இன்றைய அர்ச்சிஷ்டவர்
ஜுன் 4ம் தேதி
ஸ்துதியரான அர்ச். பிரான்சிஸ் கரக்சியோலோ திருநாள்
🌹இவர், 1563ம் வருடம் நேப்பிள்ஸ் நாட்டில் கரக்சியோலோ என்ற உயர்ந்த குடும்பத்தில் பிறந்தார். இவருடைய ஞானஸ்நானப் பெயர், ஆஸ்கானியோ. இவர் குழந்தைப் பருவத்திலிருந்தே, எல்லா கேளிக்கைகளையும், விளையாட்டுகளையும், வேடிக்கை வினோதங்களையும் ஒதுக்கிவிடுவார்; ஆனால், திவ்ய சேசுநாதர் எழுந்தருளியிருக்கும் மகா பரிசுத்த தேவ நற்கருணை ஸ்தாபகத்தை சந்திப்பதற்காக தேவாலயத்திற்கு சென்று விடுவார்; அடிக்கடி திவ்ய நற்கருணை சந்திப்பு செய்வதையே அதிகம் சிநேகித்து வந்தார்!
இவருக்கு 22 வயதானபோது, இவருக்கு மிகக் கொடிய தோல் வியாதி வந்தது. விரைவிலேயே சாகுந்தருவாயிலிருந்தார். இவ்வியாதி குணமடைந்தால், சர்வேசுரனுக்காக தன்னையே அர்ப்பணித்து ஜீவிப்பதாக வாக்களித்தார். உடனே புதுமையாக சர்வேசுரன் இவருடைய மன்றாட்டை ஏற்று, இவரை தோல் வியாதியிலிருந்து குணப்படுத்தினார்.
இவர் சர்வேசுரனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் ஆர்வத்துடன், நேப்பிள்ஸுக்குச் சென்று குருப்பட்டத்திற்காக படித்து, 1587ம் வருடம் குருப்பட்டம் பெற்றார். இவர் குருப்பட்டம் பெற்றவுடன் “நீதியின் வெண் அங்கி” -துறவற சபையில் சேர்ந்தார். மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளைத் திருத்தி, பரிசுத்தமான நன்மரணத்தை, அவர்கள் அடையும்படிச் செய்வதே, இத்துறவற சபையின் முக்கிய நோக்கமாயிருந்தது.
குருப்பட்டம் பெற்று, ஐந்து வருட காலத்திற்குப் பிறகு, இவருக்கு ஒரு கடிதம் வந்தது. அது, இவருடைய தூரத்து உறவினரான இன்னொரு அஸ்கானியோ கரக்சியோலோவிற்கு வந்த கடிதம், தவறுதலாக இவருக்குக் கிடைத்தது. ஜெனோவா நகரில் சங். ஜியோவான்னி அகோஸ்டினோ அடோர்னோ என்ற குருவானவர், ஒரு புதிய துறவற சபையை ஸ்தாபிப்பதில், தன்னுடன் சேர்ந்துகொள்ளும்படி, அந்த இன்னொரு அஸ்கானியோ கரக்சியோலோவை, அந்த கடிதத்தில் அழைத்திருந்தார்.
கடிதத்தைப் படித்தபோது, சங்.அடோர்னோ சுவாமியார், அவருடைய புதிய துறவற சபையின் செயல்திட்டத்தின் பேரில் காண்கிற காட்சி, தன்னுடைய இலட்சியங்களின் படி, தான் சேர விரும்புகிற ஒரு துறவற சபையின் நோக்கங்களையும் விதிமுறைகளையும் முழுமையாக ஒத்திருப்பதைக் கண்டதும், இவர், இக்கடிதம் தனக்குக் கிடைத்தது, தானும் இந்த துறவற சபையில் சேர வேண்டும் என்பதற்கான, சர்வேசுரனுடைய திட்டத்தினுடைய அடையாளமாக இருக்கிறது, என்பதை உணர்ந்து கொண்டார். உடனே இவர் சங். அடோர்னோ சுவாமியாருக்கு பதில் கடிதம் எழுதினார். இருவரும் சில வாரங்கள் தியானத்தில் இருந்து , புதிய துறவற ஸ்தாபனங்களையும். அவற்றிற்கான விதிமுறைகளையும் உருவாக்கினர். 1588ம் வருடம், ஜுலை 1ம் தேதி, 5ம் சிகஸ்துஸ் பாப்பரசர் இத்துறவற சபையை அங்கீரித்து அதற்கான ஒப்புதலை அளித்தார்.
இத்துறவற சபை , இருவகையான ஜெபதியான ஜீவியத்தையும், வேதபோதக அப்போஸ்தல ஜீவியத்தையும் கொண்டிருக்கிறது. இடைவிடாத மகா பரிசுத்த தேவநற்கருணை ஆராதனை, அவர்களுடைய ஞான ஜீவியத்தினுடைய மிக முக்கிய தூணாகத் திகழ்கிறது. ஏழைகள், வியாதியஸ்தர்கள், சிறைக்கைதிகள், ஆகியோருக்குத் தேவையான சிகிச்சைகளையும் பணிவிடை களையும், பராமரிப்பையும் அளித்து, இத்துறவியர், தங்களுடைய வேதபோதக அப்போஸ்தல அலுவலை நிறைவேற்றி வருகின்றனர். கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல், ஆகிய வார்த்தைப்பாடுகளுடன் கூட, திருச்சபை உயர் பதவிகள், பட்டங்கள், மகிமைகள் எதையும் தேடுவதையோ, பெற்றுக்கொள்வதையோ, தடைசெய்கிற நான்காவது வார்த்தைப் பாட்டையும் இத்துறவியர்,எடுக்கவேண்டும். இவர் இத்துறவற சபையில் வார்த்தைப்பாடு கொடுத்தபோது, சரீரம் எடுத்த சம்மனசானவரான அர்ச். பிரான்சிஸ் அசிசியாருக்கு தோத்திரமாகவும், அவரைக் கண்டுபாவிக்கும்மேரையாகவும், பிரான்சிஸ் என்கிற பெயரை வைத்துக் கொண்டார்.
அடிக்கடி, மகா பரிசுத்த தேவ நற்கருணையில் எழுந்தருளியிருக்கும் நமதாண்டவர் முன்பாக பக்தி பரவசத்தில் மூழ்கிவிடுவார்; “ஆண்டவரே! உமது பரிசுத்த இல்லத்தின் மீதான ஆர்வம் என்னை முழுமையாக எரித்துவிடும்படியாக ஆட்கொள்கிறது!” என்கிற சங்கீதத்தை அடிக்கடி பக்திபற்றுதலுடன் உச்சரித்துக் கொண்டிருப்பார். பின்னர், ஆஞ்ஞோன் நகரில், 1608ம் வருடம், ஜுன் 4ம் தேதியன்று, நமதாண்டவரின் மகா பரிசுத்த தேவ நற்கருணை திருநாளுக்கான திருவிழிப்பின் நாளன்று, இவருக்கு மிகக் கடுமையான காய்ச்சல் வந்தது; அச்சமயம், இவர்“ஆண்டவரே! உமது பரிசுத்த இல்லத்தின் மீதான ஆர்வம் என்னை முழுமையாக எரித்துவிடும்படியாக ஆட்கொள்கிறது!” என்று தன் உதடுகளில் அடிக்கடி உச்சரித்த அதே ஜெபத்தை ஜெபித்தபடி, பக்திபரவச மிகுதியினால் பாக்கியமாய் மரித்தார்.
14ம் கிளமென்ட் பாப்பரசரால் 1769ம் வருடம் ஜுன் 4ம் தேதியன்று, இவருக்கு முத்திப்பேறு பட்டமும், 1807ம் வருடம் மே 24ம் தேதி 7ம் பத்திநாதர் பாப்பரசரால் அர்ச்சிஷ்டப்பட்டமும் அளிக்கப்பட்டன!
இவர் மரித்துப் பலவருடங்களுக்குப் பிறகு, “ஆண்டவரே! உமது பரிசுத்த இல்லத்தின் மீதான ஆர்வம் என்னை முழுமையாக எரித்துவிடும்படியாக ஆட்கொள்கிறது!” என்று இவர் தன் வாழ்நாளெல்லாம் அடிக்கடி மகா பரிசுத்த தேவநற்கருணையில் எழுந்தருளியிருக்கும் திவ்ய இரட்சகரான நேச சேசுவின் முன்பாக பக்தி பற்றுதலுடன் உச்சரித்த சங்கீத வாக்கியம், இவருடைய சரீரத்தில், புதுமையாக எரிந்த விதமாக பதியப்பட்டு இருப்பதைக் கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.
அர்ச். பிரான்சிஸ் கரக்சியோலோவே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹
🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக