பாவத்தால் வரும் கேடுகள்!
அர்ச்.வீரமாமுனிவர் என்று அழைக்கப்படும் அருட்தந்தை ஜோசப் பெஸ்கி எழுதியது.
கெட்டுப் போகிற எவனும் தன்னாலேயே கெட்டுப் போகிறானேயல்லாமல் வேறே ஒரு காரியத்தாலேயும் அல்லவென்று அர்ச். கிறீசோஸ்தோம் அருளப்பர் வசனித்தார். மனுஷனுக்குத் தன் மனதில்லாமல் வருகிற சேதம் ஏதென்றால் சாவு , நோவு, துயர் துன்பம், நிர்ப்பந்தம் முதலானவை. இவை வந்தாலும் ஆத்துமத்துக்கு நன்மை அல்லாமல் கேடல்ல. தான் தன் இஷ்டப்படி செய்கிற பாவம் மாத்திரமே ஆத்துமத்தைக் கெடுக்கிறது. அதினால் வருகிற கேடுகளே மெய்யான கேடுகள் என்று சொல்லப்படும். இப்படிப்பட்ட கேடுகளை மனிதன் யோசிக்காததால் பாவம் செய்து கெட்டுப் போகிறான். யோசித்துப் பார்த்தால் அப்படி வர மாட்டாது. ஆகையால் ஒவ்வொரு பாவத்தால் வருகிற கேடுகள் எத்தனை என்று நினைத்துப் பார்.
முதலாவது,
தேவ வரப்பிரசாதங்களை இழந்து போகிற கேடு. அதேதென்றால், நீ ஞானஸ்நானம் பெற்ற அன்றே தேவ விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் என்கிற வரப்பிரசாதங்கள் விலை மதியாத ஆபரணங்களாய் உன் ஆத்துமத்திலே தரிக்கப்பட்டுச் சகல சிறப்பும், அலங்காரமும் கொண்டு சர்வேசுரனுக்கும், அவர் தூதர்களுக்கும் உன்னை வெகு பிரியமாயிருக்கச் செய்தது. நீ பாவம் செய்து சர்வேசுரன் பேரில் உண்டான பக்தியைப் போக்கடித்ததினாலே, அந்த வரப்பிரசாதத்தினுடைய அலங்காரமெல்லாம் இழந்து, அவலட்சண அருவருப்பான பாவத் தோலாலே மூடப்பட்டாய். இதனாலே வந்த சேதம் எத்தனை என்று பார்.
ஆடை ஆபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டுக் கலியாணம் செய்யப் போகிற பெண், வழியிலே கொள்ளைக்காரர் கையிலே அகப்பட்டு, துணி மணிகளெல்லாம் உரியக் கொடுத்து, நிருவாணத்தோடே இருந்தால், எத்தனை வெட்கமும் சலிப்பும் அவளுக்கு உண்டாயிருக்கும்! வெகு பரலோக மகிமைப் பிரதாபத்தோடு சிங்காசனத்திலிருந்து ஆட்சி செய்கிற அரசனை எதிரி வந்து பிடித்து, அவனுடைய முடி, செங்கோல், ஆடை, ஆபரணங்கள் எல்லாம் பறித்துக் கொண்டு கீழே விழத்தாட்டி விட்டுப் போனால், அந்த இராஜா நாலு பேர் முன்னே கூச்சம் இல்லாமல் வந்து நிற்பானோ?
இதைவிட உன் ஆத்துமம் தரித்திருந்த தேவ ஆடை, ஆபரணமெல்லாம் பாவம் என்கிற எதிரி கையிலே பறிகொடுத்து நிர்ப்பாக்கியன் ஆனாயே. இப்படிப்பட்ட நிர்வாணமும், அவலட்சணமும் உள்ள வேஷத்தோடு தேவ சமூகத்திலே எப்படிப் போய் நிற்பாய்? ஐயையோ பாவீ , இந்தக் கேடுகளை எல்லாம் ஏன் நினையாமலிருக்கிறாய்?
இரண்டாம் கேடு ,
நீ பல நாளும் பிரயாசைப்பட்டு தேடின புண்ணியங்கள் எல்லாம் பாவம் செய்த உடனே கெட்டுப் போகும். அதேதென்றால்: சிறு வயது முதல் அரசனைச் சேவித்து வெகு திரவிய செல்வ வெகுமானங்களைப் பெற்ற ஒருவன், அரசனுக்கு சதி மோசத் துரோகம் செய்து, சகல பாக்கியத்தையும், உயிரையும் இழந்து போகிறது போல, நீ செய்த செபம், தவம், பிடித்த ஒரு சந்தி உபவாசம், செய்த தானதர்மம், பங்கு பெற்ற பூசைகள், இது முதலான புண்ணிய பலன்களை எல்லாம் ஒரு பாவத்தினாலே இழந்து ஒன்றும் இல்லாதவனாய்ப் போய்விடுகிறாய்.
ஒருவன் தன் வீடு நிறையத் தேடி வைத்திருந்த திரவியங்களை எல்லாம், ஒரு இராத்திரியிலே கள்ளர் வந்து களவாடிப் போனது போலவும், வெகு பிரயாசைப்பட்டு உண்டாக்கின தோட்டத்திலே பலன் காலம் வந்தபோது, பெரும் புயல் அடித்துக் காய்கனிகள் எல்லாம் உதிர்ந்து போனது போலவும், ஒரு பாவத்தினாலே புண்ணிய பலன்கள் எல்லாம் சேதமாய்ப் போகும். அப்படிப்பட்ட கேடுகளையும் மோசங்களையும் ஏன் சிந்திக்காமலிருக்கிறாய்?
மூன்றாவது,
மோட்ச உரிமையை இழந்து போகிற கேடு. அது ஏதென்றால் : ஞானஸ்நான வரப்பிரசாதம் அடைந்த வன் சர்வேசுரனுக்குப் பிள்ளையாய், மோட்சத்துக்கு உரியவனாகி, பசாசு கையிலே நின்று மீட்கப் பட்டவனாய், ஞான அட்சரம் தன் ஆத்துமத்திலே பதிக்கப்பட்டவனாயிருப்பான். தகப்பனைப் புறக்கணித்த பிள்ளை அவனுக்கு உரியவனாய் இருக்க மாட்டாதது போல, சர்வேசுரனுக்கு விரோதமான பாவம் செய்தவன் அவருடைய பிள்ளை என்கிற பேரும் மோட்சப் பெருமையையும், அவராலே மீண்ட நன்மையும் இழந்து போவான் என்கிறதற்குச் சந்தேகமில்லை.
புத்தி இல்லாதவனே, தாய் தகப்பனுடைய காணி பூமியை விட்டுவிடுவாயோ? அரசர்களால் கொடுக்கப்பட்ட வரிசை வெகு மானங்களை வேண்டாமென்று எறிந்து போடுவாயோ? நீ இவ்வுலக காரியம், அவ்வுலக காரியம் இரண்டும் அறியாதவனாய், இரண்டுங் கெட்ட பாவியாய், சர்வேசுரன் கொடுத்த மோட்ச இராச்சியத்தின் சுதந்தரமும், அவருடைய பிள்ளை என்கிற பேர் மகிமையும், பசாசு கையிலே நின்று மீண்ட நன்மையும் ஒன்றுமே வேண்டாமென்று எறிந்து போட்டு, மறுபடி பசாசுக்கு அடிமையாய் நரகத்துக்கு ஆளாய்ப் போகிறாய். இப்படிப்பட்ட நன்றி கெட்டதனமும், புத்தி கெட்ட தனமும் பெரிய கேடென்று மனதில் நினையாமலிருக்கிறது என்ன?
நான்காம் கேடு,
தேவமாதா முதலிய மோட்சவாசிகளுடைய உதவி சகாயங்களை இழந்து போகிறாய். அதேதென்றால், அரசனுக்கு ஏற்காதவன் மந்திரி, பிரதானிகளுக்கும் ஏற்காமல் போவான். குடியானவர்கள் ஒருவரும் மதியாமல் கண்ட கண்ட இடத்திலே இராஜ துரோகி என்று நிந்தித்து அடித்துப் போடுவார்கள் அப்படியே பாவத்தினாலே சர்வேசுரனுடைய கோபம் அடைந்தவனுக்குச் சகல மோட்சவாசிகளுடைய விசேஷ உதவி அற்றுப் போவது மட்டுமின்றி பூலோகத்திலே சகல படைப்புகளும் அவன் ஆண்டவருக்குச் செய்த துரோகத்துக்காக அவனைப் பகைத்துக் கொடிய பகைவர்கள் போலிருந்து விரோதித்து வாதிக்கும். ஐயையோ! பாவீ , பரலோகத்தையும், பூலோகத்தையும் விரோதித்து எப்படிப் பிழைக்கப் போகிறாய்? ஏன் இந்தப் பெரிய மோசத்தைக் கவனியாமலிருக்கிறாய்?
கடைசியாய் வருகிற கேடாவது:
ஆத்துமத்துக்குச் உயிராயிருக்கிற தேவ இஷ்டப்பிரசாதத்தை இழந்து போகிறது. சரீரத்துக்கு ஆத்துமம் உயிராயிருப்பது போல, ஆத்துமத்துக்கும் தேவ இஷ்டப்பிரசாதம் உயிராயிருக்கும். இந்த இஷ்டப்பிரசாதத்தை இழந்து போன ஆத்துமம், உயிரில்லாத பிணத்துக்குச் சமமாயிருக்கும். பிணத்துக்கு நல்ல ஆடை ஆபரணங்களைப் பூட்டி மினுக்கி, தலையிலே பொன் முடி, கழுத்திலே பூமாலை, காதிலே கடுக்கன், கையிலே மோதிரம் இப்படியே கல்லறை போய்ச் சேருமட்டும் தலை முதல் பாதம் வரைக்கும் அலங்கரித்து வைத்திருந்தாலும், கை கால் அசையவும், கண் திறந்து பார்க்கவும், காது கேட்கவும், வாய் பேசவும், ஒரு செயலாவது செய்யவும் கூடுமோ?
அப்படியே பாவத்தால் உன் ஆத்துமத்திற்கு ஞான உயிரில்லாதிருக்க, நீ எத்தனை நல்ல நினைவு நினைத்தாலும், தான தர்மம், பிறருக்கு உதவி, செபதப தியானம் என்கிற புண்ணியங்களைக் கொண்டு எத்தனை அலங்கரித்தாலும், உன் பாவங்களைப் போக்க வேண்டிய தேவ உதவியை அடைவதற்கு உதவலாமே தவிர, வேறொரு பயனும் ஆக மாட்டாது. பிணம் நேரம் போகப் போகத் துர்நாற்றமாய் நாறிப் புழுவாய்ப் புழுத்து ஒருவரும் கிட்ட வராதபடி அருவருப்பு உண்டாக்கும். அப்படியே பாவ ஆத்துமமானது பிணமாய்ப் போய் நாளுக்கு நாள் துர்ச்செயல்கள் மிகுந்து, தலையான பாவங்களும் சூழ்ந்து, துர்நாற்றம் வீசி சர்வேசுரனுக்கும், மோட்சவாசிகளுக்கும் அருவருக்கப்பட்டதாயிருக்கும்.
ஐயையோ பாவீ! இவையெல்லாம் நினையாமலிருக்கிறாய். அழுகின பிணம் போல், ஆத்துமமும் துர்நாற்றம் வீசியிருக்க எத்தனை ஆடை ஆபரணங்களைக் கொண்டு அலங்கரித்தாலும் எத்தனை சீரும் சிறப்புமிட்டுக் கொண்டாடினாலும் என்ன? ஒரு பிரயோஜனமுமில்லை. இத்தனை கேடெல்லாம் ஒரு பாவத்தினாலே வருகிறதெனில் அநேக பாவங்களைச் செய்கிற உனக்கு எத்தனை கேடு மோசம் வருமென்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்.
ஒரு வர்த்தகனுடைய மகன் சூது விளையாட்டிலே பழகிப் போய், தான் தோற்றுப் போகிற போதெல்லாம் தன் தகப்பனுக்குச் சீட்டெழுதி அனுப்ப, அதெல்லாம் தகப்பன் திருப்பிச் செலுத்தி வருவான். ஒருநாள் நாற்பதினாயிரம் வராகன் பணம் தோற்றுப் போய், அதற்குச் சீட்டுக் கொடுத்த இடத்திலே, தகப்பன் அதைப் பார்த்து, இப்படியே தன் மகன் கெட்டுப் போகிறான் என்று அறிந்து, அவனுக்கு நல்ல புத்தி வருவிக்க வேண்டுமென்று வீட்டுக்கு அழைப்பித்து, அவன் சூதாடின நாள் முதற்கொண்டு தோற்றுப் போன பணங்களெல்லாம் கணக்குப் பார்த்துப் பை பையாய்க் கட்டி அவன் முன்பாகக் கொண்டுவரச் சொல்லி, அதை எல்லாம் அவிழ்த்துக் கொட்டி, இத்தனை பணங்களை எல்லாம் நீ தோற்றுப் போட்டாய்,
இதெல்லாம் எண்ணிப் பார் என்று சொல்ல, மகன் அதிசயப்பட்டு இவ்வளவு பணம் நான் தோற்றேனா? இம்மாத்திரம் பணத்தை நான் அழித்துப் போட்டேனா என்றும் நான் செய்தது கெட்ட காரியம்தான் என்றும் வெகுவாய் மனஸ்தாபப்பட்டு, இனிமேல் ஒருக்காலும் இந்த விளையாட்டு விளையாடுகிறதில்லை என்றும் சொல்லி, சகல விளையாட்டையும் வெறுத்து விட்டுவிட்டான். அவன் பணச் சேதத்தைக் கண்டு ஏங்கிப் போய்ச் சகல விளையாட்டுகளையும் வெறுத்தானென்றால், நீ அழியாத திரவியமாகிய ஞான செல்வங்களையும், தேவ வரப்பிரசாதங்களையும் விரும்பி, பாவத்தை வெறுத்துத் தள்ளி விடாதது ஏன்?
நீ அழித்துப் போட்ட சகல புண்ணிய பலன்களையும் புத்திக் கண்ணால் அளவிட்டுப் பார்த்தால் அந்தத் துக்கத்தினால் உன் உயிர் உடலிலே தரிக்குமோ? உன் இருதயம் பொடிப்பொடியாய்ப் பிளந்து போகாமல் இருக்குமோ? இன்னும் பாவங்களைச் செய்வோம் என்கிற துணிவுதான் வருமோ?
ஐயையோ பாவீ, ஏன் இதை நினையாமலிருக்கிறாய்? சூரியன் போலத் தெளிவுள்ள கண்களை மேகம் என்ற பாவங்களினாலே மறைத்துக் கொண்டு திரிகிறாய். சகல பாவத்தையும் விட்டு, செய்த பாவங்களுக்காக துயரப்பட்டுப் பிரார்த்தித்துக் கொள்.
Joseph Beschi (Veeramamunivar) about Sin.
Source: CatholicTamil.com- Whatsapp Channel