கத் துவக்கினார். நமதாண்டவர் பரலோகத்திற்கு ஆரோகணமானபிறகு, 10 வருடங்களுக்குப் பிறகு, மாட்சிமிக்க உரோமை சாம்ராஜ்ஜியத்தின் மையமாக விளங்கிய உரோமை நகருக்குச் சென்றார். அச்சமயம், அந்நகரம் உலகத்தினுடைய எல்லா மகிமை வளங்களும், எல்லா தீமைகளுடைய வல்லமைகளும் சேகரிக்கப்பட்டிருந்த இடமாக விளங்கியது. உரோமையில்,, அர்ச்.இராயப்பர், தமது பத்திராசனத்தை ஸ்தாபித்து, அர்ச்.சின்னப்பருடன் சேர்ந்து சுவிசேஷத்தை உரோமையர்களுக்குப் பிரசங்கித்து, அவர்களை இருளிலிருந்து நித்திய ஒளிக்குக் கொண்டு வருவதில் அயராமல் உழைத்தார். அர்ச்.இராயப்பர் இரண்டு நிரூபங்களை எழுதினார். அர்ச்.மாற்கு எழுதிய சுவிசேஷத்தை அங்கீகரித்து, அதை வாசிக்கும்படி அறிவுறுத்தினார்.
 அர்ச்.இராயப்பர் கி.பி.64ம் வருடம் , ஜுன் 29ம் தேதி, கொடுங்கோலன் நீரோ ஆட்சி செய்தபோது, உரோமையிலுள்ள வத்திக்கான் குன்றின் மீது, சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார். ஆண்டவரைப் போல் நேராக சிலுவையில் அறையப்பட தகுதியற்றவனாயிருக்கிறதால் என்னை தலைகீழாக அறையுங்கள் என்று அர்ச்.இராயப்பர் தாமே விண்ணப்பித்ததால் தலைகீழாக அறையப்பட்டார்,, என்று திருச்சபையின் சரித்திர ஆசிரியரான ஓரிஜன் குறித்து வைத்திருக்கிறார். அர்ச்.இராயப்பரை சிலுவையில் அறைந்தபோது, ஒரு பண்டைக்கால எகிப்திய தூபி அருகில் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. அது, நீரோவின் வீர விளையாட்டினுடையவும், சர்க்கஸினுடையவும் மைதானமாக இருந்தது. இதே எகிப்திய தூபி, அர்ச்.இராயப்பரின் பேராலய வளாகத்தில், அர்ச்.இராயப்பரின் வேதசாட்சிய மரணத்தின் சாட்சியமாகத் திகழ்கிறது.
 அர்ச்.இராயப்பர் மரி்த்து 260 வருடங்களுக்குப் பின், திருச்சபையின் மகிமையானதும் வெளிப்படையானதுமான வெற்றி நிகழ்ந்து.அர்ச்.சில்வஸ்டர் பாப்பரசர், தன்னுடன் மேற்றிராணியார்களுடனும், குருக்கள் துறவியருடனும், விசுவாசிகளுடனும், உரோமாபுரி நகருக்குள் ஆண்டவருடைய மகிமை ஸ்துதிகளைப் போற்றிப் பாடியபடி, வத்திக்கான் எழு குன்றுகளை நோக்கி , ஆடம்பர சுற்றுப்பிரகார பவனியாக சென்றார். முதல் கிறீஸ்துவ உரோமைச் சக்கரவர்த்தியான மகாக் கான்ஸ்டன்டைன், உரோமையில் அர்ச்.இராயப்பர் பேராலயத்தின் அஸ்திவாரத்தைக் கட்டுவதற்காக குழி தோண்டத் துவக்கினார். இவ்விதமாக இந்த பேரரசரால் கட்டப்பட்ட தேவாலயத்தின் மீது தான் இப்போதைய மகா உன்னதமான அர்ச்.இராயப்பர் பசிலிக்கா தேவாலயம் கட்டப்பட்டு நிற்கிறது! மனிதரால் கட்டப்பட்ட தேவாலயங்களிலேயே மகா நேர்த்தியானதும் உன்னதமானதுமான தேவாலயமாகத் திகழ்கிறது. இந்த பசிலிக்கா தேவாலயத்தில் தான், ஜீவியத்தில் இருந்ததைப்போலவே, மரணத்திலும், ஒற்றுமையாக பிரிக்கப்படாதபடி எல்லா அப்போஸ்தலர்களும், பூஜிதமாக அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இங்கு, அர்ச்.இராயப்பரின் பத்திராசனம் இருக்கிறது. இப்பேராலயத்தைச் சுற்றிலும், எல்லா வேதசாட்சிகளும், பாப்பரசர்களும், அர்ச்சிஷ்டவர்களும், வேதபாரகர்களும், இளைப்பாறுகின்றனர். தேவாலயத்தின் குவிந்த கூரைப்பகுதியின் உட்புறத்தைச் சுற்றிலும், “நீ இராயாய் இருக்கிறாய்! இந்த இராயின் மேல் திருச்சபையைக் கட்டுவேன்! .. மோட்சத்தின் திறவுகோல்களையும் உனக்குக் கொடுப்பேன்” (மத் 16:18-19)என்ற சுவிசேஷ வாக்கியம், 2 மீ உயரமுள்ள ஒவ்வொரு எழுத்தையும் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.
 12ம் பத்திநாதர் காலத்தில், 1939ம் வருடம், அர்ச்.இராயப்பர் பேராலயத்தின் கீழ் இருக்கிற நிலத்தடி தேவாலயத்தில், அர்ச்.இராயப்பரின் கல்லறையைக் கண்டுபிடிக்கும் பத்து வருட தொல்லியல் ஆராய்ச்சி துவங்கியது. 9ம் நூற்றாண்டிலிருந்து, அர்ச்.இராயப்பர் கல்லறை இருந்த இடம் அணுகக்கூடாமல் போயிருந்தது. இந்த தொல்லியல் ஆராய்ச்சியில், திருச்சபை சரித்திர காலத்தின், பல்வேறு காலக்கட்டங்களில், அர்ச்.இராயப்பரின் பரிசுத்த அருளிக்கங்களின் ஷேத்திரங்கள், பல வித்தியாசமான படிநிலைகளில் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன, என்பதைக் கண்டறிந்தனர். முதலாம் கிரகோரியார் (590-604) காலத்தில், அர்ச்.இராயப்பரின் கல்லறை, முதல் படிநிலையிலும், அர்ச். 2ம் காலிக்ஸ்துஸ் பாப்பரசர்(1123) காலம் வரை 2ம் படிநிலையிலும், இவருடைய காலத்திலிருந்து, 8ம் கிளமென்ட் பாப்பரசர் (1594) வரை அடுத்த படிநிலையிலும் இருந்ததாகவும், இராஜரீக விலையுயர் ஊதா நிறம் கலந்த தங்கத்தினாலான அலங்காரத்துடன், நேர்த்தியாக நெய்யப்பட்ட ஒரு துணியில், அர்ச். இராயப்பரின் பரிசுத்த எலும்புகள் சுற்றிவைக்கப்பட்ட ஒரு சிற்றாலய ஷேத்திரத்தின் மீது இப்பல்வேறு நிலை தேவாலயங்கள் கட்டப்பட்டிருந்தன, என்பதை இத்தொல்லியல் ஆய்வு கண்டறிந்தது. 1950ம் வருடம், டிசம்பர் 23ம் தேதியன்று, தமது கிறீஸ்துமஸ் திருநாளுக்கு முந்தின அறிவிப்பில், வத்திக்கான் வானொலியில், 12ம் பத்திநாதர் பாப்பரசர், அர்ச்.இராயப்பரின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார்.

 அர்ச்.இராயப்பரின் பசிலிக்கா பேராலயம் இருக்கிற காரணத்தினால், உரோமாபுரி நாகரீக உலகத்தினுடைய மையமாகத் திகழ்கிறது! “அர்ச்.இராயப்பரின் பசிலிக்கா பேராலயம், பூமியின் ஆபரணமாகத் திகழ்கிறது! அழகாக இருப்பவற்றுள் உன்னதமானதாகத் திகழ்கிறது!” என்று ரால்ஃப் வால்டோ எமர்சன் என்ற தத்துவ இயல் வல்லுனர் அர்ச்.இராயப்பர் பேராலயத்தை வர்ணித்தார்.

தலைமை அப்போஸ்தலரான அர்ச்.இராயப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக