Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 30 ஜூன், 2024

June 28 - வேதசாட்சியும் மேற்றிராணியாருமான அர்ச். இரனேயுஸ் திருநாள் St. Eraneus


 ஜுன் 28ம் தேதி

வேதசாட்சியும் மேற்றிராணியாருமான அர்ச். இரனேயுஸ் திருநாள்

இவர், சின்ன ஆசியாவில் (இன்றைய துருக்கி) கி.பி.120ம் வருடம் பிறந்தார். இவருடைய கத்தோலிக்க பெற்றோர்கள், இவரை ஸ்மிர்னா நகர மேற்றிராணியாரான மகா அர்ச். போலிக்கார்ப்பின்  கண்காணிப்பில் வளரும்படி விட்டிருந்தார்கள். இங்கு, இவரிடம், இரனேயுஸ், பரிசுத்த வேதாகமத்தையும், வேத இயலையும், பயின்றார்; இந்த ஆழ்ந்த வேத அறிவு, இவரை பிற்காலத்தில், திருச்சபையின் மாபெரும் ஆபரணமாகவும், திருச்சபையின் எதிரிகளான பதிதர்களுக்குப் பேரச்சமாகவும் திகழச் செய்தது.
அர்ச்.போலிக்கார்ப்பு இவரை பிரான்சின் கால் பகுதிக்கு அனுப்பினார். இங்கு இவர் பின்னாளில், லியோன்ஸ் நகர மேற்றிராணியாரான அர்ச். போர்தினுஸிடமிருந்து குருப்பட்டம் பெற்றார். இப்பரிசுத்த மேற்றிராணியார் பாக்கியமாக மரித்தபிறகு, 177ம் வருடம், இரனேயுஸ், லியோன்ஸ் நகர மேற்றிராணியாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வேத சத்தியங்களுக்கு எதிராக குழப்பம் செய்த பதிதர்களின் காரியத்தில் இவர் மாபெரும் பொறுமையைக் கடைபிடித்தார்; அவர்களுடைய தப்பறையான பதிதப் போதகங்களுக்கு எதிராக சத்திய போதனையை தெளிவாகப் போதித்து, வேத சத்தியங்களைக் காப்பாற்றுவதில் அயராமல் பாடுபட்டார்; அதே சமயம், பதிதர்களின் போதனையிலிருந்த தப்பறையை அவர்களுக்கு உணர்த்தியதுடன் கூட, அவர்களுடைய ஆத்துமங்களை சத்திய வேதத்திற்குக் கூட்டி வருவதில், அதிக ஆர்வமுள்ள ஆவலுடன் அரும் பாடுபட்டார்.
லியோன்ஸ் நகர மேற்றிராணியாராக அர்ச். இரனேயுஸ், ஞாஸ்டிசம் என்கிற பதிதத்தப்பறையை தன் மேற்றிராசனத்திலிருந்து அழித்து ஒழிக்கப் பெரிதும் பாடுபட்டார்.

ஞாஸ்டிசம் என்கிற பதம், அறிவு என்பதற்கான கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. ஞாஸ்டிக் என்ற பதிதர்கள், ஆண்டவர் ஒரு சில சீடர்களுக்கு இரகசியமாக அளித்த அறிவைத் தாங்கள் கொண்டிருப்பதாகப் பிதற்றித் திரிந்தனர். இப்பதிதத் தப்பறை, அநேகக் கிறீஸ்துவர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தது! அதே சமயம், பல கிறீஸ்துவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது
      இப்பதிதத்தின் பல பிரிவுகளைப் பற்றி   மிக ஆழமாக, முழுமையாக, ஆய்ந்தறிந்தபிறகு, அந்த தப்பறையான கொள்கைகள் எல்லாம் இறுதியில் எவ்வித தர்க்கவாத முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை தெளிவாக விளக்கிக் காண்பித்தார்; அப்போஸ்தலர்களுடைய போதனைகளுடனும், பரிசுத்த வேதாகமத்துடனும்  இப்பதிதத் தப்பறையான போதனைகள் முற்றிலும் முரண்பட்டிருப்பதைத் தெளிவாக,  ஐந்து புத்தகங்களாக எழுதி, விளக்கிக் காண்பித்தார். இக்காலத்திற்கும் இதற்குப் பிறகு வந்த காலங்களுக்கும், வேத இயல் புத்தகங்களான இந்த ஐந்து புத்தகங்களும் மாபெரும் முக்கிய வேத இயல் புத்தகங்களாகத் திகழ்ந்தன! இவர் இப்பதிதத் தப்பறையை அழித்து ஒழிக்கும்படி எழுதிய இவ்வேத இயல் புத்தகங்கள்  அதிக அளவில் இலத்தீனிலும், ஆர்மீனியன் மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டன! இப்புத்தகங்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து பரவியதால், ஞாஸ்டிசம் என்ற பதிதத் தப்பறை  அழிந்து முற்றிலும் மறைந்தது.
தமது ஞானமுள்ள பிரசங்கத்தினால், அர்ச்.இரனேயுஸ்,  குறுகிய காலத்தில் அந்த பிராந்தியம் முழுவதையும், கத்தோலிக்க வேத விசுவாசத்திற்குக் கூட்டி வந்து சேர்த்தார். பதிதத் தப்பறைகளுக்கு எதிராக, அநேக புத்தகங்களை எழுதினார். இறுதியில், மற்ற அநேகருடன் சேர்ந்து, அஞ்ஞான உரோமை செவேருஸ் சக்கரவர்த்தியின் கீழ், லியோன்ஸ் நகரில் 202ம் வருடம், கிறீஸ்துவர்களுக்கு எதிராக ஏற்பட்ட வேத கலாபனையின்போது, வேதசாட்சியாகக் கொல்லப்பட்டார். 

மேற்றிராணியாரும், வேதசாட்சியும் வேதபாரகருமான அர்ச். இரனேயுஸே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!
 
அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக