இன்றைய அர்ச்சிஷ்டவர்
ஜுன் 30ம் தேதி
வேதசாட்சியும் அஞ்ஞானிகளுடைய அப்போஸ்தலருமான அர்ச்.சின்னப்பர் திருநாள்
திருச்சபையின் பாரம்பரியம் கூறுவதற்கேற்ப, அர்ச். இராயப்பரும், அர்ச்.சின்னப்பரும் ஒரே நாளில் வேதசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர். அர்ச். இராயப்பர், தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டார்; ஆனால், உரோமைக் குடிமகனாயிருந்ததால், சிலுவையில் அறையப்படாமல், அர்ச். சின்னப்பர் தலைவெட்டிக் கொல்லப்பட்டார்.
ஒரே நாளில் வத்திக்கானிலுள்ள அர்ச்.இராயப்பருடைய பசிலிக்காவில் திருநாளைக் கொண்டாடிவிட்டு, 5 மைல் தொலைவிலுள்ள அர்ச்.சின்னப்பர் பசிலிக்காவிற்கு சுற்றுப்பிரகார பவனியாகச் சென்று, அர்ச்.சின்னப்பர் திருநாளைக் கொண்டாடுவது என்பது, அதிக சோர்வை ஏற்படுத்துவதாயிருந்ததால், அர்ச்.சின்னப்பர் வேதசாட்சியாக மரித்தத் திருநாளை ஜுன் 30ம் தேதி கொண்டாடப்படுகிறது.
பிறப்பால் யூதராயிருப்பினும், இவர்,தென் துருக்கியைச் சேர்ந்த சிலிசியாவிலுள்ள தார்சுஸ் நகரைச் சேர்ந்த உரோமைக் குடிமகனாகப் பிறந்தார். இவர் பெயர் சவுல்; ஒரு தீவிர யூதராக ஜெருசலேமில் வளர்ந்தார்.
முதல் வேதசாட்சியான அர்ச்.முடியப்பர் யூதர்களால் கல்லால் எறிந்து கொல்லப்பட்டபோது, கல்லெறிந்த யூதர்களுடைய உடைகளை வைத்துக்கொள்ளும் ஒரு இளைஞராக சவுல் அங்கிருந்தார். இவர் தனது அயராத ஆர்வத்தினால், ஆண்டவருடைய சீடர்களை பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிக்கொண்டு, டமாஸ்கஸ் நகரத்திற்குப் பயணமானார்.
ஆனால், வழியில், பரலோகத்திலிருந்து வந்த ஒரு ஒளி இவரைக் கீழே விழத்தாட்டியது.”சவுலே! சவுலே! ஏன் என்னை துன்பப்படுத்துகிறாய்?” என்ற குரலொலி கேட்டது. பின்னர், நமதாண்டவர் இவருக்குத் தம்மைக் காண்பித்து, தமது திருச்சபையை மூர்க்கமாக உபத்திரவப்படுத்திய இவரை, மாபெரும் அப்போஸ்தலராக மனந்திருப்பி மாற்றினார்; உலகத்தின் கடைசி எல்லை வரை தமது சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவரும், அநேக வருட காலம் சிலுவையில் அறையுண்ட ஆண்டவரைப் பற்றிய சிந்தனையைத் தவிர வேறு எந்த நினைவும் இல்லாமல் ஜீவித்து உழைத்த அஞ்ஞானிகளுடைய மாபெரும் அப்போஸ்தலராகவும், ஆண்டவர் தாமே, இவரை மனந்திருப்பி, மாற்றினார். சவுலாக இருந்த இவருடைய பெயர், பவுலாக மாறியது; தமிழில் சின்னப்பராக அழைக்கப்படுகிறார்; அர்ச். இராயப்பருடன் சேர்ந்து, இவரும் தனது வேதசாட்சிய மரணத்தினால்,உரோமாபுரியை சர்வேசுரனுக்கு அர்ப்பணம் செய்தார்.
சுவிசேஷகரும் நமதாண்டவருடைய பிரிய அப்போஸ்தலருமான அர்ச்.அருளப்பருக்கு அடுத்தபடியாக, அர்ச்.சின்னப்பர்,மாபெரும் கிறீஸ்துவ வேத அறிவுத் திறனைக் கொண்டிருக்கிறார். அர்ச். சின்னப்பர் எழுதிய 14 நிரூபங்களும், திருச்சபையினுடைய வேத சத்தியத்தினுடைய வற்றாத தண்ணீர் சுனையாகவும், திருச்சபையின் மாபெரும் அர்ச்சிஷ்டவர்களுடையவும், வேதபாரகர்களுடையவும் ஆறுதலாகவும் ஆனந்த மகிழ்வாகவும் திகழ்கின்றன!
அஞ்ஞானிகளுடைய மாபெரும் அப்போஸ்தலரும் வேதசாட்சியுமான அர்ச். சின்னப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!
🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக