Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

அர்ச். லூயிஸ் மரிய மோன்ஃபோர்ட்

அர்ச். லூயிஸ் மரிய மோன்ஃபோர்ட் 
 
அர்ச். லூயிஸ் 1674-ல் மோன்போர்ட் என்ற ஊரில் பிறந்தார். அவரது பெற்றோர் ஷான் பாப்டிஸ்ட் ஷான் ராபர்ட் க்ரிஞ்ஞோன் ஆகியோர் ஆவர். இவர்களது 18 பிள்ளைகளில் இவரே முத்தவர். தம் தந்தையின் பண்ணை இருந்த இஃபெந்திக் என்னும் ஊரில் லூயிஸ் தம் குழந்தைப் பருவத்தைக் கழித்தார். 12 வயதில், ரென்ளே நகரத்திலிருந்த சேசு சபையின் அர்க் தாமஸ் பெக்கெட் கல்லூரியில் சேர்ந்தார். சாதாரணப் பள்ளிப் படிப்பை முடித்தபின், அதே கல்லூரியில் தத்துவ சாஸ்திரமும், வேதசாஸ்திரமும் கற்கத் தொடங்கினார். 
சுவாமி ஜூலியன் பெல்லியே என்பவரின் வேதபோதக வரலாறு. ஏழைகள் மத்தியில் வேதபோதகப் பணியாற்ற லூயினைத் தூண்டியது. இந்தக் குருதான் முதன்முதலில் மாமரிக்கு முழு அரப்பண பக்தியின் விதையை லூயிஸின் மனதில் விதைத்தவர் ஆவார். அவரது வழிகாட்டுதலில் லூயிஸ் தேவமாதாவின் பேரில் தாம் கொண்ட பக்தியில் வளர்ச்சி பெற்றார். 
பாரிஸின் புகழ்பெற்ற அர்ச். சூல்பிச்சே குருமடத்தில் சேர விரும்பி. 1693 இறுதியில் பாரிஸுக்கு வந்த லூயிஸ் மிக வறியவர்கள் மத்தியில் தரித்திர வாழ்வு வாழ்ந்து கொண்டே. ஸார்போன் பல்கலைக்கழகத்தில் வேதசாஸ்திர வகுப்புகளில் கலந்துகொண்டார். இரண்டு வருடங்களுக்குள் மிக மோசமாக நோயுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குணம் பெற்றார். 1695 ஜூலையில் அர்ச் சூல்பிச்சே குருமடத்தில் மீண்டும் சேர்ந்தார். அதன் நூலகர் பணி அவருக்குத் தரப்பட்டது. அது நிறைய ஞான நூல்களையும், மாதா பற்றிய நூல்களையும் வாசிக்க அவருக்கு வாய்ப்பளித்தது. சம்மனசுக்கள் மீதும் லூயிஸ் விசேஷ பக்தி கொண்டிருந்தார். தமது காவல் தூதரை வாழ்த்தும் ஒரு வாக்கியத்தோடுதான் அவர்தம் கடிதங்களை எப்போதும் முடித்தார். 
லூயிஸ் 1700-ல் குருவாக அபிஷேகம் பெற்றார். வெளி நாடுகளில், குறிப்பாக கனடாவின் பிரெஞ்ச் குடியேற்றப் பகுதியில் வேதபோதகப் பணி அவரது பெரும் விருப்பமாக இருந்தது.1700 நவம்பரில் அவர் அர்ச். சாமிநாதர் மூன்றாம் சபையில் சேர்ந்து, ஜெபமாலை பற்றிப் போதிக்கவும், ஜெபமாலை பக்த சபைகளை நிறுவவும் அனுமதி பெற்றார். மேலும் திவ்ய கன்னிகையின் பாதுகாவலின் கீழ் வேதபோதக பிரசங்கங்களும், தியானப் பயிற்சிகளும் தரும் ஒரு சிறு சபையை ஸ்தாபிக்கவும் அவர் விரும்பினார். இதுவே மரியாயின் சபையை நிறுவ அவரைத் தூண்டியது. உரோமைக்குச் சென்று, தமது வேதபோதக விருப்பத்தைப் பற்றிப் பாப்பரசர் 11-ஆம் கிளமெண்ட்டிடம் லூயிஸ் அறிவுரை கேட்க, பாப்பரசர் பிரான்ஸிலேயே அதைச் செயல்படுத்த நிறைய வாய்ப்பிருப்பதை விளக்கி, அப்போஸ்தலிக்க வேதபோதகர் என்ற பட்டமும் தந்து அவரை அனுப்பி வைத்தார். திரும்பி வந்தவுடன், "கடவுளுக்காக ஆத்துமங்களை வெற்றிகொள்ளத் தேவை யான வரப்பிரசாதத்தை அர்ச். மிக்கேல் அதிதூதர் தமக்குப் பெற்றுத் தரவும், ஏற்கெனவே வரப் பிரசாதத்தில் இருப்பவர்களை உறுதிப்படுத்தி, சாத்தானுக்கும், பாவத்திற்கும் எதிரான போரில் அவர்களை வலுப்படுத்தவும் அவரிடம் ஜெபிக்கும்படியாக. "அர்ச். மிக்கேல் மலையில் தியானப் பயிற்சிகளில் பங்கேற்றார். இவை தியானிக்கவும், நிறைய எழுதவும் அவருக்கு நேரம் தந்தன.
லூயிஸ் பிரிட்டனியிலும், நாத்த்தேயிலும் சில வருடங்களாக வேதபோதகப் பிரசங்கங்களை நிகழ்த்தி வந்தார். போந்த்ஷாட்டு என்னுமிடத்தில் 26 அவரது தூண்டுதலால் நூற்றுக்கணக்கானோர் மிகப் பெரிய கல்வாரியை அமைத்தார்கள். ஆயினும், ஜான்சனியப் பதிதர்கள் சிலரில் செல்வாக்கின் கீழ் பிரான்ஸ் அரசனின் உத்தரவின்கீழ் அது இடிக்கப்படப் போகிறது என்று அறிந்த ஆயர், அது மந்திரிக்கப்படுவதைத் தடை செய்தார். இது லூயிஸ்க்கு ஏமாற்றம் தந்தாலும், "சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக" என்று சொல்லி இச்செய்தியை அவர் ஏற்றுக்கொண்டார். இறுதிக் காலத்தில் அவர் பல இடங்களுக்கு நடந்தே சென்று, வேதபோதகப் பிரசங்கங்கள் ஆற்றி வந்தார். இச்சமயத்தில்தான் அவர் தமது புகழ்பெற்ற "மரியாயின் மீது உண்மை பக்தி "மரியாயின் இரகசியம்," "ஜெபமாலை இரகசியம்" என்ற நூல்களையும், மரியாயின் சபை மற்றும் ஞாலத்தின் புதல்வியர் சபையின் சட்டத் தொகுப்புகளையும், பல பாடல்களையும் எழுதினார். பதிதர்கள் ஒரு முறை அவரை விஷம் வைத்துக் கொல்ல முயன்றார்கள். அதில் அவர் உயிர் தப்பினனும் அது அவரது உடல் நலத்தை வெகுவாகப் பாதித்தது. ஆயினும் அயராமல் உழைத்த அவர். தாம் போதிக்கச் சென்ற ஊர்களில் ஏழைச் சிறுவர் சிறுமியருக்கு இலவசப் பள்ளிகளை ஸ்தாபித்தார். 
லா ரோஷெல்லின் ஆயர் தம் மேற்றிராசனத்தில் ஒரு பள்ளியைத் திறக்க புனிதரை அழைத்தார். லூயிஸ் புவாட்டி யேயில் பொது மருத்துவமனை நடத்தி வந்த தமது சீடப் பெண்ணான மரீ லூயிஸ் த்ரிஷே என்பவளின் உதவியை நாட 1715ல் அவள், கேத்தரீன் ப்ரூனே என்பவளின் உதவியோடு லா ரோஷெலில் ஒரு பள்ளியைத் தொடங்கினாள். மிக விரைவில் அதில் 400 மாணவர்கள் சேர்ந்தார்கள். 1715 ஆகஸ்ட் அன்று இந்த இரு பெண்களும், மரீ வால்லோ, மரீ ரெஞ்ஞியே என்ற வேறு இரு பெண்களோடு லா ரொஷெலின் ஆயரின் அங்கீகாரத்தோடு, லூயிஸின் வழிகாட்டு தலின் கீழ் தங்கள் துறவற வார்த்தைப்பாடுகளைத் தந்தார்கள். லூயிஸ் அவர்களுக்கு ஞானத்தின் புதல்வியர் என்று பெயர் சூட்டினார். இந்தச்சபை ஒரு சர்வதேச சபையாக வளர்ச்சி பெற்றது. தமது 16 வருட குருத்துவ வாழ்வில், லூயிஸ் நான்கு வருடங்களை, அழகான ஒரு காட்டுப் பகுதியில், மெர்வெந்த குகையில் வனவாசத்தில் கழித்தார். கடின உழைப்பாலும், நோயாலும் தளர்ந்து போன அவர், 1716 ஏப்ரலில் இறுதியாகத் தமது கடைசி வேதபோதகப் பிரசங்கங்களைத் தருவதற்காக அர்ச். ரோந்த்-கா-ஸெவரேக்கு வந்தார். அங்கே இருந்தபோது, நோய் முற்றி ஏப்ரல் 28 அன்று, தமது 43ஆம் வயதில் மரணமடைத்தார், பங்கு ஆலயத்தில் அவரது அடக்கம் செய்யப்பட்டார். அங்கே பல புதுமைகள் நிகழத் தொடங்கின. அர்ச். லூயிஸின் "மாமரிக்கு முழு அர்ப்பணச் செயல்முறையானது, "மாமரிக்கும். அவர்கள் வழியாக சேசுவுக்கும் ஒருவன் தன்னை அடிமையாக அரப்பணிப்பதிலும், 'மாமரியோடும், மாமரி யிலும், மாமரியின் வழியாகவும், மாமரிக்காகவும்" அனைத்தையும் செய்வதிலும் அடங்கியுள்ளது. மரியாயின் பக்த சபைகளில் அல்லது துறவற சபைகளில் சேருதல், மாமரியின் வரப்பிரசாதச் சலுகைகளை உலகம் அறிந்து, மதிக்கச் செய்வதற்காக உழைத்தல், மாமரிக்குத் தோத்திரமாக ஏழைகளுக்கு உதவுதல் என்பவை இந்த பக்தியின் வெளி அம்சங்களாகும். தன்னை அறிதல், தேவ மாதாவை அறிதல், சேசுநாதரை அறிதல் என்னும் தலைப்புகளில், 33 நாட்கள் இந்த அர்ப்பணத்தைச் செய்வதற்காக புனிதரின் முறைப்படி தங்களை ஆயத்தம் செய்து, தங்களை மாமரியின் வழியாக சேசுவுக்கு முழு அர்ப்பணம் செய்வதே இந்த முழு அர்ப்பண பக்தியாகும். இந்த பக்தியை அனுசரிப்பவர்களே மாதாவின் அப்போஸ்தலர்கள் ஆவர். 
லூயிஸுக்கு 1888ஆம் ஆண்டில் 13-ஆம் சிங்கராயர் முத்திப்பேறு பட்டம் வழங்கினார்; 1947, ஜூலை 20 அன்று பாப்பரசர் 12-ஆம் பத்திநாதர் அவருக்கு அர்ச்சியசிஷ்ட பட்டம் வழங்கினார். திருநாள்: ஏப்ரல் 28. 

Source = மாதா பரிகார மலர் - மே- ஜூன், 2024

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக