ஜுன் 26ம் தேதி
வேதசாட்சிகளான அர்ச்.அருளப்பர், அர்ச். பவுல் திருநாள்
சகோதரர்களான இவர்கள் இருவரும், 354ம் வருடம் மரித்த மகா கான்ஸ்டன்டைனின் மகளான கான்ஸ்டான்டினாவின் வாரிசுகள். வேதவிசுவாசத்தை மறுதலித்தவனும் வேத விரோதியுமான ஜுலியன் சக்கரவர்த்தியாக உரோமையை ஆண்டபோது, இவ்விரு சகோதரர்களையும், சக்கரவர்த்திக்குப் பிரமாணிக்கமாய்’ இருக்கிறதாக உறுதிப்பிணை அளிக்கவும், அஞ்ஞான விக்கிரகங்களுக்குப் பலி செலுத்தவும் வற்புறுத்தினான்: அதற்கு இவ்விரு சகோதரர்களும், அவனிடம், “நீர் வேத விசுவாசத்தைப்புறக்கணித்து விட்டு, சர்வேசுரனுக்கு சம்பந்தமில்லாத வேறு வழிகளைப் பின்பற்ற சென்று விட்டீர்! அவற்றிற்கும் சர்வேசுரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நீர் நன்கறிவீர்! உம்முடைய இந்த வேத விசுவாச மறுதலிப்பினால், உம்முடன் எதையும் நட்புறவாகக் கொண்டிருக்க நாங்கள் மறுத்து விட்டோம்!” என்று கூறினர். பின், ஜுலியன், முகஸ்துதிக்கான சில வார்த்தைகளையும், சில அச்சுறுத்தல்களையும் எழுதி ஒரு கடிதத்தை இவ்விரு சகோதரர்களுக்கு அனுப்பி, சிந்திப்பதற்கு பத்து நாட்கள் அவகாசம் கொடுத்தான்.
இச்சமயத்தில், அருளப்பரும்,பவுலும், உரோமையிலிருந்து சங்.கிரிஸ்புஸ் என்ற குருவானவரை வரவழைத்தனர்; மேலும், நண்பர்களான கிரிஸ்பினியானுஸ், பெனடிக்டா என்பவர்களை வரவழைத்து, இந்நிலவரத்தைப் பற்றி விளக்கியபிறகு, திவ்யபலிபூசையை பக்திபற்றுதலுடன் கண்டனர்; பின் தங்களுடைய ஆஸ்திகளையெல்லாம் கிறீஸ்துவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கான விவரங்களை தங்கள் நண்பர்களிடம் கூறினர். 10 நாட்கள் கடந்தன. 11வது நாள், இவர்கள் இருவரும் வீட்டிலேயே சிறைவைக்கப்பட்டனர்; அஞ்ஞான விக்கிரகங்களுக்கு பலி செலுத்த வற்புறுத்தப்பட்டனர்; சகோதரர்கள் இருவரும் உடனே தங்களுடைய கத்தோலிக்க விசுவாச சத்தியத்தை உச்சாரணம் செய்தனர்! அஞ்ஞான சிலைகளுக்கு பலி செலுத்த மறுத்தனர்.
362ம் வருடம், ஜுன் 26ம் தேதி, அருளப்பரும் பவுலும் அவர்களுடைய வீட்டிலேயே தலை வெட்டிக் கொல்லப்பட்டனர்; இரகிசயமாக, அவர்களள் இருவரும், வீட்டிற்குள்ளேயே புதைக்கப்பட்டனர். இருவரும் அரச குடும்பத்தைச் சேர்ந்ததால், இவர்கள் இருவரையும் நாடு கடத்தியதாக ஒரு பொய்யான செய்தியைப் பரப்பி விட்டனர்.
மகா ஆடம்பரமான ஒரு தேவாலயம் இவ்விரு அர்ச்சிஷ்டவர்களுக்கும் தோத்திரமாக, பம்மாகியுஸ் என்ற செனட்டரின் உயிலின் படி, 398ம் வருடம், இவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது கட்டப்பட்டது. இப்போது, இந்த தேவாலயம் திருப்பாடுகளின் சபைத் துறவியரால் நிர்வகிக்கப்படுகிறது; இதில் தான் அர்ச். சிலுவை சின்னப்பர் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும் இந்த தேவாலயம், தபசு காலத்தின் முதல் வெள்ளியன்று, ஸ்தல தேவாலயமாக இயங்கி வருகிறது! இவ்விரு வேதசாட்சிகளின் பெயர்களும் நடுப்பூசை ஜெபத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன!
363ம் வருடம் ஜுன் 26ம் தேதியன்று, இவ்விரு வேதசாட்சிகள் மரித்த ஒரு வருடத்திற்குப் பிறகு, சரியாக அதே தேதியில், வேதவிரோதியான ஜுலியன், பெர்ஷியர்களுக்கு எதிரான போரில் கொல்லப்பட்டான்.
வேதசாட்சிகளான அர்ச். அருளப்பரே! அர்ச். பவுலே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக