Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 30 ஜூன், 2024

June 27 - இடைவிடா சகாய மாதா திருநாள்


 
ஜுன் 27ம் தேதி
 
இடைவிடா சகாய மாதா திருநாள்

இடைவிடா சகாயமாதாவின் ஆதிமூல சுரூபப் படம், உரோமையிலுள்ள அர்ச். அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார் தேவாலயத்தின் பிரதானப் பீடத்தின் மேல் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. 17 அங்குல அகலமும் 21 அங்குல உயரமும் உள்ள இப்படம், கடினமான ஒரு மரப்பலகையில் ஓவியமாக வரையப்பட்டிருக்கிறது; பின்னணியில் தங்க நிறப் பூச்சு தீட்டப்பட்டிருக்கிறது!
இப்படத்தின் சரித்திரம் 1495ம் வருடத்திலிருந்து துவங்குகிறது; அப்போதே இப்படம் தொன்மையானதாக இருந்தது. கிரீட் என்ற தீவிலுள்ள ஒரு தேவாலயத்தில் இப்படம் ஸ்தாபிக்கப்பட்டிருந்து. இந்த தீவை மகமதியர்கள் கைப்பற்றப் போகின்றனர் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, இப்படத்தை ஒரு வியாபாரி, (திருடி) தன்னுடன் உரோமைக்குக் கொண்டு வந்தார். இந்த அற்புதப் படத்தைச் சுற்றி நிகழ்ந்த பல அசாதாரண நிகழ்வுகளுக்குப் பின்,1499ம் வருடம் , ஜுன் 27ம் தேதியன்று, உரோமையிலுள்ள அப்போஸ்தலரான அர்ச். மத்தேயு தேவாலயத்தில் இப்படம் ஆடம்பரமாக ஸ்தாபிக்கப்பட்டது. இவ்வற்புதப் படம் இந்த தேவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னரே, அபரிமிதமான தேவ வரப்பிரசாதங்கள் பொழியத் துவங்கின! இப்படத்தை ஸ்தாபிப்பதற்காக,  சுற்றுப்பிரகார பவனியாக  தேவாலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டபோது, வழியிலிருந்த ஒரு வாத நோயாளியின் வீட்டைக் கடந்தபோது, அந்த நோயாளி புதுமையாக குணமடைந்தார்.

  இக்காலம் வரையிலான இவ்வற்புதப் படத்தின் வரலாறு, இத்தாலிய மொழியிலும், இலத்தீனிலும் பதப்படுத்தப்பட்ட ஒரு காகிதத் தோலில் எழுதப்பட்டு, அர்ச்.மத்தேயு தேவாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இவ்வற்புதப்படத்தின் அருகில் மாட்டப்பட்டிருந்தது. இக்காகிதத் தோல்களின் நகல்கள் வத்திக்கான் நூலகத்தில் உள்ளன.
அடுத்த 300 வருட காலத்தில், இவ்வெளிய தேவாலயம், இவ்வற்புதப் படத்தினால் நிகழ்ந்த எண்ணற்ற புதுமைகளால், உரோமையில் மகா பிரபல்யமான திருயாத்திரை ஸ்தலமாக மாறியது.
நெப்போலியனுடைய இராணுவம், 1798ம் வருடம், உரோமையை ஆக்கிரமித்தபோது, இந்த தேவாலயத்தை அழித்தது! அச்சமயம், தேவாலயத்தைக் கவனித்து வந்த அர்ச். அகுஸ்தீனார் சபைத் துறவியர், இவ்வற்புதப் படத்தை பத்திரமாக தங்களுடன் எடுத்துச் சென்றனர். ஆனால், அடுத்த 64 வருடங்களுக்கு இவ்வற்புதப் படம், வெளி உலகத்திற்குக் காணாமல் போனது!
நாளடைவில், துறவியர் கூட இவ்வற்புதப் படத்தைப் பற்றி மறந்துபோயினர். ஆனால், சகோ. அகுஸ்தீன் என்பவர், இளம் துறவியாயிருந்தபோதிலிருந்தே இடைவிடா சகாய மாதாவின் மீது மிகுந்த பக்தி கொண்டவர், போஸ்டருலா என்ற இடத்திற்கு 1840ம் வருடம் மாற்றப்பட்டபோது, அங்கிருந்த சாந்தா மரியா தேவாலயத்தில் இவ்வற்புதப் படத்தைக் கண்டுபிடித்தார். இவர் அடிக்கடி, பீடப்பரிகார சிறுவர்களில் ஒருவரான மிக்கேல் மார்கி என்பவரிடம், மாபெரும் திருயாத்திரை ஸ்தலமாயிருந்த உரோமையின் அர்ச்.மத்தேயு தேவாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த  அற்புதப்படம் இந்த இடைவிடா சகாய மாதா படம் தான், என்று இவ்வற்புதப்படத்தைப் பற்றி கூறுவார். மிக்கேல் இதைப் பற்றி 1855ம் வருடம் திவ்ய இரட்சகர் சபையில் சேர்ந்தபிறகும் கூட நினைவில் கொண்டிருந்தார். இவரிடமிருந்து, இரட்சகர் சபைத் துறவியர், இடைவிடா சகாய மாதாவின் அற்புதப்படம் எந்த தேவாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது, என்பதை அறிந்தனர்.

9ம் பத்திநாதர் பாப்பரசர் சிறுவனாயிருந்தபோது, இவ்வற்புதப் படத்தின் முன்பாக ஜெபித்து வேண்டிக் கொண்டிருந்திருக்கிறார். எனவே, இடைவிடா சகாய மாதாவின் அற்புதப்படம் கண்டுபிடிக்கப்பட்டதைப் பற்றி  ஆர்வத்துடன் அறிந்தபிறகு, இரட்சகர் சபை அதிபருக்கு 1865ம் வருடம் டிசம்பர் 11ம் தேதியன்று, ஒரு கடிதம் எழுதி, அகுஸ்தீனார் சபை துறவியரிடமிருந்து இவ்வற்புதப் படம், இரட்சகர் சபைத் துறவியரிடம் ஒப்படைக்கப்படும்படியும், அர்ச். மத்தேயு தேவாலயத்தின் இடிபாடுகளின் மீது கட்டப்பட்ட அர்ச். அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியாரின் தேவாலயத்தில் இவ்வற்புதப் படம் ஸ்தாபிக்கப்படும்படியும் கட்டளையிட்டார். அதன்படி, 1866ம் வருடம் ஏப்ரல் 26ம் தேதியன்று, மகிமையான வெற்றியின் பவனியாக மகா பரிசுத்த தேவமாதா தாமே, தேர்ந்தெடுத்த அர்ச்.அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியாரின் தேவாலயத்திற்கு இவ்வற்புதப்படம் கொண்டு வரப்பட்டு, ஸ்தாபிக்கப்பட்டது; இரட்சகர் சபையாரின் பாதுகாவலில் ஒப்படைக்கப்பட்டது.
இவ்விடமாற்றம் நிகழ்ந்தபோது, இரண்டு குறிப்பிடத்தக்க புதுமைகள் நிகழ்ந்தன:  முதலாவதாக, மூளைக்காய்ச்சலினால் சாகக்கிடந்த ஒரு சிறுவன் புதுமையாகக் குணமடைந்தான். இரண்டாவதாக, வாத நோயால், செயலழந்திருந்த ஒரு சிறுமியின் கால் புதுமையாக குணமடைந்தது; அவள் நன்றாக நடக்கத் துவக்கினாள்.

  திருச்சபையின் அதிகாரபூர்வமான இடமாற்றித்திற்குப் பின், இவ்வற்புதப் படத்திற்கு  9ம் பத்திநாதர் பாப்பரசர் தமது அப்போஸ்தலிக்க ஆசீர்வாதத்தை அருளினார்; இவ்வற்புதப் படத்திற்கு  “இடைவிடா சகாய மாதா” என்று பெயரிட்டார். மேலும், இரட்சகர் சபையினரிடம், இந்த நல்ல பாப்பரசர், “இடைவிடா சகாய மாதாவை உலகம் முழுவதும் அறிந்துகொள்ளும்படிச் செய்யுங்கள்” என்று கூறினார்.
இடைவிடா சகாய மாதா என்கிற பட்டத்தினுடைய மகா பரிசுத்த தேவமாதாவின் இவ்வற்புதப் படத்தை ஆடம்பரமாக, திருச்சபையின் அதிகாரபூர்வமான விதமாக  அங்கீகரிப்பதை உலகத்திற்கு அறிவிக்கும்படியாக, 1867ம் வருடம், ஜுன் 23ம் தேதி, வத்திக்கான் அதிபர் சுவாமியார், இவ்வற்புத சுருபப் படத்திற்கு  மகிமையான கிரீடம் சூட்டும் விசேஷ வழிபாட்டின் சடங்கை நிகழ்த்தினார்.

இவ்வற்புதப்படத்தில் காணப்படுகிற கிரேக்க எழுத்துக்களின் அர்த்தம்: 

MP-ΘΥ   -     
(Μήτηρ Θεοῦ) மகா பரிசுத்த தேவமாதா 

OAM
(Ὁρχάγγελος Μιχαήλ),  அர்ச்.மிக்கேல் அதிதூதர்  
OAΓ 
(Ἀρχάγγελος Γαβριήλ, ) அர்ச்.கபிரியேல் அதிதூதர் 

IC-XC
(Ἰησοῦς Χριστός, ) திவ்ய சேசுகிறீஸ்துநாதர்சுவாமி


இடைவிடா சகாய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக