Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 4 மே, 2024

சாத்தானின் தந்திர சோதனைகளை வெல்லும் விதம் - How to Overcome Satan's Tricky Temptations

 

சாத்தானின் தந்திர சோதனைகளை வெல்லும் விதம்

 

வேதபாரகர்களின் கருத்துப்படி, பிதாவாகிய சர்வேசுரன் தமது பிரிய குமாரன் சேசுவாக மனித உருவில் இவ்வுலகில் தோன்றப் போவதாக அறிவிக்கிறார். எல்லா அரூபிகளும் அவரை வழிபடவும், அவருக்கு ஊழியம் செய்யவும் வேண்டும் என்றும் அவர் உத்தரவிடுகிறார். கடவுள் மனித னாவதால், "தேவ-மனிதருக்கும்,"அவரது திருமாதாவுக்கும் தான் ஊழியம் செய்ய வேண்டியிருக்கும் என்பதையும், கடவுள் மனித சுபாவத்தை எடுத்துக் கொள்வதால், அது மகிமை பெறும் என்பதையும் கண்டு சாத்தான் ஆங்கார முற்று, கடவுளின் ஆணைக்கு அடிபணிய மறுத்தான். "எனக்கு ஒப்பானவன் எவன்? நான் ஏன் கடவுளுக்கு அடிபணிய வேண்டும்?" என்று இறுமாந்து எழுந்தான்; அது, தான் என்ற ஆணவம்; தனக்கு நிகரானவர் எவரும் இல்லை என்ற துணிவு; தானே தனக்குப் போதும் என்ற தற்பெருமை.

கடவுளின் இந்தக் கட்டளையைக் கேட்டபோது, தீமையின் உணர்வு ஒன்று அவனுள் எழுந்தது என்று சில வேதபாரகர்கள் கூறுகின்றனர். இதை அவன் உடனே அடக்கியொடுக்கி, அதன் மீது வெற்றிகொண்டிருப்பான் என்றால், பசாசுக்கள் என்ற இனமே இல்லாமல் போயிருக்கும். ஆனால் அவனோ, தனது இந்தப் புதிய “அறிவில்" இன்பம் கண்டான். அது தரவிருந்த "சுதந்திரத்தில்" மூடத்தனமுள்ள அக்களிப் புக் கொண்டான். அதன் காரணமாக, இந்த "அறிவாலும், சுதந்திரத்தாலும் வஞ்சிக்கப்பட்டு, நரகத்தில் தள்ளப்பட்டான்.

சாத்தான் எவற்றால் வீழ்ச்சியடைந்தானோ, அதே "அறிவையும், சுதந்திரத்தையும்" கொண்டு மனுக்குலத்தைப் பாவத்தில் வீழ்த்த அவன் திட்டமிட்டான். சர்வேசுரன் ஆதிப் பெற்றோரைப் படைத்தபோது, அவர்கள் "அறிந்து"கொள்ளத் தேவையில்லாத தீமையை அவர் அவர்களிடம் இருந்து மறைத்து வைக்கச் சித்தங்கொண்டார். "நன்மையும் தின்மையும் அறிவிக்கும் மரத்தின் கனியை உண்ணாதிருப்பாயாக, ஏனென்றால் அதை நீ புசிக்கும் நாளிலே சாகவே சாவாய் (ஆதி. 2:17) என்னும் வார்த்தைகளில் அவர் தமது இந்தத் திருச்சித்தத்தை வெளிப்படுத்துகிறார். ஆயினும், மனிதனின் சுயாதீன சித்தத்தை அவர் தடைசெய்யவில்லை. அதைப் பயன்படுத்தி, அவன் தீமையைத் தள்ளி, நன்மையைத் தெரிந்துகொண்டு, அதன் மூலம் தம்மை மகிமைப்படுத்த வேண்டுமென்று அவர் விரும்பினார்.

ஆனால் பசாசு தீமையை அறியும் இந்த "அறிவை" ஏவாளுக்கும், அவள் வழியாக ஆதாமுக் கும் அறிமுகப்படுத்தி, கடவுளின் அன்பின் நுகத்தடியைத் தள்ளிவிட்டு, தீமையின் "சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ளும்படி அவளை வற்புறுத்தினான். அந்தக் கனியின் "அழகையும், சுவையையும்" அவளுக்குக் காண்பித்தான். இவ்வாறு, தன்னை வஞ்சித்த அதே அறிவாலும், சுதந்திரத்தாலும், அவன் மனிதனையும் வஞ்சித்துப் பாவத்தில் தள்ளினான்.

ஆனால் மனிதனின் பாவத்திற்குப் பரிகாரம் செய்ய வந்த சர்வேசுரனுடைய திருச்சுதனும், அவருடைய திருத்தாயாரும் பாவத்தை "அறியாதிருந்ததாலும்," தங்கள் "சுதந்திரத்தைக்" கடவுளுக்கு அர்ப்பணித்ததாலும், மனிதன் செய்த பாவத்திற்குப் பரிகாரம் செய்தார்கள். சேசுநாதர் தேவ சுதன் என்ற முறையில் பாவம் அணுக இயலாதவராக இருந்தார், தேவ அன்னை அவரது தாயாயிருக்கத் தகுதி பெறும்படி "அமல உற்பவியாகப்" பாதுகாக்கப்பட்டார்கள். இவ்வாறு, இவர்கள் இருவரும் பாவத்தை "அறியாதிருந்தார்கள்." அவ்வாறே தேவ திருச்சித்தத்திற்கு முழுவதுமாகப் பணிந்திருந்ததன் மூலம், "சுதந்தரத்தின்" ஆங்காரத்தின்மீதும் அவர்கள் வெற்றி கொண்டார்கள். "என் சித்தப்படியல்ல, உமது சித்தப்படியே ஆகக்கடவது, " "உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவதுஎன்னும் வார்த்தைகளில் கடவுளுக்கு அடிமைத்தனம் என்னும் உண்மையான சுதந்திரத்தை அவர்கள் தேர்ந்துகொண்டார்கள். இவ்வாறு, சேசுவும், அவரோடு இணைந்து மாமரியும், மனுக்குலம் இழந்திருந்த உண்மையான சுதந்திரமாகிய இரட்சணியத்தை அதற்குப் பெற்றுக்கொடுத்தார்கள்.

இன்றும் மனிதர்களை வீழ்த்த இதே ஆயுதங்களைத்தான் சாத்தான் பயன்படுத்துகிறான். விஞ்ஞான வளர்ச்சியை முழுவதுமாகத் தனக்கு அடிமையாக்கி, அவன் சகல அசுத்தங்களைப் பற்றிய அறிவாலும் மனிதனை, குறிப்பாக, குழந்தைகளையும், இளம்பருவத்தினரையும் நிரப்புகிறான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கற்பனை கூட செய்திருக்க முடியாத அளவில், இன்று அவன் பாவத் தைத் தொலைக்காட்சி, வலைத்தளம், மிகக் குறிப்பாக, கைபேசி என்னும் பயங்கரங்களின் மூலம் வீட்டு வரவேற்பறைக்குள் மட்டுமின்றி, குழந்தைகளின் மனங்களுக்குள்ளும் மிக எளிதாக நுழையச் செய்கிறான். குழந்தைகள் கைபேசியைப் (இதற்கு வேறு பெயர் கண்டுபிடிக்கப்பட வேண்டும், ஏனெனில் இக்கருவி பேசுவதற்கல்ல, மாறாக, கேட்டல், பார்த்தல், "தீமையை அறிதல்" என்பவற் றிற்கே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.) பயன்படுத்துவதைப் பெற்றோர் தடுக்க இயலாத படி, வலைத்தளக் கல்வி என்ற ஒரு பெரும் ஆபத்தை அவன் கத்தோலிக்கப் பள்ளிகளிலும் கூட அறிமுகப்படுத்தி விட்டான். ஏக மெய்யான கடவுளையும், அவர் அனுப்பினவராகிய சேசுக் கிறீஸ்துவையும் அறிந்துகொள்வதே நித்திய ஜீவியம் (அரு.17:3) என்ற சத்தியத்தை முழுவதுமாக மனிதர்களிடமிருந்து மறைப்பதே அவனது முக்கிய அலுவலாக இருக்கிறது.

இதில் இன்று அவன் பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கிறான் என்பது தெளிவு. இன்று கிறீஸ் தவர்களிடம், குறிப்பாகக் குழந்தைகளிடம் கடவுளைப் பற்றிய அறிவு இல்லை. தேவ கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் இல்லை. இதற்கு நேர்மாறாக, தங்கள் சரீரத்தையும், உலகத்தையும் பற்றிய அறிவு அவர்களிடம் மிகுந்திருக்கிறது. இதைக் குறித்து அவர்கள் பெருமையும் கொள்கிறார்கள். பலர் பல ஒளிக் காட்சிகளில் பாவம் ஏதுமில்லை என்று நம்புகிறார்கள். ஆனால், வெறுமனே கண்களின் இச்சையும் விபச்சாரமே (மத். 5:28) என்பதையும், கண்கள் சாத்தான் ஆத்துமத்தின் நுழையப் பயன்படுத்தும் வாசல்கள் என்பதையும் அவர்கள் மறந்து விடுகிறார்கள்.

இந்த நிலை மாற வேண்டும். மனிதர்கள் மாமரியின் வழியாக சேசுவுக்குத் தங்களை முழு அர்ப்பணம் செய்ய வேண்டும். இதை வெறுமனே ஒரு வாடிக்கையாகவோ, பக்தி முயற்சியாகவோ அவர்கள் செய்யக்கூடாது. மாறாக, முழு அர்ப்பணம் என்பது ஜீவியத்தைத் திருத்திக்கொள்வதும், நம் ஜீவியத்தில் சேசுவையும், மாதாவையும் கண்டுபாவிப்பதும் ஆகும். இவ்வாறு அவர்கள் தங்கள் சுதந்திரத்தை" விலக்கி, கடவுளின் அடிமைகளாகத் தங்களை ஆக்கிக்கொள்ள வேண்டும்.

முக்கியமாக, பாவத்தை அறியாதிருக்கும் சுதந்திரத்தை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இது இன்றைய உலகில் மிகவும் கடினமானதாகத் தோன்றலாம். ஆனால் சர்வேசுரனால் ஆகாதது ஒன்றுமில்லை, அவராலன்றி நம்மால் எதுவும் செய்ய இயலாது, ஆனால் நம்மைப் பலப்படுத்து கிறவரைக் கொண்டு எதையும் செய்ய நம்மால் ஆகும் (லூக்.1:37; அரு. 15:5; பிலி. 4:13).

ஆகையால், சகோதரரே, அறிவையும், சுதந்திரத்தையும் கொண்டு மனுக்குலத்தை அழிக்க முயலும் பசாசை, பாவத்தைப் பற்றிய அச்சத்தாலும், தீமையை அறியாதிருக்கும் சுதந்திரத்தாலும் நாம் வெற்றி கொள்வோமாக.

மோட்சத்தின் பிணையாகிய பிறர்சிநேகம் - Charity

 

மோட்சத்தின் பிணையாகிய பிறர்சிநேகம்

"நீங்கள் ஒருவரை ஒருவர் சிநேகிக்கும்படியாக, நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளை கொடுக்கிறேன். நான் உங்களை சிநேகித்தது போல, நீங்களும் ஒருவர் ஒருவரை சிநேகிக்கக் கடவீர்கள்" (அரு.13:34).

 


சேசு தாம் கல்வாரியில் பலியாகப் போகுமுன் இராப்போஜன அறையில் பன்னிரு அப்போஸ்தலர்களையும் ஒன்றாகக் கூட்டிச் சொன்ன கனிவும், அன்பும், ஆழமும் மிக்க வாக்கியம் இது. சிநேகத் தால் மட்டுமே தூண்டப்பட்டு இவ்வுலகை சிருஷ்டித்த கடவுள்-மனிதர் கூறிய வாக்கியம் இது. ஒவ்வொரு மனிதனும் தன்னைப் போல பிறரை நேசிக்க வேண்டுமென்று அவர் காயீனுக்கு அறிவுறுத்து கிறார். பிறர்சிநேகமற்ற அவனைத் தண்டிக்கவும் செய்கிறார்.

புதிய ஏற்பாட்டில் சேசு இராப் போஜன அறையில், தம் சீடர்கள் தங்களைப் போல் பிறரையும் நேசிக்க அவர்களுக்குக் கட்டளையிடு கிறார். அவர்கள் வழியாக, சகல மனிதர்களுக்கும் இதை அவர் அறிவிக் கிறார். சீனாய் மலையில் தரப்பட்ட பத்துக் கற்பனைகளில் மூன்று, அவரைப் பற்றியவை, மீதமுள்ள ஏழு, நம் அயலார் மட்டில் நமக்குள்ள கடமைகளைக் குறிப் பவை. அதைத்தான் புதிய ஏற்பாட் டில், இராப் போஜன அறையில் அவர் புதுப்பிக்கிறார். நேசமே உருவானவர் தம்மையும், தம் நிமித்தமாக சகல மனிதரையும் நேசிக்கும்படி கட்டளையிடுகிறார்.

முதலில்: இன்று கத்தோலிக்கக் குடும்பங்களில் பிறர்சிநேகம் இல்லை. கணவனுக்கு மனைவி கீழ்ப்படியவும், கணவன் மனைவிக்குரிய மரியாதை தந்து அவளை நேசிக்கவும் மறுத்ததாலேயே பல பிரச்சினைகள், அதனால் சமாதானக் கேடு. பரஸ்பர முழு அன்பு, தாழ்ச்சி, பொறுமை, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல், மொத்தத்தில், சிநேகமில்லை, முடிவில், விவாகரத்து, பிரிவினை, தகராறு.

இரண்டாவது, பெற்றோர், பிள்ளைகளிடம் உண்மையான அன்பு, சமாதானம் இல்லை. எல்லாருமே சுயநலவாதிகளாக இருக்கிறார்கள். கஷ்டப்பட்டுப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி, ஒரு நல்ல சமூக அந்தஸ்தைக் கொடுத்த பெற்றோரைத் தவிக்கவிட்டு, சுயநலமாக வாழும் பிள்ளைகள், மருமக்கள். ஒரு சில பெற்றோரும் கூட நீதியோடு நடப்பதில்லை. சிநேகம் அங்கில்லை.

மூன்றாவதாக, எல்லாக் கத்தோலிக்க ஊர்களிலுமுள்ள பெரிய பிரச்சினை சமாதானக் கேடு, ஊர் இரண்டுபட்டிருக்கிறது. வடக்குத் தெருவுக்கும், தெற்குத் தெருவுக்கும் சண்டை, அல்லது மேற்குத் தெருக்கும், கிழக்குத் தெருவுக்கும் சண்டை. இங்கும் சிநேகமில்லை. முடிவில், ஊர்த் தகராறு, ஒரே ஊரில், ஒரே இனத்தில், ஒரே இரத்த உறவுகளிடையே குழப்பம், சண்டைகள், சமாதானக் கேடு!

நான்காவதாக, குருக்கள், மக்கள் என்ற இரு பிரிவுகள். குருவுக்கு ஆதரவாக ஒரு கூட்டம், எதிராக மற்றொரு கூட்டம். தவறான கணக்கு வழக்குகள், அன்பியங்கள் என்று பல காரணங்கள் இருக்கலாம். இங்கும் சிநேகமில்லை. தங்களை நேசித்து, தங்களுக்காக உயிரைக் கையளித்தவரைத் தங்கள் அயலாரில் நேசிக்க யாரும் இல்லை. முடிவில், சமாதானக் கேடு! குருக்களுக்கும் குருக் களுக்கும் இடையில் கூட சண்டை, ஆயரோ, தலையிட முடியாத நிலையில் இருக்கிறார்!

ஐந்தாவது, சாத்தானின் மிகப் பெரிய சதியின் உச்சக்கட்டம், சாதிகளை வைத்து மனிதர் களைப் பிரித்தாளுவது. சிநேகமானவர் சிநேகிக்கப்படாவிட்டால், சுபாவத்திற்கு மேலான சகோ தர அன்பு நம்மில் குடிகொண்டிருக்க முடியுமா? சாதிகள் சமாதானக் கேட்டின் பிறப்பிடங்கள்.

அன்பு இருக்கும் இடத்தில் கடவுள் இருக்கிறார். அன்பு இல்லாத இடத்தில் சாத்தான் இருப் பான். எந்த ஓர் ஆன்மாவும் வெறுமையாய் இருக்க முடியாது. ஒன்றில், பிதா, சுதன், இஸ்பிரீத்துசாந்து வாகிய சர்வேசுரன் இருப்பார், அல்லது சாத்தான் இருப்பான். இந்தியாவில் பல சாதிகள் இருந்தாலும், கிறீஸ்தவர்களாக மனம் மாறியபின், கிறீஸ்துவையும், அவரது போதனைகளையும் பின்பற்றுபவர் களில், "யூதனென்றும், கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை" (கலாத். 3:28); ஆனால் இவர்களோ அவரைப் பின்பற்றாமல், ஒவ்வொருவரும் தங்கள் சாதியே உயர்ந்தது என்று கொடி பிடிக்கிறார்கள். சேசு சிரசாயிருக்க, நாம் அவரில், திருச்சபையாகிய ஞான சரீரத்தின் உறுப்புகளாயிருக்கிறோம். சேசுவையும், மாதாவையும், கத்தோலிக்கத் திருச்சபையையும்விட இவர்கள் உள்ளத் திலும், இரத்தத்திலும் சாதி வெறி என்ற கொடிய, பிறரன்புக்கு எதிரான பெரிய பாவத்தைக் கொண் டிருக்கிறார்கள். இதில் பல குருக்களும் கூட முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். பலர் தங்கள் மக்களை இரகசியமாகத் தூண்டி விடுகிறார்கள். இது எல்லா மறை மாவட்டங்களிலும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. இது சேசுவின் கட்டளைகளுக்கு எதிரானது. அந்த இனிய நேசரின் நேசத்திற்கு எதிரானது.

இந்தப் பிறரன்புக்கு எதிரான பாவம், மனம் பொருந்திச் செய்கிற, கனமான, சாவான பாவம் என்று 99% கிறீஸ்தவர்கள் சிந்திப்பதில்லை. இவர்கள் மனம் வருந்தாமலும், சமாதானம் செய்யா மலும், பகையை மறவாமலும், கசப்போடு வாழ்ந்து, மனஸ்தாபமின்றி இறந்தால், நேரே நரகத்திற்குத் தான் செல்வார்கள். நேசமானவர் மோட்சத்தில் நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ஆனால் இவர்களோ லூசிபரையே தேர்ந்துகொள்கிறார்கள். நம் மீட்பிற்காக, மனிதாவதாரத்தின் துன்பத்தை யும், ஒரு மனித சரீரத்தின் பல துன்பங்களையும், இறுதியாக கசையடிகளையும், முள்முடியையும், சிலுவையின் அகோர வேதனைகளையும் சுமந்தவரை அவமானப்படுத்தும் விதமாக அவரிடமிருந்து விலகி, பரபாஸைத் தேர்ந்துகொண்ட யூதர்களைப் போல், இவர்கள் லூசிபரைத் தேர்ந்துகொள் கிறார்கள். மோட்சத்தை விட இவர்கள் நரகத்தையே அதிகம் நேசிப்பதாகத் தோன்றுகிறது!

அன்புச் சகோதரரே, மேற்கூறிய அனைத்திற்கும் முடிவில், நம்மிடம் மன்னிப்பில்லை, சகோதர அன்பில்லை, விட்டுக் கொடுத்தல், சமாதானமில்லை. அனைவரும் ஆலயத்திற்கு வருகிறோம், நன்மை வாங்குகிறோம். ஆனால் பாவத்தோடு தைரியமாய் வாழ்கிறோம். யாரும், திருந்தவோ, திருத்தவோ விரும்புவதில்லை. கல்வாரியைப் பாருங்கள்! திவ்ய நற்கருணையை உற்றுநோக்குங்கள். சிநேக மானவர் நம் மீதுள்ள சிநேகத்திற்காக மோட்சத்திலிருந்து நம்மிடம் வந்திருக்கிறார். அதே கல்வாரி வழியாகவும், திவ்ய பலிபூசை, திவ்ய நற்கருணை மூலமாகவும் நாம் பூமியிலிருந்து மோட்சத்திற்கு ஏறி வர வேண்டுமென்று அவர் ஏங்குகிறார்!

நம்மிடம் சிநேகமில்லாவிடில், அது நம்மில் தாழ்ச்சியை அழித்து, ஆங்காரத்திற்கு நம்மை இட்டுச் செல்லும். அதன் விளைவே யார் பெரியவன், யார் சிறியவன் என்னும் போட்டி மனப்பான்மையாகும்.

முடிவு: பிறரன்பு மிக எளிதானது, சுலபமானது. நாம் நம் பெற்றோரையும், உடன்பிறந்தவர்களை யும், உறவினர்களையும் நேசிப்பது சுபாவ அன்பு. நமக்குத் தெரியாதவர்களை, அன்னியர்களை, ஊழியர் களை, மற்ற இனத்தவரை, ஏன், நம் பகைவர்களையும் கூட, கடவுளின் பெயரால் நேசிப்பது, சுபாவத் திற்கு மேலான அன்பு. "என் நுகம் இனிது, என் சுமை எளிது" என்ற ஆண்டவர், நம்மால் முடியாததை ஒருபோதும் நமக்குக் கட்டளையாகத் தர மாட்டார். பிறர்சிநேகத்திற்கு எதிரான இப்பாவங்கள் எல்லா மேற்றிராசன குருக்கள், கன்னியர், துறவிகளிடமும், விசுவாசிகளிடமும் சர்வ சாதாரணமாகக் காணப்படுகின்றன. ஒளியையும் (சேசுவையும்), ஒளியைத் தாங்கியவர்களையும் (தேவ மாதாவையும்) நாம் பின்பற்றுகிறோம். மனந்திரும்புவோம், அதன் மூலம் நம் நாடும் விரைவில் கிறீஸ்து அரசரின் அரசாட்சியின்கீழ் வந்து சேரும். அங்கே சந்தோஷமும், சமாதானமும், அன்பும் பூரணமாய்த்துலங்கும்.

சேசுவின் திரு இருதயம் எங்கும் சிநேகிக்கப்படுவதாக - May the Sacred Heart of Jesus be loved everywhere

 

"சேசுவின் திரு இருதயம் எங்கும் சிநேகிக்கப்படுவதாக!”


சேசுவின் மகா பரிசுத்த திரு இருதயம் தேவ-மனிதரின் இருதய மாக இருக்கிறது. மனிதாவதாரப் பரம இரகசியத்தின் வழியாக, தேவ சுதன், இஸ்பிரீத்துசாந்து நிழலிட்டதால், பரிசுத்த கன்னி மாமரியின் மாசற்ற இருதயத்திலிருந்து ஒரு மனித இருதயத்தை எடுத்துக்கொண்டார். திரு இருதயப் பிரார்த்தனையில், தேவ சுதனின் மனிதாவதாரத்தைப் பற்றிய மிக அழகிய மன்றாட்டு ஒன்று உள்ளது: “பரிசுத்த கன்னித் தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திரு இருதயமே." இதற்கு அடுத்த மன்றாட்டு, சேசுவின் மனித இருதயம் அவரது தேவ சுபாவத்தோடு ஒன்றித்திருக்கிறது என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது: “தேவ வார்த்தையாகிய சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திரு இருதயமே...” சுவிசேஷங்களில்: “என் மக்களிடம் என் இருதயம் பரிவுகொள்கிறது (மத். 15:32) என்றும், “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, என் அண்டையில் வாருங்கள். நான் உங்க ளுக்கு இளைப்பாறுதல் தருவேன்... என்னிடமிருந்து கற்றுக்கொள் ளுங்கள். ஏனெனில் நான் சாந்தமும், இருதயத் தாழ்ச்சியும் உள்ளவன். உங்கள் ஆத்துமங்களும் இளைப்பாற்றியைக் கண்டடையும். ஏனெனில் என்நுகம் எளியது, என் சுமை இனியது" (மத். 11:28) என்றும் கிறீஸ்துநாதர் கூறும்போது, அவர் தமது சொந்த இருதயத்தையே குறிப்பிடுகிறார்.

தேவ உயிர் நம்மீது பொழியப்படும் செயல், கிறீஸ்துவின் திறக்கப்பட்ட இருதயத்திலிருந்து வழிந்தோடிய இரத்தத்தாலும், நீராலும் குறித்துக் காட்டப்படுகிறது. இச்செயல் அவருடைய திருச்சபையில், விசேஷமாக தேவத்திரவிய அனுமானங்களில் தொடர்கிறது. சேசுவின் ஊடுருவப் பட்ட திரு இருதயத்திலிருந்து வழிந்த தண்ணீரிலும், இரத்தத்திலும் திருச்சபை எப்போதும் ஞான ஸ்நானம், திவ்ய நற்கருணை ஆகிய தேவத் திரவிய அனுமானங்களைக் காண்கிறது. இவற்றினால், இஸ்பிரீத்துசாந்து நம் ஆத்துமங்களுக்குள் ஊற்றப்படுவதன் வழியாக, திருச்சபையில் நாம் உயிர் பெறுகிறோம். இவற்றின் மூலமாகத்தான் நம்மில் வாசம் செய்கிற இஸ்பிரீத்துசாந்து வானவரின் உயிர், கிறீஸ்துநாதரின் மெய்யான சரீரமாகிய பரலோக உணவால் போஷிக்கப்படுகிறது.

திவ்ய கன்னிகை தேவ அடிமையாகத் தன்னை அர்ப்பணித்ததும், தேவ சுதனின் தேவ சுபாவத் தோடு மனித சுபாவம் இணைந்து, சேசுவின் திரு இருதயம் துடிக்கத் தொடங்கியது. அவர் நமக்காகப் பிறந்தார், நமக்காக வாழ்ந்தார், நமக்காகவே மரித்தார். தமது கொலைஞர்களின் வன்முறையைவிட அதிகமாக அன்பினாலேயே அவர் சிலுவையில் அறையப்பட்டார்; “அவர் என்னை நேசித்து, எனக்காகத் தம்மையே கையளித்தார்" என்ற அப்போஸ்தலரின் கூற்றுப்படி, அவர் ஒவ்வொரு மனிதனுக்கும் தம்மையே உன்னதக் கொடையாகத் தந்தார். அவர் தமது இருதயத்தில் வைத்துள்ள பேறுபலன்களின் அளவற்ற பொக்கிஷத்தை இரட்சிக்கப்பட்ட மனித இனத்தின்மீது பொழிகிறார்.

அவர் அர்ச். மர்கரீத் மரியம்மாளிடம்: "மனிதர்களை எவ்வளவோ அதிகமாக நேசித்த என் இருதயத்தைப் பார். பதிலுக்கு அவர்களிடமிருந்து நான் பெறுவதெல்லாம் நன்றியற்றதனமும்,  நிந்தை அவமானங்களுமே. இவற்றிற்குப் பரிகாரம் செய்வதன் மூலம் நீயாவது எனக்கு ஆறுதல் அளிக்க முயற்சியெடு" என்றார். மனிதர்களில் பெரும்பாலானவர்கள் கடவுளிடமிருந்து நன்மை களைப் பெற்றுக்கொள்வதுதான் பக்தி என்று நினைக்கிறார்கள். ஆனால் இங்கோ, சேசுவின் திரு இருதயம் மனிதர்களிடம் ஆறுதல் கேட்கிறது. சர்வ வல்லபர் அற்பப் புழுவிடம் ஆறுதலைக் கேட்பது எவ்வளவு பரிதாபம்! ஆனால் அதையும் நாம் தர மறுப்பது எத்தகைய அக்கிரமம்! இதைப் புரிந்து கொண்டால், அவரை நேசிப்பதும், அவருக்கெதிரான நிந்தைகளுக்குப் பரிகாரம் செய்வதும் நமக்கு எவ்வளவு எளிதாயிருக்கும்!

சேசுவின் இந்த வல்லமை மிக்க திரு இருதயத்திற்கு மனித ஆறுதல் என்பது தேவைதானா? இந்தத் திரு இருதயம் வல்லமை மிக்க சர்வேசுரனும், மனிதனுமானவரின் திரு இருதயம் என்ற முறையில் அதற்கு மனித ஆறுதல் அற்ப அளவிலும் கூட தேவையில்லை. ஆனால் இங்கே இருதயம் என்பது தேவனும், மனிதனுமானவர் மனிதர் மீது கொண்ட அளவற்ற பேரன்பிற்கு ஒரு மாற்றுச் சொல் லாகப் பயன்படுத்தப்படுகிறது. பெத்லகேமிலும், நாசரேத்தின் மறைந்த வாழ்விலும், அவருடைய பொது ஜீவியத்திலும், எல்லாவற்றிற்கும் மேலாக, கல்வாரியின்மீதும் அளவற்ற விதமாக மனிதர் மீது பொழியப்பட்ட இந்தத் தெய்வீகப் பேரன்பு, மனிதர்களின் பாவங்களால் காயப்படுத்தப்படு கிறது. அவரது மனித சுபாவம், அவரால் மீட்டு இரட்சிக்கப்படும் ஆத்துமங்களிடமிருந்து பதிலன்பைத் தேடுகிறது, அவர்களுக்குத் தாம் செய்த சகல நன்மைகளுக்கும் அவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்க அவர் முழு உரிமையுள்ளவராக இருக்கிறார்.

ஆனால் தங்கள் இரட்சணியத்தை அலட்சியம் செய்பவர்களும், தங்களுக்காகச் சிந்தப்பட்ட மகா பரிசுத்த திவ்ய இரத்தத்தை வீணாக்குபவர்களும், அவர் தங்களுக்குக் காண்பித்துள்ள அன்புக்குப் பிரதிநன்றியாக, காரணமேயின்றி அவரைத் தங்கள் செயல்களால் வெறுத்துப் பகைப்பவர்களுமான மனிதர்களைக் குறித்து அவருடைய திவ்ய இருதயம் மீண்டும் பல முறை வியாகுல ஈட்டியால் குத்தித் திறக்கப்படுகிறது. இந்த அளவற்ற வேதனையில்தான் அவருடைய திரு இருதயம், அவரை நேசிப்பவர்களிடம் ஆறுதலுக்காகத் திரும்புகிறது.

ஆகவே, சேசுவின் திரு இருதய பக்தியின் முதல் நோக்கம், சேசுவின் மட்டில் இகழ்ச்சி அல்லது குறைந்த பட்சம் அசட்டைத்தனம் உள்ளவர்கள்மீது அவர் கொண்ட பேரன்புக்குப் பிரதியன்பு செலுத்துவதும், நமது நன்றியறிதலாலும், எல்லா வகையான சங்கை மரியாதையாலும், திவ்ய நற்கருணையில் சேசு நமக்குக் காட்டும் நேசத்திற்கு மகிமையும், நன்றியறிதலும் செலுத்துவதும் ஆகும். நற்கருணையில் தம்மை அறிந்துள்ள மக்களால் கூட அவர் மிகக் குறைவாக நேசிக்கப் படுகிறார். இந்த பக்தியின் இரண்டாவது நோக்கம், அவரது இவ்வுலக வாழ்வில் அவருடைய அன்பு அவரை எவற்றிற்கு உட்படுத்தி வைத்திருந்ததோ, அந்த நிந்தை, அவமானங்களுக்கும், திவ்ய நற்கருணையில் ஒவ்வொரு நாளும் தமது அன்பினால் அவர் எதிர்கொள்கிற நிந்தை அவமானங்களுக்கும் நம்மால் முடிந்த எல்லா வழிகளிலும் பரிகாரம் செய்வது ஆகும்.

சேசுவின் திரு இருதயத் திருநாள் அனுசரிப்புகள்:

தமது திரு இருதயத்தின் மகிமைக்காக ஒரு நாளை (திவ்ய நற்கருணைத் திருநாளுக்குப் பின் வரும் வெள்ளி) அவர் நியமித்திருக்கிறார். இத்திருநாளின் தேதி அவராலேயே தேர்ந்தெடுக்கப்பட்டது. அவரது தேவசிநேகம் உட்பட, நம் இரட்சகர் வாக்களித்துள்ள இந்தப் பெரும் வரப்பிரசாதங்களைத் தவறாமல் பெற்றுக்கொள்வதற்கு, இத்திருநாள் சேசுவின் திரு இருதயத்தை மகிமைப்படுத்தும் கருத்தோடு செலவழிக்கப்பட வேண்டும். இத்திருநாளில் நாம் செய்ய வேண்டியவை

(1) பாவசங்கீர்த்தனம் செய்து, பூசை கண்டு, சேசுவின் திரு இருதயத்திற்கு எதிராகச் செய்யப்படும் நிந்தைகளுக்குப் பரிகாரமாக திவ்ய நன்மை உட்கொள்ள வேண்டும்; 

(2) ஒரு முறையாவது ஆழ்ந்த தியானத்தோடு திவ்ய நற்கருணையைச் சந்திக்க வேண்டும். திவ்ய நற்கருணையை ஸ்தாபிப்பதில் காண்பிக்கப்பட்ட அளவற்ற சிநேகத்திற்காக சேசுவுக்கு நன்றி கூறுவதும், நாம் திவ்ய நன்மை உட்கொண் டுள்ள எல்லா வேளைகளுக்காகவும், நாம் பெற்றுக்கொண்ட எல்லா விசேஷ ஆசீர்வாதங்களுக் காகவும் அவருக்கு நன்றி கூறுவதும், சகல நிந்தைகளுக்கும் பரிகாரம் செய்வதும், நம் ஆழ்ந்த சங்கை யாலும், மேரை மரியாதையாலும், சங்கைக் குறைவுகள், அவபக்திகள் மற்றும் தேவத்துரோகங் களுக்குப் பரிகாரம் செய்வதும் இந்த நற்கருணை சந்திப்பின் நோக்கமாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து ஒன்பது தலைவெள்ளிகளில் நாம் பூசை கண்டு, பரிகார நன்மை உட்கொள்ள வும், சேசுவின் திரு இருதயத் திருநாள் அனுசரிப்புகள் அனைத்தையும் தலைவெள்ளிக்கிழமை களிலும் அனுசரிக்கவும் வேண்டும். குறிப்பாக, இந்நாளில், திரு இருதயப் பிரார்த்தனையும், ஜெபமாலையும், முடிந்தால், திரு இருதய கட்டளை ஜெபமும் சொல்லப்பட வேண்டும். பணிச் சுமையால் இது இயலாதபோது, அடிக்கடி சேசுவின் அன்பை நினைத்து, பக்தியுருக்கத்தோடு, "என் ஆண்டவரே, என் தேவனே!" "சேசுவே, உம்மை நேசிக்கிறேன்!" "சேசுவின் திரு இருதயம் எங்கும் ஸ்துதிக்கப்படுவதாக என்பவை போன்ற மனவல்லய ஜெபங்களைச் சொல்ல வேண்டும். மனதுருக்கத்தோடு இந்த பக்தியைத் தொடங்குபவர்கள் படிப்படியாக, ஒரு வாடிக்கைச் சடங்காக விருப்பமேயின்றித் தொடர்ந்து அதைச் செய்வது மனித பலவீனம். ஜெபத்தாலும், தியானத்தாலும், நம் நிலையான முயற்சிகளாலும் இந்த அசட்டைத்தனத்தின் மீது நாம் வெற்றிகொள்ள வேண்டும். மேலும், பாவ வாழ்வையும், புண்ணிய வாழ்வையும் பிரிப்பது நம் சித்தம் என்ற நூல் வேலி மட்டுமே, அது எளிதாக அறுந்துவிடும் என்பதை மனதில் கொண்டு, புண்ணிய வாழ்வில் நிலைபெறும்படி ஜெபத்தாலும், பாடுகளின் தியானத்தாலும், தவத்தாலும், ஒறுத்தல் பரித்தியாகங்களாலும் நாம் "நாள்தோறும்," "இடைவிடாமல்" இந்த நூல்வேலியை அறுந்து போகாத இரும்புச் சங்கிலியாக மாற்றிக்கொள்ள வேண்டும். பரிகாரம் என்பது தேவசிநேகமேயன்றி வேறில்லை! கடவுளை நேசிக்காத வனால் அவருக்குப் பாவப் பரிகாரம் செய்யவே இயலாது!

எல்லாவற்றிற்கும் மேலாக, சகல அக்கிரமங்களும் நிறைந்த இவ்வுலகில் நம் ஆண்டவர் வாழ்ந்த போது, அவரைப் பாவ வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் அடைக்கலமாக இருந்த "அமல உற்பவ இருதயத்தை" நாம் நேசிக்க வேண்டும். அந்த மாசற்ற இருதயத்தைக் கண்டுபாவித்து, அத்திரு இருத யத்தின் பள்ளியில் சேசுவின் திரு இருதயத்தை நேசிக்க நாம் பயிற்சி பெற வேண்டும். தேவமாதா தனக்காக அன்றி, சேசுவுக்காகவே அவரை நேசித்தார்கள். நம் மீட்பின் நிமித்தம் அவரது திருப் பாடுகளில் பங்குபெற்றார்கள். நித்தியத்திற்கும் சேசுவின் திரு இருதயத்தில் இளைப்பாற ஏங்கும் யாரும், மரியாயின் மாசற்ற இருதயத்தின் இந்த இரு உன்னதப் புண்ணியங்களைப் பின்பற்றி, தனக்காக அன்றி, சேசுவுக்காகவே அவரை நேசிக்கவும், தன்னுடையவும், மற்றவர்களுடையவும், "நன்றியற்றதனத்திற்கும், நிந்தை அவமானங்களுக்கும்" பரிகாரமாக, தனக்கு வரும் துன்பங்களை அமைந்த மனதோடு தாங்குவதன் மூலம் திருப்பாடுகளில் பங்குபெறவும் வேண்டும். அப்போது, சேசு, மரிய இருதயங்கள் ஆறுதல் பெறும்; நித்திய ஆறுதல் நம்முடையதாகும்.

மரியாயே வாழ்க

உரோமாபுரி தன் விசுவாசத்தை இழக்கும்! - (“Rome will lose the Faith and become the seat of the antichrist”. Our Lady of Saleth)

 "உரோமாபுரி தன் விசுவாசத்தை இழக்கும்!"



1846, செப்டம்பர் 19 அன்று, பரிசுத்த தேவமாதா பிரான்ஸிலுள்ள ல சலேத்தில், மாக்ஸிமின், மெலானீ என்ற இரு குழந்தைகளுக்குக் காட்சியளித்தார்கள். பல தீர்க்கதரிசனங் களிடையே மாமரி, “உரோமை தன் விசுவாசத்தை இழக்கும்; அது அந்திக்கிறீஸ்துவின் ஆசனமாகும்" என்னும் பயங்கரமுள்ள ஒரு தீர்க்கதரிசனத்தையும் வெளியிட்டார்கள். இன்று வரை மறைக்கப்பட்டிருக்கிற பாத்திமாவின் மூன்றாம் இரகசியத் தோடு இந்தத் தீர்க்கதரிசனம் நெருங்கிய தொடர்புள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் பாத்திமாவில் மாதா ரஷ்ய அர்ப்பணத்தைப் பற்றிய தனது இரகசியத்தின் இரண் டாம் பாகத்தின் முடிவில், "போர்ச்சுக்கலில் விசுவாச சத்தியம் எப்போதும் பாதுகாக்கப்படும்" என்று அறிவித்தார்கள். முதல் இரண்டு இரகசியங்களில் இல்லாத விசுவாச சத்தியம் என்ற வார்த்தையின் மூலம், இதுவே மூன்றாம் இரகசியத்தின் முதல் வாக்கியம் என்பதையும், இந்த இரகசியம் நவீன உரோமையின் விசுவாச இழப்பால், கத்தோலிக்க உலகம் முழுவதும் பரவ இருந்த ஒரு விசுவாச மறுதலிப்பையும், அதற்கு மருந்தாக கத்தோலிக்கத் திருச்சபை மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற பரிசுத்த பாத்திமா ஜெபமாலை மாதாவின் வேண்டுகோளையும் பற்றிப் பேசுகிறது என்று நாம் எளிதாக ஊகிக்கலாம்.

1884, அக்டோபர் 13, பாப்பரசர் 13ஆம் சிங்கராயர் கண்ட பயங்கரக் காட்சியில் பசாசு நம் ஆண்டவரிடமே அவருடைய திருச்சபையை அழிப்பதாக சவால் விட்டு, அதற்குத் தனக்கு 75 முதல் 100 ஆண்டுக் காலம் வேண்டுமென்று கேட்டான். அது அவனுக்கு அனுமதிக்கப்பட்டது. சரியாக 75 ஆண்டுகள் கழித்து (1884 + 75) 1959-ஆம் ஆண்டில், முதல் நவீனவாதப் பாப்பரசரான 23-ஆம் அருளப்பர் ஒரு பொதுச் சங்கத்தைத் தாம் கூட்ட விரும்புவதாக அறிவித்து, அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்படக் கட்டளையிட்டார். அவரது விருப்பப்படி, 1962-ல் தொடங்கி 1965-ல் முடிந்த இரண்டாம் வத்திக்கான் சங்கம், "மனுமகன் இரண்டாம் முறை வரும்போது, பூலோகத்தில் விசுவாசத்தைக் காண்பார் என்று நினைக்கிறாயோ?" என்னும் நம் ஆண்டவரின் தீர்க்கதரிசனம் நிறைவேறும் விதமாக, திருச்சபையின் விசுவாசத்தைப் பெருமளவுக்கு அழித்து, அந்திக் கிறீஸ்துவின் ஆட்சியைத் தொடங்கி வைத்த முக்கியமான ஞான அணு ஆயுதமாக இருந்தது. இச்சங்கத்தில் நான்கு முக்கியத் தப்பறைகள் "அதிகாரபூர்வமாகத்" திருச்சபையில் அறிமுகப்

படுத்தப்பட்டன. அவை பிரெஞ்சுப் புரட்சியின் நாத்திக நோக்கங்களை அடிப்படையாகக் கொண் டிருந்தன. அவை: அதன் முதல் நோக்கமான “சுதந்திரத்தை" (Liberty) அடிப்படையாகக் கொண்ட "மதச் சுதந்திரம் மற்றும் மனச் சுதந்திரம் "(Religious liberty and Liberty of conscience), இரண்டாவது நோக்கமான "சமத்துவத்தை" (Equality) அடிப்படையாகக் கொண்ட பாப்புத்துவ-மேற்றிராணித் துவ சமத்துவம் (Collegiality) மற்றும் மூன்றாம் நோக்கமான "சகோதரத்துவத்தை" (Fraternity) அடிப் படையாகக் கொண்ட ஒரு போலியான “கிறீஸ்தவ ஒன்றிப்பு"(false ecuminism) ஆகியவையாகும்.

இந்தத் தப்பறைகளின் மூலம் கத்தோலிக்கப் பாரம்பரிய விசுவாசமற்றதும், கிறீஸ்துநாதர் தந்த நோக்கமாகிய தேவ மகிமையையும், ஆன்ம இரட்சணியத்தையும் அடியோடு மறந்துவிட்டு, அல்லது புறக்கணித்துவிட்டு, ஒரு புதிய "பலித்தன்மையற்ற" மனித வழிபாட்டுடனும், புதிய ஞான உபதேசத்துடனும், புதியதொரு வேதாகமத்துடனும், புதிய, பதித போதகங்களுடனும், ஒரு புதிய பாதையில் ஆத்துமங்களை நரகத்தை நோக்கி இட்டுச் செல்வதும், இருபதாம் நூற்றாண்டு மனிதனைத் தன் வழிபாட்டின் மையமாகக் கொண்டதுமான ஒரு "சங்கச் சபை" தோன்றியுள்ளது. இதைக் குறித்து ஆறாம் சின்னப்பர், "மனிதனாய் அவதரித்த கடவுளின் மதம் (அதாவது, பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை), கடவுளாக ஆக்கப்பட்டுள்ள

மனிதனின் மதத்தை (இரண் டாம் வத்திக்கான் சங்கத்தில்) சந்திக்கிறது. என்ன (தீமை நடந்து விட்டது?)” என்ற பயங்கரமான வார்த்தைகளைக் கூறினார் (DC 1966, pp. 63 ct seq.). இந்தச் சங்கச் சபையே இன்று அதிகாரத் துடன் செயல்பட்டுக்கொண்டிருக்க, தனது 2000 ஆண்டுகாலப் பாரம்பரியத்தைக் கைவிடாமல், சங்கச் சபையின்கலாபனைக்கு" உள்ளானாலும், தன் விசுவாசத்தை இழந்து விடாமல், அதைப் பாதுகாத்து வரும் "சத்தியத் திருச்சபை" சலேத் தீர்க்கதரிசனத்தின்படி "மறைந்திருக்கிறது." சேசுநாதரின் திருச்சரீரம் அவரது திருப்பாடுகளுக்கும், திரு மரணத்திற்கும் பிறகு கல்லறையில் மூன்று நாட்கள் மறைந்திருந்தது போலவே, இன்று சிலுவை சுமந்துகொண்டு, தன் கல்லறையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தோன்றுகிற சத்தியத் திருச்சபையும், அவரைப் போலவே ஒரு நாள் முன்பை விட அதிக மகிமையோடு உயிர்த்தெழும் நாளுக்காக மன்றாடுவோமாக.

ஆக, சத்திய விசுவாசம் மறைக்கப்பட்டு விட்டது. “ஒரு விசுவாச சத்தியத்தை மறுதலிப்பது, சகல சத்தியங்களையும் மறுதலிப்பதற்குச் சமமானது" என்பதையும், சத்தியத் திருச்சபையால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள எந்த ஒரு விசுவாச சத்தியத்தையும் மறுதலிப்பவன் தானாகவே திருச்சபை விலக்கத் தண்டனைக்கு (Latae Sententiae-Automatic Excommunication) உட்பட்டு, நித்திய ஜீவியத்தை இழக்கும் ஆபத்தில் இருக்கிறான் என்பதை மறந்தவர்களாக இன்று நவீனத் திருச்சபையின் ஞான அதிகாரிகளும் கூட, பகிரங்கமாகப் பெரும்பாலான விசுவாச சத்தியங்களை மறுத்து வருகிறார்கள்.

பாத்திமா இரகசியம் முன்னுரைத்தது போல, ஒரு மாபெரும் விசுவாச மறுதலிப்பு தோன்றி, ஆன்மாக்களை மிகப் பெரும் எண்ணிக்கையில் விழுங்கி வருகிறது. உதாரணமாக, 17.10.1984 தேதியிட்ட La Croix பத்திரிகை யில் (அதாவது 30 வருடங்களுக்கு முன்பே) வெளியிடப்பட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி, "திருச் சபையின் மூத்த மகளாகியபிரான்ஸ் நாட்டு மக்களில் 49 சதவீதத்தினர் கிறீஸ்துவின் உயிர்ப் பையும், 57% பேர் அமல உற்பவத்தையும், 50% பேர் திவ்ய நற்கருணையில் சேசுவின் மெய்ப் பிரசன்னத்தையும், 63% பேர் பரிசுத்த தமத்திரித்துவத்தையும், 65% ஜென்மப் பாவத்தையும், 75% பேர் உத்தரிக்கிற ஸ்தலத்தையும், பசாசு என்ற ஒன்று இருப்பதையும், 77% பேர் நரகத்தையும் மறுதலித்து இருக்கிறார்கள். (: "Peter, Lovest Thou Me?" page 50).

விசுவாச அழிவை அடுத்து, நல்லொழுக்க விதிகளும் இன்று முழுமையாக மறக்கப்பட்டு விடும் சூழல் தோன்றியுள்ளது. சமூக ஊடகங்கள் குறிப்பாகப் பரிசுத்த கன்னிமைக்கும், கற்புக்கும் எதிரான அருவருப்பான காட்சிகளால் நிரம்பி வழிகின்றன. ஐரோப்பிய, அமெரிக்கக் கண்டங் களில் மெய்விவாகப் பிரமாணிக்கமும், குடும்பம் என்னும் கட்டமைப்பும், அதனால் சிறு குழந்தைகளின் ஞானப் பாதுகாப்பும் மிகப் பெருமளவுக்கு அழிக்கப்பட்டு விட்டன. திருமண மின்றி சேர்ந்து வாழுதல், வெறும் ஒரு நாள் உறவு, மறு நாள் எதுவுமே நடக்காதது போலப் பிரிந்து செல்லுதல், தந்தை பெயரை அறியாத குழந்தைகள், ஓரின உறவுகள். ஓரினத் திருமணங்கள், ஜசிந்தாவின் தீர்க்கதரிசனத்தின் வழியாக மாமரி எச்சரித்த, “வினோத நாகரீக பாணிகள், உடைகளின் பாணிகள்," விபச்சாரம், இரத்த உறவுகளுக்குள்ளும் அசுத்த உறவுகள் என்பவை போன்ற பயங்கரமான காரியங்கள் மிகவும் இயல்பான காரியங்களாகி விட்டன.

உலகமும் தன் பங்கிற்கு ஆத்துமங்களை வேட்டையாடி வருகிறது. பிறரை ஏமாற்றுவதும், "திறமையாகக் கொள்ளையடிப்பதும், " ஏழைகளுக்கு இரங்காதிருப்பதும், தேவைகள் ஏதுமின்றி யும் கூட, திருடியாவது பொருட்களைச் சேர்ப்பதும், மது, நடன அரங்குகள், பாவத்தையே பொழுது போக்காகக் காட்டும் ஒளிக் காட்சிகள் போன்றவையும் பெருகி, ஆத்துமங்களை வஞ்சிக்கின்றன.

இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல, ஓரினத் திருமணம் தேவத்திரவிய அனுமான முறைப்படி இல்லாவிட்டாலும், சாதாரண முறையில் குருக்களால் "மந்திரிக்கப்பட" வத்திக்கான் அனுமதியளிக்கிறது. பல சமயங்களில் எல்லாத் தீமைகளும் நிறைந்தவையாகிய பதித, பிரிவினை, ப்ரொட்டஸ்டாண்ட் சபைகளும் கூட சங்கச் சபையை விட நல்லவை போலத் தோன்றும் அளவுக்கு அது தீமையில் ஊறித் திளைத்துக்கொண்டிருக்கிறது. “பச்சமாமா" என்ற பெயரில் வத்திக்கானில் விக்கிரக வழிபாட்டுக்குச் சமீபத்தில் பாப்பரசர் தலைமையில் செயல் விளக்கம் காட்டப்பட்டது. எக்கு மெனிசம் என்ற பெயரில் பதித சபைகளோடு மட்டுமின்றி, சேசுநாதரின் தெய்வீகத்தை மறுக்கும் மற்ற மதங்களும் கூட இரட்சணியத்தின் வழிகளாக சங்கச் சபையால் அங்கீகரிக்கப்படுகின்றன. கத்தோலிக்க ஆலயங்களில் சர்வ தேச மத நல்லிணக்க மாநாடு என்ற பெயரில், இந்துத்துவம், பௌத்தம், முகம்மதியம், அஃப்ரிக்க வூடூ என்ற பில்லிசூனிய மதம் போன்ற மதங்களின் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. கிறீஸ்துநாதர் “கடவுளர்களில் ஒருவராக," அல்லது பெரும் புரட்சியாளராகப் பார்க்கப்படுகிறார். அவரது தெய்வீகம், நவீன கத்தோலிக்கர்களால் மறுதலிக்கப்படுகிறது.

ஆக, விசுவாச மறுதலிப்பும், நல்லொழுக்கக் கேடுகளும் உரோமையிலிருந்தே வருகின்றன என்பது தெளிவாகிறது. ஆயினும் உரோமையின் இந்தச் சீர்கேட்டுக்கு உரோமையை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. உலகத்தின், குறிப்பாக, கத்தோலிக்க விசுவாசிகளின் பாவங்கள்தான் அந்திக் கிறீஸ்து வருவதற்கான பாதையைத் திறந்து வைத்து, அவனை வரவேற்கச் சிவப்புக் கம்பளம் விரிக்கின்றன. இதற்கு எதிராக நம்மை எச்சரித்து, இந்த இறுதிக் காலங்களில் சரியான பாதையில் நம்மை வழிநடத்தும்படியாகவே தேவமாதா பல முறை உலகிற்கு வந்தார்கள்: ல சலேத்தில் கண்ணீர் சிந்தியபடி, பாவத்தின் காரணமாக, மனிதர்களுக்கு வரவிருந்த தண்டனைகளை முன்னறிவித் தார்கள்; லூர்தில் பாவங்களுக்குப் பரிகாரமாக, "தவம்! தவம்! தவம்!" செய்யும்படி வற்புறுத்தி னார்கள்; பாத்திமாவில், ஆன்மாக்களையும், உலகத்தையும், திருச்சபையையும் காப்பாற்றும்படி இவை தனது மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட வேண்டுமென்றும், தனது மாசற்ற இருதயத் திற்கு நிந்தைப் பரிகாரம் செய்யப்பட வேண்டுமென்றும் அவசர வேண்டுகோள் விடுத்தார்கள். ஜப்பானின் அக்கிற்றா காட்சியில் மனிதனின் பாவங்களைக் குறித்துக் கண்ணீர் சிந்தினார்கள். தேவ இரகசிய ரோஜா மாதா காட்சியில் தேவ ஊழியர்களின் பிரமாணிக்கமின்மைக்குப் பரிகாரமாகத் தவம் செய்யும்படி நம்மைக் கேட்டுக்கொண்டார்கள்.

ஆனால் நினிவேயைப் போல மனந்திரும்பித் தவம் செய்யாமல், இன்றைய ஆன்மாக்களும், உலகமும், சங்கச் சபையும் சோதோம், கொமோராவைப் பின்பற்றித் தொடர்ந்து பாவங்களை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இந்நிலையில், நம் ஆண்டவர் மத். 24, 25-ஆம் அதிகாரங் களிலும், தேவ அன்னை விசேஷமாக பாத்திமாவிலும் முன்னுரைத்துள்ள தண்டனைகளிலிருந்து இவை மூன்றும் தப்புவது கிட்டத்தட்ட இயலாத காரியமாகத் தோன்றுகிறது. ஆயினும் இன்னும் பகிரங்கத் தண்டனை முழு அளவில் தொடங்கவில்லை என்பதால், இன்னும் நமக்கு நேரம் இருக் கிறது என்று நம்பி, இனியாவது மரியாயின் மாசற்ற இருதய பக்தியாகிய முதல் சனி பக்தியையும், ஜெபமாலை பக்தியையும் பக்தியோடும், அன்போடும் அனுசரித்து, மரியாயின் மாசற்ற இருதயத் திற்கு ஆறுதல் அளித்து, நம்மையும், நம்மைச் சார்ந்த ஆத்துமங்களையும், உலகத்தையும், திருச் சபையையும் கடும் தண்டனைகளிலிருந்து காப்பாற்ற முன்வருவோமாக.

மரியாயே வாழ்க!

மே - ஜூன், 2024


அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 26 - அர்ச். ஃபுளோரியன் (St. Florian, May 4)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

மே 0️⃣4️⃣ம் தேதி 

🌹வேதசாட்சியான அர்ச். ஃபுளோரியன் திருநாள்🌹

(இவர் தீயணைப்புப் படை வீரர்களின் பாதுகாவலர்)



🌹ஃபுளோரியன் கிபி 250ம் வருடம் ஆஸ்திரியாவிலுள்ள செஸியும் என்ற இடத்தில், 250ம் வருடம் பிறந்தார். இவர் உரோமை இராணுவத்தில் சேர்ந்து, அயரா உழைப்பினால் உயர்ந்த பதவியை அடைந்தார். ஆஸ்திரியாவிலுள்ள நோரிகும் என்ற இடத்தில் முகாமிட்டிருந்த உரோமை இராணுவப் படையின் நிர்வாகியாக ஏற்படுத்தப்பட்டிருந்தார்.

அஞ்ஞான உரோமை சக்கரவர்த்தியான தியோக்ளேஷியன், கிறீஸ்துவர்களைத் தண்டித்து உபாதிக்க வேண்டும் என்கிற தனது கட்டளையை ஃபுளோரியன் நிறைவேற்றகிறதில்லை என்பதை அறிந்து, அதிர்ச்சியடைந்தான். எனவே, ஃபுளோரியனுடைய அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியிலுள்ள சகல கிறீஸ்துவர்களையும் கொல்லவும், தனது கட்டளையை ஏன் ஃபுளோரியன் பின்பற்றுகிறதில்லை என்பதற்கான காரணத்தை அறிந்துகொள்ளவும், அகுவிலியுஸ் என்கிற இன்னொரு அதிகாரியை, சக்கரவர்த்தி அனுப்பி வைத்தான். அகுவிலியுஸ், ஃபுளோரியனிடம் அதற்கான காரணத்தைக் கேட்டபோது, ஃபுளோரியன், அகுவிலியுஸிடம், “நானும் ஒரு கிறீஸ்துவன்! கிறீஸ்துவர்களுடைய கதியை நானும் அடைந்துகொள்வேன்! என்று சக்கரவர்த்தியிடம் போய் கூறு!” என்று கூறினார். அகுவிலியுஸ், ஃபுளோாரியனிடம், “நீ கிறீஸ்துவ வேதத்தை கைவிட்டால், உனக்கு ஒரு உயர் பதவி கிடைக்கும்!” என்று கூறினான். அதை அர்ச்.புளோரியன் மறுத்து விட்டார். உடனே கோபவெறியுடன், ஃபுளோரியனை சாட்டையால் அடிக்க உத்தரவிட்டான். அப்போதும் திடமாக தனது வேத விசுவாசத்தில் நிலைத்திருந்த அர்ச்.ஃபுளோரியன், அகுவிலியுஸிடம்,  “சக்கரவர்ததிக்காக போர்களில்  அநேக காயங்களை என் சரீரத்தில் அனுபவத்திருக்கிற நான், என் சத்திய வேதமான கத்தோலிக்க விசுவாசத்திற்காக சில சிராய்ப்புகளை என் சரீரத்தில் தாங்க மாட்டேனா?” என்று கூறினார். அப்போது, அகுவிலியுஸ், அர்ச்.ஃபுளோரியனை நெருப்பினால் எரித்துக் கொல்லக் கட்டளையிட்டான்.

ஆஸ்திரியாவில் லோர்க் என்ற இடத்தில், அர்ச்.ஃபுளோரியனை, நெருப்பினால் சுட்டெரிக்கும்படியாக, உரோமைப் படை வீரர்கள் ஆயத்தம் செய்தபோது, அர்ச்.ஃபுளோரியன் அந்த வீரர்களை நோக்கி, “நீங்கள் இந்த நெருப்பைப் பற்ற வைத்தால், நான் நெருப்பின் சுவாலைகள் மேல் ஏறி மோட்சம் செல்வேன்!” என்று கூறினார்.இதைக் கேட்டு பயந்த அகுவிலியுஸ், அவரை நெருப்பில் எரிப்பதற்கு பதிலாக, கசை வார்களாலும், சாட்டையாலும் அடிப்பிக்கச் செய்தான்; பின், அர்ச்.ஃபுளோரியனுடைய கழுத்தில் பெரிய கல்லைக் கட்டி, என்ஸ் என்ற ஆற்றில், அவரை  மூழ்கச் செய்துக் கொன்றான். அர்ச்.ஃபுளோரியன், கிபி 304ம் வருடம், மே 4ம் தேதி வேதசாட்சியாகக் கொல்லப்பட்டு, பாக்கியமான மோட்ச மகிமையின் கிரீடத்தைப் பெற்றுக்கொண்டார்.

பின்னர், கிறீஸ்துவர்கள் அர்ச்சிஷ்டவருடைய பரிசுத்த சரீரத்தை ஆற்றிலிருந்து எடுத்து, லோர்க் என்ற இடத்தில் பக்தி பற்றுதலுடன் அடக்கம் செய்தனர். 600 வருடங்களுக்குப் பின், இதே இடத்தில் அர்ச்.அகுஸ்தீனார் துறவற சபை மடம் கட்டப்பட்டது. போலந்து நாட்டின் அரசரான கசிமிர் மற்றும் கிராக்கோ நகர மேற்றிராணியாருடைய விண்ணப்பத்திற்கு இசைந்து, 3ம் லூசியுஸ் பாப்பரசர் போலந்து நாட்டின் பாதுகாவலராக, அர்ச்.ஃபுளோரியனை ஏற்படுத்தினார்.அர்ச்சிஷ்டவருடைய பரிசுத்த அருளிக்கங்களை போலந்து நாட்டிற்கு 1184ம் வருடம் அனுப்பி வைத்தார். சிறிது காலத்திற்குப் பிறகு, நெருப்பில் விழுந்த ஒருவர், அர்ச்.ஃபுளோரியனை நோக்கிக் கூப்பிட்டு உதவி கேட்டபோது, புதுமையாகக் காப்பாற்றப்பட்டார். அந்நாள் முதல், அர்ச்.ஃபுளோரியனிடம், நெருப்பினால் ஏற்படும் ஆபத்துக்காலங்களில், மக்கள் வேண்டிக்கொள்ளத் துவக்கினர். தீயினாலும், வெள்ளத்தினாலும், தண்ணீரில் மூழ்குவதினாலும் ஏற்படும் ஆபத்துக்களில் நம்மைக் காப்பாற்றுவதற்கு வல்லமையுள்ள பாதுகாவலராக அர்ச்.ஃபுளோரியன் திகழ்கிறார். அநேக நாடுகளில் தீயணைப்பு வீரர்களுடைய பாதுகாவலராக அர்ச்.ஃபுளோரியன் ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். 



ஆஸ்திரியா , ஜெர்மனி நாடுகளில் தீயணைப்பு வீரர்கள், “ஃபுளோரியன்” என்கிற வார்த்தையை, தீயணைப்பு நிலையங்கள் மற்றும் தீயணைப்புக்கான கனரக வாகனங்களை அழைப்பதற்கான, அவர்களுடைய வானொலி தொடர்பின் ஒரு பொதுவான அழைப்பின் அடையாள வார்த்தையாகப் பயன்படுத்துகின்றனர். தீயணைப்பு படைவீரர்கள் பயன்படுத்தும், ஃபுளோரன்டைன் என்று அழைக்கப்படுவதும், ரேடியோ கைபேசி சாதனமும் கூட அர்ச். ஃபுளோரியனுடைய பெயரினாலேயே (சிறிது மருவி அழைக்கப் படுகிறது)  அழைக்கப்படுகிறது! அர்ச் .ஃபுளோரியனுடைய சிலுவையையே  அமெரிக்கா, கனடா நாடுகள் உட்பட , அநேக நாடுகளில், தீயணைப்பு வீரர்கள் தங்களுடைய சீருடையில் அடையாளச் சின்னமாக (பேட்ஜ்) அணிந்து கொண்டிருக்கின்றனர்.🌹✝

🌹வேதசாட்சியான அர்ச்.ஃபுளோரியனே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🌹





வியாழன், 2 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 25 - அர்ச். அத்தனாசியார் (St. Anthanasius, May 2)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

 மே 2ம் தேதி

🌹பாரம்பரிய கத்தோலிக்க வேத விசுவாசத்தின் பாதுகாவலரும், ஸ்துதியரும், மேற்றிராணியாரும், வேதபாரகருமான  

அர்ச். அத்தனாசியாரின் திருநாள்🌹




🌹மாபெரும் வேதபாரகரும் கத்தோலிக்க வேதவிசுவாசத்தின் அஞ்சா நெஞ்சரும், பாதுகாவலருமான அர்ச். அத்தனாசியார், எகிப்தின் தலைநகரான அலெக்சாண்டிரியாவில், கி.பி.294ம் வருடம் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதேசமயம் தேவபயமும் பக்தியும் உடையவர்கள். இவருடைய இளமைக் காலத்தில் மாபெரும் திறமைகளை சர்வேசுரன் இவருக்கு அருளினார்.

அலெக்சாண்டிரியா மேற்றிராணியாரால் கல்விகற்பிக்கப்பட்டார்;  பின், எகிப்திலுள்ள பாலைவனத்திற்குச் சென்று, அர்ச்.வனத்து அந்தோணியாருடன் அத்தனாசியார் சிறிது காலம் தங்கியிருந்தார்; கி.பி. 319ம் வருடம் அத்தனாசியார் தியோக்கோன் பட்டம் பெற்றார்.

கி.பி.323ம் வருடம், ஆரியுஸ் என்பவன், நமதாண்டவர் நித்திய பிதாவாகிய சர்வேசுரனுடன் ஒரே வஸ்துவானவரல்லர்! ஆதலால், ஆண்டவரை சர்வேசுரனுடைய திவ்ய குமாரன் என்று கூறக்கூடாது!  என்கிற பதிதத் தப்பறையைப் போதித்தான்; இப்பதிதத் தப்பறை இவனுடைய பெயராலேயே ஆரியப் பதிதம் என்று அழைக்கப்படுகிறது; அலெக்சாண்டிரியா மேற்றிராணியார், ஆரியுஸின் போதனையை, பதிதத்தப்பறை என்ற கூறி, ஆரியுஸ் என்ற பதித குருவையும், அவனுடைய கூட்டாளிகளான 11 பதிதக் குருக்களையும் தியோக்கோன்களையும் அலெக்சாண்டிரியா மேற்றிராணியாரான அர்ச்.அலெக்சாண்டர் பதவி நீக்கம் செய்தார்! 

பின், ஆரியுஸ், செசரையாவிற்குச் சென்று, நிகோமேதியாவின் மேற்றிராணியாரான யுசேபியுஸின் ஆதரவையும், மற்ற அநேக சிரியா நாட்டின் மேற்றிராணிமார்களுடைய ஆதரவையும் திரட்டினான்; ஆரிய பதிதத் தப்பறைக் கருத்துகள் பாடல்களாக இயற்றப்பட்டு, பிரபலமடைந்திருந்த இசை மெட்டுகளில் கப்பல் மாலுமிகளால் பாடப்பட்டு வந்தன; ஒரு துறைமுகத்திலிருந்து மற்றொரு துறைமுகம் கப்பல் செல்கிற வரை இப்பதிதப் பாடல்கள் பாடப்பட்டு, மக்களின் இருதயங்களை ஆரியப் பதிதத் தப்பறையால் ஆக்கிரமித்தனர்; ஆரிய பதிதத் தப்பறையின் மீது தீர்வு காண்பதற்காக, 325ம் வருடம் நீசேயா சங்கம்  கூட்டப்பட்டது; இச்சங்கத்தில், ஆரிய பதிதத்தைக் கைவிடும்படியாக, ஆரியுஸிற்கு எதிரான தண்டனை உறுதி செய்யப்பட்டது; நீசே விசுவாசப் பிரமாணம் பிரகடனம் செய்யப்பட்டது; இச்சங்கம், அர்ச்.அத்தனாசியாரின் ஜீவியத்தை மிகவும் பாதித்தது; இதன் பின் இவருடைய எஞ்சியிருந்த ஜீவிய காலம், நம் திவ்ய இரட்சகருடைய தேவத்துவத்திற்கான சாட்சியமாகத் திகழ்ந்தது! ஆண்டவருடைய தேவத்துவம் மற்றும், மகா பரிசுத்த தமதிரித்துவத்தைப் பற்றிய விசுவாச சத்தியத்திற்கு  எதிரானதுமான  ஆரிய பதித்திற்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடினார்; அதற்கு எதிரான கத்தோலிக்க வேத சத்தியங்கள் பற்றிய பிரசங்கங்கள் நிகழ்த்தி வந்தார்;

நிசேயா சங்கத்தில், அலெக்சாண்டிரியா மேற்றிராணியாரான அர்ச்.அலெக்சாண்டருடன் அவருக்கு உதவியாளராக அர்ச்.அத்தனாசியார் இருந்தார்;  5 மாத காலத்திற்குப் பின், அர்ச்.அலெக்சாண்டர் இறந்தார்; இறப்பதற்கு முன், அர்ச்.அலெக்சாண்டர், அத்தனாசியாரை, தனக்குப் பின் அலெக்சாண்டிரியாவின் பிதாப்பிதாவாக நியமிக்க ஆசித்திருந்தார்; அதன்படி, அர்ச்.அத்தனாசியார், 30வது வயதில், 326ம் வருடம்,அலெக்சாண்டிரியாவின் பிதாப்பிதாவாக ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; இவர் ஆரிய பதிதத்தப்பறையை எதிர்த்து நின்றதால், அநேக கொடிய உபத்திரவங்களையும், துன்பங்களையும், தன் ஜீவிய காலத்தில் சந்திக்க நேர்ந்தது; இவர்  அதிமேற்றிராணியாராக இருந்த 46 வருட காலத்தில், 17 வருடங்களை நாடுகடத்தப்பட்ட பரதேச ஜீவியத்தில் கழித்தார்;  புண்ணியங்களுடையவும், சக்கரவர்த்திகளாலும், திருச்சபை அதிகாரிகளாலும் (ஆரிய பதிதத்தைச் சேர்ந்த மேற்றிராணிமார்கள்) கொடூரமாக அநியாயமாக, நீ்ண்ட காலம் அளிக்கப்பட்ட உபத்திரவத் துன்பங்களுடையவும் ஜீவியம் ஜீவித்த பிறகு, கத்தோலிக்க வேத விசுவாசத்தை அஞ்சா நெஞ்சத்துடன் ஆரிய பதிதர்களிடமிருந்து காப்பாற்றிய திருச்சபையின் மாபெரும் வேதபாரகரும்,  பாதுகாவலருமான அர்ச்.அத்தனாசியார், அலெக்சாண்டிரியாவில், மே 2ம் தேதி 373ம் வருடம்   பாக்கியமாய் மரித்தார்; இவருடைய பரிசுத்த சரீரம் இரண்டு முறை, இடமாற்றம் செய்யப்பட்டது: முதலில், கான்ஸ்டான்டிநோபிளுக்கும், பின்னர் வெனிஸ் நகருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டது! இவர் வாழ்ந்த காலம் திருச்சபையின் சரித்திரத்தில் மிக முக்கியமான காலமாகும்.🌹✝

“பாரம்பரியத்திற்கு விசுவாசமாயிருக்கும் கத்தோலிக்க விசுவாசிகள், எண்ணிக்கையில் குறைந்து, ஒரு கையளவாக மட்டுமே இருந்தாலும், அவர்கள் தான், நமதாண்டவரான திவ்ய சேசுகிறீஸ்து நாதரின் உண்மையான திருச்சபை!”-அர்ச்.அத்தனாசியார்.🌹✝

🌹அர்ச். அத்தனாசியாரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹



Tags:

Feast of St. Anthanasius, 

புதன், 1 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 24 - அர்ச். பெரிகிரின் லாசியோசி (May 1 - St. Peregrine)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

 மே 01ம் தேதி


🌹அர்ச். பெரிகிரின் லாசியோசி திருநாள்🌹

(புற்று நோயாளிகளுக்குப் பாதுகாவலர்)


🌹இவர் 1260ம் வருடம் , வட இத்தாலியிலுள்ள ஃபோர்லி என்ற நகரிலுள்ள ஒரு பணக்காரக் குடும்பத்தில் ஒரே மகனாகப் பிறந்தார். இச்சமயம் இந்நகரம், பாப்பரசருடைய நேரடி அரசாட்சியின் கீழிருந்த பகுதிகளில் ஒன்றாக இருந்தது. பாப்பரசருக்கு எதிரான அரசியல் கட்சிக்கு இவருடைய குடும்பம் ஆதரவளித்தது. 1283ம் வருடம் ஃபோர்லி நகர மக்கள் பாப்பரசருக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபட்டனர்; இந்நகரிலிருந்து இருதரப்பினருக்கும் சமாதானம் ஏற்படுத்துவதற்காக, மகா பரிசுத்த தேவமாதாவின் ஊழியர் துறவற சபையின் பொது தலைமை அதிபராயிருந்த அர்ச்.பிலிப் பெனிசியார் இந்நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அர்ச்.பிலிப் இந்நகருக்கு வந்து, பிரசங்கம் நிகழ்த்த முயன்றபோது, 18 வயது இளைஞனாயிருந்து பெரிகிரீன்,  அர்ச்.பிலிப் பெனிசியாரைப் பிரசங்கம் வைக்கக் கூடாதபடி தடுத்து,  அடித்தான்; பின்னர், அர்ச்.பிலிப் பெனிசியாரை அவமானப்படுத்தி திட்டி, மூர்க்கத்தனமாக வலுவந்தம் செய்து, நகரை விட்டு வெளியேற்றினர்;  சிறிது நேரத்திற்குப் பிறகு, பெரிகிரீன், அர்ச்சிஷ்டவருக்கு எதிராக மிருகத்தைப் போல அக்கிரமமாக நடந்து கொண்டதைக் குறித்து வருந்தியபடி, அர்ச்சிஷ்டவரைச் சந்தித்து, அவரிடம் மன்னிப்பு கேட்டார்;  அர்ச்.பிலிப், பெரிகிரீனை மிகுந்த கனிவுடன் வரவேற்றார். இத்தருணத்தில், பெரிகிரீனிடம் மிக ஆழமான பாதிப்பு ஏற்பட்டது! தான் இழைத்த மாபெரும் பாதகமான செயலுக்காக மனஸ்தாபப்பட்டார்;அதன் காரணமாக எற்பட்ட துக்கத்தினால் நிரம்பியவராக, அதிகமாக ஜெபிக்கத் துவக்கினார்!  தனது சத்துவங்களில் பலத்தையெல்லாம், செலவழிப்பதற்கு,  அநேக நல்ல அலுவல்கள் செய்யத் துவக்கினார். சில வருடங்களுக்குப் பிறகு, சியன்னாவிலுள்ள மகா பரிசுத்த தேவமாதாவின் ஊழியர் சபையில்  சேர்ந்தார்; பின் அந்த துறவற சபையில் குருப்பட்டம் பெற்று , ஒரு குருவானார். 

சில வருடங்களுக்குப் பிறகு, ஃபோர்லி நகருக்கு இவர் அனுப்பப் பட்டார்; அங்கு இவர் தனது துறவற சபையின் புதிய மடத்தை ஸ்தாபித்தார். இவருடைய பிரசங்கங்களும், ஏழைகள் மற்றும் பிணியாளர்கள் மேல் இவர் கொண்டிருந்த கருணையும், இவர்களுக்காக இவர் மேற்கொண்ட பணிவிடைகளும், இவர், தனது சொந்த நகரிலேயே அதிக புகழடையச் செய்தன!

உட்கார அவசியமில்லாத சமயங்களில் நின்று கொண்டு இருப்பது தான், இவர் அனுசரித்த விசேஷ ஒறுத்தல்முயற்சியாகும். நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பதால் சோர்வடைந்தால், பாடற்குழுவில் பயன்படும் குச்சியின் மேல் சாய்ந்தபடி  நிற்பார்; இவருக்கு 60 வயதானபோது, இவருடைய வலது காலில் ஒரு புண் ஆறாமல் புரையோடிப்போனது; மருத்துவர் இதைக் குணப்படுத்த, அந்த காலை வெட்ட வேண்டும், என்று கூறினார்; அதன்படி, அறுவை சிகிச்சைக்கான நாளுக்கு முந்தின இரவில், பாடுபட்ட சுரூபத்திலிருந்த ஆண்டவரை நோக்கி, பெரிகிரீன் பக்திபற்றுதலுடன் ஜெபித்துக் கொண்டிருந்தார்; அச்சமயம், ஆண்டவர், சிலுவையிலிருந்து இறங்கிவந்து, இவருடைய காலைத் தொட்டு குணப்படுத்தியதைப் போன்றதொரு காட்சியைக் கண்டார்;  அடுத்த நாள் அறுவை சிகிச்சைக்கு முன் மருத்துவர், புற்றுநோயாகப் புரையோடிப் போயிருந்த அந்த புண் புதுமையாக முற்றிலும் மறைந்துபோனதைக் கண்டு அதிசயப்பட்டார். புதுமையாக இவருடைய புற்று நோய், குணமடைந்ததைப் பற்றிய செய்தி நகரெங்கிலும் பரவியது.  இது, அந்நகர மக்கள் அர்ச்.பெரிகிரீன் மேல் அதிக பக்தி கொள்ளச் செய்தது! அவருடைய நற்பெயரும் புகழும் இன்னும் அதிகரித்தது!

இவர், 85வது வயதில்,1345ம் வருடம் மே 1ம் தேதி பாக்கியமாய் மரித்தார்.  அச்சமயம் இவரைக்
காண திரளான மக்கள் வந்தனர்; அநேக வியாதியஸ்தர்கள், இவருடைய பரிந்துரையினால், புதுமையாகக் குணமடைந்தனர். ஃபோர்லி மகா பரிசுத்த தேவமாதாவின் ஊழியர் மடத்தின் தேவாலயத்தில், இவர் அடக்கம்   செய்யப்பட்டார்; இப்போது, இது அர்ச்.பெல்லகிரீனோ லாசியோசி பசிலிக்கா தேவாலயமாகத் திகழ்கிறது. 5ம் சின்னப்பர் பாப்பரசர்,1609ம் வருடம் இவருக்கு முத்திப்பேறு பட்டமும், 13ம் ஆசீர்வாதப்பர் பாப்பரசர், 1726ம் வருடம் இவருக்கு அர்ச்சிஷ்ட பட்டமும் அளித்தனர்.🌹✝


🌹அர்ச்.பெரிகிரீன் லாசியோசியே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹

🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

அர்ச். லூயிஸ் மரிய மோன்ஃபோர்ட்

அர்ச். லூயிஸ் மரிய மோன்ஃபோர்ட் 
 
அர்ச். லூயிஸ் 1674-ல் மோன்போர்ட் என்ற ஊரில் பிறந்தார். அவரது பெற்றோர் ஷான் பாப்டிஸ்ட் ஷான் ராபர்ட் க்ரிஞ்ஞோன் ஆகியோர் ஆவர். இவர்களது 18 பிள்ளைகளில் இவரே முத்தவர். தம் தந்தையின் பண்ணை இருந்த இஃபெந்திக் என்னும் ஊரில் லூயிஸ் தம் குழந்தைப் பருவத்தைக் கழித்தார். 12 வயதில், ரென்ளே நகரத்திலிருந்த சேசு சபையின் அர்க் தாமஸ் பெக்கெட் கல்லூரியில் சேர்ந்தார். சாதாரணப் பள்ளிப் படிப்பை முடித்தபின், அதே கல்லூரியில் தத்துவ சாஸ்திரமும், வேதசாஸ்திரமும் கற்கத் தொடங்கினார். 
சுவாமி ஜூலியன் பெல்லியே என்பவரின் வேதபோதக வரலாறு. ஏழைகள் மத்தியில் வேதபோதகப் பணியாற்ற லூயினைத் தூண்டியது. இந்தக் குருதான் முதன்முதலில் மாமரிக்கு முழு அரப்பண பக்தியின் விதையை லூயிஸின் மனதில் விதைத்தவர் ஆவார். அவரது வழிகாட்டுதலில் லூயிஸ் தேவமாதாவின் பேரில் தாம் கொண்ட பக்தியில் வளர்ச்சி பெற்றார். 
பாரிஸின் புகழ்பெற்ற அர்ச். சூல்பிச்சே குருமடத்தில் சேர விரும்பி. 1693 இறுதியில் பாரிஸுக்கு வந்த லூயிஸ் மிக வறியவர்கள் மத்தியில் தரித்திர வாழ்வு வாழ்ந்து கொண்டே. ஸார்போன் பல்கலைக்கழகத்தில் வேதசாஸ்திர வகுப்புகளில் கலந்துகொண்டார். இரண்டு வருடங்களுக்குள் மிக மோசமாக நோயுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குணம் பெற்றார். 1695 ஜூலையில் அர்ச் சூல்பிச்சே குருமடத்தில் மீண்டும் சேர்ந்தார். அதன் நூலகர் பணி அவருக்குத் தரப்பட்டது. அது நிறைய ஞான நூல்களையும், மாதா பற்றிய நூல்களையும் வாசிக்க அவருக்கு வாய்ப்பளித்தது. சம்மனசுக்கள் மீதும் லூயிஸ் விசேஷ பக்தி கொண்டிருந்தார். தமது காவல் தூதரை வாழ்த்தும் ஒரு வாக்கியத்தோடுதான் அவர்தம் கடிதங்களை எப்போதும் முடித்தார். 
லூயிஸ் 1700-ல் குருவாக அபிஷேகம் பெற்றார். வெளி நாடுகளில், குறிப்பாக கனடாவின் பிரெஞ்ச் குடியேற்றப் பகுதியில் வேதபோதகப் பணி அவரது பெரும் விருப்பமாக இருந்தது.1700 நவம்பரில் அவர் அர்ச். சாமிநாதர் மூன்றாம் சபையில் சேர்ந்து, ஜெபமாலை பற்றிப் போதிக்கவும், ஜெபமாலை பக்த சபைகளை நிறுவவும் அனுமதி பெற்றார். மேலும் திவ்ய கன்னிகையின் பாதுகாவலின் கீழ் வேதபோதக பிரசங்கங்களும், தியானப் பயிற்சிகளும் தரும் ஒரு சிறு சபையை ஸ்தாபிக்கவும் அவர் விரும்பினார். இதுவே மரியாயின் சபையை நிறுவ அவரைத் தூண்டியது. உரோமைக்குச் சென்று, தமது வேதபோதக விருப்பத்தைப் பற்றிப் பாப்பரசர் 11-ஆம் கிளமெண்ட்டிடம் லூயிஸ் அறிவுரை கேட்க, பாப்பரசர் பிரான்ஸிலேயே அதைச் செயல்படுத்த நிறைய வாய்ப்பிருப்பதை விளக்கி, அப்போஸ்தலிக்க வேதபோதகர் என்ற பட்டமும் தந்து அவரை அனுப்பி வைத்தார். திரும்பி வந்தவுடன், "கடவுளுக்காக ஆத்துமங்களை வெற்றிகொள்ளத் தேவை யான வரப்பிரசாதத்தை அர்ச். மிக்கேல் அதிதூதர் தமக்குப் பெற்றுத் தரவும், ஏற்கெனவே வரப் பிரசாதத்தில் இருப்பவர்களை உறுதிப்படுத்தி, சாத்தானுக்கும், பாவத்திற்கும் எதிரான போரில் அவர்களை வலுப்படுத்தவும் அவரிடம் ஜெபிக்கும்படியாக. "அர்ச். மிக்கேல் மலையில் தியானப் பயிற்சிகளில் பங்கேற்றார். இவை தியானிக்கவும், நிறைய எழுதவும் அவருக்கு நேரம் தந்தன.
லூயிஸ் பிரிட்டனியிலும், நாத்த்தேயிலும் சில வருடங்களாக வேதபோதகப் பிரசங்கங்களை நிகழ்த்தி வந்தார். போந்த்ஷாட்டு என்னுமிடத்தில் 26 அவரது தூண்டுதலால் நூற்றுக்கணக்கானோர் மிகப் பெரிய கல்வாரியை அமைத்தார்கள். ஆயினும், ஜான்சனியப் பதிதர்கள் சிலரில் செல்வாக்கின் கீழ் பிரான்ஸ் அரசனின் உத்தரவின்கீழ் அது இடிக்கப்படப் போகிறது என்று அறிந்த ஆயர், அது மந்திரிக்கப்படுவதைத் தடை செய்தார். இது லூயிஸ்க்கு ஏமாற்றம் தந்தாலும், "சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக" என்று சொல்லி இச்செய்தியை அவர் ஏற்றுக்கொண்டார். இறுதிக் காலத்தில் அவர் பல இடங்களுக்கு நடந்தே சென்று, வேதபோதகப் பிரசங்கங்கள் ஆற்றி வந்தார். இச்சமயத்தில்தான் அவர் தமது புகழ்பெற்ற "மரியாயின் மீது உண்மை பக்தி "மரியாயின் இரகசியம்," "ஜெபமாலை இரகசியம்" என்ற நூல்களையும், மரியாயின் சபை மற்றும் ஞாலத்தின் புதல்வியர் சபையின் சட்டத் தொகுப்புகளையும், பல பாடல்களையும் எழுதினார். பதிதர்கள் ஒரு முறை அவரை விஷம் வைத்துக் கொல்ல முயன்றார்கள். அதில் அவர் உயிர் தப்பினனும் அது அவரது உடல் நலத்தை வெகுவாகப் பாதித்தது. ஆயினும் அயராமல் உழைத்த அவர். தாம் போதிக்கச் சென்ற ஊர்களில் ஏழைச் சிறுவர் சிறுமியருக்கு இலவசப் பள்ளிகளை ஸ்தாபித்தார். 
லா ரோஷெல்லின் ஆயர் தம் மேற்றிராசனத்தில் ஒரு பள்ளியைத் திறக்க புனிதரை அழைத்தார். லூயிஸ் புவாட்டி யேயில் பொது மருத்துவமனை நடத்தி வந்த தமது சீடப் பெண்ணான மரீ லூயிஸ் த்ரிஷே என்பவளின் உதவியை நாட 1715ல் அவள், கேத்தரீன் ப்ரூனே என்பவளின் உதவியோடு லா ரோஷெலில் ஒரு பள்ளியைத் தொடங்கினாள். மிக விரைவில் அதில் 400 மாணவர்கள் சேர்ந்தார்கள். 1715 ஆகஸ்ட் அன்று இந்த இரு பெண்களும், மரீ வால்லோ, மரீ ரெஞ்ஞியே என்ற வேறு இரு பெண்களோடு லா ரொஷெலின் ஆயரின் அங்கீகாரத்தோடு, லூயிஸின் வழிகாட்டு தலின் கீழ் தங்கள் துறவற வார்த்தைப்பாடுகளைத் தந்தார்கள். லூயிஸ் அவர்களுக்கு ஞானத்தின் புதல்வியர் என்று பெயர் சூட்டினார். இந்தச்சபை ஒரு சர்வதேச சபையாக வளர்ச்சி பெற்றது. தமது 16 வருட குருத்துவ வாழ்வில், லூயிஸ் நான்கு வருடங்களை, அழகான ஒரு காட்டுப் பகுதியில், மெர்வெந்த குகையில் வனவாசத்தில் கழித்தார். கடின உழைப்பாலும், நோயாலும் தளர்ந்து போன அவர், 1716 ஏப்ரலில் இறுதியாகத் தமது கடைசி வேதபோதகப் பிரசங்கங்களைத் தருவதற்காக அர்ச். ரோந்த்-கா-ஸெவரேக்கு வந்தார். அங்கே இருந்தபோது, நோய் முற்றி ஏப்ரல் 28 அன்று, தமது 43ஆம் வயதில் மரணமடைத்தார், பங்கு ஆலயத்தில் அவரது அடக்கம் செய்யப்பட்டார். அங்கே பல புதுமைகள் நிகழத் தொடங்கின. அர்ச். லூயிஸின் "மாமரிக்கு முழு அர்ப்பணச் செயல்முறையானது, "மாமரிக்கும். அவர்கள் வழியாக சேசுவுக்கும் ஒருவன் தன்னை அடிமையாக அரப்பணிப்பதிலும், 'மாமரியோடும், மாமரி யிலும், மாமரியின் வழியாகவும், மாமரிக்காகவும்" அனைத்தையும் செய்வதிலும் அடங்கியுள்ளது. மரியாயின் பக்த சபைகளில் அல்லது துறவற சபைகளில் சேருதல், மாமரியின் வரப்பிரசாதச் சலுகைகளை உலகம் அறிந்து, மதிக்கச் செய்வதற்காக உழைத்தல், மாமரிக்குத் தோத்திரமாக ஏழைகளுக்கு உதவுதல் என்பவை இந்த பக்தியின் வெளி அம்சங்களாகும். தன்னை அறிதல், தேவ மாதாவை அறிதல், சேசுநாதரை அறிதல் என்னும் தலைப்புகளில், 33 நாட்கள் இந்த அர்ப்பணத்தைச் செய்வதற்காக புனிதரின் முறைப்படி தங்களை ஆயத்தம் செய்து, தங்களை மாமரியின் வழியாக சேசுவுக்கு முழு அர்ப்பணம் செய்வதே இந்த முழு அர்ப்பண பக்தியாகும். இந்த பக்தியை அனுசரிப்பவர்களே மாதாவின் அப்போஸ்தலர்கள் ஆவர். 
லூயிஸுக்கு 1888ஆம் ஆண்டில் 13-ஆம் சிங்கராயர் முத்திப்பேறு பட்டம் வழங்கினார்; 1947, ஜூலை 20 அன்று பாப்பரசர் 12-ஆம் பத்திநாதர் அவருக்கு அர்ச்சியசிஷ்ட பட்டம் வழங்கினார். திருநாள்: ஏப்ரல் 28. 

Source = மாதா பரிகார மலர் - மே- ஜூன், 2024