Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 25 ஜூன், 2024

June 23 - Feast of St. Joseph Cafasso - ஸ்துதியரான அர்ச். ஜோசப் கஃபாஸோ

 ஜுன் 2️3ம் தேதி

ஸ்துதியரான அர்ச். ஜோசப் கஃபாஸோ

 

ஜோசப் 1811ம் வருடம், ஜனவரி 15ம் தேதியன்று இத்தாலியில் பியட்மோன்ட் பிராந்தியத்தைச் சேர்ந்த காஸல்நோவா டி அஸ்டி (தற்போது, காஸல்நோவா தொன் போஸ்கோ என்று அழைக்கப்படுகிறது) என்ற இடத்தில், ஒரு விவசாய குடும்பத்தில், மகனாகப் பிறந்தார்; இந்த இடம், தூரின் நகரிலிருந்து 20 மைல் தொலைவில் உள்ளது. இவர் ஜீவித்த காலத்தில், இவருடைய சக தோழர்களாக, இரண்டு அர்ச்சிஷ்டவர்கள், தூரின் நகரில் அப்போஸ்தலத்து வத்தில் ஈடுபட்டிருந்தனர்; இவருக்கு 25 வயது மூத்தவரான அர்ச்.ஜோசப் கொத்தலங்கோவும்,  ஏறக்குறைய மூன்று வயது இளையவரான அர்ச். தொன் போஸ்கோவும் தான் அந்த இரண்டு அர்ச்சிஷ்டவர்கள்! அர்ச்.ஜோசப் கொத்தலங்கோ, தூரின் நகரிலிருக்கும் பிரசித்தி பெற்ற மருத்துவமனையை ஸ்தாபித்திருந்தார்; இம்மருத்துவ மனை, பத்தாயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய விதத்தில் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டியமைக்கப்பட்டிருந்தது; நூறு வருட காலத்திற்கும் மேலாக இம்மருத்துவமனை , எந்த வங்கியின் ஆதரவும் நிதியுதவியின் ஆதரவும் இல்லாமல், தேவ பராமரிப்பின் உதவியினால் மட்டுமே இயங்கி வந்தது, என்பது குறிப்பிடத்தக்கது!

 ஜோசப்பின் பெற்றோர்களுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தனர்; இவர் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார்; சிறு விவசாயிகளாக இருந்த இவருடைய பெற்றோர்கள், வறுமையின் காரணமாக, அவர்களுடைய சொற்ப வருமானத்தைக் கூட்டும்படியாக, அடுத்தவர்களின் நிலங்களிலும் உழைத்து சம்பாதித்து வந்தனர்;  இருப்பினும், ஏழைகள் மட்டில் மிக தாராள குணம்படைத்தவர்களாக அவர்களுக்கு உதவுவதில் சிறந்து விளங்கினர்!

 ஜோசப், குழந்தைப் பருவத்திலிருந்தே ஒரு அர்ச்சிஷ்டவராக விளங்கினார்! இவர் தன் சரீரத்திற்கு எதிராக நிகழ்த்திய போராட்டங்களில் அடைந்த வெற்றிகளின் விளைவாக, பரிசுத்தத்தனத்தில் சிறந்து விளங்கினார்; இப்பரிசுத்தத்தனம், இவர் வயதுடன் கூட, அதிகரித்து வளர்ந்து வந்தது! இவர் குழந்தைப் பருவத்தில் கூட, சில நாட்களை சரீர ஒறுத்தலுக்கென்று ஒதுக்கி வைத்திருந்தார்! மகா பரிசுத்த தேவமாதாவிற்கு தோத்திர மகிமையாக, ஒவ்வொரு சனிக்கிழமையும்  சுத்தபோசனத்தையும் உபவாசத்தையும் அனுசரித்தார்; தினமும் திவ்ய பலிபூசைக்கு மிகுந்த சந்தோஷத்துடன் செல்வார்;  அனுமதி கிடைத்தால் மகிழ்வுடன் பரிசாரகராக பூசைக்கு உதவி செய்வார்! பக்தி பற்றுதலுக்கு நன்மாதிரிகையாகத் திகழ்வார்!  புத்திக் கூர்மதியுடனும் சிறந்த ஞாபக சக்தியுடனும் விளங்கிய இவர், பள்ளிக்கூடத்தின் முதல் மாணவராக திகழ்ந்தார்! இவர், தனது ஜீவிய காலத்தில், ஒரு போதும், ஒரு மணித்துளி நேரத்தையும் வீணடித்தவரல்ல! பள்ளிக்கூடத்தை விரைவில் அடையும்படி, குறுக்குப் பாதையில் செல்வார்; வழியில்  தனது பாடங்களைப் படித்துக் கொண்டு செல்வார்! இவர் தனது ஜீவிய காலம் மிகக் குறைவாக இருக்கப்போகிறதைப் பற்றி அறிந்தவர்போல் தோன்றினார்! ஆதலால், சர்வேசுரனுக்காக, அவருடைய அதிமிக மகிமைக்காக, நிறைவேற்ற வேண்டியிருந்த அலுவலுக்கு தனது ஜீவிய காலம் போதுமானதாயிருக்காது, என்பதை அறிந்திருந்தவர்போல், அர்ச்.ஜோசப் தீவிரமாக செய்ய வேண்டிய நல்ல அலுவல்களில், துரிதமாகவும், தீவிரமாகவும் ஈடுபட்டிருந்தார்! தாழ்ச்சி என்கிற புண்ணியத்தினுடைய அஸ்திவாரத்தின் மீது மிக பலமாக எழுப்பப்பட்டிருந்த புண்ணிய குணநலன்களுடனும், ஒருபோதும் சர்வேசுரனை யாதொரு பாவத்தாலும் மனநோகச் செய்யக்கூடாத என்கிற உறுதியான தீர்மானத்துடனும் விளங்கிய ஜோசப், எவ்வித நிந்தை துன்பம் சக மாணவர்களிடமிருந்து வந்தாலும், அதைப் பற்றி சட்டைபண்ணாதவராக, சக மாணவர்கள் எல்லோரையும் விட, வயதில் மூத்த மாணவர்களையும் விட, ஞானத்திலும், அறிவிலும், ஒழுக்கத்திலும் அதிகரித்து சிறந்தவராக மேலே உயர்ந்து விளங்கினார்!

 தூரின் நகரிலுள்ள குருமடத்திலும், பல்கலைக்கழகத்திலும் இவர் கல்வி பயின்று, 1833ம் வருடம் தன் 22வது வயதில் குருப்பட்டம் பெற்றார்; தூரின் நகரில் குருமடத்திலும், பல்கலைக்கழகத்திலும், பின்னர் அர்ச்.பிரான்சிஸ் கல்வி நிறுவனத்திலும், தன் வேத இயல் கல்வியை தொடர்ந்து பயின்று வந்தார்; இங்கு, இவர் முதுகெலும்பு வளைந்து மிகவும் துன்புற்றபோதிலும், நல்லொழுக்க வேத இயலின் மிகச்சிறந்த பேராசிரியராக (விரிவுரையாளராக) பணியாற்றி வந்தார்; மிக பிரசித்தபெற்ற ஆசிரியராக மாணவர்களிடையே திகழ்ந்தார்; ஜான்சனிச பதிதத்தப்பறையை எதிர்த்து தீவிரமாகப் போராடி வந்தார்; அரசாங்கங்கள், திருச்சபையின் காரியங்களில் தலையிடுவதைக் கண்டித்து அதற்கு எதிராகவும் போரரடி வந்தார்; லுய்கி குவாலா என்பவருக்குப் பிறகு, 1848ம் வருடம், அர்ச்.பிரான்சிஸ் கல்வி நிறுவனத்தின் அதிபராக பொறுப்பேற்றார்; இளங் குருக்களிடமும், மாணவர்களுமானவர்களிடமும், இவர் தனது தன்னிகரற்ற பரிசுத்தத்தனத்தினுடையவும், சுய கட்டுப்பாட்டு ஒழுங்கின் பேரிலும், உத்தம ஜீவியத்தில் பின்பற்ற வேண்டிய உயரிய அனுசரிப்பு முறைகளின் பேரிலும் , தான் அறிவுறுத்திய வலியுறுத்தலினுடையவும் பாதிப்பை, மிக ஆழமாக ஏற்படுத்தினார்!

 எல்லா மாணவர்களும், இவரிடம் கவர்ந்திழுக்கப்பட்டவராகளாக, ஓடி வந்து, இவரையேத் தங்களுடைய ஞான ஆலோகராகவும், ஆத்தும இயக்குனர் சுவாமியாராகவும் இருக்கும்படி விண்ணப்பித்தனர்! சிறைக்கைதிகளிடையே ஆன்ம சரீர தேவைகளுக்கான  பணிவிடை  செய்து வந்தார்;  கொடிய சூழல்களிலிருந்து, அவர்களுடைய ஆத்துமங்களை, சர்வேசுரன் பால் மனந்திருப்பிக் கொண்டு வந்தார்!

அர்ச்.  தொன்போஸ்கோவை,1827ம் வருடம் சந்தித்தார்! இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாயினர்! இவர், தொன்போஸ்கோவிற்கு அளித்த உற்சாகத்தினாலும், ஆதரவினாலும், போஸ்கோ, தொழிற்சாலை நகரமான தூரின் நகரத்தில் பராமரிப்பின்றி விடப்பட்டிருந்த சிறுவர்களுடைய ஆத்தும சரீர நன்மைகளுக்காக உழைப்பதே தனது தேவ அழைத்தல் என்பதைக் கண்டுணர்ந்தார்! தொன்போஸ்கோவின் இவ்வுன்னத அலுவலில், அர்ச்.ஜோசப் கஃபாசோ அவருடைய ஆலோசகராக இருந்தார்! அர்ச்.தொன்போஸ்கோவின் ஸ்தாபனங்களில், ஜோசப்பும் மிக நெருக்கமாக செயலாற்றினார்! போஸ்கோ ஸ்தாபித்திருந்த குருக்கள் மற்றும் கன்னியர்களுடைய துறவற ஸ்தாபனங்களுக்கும், பிறர்சிநேக மற்றும் அநாதை சிறுவர் இல்லங்களுக்கும் தேவையான நிதியுதவியை அளித்து உதவும்படி, ஜோசப், மற்றவர்களிடம் தூண்டி, ஊக்கப்படுத்தி வந்தார்! அர்ச்.ஜோசப் கஃபாசோ 1860ம் வருடம், ஜுன் 23ம் தேதியன்று , 49வது வயதில், தூரின் நகரில் பாக்கியமாய் மரித்தார்! 1947ம் வருடம், 12ம் பத்திநாதர் பாப்பரசர் இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் அளித்தார்!

ஸ்துதியரான அர்ச்.ஜோசப் கஃபாஸோவே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

http://www.catholictradition.org/Priests/priesthood5-2.htm


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக