ஜுன் 9 தேதி
வேதசாட்சிகளான அர்ச்.பிரிமுஸ், அர்ச்.ஃபெலிசியான் திருநாள்.
சகோதரர்களான இவர்கள் இருவரும் உரோமை இராணுவத்தில் மிகுந்த தைரியமுள்ள வீரர்களாயிருந்தனர். இருவரும் சுவிசேஷத்தை போதிப்பதற்காக, சியம்காவ் என்ற பகுதியில் வேதபோதக அலுவல் புரிந்தனர். இங்கு, ஒரு காட்டில், பிரிமுஸ், ஒரு நீரூற்றைக் கண்டு பிடித்தார்; அது, வியாதிகளுக்குக் குணமளிக்கக் கூடிய மருத்துவ குணமுடையதாயிருப்பதைக் கண்டறிந்தார்.
இங்கு இரு சகோதரர்களும், சுவிசேஷத்தைப் பிரசங்கித்தனர்; தங்கள் ஜெபங்களால், அநேக வியாதியஸ்தர்களை புதுமையாகக் குணப்படுத்தினர். இருவரும் இத்தாலிக்குத் திரும்பி வந்தபோது, உரோமை அதிகாரிகள், கத்தோலிக்க வேதத்தைப் பிரசங்கித்த தற்காக, இவர்கள் இருவரையும் கைது செய்தனர்.அஞ்ஞான விக்கிரகங்களுக்கு பலிசெலுத்த மறுத்ததால், இருவரையும் சாட்டையால் அடித்துச் சிறையில் அடைத்தனர். இருவரையும் தனித்தனியாக புரோமுதுஸ் என்ற நீதிபதியிடம கூட்டி வந்தனர்; தந்திரமுள்ள இந்த கொடிய நீதிபதி இருவரையும் சேர்த்து, ஒன்றாக சித்திரவதை செய்தான்; பின்னர், இருவரையும் தனித்தனி அறையில் விசாரணை நடத்தினான். உன் சகோதரர், உங்கள் வேதத்தை மறுதலித்து விட்டு, விக்கிரகத்திற்கு பலி செலுத்தி விட்டார், என்று கூறி இருவரையும் ஏமாற்ற முற்பட்டான்.
ஆனால், இருசகோதரர்களும் வேத விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருந்தனர். ஃபெலிசியான், ஒரு மரத்தில் ஆணிகளால் அறையப்பட்டார்; பிரிமுஸின் வாயில் உருக்கிய ஈயத்தை ஊற்றி விழுங்கச் செய்தனர். 297ம் வருடம், இரு சகோதரர்களையும் தலையை வெட்டிக் கொன்றனர். இது, தியோக்ளேஷியன் சக்கரவர்த்தி, உரோமாபுரியிலிருந்து, 12 மைல் தொலைவிலுள்ள நொமெந்தும் என்ற இடத்தில் கிறீஸ்துவர்களை உபாதித்துக் கொன்றபோது, நிகழ்ந்தது.
அப்போது, அர்ச்.பிரிமுஸுக்கு 80 வயதாயிருந்தது; இவருக்குத் தோத்திரமாக, வியா நோமெந்தானா என்ற இடத்திலிருந்து இரு அர்ச்சிஷ்ட சகோதரர்களின் கல்லறைகளுக்கு மேலே ஒரு தேவாலயம் கட்டப்பட்டது.
இவர்களுடைய பரிசுத்த சரீரங்கள், உரோமை நகர சுவர்களுக்குள் மறுபடியும் புதைக்கப்பட்டன! இவ்விதமாக திருச்சபை சரித்திரக் குறிப்பேட்டில் முதன் முதலாக வேதசாட்சிகளின் அடக்கத்தைப் பற்றிய குறிப்பு, இவர்களுடைய அடக்கத்தைப் பற்றிய குறிப்பாக இருக்கிறது.
648ம் வருடம், முதலாம் தியோடோர் பாப்பரசர், இவ்விரு அர்ச்சிஷ்டவர்களின் அருளிக்கங்களான பரிசுத்த எலும்புகளை, ரோடொன்டோ என்ற இடத்திலுள்ள அர்ச். முடியப்பர் தேவாலயத் திற்கு இடமாற்றம் செய்யக் கட்டளையிட்டார்; அதன்படி, இவர் களுக்குத் தோத்திரமாகக் கட்டப்பட்ட ஒரு பீடத்தில் இவர்களுடைய பரிசுத்த எலும்புகள் பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன.
முதலாம் தியோடோர் பாப்பரசர் கட்டிய அர்ச்.பிரிமோ அர்ச்.ஃபெலிசியானோ சிற்றாலயம் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த மொசைக் கற்களால் கட்டப்பட்டது; ஒரு மொசைக் கல்லில், இரத்தினக்கற்களாலான சிலுவையின் பக்கத்தில் இரு வேதசாட்சிகளும் இருப்பதாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது.
அரச்.பிரிமுஸின் நீரூற்று என்று அழைக்கப்படுகிற நீரூற்று இன்றும் கூட செந்நீர் ஊற்றுகள் நிறைந்த அடெல்ஹோ்சன் என்ற பகுதியில் உள்ளது. 1615ம் வருடம் இங்கு இவ்விருஅர்ச்சிஷ்ட வேதசாட்சிகளுக்குத் தோத்திரமாகக் கட்டப்பட்ட ஒரு சிற்றாலயத்தை இன்றும் காணலாம். இப்பகுதியில் இவ்விரு வேத சாட்சிகளையும் மக்கள், வெகுவாக வணங்கி வழிபடுகின்றனர்.
🌹அர்ச்.பிரிமுஸே! அர்ச்.ஃபெலிசியானே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹
🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக