ஜுன் 10 தேதி
ஸ்காட்லாந்து அரசியான அர்ச். மார்கரட் திருநாள்
🌹இவள், இங்கிலாந்து இளவரசரான எட்வர்டுவின் மகளாக 1045ம் வருடம் பிறந்தாள்; இங்கிலாந்து அரசரான எட்மண்டு ஐயன்சைடுவின் பேத்தியுமாவாள். 1066ம் வருடம், நார்மன்கள் இங்கிலாந்தை வெற்றிகொண்டதும், மார்கரட் மற்றும் அவளுடைய அரச குடும்பத்தினர் அனைவரும் ஸ்காட்லாந்திற்கு அடைக்கலம் தேடி ஓடிப்போக நேர்ந்தது; ஸ்காட்லாந்து அரசரான 3ம் மால்கம் இவர்களை வரவேற்று உபசரித்து அடைக்கலமளித்தார்; பின், மார்கரட்டை திருமணம் செய்துகொண்டார். அரசியான மார்கரட், அரசரையும், அந்நாட்டு மக்களையும் கிறீஸ்துவ உத்தமதனத்தில் மேன்மையடையச் செய்தாள். இவள் ஸ்காட்லாந்து மக்களுக்கு ஆசீர்வாதமாகத் திகழ்ந்தாள். இவள் வருவதற்கு முன், இந்நாட்டு மக்களிடையே மாபெரும் அறியாமையும் அநேக துர்ப்பழக்கங்களும் நிலவி வந்தன! மார்கரட் ஸ்காட்லாந்தை உத்தம கத்தோலிக்க நாடாக உருவாக்க அயராமல் உழைத்து வந்தாள்; நல்ல ஆசிரியர்களை வருவித்து, மக்களை சீர்திருத்தி, தீய பழக்க வழக்கங்களிலிருந்து அவர்களை விடுவிக்கும்படிச் செய்தாள்; அநேக புதிய தேவாலயங்களைக் கட்டுவித்தாள்.
இப்பரிசுத்த அரசிக்கு, சர்வேசுரன் ஆறு மகன்களையும், இரண்டு மகள்களையும் அருளினார். இரண்டு மகன்களும் துறவிகளாயினர்! கடைசி மகன் டேவிட், அர்ச்சிஷ்டவரானார்! ஒரு மகள் அர்ச்.மெட்டில்டா; இவள் இங்கிலாந்தின் முதலாம் ஹென்றி அரசரை திருமணம் செய்தாள்.
அர்ச். மார்கரட்டிற்கு துயரமான காலம் வந்தது; போரில், இவளுடைய கணவரும் அரசருமான 3ம் மால்கம் மற்றும் மூத்த மகன், எட்வர்டு, ஆகிய இருவரும் கொல்லப்பட்ட துயரமான செய்தி வந்தது. அச்சமயம், அர்ச். மார்கரட், “எல்லாம் வல்ல சர்வேசுரா!என் பாவங்களி லிருந்து என்னை சுத்திகரித்துத் தூய்மைப்படுத்தும்படியாக, எனக்கு இம்மாபெரும் துயரத்தை அளித்ததற்காக, நான் தேவரீருக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்” என்று உருக்கமாக ஜெபித்து வேண்டிக் கொண்டாள். கணவரும், மூத்த மகனும்,ஆலன்விக் என்ற இடத்தில் இங்கிலாந்திற்கு எதிராக நிகழ்ந்த போரில்,1093ம் வருடம் நவம்பர் 13ம் தேதியன்று கொல்லப்பட்டார்கள்; இன்னொரு மகன் எட்கர் துயரமான இச்செய்தியை தாயிடம் அறிவிக்க உயிருடன் திரும்பி வந்தார். அர்ச்.மார்கரட் இடைவிடாமல் அனுசரித்த ஒறுத்தல் உபவாசத்தினால் மிகவும் பலவீனமடைந்தவளாய், வியாதியில் விழுந்து, தன் கணவரும், மூத்த மகனும் மரித்த மூன்றாம் நாளில் மரித்தாள். டூஃபெர்ம்ளின் மடத்தில் அடக்கம் செய்யப்பட்டாள்; 1250ம் வருடம் 4ம் இன்னசன்ட் பாப்பரசரால் ஜுன் 19ம் தேதியன்று அர்ச்சிஷ்டப்பட்டம் அளிக்கப்பட்டது.
அர்ச்சிஷ்டப்பட்டமளிக்கப்பட்டபிறகு, இவளுடைய பரிசுத்த அருளிக்கங்கள், அதே மடத்திலிருந்த சிற்றாலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, பூஜிதமாக ஸ்தாப்பிக்கப்பட்டன! 1693ம் வருடம், 12ம் இன்னசன்ட் பாப்பரசர், ஸ்காட்லாந்து அரசியான அர்ச்.மார்கரட் அம்மாளின் திருநாளை ஸ்காட்லாந்து அரசரான ஏழாம் ஜேம்ஸின் மகனுடைய பிறந்த நாளின் ஞாபகார்த்தமாக ஜுன் 10ம் தேதிக்கு மாற்றி வைத்தார்.
ஸ்காட்லாந்து நாட்டின் பாதுகாவலியாக அர்ச்.மார்கரட் திகழ்கிறாள். 🌹✝️
🌹ஸ்காட்லாந்து அரசியான அர்ச்.மார்கரட் அம்மாளே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🌹
🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக